Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 37

                      ஜெய் அடித்த நிமிடம், அதிர்ச்சி தாங்காமல் தானோ என்னவோ சிலையாக நின்று விட்டாள் ஸ்ரீ. ஆனால், மற்றவர்கள் அப்படி கிடையாதே. அபியும், துருவனும் ஜெய்யை கண்டனமாக பார்த்து நிற்க, அப்போதுதான் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தான் அறிவன்.

                       ஜெய் ஸ்ரீகாவை அடித்துவிட, வெகு வேகமாக அவர்களை நெருங்கினான் அவன். நெருங்கிய வேகத்தில் ஜெய்யின் சட்டையை பிடித்துவிட, ஜெய்யும் அந்த நிமிட கோபத்தில் அவன் கையை சற்று வேகமாக தட்டி இருந்தான்.

                           அவன் தட்டி விட்டதில் அறிவன் ஓரடி பின்னே வர, அவனை பிடித்து நிறுத்தியது ஸ்ரீகா. அறிவன் மீண்டும் ஜெய்யை நோக்கி முன்னேற, அவனை துருவனும், அபியும் பிடித்து நிறுத்தி இருந்தனர்.

                       “எப்படி அவளை அடிப்பீங்க நீங்க..உங்க அம்மா விஷம் குடித்தால், அதற்கு என் தங்கச்சியை அடிப்பீங்களா…” என்று எகிறிக் கொண்டு அவன் முன்னேற, அவனைப் பிடித்து நிறுத்துவதே போராட்டமாக இருந்தது துருவனுக்கு.

                         அறிவன் அப்படித்தான்.. எப்படி இலகுவாக கோபம் வராதோ, அதே போல் தான், வந்தாலும் அவ்வளவு எளிதாக போகாது.

                          ஜெய் அறிவனை இன்னமும் கோபமாகப் பார்த்தானே தவிர, ஒரு வார்த்தைக் கூட அவனிடம் பேசவில்லை. அவனின் இந்த அலட்சியம் கோபத்தைக் கொடுக்க, “நீ ஏன் இங்கே நிற்கிற… அப்படியென்ன இவர் அடிச்சாலும், இவரோட குடும்பம் நடத்தணுமா..?? வா..” என்றவன் ஸ்ரீகாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்துவிட்டான்.

                         கட்டுக்கடங்காத கோபம் ஜெய்யின் மீது… எப்படி என் தங்கையை கை நீட்டுவான் என்பது மட்டுமே மூளையில் ஓடிக் கொண்டிருக்க, கண்மண் தெரியாத ஆத்திரம். அந்த இடத்தில் ரேகா இருந்திருந்தால் அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும். சாதாரண ஆண்களே மனைவியின் மீது கையை நீட்டுவதை ஏற்றுக் கொள்ளமாட்டான் அறிவன்.

                        அப்படியிருக்கையில், ஒரு மத்திய அமைச்சர், பிறருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டியவர்..ஒரு பொது இடத்தில் தன் தங்கையின் மீது கையை வைப்பாரா… என்னதான் ஜெய்யை பிடிக்கும் என்றாலும், அவனது இந்த செயலை ஏற்க முடியவில்லை அறிவனுக்கு.

                      இதோ தங்கையை அழைத்துக் கொண்டு மருத்துவமனை வாயில் வரை வந்துவிட்டான். ஆனால், ஸ்ரீகாவை கிளம்ப விடாமல் அவனை இடைமறித்தார் சரோஜினி.

                                       ஜெய் கோபமாக அறையில் இருந்து வெளியே செல்ல,அவனின் கோபமுகம் கண்டு பயந்தவளாக தன் பாட்டிக்கு அழைத்துவிட்டாள் தீக்ஷி. அவரும் அப்போது மருத்துவமனைக்கு தான் வந்து கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையை நெருங்கும்போதே மீண்டும் அவள் அழைப்பு.

                 “அண்ணா.. ஸ்ரீயை அடிச்சுட்டாங்க பாட்டி.. அவங்க அண்ணா ஸ்ரீயை கூட்டிட்டு போறாங்க..” என்றாள் பதட்டமாக.

                     அவள் அலைபேசியை துண்டிக்கவும், சரோஜினியின் கார் மருத்துவமனையை அடையவும் சரியாக இருந்தது. வாசலில் வைத்து ஸ்ரீகாவையும் பார்த்துவிட, விரைவாக அவளை நெருங்கி அவளை விடாமல் தன்னோடு நிறுத்திக் கொண்டார்.

                      அறிவன் “அவளை விடுங்க பாட்டி… உங்க வீட்டுக்கு நல்லது நினைச்சதுக்கு அவளையே அடிப்பாரா உங்க பேரன். என்ன தப்பு செஞ்சா அவ…” என்று அவரிடமும் அறிவன் காய

                    “இதெல்லாம் நீ உன் மாமன்கிட்டே கேட்கவேண்டியதுதானே..” என்று அலட்டாமல் கூறியவர் நான் ஜெய்யின் பாட்டி என்று நிரூபித்தார்.

                   அறிவன் “நான் கேட்க வேண்டியதை கேட்டுட்டு தான் வந்திருக்கேன் பாட்டி.. என் தங்கச்சியை நான் கூட்டிட்டுப் போறேன். வரட்டும் அவர்..” என்றவன் தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

                    “அப்படியெல்லாம் விட முடியாது அறிவு. சின்னப்பசங்க பேச்சை எல்லாம் கேட்டு முடிவெடுக்க முடியாது.  அவ முகத்தைப் பாரு. எப்படி சிவந்து போயிருக்கு. இதே முகத்தோட உன் அம்மா முன்னாடி வந்து நிற்பாளா அவ. உன் அம்மாவிற்கு மனசு தாங்குமா…”

                      “அதற்காக உங்கபேரன் அடிச்சாலும்,அவரோடவே இருக்கணுமா இவ..”

                      “அவனோட ஏன் இருக்கணும். என்னோட இருக்கட்டும். நீ கிளம்பு..”

                     “பாட்டி நீங்க..” என்று மீண்டும் பேச வந்தவனை பேசவே விடவில்லை சரோஜினி.

                      “நான் நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவேன். ஸ்ரீகா இப்போ முருகனோட ஊருக்கு கிளம்பட்டும். முருகனை முழுசா நம்பலாம்.” என்றார் அவர்.

                       “பாட்டி இதெல்லாம் சரியா வராது…” என்று அறிவு ஆரம்பிக்க

                       “வேற எது சரியா வரும் அறிவு. கல்யாணம் முடிஞ்சு முழுசா ஒரு மாதம் கூட முடியல. மினிஸ்டர் பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க ன்னு நியூஸ் கொடுக்க போறியா…” என்று கடுமையை அறிவனை அவர் முறைக்க

                       “ஹ்ம்ம்.. நீங்களும் உங்கப் பேரனைப் பற்றிதான் கவலைப்படறீங்க பாட்டி..”

                       “கண்டிப்பா.. ஏன் உனக்கு அவன்மேல் அக்கறையில்லையா.. இல்ல.. இதோ உன் தங்கச்சி அவளைக் கேளு. அவன் எப்படி போனாலும் பரவாயில்ல ன்னு விட்டுடுவாளா இவ..” என்று அவன் முகம் பார்த்து அவர் கேள்விகளை வீச, என்ன பதில்சொல்வான் அவன்.

                        “அவ விட மாட்டாள் ன்னு தெரிஞ்சு தான் பாட்டி உங்கப் பேரன் அவளை விட்டுக் கொடுத்திட்டே இருக்காரு. நாலு வருஷத்துக்கு முன்னாடியும் இதே தான் நடந்தது. அவங்க அம்மாவுக்காக அப்பாவும் இவளை விட்டு கொடுத்தார். இதோ இப்போதும்… “

                        ‘ஆனா, ஒரு விஷயம் நீங்க உறுதியா நம்பலாம். இவ கண்டிப்பா அவரை விட மாட்டா.. இன்னும் நூறு முறை அவர் விட்டு கொடுத்தாலும், இவ விடமாட்டா…” என்றவன் ஸ்ரீகாவின் கையை அவரிடம் பிடித்துக் கொடுத்தான்.

                         “எனக்கு இங்கே யார் மீதும் நம்பிக்கையில்லை. உங்களை மட்டும் நம்பி இவளை விட்டுட்டுப் போறேன். ஆனா, மறுபடியும் இங்கே யாராவது அவளை வேதனைப்படுத்தினால் மினிஸ்டர், அவரோட அம்மா இதெல்லாம் பார்க்கவே மாட்டேன்.” என்று வெடித்தவன் ஸ்ரீகாவின் முகத்தைக் கூட பார்க்காமல் கிளம்பிச் சென்றிருந்தான்.

எங்கிருந்தோவந்தான்

இடை ஜாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்….

                     அவன் அந்த நீண்ட வாயிலை கடந்து அவன் காரில் ஏறும் வரை அவன்மீது தான் பார்வையை பதித்திருந்தாள் ஸ்ரீகா. அறிவு இருந்த கோபத்திற்கு யாரையும் கவனிக்கும் மனநிலை இல்லாமல் போக, சட்டென்று கிளம்பிவிட்டான்.

                       சரோஜினி ஸ்ரீகாவின் கன்னம் வருடியவர் “நீ ரொம்ப கொடுத்து வச்சவ ஸ்ரீகா..” என்றார் ஆதுரமாக

                      “ஏன் பாட்டி.. உங்க பேரன்கிட்ட அடி வாங்கி இருக்கேனே.. அதற்காக சொல்றிங்களா…” என்று ஸ்ரீகா கேட்க, சரோஜினி லேசாக சிரித்தார்.

                       “நான் அறிவனைச் சொன்னேன்..” என்று மீண்டும் சிரித்தவர் “என் பேரனை சும்மாவா விட்ட..”என்று ஸ்ரீகாவிடம் மீண்டும் வம்பிழுக்க

                        “கொஞ்சம் வலிச்சது… நான் ஷாக்ல அப்படியே நின்னுட்டேன்.. அதற்குள்ள இந்த அறிவா  இழுத்திட்டு வந்துட்டான்..” என்றாள்.

                         சரோஜினி ஸ்ரீகாவின் முகம் பார்த்து, “பரவால்ல.. மண் எதுவும் இல்ல…இருந்தாலும் துடைச்சுக்கலாம்.விடு.” என்று கேலி செய்ய, ஸ்ரீகா அவரின் கேலியில் லேசாக முகம் சிவந்தாள்.

                        “எல்லாப் பக்கமும் ஒரே நேரத்துல அழுத்தம் கொடுக்க கூடாது இல்ல பாட்டி.. அதனால தான் அமைதியா வந்தேன். ரொம்ப கோபமா இருக்காங்க.. கொஞ்சம் குறையட்டும். அவங்களே யோசிப்பாங்க… அப்போ பேசிக்கறேன்..” என்றாள் அமைதியாக

                         “எப்பவும் நீ இப்படியே இருக்கனும்டா..” என்று அவள் தாடையைப் பிடித்து சரோஜினி நெகிழ, “எப்படி உங்க பேரன்கிட்ட அடி வாங்கிட்டேவா..” என்று சிரித்தாள் அவள்.

                         சரோஜினி தானும் சிரித்து, “வா… உள்ளேப் போகலாம்.” என்று அவளை அழைக்க,

                          “நான் வரல பாட்டி.. எனக்கு இங்கே இருக்க முடியாது. எல்லாரும் என்னை பாவமா பார்க்க வேண்டாம். என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்க..” என்றுவிட்டாள் அவள்.

                         “சொல்லிட்டுக் கிளம்புவோம்டா..”என்று அவர் கூறிய போதும், “நீங்க சொல்லிட்டு வாங்க பாட்டி..” என்று காருக்கு சென்றுவிட்டாள் அவள்.

                            அவ்வளவே தான். ஸ்ரீகாவின் பயணம் தொடங்கி இருந்தது. இரண்டு நாட்களாக இரவு பகல் பாராது மருத்துவமனையில் அமர்ந்திருந்தவள் பயணம் தொடங்கவும், லேசாக கண்ணயர்ந்தாள். அலைபேசியை மருத்துவமனையிலேயே விட்டு வந்திருக்க, இப்போது அதன் தேவையும் இருப்பதாக தோன்றவில்லை.

                     கண்மூடி தன்னை குறுக்கிக் கொண்டு படுத்துவிட்டாள் அவள். “ரீச் ஆனதும் எழுப்புங்கண்ணா..” என்று முருகனிடம் தகவல் மட்டும்.

                      இங்கே மருத்துவமனையில் அறிவன் கிளம்பிய நிமிடமே, அபியும், துருவனும் ஜெய்யை பிடித்துக் கொண்டனர். “உன்கிட்ட இதை எதிர்பார்க்கல ஜெய்.என்ன நினைச்சு அவளை அடிச்ச நீ.. உன் அம்மா விஷம் சாப்பிட, அவ காரணமா இருப்பாளா..??? அப்படி தோணுதா உனக்கு..” என்று அபி அவனை குற்றவாளியாக்க

                      “ரெண்டுநாளா முழுநேரமும் இங்கேயேதான் இருக்கா.. குளிக்கக்கூட வீட்டுக்கு வரல… ஈவென் உங்க தங்கச்சி விஷயத்திலும் அவளைக் காப்பாற்ற தான் நினைச்சிருக்கா… எங்க சர்வாவோட அனுப்பி வைக்கலையே… உங்க பாட்டி வீட்டுக்கு தானே அனுப்பியிருக்கா… இப்போ எதுக்காக அவளை அடிச்சீங்க நீங்க…”

                        “உங்க அம்மா வீம்புக்கு உள்ளே படுத்திருக்காங்க.. ஆனா, நீங்க ஸ்ரீயை அடிச்சதைப் பார்த்து இருந்தால், என் அம்மா அந்த நிமிஷமே ஒண்ணுமில்லாம போயிருப்பாங்க…” என்று அவனும் ஆத்திரம் தீர பேசிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

                           இந்த மும்முனை தாக்குதலில் சற்றே நிலை குலைந்தவனாக ஜெய் நிற்க, மெல்ல அவன் தோளில் கையை வைத்தான் அபி. ஜெய் அவன் முகம் பார்க்க  “”ஏண்டா இப்படி இருக்க… அம்மாவுக்கு தான் ஒன்னுமில்லையே. சரியாகிடுவாங்க ஜெய்.. நீ நார்மலா இருடா..” என்று அவனை தாங்கினான் அபி.

                அபியின் பேச்சுக்கு தலையை மட்டும் அசைத்தவன் துருவனின் அருகில் இருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டான்.அந்த நேரம் தான் சரோஜினி அங்கே வந்து சேர்ந்தது.

                  வந்தவர் பேரனை முறைத்து நிற்க, ஜெய் புரியாமல் பார்த்தான் அவரை.”நல்ல முன்னேற்றம் ஜெய். பொது இடத்தில் நாலு பேர் பார்க்கும்படி பொண்டாட்டியை அடிக்கிற அளவுக்கு நாகரிகம் கத்து வச்சிருக்கியே. யார்கிட்ட படிச்ச இதெல்லாம்..” என்று வெகு கோபமாக கேட்டவர் “நீ எல்லாம் மத்திய அமைச்சர் ன்னு வெளியே சொல்லாத.. அவ திருப்பி ஒரு அடி கொடுத்திருந்தா என்ன செய்திருப்ப..” என்றார் வேகத்துடன்.

                    “பாட்டி.. இது எனக்கும் அவளுக்கும் உள்ளது.. என் பொண்டாட்டி தானே அவ. எதுக்கு எல்லாரும் இப்படி உபதேசம் பண்ணிட்டு இருக்கீங்க…” என்று இரைந்தான் அவரிடமும்.

                    சரோஜினியின் முகம் கூம்பிவிட, அதற்குமேல் அவனிடம் எதுவும் பேசாமல் மருமகள் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டார் அவர். அதன்பின்பு பெரிதாக யாரிடமும் பேசாமல் மாலைவரை நேரம் கடத்தியவர், அன்று இரவே கிளம்புவதாக மகனிடம் மட்டும் கூறிக் கொண்டு கோவையை வந்தடைந்தார்.

                   அவர் வந்ததுமே ஸ்ரீகாவைத் தான் விசாரித்தார் முதலில்.  அவள் கீழே இருந்த அறையில் உறங்கி கொண்டிருக்க, அவளைப் பார்த்து வந்து தானும் தன்னறையில் படுத்துவிட்டார் அவர்.

                                             இங்கு சென்னையிலோ, தான் மட்டும் மருத்துவமனையில் இருந்து கொண்டு தந்தையையும், தங்கையையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டான் ஜெய். இன்னமும் ஸ்ரீகா அவன் பாட்டியுடன் சென்றது தெரியாது ஜெய்க்கு. அவள் அறிவனுடன் சென்றுவிட்டதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

                       இதில் அவன் அழைத்ததும், அவன் பின்னால் சென்றுவிட்ட மனைவியின் மீது கோபம் வேறு. ஆனால், அதைவிடவும் அதிகமான வருத்தத்தை தேக்கி வைத்திருந்தான் மனதில். ஸ்ரீகாவை அடித்தது எந்த விதத்திலும் சரியான செயல் இல்லையென்று தெரியும் அவனுக்கு.

                       ஆனால், அந்தநேரம் தன் கோபத்திற்கு இலக்காக அவளை தண்டித்து இருந்தான். அறிவன் சட்டையை பிடிக்கும் முன்பே, ஸ்ரீகாவின் கலங்கிய, கண்ணீரை வெளிப்படுத்தாத முகத்திலேயே தன் தவறை உணர்ந்தும் இருந்தான்.

                         அறிவன் சட்டையில் கையை வைக்கவும் திரும்பவும் கோபம் கூடிப்போக, அழுத்தமாக நின்றுவிட்டான். அவளுக்கு என்னைப் புரியாதா??? என்று எண்ணம் தான் அவள் கிளம்பிய பின்னும். இப்போது வரை அவள் கிளம்பியிருக்கக்கூடாது என்று தான் மல்லுக்கட்டியது அவன் மனம்.

Advertisement