Advertisement

அத்தியாயம் 04

                       பள்ளியில் இருந்து அழைப்பு வந்த நிமிடமே அலுவலகத்திலிருந்து கிளம்பி வந்திருந்தார் பரமேஸ்வரன். வந்தவர் தலைமை ஆசிரியர் அறையில் நின்று அழுது கொண்டிருந்த மகளைக் கண்டதுமே உருகிப் போனார்.

                     விரைந்து சென்று பிள்ளைகளிடம் அவர் மண்டியிட, “ப்பா..” என்று மூவரும் அணைத்து கொண்டனர் அவரை. மகள் இன்னமும் அழுகையைத் தொடர, “ஸ்ரீகா.. அழகூடாதுடா பேபி.. அப்பா வந்துட்டேன் இல்ல..” என்று மகளை சமாதானம் செய்ய, அப்போதும் தன் புறங்கையால் முகத்தை தேய்த்துவிட்டுக் கொண்டாள் மகள்.

                  அவள் அழுததில் கண்களில் இருந்தும் மூக்கிலிருந்தும் தண்ணீர் வடிய, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் தன் கையில் இருந்த கைக்குட்டையால் மகளின் முகத்தையும், மூக்கையும் துடைத்துவிட்டு “அழாம இருக்கணும் ஸ்ரீகா… நீங்க ரொம்ப போல்ட் இல்ல..” என்று தந்தை எடுத்துக் கூற, சிறு தேம்பலுடன் அழுகையை நிறுத்திக் கொண்டாள் ஸ்ரீகா.

                    அவர் வந்தது முதல் நடந்த அனைத்தையும் கண்களில் சிறு ஏக்கம் இழையோட பார்த்துக் கொண்டே நின்றான் சர்வா. அவன் வீட்டிலிருந்து இன்னும் யாருமே வந்திருக்கவில்லை. “அடி வாங்கி இருக்கிறான், ரத்தம் வழிந்து வைத்தியம் பார்த்திருக்கிறது” என்று கூறியும் இதுவரை யாரும் வந்திருக்கவில்லை. அந்த சிறிய வயதில் அவன் ஏங்கி இருந்த சில நிமிடங்கள் அவன் கண்முன்னே வேறொரு பிள்ளைக்கு கிடைக்க, துடித்து கொண்டிருந்தான் அவன்.

                  முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டவன் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் நிற்க, அடுத்ததாக அவனிடம் தான் வந்தார் பரமேஸ்வரன். அவன் முன் குனிந்து நின்றவர் அவன் நெற்றிக் காயத்தை ஆராய, கழுத்தை வெட்டி முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்.

                          பரமேஸ்வரன் அவன் செயலில் சிரித்தவர் அவனைக் கைகளில் தூக்கிக் கொண்டார். “என்னை இறக்கி விடுங்க..” என்று உடனடியாக அவன் சண்டைக்கு நிற்க

                           “ரகுவரன் மகன் தானே நீ…” என்று அவனிடம் கேட்டார் அவர்.

                        “எங்க அப்பா எப்படி தெரியும் உங்களுக்கு..” என்று அவன் பார்க்க

                          “என் பிரென்ட் தான் உன் அப்பன்…” என்றவர் “என்ன நடந்தது..” என்று அவனிடம் கேட்க

                         “ப்பா நோ..” என்று குறுக்கிட்டாள் மகள். அறிவனும், துருவனும் தந்தையை முறைக்க, அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டவர் சர்வாவை தன் கையணைப்பில் வைத்துக் கொண்டே “என்ன நடந்தது ஸ்ரீகா.. நீ சொல்லு..” என்று விசாரிக்க, தந்தையின் கையருகில் இருப்பவனையே கடுப்புடன் முறைத்து கொண்டிருந்தாள் அவள்.

                    பரமேஸ்வரன் அவளைத் தெரிந்தவராக “நீ சொல்லு துருவா.. என்ன நடந்தது.. எப்படி சர்வாக்கு அடிபட்டது..” என்று விசாரிக்க

                     “அப்பா… அவன் அறிவாவை அடிச்சுட்டான்… அறிவா மேல உட்கார்ந்து அவன் தலையை பிடிச்சு ஆட்டினான்.. அதான் நான் அடிச்சேன்… அவன் என்னை அடிக்க வந்தான். நான் தள்ளி விட்டுட்டேன்..” என்று அவன் அறிந்தவரை அவன் கூற

                      பரமேஸ்வரன் “உன் பேர் என்ன கண்ணா..” என்று சர்வாவிடம் கேட்க

                     “சர்வானந்த்..” என்றான் மிடுக்காக

                    “சர்வா ஏன் அறிவாவை அடிச்சீங்க.. தப்பு தானே.. “என்று அவர் விசாரிக்க

                    “அவன்தான் பர்ஸ்ட் அடிச்சான்..”என்று சண்டைக்கோழியாக நின்றவன் அறிவை அப்போதும் முறைக்க, அடுத்து அறிவழகனை பார்த்தார் தந்தை.

                    “ப்பா.. அவன் ஸ்ரீகாவை அடிச்சான்.. ஸ்ரீகா அழுதுட்டா..” என்று அறிவன் கூற

                    “நோ.. ஹி இஸ் லையிங்.. நான் அடிக்கவே இல்ல. ” என்றவன் “நான் அடிச்சேனா..” என்று ஸ்ரீகாவிடமும் கண்களை உருட்டி மிரட்ட

                    இப்போது தந்தையும் ஸ்ரீகாவை கூர்மையாக பார்த்தார். “அவன் என் ஹேர் பிடிச்சு இழுத்தான். என் ஹேர் பௌஸ் எடுத்துட்டான்..” என்றாள் வேகமாக புகார் படிக்கும் குரலில்.

                   பரமேஸ்வரன் பார்வை சர்வாவின் புறம் திரும்பவும், “சும்மா தான் எடுத்து பார்த்தேன்.. ஆனா, அடிக்கல.. இவ வேணும்னே அழுதுட்டா…” என்று அவன் ஸ்ரீகாவை முறைக்க,

                     பரமேஸ்வரன் ஸ்ரீகாவிடம் ‘சர்வா அடிக்காம ஏன் அழுத ஸ்ரீகா.. உன்னாலதானே அறிவா அவன்கிட்ட சண்டை போட்டான்.. ஏன் இப்படி செஞ்ச..” என்று மிரட்ட

                     “அவன் என் ஹேர்போஸ் எடுத்தான்..” என்று கூறும்போதே அவள் குரல் அழுகைக்கு தயாராக இருந்தது.

                    “அவன் ஏன் எடுத்தான் கேளுங்கப்பா..” என்று அறிவனும் அவளுக்கு அருகில் நின்று சர்வாவை முறைக்க

                    பரமேஸ்வரன் சர்வாவிடம் திரும்பி “நீ ஸ்ரீகாவோட ஹேர்க்ளிப் எடுத்தது தப்புதானே சர்வா.. நீ அவளுக்கு சாரி சொல்லிடு.. நீ குட் பாய் தானே..” என

                  ஸ்ரீகாவை முறைத்துக் கொண்டே “சாரி..” என்றான் சர்வா..

                “நீ அவன் அடிக்காம அழுததும் தப்புதான் ஸ்ரீகா.. நீயும் அவனுக்கு சாரி சொல்லு..” என்று தந்தை கூற

              “அவன் என் ஹேர்போவ்ஸ் எடுத்தான்..” என்று மெல்லிய குரலில் கூறியவள் அமைதியாக நிற்க, தந்தை எதுவுமே பேசவில்லை.

                 ஸ்ரீகா “அப்பா..” என்று சினுங்க

                 “ஸ்ரீகா குட் கேர்ள் தானே… தப்பு பண்ணா சாரி சொல்வாங்களே..” என்று அவர் மீண்டும் கூற

               “சாரி..” என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். தந்தையைக் கூட பார்க்கவில்லை அவள்.

                 அடுத்து பரமேஸ்வரன் அறிவனைப் பார்க்க “சாரி..” என்றான் அவன். அடுத்து துருவன் தானாகவே “சாரி..” என,

                   சர்வாவும் பரமேஸ்வரன் கூறும் முன்பே “சாரி..” என்றான் இருவரிடமும்.

                  பரமேஸ்வரன் “சர்வாக்கு கை கொடு துருவா.. இப்போ இருந்து பிரெண்ட்ஸ் நீங்க.. எப்பவும் சண்டை போடவேக் கூடாது. ம்ம்.. கை கொடு..” என

                  சர்வா யோசிக்கவே இல்லை. உடனடியாக கையை துருவனிடம் நீட்டி விட்டான். அவனுக்கு பரமேஸ்வரனைப் பிடித்து இருந்தது. இவர்களுடன் நட்பாக இருந்தால், அவரிடம் பேச முடியும் என்பது வரை அவன் வயதுக்கு புரிய, பரமேஸ்வரனுக்காக நட்புக்கு தயாராகி விட்டான்.

                 துருவன் அவன் கைநீட்டியதில் குளிர்ந்து போனவனாக தானும் கையை குலுக்க, அடுத்து அறிவனும் அவர்களுடன் இணைந்து கொண்டான். ஸ்ரீகா இப்போதும் முகம் திருப்பியே நிற்க, முன்போலவே இப்பொதுமவள் ஹேர்போவ்ஸை தொட்டு விளையாடினான் சர்வா.

                  அதில் கடுப்பானவள் அவனை அடிக்க கையை ஓங்கி பின் ஆசிரியரை பார்த்து அமைதியாகி விட, “பிரெண்ட்ஸ்,…” என்று கையை நீட்டினான் சர்வா… என்ன தோன்றியதோ அவன் கையை பிடித்துக் குலுக்கியவள் அவனோடு கரம் கோர்த்துக் கொள்ள, நான்கு பெரும் சிரித்த முகமாக நிற்பதைக் கண்டவுடன் தான் நிமிர்ந்தார் பரமேஸ்வரன்.

                  “ஒடுங்க.. நாலு பெரும் அப்பாவோட கார்ல இருங்க.. அப்பா மிஸ்கிட்ட பேசிட்டு வரேன்..” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

                           பிள்ளைகள் அந்த அறையை விட்டு வெளியேறவும், தலைமை ஆசிரியரின் இருக்கைக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தார் பரமேஸ்வரன். தலைமை ஆசிரியர் “சிச்சுவேஷனை சரியா ஹாண்டில் பண்ணீங்க சார்..” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கூற

                    “நான் ஹாண்டில் பண்றதுக்கு நீங்க எதுக்கு மேடம் இங்கே..” என்று கோபமாக முறைத்தார் அவர்.

                  மேலும், “குழந்தைங்க மேடம்.. ஏதோ குற்றவாளி மாதிரி இங்கே கூட்டிட்டு வந்து உட்கார வச்சு இருக்கீங்க… நீங்களே கொஞ்சம் நிதானமா விசாரிச்சு இருக்கலாம். இல்ல, எனக்குதான் சொல்லிட்டீங்களே.. அப்புறமும் ஏன் இங்கே நிற்க வைக்கணும்..”

                   “விளையாட்டு பிள்ளைங்க.. இந்த வயசுல இதெல்லாம் பண்ணாம எப்படி இருப்பாங்க.. எப்படி சரி செய்யணும்ன்னு பார்க்காம, இன்னும் அவங்களுக்குள்ள சண்டை போட வைப்பிங்களா..” என்று கடிந்து கொண்டவர்

                   “சர்வா என் பிரென்ட் சன் தான். இப்போ அவனையும் சேர்த்து நான் கூட்டிட்டு போறேன். நீங்க அவன் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடுங்க… இல்ல நானே பேசிடவா..” என்று அவர் கேட்டு நிற்க

                    தலைமையாசிரியர் “நாங்களே சொல்லிடறோம் சார்..” என்றார் பவ்யமாக. அவரிடம் தலையசைத்து பரமேஸ்வரன் வெளியே வர, ஸ்ரீகாவின் வகுப்பாசிரியர் “என்ன மேம்.. இவர் இப்படி பேசிட்டு போறாரு.. நாமதான் கம்ப்ளெயிண்ட் பண்ணனும். ஆனா, இவர்  சொல்லிட்டு போறாரு..” என்று புலம்ப

                     “அவர் தப்பா எதுவும் சொல்லலையே டீச்சர். நீங்க கொஞ்சம் கவனமா இருந்து இருந்தா, இது எதுவுமே நடந்து இருக்காது. அதோட அவர் மற்றவர்களை போல இல்ல. அந்த பிள்ளைகள் துருவனும், அறிவனும் அவரோட தத்து பிள்ளைகள். ஆனா, அத்தனை அன்பா வளர்த்துட்டு வர்ராங்க… அதோட நிறைய நல்ல காரியங்களை ரொம்ப அமைதியா செய்துட்டு இருக்காரு பரமேஸ்வரன். அதுக்கான மரியாதை தன் நாம கொடுத்தது..”

                     “நீங்க வேணா பாருங்க.. இனி சர்வா ஆக்ட்டிவா இருப்பான். இந்த மூணு பிள்ளைகளும், அவனோட இருப்பாங்க..” என்று அவர் அந்த ஆசிரியரிடம் கூற, தலையசைத்து வெளியேறினார் அவர்.

                     அவர் கூறியதை போல் தான் காட்சிகளும் அமைந்தது. பரமேஸ்வரன் வெளியில் நின்றிருந்த அபியை கண்டவர் அவனிடம் நடந்ததைக் கூறி, அவன் வகுப்பாசிரியரிடம் பேசி, அவனையும் அழைத்துக் கொண்டு காருக்கு வர, இதற்குள் காரில் இருந்த நால்வரும் நல்ல நண்பர்களாக மாறி இருந்தனர்.

                   பரமேஸ்வரனைக் கண்டதும் ஓட்டுநர் வண்டியை எடுக்க, பின்னிருக்கையில் அமர்ந்திருந்தது நால்வர் படை. அபிநந்தனும் அவர்களுடன் காரில் ஏற, பரமேஸ்வரன் முன்னால் ஏறிக் கொண்டார். வழியில் கடையில் நிறுத்தி பிள்ளைகளுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து அவர் வீட்டுக்கு அழைத்து வர, அவர்களை வாசலிலேயே நின்று வரவேற்றார் ரேகா.

                    வீட்டின் போர்டிகோவில் அமர்ந்து புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார் அவர். கணவரின் காரைக் காணவும், முகத்தில் புன்னகையுடன் எழுந்து நிற்க, பிள்ளைகளை காணவும் புன்னகை பெரிதாக விரிந்தது.

                  காரிலிருந்து இறங்கியவர்கள் “அம்மா..” என்று அவரிடம் வந்து அணைத்து கொள்ள, சர்வா சற்று தூரமாகவே நின்றான். அபி அவன் அருகில் நிற்க, ரேகா தன் பிள்ளைகளை கொஞ்சி முடித்தபிறகே அவர்களிடம் திரும்பி இருந்தார்.

                   “என்னடா அபிக்கண்ணா.. எல்லாரும் சீக்கிரமா வந்துட்டீங்க.. இவர் யாரு.. அச்சோ.. பிள்ளைக்கு எப்படி அடிபட்டது..” என்று அப்போது தான் சர்வாவை கவனித்து பதட்டமானார் ரேகா.

                     அபி “ம்மா.. அவங்க மூணு பேரும் தான்..” என்று மூவரையும் முறைத்து கொண்டே கூற, “இல்ல..  பெஞ்ச் தான் இடிச்சது… துருவ் எதுவும் பண்ணல..” என்று சாட்சி கூறினான் சர்வா.

                     ரேகாவிற்கு அதிலேயே புரிந்து போக, தன் மகனை அவர் முறைக்கவும் “சாரி சொல்லிடேன்ம்மா..” என்றான் துருவ். அதற்குமேல் மகனை எதுவும் சொல்லாமல் சர்வாவை நெருங்கியவர் “சாரிடா கண்ணா..” என்று அவனை முத்தமிட

                   “நான் சர்வா..” என்றான் அவன்.

                   “ஓ.. சர்வா.. சாரி சர்வா சார்…” என்று மரியாதையாக அவர் கேட்க, புன்னகையுடன் தன்னிடம் இத்தனை பொறுமையாக பேசிக் கொண்டிருக்கும் ரேகாவை மிகவும் பிடித்தது அவனுக்கு.

                    குனிந்திருந்த அவர் கன்னத்தில் முத்தமிட்டவன் “தேங்க்யூ ஆன்டி…” என்று விட, அவன் செயலில் சிரித்த ரேகா அவனை கைகளில் தூக்கி கொண்டார்.

                 “உன் வீடு எங்கே சர்வா.. அம்மாகிட்ட சொல்லிட்டு வந்திங்களா..” என்று விசாரிக்க

                 பரமேஸ்வரன் இப்போது குறுக்கிட்டார்.”ரேகா.. ரகுவரன் இருக்கான் இல்ல. அவனோட மகன் தான். நான் தான் கூட்டிட்டு வந்தேன். ஸ்கூல்ல சொல்லிடுவாங்க…” என்றார்.

               ரேகாவிற்கு ரகுவரனை ஏற்கனவே தெரிந்திருக்க, அவரின் இரண்டாம் திருமணமும் கேள்விப்பட்டது தான். கையிலிருந்த பிள்ளையின் மெலிவுக்கான காரணம் புரிய, அவனை மெல்ல அணைத்துக் கொண்டார் அவர்.

Advertisement