Advertisement

“யாரு..” என்று மீண்டும் அவன் வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்க

                              “என் மகள் சீதாவோட பொண்ணுடா… தீக்ஷிதா..” என்றார் பெருமையாக.

                              சட்டென ஒரு ஆழ்ந்த புன்னகை அவன் முகத்தில். தன் தாத்தாவை குறும்புடன் பார்த்தவன் “உங்க பேத்தி ஒத்துக்கிட்டாளா..” என்று சிரிப்பு மாறாமல் பார்க்க

                            “அவ சீதாவோட பொண்ணு பீஷ்மா. அவ பேச்சுக்கு மறுப்பு சொல்லமாட்டா. சீதாவும் அவ விருப்பத்தை கேட்காம உன் அம்மாகிட்ட பேசி இருக்கமாட்டா…” என்று மகள் மீது கொண்ட நம்பிக்கையில் பேசிக் கொண்டிருந்தார் சத்யா.

                         பீஷ்மனுக்கு சிரிப்பு வர பார்க்க, முயன்று தன்னை அடக்கி கொண்டான் அவன். கூடவே “நானும் எங்க அம்மா பேச்சை கேட்கிற பையன் தான் சத்யா… “என்றான் கிண்டலாக

                         “அப்போ உன் அம்மாவை கல்யாணம் பேச சொல்லவா..” என்று மீண்டும் அவர் உறுதிசெய்ய

                        “அதான் முடிவு பண்ணியாச்சே.. பேச சொல்லுங்க..” என்றுவிட்டு எழுந்தான் பீஷ்மா.

                      தன் அறைக்கு வந்தவன் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை. “தீக்ஷி… என் அத்தைப்பொண்ணே..” என்று தானாகப் பேசிக் கொண்டவன் “ஆட்டம் சூடு பிடிக்குதேடா கிருஷ்ணா…” என்று நக்கலாக புன்னகைத்து, கைகளை நெட்டி முறித்தான்.

                      எப்போதும் அவனை அலட்சியப் பார்வை பார்த்து கடக்கும் தீக்ஷியின் நினைவு வர, “வெள்ளெலி தானா வந்து வலையில விழுதே..” என்று சிரித்துக் கொண்டான். அவனைப் பொறுத்தவரை மீண்டும் கிருஷ்ணனையும், ஸ்ரீகாவையும் ஆட்டி வைக்க ஒரு வாய்ப்பு.

                      கூடவே, இலவச இணைப்பாக தீக்ஷி. அவளின் அலட்சிய பார்வைகள் இனி மாறியாக வேண்டுமே… அவளுக்கு தேவை இருக்கிறதே தன்னிடம்.. என்று எண்ணமிடும்போதே முகத்தில் மீண்டும் ஒரு புன்னகை. அதுவும் சற்றே வில்லத்தனமான ஒரு புன்னகை.

                        அவன் முகத்தில் அந்த சிரிப்பு அப்படியே ஒட்டிக் கொள்ள, எப்போதும் சிரித்த முகமாகவே காணப்பட்டான் பீஷ்மன்.

                         ஆனால், அவனுக்கு அப்படியே நேர்மாறாக அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள் தீக்ஷி. அன்னை அவளிடம் திருமண விஷயத்தை கூறி இருந்தார். ஆனால், எந்த இடத்திலும் உனக்கு விருப்பமா..?? என்று கேள்வியெழுப்பவே இல்லை சீதா.

                        “அம்மா உன் நல்லதுக்குதான் செய்வேன் தீக்ஷி… பீஷ்மனோட உன் வாழ்க்கை நல்லா இருக்கும். நீ ராணி மாதிரி இருக்கலாம் எங்க வீட்ல. அந்த குடும்பமேஉனை தாங்குவாங்க தீக்ஷிமா.. நீ என் அண்ணன் வீட்லேயே வாழப் போறதை நினைத்சு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா எனக்கு..” என்று சில பல ஆசை வார்த்தைகள்.

                    அவ்வளவே. அவரைப் பொறுத்தவரை மகளின் மௌனம் சம்மதமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. பேசிய வேகத்தில் “நான் அண்ணிகிட்ட உனக்கு விருப்பம் ன்னு சொல்லிடறேன் தீக்ஷி. கல்யாண வேலை எல்லாம் நிறைய இருக்கே..” என்று சீதா எழுந்து கொள்ள முற்பட, அவர் கையை பிடித்து இழுத்து அமர்த்தினாள் மகள்.

                     ஒரே வார்த்தையாக “எனக்கு விருப்பமில்லை..” என்று அழுத்தமாக அவள் தெரிவிக்க,

                     சீதா தடுமாறியவராக “ஏன்..” என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி எழுப்பினார்.

                     “நான் சர்வாவை விரும்புறேன்ம்மா.. வேற யாரையும் என்னால கல்யாணம் செய்ய முடியாது.” என்று தெளிவாக உரைத்தது பெண்.

                      “சர்வா..” என்று அன்னை கேள்வியாக இழுக்க

                     “ஸ்ரீகாவோட அண்ணன்..” என்று அவள் கூறிய நிமிடம் அவள் கன்னத்தில் சப்பென்று ஒரு அறை விழுந்திருந்தது. மகள் அதிர்ந்து பார்க்கும்போதே “கொன்னுடுவேன் ராஸ்கல்..” என்று விரல் நீட்டி மிரட்டினார் அன்னை.

                   விவரம் தெரிந்து பெரிதாக அன்னையிடம் அடியெல்லாம் வாங்கியதில்லை தீக்ஷி. அன்னை மட்டுமல்ல யாரும் அடிக்கும் அளவுக்கெல்லாம் அவள் நடந்து கொண்டதே இல்லை. இப்போதும் தவறு செய்த எண்ணமில்லை. ஆனால், அன்னை அடிக்கவும் அவரின் சுயரூபத்தை உணர்ந்து கொண்டது மனம்.

                    அடி வாங்கிய உணர்வே இல்லாமல், “நீங்க என்ன செய்தாலும், இந்த விஷயத்தில் என் முடிவு மாறாதும்மா..” என்றாள் அழுத்தத்துடன்.

                     “உன் முடிவு மாறவே வேண்டாம். நான் என் முடிவை தேடிக்கறேன். வாழ்நாள் மொத்தத்தையும் உங்களுக்காகவே செலவழிச்சதுக்கு நல்ல நன்றிக்கடன் பண்ணி இருக்கீங்க நீயும் உன் அண்ணனும். இத்தனை வருஷத்துக்கு பிறகு என் குடும்பத்தோட சேர ஒரு வாய்ப்பு கிடைச்சதே ன்னு சந்தோஷப் பட்டுட்டேன்.”

                    “அது தப்பு. உனக்கு உன் குடும்பம் கிடைக்கவே கூடாது ன்னு மறுபடியும் என் தலையில கல்லைத் தூக்கி போட்டுட்ட தீக்ஷி நீ.” என்று அவர் அடுத்த ஆயுதத்தை உபயோகிக்க, மகள் சற்றே இரங்கினாள்.

                      அன்னையின் கண்ணீரைப் பொறுக்க முடியாமல் “அம்மா ப்ளீஸ்மா.. என்னை புரிஞ்சிக்கோ. என்னால அவரை மறந்து இன்னொரு வாழ்க்கை எல்லாம் வாழ முடியாது. நிச்சயமா நான் நானாக இருக்கமாட்டேன்ம்மா…”

                        “உனக்கு அதுதான் வேணுமா.. நான் எப்படிப் போனாலும் உனக்கு ஒண்ணுமில்லையாம்மா…” என்று தீக்ஷி அழுகையுடன் கேட்க

                        “என் அப்பா உடம்பு முடியாம இருக்காரு தீக்ஷி. அவர் கேட்ட ஒரே விஷயம் இந்த கல்யாணம் தான். உன்மேல இருக்க நம்பிக்கையில நான் அவருக்கும், என் அண்ணனுக்கும் சரின்னு சொல்லிட்டேன். இப்போ நான் என்ன செய்யட்டும் சொல்லு..”

                       “அதோட அந்த சர்வா.. அவனுக்கு என்ன தகுதி இருக்கு… பெத்தவங்களை விட்டுட்டு அந்த ஸ்ரீகா வீட்ல ஓட்டிட்டு இருக்கான் அவன். அவனை நம்பி என் அண்ணன் மகனை மறுக்கற நீ… உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத தீக்ஷி..”

                        “அம்மா உனக்கு நல்லதுதான் செய்வேன் தீக்ஷி.. உனக்கு உன் அம்மாவை தெரியாதா.. எனக்கு உன்மேல அக்கறை கிடையாதாடா…” என்றவர் உடைந்து அழ

                        “ம்மா.. நீ அழுது என்னை பலவீனமாக்காத ப்ளீஸ்… என்னால பீஷ்மனை அப்படி யோசிக்கவே முடியாதும்மா.. என்னை விட்டுடேன்…”

                       “நான் சர்வாவை… சர்வா எனக்கு ரொம்ப பிடிக்கும்மா… அவர் நிறைய வலிகளை அனுபவிச்சுட்டாரு.. நானும் அவரை காயப்படுத்த முடியாது… என்னால அவரை விடவே முடியாதும்மா.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ..” என்று கையெடுத்து கும்பிட்டு மகள் அழ

                      “உன் வாழ்க்கையை நீயேப் பார்த்துக்கோ தீக்ஷி. என்னைப் பற்றி கவலைப்படாத “என்றவர் வேகமாக எழுந்து வெளியே நடக்க, அவரின் வேகத்தில் பயந்தவளாக அன்னையின் பின்னால் ஓடினாள் மகள். அவள் நினைத்தது போலவே அவரின் அடுத்த நாடகத்தை தொடங்கி இருந்தார் சீதா.

                        அவரின் அறையில் இருந்த மாத்திரை டப்பாவை கையில் வைத்துக் கொண்டு அதிலிருந்த மாத்திரைகளை மொத்தமாக கையில் கொட்டிக் கொண்டிருந்தார் சீதா. தீக்ஷி அதிர்ந்தவளாக அறைக்குள் நுழைய, அதற்குள் வாயில் கொட்டி இருந்தார்.

                        தீக்ஷி பதறி துடித்து அந்த மாத்திரைகளை அவர் வாயிலிருந்து வெளியே துப்ப வைக்க போராட, பிடிவாதமாக வாயை இறுக மூடிக் கொண்டார் அவர். தீக்ஷி “அம்மா… வேண்டாம்மா… ப்ளீஸ்… என்னை சாகடிக்காதிங்க…” என்று அவர் காலில் விழுந்துவிட்டாள்.

                      அன்னை அப்போதும் தளராமல் இருக்க, “நீ சொன்னபடி கேட்கிறேனம்மா… இப்படி பண்ணாத..” என்று ஒரு வார்த்தையைக் கூற, அதன்பின்பே வாயில் இருந்த மாத்திரைகளை கீழே துப்பினார்.

                      கூடவே, “நான் உன் நல்லதுக்கு தான்செய்வேன் தீக்ஷி… இதுதான் உனக்கு நல்லது… எனக்கு சத்தியம் பண்ணு..” என்று கையை நீட்டி, மகளை கத்திமுனையில் நிறுத்தி சத்தியமும் வாங்கி கொண்டார்.

                        அவரின் நல்ல நேரமாக,வீட்டில் இருக்க போரடித்து நடனப்பள்ளிக்கு சென்றிருந்தாள் ஸ்ரீகா. மதுவும் உணவை முடித்து வெளியே சென்றிருக்க, அந்த நேரத்தில் தீக்ஷியை தன் விருப்பத்திற்கு வளைத்திருந்தார் சீதா.

                     அவர் கையில் அடித்து சத்தியம் செய்த நொடி தொடங்கி இப்போது வரை அறையில் தான் முடங்கி இருக்கிறாள் மகள். கூடவே ஓயாத கண்ணீர் வேறு. இதில் நேற்று மாலை மகளைப் பார்க்க சீதா அறைக்கு வந்த நேரம் சர்வா தீக்ஷியை அலைபேசியில் அழைக்க, “நீ தூங்கு தீக்ஷி..” என்று அவள் தலையை தடவிக் கொடுத்தவர் அந்த அலைபேசியையும் கையில் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி இருந்தார்.

                     தீக்ஷிக்கு தன் நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. பெற்ற அன்னையே தன்னை புரிந்து கொள்ளவில்லை எனும்போது யாரிடம் சொல்லி அழ முடியும் அவளால். நிச்சயம் பீஷ்மனோடு திருமணம் நடந்துவிடும் என்று பயமெல்லாம் இல்லை அவளுக்கு.

                    தன் அண்ணனை மீறி அந்த பீஷ்மனால் தன்னை நெருங்க முடியாது என்ற தைரியத்தில் தான் அவள் சத்தியம் செய்தது. அம்மாவையும் அண்ணன் சரிசெய்து விடுவான் என்று அவள் ஜெய்யை நம்பினாள். அந்த நம்பிக்கையில் தான் அன்னைக்கு சத்தியம் செய்ததும்.

                    ஆனால், நேற்றிலிருந்துஅன்னையின் நடவடிக்கைகள்… அதை ஏற்கவே முடியவில்லை அவளால். எப்படி இவரால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது. கிட்டத்தட்ட சிறைக்கைதி போல தன்னை அறையில் அடைத்து வைத்திருக்கும் அவரின் செயலை என்ன முயன்றும் ஜீரணிக்கவே முடியவில்லை மகளால்.

                   இந்தக் கணம் இவரை மீறி நான் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் என்ன செய்ய முடியும் இவரால் என்று நினைத்துக் கொண்டவள், வீம்புக்காவே மீண்டும் மாத்திரையை கையில் எடுப்பார் என்று பதிலும் கூறிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

                    தந்தை நிச்சயம் தன்னை தேடி வருவார் என்று அவள் எண்ணிக் காத்திருக்க, இதோ நேற்றிலிருந்து இன்று மதியம் வரை சீதாவை தாண்டி யாருமே வரவில்லை அவள் அறைக்கு. தீக்ஷியும் இதைப்பற்றி கவலை கொள்ளாமல் “நடப்பது நடக்கட்டும்..” என்று கண்களை மூடிப் படுத்துவிட்டாள்.

                   மதியம் சீதா அவர் அறைக்கு சென்ற நேரம், ஸ்ரீகா வேகமாக தீக்ஷியின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தாள். அப்போதுதான் தீக்ஷி கண்ணை மூடியிருக்க, சீதா சொன்னது போல உண்மையில் காய்ச்சலோ என்று அவள் நெற்றியை ஸ்ரீகா தொட்டுப் பார்க்கவும், சட்டென்று விழித்துக் கொண்டாள் தீக்ஷி.

                    ஸ்ரீகாவை பார்த்த நிமிடம் நேற்றிலிருந்து அடைத்து வைத்திருந்த அழுத்தங்கள் அவளை மீறி வெடித்துவிட, பொங்கி அழுதவள் ஸ்ரீகாவை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.

Advertisement