Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 36

                          சீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மணி நேரங்கள் கடந்திருக்க, இன்னமும் அவரின் நிலை குறித்து எந்த உறுதியும் கொடுத்திருக்கவில்லை மருத்துவர்கள். இதில் விஷயம் கேள்விப்பட்ட நிமிடமே பீஷ்மன் வேறு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

                          வந்தவன் மதுபாலகிருஷ்ணனிடம் “என்ன நடந்தது அவங்களுக்கு.. எதுக்கு இப்படி ஒரு காரியத்தை பண்ணாங்க.. அவங்க சூசைட் அட்டெம்ட் பண்ற அளவுக்கு என்ன பிரச்சனை…” என்று வரிசையாக கேள்வியெழுப்ப

                            அவன் கேள்வி எதற்கும் பதில் கூறவில்லை மது. மனிதர் மொத்தமாக ஓய்ந்து போயிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக,அவர் உயிராக கருதிய அவர் மனைவி அவரை பிரிந்து செல்ல முடிவெடுத்திருக்க, தாங்க முடியவில்லை அவரால்.

                         சீதாவை நான் நல்லபடியாக வைத்துக் கொள்ளவில்லையோ… ஏதோ ஒரு வெற்றிடம் எப்போதும் அவளிடம் இருந்து கொண்டே இருக்கிறதோ என்று காலம் கடந்து யோசிக்கத் தொடங்கி இருந்தார் மதுபாலகிருஷ்ணன்.

                        ஸ்ரீகா நிச்சயம் இந்த எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை சீதாவிடம். அவர் இத்தனை பலவீமானவர் என்று நினைக்கவில்லை அவள்.ஆனால், அவளுக்கு புரியாதது.. சீதாவை மொத்தமாக அடித்து வீழ்த்தியது கணவரின் வேதனையும், அவரின் வார்த்தைகளும் தான் என்பது.

                         அவரை இங்கு அனுமதித்திருந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் சீதாவின் குடும்பம் மொத்தமும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தது. சத்யநாராயணனும் கலங்கி போனவராக ஒரு ஓரத்தில் அமர்ந்து விட்டார். பீஷ்மன் அவரை விட்டு நகராமல் அவர் அருகில் அமர்ந்திருக்க, மருத்துவமனையின் பணியாளர்கள் சீதாவின் உயிரைக் காக்க போராடிக் கொண்டிருந்தனர் உள்ளே.

                          கிட்டத்தட்ட மொத்தத்தையும் அவர் விழுங்கியிருக்க, பெரும் சிரமப்பட்டு மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றி இருந்தனர் சீதாவை. “இனி அவர் உயிருக்கு ஆபத்தில்லை..” என்று மருத்துவர் வந்து கூறும்வரை மதுவின் உயிர் அவரிடம் இல்லை என்பது தான் நிஜம்.

                அடுத்த அரைமணி நேரத்தில் சீதாவை பார்க்க, மதுவை மட்டும் அனுமதிக்க, துவண்டு போய் படுத்திருந்த மனைவியின் இடது கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டார் மது. வெகுநேரம் அவர் அப்படியே அமர்ந்து விட, மெதுவாக அவர் தோளை தொட்டது சத்யநாராயணனின் கரம்.

                   “அதுதான் ஒண்ணுமில்ல ன்னு சொல்லிட்டாங்களே.. இன்னும் ஏன் கலங்கிட்டு இருக்கீங்க… தைரியமா இருங்க..” என்று சத்தியநாராயணன் கூற, அவரை பார்த்து மெதுவாக தலையசைத்தார் மது.

                     அதற்குமேல் ஒன்றும் பேசாமல் அவர் மௌனமாகிவிட, சத்யநாராயணன் மாங்காய் கண்களில் நிரப்பிக் கொண்டவராக வெளியே வந்து அமர்ந்து கொண்டார். ஸ்ரீகா மாமனாருக்கு துணையாக அருகிலேயே அமர்ந்திருக்க, பீஷ்மன் அவர் அருகில் வந்து அமர்ந்தான்.

                      அவன் மீண்டும் அவரிடம், “என்ன நடந்தது..” என்று விசாரிக்க.

                     “ஹேய் உனக்கென்ன என்கொய்ரி ஆபிசர்ன்னு நினைப்பா.. என்ன தெரியணும் உனக்கு.. நடந்தது எல்லாமே உன்னாலதான்.. முதல்ல கிளம்பு இங்கே இருந்து..” என்றுவிட்டாள் கோபமாக.

                       பீஷ்மன் அவளைக் கடுமையாக முறைத்தவன் “உள்ளே இருக்கவங்க என்னோட அத்தை.. இவர் என்னோட மாமா. அவர்கிட்டே நான் பேசும்போது நீ ஏன் குறுக்கே வர…” என்று அவன் கேட்க, ஸ்ரீகா மதுவைத் தான் பார்த்தாள்.

                       ஆனால், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அதற்குமேல் அவள் அங்கே அந்நியமாக உணரத் தொடங்கி இருந்தாள். அந்த நிமிடமே அவள் அந்த இடத்தை விட்டு விலகி எழுந்து சென்றுவிட, “வாங்க மாமா..” என்று மதுவை தன்னறைக்கு அழைத்து சென்றான் பீஷ்மன்.

                       அவரிடம் மீண்டும் அமைதியாக, “என்ன நடந்தது..” என்று அவன் விசாரிக்க, மெல்ல மெல்ல நேற்றிலிருந்து நடந்தது மொத்தத்தையும் அவனிடம் கொட்டித் தீர்த்திருந்தார் மது.

                            “இது எந்த விதத்துல தீர்வாகும் பீஷ்மா. உன் அத்தை மொத்தமா என்னை விட்டுட்டு போக முடிவெடுத்துட்டா… தீக்ஷி சர்வாவை விரும்புறா ன்னு தெரிஞ்ச பிறகும் அவளை கட்டாயப்படுத்த எப்படி முடியுது இவளால..” என்று அவர் ஆதங்கப்பட

                           “இதுல மொத்தமா அத்தையை குறை சொல்ல முடியாது மாமா… உங்கப்பக்கமும் இருக்கு. சீதா அத்தைக்கு தாத்தா மேல எந்த அளவுக்கு பாசம் இருக்கு ன்னு நான் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கு… அப்படியிருக்க, அவங்க பாசத்துக்காக நீங்க என்ன செய்திங்க…”

                    “நீங்க ஒரு முறையாவது தாத்தாவை நேர்ல சந்திச்சு உங்க செயலுக்கு மன்னிப்பு கேட்டு இருக்கீங்களா.. அத்தையைப் பத்தி அவர்கிட்ட பேசி இருக்கீங்களா..” என்று இளையவன் கேள்வி கேட்க, மதுவிடம் பதிலில்லை.

                        சில நிமிடங்கள் மௌனம் காத்தவர் “உன் தாத்தா எங்களை எப்பவும் ஒரு பொருட்டா கூட மதிச்சதில்லை பீஷ்மா..எந்த நம்பிக்கையில என்னை அவர் முன்னாடி நிற்க சொல்ற..” என்று கேள்வி கேட்க

                      “நீங்க கூட்டிட்டு போனது அவரோட மகளை.. உங்கமேல கோபப்படாம, அவர் வேற என்ன செய்யணும்ன்னு நீங்க எதிர்பார்க்கிறிங்க…” என்றான் பீஷ்மா.

                        “நீங்க உங்க அன்பை முழுசா உணர வச்சிருந்தா, அவங்க ஏன் தாத்தாவை தேடப் போறாங்க மாமா…” என்று முகத்திற்கு நேராக அவன் கேட்டுவிட, முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை மதுவுக்கு.

                          “நான் என்னை முழுமையாக உணர்த்தவில்லையோ அவளுக்கு..” என்று அவர் கலங்க, “இனி தீக்ஷியோட கல்யாண விஷயமா, என் வீட்ல இருந்து யாரும் அத்தைகிட்ட பேசமாட்டாங்க.. அதற்கு நான் பொறுப்பு. ஆனால், அதே சமயம் நீங்க அவங்ககிட்ட பேசுங்க… என்ன பிரச்சனை ன்னு பக்கத்துல உட்கார்ந்து கேளுங்க…”

                          “அவங்க எங்க வீட்டுப் பொண்ணு மாமா.. தாத்தா பேசுறாங்க, பேசல.. அதெல்லாம் விஷயம் இல்ல. அவங்க நல்லா இருக்கணும்.. அப்போதான் அவர் நிம்மதியா இருப்பார்.. நீங்க இதை எல்லாம் சரி பண்ணியே ஆகணும்..” என்று கிட்டத்தட்ட மிரட்டும் குரலில் கூறி முடித்து அவரை அனுப்பி வைத்தான் அவன்.

                         அவர் சீதா இருந்த அறையின் அருகில் வர, பரமேஸ்வரன்- ரேகா, அவரின் பிள்ளைகள் என்று ஸ்ரீகாவின் மொத்த குடும்பமும் அங்கே வந்திருந்தனர். பரமேஸ்வரன் மதுவை ஆறுதலாக அணைத்து கொள்ள, மதுவுக்கு கொஞ்சமாக தைரியம் மீள்வது போல் இருந்தது.

                           அவர் பரமேஸ்வரனை விட்டு நகராமல் அமர்ந்து கொள்ள, அன்று மதியமே தீக்ஷி அவள் பாட்டி சரோஜினியுடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து விட்டாள். அன்னையைக் கண்டு அவள் கண்ணீர்விட, சரோஜினிக்கு மருமகளின் செயலில் கோபம் இருந்தாலும், அவருக்கும் சீதாவை பார்க்க முடியவில்லை… மகள் போல் தாங்கியவராகிற்றே…

                          நடந்தது அனைத்தையும் நேற்றே ஸ்ரீகா வழியாக கேள்வியுற்றிருந்தார் அவர். தீக்ஷியை பேரன் வரும்வரை கோவைக்கு அனுப்ப சொல்லியவரும் அவர்தான். ஸ்ரீகாவுக்கும் அவர் கூறியது சரியென்று தோன்ற,அவர் சொன்னதை அப்படியே செய்திருந்தாள் அவள். ஜெய் வந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்க, மருமகள் முந்திக் கொண்டிருந்தார்.

                        தீக்ஷி வேறு அன்னையை பார்த்து வந்தது முதல் அழுதுகொண்டே இருக்க, ரேகா அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு இன்னும் சர்வா – தீக்ஷியின் விஷயம் தெரியாது. ஆனால், சர்வாவுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.

                        “என்னாலதான்..” என்று அழுத தீக்ஷியின் வார்த்தைகளில் தன்னைக் கொண்டு தானோ என்று ஒரு சந்தேகம் அவனுக்கு. அவன் ஸ்ரீகாவை தனியாகப் பிடிக்க, அவனிடம் மறைக்க விரும்பாமல் நடந்தது மொத்தத்தையும் அவனிடம் கூறி விட்டாள் ஸ்ரீகா.

                     சர்வாவுக்கு தீக்ஷி, அவள் அன்னை என்று அத்தனைப் பேரும் பின்னால் போக,ஸ்ரீகாவின் வாழ்க்கை தான் முதன்மையாக தோன்றியது. இந்த விஷயத்தில் அவள் தலையிட்டிருக்க கூடாது என்று அவளை சாடினான் அவன்.

                       “உனக்கு எதற்கு ஸ்ரீகா இந்த வேலை. அவ சொன்னதும் எனக்கு கூப்பிட்டு சொல்லி இருக்கணும்.. இல்லையா ஜெய்க்கு கூப்பிட்டு இருக்கணும்… அதைவிட்டு நீயே எல்லாத்தையும் சிக்கலாக்கி வச்சிருக்க. இப்போ அந்தம்மா இங்கே வந்து படுத்தாச்சு…”

                        “ஜெய் வந்த்து உன்னை கேள்வி கேட்டால் என்ன சொல்லுவ நீ..கல்யாணம் முடிஞ்சு இன்னும் ஒருமாதம் கூட ஆகல.. இதெல்லாம் தேவையா உனக்கு…”என்று அவன் பாட்டிற்கு கத்திக் கொண்டிருந்தான்.

                         சர்வா ஸ்ரீகாவின் வாழ்க்கைக்கு தன்னால் எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். கூடவே, தீக்ஷியின் சத்தியத்தின் மீதும் கொஞ்சம் வருத்தம் இருந்தது அவனுக்கு. தனக்கு இது பழக்கமானது தானே.. இந்த ஏமாற்றங்களும்,எதிர்ப்புகளும் புதிதில்லையே அவனுக்கு.

                       இதையும் ஏற்றுக் கொள்ள துணிந்து விட்டான் அப்போதே. சீதா இதை வைத்து ஏதாவது ஸ்ரீகாவின் வாழ்க்கையில் விளையாட நினைத்தால், தான் ஒதுக்கிவிட வேண்டும் என்று அப்போதே மனம் முடிவெடுத்துக் கொண்டது. அதுதான் அவளும் சத்தியம் செய்திருக்கிறாளே என்று விரக்தியாக சிரித்தவனுக்கு மனம் விட்டுப்போக, தற்போதைக்கு தங்கையின் வாழ்வையாவது காப்பாற்றி விடும் வேகம்தான் மிகுந்தது அவனிடம்.

                     சீதா அன்று பின்மதிய வேளையில் கண்விழித்துப் பார்க்க, தனது அருகில் நின்றிருந்த கணவரின் கலங்கிய முகம் அவரையும் வேதனைப்படுத்தியது. மதுவைப் பிடிக்குமே அவருக்கு. எப்போதும் சின்னசிரிப்புடன் அத்தனைப் பேருக்கும் பிடிக்கும்படி வலம் வரும் மதுபாலகிருஷ்ணனைப் நிரம்ப பிடிக்கும் சீதாவுக்கு.

                     மது அவரின் காதல், கர்வம், கனவு இப்படி எது வேண்டுமானால் சொல்லலாம்.இத்தனை ஆண்டுகளில் இருவருக்கும் பெரிதாக எந்த கருத்து வேறுபாடுகளும் வந்ததே இல்லை. மற்றவர்களுக்கு எப்படியோ மதுவிற்கு சீதா நல்லதொரு காதல் மனைவி தான்.

                        அதனால் தானோ என்னவோ, “போ..” என்னும் அவரின் வார்த்தையை அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை அவரால். நினைத்து நினைத்து தன்னை நிந்தித்துக் கொண்டவர், மது இல்லாத வாழ்விற்கு பயந்தே இந்த முடிவை எடுத்திருந்தார்.

                        ஆனால், இப்படி வாடிய முகத்துடன் அவரின் மதுவைப் பார்க்க, அதுவும் வலி கொடுத்தது. மெல்ல தன் இதழசைத்தவர் “சாரி…” என்று முனக, அவரின் கையை பிடித்துக் கொண்டு அவர் நெற்றியில் முத்தமிட்டார் மது. சுற்றி இருந்த உறவுகள் எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியவே இல்லை அந்த நிமிடம்.

                        சீதாவின் முகம் மெல்ல மலர, அதன்பிறகே அங்கு நின்றிருந்த தன் தந்தையையும், தமையனையும் பார்த்தார் அவர். தந்தை மகளை கண்டு கண்ணீர் வடித்தாலும், “எல்லாத்திலேயும் அவசரம் தானா…இந்த குணம் உன்னை விட்டு போகவே இல்லல்ல.. பாரு.. உன் புருஷனை… ஒரே நாள்ல மொத்தமா உடைஞ்சு நின்னுட்டாரு… இவரையா தனியா விட்டு போகப் பார்த்த..” என்று அதட்டத்தான் செய்தார்.

                      தந்தையின் அதட்டலைவிட, அவர் தன்னிடம் பேசிவிட்டார் என்பதே போதுமாக இருக்க, தன் தந்தையைப் பார்த்து மெல்ல புன்னகை பூத்தார் சீதா. சத்யநாராயணன் அவர் தலையை தடவிக் கொடுத்து நிற்க, அவர் அண்ணனும் கண்ணீரோடு தங்கையின் அருகில் நின்றிருந்தார்.

                     தீக்ஷி அப்போதுதான் உள்ளே நுழைய, அத்தனை மருத்துவ உபகரணங்களுடன் அன்னையைப் பார்க்கவும், கதறி விட்டாள் அவள்.

                       “அம்மா.. சாரிம்மா.. என்னால்தானே இப்படி.. என்னை மன்னிச்சிடும்மா.. தெரியாம பண்ணிட்டேன்.. சாரி..” என்று அவர் கட்டிலில் அமர்ந்து மகள் அழ, தன் ஊசிக் குத்தாத இடது கையால் மகளின் கையை பிடித்துக் கொண்டார் சீதா…

                     “அம்மா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல தீக்ஷி..” என்றார் சீதா.

                    “அம்மா.. அப்படியெல்லாம் எதுவும் இல்லம்மா.. இப்படி பேசாதீங்க.. ஏன்ம்மா இப்படி செய்திங்க..” என்று மீண்டும் அவள் அழ, சத்யநாராயணன் அவள் தலையை வருடிக் கொடுத்தார்.

                    “அம்மாக்கு ஒண்ணுமில்ல தீக்ஷி… சரியாகிடும்… நீ அழுதுட்டே இருக்காத..” என்று சத்யநாராயணன் அவளைத் தேற்ற, பீஷ்மன் அப்போதுதான் அந்த அறைக்குள் நுழைந்தான்.

                      “அப்புறம் என்னத்த… உங்க மகள் தான் உங்க மேல இத்தனை பாசமா இருக்காளே… நீங்க சொல்லியா கேட்காம போவா…” என்றான் சீதாவிடம்.

                        சீதா எதுவும் பேசும் முன்னமே, “நான் கேட்கிறேனம்மா… நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்.. நீங்க என்னோட வந்திடுங்க..” என்று அழ ஆரம்பித்தாள் மீண்டும்.

                      “அப்போ கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிடுங்க தாத்தா..” என்றான் சத்யாவிடம்.

                      தீக்ஷி எதையும் யோசிக்காமல், “நான் பண்ணிக்கறேன்ம்மா… உனக்காக தானே.. செய்றேன்..” என்றவள் கண்ணீருடன் அன்னையின் மீது தலை வைத்து சாய்ந்து கொள்ள, பீஷ்மனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

                      மது பீஷ்மனின் பேச்சில் முதலில் அதிர்ச்சியானவர் அவன் அவரைப் பார்த்து கண்ணடித்து வைக்கவும், அமைதியாக இருந்து கொண்டார். தீக்ஷி மனம் முழுதும்வேதனையை சுமந்து இருந்தாலும், சர்வாவுக்கு தான் செய்வது துரோகம் என்று குறுகி போனாலும், அந்த நிமிடம் அன்னையின் உயிர் விலை மதிப்பற்றதாக தோன்ற, தன்னை பலி கொடுக்க முடிவெடுத்துவிட்டாள் அவள்.

                          மகளின் பேச்சு அவளின் அன்பை உணர்த்திவிட, இப்படிப்பட்ட மகளை தான் என்ன செய்ய துணிந்து விட்டோம் என்று இன்னும் தனக்குள் குன்றிப் போனார் சீதா.

                  அன்று முழுவதுமே அன்னையின் அருகில் அமர்ந்து இருந்தவள் யாரின் முகத்தையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. அவளால் முடியவில்லை என்பதைத் தாண்டி அவளின் குற்றவுணர்வு அது. தான் சர்வாவின் வாழ்வில் இடையிட்டிருக்க கூடாது என்ற வேதனை அவளிடம்.

                    சர்வாவை நேருக்குநேர் பார்க்கும் தைரியம் அற்றவளாக, அவள் அன்னையை கவனித்துக் கொள்வதாக அவர் அருகில் அமர்ந்து கொள்ள, அவரின் மற்றொருப் பிள்ளையோ, அன்னையின் நிலையை கேள்வியுற்ற நிமிடமே கிளம்பி இருக்க, இதோ இரவு நெருங்கும் நேரம் சென்னையை நெருங்கி இருந்தான்.

                     அன்று இரவு பத்து மணி அளவில் அவன் சென்னையை வந்தடைய, நேராக மருத்துவமனைக்கு தான் வந்து நின்றான். பீஷ்மன் காலையில் அவனுக்கு அழைத்து சொல்லியிருக்க, இன்னும் மனைவி அழைத்திருக்கவில்லை அவனுக்கு.

                   அந்த கோபமும் சேர்ந்து கொள்ள, அவன் வந்த நேரம் அன்னை உறக்கத்தில் இருந்தார். ரேகாவும், பரமேஸ்வரனும் வீட்டிற்கு சென்றிருக்க, அபியும், துருவனும் மட்டுமே இருந்தனர் ஸ்ரீகாவுடன்.

                          நடந்தது மொத்தமும் தங்கையின் வழியே அறிந்து கொண்டவனுக்கு மனைவி மீது தான் கோபம் வந்தது. “நான் வரும்வரை கூட பொறுக்க முடியாதா இவளால்…” என்றுதான் ஆத்திரம் மிகுந்தது.

                    அதுவும் அன்னை  தற்கொலைக்கு முயன்றிருக்க, எக்குத்தப்பாக ஏதாவது நடந்து இருந்தால் என செய்ய முடியும் இவளால் என்று எண்ண எண்ண கோபம் கண்களை மறைத்தது அவனுக்கு. ஆத்திரத்திலும், அன்னையின் நிலை கொடுத்த ஆதங்கத்திலும் இருந்தவன் மனைவி கண்ணில் பட்ட நிமிடம் மொத்த கனலையும் கைகளில் தேக்கி அவளை அறைந்து இருந்தான்.

                     அவன் அன்னை அடிக்க முற்படுகையில் திருப்பி அடிப்பேன் என்றவள். ஏனோ இப்போ அடியை வாங்கி கொண்டு அசையாமல் நின்றாள் அங்கே.

Advertisement