Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 35

 

                                  தீக்ஷி ஸ்ரீகாவை அணைத்துக் கொண்டவள் பெரும் குரலெடுத்து அழ, முதலில் அவள் எதற்காக அழுகிறாள் என்றே புரியாமல் திணறினாள் ஸ்ரீகா. “தீக்ஷி…” என்று அவள் அழைத்ததைக் கூட உணராதவள் போல், அவள் கழுத்தை இறுக்கி கொண்டிருந்தாள் தீக்ஷி.

 

                                  அவள் உடலின் நடுக்கம் வெளிப்படையாக ஸ்ரீகாவால் உணர முடிய, எதற்கு இப்படி இருக்கிறாள் என்று அவளும் பயந்து தான் போனாள். பத்து நிமிடங்கள் ஆகியும் அவள் அழுகை நிற்காமல் போக, அதற்குமேல் முடியாமல் எழுந்து கொண்டாள் ஸ்ரீகா.

 

                           தீக்ஷி கட்டிலில் அமர்ந்திருக்க, அவளுக்கு முன்பாக ஸ்ரீகா, தீக்ஷி மீண்டும் அழுகையைத் தொடர, “ஓங்கி அறைஞ்சிடுவேன் தீக்ஷி..என்னன்னு சொல்லிட்டு அழுடி..” என்று மிரட்ட, தீக்ஷியால் பேச முடியவில்லை. வெகுநேரம் அழுததில் மூச்சு வாங்க, தொடர்ந்த இருமல் வேறு.

 

                         ஸ்ரீகா அவளை முறைத்துக் கொண்டே அறையில் இருந்த தண்ணீரை எடுத்து அவளிடம் நீட்ட, தேம்பிக் கொண்டே கையில் வாங்கினாள் தீக்ஷி. “குடி.. குடிச்சு முடி..” என்று ஸ்ரீ மீண்டும் ஒரு அதட்டல் போடவும், மெல்ல நீரை அருந்தினாள் தீக்ஷி.

 

                        அவள் முகம் மீண்டும் அழுகைக்கு தாவ முற்பட, “எனக்கு பொறுமை ரொம்ப குறைவு தீக்ஷி… இப்படியே அழுதுட்டு இருந்த, அழு ன்னு விட்டுட்டு போயிட்டே இருப்பேன்… அழுகையை நிறுத்திட்டு என்ன விஷயம் சொல்லு முதல்ல..” என்றவள் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றுவிட்டாள்.

 

                          “எல்லாமே முடிஞ்சு போச்சு ஸ்ரீ… என் வாழ்க்கையே போச்சு..” என்று அவள் புலம்ப

 

                         “சரி… போனால் போகட்டும்.. என்ன விஷயம் அதை சொல்லு..” என்று ஸ்ரீகா அசட்டையாக கூறியதில் தீக்ஷி தளர்ந்தவளாகப் பார்த்தாள் அவளை.

 

                            “என்ன செய்யணும்.. நீ அழுதுட்டே இருந்தால், நான் மடில போட்டு தாலாட்டாவா.. குழந்தையா நீ தீக்ஷி… அழுது என்ன சாதிச்ச இப்போ.. முதல்ல அழுகையை நிறுத்திட்டு, என்ன பிரச்சனை, அதை சரிசெய்ய என்ன வழி ன்னு அதை யோசி. இல்ல, யோசிக்கிற அளவுக்கு மூளை இல்ல ன்னா, என்கிட்டே சொல்லு அட்லீஸ்ட். நானாவது என்ன செய்ய முடியும் பார்க்கிறேன்.” என்று ஸ்ரீகா கடிந்து கொள்ள, தீக்ஷியின் முகத்தில் ஒரு தெளிவு.

 

                        ஸ்ரீயிடம் பகிர்ந்து கொள்பவளாக, “நான் பீஷ்மனை கல்யாணம் பண்ணணுமாம் ஸ்ரீ. அவங்க வீட்ல அம்மாகிட்ட பேசி இருக்காங்க.. அம்மாவும் ஓகே சொல்லிட்டாங்க.. என்னை மிரட்டிட்டு இருக்காங்க ஸ்ரீ.” என்று பயத்துடன் அவள் கூற

 

                        “நீ சர்வாவை விரும்புற விஷயத்தை உன் அம்மாகிட்ட சொன்னாயா..”

 

                         “நேத்தே சொல்லிட்டேன்…”

 

                          “அதற்கு என்ன சொன்னாங்க..”

 

                         “பீஷ்மனை கல்யாணம் செய்தால் என் வாழ்க்கை நல்லா இருக்குமாம். அதுதான் எனக்கு நல்லதாம். சர்வாவை பற்றி நான் சொன்ன எதுவும் அவங்க காதில் ஏறவே இல்லை ஸ்ரீகா…”

 

                          “நான் நிச்சயமா முடியாது ன்னு சொல்லவும், தூக்கமாத்திரையை சாப்பிட்டுட்டாங்க நேற்று… பயந்து போய்ட்டேன்டி.. என்ன செய்யுறது ன்னே புரியல எனக்கு…” என்றவள் தயங்கி நிற்க

 

                          “தூக்கமாத்திரையை போட்டும் எப்படி சாகாம இருக்காங்க… இடிக்குதே..” என்று ஸ்ரீகா கதை கேட்க

 

                     “நான்… என்கிட்டே சத்தியம் வாங்கி இருக்காங்க ஸ்ரீகா.. அவங்க சொல்றதெல்லாம் கேட்பேன்ன்னு சத்தியம் செஞ்சிருக்கேன்..” என்ற நிமிடம் தீக்ஷியை அறைந்தே விட்டாள் ஸ்ரீகா.

                      தீக்ஷி கன்னத்தில் கையை வைத்து, கண்ணீருடன் அவள் முகம் பார்க்க “விளையாட்டா இருக்கா உனக்கு.. உன் அம்மா பூச்சி காட்டினா, அதுக்கு பயந்து சத்தியம் செய்து கொடுப்பியா.. அறிவில்ல…”

                     “உன் அம்மா எவ்ளோ பெரிய தில்லாலங்கடி ன்னு உனக்கு தெரியாது… என் சர்வாவுக்கு என்ன பதில்… பதில் சொல்லுடி.. அவனை என்ன செய்ய போற… நீ பீஷ்மனை கட்டிட்டு செட்டில் ஆகிடுவ.. அப்போ அவன் கதி என்ன.. எந்த தைரியத்துல சத்தியம் செய்த நீ..” என்று ஸ்ரீகா மீண்டும் அடிக்க முற்பட

                      “என்னைக் கொன்னுடு ஸ்ரீகா.. நீயே என்னை கொன்னுடு… என்னை மாதிரி தைரியம் இல்லாதவங்க எல்லாம் காதலிக்கவே கூடாது. நான்.. நான் சர்வா வாழ்க்கையை நாசம் பண்ணிடுவேன்… நானும் அவனுக்கு வலியை தான் கொடுப்பேன் போல… என்னை கொன்னுடுடி..” என்று அவள் அழ

                       “நீ பேசற டயலாக் எல்லாம் கேட்டால், பீஷ்மனை கட்டிக்க தயாராகிட்ட போல…” என்று ஸ்ரீகா ஐயம் கொள்ள

                      “நான் உயிரோட இருந்தால் தானே கல்யாணம் நடக்கும். முடிஞ்சா வரைக்கும் போராடி பார்க்கிறேன்… முடியாத பட்சத்துல, என் அம்மா கையில் எடுத்த விஷயத்தை நான் செஞ்சு முடிச்சுடறேன்..” என்று கண்களை துடைத்துக் கொண்டாள் தீக்ஷி.

                        “சூப்பர்.. ரொம்ப நல்ல முடிவு… உன்னை மாதிரி முதுகெலும்பில்லாத ஜடம் எல்லாம் சாகுறதே மேல்.. செத்துடு..” என்று கோபமாக பேசி ஸ்ரீகா எழுந்து கொள்ள, அவள் கையைப் பிடித்தாள் தீக்ஷி.

                        “என்னை என்னதாண்டி செய்ய சொல்ற… என் அம்மா என்னை மிரட்டுறதுக்காக தான் செய்யுறாங்க.. எனக்கு புரியுது.. ஆனா, என்னால அவங்களை அப்படியே விட்டு வேடிக்கை பார்க்க முடியலையே… ஏதாவது தப்பாக நடந்து விட்டால்…. அதே சமயம் சர்வா.. அவரையும் என்னால விட முடியாது ஸ்ரீகா..”

             “நீ சொல்றது நிஜம் தான்.. எனக்கு முதுகெலும்பு இல்ல.. என் அம்மா என்னை இப்படிதான் பழக்கி இருக்காங்க ஸ்ரீகா… எனக்கு சர்வா மாதிரி ஒரு ரேகாம்மா கிடைக்கலையே… நான் வேற எப்படி இருப்பேன்.. இதுவரைக்கும் என் வாழ்க்கையில் என்னோட எந்த விஷயங்களுக்கும் நான் முடிவெடுத்ததே இல்ல ஸ்ரீ..”

              “எல்லாமே அவங்களோட முடிவு தான்.  எல்லாத்துக்கும் சரி சரி ன்னு தலையாட்டியே நான் இப்படி ஆகிட்டேன் போல. என் விருப்பத்தைக் கூட வெளியே சொல்ல முடியாமல் நிறைய திணறி இருக்கேன். நான் என் வாழ்க்கையில் ஆசைப்பட்ட முதல் விஷயம் உன் சர்வாதான்.. ஆனா, அதற்கும் எனக்கு தகுதி இல்லை போல…” என்று தேம்பியவளைப் பார்க்கவே கொஞ்சம் பரிதாபமாக இருந்தது ஸ்ரீகாவுக்கு.

              “நான் என்ன சொன்னாலும் கேட்பியா..” என்று ஸ்ரீகா அவள் கண்களை பார்க்க,

              “அம்மா ஏதாவது….. ஸ்ரீகா.. அவங்களை நினைச்சு தான் பயப்படறேன்”

              “என்கிட்டே மறுபடியும் அடிவாங்காத..” என்று மிரட்டியவள் “உன் அம்மா சின்னப்பொண்ணு இல்ல.. வார்த்தைக்கு வார்த்தை கௌரவம், அந்தஸ்து, பேர் இதைப் பற்றியெல்லாம் கிளாஸ் எடுக்கறவங்க தான். அப்படிப்பட்டவங்க சூசைட் பண்ணுவாங்களா…”

                “அவங்க சூசைட் பண்ணி செத்துப் போனால், முதல்ல சென்ட்ரல் மினிஸ்டர் அம்மான்னு தான் பிளாஷ் வரும். உன் அம்மாவுக்கும் இதெல்லாம் தெரியும்.. சோ, இந்த சூசைட் டிராமாவை நம்பி உன் வாழ்க்கையை பணயம் வைக்காத.” என்று ஸ்ரீகா அதட்ட, தீக்ஷியின் முகம் மெல்ல தெளிந்தது.

             “உன் போன் எங்க..”

            “அம்மா எடுத்துட்டுப் போய்ட்டாங்க..”

             “அதுவும் நல்லது தான்..கிளம்பு..முகத்தை கழுவிட்டு வா..” என்று அவளை எழுப்பினாள்.

               தீக்ஷி அடுத்து என்ன என்று எதையும் யோசிக்கும் நிலையில் இல்லாததால் ஸ்ரீகா சொல்வதை அப்படியே கேட்டாள் அவள்.

              அவள் முகத்தை கழுவிவர, அதற்குள் ஒரு சிறிய பேக்கில் அவளுடைய உடைகள் இரண்டை எடுத்து தயாராக வைத்திருந்தாள் ஸ்ரீகா. தீக்ஷி லேசாக அச்சம் கொண்டாள் இப்போது.

                “ஸ்ரீ.. அண்ணா வரட்டுமே.. பேசிப் பார்ப்போம்.. இப்படி செய்யுறது அண்ணாவுக்கு..”

                  “உன் அம்மா உனக்கு அந்த அளவு நேரம் கொடுக்கமாட்டாங்க தீக்ஷி…இதுதான் சரி. நீ கிளம்பு. நான் உன்னை வீட்டை விட்டு ஓட வைக்கல.. நீ நிம்மதியா கிளம்பு..” என்றவளின் அலைபேசி அடிக்க, அதைக் காதில் வைத்தவள் “வந்துட்டியாடா..”

                          என்று பேசிக்கொண்டே அவள் கையை பிடித்து வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தாள்.

 

                          வாசலில் அறிவனின் கார் நிற்க, ஸ்ரீகாவை இன்னுமே பயத்துடன் பார்த்தாள் தீக்ஷி. அவள் பார்வையைக் கண்டுகொள்ளாமல் “நான் பேசிட்டேன் அறிவா. நீ கவனமா இரு.. அங்கே ரீச் ஆகிட்டு சொல்லுங்க எனக்கு…” என்று அவனிடம் கூறியவள் தீக்ஷியை அணைத்து விடுவித்தாள்.

 

                         அவளைக் காரில் ஏற்றி அனுப்பியபிறகே சற்று நிம்மதியாக உணர்ந்தாள் ஸ்ரீகா.எத்தனை அழுகை… எத்தனை கண்ணீர்.. இதற்குக்கூட மனமிறங்காமல், என்ன மாதிரியான மனுஷி  இவர்… என்று சீதாவை நினைக்கவே  மனம் கொதித்தது.

 

              “இரண்டு நாள் கிடந்து தவிக்கட்டும். அப்போதான் பிள்ளையோட அருமை தெரியும்.” என்று ஆத்திரத்துடன் எண்ணமிட்டவள் முழுதாக கோபத்தின் பிடியில் இருந்தாள். இந்த நேரம் சீதாவின் முகத்தைப் பார்த்தால் தன் கட்டுப்பாட்டை இழந்து ஏதேனும் பேசி விடுவோம் என்று தோன்ற, அமைதியாக சென்று தனது அறையில் முடங்கி கொண்டாள் அவள்.

               கட்டிலில் விழுந்த பின்னும் தூக்கம் வராமல் சீதாவின் செயல்களே கண்களில் நிழலாடியது. நேற்றிலிருந்து என்னென்ன செய்து வைத்திருக்கிறார்?? எத்தனைப் பொய்கள்..?? இன்றும் அவரின் வார்த்தைகளில் ஏதோ தவறு இப்பதிக தோன்றவும் தான் ஸ்ரீகா, தீக்ஷியின் அறைக்கதவை திறந்து பார்த்தது.

                  பெற்ற பிள்ளை அப்படி அழுவதைக் கண்ட பின்பு கூடவா ஒரு தாயின் மனமிறங்காது. அப்படி என்ன பிறந்த வீட்டு பாசம். காலம் போன காலத்துல இவங்க அப்பா மேல இவங்க பாசத்தை நிரூபிக்க நினைப்பாங்க. அதுக்கு தீக்ஷி அவ வாழ்க்கையை தியாகம் பண்ணனுமா??? என்ன மாதிரியான மெண்டாலிட்டி இவங்களோடது.. என்று மனம் நிறைய சீதாவின் நினைப்புதான் ஸ்ரீகாவுக்கு.

                    அப்படியே சிந்தனையில் மூழ்கி இருந்தவள் எப்போது உறங்கினாளோ தெரியாது..ஆனால், அவள் உறக்கம் கலைந்து எழுந்தது சீதாவின் உலுக்கலில் தான். நல்ல உறக்கத்தில் இருந்தவளை சீதா, “ஸ்ரீகா..” என்று கத்திக் கொண்டே உலுக்கி இருக்க, அதில் உறக்கம் கலைந்திருந்தது ஸ்ரீகாவுக்கு.

                    “என்ன அத்தை.. தூங்ககூட விடமாட்டிங்களா..” என்று தூக்க கலக்கத்துடன் அவள் கேட்டு வைக்க

 

                   “என் மக எங்கே..” என்று அவளிடம் கேட்டிருந்தார் சீதா.

                   “தீக்ஷியா.. அவளை ஏன் இங்கே தேடறீங்க.. அவ ரூம்ல பார்க்க வேண்டியது தானே… நீங்கதானே காய்ச்சல்ன்னு சொன்னிங்க..”

 

                    “நடிக்காத ஸ்ரீகா.. உன் குடும்பமே நல்லா நடிப்பீங்க..சினிமாக்காரங்க தானே.. என்கிட்டே உன் நடிப்பை காட்டாத… என் பொண்ணு எங்கே..” என்று சத்தமிட்டார் சீதா.

                      “நாங்க சினிமாக்காரங்க தான் அத்தை.. ஆனா, என்னைவிட ஹெவி பெர்பாமன்ஸ் உங்களோடது தானாம்.. பேசிக்கிட்டாங்க…. அதெப்படி சரியா ஸ்லீப்பிங் பில்ஸ் ரெடி பண்ணீங்க..” என்று ஸ்ரீகா சந்தேகம் எழுப்ப, உள்ளுக்குள் பதறியது சீதாவுக்கு.

Advertisement