Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 32

                               ஆகிற்று. ஜெய்-ஸ்ரீகாவின் திருமண கொண்டாட்டங்கள் முடிந்து ஒருவாரம் விளையாட்டாக கடந்து விட்டிருக்க, இந்த ஒரு வாரமும் நிற்கக்கூட நேரமில்லை மணமக்களுக்கு. குலதெய்வ பூஜை, மறுவீடு, உறவுகளின் வீட்டு விருந்து என்று கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அத்தனையும் முடித்து இப்போதுதான் சற்றே இயல்புக்கு திரும்பி இருந்தனர் இருவரும்.

                       சென்னையில் இருந்த ஜெய்யின் வீட்டில் தான் வாசம். ஸ்ரீகாவுக்கு தனிகுடித்தனத்தில் விருப்பம் இல்லாததால் சீதாவோடு மல்லுக்கட்ட முடிவு செய்து அந்த வீட்டிலேயே வாசம் செய்ய தொடங்கி இருந்தாள். அவள் வந்த இந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே ஏக உரசல்கள் சீதாவுக்கும், ஸ்ரீகாவுக்கும் இடையில்.

                         எப்போதும் சீதா முறைமை, பாரம்பரியம் என்று எதையாவது வேண்டாததை பேசி வைக்க, அவரின் முகத்திற்கு நேராக அந்த நிமிடமே பதில் கொடுத்து விடுகிறாள் மருமகள். சீதா அதோடு முகத்தை தூக்கி கொள்ள, அவரை சமாதானம் செய்வதற்குள் நொந்து போவார்கள் அவர் கணவனும், மகனும்.

                        இதில் அவரை சமாளித்து முடித்து அறைக்குள் நுழைந்தால் ஜெய்யை எதிர்நோக்கி காத்திருப்பாள் ஸ்ரீகா. ஆரம்பமே “என்ன உங்க அம்மாவை தாலாட்டி முடிச்சாச்சா..” என்றுதான் இருக்கும். அநேக நேரங்களில் அவளை சரி செய்வதற்குள் தலை சுற்றிப் போவான் ஜெய்.

                       ஸ்ரீகா ஜெய்யின் வீட்டிற்கு வந்த இந்த ஒரு வாரத்தில், அந்த வீட்டில் வேலை செய்யும் அத்தனைப் பேரின் பெயர்களும் அத்துப்படி ஆகியிருந்தது அவளுக்கு. எப்போதும் சலசலத்துக் கொண்டே இருப்பவள் என்பதால், தங்களிடம் வேலை செய்பவர்கள், கட்சிக்காரர்கள் என்று எந்த விட பேதமும் இல்லை அவளுக்கு.

                       கையிலிருந்த படங்களின் வேலையை திருமணத்திற்கு முன்பே முடித்துக் கொடுத்திருக்க, புதிய படத்தின் பாடல் காட்சிகளுக்கு இன்னும் ஒன்றரை மாதம் அவகாசம் இருந்தது. அதனால் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் அவள் வீட்டை சுற்றி வர, அவள் கண்ணில் படும் அத்தனைப் பேரும் பழக்கமாகி இருந்தனர் அவளுக்கு.

                          இதோ இன்றும் அப்படித்தான். ஜெய் காலையில் ஏதோ வேலை என்று அவசரமாக கிளம்பி இருக்க, நிதானமாக குளித்து முடித்து, அழகாக சேலை உடுத்திக் கொண்டு, விரித்து விடப்பட்ட கூந்தலுடன் அவள் அறையின் பால்கனியில் நின்றிருந்தாள் அவள்.

                        தலைமுடி நன்கு உலர்ந்துவிடவும், லேசாக பின்னிக் கொண்டு அவள் கீழே இறங்க சமையலறையில் வாசம் கும்மென நாசியை நிறைத்தது. எப்போதும் போல் ஆர்வத்தில் உள்ளே சென்றிருந்தாள் ஸ்ரீகா.

                       அங்கே நின்றிருந்த சொர்ணம்மாள் மட்டன் குழம்பை கொதிக்க விட்டிருந்தார். இன்னும் எதையோ நறுக்கிக் கொண்டு அவர் நிற்க, “என்ன செய்யறீங்க சொர்ணம்மா.. நல்லா ஸ்மெல் வருதே..” என்று மூக்கை உள்ளே இழுத்து அவள் வாசம் பிடிக்க

                        “மட்டன் கோலா உருண்டை குழம்பு பாப்பா… “

                       “வாவ்.. சூப்பர் போங்க.. இப்போவே பசிக்குது எனக்கு…”என்று ஸ்ரீகா சிலாகிக்க, முகம் மலர்ந்தது அந்த மூத்த பெண்மணிக்கு.

                         எப்போதும் அதட்டிக் கொண்டே, ஏதாவது குறை கூறும் சீதாவை விட, இந்த புது எஜமானியை பிடித்தது அவருக்கு. எப்போதும் சிரித்த முகமும், கனிவான பேச்சும் என்று அவரையும் மயக்கி இருந்தாள் புது மருமகள்.

                          இப்போதும் சொர்ணா சப்பாத்தி போடுவதற்கு கட்டையை எடுத்து வைக்க, “நீங்க தேய்ச்சு கொடுங்க.. நான் போடறேன்..” என்று அடுப்பில் வந்து நின்றாள் அலட்டிக் கொள்ளாமல்.

                         “நீங்க ஏன் பாப்பா… நீங்க போங்க, நான் செஞ்சிடுவேன்..” என்றவர் அவள் கேட்காமல் போகவும், “அம்மா பார்த்தா என்னை திட்டுவாங்க பாப்பா. நீங்க போங்க..” என்று உண்மையை கூறினார்.

                                             “அத்தை ஏன் திட்டணும். அவங்ககிட்டே நான் சொல்லிக்கறேன். நீங்க தேய்ங்க..” என்று சட்டமாக நின்று கொண்டாள் ஸ்ரீகா. சொர்ணா அவளை மறுக்க முடியாமல் தன் வேலையை கவனித்தார்.

                அவர் பயந்தது போலவே அடுத்த சில நிமிடங்களில் சீதா வந்து நின்றார். பெரும்பாலும், சமையலறைப் பக்கமே வரமாட்டார் சீதா. சொர்ணா ஒருவரே சமையல் வேலையை பொறுப்பாக முடித்து விடுவதால், மேற்பார்வை பார்க்கும் தேவைக்கூட கிடையாது.

                 சீதா கடைசியாக சமைத்தது கூட நினைவில் இல்லை அவருக்கு. அப்படிப்பட்டவருக்கு மருமகள் சமயலறையில் நிற்கவும் லேசான கோபம். “இவள் ஏன் இதெல்லாம் செய்யுறா..” என்று சலிப்பு. முகத்தை சுருக்கி கொண்டே அவர் நிற்க, சொர்ணா தானாக “அவங்கதான் செய்றேன் ன்னு சொன்னாங்கம்மா..” என்றுவிட்டார்.

                   சீதா அதற்கும் அவரை முறைக்க, ஸ்ரீகா “சப்பாத்தி சாப்பிடுறீங்களா அத்தை..” என்று பாசமாக வினவினாள்.

                    “உனக்கு வேற எதுவும் வேலை இல்லையா…இதெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க..”என்று அவர் கூறிய தொனியே, “நீ இங்கே வரக்கூடாது..” என்று கூறியது.

                      ஸ்ரீகாவின் வழக்கமான பிடிவாதம் இப்போது தலை தூக்க, “அவங்க செய்தால் என்ன அத்தை..நான் சமைக்கக்கூடாதா என்ன??…” என்று அழுத்தமாக அவரைப் பார்த்துக் கொண்டே கேள்வி எழுப்பினாள் ஸ்ரீகா.

                      சீதா வேலையாளின் முன்பு அதற்குமேல் பேச முடியமால் பல்லைக் கடித்துக் கொண்டு வெளியேறிவிட, ஸ்ரீகா அவரை கண்டு கொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்தாள். அன்றைய மெனுவிற்கு சொர்ணா சமைத்த உணவுகளோடு, ஒரு செட்டிநாடு சிக்கன் சுக்காவும் அவளே செய்து எடுத்து வைத்தாள்.

                    மதியஉணவு நேரத்திற்கு வீட்டிற்கு வந்த ஜெய், டைனிங் டேபிளில் அமர, அவனுக்கு சூடாக பரிமாறினாள் மனைவி. “நீ ஏன் ஸ்ரீ இதெல்லாம் பண்ற… ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே..” என்று கணவனும் அதட்ட

                   “சமைக்கிறது என்ன அவ்ளோ பெரிய தப்பா.. மொத்த குடும்பமும் டர்ன் போட்டு திட்டுவீங்க போல… ” என்று சடைத்துக் கொண்டாள் ஸ்ரீகா.

                    மனைவியின் ஊடலில் சிரிப்பு பொங்கிவர, சுற்றி பார்த்தவன் தாங்கள் தனித்திருக்கவும் “சமைக்கிறதை தப்பு சொல்லல ஸ்ரீகுட்டி.. நீ நைட் நிறைய நேரம் வேலை செய்யுறியே..பகல்ல யும் வேலை செய்தே ஆகணுமா… ன்னு தான் சொன்னேன்..” என்று அக்கறையாக கூற

                   “அதெல்லாம் எதுவும் இல்ல.. வேணும்ன்னா, இன்னிக்கு நைட் ரெஸ்ட் எடுத்துக்கறேன்..”

                   “நோ.. நோ ஸ்ரீகுட்டி. புதுசா கல்யாணமானவங்க ராத்திரி ரெஸ்ட் எடுத்தா தெய்வக்குத்தம் ஆகிடும்மா…” என்று அவன் சிரிக்க, டேபிள் மீது இருந்த அவனின் இடது கையில் லேசாக அடித்தாள் அவள்.

                     பேச்சும், சிரிப்புமாக ஜெய் உணவைத் தொடர, ஸ்ரீகாவையும் தன்னுடனே அமர்த்திக் கொண்டான். இருவரும் உண்டு முடிக்கவும், அவன் அறைக்கு செல்ல, இங்கே தீக்ஷி அலுவலகத்தில் இருந்து வந்திருந்தாள். அவளுக்கும் ஸ்ரீகாவே உணவை எடுத்து வைக்க “நான் சாப்பிட்டுப்பேன் ஸ்ரீ… நீ போ..” என்றாள் தீக்ஷி.

                        “தனியா எப்படி சாப்பிடுவ.. சாப்பிட்டு முடி..” என்று ஸ்ரீகா அவளுடன் அமர்ந்து கொண்டாள். எப்போதும் சொர்ணா பரிமாற, அமைதியாக உண்டு எழுந்து சென்றுவிடுவாள் தீக்ஷி. இன்று தோழி அருகில் இருக்கவும், அலுவலக விஷயங்களை எல்லாம் தோழியிடம் கதையாக கூறிக் கொண்டே வழக்கத்தைவிட சற்றே அதிகமாக உண்டு எழுந்திருந்தாள் அவள்.

                        ஸ்ரீகாவுக்கு தோன்றியது இதுதான். “வெளியே எங்க குடும்பம், எங்க பாரம்பரியம் ன்னு கதை பேசுறாங்க..வீட்ல பெத்தப் பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட போட வரல.. என்னமாதிரி லேடி இவங்க.. வேலைகாரங்க எப்படி பாசமா சாப்பாடு போடுவாங்க…” என்று சீதாவை திட்டிக் கொண்டவள் இதற்கு என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினாள்.

                  அவள் யோசனையுடன் படியேறி முதல் தளத்திற்கு வந்துவிட, வாசலில் மதுவின் கார் வந்து நின்றது. அவரது கார் சத்தத்தில் சீதா அறையில் இருந்து வெளியே வந்தார். மது நேராக அறைக்கு சென்றுவிட, சீதா டைனிங் ஹாலில் வந்து நின்று கொண்டார்.

                  அங்கே உணவுகள் தயாராக இருக்க, மதுவுக்கு மட்டும் பொறுப்பாக பரிமாறினார் சீதா. ஸ்ரீகாவுக்கு இதை எப்படி எடுப்பது என்று புரியாமல் போக, தலையை இடவலமாக அசைத்து கொண்டே தங்கலறைக்கு வந்தாள் அவள்.

                  ஜெய்யிடம் “உங்க அம்மா எப்பவுமே இப்படித்தானா..” என்று சற்று நக்கலாக அவள் கேட்க, ஜெய் முறைத்தான் அவளை.

                   “சாரி.. எங்க அத்தை.. அத்தைதை…” என்று அவள் அழுத்தி அத்தையை கூறுபோட

                  “என்ன வம்பு பண்ண அவங்ககிட்ட..”என்றான் ஜெய்.

                   “நான் என்ன செய்தேன்.. இதுவரைக்கும் ஒன்னுமே பண்ணல.” என்றாள்.

                   “அப்படியே இரு.. அவங்க அப்படியே பழகிட்டாங்க ஸ்ரீ. நீ புதுசா அவங்களை கேள்வி எல்லாம் கேட்டா, உன் மேல கோபம் வருமே ஒழிய, அவங்க தப்பு என்னன்னு புரியாது அவங்களுக்கு..” என்று நிதர்சனத்தை எடுத்துக் கூறினான் ஜெய்.

                      “அவங்க பழகல.. நீங்க பழக்கி வச்சிருக்கீங்க.. சமையல் அறைக்கு போறதை தப்பு சொல்றாங்கம்மா..” என்று அவள் அதிசயிக்க

                       “அவங்க போறது இல்லை.. சோ, நீ போகவும் சின்னதா ஒரு இன் செக்யூரிட்டி. சிம்பிள் ஸ்ரீகா..” என்று அன்னையை புரிந்தவனாக கூறினான் ஜெய்.

                      “என்னமோ.. இருக்கறது நாலு பேர்.. இதுல சமைக்க, துவைக்க, பாத்திரம் கழுவ எல்லாத்துக்கும் தனித்தனியா ஆள்.. என்ன அமைச்சர் வீடோ… “

                        “நீங்க மினிஸ்டரா இருந்தா, எப்போதும் வீடு கூட்டமா இருக்கணுமா என்ன..” என்று சலித்துக் கொண்டாள் ஸ்ரீகா.

                        அவள் சலிப்பில் ஜெய்க்கு சிரிப்பு வர, சிரித்துக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தவன் அவள் மண்டையை லேசாக அழுத்தினான். ஸ்ரீகா “இப்போ எங்காவது போகணுமா நீங்க..” என்று கேட்க, இல்லை என்பதாக அழுத்தமாக தலையசைத்தான் அவன்.

                       சட்டென அவன் மடியில் படுத்துக் கொண்டவள்  “தலையை அழுத்தி விடுங்க…” என்று அவன் கையை எடுத்து தலையில் வைத்துக் கொள்ள, ஜெய்க்கு அவளை புரிந்தது.

                        கடந்துவிட்ட ஒரு வாரமும் அருகருகில் இருந்தாலும், உறவுகள், கட்சி ஆட்கள் என்று பெரும்பாலும் எட்டி நிற்க வேண்டிய நிலைதான். அதுவும் பாதி நேரம் ஜெய்யின் வேலை வேறு அவனை இழுத்துக் கொள்ள, பகலில் இது போன்ற தனிமை அரிதினும் அரிது.

                       ஸ்ரீகா தனிமை விரும்பி எல்லாம் இல்லையே.. எப்போதும் யாராவது உடன் இருந்தே பழகி விட்டவளுக்கு, இங்கே தனியாக இருக்க முடியவில்லை. சீதாவும் பெரும்பாலும் கடைதிறப்பு, கட்சி நிகழ்ச்சிகள், மகளிர் மன்ற வேலைகள், கோவில் என்று பிஸியாகவே இருக்க, வீட்டில் இருந்தாலும் ஸ்ரீகாவுடன் பெரிதாக பேச்சுக்கள் இல்லையே.

                     இதில் மொத்தமாக சுருண்டிருந்தாள் அவள். வேலையாட்களுடனும், வீட்டின் பின்புறம் இருக்கும் ஜெய்யின் நாய்களிடமும் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் தான் நேரத்தைக் கடத்தினாள். இதோ அதிசயமாக ஜெய் வீட்டில் இருக்க, அவன் மடியில் தலை வைத்து படுத்தவள் அவன் கைகள் கொடுத்த இதத்தில் சில நிமிடங்களில் உறங்கிப் போயிருந்தாள்.

                    ஜெயிக்கும் அதற்குமேல் பெரிதாக வேலைகள் ஏதுமில்லாததால் அவளுடனே படுத்து உறங்கியவன் மாலை அவளை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றான். ஸ்ரீகா முன்னரே ரேகாவுக்கு அழைத்து சொல்லிவிட, இரவு உணவுக்கான மெனுவையும் அவளே கூறிவிட்டாள்.

Advertisement