Advertisement

                       அதே வேகத்தில் வீட்டில் இருந்தும் கிளம்பிவிட தான் நினைத்தான். ஆனால், அவன் பாட்டி அவனுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்து காத்திருந்தார். இவன் வரவும், “ஸ்ரீ எங்கேடா..” என்று இவனிடம் கேட்க

                        “நீங்கதானே கூட்டிட்டு வந்திங்க.. என்னை ஏன் கேட்கறீங்க..” என்று முறைத்து வைத்தான் அவரையும்.

                      “நீ அவளோட பேசிட்டு இருக்கவும் தானே நான் வீட்டுக்கு வந்தேன் ஜெய். எப்படி அவளை மட்டும் தனியா விட்டுட்டு வரலாம் நீ.” என்று சரோஜினியும் சத்தமிட, பதில் கூறாமல் அவரை முறைத்தவன் வந்த வேகத்தில் மீண்டும் வெளியில் கிளம்பி இருந்தான்.

                      வீட்டில் இருந்த வேலையாளிடம் ஸ்ரீகாவை அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்து அவன் கிளம்பி இருக்க, அது இன்னமும் குற்றமாகிப் போனது ஸ்ரீகாவுக்கு. அவன் மீது இருந்த கோபங்களோடு இதையும் சேர்த்துக் கொண்டவள் அமைதியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

                     வீட்டில் பாட்டி அவளுக்காக காத்திருக்க, அவரோடு சேர்ந்து உணவில் கையை வைக்க, ஜெய்யின் நினைவு தான். “சாப்பிட்டாரா இல்லையா தெரியலையே..” என்று மனம் கிடந்து தவிக்க

                      “அதெல்லாம் என்ன சண்டை வந்தாலும், சரியா நேரத்துக்கு சாப்பிட்டுடுவான்.. நீ உன் வயிற்றை பாரு..” என்றார் சரோஜினி.

                      அவள் தலையசைத்து சாப்பிட தொடங்க, “என்னவாம்.. மறுபடியும் ஒரு அறை கொடுத்துட்டானா.. “என்றார்.

                       ஸ்ரீகா முறைக்க, “இல்லையா.. இந்த முறை நீ அடிச்சுட்டியா..” என்றார் மகிழ்வுடன்.

                       “ஏன் பாட்டி நீங்க வேற.. உங்க பேரனுக்கு ஒழுங்கா ஒரு சாரி சொல்லத் தெரியுதா…” என்று சலித்து கொண்டது பெண்.

                        “ஹ்ம்ம்.. இப்படி கண்ணுக்கு லட்சணமா பொண்டாட்டி இருந்தா, சாரி சொல்லவா தோணும்..” என்று பெருமூச்சு விட்டார் சரோஜினி.

                        “பாட்டி..” என்று ஸ்ரீகா அதட்ட

                       “அடபோடி.. பிழைக்க தெரியாத பிள்ளை என் பேரன்.. உங்க தாத்தனா இருந்தா, இந்நேரம் மெட்ராஸுக்கே தூக்கிட்டு போயிருப்பாரு என்னை. இப்படி கண்ணுக்கு நிறைவா பொண்டாட்டியை பார்த்தும் விட்டுட்டு போயிருக்கானே… இவனை எல்லாம் என்னத்தை சொல்றது…” என்று அவர் அலுத்து கொள்ள, ஸ்ரீகாவுக்கு தான் சிரிப்பாக இருந்தது.

                         “உங்கப் பேரன் அந்த அளவுக்கு சமைத்து இல்லையே.. என்ன செய்ய..”என்று விளையாட்டாக கூறியவள் அங்கிருந்து நகர்ந்து கொண்டாள். அன்று மாலை வரை என்ன செய்வது என்ற சிந்தனையோடே சுற்றி வந்தவள், மாலை வேளையில் ஜெய்க்கு அழைக்க அழைப்பை ஏற்கவில்லை அவன்.

                    அதில் கடுப்பானவள் விடாமல் அடித்துக் கொண்டே இருக்க, ம்ஹும்.. அழைப்பு ஏற்கப்படவே இல்லை. “நான் சென்னைக்கு வரணுமா.. வேண்டாமா..” என்று அவள் குறுஞ்செய்தி அனுப்பி வைக்க, அதற்கும் பதிலில்லை.

                            அதில் முறுக்கிக் கொண்டு ஸ்ரீகா அமர்ந்துவிட, அடுத்த ஒருமணி நேரத்தில் அவளது டிக்கெட் அவள் கைக்கு கிடைத்து இருந்தது. விமானத்திற்கு இன்னும் இரண்டு மணிநேரங்கள் மட்டும் இருக்க, சற்று வேகமாகவே தயாரானாள் ஸ்ரீகா.  பாட்டியிடம் சொல்லிக் கொண்டு அவள் புறப்பட, அவளைக் கேலியாக பார்த்தாலும், நிறைந்த புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார் சரோஜினி.

                 மொத்தத்திற்கும் அவனை அலையவிட்டு வேண்டும் என்று எண்ணிக் கொண்டவளாக அவள் புறப்பட, அதற்கு அவசியமே இல்லாமல் அவளை அலையவிட்டான் ஜெய். ஆம். இவள்மீது இருந்த கோபத்தில் அவன் மதியமே காரில் சென்னைக்கு கிளம்பி இருக்க, அவன் சென்றதே தெரியாது ஸ்ரீகாவுக்கு.

                 தனியாக விமானத்தில் பயணம் செய்வது பயம் எல்லாம் கிடையாது… ஆனால், என்னைவிட்டு செல்வானா என்று மீண்டும் ஒரு மனத்தாங்கல். என்னவோ மனம் சோர்ந்து போக, அமைதியாக கண்மூடி அமர்ந்துகொண்டாள் தன்னுடைய சீட்டில்.

                     அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அவள் சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வர, அங்கே அவளை அழைத்து செல்ல காத்திருந்தது அறிவன். “நீ எப்படி அறிவா…”என்று ஸ்ரீகா கேள்வியாக இழுக்க, “ஸ்ரீ இஸ் இன் ஏர்போர்ட். பிக்கப் ஹெர்..” என்று இரண்டு வரி குறுஞ்செய்தியை அவளிடம் காட்டினான் அறிவன்.

                            அவனிடம் ஒன்றும் பேசாமல் காரில் ஏறியவள் “நம்ம வீட்டுக்கு போ அறிவா..” என்றாள் முடிவாக.

                     அறிவன் பீதியுடன் அவளை பார்க்க, “என்ன..” என்றாள் அவள்.

                    “அந்த பாட்டி அன்னைக்கே கிளாஸ் எடுத்தாங்க இல்ல..”

                    “இப்போ எதுவும் சொல்ல மாட்டாங்க… போடா..”

                     “அம்மா .. செம கோபத்துல இருகாங்க ஸ்ரீகா..”என்று அவன் மீண்டும் தயங்க

                     “நீ என்னை கூட்டிட்டு போகவே வேண்டாம். நான் எங்கேயோ போறேன் போ..” என்று காரிலிருந்து இறங்கப் பார்த்தாள் அவள்.

                        “ஹேய்…பிசாசே.. இருடி.. திரும்பவும் என்னை அடி வாங்க வைக்காத.. இப்போ என்ன நீ வீட்டுக்கு போகணும். அவ்ளோதானே வா.. நீயாச்சு.. ரேகாம்மா வாச்சு… வா..” என்றதோடு அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டான் அறிவன்.

                          அவன் கூறியது போலவே, அவளைக் கண்களில் கண்ட நிமிடம் ரேகா அவளைத் திட்ட தொடங்கி இருந்தார்.

                     “இன்னும் சின்னப் பொண்ணா நீ.. வளரவே இல்லையா ஸ்ரீ… இப்படி செய்யலாமா. உன் மாமியாருக்கு முடியாம இருக்கும்போது இப்படி கிளம்பலாமா நீ..” என்று ஏகப்பட்ட அர்ச்சனைகள் அவளுக்கு.

                     அத்தனையையும் வாங்கி கொண்டு, கொஞ்சம் கூட அதற்காக கவலை கொள்ளாமல் ஆர்த்தி கொடுத்த பழச்சாறை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தாள் பெண். அன்னை அதில் இன்னும் கோபம் கொள்ள,

                  “நான் உங்ககிட்ட நிறைய பேசணும்மா… இருங்க கொஞ்சம் எனர்ஜி ஏத்திட்டு வரேன்..”என்றாள் பாவமாக

                    “ஏன் மதியம் சாப்பிடலையா..” என்று அவர் கேட்க

                   “ம்ச். ராமோட சண்டை. சோகத்துல கொஞ்சமே கொஞ்சம் தான் சாப்பிட்டேன்.”

                   “நீ திருப்தியா மீன் குழம்பை முடிச்சு விட்டதா நியூஸ் வந்ததே..” இது அறிவன்.

           

                   “ம்மா…மதியம் சாப்பிட்டேன்.. பசிக்கும் இல்ல.. சாப்பிடனும்தானே..” என்று குழந்தைப் போல் அந்த குமரி கொஞ்சலில் இறங்க, அவளை திட்டிப் பேசுவது போல் நடிக்க கூட முடியவில்லை ரேகாவால்.

                    அவர் சிரித்துவிட, அறிவன் தான் பொசுங்கிப் போனான். “ம்மா.. சொல்லமா டூர் போயிட்டு வந்தவளை எல்லாம் மன்னிச்சு பேசுவீங்க.. எனக்கு மட்டும் பனிஷ்மெண்ட்டா..” என்று வெகுண்டெழுந்தான் மகன்.

                       “ம்மா.. நோ.. அறிவா என் தளபதி.. அன்னிக்கு என்னை அடிக்கும்போது அவன் மட்டும்தான் கேட்டான் அவரை. உன் மத்த ரெண்டு பிள்ளைகளும் வேடிக்கை தான் பார்த்தாங்க தெரியுமா.. சோ, நீ அறிவனை எதுவும் சொல்லக்கூடாது..”என்று வக்காலத்து வாங்கியது பெண்.

                    அவர்கள் மேல் எங்கே கோபத்தை இழுத்து பிடிப்பது. ரேகா மகனை முறைக்க முயன்று சிரித்துவிட, இதுதான் சாக்கென்று அன்னையை அணைத்து கொண்டனர் பிள்ளைகள்.

                  ஸ்ரீகா அன்னை நல்ல மனநிலையில் இருப்பதை உணர்ந்தவள் “அம்மா.. உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும்.. உன் செல்லப்பிள்ளை சர்வா பத்தி..” என்றாள் அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு.

                 “ஏன்.. சர்வாவுக்கு என்ன…”

               “எங்கே உன் மகன்..” என்று ஸ்ரீகா கேட்க

                “அவன் கம்பெனில ஏதோ முக்கியமான கான்ட்ராக்ட் ஒர்க் இருக்காம்.. அங்கே இருக்கான்..” என்றார் ரேகா. மகனைப் பற்றி பேசும்போதே ஒரு மலர்ச்சி முகத்தில்.

                  “உன் மகனுக்கு எந்த கான்ட்ராக்டும் இல்ல. அவன் லவ் பண்றான். நம்ம தீக்ஷியை..” என்றாள் துண்டு துண்டாக

                    ரேகா மகளைத் திரும்பி பார்க்க, “நிஜம்ம்மா… அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. தீக்ஷி அஞ்சு வருஷம். உன் மகன் இப்போ ஒரு ரெண்டு மாதமா.. ஆனா,அவனுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். “

              “ஆனா, அவன் சித்தி, அப்பாவை நினைச்சு வெளியே சொல்லவே தயங்கிட்டு இருக்கான். இப்போ தீக்ஷி அத்தைக்கு சத்தியம் செய்து கொடுக்கவும், அவ அம்மாவை மீறி எனக்காக வர வேண்டாம் ன்னு சொல்லிட்டு இருக்கான். கூடவே என் லைப் நினைச்சும் பயப்படறான்.”

               “அவனுக்கு தீக்ஷியை ரொம்ப பிடிக்கும்மா… ஆனா, இப்போ விட்டால் எப்பவுமே அவன் வெளியே சொல்லவே மாட்டான்..” என்று தாயிடம் மகனுக்காக பேசிக் கொண்டிருந்தாள் ஸ்ரீகா.

                 ரேகாவுக்கு முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், சர்வாவின் வாடிய முகம்..அதற்கான காரணம் இப்போது விளங்கியது. அதுவும் மூன்று நாட்களாக கண்ணில் படாமல் சுற்றிக் கொண்டு ஆட்டம் காட்டும் அவனை நினைத்து கொஞ்சம் கோபமும் கூடியது.

                   முதலிலேயே தன்னிடம் கூறி இருந்தால்,  இந்த அளவுக்கு சென்றிருக்காதே.. என்று ஒரு வருத்தமும் சேர, மகளுக்கு அப்போதைக்கு பதில் எதுவும் கூறவில்லை ரேகா.

                   “காலையில் பேசுவோம். போய் தூங்கு..” என்றதோடு தன்னறைக்கு சென்றுவிட்டார்.

Advertisement