Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 38

                        ஜெயராம் கிருஷ்ணா வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்தே மனம் ஒருநிலையில் இல்லை சீதாவுக்கு. அதுவும் அவரது செல்ல மகன். எப்போதும் அவரைத் தாங்கி கொள்ளும் தலைமகன். நீங்கள் தவறு என்று கைநீட்டி குற்றம் சுமத்தி இருக்கின்றான் முதல் முறையாக.

                         ஏற்கனவே தனது தவறுகளை ஓரளவிற்கு உணரத் தொடங்கி இருந்தார் சீதா. மதுவின் பாசமும், தீக்ஷியின் கண்ணீரும் அவரை ஏற்கனவே சுட்டுக் கொண்டிருக்க, இதோ மகன் விலகி நின்று புரிய வைத்திருக்கிறான் அவன் பங்குக்கு.

                          நேற்று அவன் பேசியது அவன் வேதனையின் வெளிப்பாடு அல்லவா. என் மகனை இத்தனை தூரம் வேதனைப்படுத்தி எதை சாதிக்கப் போகிறேன் என்று தோன்றிவிட்டது அவருக்கே. என் மகனை வைத்து தான் அத்தனையும்.

                           அவனே தனியே செல்கிறேன் என்று நிற்க, தாங்குவாரா அவர். இதோ காலையிலேயே புறப்பட்டு தயாராக அமர்ந்து கொண்டிருந்தார். மகனுக்காக மருமகளை ஏற்றுக் கொள்ள தயாராகி இருந்தார் மாமியார். ஸ்ரீகா மீது கோபமிருந்தாலும், அதற்கு இணையாக மகன் மீது அன்பும் கொண்டவராகிற்றே.

                         இதோ தன் மகனுக்காக மருமகளை அழைத்துவர அவரே கிளம்பி அமர்ந்திருக்கிறார். கணவர் குளித்து வருவதாக கூற, அவர் வரவும் இருவரும் சேர்ந்தே ஸ்ரீகாவின் வீட்டிற்கு சென்றனர். ஸ்ரீகாவின் வீட்டு வாயிலில் மது காரை நிறுத்த, போர்டிகோவில் அமர்ந்திருந்த அறிவன் எழுந்து நின்றான்.

                        எதற்கு வந்திருக்கிறார்கள் என்று உள்ளுக்குள் சிந்தனையாக இருந்தாலும், “வாங்க மாமா.. வாங்க ” என்று மட்டும் வரவேற்றான் இருவரையும்.

மறந்தும் அதற்குமேல் வாய்திறக்கவில்லை அவன். வீட்டினுள் நுழையவும், “அம்மா..” என்று அவன் அழைக்க, ரேகா சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்.

                       “வாங்க சீதா.. வாங்கண்ணா..” என்று அழைத்தவரின் குரலில் மருந்துக்கு கூட, ஒரு போலித்தனம் இல்லை. உள்ளார்ந்த அன்போடு அவர் இருவரையும் வரவேற்க, அதில் குறுகியவராக சற்று சங்கடத்துடன் வந்து அமர்ந்தார் சீதா.

                                                           ரேகாவிற்கு முதலில் அவர்கள் வந்த காரணமே புரியவில்லை. நேற்று காலையில் தான் மருத்துவமனையிலிருந்து வந்திருக்க, இப்படி அவசரமாக, அதுவும் இத்தனை காலையில் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாரே என்று ஆச்சர்யம் கூடவே அதிர்ச்சி.

                        ஆச்சர்யம் அவர்கள் வருகையினால் என்றால், அதிர்ச்சி சீதா அமர்ந்திருந்த விதம். வழக்கமான நாகராணி தோரணை இல்லாமல், ஏதோ தவறு செய்த பாவம் அவர் முகத்தில். ரேகா ஒன்றும் புரியாமல் பரமேஸ்வரனை அழைக்க சொல்லி, இருவருக்கும் தானே காஃபி கலந்து கொடுத்தார்.

                          பரமேஸ்வரன் மதுவுடன் இயல்பாக பேசிக் கொண்டிருக்க, சீதாவின் கண்கள் வீட்டை சுற்றி வந்தது.

                      வீட்டிற்குள் நுழைந்தது முதல் ஸ்ரீகாவை தேடிக் கொண்டிருக்கிறார் அவர். ஆனால், அவள் எங்கும் தென்படாமல் போகவும், ரேகாவிடமே “ஸ்ரீகா…” என்று கேட்க

                        “ஸ்ரீகாவுக்கு என்ன… அவளையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல..” என்று ஆர்வமாக ரேகா கேட்டுவைக்க, ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது சீதாவுக்கு.

                                                 ரேகாவுக்கு நேற்று முன்தினம் மருத்துவமனையில் நடந்தது எதுவுமே தெரிந்திருக்கவில்லை இதுவரை. பிள்ளைகள்  மூவரும் அவர்களே முடிவெடுத்து அவரிடம் சொல்லாமல் விட்டிருக்க, இதோ இப்படி சீதா வந்து நிற்பார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லையே அவர்கள்.

                 அறிவன் இவர்களின் சம்பாஷணையைக் கேட்டு, “போச்சு..” என்பது போல் நிற்க, அவன் எதிர்பார்த்தது போலவே “ஸ்ரீகா இங்கே இல்லையா..” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சீதா.

                   “என்ன இங்கேயா..” என்று ரேகா அதிர்ச்சியடைய

                    சீதா பயந்து போனார் இப்போது. என்ன செய்வது என்று புரியாமல் கலங்கியவராக, அவர் கணவரின் முகம் பார்க்க “ஸ்ரீகா இங்கே வரவே இல்லையாம்மா..” என்று ரேகாவிடம் கேட்டார் மது.

                      “எனக்கு நீங்கப் பேசறதே புரியலண்ணா. ஸ்ரீ இப்போ உங்க வீட்லதானே இருக்கணும். இங்கே வந்து கேட்கறிங்களே.. இங்கே வர்றதா சொன்னாளா.. எப்போ கிளம்பினா..” என்று அவர் படபடக்க

                         “இல்லம்மா… அன்னிக்கு ஹாஸ்பிடலில் இருந்தே வீட்டுக்கு வரலையே. நான் உங்களோட வந்துட்டதா இல்லையா நினைச்சேன்..”என்று மது கூறிய நிமிடம், தலைசுற்றியது ரேகாவுக்கு.

                           அறிவன் ஓடிவந்து அவரின் அருகில் அமர்ந்து கொண்டு “அம்மா.. இங்கே பாருங்க.. ஸ்ரீகா பத்திரமா இருக்காம்மா.. அவ பாட்டியோட கோவைக்கு போயிருக்கா.. இவங்களுக்கு தெரியாது. பாட்டிக்கு முடியல ன்னு மாமா அனுப்பினாங்க..” என்று அப்போதைக்கு சமாளித்து வைக்கப் பார்த்தான்.

                      ஆனால், ரேகாவிற்கு பதட்டம் குறையவே இல்லை. அவர் தன் அலைபேசியை எடுத்து உடனடியாக மகளுக்கு அழைக்க, “ஹலோம்மா… என்ன பண்ற.. மார்னிங் டிபன் என்ன.. என்ன பண்றானுங்க உன் பிள்ளைங்க..” என்று எப்போதும் போல் அவள் உற்சாகமாக பேச

                       “எங்கே இருக்க ஸ்ரீகா…”என்றார் அன்னை.

                       “ஏன்ம்மா… இந்த நேரத்துக்கு எங்க இருப்பேன்.. எங்க வீட்ல தான் இருக்கேன்..” என்று அப்போதும் அவள் பொய்யுரைக்க

                          “அம்மாகிட்ட பொய் சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டியா ஸ்ரீ…” என்று அதட்டினார் ரேகா. மகள் “அம்மா..” என்று தடுமாற, “எங்கே இருக்க நீ..” கடினமாக ஒலித்தது ரேகாவின் குரல்.

                           “அம்மா… ” என்று மீண்டும் மகள் தொடங்க, “எங்கே இருக்க ன்னு கேட்டேன்..” என்று அதட்டினார் இப்போது. “இங்கே.. பொள்ளாச்சில சரோ பாட்டிக் கூட…” என்று தேம்பியது ஸ்ரீயின் குரல்.

                         “எதுக்காக அங்கே போன… யார் உன்னை அனுப்பி வச்சது..” என்று மீண்டும் அன்னை விசாரிக்க, சில நிமிடங்கள் மௌனம் சாதித்தாள் மகள்.

                             “உண்மை என்னவோ அதை சொல்லு ஸ்ரீ. முடியாதுன்னா போனை வச்சிடு..”என்று அழுத்தமாக கூறினார் ரேகா.

                           என்ன நினைத்தாளோ அன்று மருத்துவமனையில் நடந்தது மொத்தத்தையும் அன்னையிடம் கூறிவிட்டாள் ஸ்ரீகா… அவள் கூறி முடிக்கும் வரை பொறுமை காத்தவர் “நான் என்ன செத்தா போய்ட்டேன்..” என்று சத்தமிட

                           “அம்மா..” அம்மா..” “ரேகா..” என்று ஏக காலத்தில் அலறினர் அவர் மக்களும், கணவரும்.

                                                 அவர்கள் பதட்டத்தை கவனிக்காதவராக, ரேகா அழைப்பை துண்டித்துவிட, அங்கே அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீகா. அவள் அறையில் இருக்க, அவள் அழுவது தெரியாமல் கீழே வீட்டிற்கு வெளிப்பக்கம் அமர்ந்திருந்தார் சரோஜினி.

                இங்கு சென்னையில் ரேகா கோபம் குறையாதவராக தன் மகனை முறைத்து கொண்டிருக்க, துருவனும், அபியும் கூட வீட்டிற்கு வந்து விட்டிருந்தனர். ரேகா ஸ்ரீகாவிடம் பேசி முடித்த நிமிடமே, “நாங்க கிளம்புறோம் பரமேஸ்வரன். நான் ஸ்ரீகா இங்கே இருப்பா னு நினைச்சு தான் வந்தோம். ஆனால், இப்பவும் மருமகளா, எங்களை விட்டு கொடுக்கவே இல்ல. நாங்க தான் புரிஞ்சிக்கல அவளை.”

                  “அன்னைக்கு வீட்டிலும் சரி, ஹாஸ்பிடலிலும் சரி என்ன நடந்து இருந்தாலும், அதுல ஒரு துளிகூட ஸ்ரீகா மேல தப்பு இல்ல. நீ என் மருமககிட்ட இந்த அளவுக்கு கோபப்பட வேண்டாம்மா..” என்று ரேகாவிடம் உரிமையாக சொல்லிச் சென்றிருந்தார் மது.

                  சீதாவும், “அவளை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க ரேகா. என் மகன் நிச்சயம் உங்க மகளை பார்த்துப்பான். அவன் அன்னைக்கு கைநீட்டியது கூட, என் நிலைமையை நினைச்சுதான். நான் தான் அவசரப்பட்டு ஏதோ செஞ்சுட்டேன். அதனால்தான் அவங்களுக்குள்ள, ” என்று தயங்கி அவர் நிறுத்த

                   “இதுல நீங்க இவ்வளவு தயங்கி பேச எதுவும் இல்ல சீதா. இது கணவன் மனைவி சண்டை. என்னவா இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டியது அவங்க ரெண்டு பேர்தான். இதுல தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனா, ஒருவார்த்தை என்கிட்டே சொல்லியிருக்க வேண்டாமா…”

                   “நான் இந்த நிமிஷம் வரைக்கும், அவ உங்கவீட்ல இருக்கறதா நினைச்சுட்டு இருக்கேன்.. இது தப்பில்லையா.. ஒரு பொண்ணு எங்கே போறேன், வரேன் ன்னு யார்கிட்டேயாவது சொல்லிட்டுப் போகணுமா, இல்லையா..” என்று ஆற்றாமையோடு முடித்தார் ரேகா.

                     அதற்குமேலும் சில நிமிடங்கள் ரேகாவிடம் பேசி, அவரை இயல்பாகிய பின்பே அங்கிருந்து புறப்பட்டனர் மதுவும், சீதாவும். அவர்கள் கிளம்பவும், “அபிக்கும், துருவனுக்கும் போன் போடுங்க..” என்றார் ஆணையாக

                     அடுத்த சில நிமிடங்களில் இருவரும் பிரசன்னமாக, அவர்களிடமும் மகளிடம் கேட்ட அதே கேள்வி… “நான் உயிரோடு தானே இருக்கிறேன் என்று…

                     அறிவனிடம் “உனக்கும் என்கிட்டே சொல்லணும்ன்னு தோணல இல்ல..” என்று கேட்டவர் அவன் கூற வரும் பதிலை கேட்பதாக இல்லை. மேலும், “வீட்டு மாப்பிளையோட சட்டையை பிடிக்கிற அளவுக்கு கோபம் வருதா உனக்கு… நீ ஒருத்தன் தான் கொஞ்சம் நிதானம் ன்னு நினைச்சுட்டு இருக்கேன். அது இல்ல, நானும் அவசரக்குடுக்கை ன்னு நிரூபிக்கிற நீ..” என்று திட்டி தீர்த்தவர் “ஆர்த்தி..” என்று மருமகளை அழைத்தார்.

                       அவள் ஒரு ஓரமாக நின்று பயத்துடன் இவர்களை வேடிக்கைப் பார்த்திருந்தவள், இப்போது முன்னே வந்து நிற்க ‘இனி இவங்க மூணு பெரும் என்கிட்டே பேசக்கூடாது. அதற்கு நீதான் பொறுப்பு.. என்பக்கமே வரக்கூடாது இவங்க..” என்றதோடு தன்னறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

                        இங்கே சென்னையில் நிலவரம் இப்படி கலவரமாக மாறிக் கொண்டிருக்க, மத்திய அமைச்சர் கோவைக்கு கிளம்பி இருந்தான். மது ஸ்ரீகாவின் வீட்டில் நடந்ததை மகனுக்கு தெரியப்படுத்தி இருக்க, “உங்களை யார் அங்கே போக சொன்னதுப்பா..”என்று தலையிலேயே அடித்துக் கொண்டான் மகன்.

                     அவன் அலைபேசியில் இருந்து ஸ்ரீகாவை அழைக்க எடுக்கவே இல்லை அவள். ஒன்றுக்கு இரண்டு முறை அழைத்துப் பார்த்தவன் அவள் எடுக்காமல் போகவும்,  தன் அலைபேசியில் ஆராய்ந்து அடுத்த ஒருமணி நேரத்தில் புறப்பட இருந்த விமானம் ஒன்றில் தனக்கான டிக்கெட்டை உறுதி செய்து கொண்டு கோவைக்கு கிளம்பி இருந்தான்.

                      ஆனால், இவன் வருகைக்கு அவசியம் இல்லாமல், பேத்தியை சமாளித்து சமாதானப்படுத்தி, அவளை ரேகாவிடமும் பேச வைத்திருந்தார் சரோஜினி. ரேகா மகளின் மீது கோபம் கொண்டிருந்தாலும், ஓரளவுக்குமேல் அவளைத் திட்ட மனம் வரவில்லை அவருக்கும்.

                    இதில் சரோஜினி வேறு மகளுக்கு ஆதரவாக பேச, அதற்குமேல் எங்கே முகம் தூக்குவது. ரேகா சண்டையிட்ட அடுத்த ஒருமணி நேரத்தில் மகளுடன் சமாதான உடன்படிக்கை வாசித்து கொண்டிருக்க, தங்கைக்காக பொய் சொன்ன அண்ணன்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

                      ஸ்ரீகா அன்னை தன்னிடம் பேசிவிட்டதில் மகிழ்ந்தவளாக, பாட்டியை கட்டியணைத்து முத்தமிட, “வா நம்ம தோப்புக்கு போயிட்டு வருவோம்..” என்று அவளையும் இழுத்துக் கொண்டு அவர்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு சென்றார் சரோஜினி.

                     தோப்பில் காய் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்க, மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர் பாட்டியும், பேத்தியும். சரோஜினி பார்வையில் கம்பீரமும், ஆளுமையும் போட்டி போட, அங்கிருந்தவர்களை கண்ணசைவில் வேலை வாங்கி கொண்டிருக்க, ஸ்ரீகாவின் பார்வையில் மொத்தமும் அதிசயமும், ஆர்பரிப்பும் தான்.

                      இந்த மொத்த தோப்பும் நம்மோடதா பாட்டி என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வரிசை, வரிசையாக காய்த்து தொங்கி கொண்டிருந்தது அவர்களின் தென்னந்தோப்பு.

                   “எல்லாம் நம்மோடது தான் ராஜாத்தி..” என்றார் சரோஜினி.

                   “நான் கொஞ்ச தூரம் நடந்திட்டு வரேன் பாட்டி..” என்று அவரிடம் கூறியவள் தன் அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டு ஆங்காங்கே தெரிந்த இயற்கை காட்சிகளை படம் பிடித்துக் கொண்டே நடக்க தொடங்கினாள்.

                    மெல்ல வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அவள் நடக்க, சில இடங்களில் தென்னைக்கு நடுவே ஊடுபயிராக எலுமிச்சை, கொய்யா போன்ற வேறு மரங்களும் அமைந்திருந்தது. மற்றொரு புறம் தென்னையின் ஊடே வாழை பயிரடப்பட்டிருக்க, பார்ப்பதற்கே மனதை பறித்தது அங்கிருந்த இயற்கை சூழல்.

                      சென்னை, மும்பை, பெங்களூர் என்று சுற்றி வந்திருக்கிறாளே தவிர்த்து, அவளின் தொழிலுக்காக கூட, இது போன்ற கிராமத்திற்கு வந்ததில்லை அவள். பார்க்க பார்க்க தெவிட்டாத அந்த காட்சிகள் அவளை வசீகரிக்க, சற்றுத் தொலைவில் நின்று அவளை ரசித்துக் கொண்டிருந்தான் ஜெய்.

                    

                      

Advertisement