Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 34

 

                      அன்று மதியநேரம் வரைகூட பொறுக்க முடியாமல் மூன்று முறை கணவருக்கு அலைபேசியில் அழைத்து விட்டிருந்தார் சீதா. அவரின் அவசரத்தில் மது விரைவாகவே வீடு வந்து சேர்ந்திருக்க, அவருக்கு உணவைப் பரிமாறியவர் அவர் தங்கள் அறைக்கு வரும்வரை காத்திருந்தார்.

 

                        “என்ன விஷயம் சீதா..” என்று கணவர் கேட்க

 

                        ” இன்னிக்கு அண்ணியை கோவில்ல பார்த்தேங்க..” என்று சீதா தொடங்க, மேலே சொல் என்பது போல் பார்த்தார் மதுபாலகிருஷ்ணன்.

 

                        கணவர் பேசமாட்டார் என்று புரிந்து போக, “அப்பாவுக்கு உடம்பு முடியலையாம்.. அண்ணி சொன்னாங்க..” என்று சீதா தலைகுனிய

 

                         “வயசாகுது இல்லையா அவருக்கும். இன்னும் உன் அண்ணன் பிஸினஸையும் சேர்த்துப்பார்த்துட்டு இருக்காரேஇப்போ பீஷ்மன் வந்த பிறகு ஓய்வாதானே இருக்கார்.. பெருசா ஒன்னும் இருக்காது.. கவலைப்படாத..” என்றார் மது.

 

                     “ம்ம்.. அவருக்கு பீஷ்மனைப் பற்றிதான் கவலைங்க. அவனுக்கு கல்யாணம் நடத்திடனும் ன்னு ஆசைப்படறாங்க போல.”

 

                      “அதுக்கு என்ன.. தாராளமா பண்ணலாமே. அவனுக்கு பொண்ணு கொடுக்க வரிசையில நிற்கிறாங்களேஅவன் பணத்துக்கும், அவனோட அறிவுக்கும் நல்ல பெண்ணாவே கிடைக்குமே.. முடிச்சிட்டு வேண்டியதுதானே..” என்றார் அவர்.

 

                      சீதாஅவங்க நம்ம பொண்ணை கேட்கிறாங்க.” என்று அமைதியாக கூற, அவரை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தார் மதுபாலகிருஷ்ணன்.

 

                        சீதா என்ன சொல்வாரோ என்று கணவரின் முகம் பார்க்க, “இது சரியா வராது சீதா.. விட்டுடு..” என்றார் மது.

 

                         “ஏன்.. ஏன் சரியா வராது. இப்போதானே சொன்னிங்க. பீஷ்மனுக்கு நல்ல பெண் கிடைக்கும் ன்னு. என் பொண்ணு ஏன் கூடாது.” என்ற சீதாவின் அவசரத்திலேயே மனைவியை புரிந்துகொண்டார் மது.

 

                        “நீ உன்னோட உறவை உன் மகளை வச்சு ஒட்டவைக்க நினைக்கிற.. என் மகளுக்கு மனசு ன்னு ஒன்னு இருக்கும் இல்லையாநான் அதைப் பற்றி யோசிக்கிறேன்.”

 

                          “ஏன்.. என்ன உங்க மகளுக்கு. என் அண்ணன் மகனை கட்டிக்கிட்டா நிச்சயம் நல்லா வாழ்வா அவ. என் குடும்பம் தாங்குவாங்க அவளை.”

 

                           “என் பொண்ணு நல்லா வாழறது விஷயம் இல்ல. நிம்மதியா வாழனும். அது பீஷ்மனால கிடைக்காது.”

 

                          “அப்படி என்ன குறையை கண்டீங்க அவன்கிட்ட

                         “உன் அண்ணன் மகனோட குணம் வேற. என் மகளோட குணம் வேற. பீஷ்மனுக்கு பொண்ணுங்க சகவாசம் எல்லாம் தண்ணீர் பட்டபாடு. அவனுக்கு ஏற்றமாதிரி அவன் பழகுற சமூகத்துல பொண்ணு பார்க்க சொல்லுஎன் மகளை பலியாக்க வேண்டாம்..” என்று கட்டளையாக மது கூற

                        “அப்போ எனக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் கிடையாதா..” என்று அலறினார் சீதா.

                      “நான் எவ்ளோ பெரிய விஷயத்தைப் பேசிட்டு இருக்கேன்.. நீ எதைப்பற்றி பேசிட்டு இருக்க சீதா. பீஷ்மனைப் பற்றி நான் சொன்னதெல்லாம் கேட்டபிறகும் கூட, அவனுக்கு என் மகளை கட்டிவைக்க நினைக்கிறாயா நீ..” என்று மது சத்தமிட

                        “நீங்க நினைக்கிறது போல பீஷ்மன் கிடையாதுங்க. அவனைப்பற்றி தப்பு தப்பா சொல்லி வச்சிருக்காங்க உங்ககிட்ட. அவன் சினிமால இருக்கவும் அவன் பேரை இஷ்டத்துக்கு கெடுத்து விட்டு இருக்காங்க. என் அண்ணன் மகனை எனக்கு தெரியாதா..”

                         “அதுவும் தீக்ஷியை கல்யாணம் செய்தால், அதன்பிறகு அவன் வேற யார் பின்னேயும் நிச்சயமா போகமாட்டான். அவனுக்கு என் மேல அக்கறை இருக்கு. அதற்காகவே தீக்ஷியை நல்லா வச்சுப்பான்.” என்று கண்மூடித் தனமாக வாதிடும் மனைவியை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்திருந்தார் மது

                                    “உனக்காக உன் அண்ணன் மகன் என் மகளை நல்லா வாழ வைப்பானாஅது என் மகளுக்கு நியாயமாகுமா சீதாஅப்படி ஒரு வாழ்க்கை வாழ என் மகளுக்கு என்ன குறை.”

 

                      “அவ உங்களுக்கு மட்டும் மகள் இல்ல. எனக்கும் அவ மேல அக்கறை இருக்கு…”

 

                      “நீ செய்ய நினைக்கிறது அக்கறை இருக்க அம்மா செய்யுற காரியம் இல்ல.”

 

                      “என்ன வேற என்னதான் செய்ய சொல்றிங்க. உங்களை நம்பி வந்ததுக்கு என் அப்பா முகத்தை பார்க்கவே முடியாம வாழ்ந்து செத்து போகணுமா நான். நான் என் குடும்பத்தோட சேரவே கூடாது ன்னு நினைக்கிறீங்களா நீங்க.” என்று கண்ணீருடன் சீதா சண்டையிட

 

                      “கடைசியா உண்மையை சொல்லிட்டஅப்படித்தானே.”

 

                       “ஆமாஉண்மைதான். எனக்கு என் அப்பா வேணும். இப்படியாவது அவரோட சேர்ந்திட மாட்டோமா ன்னு தவிச்சுட்டு இருக்கேன் நான். என்னோட வலியும், வேதனையும் நிச்சயமா உங்களுக்கு புரியாது. ஏன்னா, நீங்க எதையும் இழக்கல.. அப்பா, அண்ணன், குடும்பம் எதையும் இழக்கல நீங்க. என் இழப்போட அளவு உங்களுக்கு புரியாது..” என்று குற்றம் சாட்டிவிட்டார் மனைவி.

 

                         “உன் வலி எனக்கு புரியாதாஉனக்கு அப்படித் தோணுதா சீதா. நான் உன்னை அந்த அளவுக்கு தான் புரிஞ்சு வச்சிருக்கேனா..” என்று மது உடைந்து போனவராக கேட்க

 

                          அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை சீதா. “நீங்க என்னை புரிஞ்சு வச்சிருந்தா, என் விருப்பத்துக்கு மறுப்பு சொல்ல மாட்டிங்க. எப்பவும் இந்த வீட்ல என்னோட விருப்பங்கள் மதிக்கப்பட்டதே இல்லையே. இப்போ மட்டும் நான் எப்படி எதிர்பார்க்க முடியும்.” என்று மேலும் அவர் மதுவை வருத்தினார்.

 

                         சீதாவின் பேச்சில், “உன் விருப்பம் உன்னோட முடியறதா இருந்தால், நான் குறுக்கே வரமாட்டேன் சீதா.. இது என் மகளோட வாழ்க்கையும் கூட. அதனால தான் பேச வேண்டி இருக்கு.”

 

                          “தீக்ஷியோட வாழ்க்கைக்கு நான் பொறுப்பு. நிச்சயம் அவ பீஷ்மனோட நல்லபடியா வாழுவாள்.” என்று சத்தியம் செய்யாத குறையாக கூறினார் சீதா.

 

                         மது தளர்ந்து போனவராக, “இது தீக்ஷியோட வாழ்க்கை. அவ விருப்பதைக் கூட கேட்க வேண்டாமா??” என்று வினவ

 

                            “என் மக என் பேச்சை மீற மாட்டாள்.”

 

                         “அது அவ உனக்கு கொடுக்கிற மரியாதை சீதா. அதுக்காக அவ விருப்பத்தை கேட்கக்கூடாது ன்னு இருக்கா???”

 

                         “அவ சம்மதித்தால் நீங்க மறுக்க மாட்டிங்களா..”

 

                          “நீ முதலில் அவகிட்ட பேசு.” என்றவாறு நடக்க தொடங்கிய மது, ஒரு நொடி நின்றுஉன் அப்பாவுக்கு மகளா இருக்கேன் ன்னு, உன் மகளுக்கு அம்மாவா தவறிப் போயிடாத சீதா. ஏன்னா, இது அவளோட வாழ்க்கை. ஒருவேளை இது தவறிப் போனால் உன் மக உனக்கு இல்லாமலே போகலாம்.” என்று எச்சரிக்கை செய்தே நகர்ந்தார் மதுபாலக்ரிஷ்ணன்.

                        ஆனால், சீதாவின் மனம் முழுவதும் பார்கவி கூறிய விஷயங்கள் அடைத்துக் கொண்டிருக்க, கணவரின் பேச்செல்லாம் காதில் ஏறவில்லை அவருக்கு.

 

                           கணவர் அந்தப்பக்கம் செல்லவும், இந்தப்பக்கம் பார்கவிக்கு அழைத்துவிட்டார் சீதா. பார்கவியிடம் கணவர் ஒப்புக் கொண்டதை மட்டும் மேலோட்டமாக கூறி வைக்க, “அதானே.. நீ சொல்லி அண்ணா மறுத்திடுவாங்களா..” என்று தூபம் போட்டார் பார்கவி.

 

                          அவருக்கு மகன் வாழ்க்கை நேராக வேண்டுமே என்ற கவலை. அவரையும் தான் என்ன சொல்வது. சீதா மகளின் விருப்பத்தை கேட்டுச் சொல்வதாக கூற, “அதென்ன சீதா.. சின்னப்பிள்ளைக்கிட்ட போய் இதெல்லாம் கேட்டுட்டு, நம்ம விருப்பத்தை சொன்னா சரின்னு சொல்லப்போறா..” என்று அண்ணியார் எடுத்துக் கொடுக்க, அண்ணியின் பேச்சு உவப்பாக இல்லை சீதாவுக்கு.

 

                          “இல்ல அண்ணி, அவளுக்கும் பிடிச்சிருக்கணும் இல்லையா. நான் அவகிட்ட பேசிட்டே சொல்றேன்.”

 

                             “அதுவும் சரிதான் சீதாஇந்த காலத்து பிள்ளைகளாச்சே.. நானும் உன் அப்பாகிட்ட விஷயத்தை சொல்லி வைக்கிறேன்..” என்று அழைப்பை துண்டித்தவருக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

 

                       அவருக்கு இன்னமும் சாஷாவின் பார்வையை மறக்க முடியவில்லை. என்ன பார்வை அது ?? அப்படியே விழுங்கி விடுவதுப் போல என்று அவள்மீது ஆத்திரம் தான் வந்தது. அவர் கேள்விப்பட்டவரை மகன் சாஷாவை விட்டு விலகியிருப்பதாக தகவல் கிடைத்திருக்க, இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார் பார்கவி.

 

                        அதை உடனே நிறைவேற்றும் எண்ணத்தில் தான் சீதாவிடம் பேசியதும். சீதா மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் தான் அவரிடம் பேசினார் பார்கவி. அவர் எண்ணம் போலவே, சீதா அவர் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டி வைக்க, அனைத்தும் சரியாக நடப்பதாக தோன்றியது பார்கவிக்கு.

 

                        நிகழ்வுகளை இன்னும் வேகமாக்கும் முடிவில் இருந்தவர் அப்போதே கணவரை அழைத்து பேசிவிட்டார். “உங்கள் தங்கையின் விருப்பம்என்று அவர் முடித்துவிட, தங்கை மீது கொண்ட பாசத்தால் உடனே ஒப்புக்கொண்டார் சங்கரநாராயணன்.

 

                          அதே வேகத்தில் அவர் சத்யநாராயணனையும் அழைத்து பேசிவிட, பேரனின் வாழ்வை நினைத்து கவலை  கொண்டவர் தானே அவரும். இப்போது தன் பேத்தியே மருமகளாக வந்தால் பேரன் மாறி விட மாட்டானா என்று தான் எண்ணம் அவருக்கும்.

 

                          சாஷா நினைவில் உறுத்தினாலும், பேரனுக்காக சற்று சுயநலமாக இருந்து கொண்டார் சத்தியநாராயணன். சங்கரநாராயணனிடம் மேற்கொண்டு பேசுமாறு கூறி அழைப்பைத் துண்டித்தவர் பீஷ்மனை அலைபேசியில் அழைக்க, அடுத்த அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தான் அவன்.

 

                         “என்ன பீஷ்மா.. உன் அம்மா உனக்கு பொண்ணு பார்த்திருக்கா போல.” என்று எடுத்த எடுப்பில் தாத்தன் கேட்க, உண்மையில் பேரனுக்கு புரியவில்லை.

 

                         அவனுக்கு நடந்தது எதுவுமே இன்னும் தெரியாமல் தான் இருந்தது. இப்போது தாத்தா புதிர் போடவும், “யாருக்கு பொண்ணு..உனக்கா..”

 

                           “உன் அம்மாவுக்கு என்மேல அந்த அளவுக்கு அக்கறை இல்லடா.. அவ அவளோட மகனுக்கு பொண்ணு பார்த்திருக்கா…”

 

                          “அவங்களுக்கு எதுக்கு இந்த வேலை. நான் இவங்ககிட்ட கேட்டேனா… “

 

                          “அவ உன்னை பெத்தவ தானே. அப்போ இதுவும் அவ வேலை தான். பொண்ணு யாருன்னு கேட்கமாட்டியாடா..”

 

                           “யார்அம்மா சொந்தக்காரங்க யாராவதா…”

 

                            “அப்படி நடக்க நான் விட மாட்டேன் ன்னு உன் அம்மாவுக்கு தெரியும். உன் அம்மா முட்டாள் இல்ல..”

 

                          “பின்ன, வேற யாரு..”

 

                            “என் பேத்தி…” என்று அவர் நிதானமாக கூறுகையில், பீஷ்மனின் பார்வை கூர்மையானது.

Advertisement