Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 38-2

                           ஸ்ரீகாவிடமிருந்து சற்று எட்டி நின்று அவளை ரசித்துக் கொண்டிருந்தான் ஜெய். அவன் அரைமணி நேரத்திற்கு முன்னர் தான் அவன் வீட்டை அடைந்திருக்க, வீட்டில் வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். பாட்டியும், பேத்தியும் தோப்புக்கு சென்றிருப்பதாக கூறவும், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

                         ஸ்ரீகா தனியாக நடக்க தொடங்கிய நேரத்தில் தான் அவன் தோப்பிற்குள் நுழைந்தது. அங்கே நின்றவர்களிடம், வாயின் மீது விரல் வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை செய்தவன் மனைவியின் பின்னால் நடக்க தொடங்கி இருந்தான்.

                         அங்கே வாழைத் தோப்பிற்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்க, ஓடும் வாய்க்கால் நீரில் காலை விட்டு விளையாடி கொண்டிருந்தாள் அவன் மனைவி. அவள் நின்றிருந்த இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாமல் போக, அந்த வாய்க்கால் பரப்பில் அப்படியே  கொண்டு கால்களை மட்டும் தண்ணீரில் விட்டு கொண்டாள் இப்போது.

                           உடைகள் எதுவும் எடுத்து வராததால்,பாட்டியின் நூல்புடவை ஒன்றைத் தான் அணிந்து இருந்தாள். அவளின் திருமண விருந்தின்போது, இங்கே வைத்துச் சென்ற ரவிக்கை இப்போது உதவியது. அந்த பருத்தி நூல் சேலைக்கும், அவளின் அந்த மாடர்ன் பிளவுஸ்க்கும் தூரம் சற்று அதிகமாக இருந்தாலும், கவர்ச்சியாகவே காட்சி கொடுத்தாள் ஜெய்யின் பார்வைக்கு.

                          ஜெய் வெகுநேரம் அவளை தூர நின்று ரசித்தவன் அதற்குமேல் தாங்காமல் அவளை நெருங்க, அருகில் அவனின் அரவம் உணரவும், கோபமாக எழுந்து கொண்டாள் மனைவி. பழக்கமில்லாத வாய்க்கால் நீரின் வழவழப்பு, கால்களை வழுக்கை செய்ய அவள் கீழே விழுவதற்குள் அவளைப் பிடித்து நிறுத்தி இருந்தான் ஜெய்.

                        அவன் இன்னமும் அமர்ந்தே இருக்க அவன் கைகளை உதறியவள், மீண்டும் காலை எடுக்க முற்பட, இம்முறை மல்லாக்க விழப் பார்த்தாள். ஜெய் சட்டென்று எழுந்து அவளைப் பிடித்து நிறுத்தியவன்,அவளை வாய்க்காலை விட்டும் வெளியே இழுத்து வந்திருந்தான்.

                      அவன் பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் தலையிலோ, கழுத்திலோ பலமான காயம் பட்டிருக்கும். அந்த கோபத்தில் “உன்னை யாரடி இங்கே தனியா வர சொன்னது.. கீழே விழுந்து கையை காலை உடைச்சுக்க போறியா..” என்று அவன் முறைக்க

                       அவனுக்கு பதிலே சொல்லவில்லை மனைவி. அதில் இன்னும் கடுப்பானவன் “உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன் ஸ்ரீ..” என்று அதட்ட

                        அவனை அதிசயமாக பார்த்தாள் மனைவி. “என்கிட்டேயா பேசறீங்க.. வழக்கமா உங்க கைதானே பேசும். இப்போ என்ன வாய் பேசுது.. ” என்றாள் நக்கலாக

                         ஜெய் அமைதியாக, “ஓஹ்.. எல்லாரும் பார்க்கும்போது தான் கை பேசுமா.. இப்போ இங்கே யாருமில்ல ன்னு யோசிக்கிறீங்களா..” என்றாள் மேலும்.

                              “எத்தனை முறை உன்னை அடிச்சிருக்கேன்… வழக்கமா சொல்ற..” என ஜெய் கோபத்துடன் நிற்க

                           “நீங்க என்னை அடிச்சிருக்கீங்க…” என்றாள் அழுத்தமாக

                          ஜெய் அவள் குரலில் வேதனை கொண்டவனாக அவளை நெருங்க, இரண்டடி பின்னால் நகர்ந்தாள் மனைவி.

                            “எனக்கு உங்க ஆறுதல் எல்லாம் வேண்டாம்… கிளம்புங்க..” என்றவள் மீண்டும் வந்த வழியில் நடக்க, வேகமாக அவளின் முன்னே வந்து நின்றான் ஜெய்.

                          “ஸ்ரீ… நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேட்ககூடாதா…” என்று நிதானமாக அவன் கேட்க

                   “இதே மாதிரி என்கிட்டே கேட்டு இருக்கலாம் இல்ல. நானும் என்ன நடந்தது சொல்லி இருப்பேன் இல்ல. ஏன் என்னை அடிச்ச.. என்னை அடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தா… நீ என் புருஷன் தான்.. ஆனா, அதுக்காக என்னை அடிப்பியா….” என்று முறைத்து நின்றாள் ஸ்ரீகா.

                     “உனக்கு தெரியுமா இதுவரைக்கும் என் அப்பாகூட அடிச்சதே இல்லை என்னை. வீட்ல அத்தனைப் பேரும் என்னைவிட பெரியவங்க.. ஆனா, எப்பவும் நாந்தான் அவனுங்களை அடிச்சு வைப்பேன். விளையாட்டுக்கு கூட என் மேல கைநீட்ட யோசிச்சதில்ல அவங்க.”

                       “ஆனா, நீ.. நீங்க எவ்ளோ சாதாரணமா கையை நீட்டினீங்க ராம். எங்கே இருக்கோம், சுத்தி யார் இருக்கா.. எதுவுமே தெரியல இல்ல…”

                         “நீங்க திரும்பவும் ஒருமுறை நிரூபிச்சு இருக்கீங்க ராம். உங்க அம்மாவுக்கு பிறகுதான் நான் என்று. நீங்க என்னை நினைக்கறீங்க.. உங்க அம்மா வாயில நான் விஷத்தை ஊத்தி இருப்பேன் ன்னா… ” என்று அவள் கத்த

                          “ஸ்ரீகா..” என்று மெல்லிய குரலில் அதட்டினான் ஜெய்.

                         “ஹா.. என்ன இப்போ சத்தமா பேசிட்டேனா.. உங்க ரெபியூட்டேஷன் குறைஞ்சிடுமா… ஆனா, ஆளில்லாத இந்த காட்டுல நான் கத்துறதே உங்களால பொறுக்க முடியலையே.. அந்த ஹாஸ்பிடலில் அத்தனைப் பேர் முன்னாடி என்னை அடிச்சீங்களே… நான் ஏன் பொறுக்கணும்..” என்றாள்  ஆத்திரமாக.

                           ஜெய் “பொறுத்துட்டு என்கூடவே   குடும்பம் நடத்திட்டு இருக்கியா நீ..” என

                           “ஓஹ்.. இன்னும் அதைவேற செய்யணுமா… சாரி எனக்கு தெரியாம போச்சு.” என்றாள் நக்கலாக

                            ஜெய் அவள் பேச்சை அமைதியாக உள்வாங்கியவனாக, “கிளம்பு.. நம்ம வீட்டுக்கு போவோம்..” என்று ஆழ்ந்த குரலில் அழைக்க

                           “அது என் வீடு இல்ல.. எனக்கு அந்த பீல் வரவே விடல நீங்க யாரும். இது எல்லாத்துக்கும் மேல உங்க அம்மாவுக்காக என்னை மறுபடியும் கீழே இறக்கி இருக்கீங்க நீங்க.. நான் உங்களோட வரமாட்டேன்..” என்றாள் முடிவாக

                            “என்னோட வராம… இங்கேயே பாட்டியோட செட்டில் ஆகப் போறியா..” என்றவன் “ஈவினிங் டிக்கெட் போட்டாச்சு நமக்கு.. கிளம்பி ஆகணும்..” என்றான் முடிவாக

                       “நிச்சயமா நான் உங்களோட வரமாட்டேன்…”

                        “நீ இல்லாம நானும் போறதா இல்ல.” என்றவன் கையை நீட்டி அவளை அருகில் இழுக்க, அவன் அருகாமையில் நெகிழாமல் அழுத்தமாகவே நின்றிருந்தாள் அப்போதும்.

                         “தெரியாமல் எல்லாம் அடிக்கல. தெரிஞ்சுதான் அடிச்சேன்… என்ன பண்ணுவ..” என்றான் சீண்டலாக

                          ஸ்ரீகா அவன் பேச்சில் உஷ்ணம் ஏறியவளாக, அவனிடம் இருந்து விலக முற்பட அவளின் கையை வயிற்றோடு சேர்த்து வைத்து பிடித்து, அவளை மொத்தமாக தன்மீது உரசிக் கொள்ளும்படி தன் பிடியில் நிற்கவைத்துக் கொண்டான் ஜெய்.

                          ஸ்ரீகா அவனது இந்த அடாவடியில் “கையை விடுங்க ராம்.” என்று சன்னமாக சத்தமிட

                         “உன்னை கத்த வேண்டாம் ன்னு சொல்லி இருக்கேன் இல்ல..” என்றவன் இதழ்கள் அவள் காதுமடலில் உரசியது.

                   தன் இதழ்களை மடித்துக் கொண்டு இறுக்கத்துடன் அவள் நிற்க, “குட்..இப்படியே இருக்கணும்.” என்றவன் அவள் காதுமடலில் இதழ்பதித்து, அவன் கன்னத்திலும் அழுத்தமாக இதழ் பதிக்க, ஸ்ரீகாவின் உணர்வுகள் கொதித்துக் கொண்டிருந்தது.

                     அவனிடம் இப்படி அடங்கிடக் கூடாது என்று புத்தி கூப்பாடு போட, மனம் மதிமயங்கி நிற்கவே விரும்பியது. தன் நிலைக்காக தன்னையே கடிந்து கொண்டு, இதழ்களை அழுத்தமாக கடித்து அவள் நிற்க, இதற்குள் அவள் முகம் பார்க்குமாறு அவளை தன்புறம் திருப்பி இருந்தான் ஜெய்.

                       அவள் இதழைக் கடித்திருந்த இடத்தில், அவள் பல்தடத்தை மீறி வெளிப்பட்டது அவளின் ரத்தம். அதில் துடித்தவனாக அவள் இதழ்களை அழுந்த பிடித்து, அவள் பற்களின் பிடியில் இருந்து அவற்றை விடுவித்தான் ஜெய்.

                        ஸ்ரீகாவை ஆயாசத்துடன் பார்த்தவன், “என்ன பண்ற ஸ்ரீகா நீ…  என்கிட்டே இப்படி பண்ணுவியா..” என்று கேட்க

                      “என்னை இப்படி பண்ணுவிங்களா…” என்று வேதனையுடன் கேட்டாள் ஸ்ரீகா.

                      “என்ன செஞ்சேன்.”

                    “எனக்கு பதில் சொல்ல தெரியாம, என் வாயை அடைக்க இந்த வழியை பயன்படுத்துறீங்க. என்னை வழிக்கு கொண்டு வர, என்னை இப்படி.. இப்படி…. பண்றிங்க… உங்களுக்கு தெரியும் ராம்  என்னை… அதனாலேதான் என்னை சரிக்கட்ட இப்படி பண்றிங்களா..” என்றாள் அவள்.

                  அதில் கடுப்பாகி, “ஏய்..” என்று அதட்டினான் ஜெய். ஸ்ரீகா லேசாக அவன் அதட்டலில் பதட்டம் கொள்ள,  “கொன்னுடுவேன் உன்னை.. என்ன நினைக்கிற நீ… இந்த ஒருவழி தான் இருக்கா, உன்னை சரிக்கட்ட.. நேரா ரேகாம்மா கிட்ட போய் நின்று இருந்தால் போதும். “

                     “நீ வந்திருப்ப சென்னைக்கு… எவ்ளோ ஈஸியா ஜட்ஜ் பண்ணிட்டடி நீ…” என்று அவள் முழங்கையை அழுத்தமாக பற்றியவன் “நமக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகுது. அதுவும் முழுசா முடியல.. அதற்குள்ளாக இத்தனைப் பிரச்சனை..”

                     “எத்தனை நாள் ஒண்ணா இருந்திருக்கோம் நாம… ஒண்ணா இருந்த நேரங்கள்ல உன்கிட்ட எப்படி நடந்திருக்கேன் நான்.. என்னைப் பத்தி யோசிச்சியா நீ… “என்று அவள் தாடையை பிடித்து இறுக்கியவன்

                     “ஏன் நீ மட்டும்தான் என் பக்கத்துல வந்தா உருகுவியா.. எனக்கெல்லாம் எதுவும் தோணாதா.. ஜடமா நான்.. உன்னை இழுத்துட்டு போகணும்னு தான் வந்தேன். ஆனா, மோஹினி மாதிரி தண்ணியில ஆடி, அங்கேயும் இங்கேயும் நனைச்சுட்டு நின்றால், என்ன செய்யணும்ன்னு சொல்ற நீ…”

                    “உன் புருஷன் நான்.. நமக்குள்ள எத்தனைப் பிரச்சனை, சண்டை, மனஸ்த்தாபம் இருந்தாலும், நீ என் பொண்டாட்டி தான். அதெல்லாம் மாறாது இல்ல. அப்போ நான் உன் பக்கத்துல வந்தா என்ன.. இப்படி இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் காட்டிட்டு, முகத்தை மிளகா மாதிரி வச்சிருக்கியே… உன் பக்கத்துல வந்தா என்னடி..” என்று இடக்காக கேள்வி கேட்டான் ஜெய்.

                  அவன் கேள்விக்கு பதில்  கொடுக்க முடியாமல் அவள் நிற்க, “இல்ல… உன்னை அடிச்சதுக்கு நீ என்னை மன்னிக்கிற வரைக்கும் நான் உன் பக்கத்துல வரவே கூடாது ன்னு நினைக்கிறாயா… அப்போ நீ என்ன நினைக்கிற.. இந்த விஷயத்தை வச்சு என்னை லாக் பன்றியா…” என்று அழுத்தமாக அவன் கேட்க, இப்போது உக்கிரமாக பார்த்தாள் அவனை.

                    அவள் முறைப்பில் இன்னும் வேகம் கொண்டவன் “அப்போ என்னை மட்டும் எப்படி கேட்ப..” என்று இன்னமும் அழுத்தம் கொடுத்தான் அவள் தாடையில்.

                    அடுத்தநொடி அவளை விட்டு விலகியவன் “நீ ஊருக்கு வா.. இல்ல இங்கேயே இரு.. அது உன்னோட விருப்பம். ஆனா, நான் இனி இங்கே வரமாட்டேன்…  அதோட அன்னைக்கு உன்னை நான் அடிச்சது உனக்காக.. என் அம்மாவுக்காக இல்ல…”

                     “அதுக்கெல்லாம் மன்னிப்பும் கேட்க முடியாது. நீ என்ன நினைக்கறியோ, அதை செய்..” என்று அவளை திரும்பியும் பாராமல், அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன்.

Advertisement