Advertisement

                      அவர் சம்மதமாக தலையசைக்க, அங்கே இருந்தபடியே ரகுவரனுக்கு அழைத்தார் பரமேஸ்வரன். அதன்படி அடுத்த அரைமணி நேரத்தில் ரகு வந்துவிட, பரமேஸ்வரன் அவரை தனியே அழைத்துச் சென்று விஷயத்தைக் கூற, வெகுதிருப்தி அவருக்கு. பரமேஸ்வரனின் கைகளை பிடித்துக் கொண்டார் ஆனந்தத்தில்.

                      அவரே சீதாவிடமும், “சர்வா என் மகன்தான்ம்மா.. ஆனா,அப்படி சொல்ல எந்த தகுதியும் எனக்கு இல்ல. சர்வாவுக்கு எல்லாமே அவனோட ரேகாம்மா தான். நீங்க கல்யாண விஷயம் எது பேசுவதா இருந்தாலும், என் தங்கைகிட்ட பேசிக்கோங்க.”

                      “சர்வா எப்போதும் பரமேஸ்வரன்- ரேகா வோட மகன்தான். ” என்று நெகிழ்ந்து போனவராக உறுதி கூறினார் அவர்.இவர்களின் அன்பிலும், விட்டுக் கொடுத்தலிலும் தன்னை தானே மிகவும் கீழாக உணரத் தொடங்கினார் சீதா.

                    இதற்கும் மது அழைத்ததின் பெயரில் ஜெய் வீடு வந்து சேர, முறையாக தன் மாமனார் மாமியாரை வரவேற்றான் அவன். ரகுவையும் “வாங்க அங்கிள்..”என்று அழைத்து வைக்க, ரேகா அவன் முகம் பார்க்கவில்லை.

                                               அவரின் கோபம் உணர்ந்தவனாக, அவரிடம் நேரடிப் பேச்சுவார்த்தையில் இறங்கவே இல்லை ஜெய். பரமேஸ்வரனிடமும், ரகுவரனிடமும் தீக்ஷியின் திருமணம் குறித்து அவன் பேசிக் கொண்டிருக்க, நேரம் மெதுவாக நகர்ந்தது.

                         தீக்ஷிக்கு இன்னும் கீழே நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரியாது. அவள் மேலே அவளது அறையில் இருக்க, மனைவியின் மனதை உணராமல் அவளுக்கு ஆசை காட்ட விரும்பாத மது, அவளை கீழே அழைக்கவே இல்லை. அவளும் தனக்குள் முழ்கிப் போனவளாக கண்ணீருடன் லைப்பேசியை வெறித்துக் கொண்டே படுத்திருக்க, ரேகாதான் தீக்ஷியை விசாரித்தார் முதலில்.

                      மேலே அவள் அறையில் இருப்பதாக கூறிய சீதா, மகளை அழைத்து வருவதாக எழுந்து கொள்ள “நானே பார்த்திட்டு வரேன் சீதா..” என்று அவரே மாடிக்கு சென்றுவிட்டார் ரேகா.

                      சீதா “வலதுபக்கம் முதல் அறை..” என்று சொல்லி அனுப்பி இருக்க, அறையின் கதவை லேசாக தட்டி விட்டு காத்திருந்தார் அவர்.

                     தீக்ஷி கதவை திறக்கவில்லை எனவும், மீண்டும் சற்று வேகமாக அவர் தட்டிவிட, அடுத்த நிமிடம் கதவைத் திறந்தாள் அவள்.

                  அழுது முடித்து கழுவித் துடைக்கப்பட்டிருந்தது அவளின் வட்ட முகம். எத்தனை முறை கழுவினாளோ, ஆனால், அழுத தடம் அப்பட்டமாக தெரிந்தது விழிகளில்.

                         “லேசா பவுடர் போட்டு இருக்கலாம்.. அழுதது அப்படியே தெரியுது..” என்று தலைசாய்த்து அவர் கூற, மீண்டும் கண்களில் கண்ணீர் தேங்கியது தீக்ஷிக்கு.

                   அங்கே அவரை எதிர்பார்க்காதவளாக அவள் தடுமாற, “உள்ளே வரட்டுமா…” என்றார் மீண்டும்.

                    “வாங்க ஆன்ட்டி..” என்று வழிவிட்டு அவள் நிற்கவும், உள்ளே வந்தவர் “நீ எப்படி ஸ்ரீகாவுக்கு பிரெண்டா இருக்க..” என்றார் அதிசயித்து.

                      தீக்ஷி அவரைப் பார்க்க, “அந்த வாலுக்கு அழவே தெரியாது. நீ அவளோட இருந்துட்டு இப்படி இருக்கியே.. அதனால கேட்டேன்…” என்றவர் “அழறது எந்த விஷயத்துக்கும் தீர்வு கிடையாது தீக்ஷி…” என்றார் அழுத்தமாக.

                      “எந்த தைரியத்துல என் மகனை காதலிச்ச நீ… உனக்கு உன் அம்மா எப்படிப்பட்டவங்க ன்னு முன்னாடியே தெரியும் இல்லையா… அப்படி இருந்தும் நீ காதலிச்சது எப்படி சரியாகும். சரி.. சர்வாவை பிடிச்சது , காதலிச்சிங்க ஓகே… ஆனா, அதற்காக போராடற துணிவு இருக்கணும் இல்லையா…இப்படி அழுதா எல்லாம் சரியாகுமா..” என்று மீண்டும் கேள்வி கேட்டார்.

                      தீக்ஷி அவரின் கேள்விகளில் உடைந்து போனவளாக மீண்டும் அழ, அவளை சில நிமிடங்கள் பார்த்து நின்றவர் “என் மகனோட வாழ்க்கை இது. நீ தனிப்பட்டு அவன் வேண்டாம் ன்னு எல்லாம் முடிவு எடுக்க முடியாது தீக்ஷி. ரெண்டு நாளா ஜடம் மாதிரி இருக்கான் என் மகன். அவனை அங்கே அப்படி விட்டுட்டு, இங்கே நீயும் நல்லா இல்லையே…”

                      “உன் அம்மா இன்னொருத்தனை உனக்கு கட்டி வைத்தால் கூட, உன்னால நிம்மதியா அவனோட வாழ முடியாது. உன்னைப் பார்த்த இந்த அஞ்சு நிமிஷத்துல நான் புரிஞ்சுகிட்ட விஷயம் இது. ஆனால், இத்தனை நாள் உனக்கெப்படி இது புரியாம இருக்கு..” என்று அவர் அதிசயிக்க

                      “நிச்சயமா என்னால யாரையும் சர்வா இடத்துல வச்சு யோசிக்க முடியாது ஆன்ட்டி..” என்று அவள் விசும்ப, “குட்.. அப்போ எந்த நம்பிக்கையில் உன் அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்த..”என்று மீண்டும் அவர் கேட்க

                    “அந்த நேரத்துல அவங்க உயிரை காப்பாத்தணும்ன்னு மட்டும்தான் மனசுல இருந்தது… அவங்க ரொம்ப நல்ல அம்மா ஆன்ட்டி. என்னால அவங்களை விட்டு கொடுக்க முடியல.. அதனாலதான் செஞ்சேன்..”

                      “அதோட, நான் சர்வாவுக்கு நியாயம் செய்யல. அவரோட இழப்புகளுக்கு நான் மருந்தாக நினைச்சேன் ஆன்ட்டி. ஆனா, நானும் என் பங்குக்கு அவருக்கு வலியை தான் கொடுத்திருக்கேன். நானே அவரை உடைச்சு போட்டுட்டேன் ஆன்ட்டி…” என்று அழுதாள் அவள்.

                     அவளின் தெளிவற்ற மனம் அவளை இரண்டு பக்கமும் பிடித்து இழுப்பதை புரிந்து கொள்ள முடிந்தது ரேகாவால். முடிவாக “இப்படியே என்னோட வந்து விடுகிறாயா…” என்று அவர் கேட்டு நிற்க

                    “உங்க மகன் விரும்பமாட்டாங்க…” என்றாள் நிமிர்வுடன். அவளின் புரிதல் சற்றே நிம்மதியாக இருக்க, “என்ன செய்யலாம்… இப்படி அழுதுட்டே இருக்கலாமா…” என்றார் மீண்டும்.

                     “உங்க மகனை விட்டுடக்கூடாதே ன்னு ஒரு தவிப்பு வருது ஆன்ட்டி. ஆனா, அம்மாவை நினைச்சு பயமா இருக்கு… ஆனா, நான் பேசிப் பார்க்கிறேன்.. அவங்க சம்மதிக்கிறவரை பேசுவேன்… என்னால சர்வாவை விட முடியாது…”

               “நல்லது… கண்டிப்பா பேசணும் உன் அம்மாகிட்ட. இனியொரு முறை என் மகனை விட்டுடணும்ன்னு நீ முடிவெடுத்தால், என் மகனுக்கு நான் வேற பெண்ணை பார்க்க வேண்டி இருக்கும்…” என்று திட்டவட்டமாக கூறியவர்

                 “அவன் நிறைய வலிகளை கடந்து வந்திருக்கான் தீக்ஷி. அவனோட திருமண வாழ்க்கை எங்களோட கனவு. அவனுக்கு மனைவியா வரப்போகும் பெண், நிச்சயம் கொஞ்சம் வலிமையானவளா இருக்கணும்.. உன்னை நீ தயார்படுத்திக்கோ.. அவனுக்கான எல்லாமா நீ இருக்கணும்… “என்று அவர் பட்டியலிட, தீக்ஷிக்கு அவர் கூற வருவது புரிந்தது.

                  அவள் மெல்ல தலையசைக்க, “உன் போன் எங்கே..” என்றார் அடுத்ததாக

                   “அம்மாகிட்டே இருக்கு ஆன்ட்டி..” என்று உள்ளடங்கிய குரலில் அவள் கூற, தன் அலைபேசியில் இருந்து மகனுக்கு காணொளியில் அழைத்தார்.

                     அவன் மறுபக்கம் அழைப்பை ஏற்க, அலைபேசியை அவளிடம் கொடுத்தவர் அவளின் கன்னம் தடவி அறையை விட்டு வெளியேறினார். அழைப்பில் இருந்த சர்வா தீக்ஷியைக் காணவும், “அம்மா எங்கே தீக்ஷி..” என்று வினவ

                     “வெளியே இருக்காங்க. என்கிட்ட போன் கொடுத்துட்டு போய்ட்டாங்க…” என்றாள் தீக்ஷி.

            

                 அதன்பின்பே அவளை முழுமையாக பார்வையிட்டான் சர்வா. அழுது சிவந்து போயிருந்த அவள் கண்கள் அவனை வேதனையடையச் செய்ய,என்ன பேசுவது என்று புரியாமல் மௌனித்திருந்தான் அவன்.

                   “என்னை எதுவும் கேட்க மாட்டிங்களா..” என்று தீக்ஷியே கேட்டுவிட

                   “என்ன கேட்கணும்..”

                “உங்களை ஏமாற்ற பார்த்திருக்கேனே…” என்றாள் அவளே…

     

                  சர்வா மௌனம் சாதிக்க, “சாரி..” என்றாள் மீண்டும்.

               “உங்க ரேகாம்மா கிரேட்.. கண்டிப்பா நான் அம்மாகிட்ட பேசுவேன்.. சர்வா தான் வேணும்ன்னு சொல்வேன்…” என்று போருக்கு செல்வது போல் முரசறிவிக்க

                  “எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீ பேச ஒன்னும் இருக்காது.என் கெஸ் சரியா இருந்தா,அம்மா பேசி முடிச்சிருப்பாங்க.. அப்புறம் தான் உன்னைப் பார்க்கவே வந்திருப்பாங்க..” என்றான் அன்னையை தெரிந்தவனாக.

                தீக்ஷி “ஹான்..” என்று வாயைப் பிளந்தவள் “என்னை பேசணும் சொன்னாங்க சர்வா.. அம்மாகிட்டே பேச சொன்னாங்களே.. தைரியமா இருக்கணும்.. அழக்கூடாது எல்லாமே சொன்னாங்க..” என்று அவள் அடுக்க

                 “அவங்க மருமகளை தயார்படுத்த நினைச்சிருப்பாங்க.. மற்றபடி உனக்கு அங்கே ஒரு வேலையும் இருக்காது..” என்றான் மகன்.

                   மேலும் சில நிமிடங்கள் அவர்களின் பேச்சு நீடிக்க, சீதா அழைக்கவும் அலைபேசியுடன் கீழே இறங்கி வந்தாள் தீக்ஷி. வந்தவள் அலைபேசியை ரேகாவிடம் கொடுத்து, அவர் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு அவரைக் கட்டிக் கொள்ள, வழக்கமான புன்னகையோடு நின்றார் ரேகா…

                  “சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்திடு..” என்ற சொல்லோடு அவர் விடைபெற, ரேகா பரமேஸ்வரனின் வீடு அடுத்த விசேஷத்திற்கு தயாராக நின்றது.

Advertisement