Advertisement

அதே கோபத்தோடு அவன் அந்த நாளை கழிக்க, அடுத்தநாள் மாலை சீதாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனையில். ஜெய் நேற்று இரவு வந்தது முதல் ஒரு வார்த்தைக் கூட பேசியிருக்கவில்லை அன்னையிடம்.

பேசினால் வார்த்தை தடித்து விடும் என்ற அளவுக்கு புரிதல் இருக்க, தன்னை அடக்கிக் கொண்டு அமைதியாக தன் கடமைகளை செய்துக் கொண்டிருக்கிறான். அவரை வீட்டிற்கு அழைத்து வரும்போது சத்யநாராயணன், பீஷ்மன், சங்கரநாராயணன், பார்கவி என்று அந்த குடும்பமும் வீட்டிற்கு வர, அவர்கள் வருகையில் பீஷ்மனை மட்டும் ஏற்க முடியவில்லை ஜெய்யால்.

அதுவும், சீதாவிடம் அவன் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததும், சீதா அவன் கன்னம் வருடிக் கொண்டிருப்பதும் கண்ணில் விழ, எரிச்சல் தான் மண்டியது ஜெய்க்கு.

வந்தவர்களை வரவேற்று ஹாலில் அமர்த்தியதோடு சரி. தீக்ஷி அவர்களுக்கு தேனீர் கொடுக்க, குளித்து வருவதாக சொல்லி தன் அறைக்கு வந்துவிட்டான். இன்னும் அம்மா என்னென்ன செய்து வைத்திருக்கிறார் என்பதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது அவனுக்கு. அதுவும் தங்கை ஒப்புக் கொண்டிருக்க, அதை வைத்து வேறு என்ன சொல்லி வைத்திருக்கிறாரோ அவர்களிடம் என்று அந்த கவலை வேறு.

வெகுநேரம் அமர்ந்து இருந்தவன், கீழே இருப்பவர்கள் நினைவு வரவும், வேகமாக குளியலை முடித்துக் கொண்டு கீழே இறங்கினான். சத்யா அவனை வரவேற்று அருகில் அமர்த்திக் கொள்ள, “அம்மா நம்ம தீக்ஷி விஷயமா பேசி இருந்தா… நீ என்ன நினைக்கிற ஜெய்… உனக்கு தீக்ஷியை பீஷ்மனுக்கு கொடுக்க சம்மதமா..” என்று அவனிடம் கேட்டு வைத்தார் பார்கவி.

பீஷ்மன் இன்னும் அன்னையிடம் தீக்ஷியின் விஷயம் பேசாததால், இன்னமும் நம்பிக்கை இருந்தது பார்கவிக்கு. அவரின் கேள்விக்கு பதிலாக, அவன் சத்யாவைப் பார்க்க, “நீ நினைக்கிறதை சொல்லு ஜெய். என்னை ஏன் பார்க்கிற…” என்று தாத்தா கூறிவிட்டார்.

“இந்த சம்பந்தம் எல்லாம் வேண்டாம் அத்தை. தீக்ஷிக்கு நான் ஏற்கனவே மாப்பிளை பார்த்துட்டேன்” என்று ஒரே வாக்கியத்தில் அவன் முடிக்க, பார்கவி எதையோ பேச முற்பட்டார். ஆனால், அதற்குள் அறையில் இருந்து வெளிப்பட்டான் பீஷ்மன்.

“அம்மா..” என்று அதட்டலாக அவன் அழைக்க, அவன் குரலின் பேதம் புரிந்து அமைதியானார் பார்கவி. அதற்குமேல் எந்த வித சலசலப்பும் இல்லாமல் அமைதியாக பீஷ்மனின் குடும்பம் விடைபெற்றுக் கொள்ள, பீஷ்மனுக்கு முதல்முறையாக எதையோ சரிவர செய்த உணர்வு.

அதுவும் தன்னை யாசகமாக பார்த்திருந்த தீக்ஷியின் முகம். தான் அன்னையை அதட்டியதும் அது மலர்ந்த விதம் அத்தனையும் கண்ணில் பட்டிருந்தது. ஜெய்யை எப்போது வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் ஆனால், அதற்கான வழி தீக்ஷி அல்ல என்று முடிவெடுத்துக் கொண்டான் அவன்.

சர்வா- தீக்ஷியின் காதல் விஷயமும் தெரிய வந்திருக்க, தன் அத்தையையும் மண்டையை கழுவிவிட்டு தான் வந்திருந்தான். அது என்னவோ, தீக்ஷியின் கண்ணீர் முகத்தை காண வேண்டாம் என்று ஒரு உயர்ந்த எண்ணம்.

இத்தனைக்கும் எப்போதும் அவனை அலட்சியமும், முறைப்புமாக ஒரு பார்வை பார்த்து முகம் திருப்பிக் கொள்பவள் தான். அவன் குணத்திற்கு இதற்கு மேலும் அவளை அழவைத்துப் பார்க்கவே விரும்பி இருக்க வேண்டும் அவன். ஆனால், அவனால் அது முடியாமல் போனது. அத்தைப்பெண் என்ற கரிசனமோ இல்லை அவன் அத்தையின் மீதான அவளின் பாசமோ எதுவோ ஒன்று வென்றது அவனை.

இதே சிந்தனையில் பெற்றவர்களை வீட்டில் விட்டவன் தன் காரை எடுத்துக் கொண்டு அப்போதே கிளம்பி இருந்தான்.

ஜெய்யின் வீட்டில் இரவு உணவு தொடங்கி இருக்க, அப்போது தான் ஸ்ரீகாவை விசாரித்தார் தந்தை. “ஸ்ரீகா எங்கே ஜெய்.” என்று அவர் விசாரிக்க

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டிங்கப்பா…” என்றதோடு எழுந்து கொண்டான் அவன்.

தீக்ஷி “ஸ்ரீகாவை அண்ணா அடிச்சிட்டாங்க. அவளோட அண்ணா அவளை கூட்டிட்டு போய்ட்டாங்க..” என்றாள் தந்தையிடம்.

மகன் கையை கழுவி வரவும், “எதுக்கு ஜெய் ஸ்ரீயை அடிச்ச…” என்று மது குரலுயர்த்த

“என்னால அவளை மட்டும்தானே கண்டிக்க முடியும்ப்பா..” என்றான் ஜெய்.

மது என்ன சொல்வதென்று புரியாமல் மனைவியைப் பார்க்க, சீதா ” நேற்றிலிருந்து இன்னும் ஒரு வார்த்தைக் கூட பேசல ஜெய். நீ என்கிட்டே..” என்றார் குற்றம் சாட்டும் குரலில்.

“நான் யாரும்மா உங்களுக்கு.. என்கிட்டே பேச என்ன இருக்கு..” என்றான் விலகல் குரலில்.

தீக்ஷி “அண்ணா..” என்று வாயைத் திறக்க,ஒற்றை விரலை நீட்டி அவளையும் அடக்கி வைத்தான்.

சீதா “ஜெய்..” என்று மீண்டும் அழைக்க, மகன் தந்தையிடம் பேசினான்.

“நான் ஸ்ரீகாவை கூட்டிட்டு தனி வீட்டுக்கு போய்டறேன்ப்பா. ஏன் எனக்கு குவார்ட்ரஸ் கொடுப்பங்களே. அங்கே போயிடுறேன்…” என்றான் முடிவாக

“ஜெய்..” என்று சீதா கண்ணீருடன் எழ, “அம்மா ப்ளீஸ்.. மறுபடியும் இந்த நாடகத்தை தொடங்காதிங்க…” என்றான் தெளிவாக.

சீதா அவனை அதிர்ச்சியுடன் பார்க்கும்போதே, “அதுதான் அண்ணன் பையனுக்கும், உங்க மகளுக்கும் சம்மந்தம் பேசி முடிச்சிட்டீங்களே.. இன்னும் என்னம்மா… உங்க விருப்பப்படி என்ன வேணாலும் செய்ங்க. நானோ, என் மனைவியோ இனி உங்க குடும்ப விஷயங்கள்ல சம்பந்தப்பட மாட்டோம்.” என்றான் அழுத்தத்துடன்.

“ஜெய் என்ன பேசுற நீ..” என்று தந்தை அதட்ட

“எனக்கு பயமா இருக்குப்பா… ஆறுமாதம் டெல்லி, அடுத்த ஆறுமாதம் சென்னைன்னு நிற்காம சுத்திட்டு இருக்கேன். . இங்கே என் மனைவியை யாரை நம்பி விட்டுட்டுப் போறேன். இது என் வீடு, என் குடும்பம் ன்னு  தானே..”

“ஆனா, இவங்க என்ன செய்து இருக்காங்க… என்ன தப்பு செய்தா அவ. தீக்ஷியை இவங்ககிட்ட இருந்து காப்பாத்தினது தப்பா.. இல்ல, அவளை அவ அண்ணனோட அனுப்பி வச்சிட்டாளா.. அவ நினைச்சு இருந்தா, நேற்றே தீக்ஷி கல்யாணத்தை முடிச்சு வச்சிருக்கலாம். அவளால அது முடியும்.”

“ஆனா, இது எதையும் செய்யாம, அவளை பாட்டிகிட்ட அனுப்பி வச்சிருக்கா.. இதுல என்ன தப்பு செய்தா அவ. இந்த விஷயத்துக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..” என்று அவன் கேள்வி கேட்க

“ஜெய் ஸ்ரீகாவை இங்கே யாரும், எதுவுமே சொல்லலையே.. ” என்று தந்தை தயங்கியபடியே கேட்க

“பார்தேன்ப்பா.. நீங்க யாரும் அவளை எதுவும் கேட்கல. ஆனால், தப்பு செய்த பார்வை  பார்த்திங்க. நேற்று நான் அவளை அடிக்கும்போது இவ என்பின்னாடி தான் நின்னுட்டு இருந்தாள். ஆனா, ஏன் அவளை அடிச்சே ன்னு ஒரு வார்த்தைக் கூட கேட்கல. அவளை அறிவா இழுத்துட்டுப் போகும்போது கூட அவளை தடுக்கவே இல்ல. ” என்று தங்கையின் மீதும் குற்றம் சாட்டினான் ஜெய்.

“நான்கூட என்மேல இருக்க பாசத்துல, என் மகன் ஓடி வந்துட்டதா நினைச்சுட்டு இருக்கேன் ஜெய். ஆனால், நீ உன் மனைவிக்கு நியாயம் கேட்க வந்திருக்க போல.” என்று தன் வழக்கமான பேச்சை சீதா தொடங்க

“ஆமாம்மா… நிச்சயமா அவளுக்கு நியாயம் கேட்கத்தான் வந்தேன். தப்பு மொத்தமும் உங்கமேலதான் ன்னு தெரிஞ்சும் அப்பா உங்களை தாங்குறாரே… அப்படியிருக்க, தப்பே செய்யாத என் மனைவியை நான் ஏன் தாங்கக்கூடாது.”

“ஆனால், அப்பவும் பாருங்க. உங்களை ஹாஸ்பிடல்ல பார்க்கவும் ஒரு நிமிஷம் துடிச்சு தான் போய்ட்டேனம்மா.. உங்கமேல காட்ட முடியாத கோபம் மொத்தத்தையும், என் மனைவி மேல காட்டிட்டேன்.”

“அவளும் எத்தனை நாள் பொறுத்து போவாம்மா.. நாலு வருஷம் உங்களுக்காக அவளைவிட்டு விலகி இருந்தேன். அவளுக்கும் தெரியும் உங்களுக்காக தான் காத்திருக்கேன் ன்னு. ஒருநாள் கூட அதுக்காக என்கிட்டே கோபப்பட்டதோ, உங்களை திட்டினதோ எதுவும் செய்யமாட்டா அவ.”

“அவள் வேலையை பார்த்திட்டு ஒதுங்கி தான் இருந்தா. நான் யாரையும் கல்யாணமே பண்ணியிருந்தா கூட, அவ குறுக்கே வந்திருக்கமாட்டா.. ஆனா, இப்பவும் நாந்தான் அவ வாழ்க்கையில குறுக்கிட்டு திரும்பவும் அவளை அழ வச்சிருக்கேன். “

“அவகிட்ட தான் அன்பா நடக்க முடியல. அட்லீஸ்ட் உங்க கிட்டேயாவது நான் பேசித்தான் ஆகணும் இல்ல…” என்று அவன் இத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து வைத்துப் பேசிட, அவனுக்கு பதில் கொடுக்க முடியாமல் தளர்ந்து இருக்கையில் அமர்ந்து கொண்டார் சீதா.

ஜெய் தன் முடிவில் இருந்து மாறாதவனாக “இந்த வீட்டுக்கு அவளை கூட்டிட்டு வந்த முதல் நாளே, நாம தனியா போயிடுவோம் ன்னு அவகிட்ட கேட்டு பார்தேன்ப்பா. ஆனால், அவதான் வேண்டாம் ன்னு சொன்னா..” என்று அழுத்தமாக கூறியவன்

“இப்போ இதெல்லாம் சரியா வரும்ன்னு தோணல எனக்கு. இங்கே சென்னையில் இருந்தா ஏதாவது சங்கடமா இருக்கும் ன்னு தோணினா, சொல்லிடுங்க.. நான் அவளை டெல்லிக்கு கூட்டிட்டு போயிடுறேன்.” என்று முடித்துக் கொண்டவன் யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காமல் கார்ச்சாவி, அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

சென்னையில் இருந்த அவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சேர்ந்திருந்தான் ஜெய். வீட்டில் பேசியதெல்லாம் ஒரு துளி அளவுக்கு கூட தவறாக தோன்றவில்லை அவனுக்கு. ஸ்ரீகாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது அடுத்த தலைவலியாக அவன் முன்னே நின்றது.

அன்று அடித்த கணம் அவள் பார்த்த பார்வை… அவள் லேசில் விடமாட்டாள் என்று தோன்றியது இப்போது. அவள் அலைபேசியை அன்று காலையிலேயே கோவைக்கு பார்சல் செய்து விட்டிருந்தான். ஆம்.. அவள் கோவையில் இருப்பதை அங்கிருந்த வேலையாள் ஒருவரின் வழியே தெரிந்து கொண்டான் இதற்குள்.

அலைபேசியும் இந்நேரத்திற்கு அவள் கைக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டவன் அவள் எண்ணுக்கு அழைக்க, நான்குமுறை அழைத்தும் அழைப்பு எடுக்கப்படவே இல்லை.

அலைபேசியை நெற்றியில் தட்டிக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவன் இரண்டு நிமிடங்களுக்கு பிறகுஅலைபேசியில் தன் குரலை பதிவு செய்து அனுப்பி வைத்தான்.

ஸ்ரீகாவும் அலைபேசியை கையில் வைத்துக் கொண்டே தானே அமர்ந்திருந்தாள். இவன் வாய்ஸ் நோட் வந்து விழுந்த கணமே ஆர்வம் தாங்காமல் அதை திறந்து பார்த்திருந்தாள் அவள்.

அன்று காதல் பண்ணியது

உந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல்

இந்த நெஞ்சில் நிற்கிறது… என்று அவன் குரல் கொஞ்சலாக வஞ்சியை தீண்டிட, ஒருகணம் உருகித்தான் போயிருப்பாள் அவள். ஆனால் அவளின் உள்மனம் “உனக்கு வெட்கமே இல்லையாடி..” என்று காறி உமிழ, “இல்ல கோபம் தான்…” என்று அவனை கண்டுகொள்ளாமல் விட்டாள் அவள்.

அவள் பதிலளிக்கவில்லை என்றதுமே, அடுத்த ஐந்தாவது நிமிடம்

“காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி

கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே

ஓடோடி வா… என்று மீண்டும் சில வரிகள்…

இப்போது இன்னும் முறுக்கி கொண்டாள் அவள். “என்னை அடிச்சுட்டு இவர் கண்ணீர் விடறாராம்… இதயம் கருகுதாம்.. எங்கே இருக்கேன் ன்னு தெரிஞ்சும் கூட, என்னை ஓடி வர சொல்றார்… போய்யா…” என்று சத்தமாகப் பேசி, மீண்டும் அலைபேசியை தூர வைத்துவிட்டாள்.

பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?

மெலிதான முத்தத்தில் சக்தியில்லை

மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை

பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை – என்று அடுத்தபாடல் வந்து விழ, அதற்குமேல் பொறுமையில்லாமல் முற்றிலும் எரிந்து போனது போல வெறும் சிவப்புநிற ஸ்மைளிகளை அவள் அனுப்பிவிட, “ஹப்பா.. நார்மலா தான் இருக்கா நாட்டியக்காரி..” என்று அடுத்த செய்தி வந்து விழுந்தது.

Advertisement