Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 33

          சீதா தந்தையைபற்றி அக்கறையாக விசாரிக்க, “அவருக்கென்ன சீதா.. ராஜா மாதிரி இருக்கார். அவர் கவலையெல்லாம் எங்க பீஷ்மனை பத்திதான்..” என்றார் நாசுக்காக

          “என்ன அண்ணி.. பீஷ்மனுக்கென்ன..”

           “என்னத்தை சொல்ல சீதா. அவன்கிட்ட இருக்க அளவில்லாத பணமும், பேரும் தான் அவனுக்கு ஆபத்தே… இப்போகூட பாரு, அந்த சினிமாக்காரி பேரை இவனோட சேர்த்து பத்திரிகையில எழுதிட்டு இருக்காங்க.. அவளுக்கென்ன, பணத்துக்காக எதையும் செய்றவ…”

          “ஆனா, நம்ம வீட்டு பிள்ளைகள் அப்படியா… அவன் பேரும் சேர்ந்து இல்ல கெட்டுப் போகுது. இதோ ஸ்ரீகாவை ஆசைப்பட்டான். உங்க அண்ணனும் எதையும் யோசிக்காம, பிள்ளைக்காக அந்த பொண்ணோட அப்பாகிட்ட இறங்கிப் போய் பேசினார்..”

       “ஆனா, அவனைப் பத்தி கேள்விப்பட்ட விஷயங்களை நம்பி கொடுக்க முடியாது ன்னு சொல்லிட்டாங்க… என்ன பண்றது அவன் தலையெழுத்து..” என்று கண்ணீர்விட்டார் பார்கவி.

       “அழாதீங்க அண்ணி.. அவனுக்கென்று ஒருத்தி இனி பிறந்து வரவா போறா.. சீக்கிரமே நல்லது நடக்கும். விடுங்க..” என்றார் தேறுதலாக

       “ஏன் சீதா.. நான் ஒன்னு கேட்டா, தப்ப நினைக்க மாட்டியே.” என்று பார்கவி தொடங்க

      “என்கிட்டே கேட்க என்ன அண்ணி…”

      “இல்ல.. நம்ம தீக்ஷியை அன்னிக்கு கல்யாணத்துல பார்த்தேன். என்னவோ எனக்குள்ள ஒரு எண்ணம். அவளால தான் நம்ம விட்டுப்போன உறவு தொடரணுமோ ன்னு..” என்றார்..

       அவருக்கு நன்கு தெரிந்திருந்தது சீதாவை. அவர் எங்கே அடித்தால் வீழ்வார் என்று தெரிந்து காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார் பார்கவி.

         சீதா யோசிக்க தொடங்க, “நீயும் மத்தவங்களை மாதிரி என் மகனை நினைக்கிறியா சீதா..” என்று கேட்டிருந்தார் பார்கவி.

        “என்ன அண்ணி.. என் மருமகன் அவன். நான் எப்படி அவனை தப்பா நினைப்பேன். “

      “அப்புறம் என்ன சீதா.. ஏன் தயங்குற..”

       “அப்பாவை நினைச்சு தான் பயமா இருக்கு அண்ணி..” என்றார் சீதா.

       “உன் அப்பா கண்டிப்பா சந்தோஷப்படுவார் சீதா. உன்னைத்தானே ஒதுக்கி வச்சார். உன் பிள்ளைகளை இதுநாள் வரைக்கும் அவர் எங்கேயும் விட்டு கொடுக்கவே இல்லையே. இப்போ தீக்ஷி நம்ம வீட்டுக்கு வந்தா, அவளுக்காகவே உன்னை ஏத்துக்கணும் இல்லையா..”

       “உன்னை அவர் ஒதுக்க இடமே இல்லாம போய்டும் சீதா.” என்று பார்கவி மெல்ல மெல்ல சீதாவை கரைத்துக் கொண்டிருக்க, வெல்லக்கட்டி போன்ற அவரது பேச்சாற்றலில் பாகாய் உருகித்தான் போனார் சீதா.

        “நான் அவர்கிட்டே பேசிட்டு சொல்றேன் அண்ணி..” என்று சீதா தன் சம்மதத்தை மறைமுகமாக தெரிவிக்க

        “உன்னை மீறி அண்ணன் என்ன சொல்லிட போறார். நீ நினைச்சா முடியும் சீதா..” என்று விடாது அவருக்கு வேப்பிலை அடித்து பார்கவி அனுப்பிவிட, அவரின் நல்ல நேரமாக அந்த ஆண்டு நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்திய பிரதமருடன், பிரேசில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான் ஜெயராம் கிருஷ்ணா.

         அவன் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் அது. மூத்த அமைச்சர் ஒருவர் செல்வதாக இருக்க, அவர் இறுதி நேரத்தில் செல்லமுடியாத சூழல். அது ஜெய்க்கு சாதகமாக அமைந்துவிட, அன்று இரவு விமானத்திற்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் அவன்.

                            ஸ்ரீகா முகத்தை சுருக்கி கொண்டு அமர்ந்து விட, அவளை சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது ஜெய்க்கு. ஜெய் பொறுமையாக அவளை அருகில் அமர்த்தி, “நான் கண்டிப்பா போகணும் ஸ்ரீகா. மறுக்க முடியாதே.. கொஞ்சம் புரிஞ்சிக்கோடா.. நான் வந்ததும் கண்டிப்பா நாம ஒரு ட்ரிப் போவோம்..” என்று  அவள் தாடையைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தான் அவன்.

        “போயிட்டு வாங்க…” என்று முகத்தை உர்ரென்று வைத்து சொன்னவள் எழுந்து கொள்ள,

          “ஸ்ரீ..” என்றான் ஜெய்

           “எனக்கு இந்த வீட்ல தனியா இருக்க முடியல ஜெய். கடுப்பா இருக்கு.என்ன பண்ணட்டும் நான். இப்போ நீங்களும் கிளம்பவும், கொஞ்சம் டவுன் ஆகிட்டேன். அவ்ளோதான்… சரியாகிடும் நீங்க கிளம்புங்க.” என்றாள் ஸ்ரீகா.

          “உன் வீட்ல கொண்டு போய் விடவா… நான் வர்ற வரைக்கும் அங்கேயே இருக்கியா..” என்று ஒரு பேச்சுக்காக அவன் கேட்க

           “வேண்டாம்ப்பா.. அம்மா திட்டுவாங்க. அதோட  இங்கே தீக்ஷியும் தனியா இருப்பாளே…நான் மேனேஜ் பண்ணிப்பேன்.. நீங்க கிளம்புங்க..” என்று அவனை வழியனுப்பி வைத்தாள் மனைவி.

          சீதா பத்து மணிக்கு வீட்டுக்குள் நுழையும்போது, அவருக்கு எதிரில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தான் மகன். என்ன, ஏதென்று அன்னை விவரம் கேட்க, ஜெய் பதில்கூறவும் “தன்னிடம் ஏன் முன்னமே கூறவில்லை” என்று கேட்க நினைத்தார் சீதா.

         ஆனால், ஏனோ மகன் கிளம்பும் நேரம் அவனை நோகடிக்க மனம் வராமல் அமைதியாகி விட்டார். ஸ்ரீகா ஜெய்யுடன் விமான நிலையத்திற்கு வருகிறேன் என்று அடத்துடன் நிற்க, அவளை அதட்டி வீட்டிலேயே விட்டுக் கிளம்பி இருந்தான் ஜெய்.

          மனம் ஒருமாத பிரிவை அந்த கணமே உணர தொடங்கி விட்டதோ என்று தோன்றியது ஸ்ரீகாவுக்கு. அவன் கார் கேட்டை தாண்டும் வரை பார்த்து நின்றவள் வீட்டிற்குள் நுழையும் முன்னரே, கண்கள் கலங்குவது போல் இருக்க, “ஸ்ரீ சின்னப்பிள்ளையா நீ..” என்று ஜெய்யும், ரேகாவும் கண்முன் வந்து சென்றனர்.

                            அவள் உள்ளே நுழைந்த நேரம் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் சீதா. இது அவரின் வழக்கமில்லையே என்று சிந்தனையோடு அவரைப் பார்த்துக் கொண்டே, படிகளில் ஏறி இருந்தாள் ஸ்ரீகா.

                     சீதா என்றும் இல்லாத வழக்கமாக சற்றே பதட்டத்துடன் காணப்பட்டார் அன்று. அண்ணி பேசிய விஷயங்கள் அவருக்கு ஆசையை ஊட்டி இருந்தது. எந்தப் பெண்ணுக்கு தான் பிறந்த வீட்டை பிடிக்காது. சீதாவும் அப்படித்தான். அவருக்கு தன் அண்ணனையும், அப்பாவையும் நிரம்ப பிடிக்கும்.

                      அவர்களுக்கும் சீதா ஒரே பெண்பிள்ளை என்பதால் பாசம் அதிகம். அதுவும் அவரின் பதினைந்து வயதில் தாய் தவறிப் போயிருக்க, தாயில்லாப் பிள்ளை என்ற கரிசனம் வேறு. பாசத்திற்கும், பரிவுக்கும் பஞ்சமே இல்லாத அளவு தான் சீராட்டியது அவரின் பிறந்தகம்.

                     பெண்பிள்ளை என்று வீட்டோடு முடக்காது, கல்லூரிப்படிப்பு வரை தங்கைக்கு துணை நின்றார் சங்கரநாராயணன். ஆனால், தங்கை கல்லூரியில் காதல் படிக்க, விஷயம் காதுக்கு எட்டிய நிமிடம் வழக்கம் போல வில்லனாக மாறிப் போனார் தந்தை.

       மதுபாலகிருஷ்ணன் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதெல்லாம் தாண்டி, அவரின் தந்தையைக் கொண்டு மறுத்தார் சத்தியநாராயணன். மதுவின் தந்தை சண்முகவேலனும் அரசியலில் முக்கியப்புள்ளி தான் அந்த நாட்களில்.

         மாநில அரசாங்கத்தில் முக்கிய பதவியும் வகிக்க, அதைக் கொண்டு சற்று பணம் பார்த்திருந்தார் மனிதர். எந்த நேரமும் அவரின் பெயர் ஊழல் பட்டியலில் இடம் பெறலாம் என்ற நிலை தான்.

         அப்படிப்பட்டவர் குடும்பத்திற்கு தன் மகளை மருமகளாக அனுப்ப வேண்டுமா என்று தந்தையாக சத்யநாராயணன் தயங்க, அவரின் தயக்கத்தையெல்லாம் பெரிதாக மதிக்கவே இல்லை பெண்.

           அந்த நிமிடம் சீதாவுக்கு தன் காதல் ஒன்றே பிரதானமாக இருக்க, தந்தையை எதிர்க்க துணிந்து விட்டார் அவர். தந்தைக்கும், மகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், சத்யநாராயணன் மகள் மீது கையை நீட்டிவிட, அதையே சாக்கிட்டு தன் விருப்பத்தை சாதித்துக் கொண்டார் சீதா.

                      தன்னைப் பெற்று வளர்த்தவர். தாயில்லாமல் தன்னை தாங்கியவர். தங்களுக்காக தனிமையை சுமந்தவர் என்பதெல்லாம் பின்னால் போக, சீதாவை அடித்து விட்டது மட்டுமே மனதில் நின்றது அந்த நிமிடம். இன்னும் பிடிவாதம் கூட்டிப்போக, வீட்டில் யாரிடமும் கூறாமல் அன்றே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் சீதா.

                        அவர் வீட்டை விட்டு வெளியே வந்தது முழுக்க, முழுக்க அவரின் முடிவு தான். நிச்சயம் அதில் மதுவின் பங்கு இல்லை. ஆனால், தன்னை நம்பி வந்துவிட்டவளை எப்படி அப்படியே விட முடியும் என்று தன் வீட்டிற்கு அழைத்து சென்றார் அவர்.

                          சண்முகவேலன் மற்ற விஷயங்களில் எப்படியோ, மகன் மீது மிகுந்த பாசம் கொண்டவர். மதுவைத் தன் அரசியல் வாரிசாக்கி விடும் தீவிரம் கொண்டவர். எனவே மகனின் காதலப்படி ஒன்றும் பாதிப்பை கொடுக்கவில்லை அவருக்கு.

                       பெண்ணைப் பற்றி விசாரித்தும் திருப்தியாக இருக்க, எப்படியும் சத்யநாராயணன் சொத்துக்களில் பாதி வருமே என்று கணக்கிட்டுக் கொண்டார் அவர். சீதா வீட்டிற்கு வந்த இரண்டாம் நாளே, ஒரு கோவிலில் தன் கட்சித்தலைமை முன்னிலையில் அவருக்கு தக்கவாறு திருமணத்தை முடித்து வைத்துவிட்டார்.

                     அதுவரை காதலும், காதலனும் பெரிதாக தெரிந்த சீதாவுக்கு, தாலி ஏறிய நிமிடமே தந்தை நினைவில் வந்தார். சுற்றிலும் இருந்த கூட்டம் மொத்தமும் சண்முகவேலனின் உறவுகளும், அவர் கட்சி ஆட்களுமாக இருக்க, தனக்கென்று ஒருவரும் இல்லாத நிலை, தந்தையின் இருப்பை தேட வைத்தது.

                  அவர் முகவாட்டத்தை வைத்தே அவரைப் புரிந்து கொண்ட மது, சீதாவிடம் விசாரிக்க , அவர் தந்தை நியாபகம் என்று கூறவும், சண்முகவேலனே மகனையும், மருமகளையும் சம்பந்தி வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்றார்.

                     ஆனால், உன் கணக்கு என்னிடம் பலிக்காது என்று காண்பிப்பவராக “என் மகள் இறந்து இரண்டு நாள் ஆகிடுச்சு. எப்போ என் பேச்சை கேட்காம, என்னை மீறி போனாளோ அப்போவே எல்லாம் முடிஞ்சுது.. வெளியேப் போங்க..” என்று அமைதியாக கூறிவிட்டு அதற்குமேல் அவர்கள் பேச இடம் கொடுக்காமல் உள்ளே சென்றுவிட்டார் அவர்.

                      சங்கரநாராயணனும் தந்தையை மறுத்து பேச விருப்பமில்லாமல் மனைவியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொள்ள, அதற்குமேல் அங்கே நிற்க சண்முகவேலனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

                        “வாம்மா.. நாங்க இருக்கோம் உனக்கு. ‘என்று மருமகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால், ஒரு விதத்தில் நாங்கள் இருக்கிறோம் என்று கூறிய வார்த்தைக்கு நேர்மையாக இருந்தார் சண்முகவேலன்.

                        மருமகளை மகள் போலவே நடத்தினர் சண்முகவேலனும், சரோஜினியும். சரோஜினி வீட்டில் இருபத்து நான்கு மணிநேரமும் மருமகளுடன் கூடவே இருப்பவர் என்பதால், சுலபமாகவே மருமகளை கணித்துவிட்டார் அவர்.

                        சீதாவிடம் இருந்த சில குணங்கள் ஆரம்பம் முதலே பிடிக்காது அவருக்கு. ஆனால், வெறுப்பைக் காட்டாமல், அவர் தவறும்போது தட்டி வைப்பார். ஆனால், சீதாவுக்கு அதுவே மாமியார் கொடுமை என்று தோன்றும்.

                        இத்தனைக்கும் ஒன்றுமே தெரியாமல் தன் வீட்டிற்கு வந்த சீதாவை அரவணைத்து அவருக்கு சமையல் பழக்கி, வீட்டு நிர்வாகம் சொல்லிக் கொடுத்து, வீட்டின் வரவு,செலவு வரை அத்துப்படியாக்கி கொடுத்தவர் சரோஜினி.

                        அவர் நல்லதை கூறும் நேரம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் சீதா, அவர் அதட்டும்போது முகம் சுருக்கி கொள்வார். ஆனால், அப்படியே இருந்தாலும்,அதற்கும் சேர்த்து வைத்து சரோஜினி பேசுவார் என்பதால், கணவரிடம் குறை படித்து பார்த்தார் சீதா.

                        ஆனால், மது சீதாவைப் போல் இல்லாமல் அம்மாபிள்ளையாக இருக்க, “நான் வேண்டுமானால் என் அம்மாவை பொறுத்துக் கொள்ள தான் வேண்டும்..” என்று கட்டளையாக கூறிவிட, அப்போதே சிறு தாங்கல்  கணவரிடம்.

                         தான்பெற்றவரை எதிர்த்து வீட்டை விட்டு வந்திருக்க கூடாதோ என்று காலம் கடந்த ஞானோதயம். ஆனால், அவர் சிந்தனை முழுதாக முடியும்முன்பே ஜெய்ராம் கிருஷ்ணாவை சுமக்க தொடங்கி இருந்தார் அவர்.

                     வாழ்க்கையின் ஓட்டத்தில் அடுத்து மகளும் பிறந்துவிட, வாழ்ககை செல்லும் வழியில் அதன் போக்கிற்கு வாழத் தொடங்கினார் அவர். மகள் பிறந்த மூன்று ஆண்டுகளில் சண்முகவேலன் தவறிவிட, அவர் மறைவுக்குப்பின் சென்னையில் இருக்க பிடிக்காமல் தங்கள் சொந்த ஊருக்கே கிளம்பி விட்டார் சரோஜினி.

                      சரோஜினி கிளம்பிய நிமிடம் வீட்டிற்குள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல் ஒரு விடுதலை உணர்வு தான் சீதாவுக்கு. கொஞ்சமும் அவரின் இழப்பையோ, அவரின் வயதையோ யோசிக்கவில்லை சீதா. கணவரிடம் மட்டும் சரோஜினியிடம் அக்கறை இருப்பதைப் போல காட்டிக் கொள்வார் எப்போதும்.

                      வீட்டின் நிர்வாகம் கையில் இருந்தாலும், இப்போதுதான் அதிகாரம் கைக்கு வந்த உணர்வு. பிள்ளைகள் வளர்ப்பு கூட இனி அவரிடம் தான் என்ற நிலை வந்துவிட, பிள்ளைகளை அந்த வயதிலேயே கைக்குள் அடைக்க நினைத்தார் அவர்.

                   பள்ளி செல்லும் சின்னப்பிள்ளைகள் தானே என்று விடாமல், அவரின் விருப்பத்திற்கு பல வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார். ஆங்கில வகுப்பு, ஹிந்தி வகுப்பு, ஓவியம், கராத்தே, நீச்சல் என்று ஏகப்பட்ட பயிற்சி வகுப்புகள். ஆறுவயதும், மூன்றரை வயதும் நிறைந்த பிள்ளைகளுக்கு.

                  மது முதலில் சொல்லிப் பார்த்தவர் பின் மனைவியின் பிடிவாதத்தால் அமைதியாகிவிட்டார். அன்று முதலே பிள்ளைகளின் முடிவுகள் மொத்தமும் சீதா தான். அவர்களின் படிப்பு, என்ன படிக்க வேண்டும் என்பதைக் கூட தீர்மானித்தது அவர்தான். ஏன் ஜெயராம் கிருஷ்ணாவிடம் அரசியல் ஆசையை வளர்த்து விட்டதும் கூட அன்னை தான்.

                           அன்னை பிள்ளைகளை புரிந்து கொள்வது போய், பிள்ளைகள் அன்னையை புரிந்து கொண்டு அவர் வழியில் நடக்கத் தொடங்க, பிள்ளைகளிடம் மிகுந்த பாசம் சீதாவுக்கு. பிள்ளைகள் தன்னை மீறவே மாட்டார்கள் என்ற கர்வம் கூட.

                 அவரின் அந்த கர்வம் முதலில் அடி வாங்கியது ஸ்ரீகாவிடம் தான். எத்தனை தைரியமாக பேசிச் சென்றாள் என்னிடம்” என்று இப்போது நினைத்தாலும் மனம் குமுறும் அவருக்கு. ஆனால், எதையும் வெளியே தெரியாமல் தனக்குள் மறைத்துக் கொண்டு,வெளியே கணவருக்கும், பிள்ளைகளுக்கும் நல்லவர் வேடம் பூண்டிருந்தார் சீதா.

                    எல்லாம் அவர் விருப்பப்படி நடப்பதாக இறுமாந்து இருந்தவர் மகனின் அதிரடியில் தளர்ந்து போயிருக்க, இதோ பார்கவி பேசி சென்றிருந்த மகளின் திருமணப் பேச்சுவார்த்தை அவரை மெல்ல மீளச் செய்தது. தன் வீட்டில் தன் மகள் வாழ வேண்டும் என்ற பேராசை மெல்ல மெல்ல உதயமாக, இது நடந்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்.

                               காதலித்து பெற்றவர்களை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு தன் பெண்ணின் மனது புரியாமல்  போனது வேதனையான விஷயம் தான். தன் காதலுக்காக போராடியவர் பிள்ளைகளிடம் அதை எதிர்பார்த்திருக்க வேண்டாமா ?? அவர்கள் உடலில் ஓடுவது சீதாவின் ரத்தம் தான் அல்லவா.

                     இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் சீதாவை விட தெளிவான மனம் கொண்ட பிள்ளைகள் இருவரும். அவர்களின் காத்திருப்பே அதை சொல்லிவிடும் இல்லையா.. சீதா பார்த்து பார்த்து வளர்த்து இருந்தாலும் பிள்ளைகள் மதுவின் மக்களாகவே வளர்ந்து இருக்க, பெற்றவர்கள் மீது அக்கறையும் அதே அளவிற்கு அன்பும் இருந்தது இருவருக்கும்.

                ஆனால், அன்பிற்காக காதலை விட்டுக் கொடுத்து விடுமா மனது. அதை சீதா எதிர்பார்க்கலாமா??….

Advertisement