Advertisement

ஜெய் இவர்கள் பேசிக் கொள்வதை வெறும் பார்வையாளனாக மட்டும் வேடிக்கைப் பார்த்திருக்க, தெரிந்தவரிடம் பேசிக் கொண்டே நின்றுவிட்ட அவன் தாத்தா சத்யநாராயணன் ஜெய்யை நெருங்கிருந்தார்.

 

                        கம்பீரமாக நடந்து வந்த சத்யநாராயணனை கண்ட ஜெய், தானாகவே இரண்டு அடிகள் எடுத்து வைத்து அவரை நெருங்க, ஸ்ரீகாவின் கவனமும் அவர்களிடம் திரும்பியது. ஜெய் ஸ்ரீகாவிடம் “என் தாத்தா… சத்யநாராயணன்..” என்று பெருமையோடு அறிமுகம் செய்து வைத்தான்.

 

                        ஸ்ரீகாவின் கையைப் பற்றியவன் பெரியவரின் பாதம் தொட்டு நிமிர, அவனை உச்சி முகர்ந்து அணைத்து கொண்டவர் “நீ நல்லா வருவ ஜெய்..” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தார். அவர்களின் பிணைப்பை கண்ட ஸ்ரீகாவின் முகம் கனிந்தது என்றால் பீஷ்மனின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.

 

                     அவன் பார்வையில் அப்பட்டமான பொறாமை. தாத்தாவிடம் “கடுப்பாகுறான் தாத்தா..” என்று காதோடு அவன் போட்டுக் கொடுக்க

 

                    “பீஷ்மா..” என்று அவனை அருகில் அழைத்தார் பெரியவர்.

 

                     “ஓஹ்.. நியாபகம் இருக்கேனா..” என்று கேலியாக சிரித்தவன் அவர் அருகில் வந்து நிற்க, கேமரா கண்கள் அவர்களை விழுங்கி கொள்ளவும், சங்கரநாராயணனும், பார்கவியும் கூட ஜெய்யிடம் சில வார்த்தைகள் பேசி விடைபெற்றுக் கொண்டனர்.

 

                        ஆனால், பீஷ்மன் ஜெய்யை வாழ்த்தியதோடு  சரி. ஜெய்க்கு அப்போதே அவன் செயலில் ஏதோ இடித்தது. அவனின் அமைதி எப்போதும் வில்லங்கம் தானே. திருமணமே முடிந்து விட்டதே.. இப்போது என்ன செய்து வைத்திருக்கிறான் என்று அவன் யோசிக்க முற்பட, அதற்குள் அவன் கையை சுரண்டினாள் ஸ்ரீகா.

 

                    அடுத்த விருந்தினர் மேடைக்கு வந்திருக்க, அதன்பின் பீஷ்மனை பற்றி சிந்திக்க நேரமில்லை ஜெய்க்கு. அடுத்தடுத்து மாப்பிளை வீடு, பெண்வீடு, வரவேற்பு அரங்கு என்று இறகை கட்டிக் கொண்டது போல் ஓடியது அந்த நாள்.

 

                       நலங்கு வைபவத்தை போன்று ஆர்ப்பாட்டமும் இல்லாமல், திருமணத்தைப் போல பாரம்பரியமாகவும் இல்லாமல், முற்றிலும் வேறுபட்ட ஒரு வரவேற்பு நிகழ்ச்சி. ஜெய் மற்றும் ஸ்ரீகாவின் துறை சார்ந்த நட்புகள், உடன் பணிபுரிவோர், அவனின் சக அமைச்சர்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் என்று மொத்தமும் சற்று வசதி படைத்த கூட்டம்.

 

                       நிகழ்வும் அவர்களுக்கு ஏற்றபடி ஏற்பாடாகி இருக்க, முகத்தில் ஒட்டிக்கொண்ட அரை இன்ச் புன்னகையுடன் அழகாக வாழ்த்தி விடைபெற்றனர் விருந்தினர்கள். நிகழ்ச்சிக்கு சித்தார்த் வர்மாவும் வந்திருக்க, மறக்காமல் பாட்டியை அவனிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள் ஸ்ரீகா.

 

                    அவனும் சரோஜினியை அணைத்து தன் அன்பை வெளிப்படுத்த, சரோஜினியை கையில் பிடிக்க முடியவில்லை. வரவேற்பு நிகழ்ச்சிக்கும் பீஷ்மனின் குடும்பம்  வருகை தந்திருக்க, இப்போதும் அதே நிர்மலமான முகத்துடன் அமர்ந்து ஜெய்யை குழப்பிக் கொண்டிருக்கிறான் பீஷ்மன்.

 

                   சீதா தன் குடும்பத்தினரை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருக்க, சட்டையே செய்யாத முகபாவனை தான் சத்தியநாராயணனிடம். சங்கரன் தங்கையின் ஏக்கமுகம் கண்டு, சீதாவை தன்னோடு அமர்த்திக் கொண்டார். சீதா அப்போதும் தன் தந்தையை அவ்வபோது பார்த்து வைக்க “விடுமா… அவரைத் தெரியாதா… அவரை எல்லாம் மாற்றவே முடியாது… உன் மகன் கல்யாணம் நீ சந்தோஷமா இருடா.. இதையெல்லாம் யோசிக்காத..” என்று தங்கைக்கு ஆறுதல் கூறினார் சங்கரநாராயணன்.

 

                  பார்கவி இவர்களை கவனிக்காமல் மேடையில் நடப்பதை வேடிக்கைப் பார்த்திருக்க, அவர் நேரம் சரியாக சாஷா மேடையேறிக் கொண்டிருந்தாள். சாஷாவுக்கு எப்போதுமே ஸ்ரீகாவை நிரம்ப பிடிக்குமே.. ஸ்ரீகாவும் மறக்காமல் அவளை அழைத்திருக்க, சரியாக வந்துவிட்டாள் அவள்.

 

                   ஸ்ரீகா சாஷாவைக் கண்டதும், “ஹாய் மேம்.. தேங்க் யூ சோ மச்.. வருவீங்க ன்னு நினைக்கல..” என்று மனதை மறைக்காமல் கூற

 

                   “கங்கிராட்ஸ் ஸ்ரீகா… சந்தோஷமா இரு… “என்று வாழ்த்தியவள் ஜெய்யிடமும் ‘ஹாப்பி மேரீட் லைப் சார்..” என்று மரியாதையாக வாழ்த்த, பீஷ்மன் கூறிய அதே வார்த்தைகள் என்று ஏனோ நினைக்காமல் இருக்க முடியவில்லை ஜெய்யால்.

 

                 சில நிமிடங்கள் ஸ்ரீகாவுடன் பேசிக் கொண்டிருந்தவள் மேடையை விட்டு இறங்கும் போது தான் கவனித்தாள் பார்கவியை. அவரின் பார்வை சாஷாவை வெளிப்படையாக குற்றம் சுமத்துவது போல் இருக்க, அவரின் பார்வையை நேரடியாக சந்திக்க முடியவில்லை அந்த நேர்மையான நெஞ்சம் கொண்டவளால்.

 

                அவள் பார்வையை திருப்பும் போது தான் அருகில் இருந்த பீஷ்மன் அவள் கண்ணில்பட்டது. அவன் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தன்னை தேடி வரவில்லை என்பதை வேதனையான நிம்மதியுடன் உரைத்தது அவள் உள்ளம்.

 

                 அவனுக்கு இருபக்கமும் அமர்ந்திருந்த அவன் தாத்தாவையும், அம்மாவையும் ஒருமுறை பார்த்துக் கொண்டவள் கடைசி நொடியில் தான் பீஷ்மனின் பார்வையை சந்தித்தாள். எப்போதும் போன்ற அலட்டிக் கொள்ளாத தோற்றம். நீ என்னை பாதிக்கவே இல்லை என்பது போல அழுத்தம்.

 

                    அவன் பார்வையில் சட்டென தவறுசெய்தவள் போல் பார்வையை திருப்பிக் கொண்டாள் சாஷா. அங்கே இருக்கும் கேமராக்கள் நினைவு வர, முடியை ஒதுக்குவது போல் நிமிர்ந்தவள் இயல்பான முகத்துடன் காணப்பட்டாள்.  சற்று தள்ளி இருந்த இருக்காய் ஒன்றில் அவள் அமர்ந்து கொள்ள, சொல்லி வைத்தாற் போன்று அவளைத் தேடி வந்தான் சித்தார்த் வர்மா.

 

                     அவள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் “ஹாய் சாஷா.. எப்படி இருக்கீங்க..” என்று இயல்பாக பேச்சை வளர்க்க, எதைப் பற்றியும் யோசிக்க தேவையில்லாத வெட்டியான அரட்டை சில நிமிடங்கள். பொதுவான சில கேள்விகளும், பதில்களும் என்று அந்த நேரம் பிடித்தது அவளுக்கு.

 

                   முகத்தில் சின்னதாக ஒரு புன்னகை தேங்கியிருக்க, அதே புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டாள் அவள். ஆனால், காரில் ஏறிய நிமிடம் கண்ணீர் அவள் கன்னம் நனைத்ததை யாரும் அறிந்திருக்கவில்லை.

 

                   இங்கே ஜெய்- ஸ்ரீகாவின் வரவேற்பு இரவு பத்து மணியை கடந்தும் குறையாத கூட்டத்துடன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஸ்ரீகா மொத்தமாக களைத்து போயிருக்க, தீக்ஷி அவளுடனே நின்று கொண்டிருந்தாள். ஏற்கனவே காலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்தது வேறு.

 

                  ஸ்ரீகா மொத்தமாக தளர்ந்து விட, ஜெய் அபியை அருகில் அழைத்து அவன் காதில் எதுவோ சொல்ல, போட்டோ செஷன் என்று கூறி, அவர்களை தனியே அழைத்து வந்துவிட்டார் கேமராமேன். ஸ்ரீகாவை அங்கிருந்த சோஃபாவில் அமர்த்தியவன் அவள் கால்களை அழுத்தமாக பிடித்துவிட,

 

                  “வலிக்குது ராம்..” என்றவள் கண்களில் கண்ணீரின் சாயல்…

 

                  “ஸ்ரீ… என்ன பண்ணுதும்மா..” என்று அவன் பதற

 

                   “தெரியல ராம்.. பட் நிறைய வலிக்குது… “என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அவள்.

 

                   அவள் உடலின் உஷ்ணம் ஜெய்யை தாக்க, யோசிக்காமல் தன் தந்தையை அழைத்திருந்தான் ஜெய். இவர்கள் வரவேற்பு ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் நடக்க, அங்கே இருந்த மருத்துவரை கையோடு அழைத்துக் கொண்டு தான் வந்திருந்தார் மது.

 

                     அந்த மருத்துவர் ஸ்ரீகாவை சோதித்து, ஒரு ஊசியை அவள் உடலில் செலுத்தியவர் “அலைச்சலும், அதிகப்படியான மனஉளைச்சலும் தான் காரணம்.. ரெஸ்ட் எடுக்க விடுங்க… சரியாகிடுவாங்க..” என்று கூறி நகர்ந்தார்.

 

                     ஜெய் தந்தையைப் பார்க்க, “இங்கே புக் பண்ணி இருக்க உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய்டு ஜெய். மற்றதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்… எப்படியும் நாளைக்கு பொள்ளாச்சி போறதா தானே பிளான். இங்கே இருந்தே கிளம்பிடுங்க..” என்று சுலபமாக வழி கூறினார் அவர்.

 

                    இதற்குள் பரமேஸ்வரன்- ரேகா, அவரின் பிள்ளைகள் என்று அத்தனைப் பேரும் அந்த அறைக்கு வந்துவிட, ரேகா மகளின் நிலைகண்டு பதறிவிட்டார்.

 

                      “ஸ்ரீகா..” என்று மகளின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் கண்ணீர்விட, அரைமயக்கத்தில் “மிஸ் யு ம்மா..” என்றது பெண். ரேகாவிற்கு அவள் கூறுவது புரியாமல் போக, தோள் சாய்த்திருந்தவனுக்கு புரிந்தது. என்றுமில்லாமல் அவள் வார்த்தைகள் கோபத்தைக் கொடுத்தது அவனுக்கு.

 

                       “இதை யோசிச்சுதான் உடம்பை கெடுத்துகிட்டாளோ..” என்று வலியுடன் எண்ணமிட்டவன், “என்னை நம்பலையா இவ.. அப்படியா பிரிச்சு கொண்டு போயிடுவோம்..” என்று கடுப்புடன்தான் அமர்ந்திருந்தான்.

 

                        பரமேஸ்வரனுக்கு ஜெய்யின் அமைதி புரிய, ரேகாவை விளக்கி நிறுத்திக் கொண்டு “நீ தூக்கு ஜெய்.. ரூம்க்கு கூட்டிட்டு போ.. ரெஸ்ட் எடுங்க..” என்றார் அவரும்.

 

                   ஜெய் அமைதியாக அவரிடம் தலையசைத்து ஸ்ரீகாவை கைகளில் ஏந்தி கொள்ள, பரமேஸ்வரனிடம் “நான் அவளோட இருக்கட்டுமா…” என்று கேட்டிருந்தார் ரேகா. பரமேஸ்வரன் பதில் கூறாமல் மனைவியை கண்டனத்துடன் பார்த்து வைக்க, தன் தவறை அப்போதுதான் உணர்ந்தார் ரேகா.

 

                     அவர் பாவமாக கணவரைப் பார்க்க, “உன் மகளை மாப்பிளை நல்லாவே பார்த்துப்பார். நீ இவ்ளோ கவலைப்பட வேண்டாம்…வா..” என்று அவரை அழைத்துச் சென்றார் பரமேஸ்வரன்.

                         ஜெய் ஸ்ரீகாவை தூக்கி வந்தவன் அந்த அறையின் கட்டிலில் அவளை கிடத்தி, முதல் வேலையாக அவள் உடலிலிருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி எடுக்க, சோதனையான நிமிடங்கள் அவனுக்கு. அவனுக்கும் இந்த நாளை எண்ணி கனவுகள் இருந்ததே.

 

                 ஆனால், நாட்டியக்காரி இந்த நிலையில் இருக்க, வேறு எதுவும் நினைவில் இல்லை அக்கணம். அந்த கனமான வைர நகைகள் அவளை உறுத்திக் கொண்டிருக்க, அவற்றை முதலில் அகற்றிவிட நினைத்துதான் அவன் நகைகள் மீது கையை வைத்தான் அவன்.

 

                   முதலில் நகைகளை களைந்தவன், அவளின் தலையலங்காரத்தையும் மெல்ல அவிழ்த்து அவள் கூந்தலை பிரித்துவிட, லேசான தளர்வு அவள் முகத்தில். வெண்ணீரில் ஒரு துண்டை நனைத்து அவள் முகத்தையும் கழுத்தையும் துடைத்தெடுக்க, அவள் உடையின் இறுக்கம் கண்களில் பட்டு இம்சித்தது அவனை.

 

                      மேலும், அவள் ரவிக்கையின் ஓரங்களில் இருந்த கல் வேலைப்பாடுகளும் அவளை உறுத்திக் கொண்டே இருக்கும் என்று புரிய,  அவன் தங்கை கொடுத்திருந்த அவளது பெட்டியில் இருந்து ஒரு இரவு உடையை எடுத்து வந்தான் ஜெய்.

 

                       மெல்ல மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானித்துக் கொண்டவன், அவள்செலையில் இருந்த பின்னை அகற்றி மெல்ல அவள் சேலையை, அவள் உடலிலிருந்து பிரித்தெடுத்தான். அதற்கே மூச்சுக்காற்று உஷ்ணமாகிவிட, “சோதிக்கிறாளே..”என்று புலம்பிக் கொண்டே, மீதமிருந்த அவள் உடைகளையும் களைந்து, அந்த இரவு உடையை அவளுக்கு அணிவித்து முடித்திருந்தான் ஒருவழியாக.

 

                       அவள் கால்களிலும் வலிநிவாரணி ஒன்றை தேய்த்து நீவிவிட்டு, அவள் கால்களின் மீதே தலையை வைத்து கண்களை மூடியிருந்தான் ஜெய். இருவருக்குமே அடுத்த மூன்றுமணி நேரங்கள் நல்ல உறக்கம்.

                         ஸ்ரீகாவுக்கு உறக்கத்திற்கான மருந்தும் ஏற்றப்பட்டிருக்க, ஜெய்யின் செயல்களை உணர முடியாத அளவிற்கு தான் இருந்தது அவள் நிலை.

                                                   

                      அங்கே அந்த விடுதியில் மீதமிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு, விழா ஏற்பாட்டாளர்களுக்கு பணத்தை கொடுத்து கணக்கை முடித்தும், வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை ஸ்ரீகாவின் சகோதரர்களுக்கு. பரமேஸ்வரன் ரேகாவை சமாளிக்க முடியாமல் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தார் ஏற்கனவே.

 

                     ஜெய்யின் குடும்பமும் ஏற்கனவே கிளம்பி இருந்தது. இவர்கள் நால்வரும் மட்டுமே மண்டபத்தில் தேங்கியிருக்க, இப்போதும் வீடு செல்லும் எண்ணம் இல்லை ஒருவருக்கும். அவர்களுக்காக காலையில் ஏற்பாடு செய்திருந்த அறைக்கு சென்று, அந்த அறையிலேயே ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கி கொண்டனர் நால்வரும்.

 

                    ஸ்ரீகாவின் பிரிவு அவர்களை வாட்டியெடுக்க, இதில் அவளுக்கு உடல்நிலை சரியில்லாததும் சேர்ந்து கொண்டது இப்போது. ஒருவர் முகத்திலும் தெளிவு இல்லை. எப்போதும் அவர்களை வழிநடத்தும் அபிநந்தனும் தங்கையின் பிரிவை எண்ணி கலங்கியவனாக அமர்ந்திருக்க, யாருக்கும் யாரிடமும் பேசும் மனநிலை இல்லை.

                     அமைதியாக அலைபேசியை பார்த்துக் கொண்டும், கண்களை மூடிக் கொண்டும் படுத்திருந்தனர் நால்வரும்.

Advertisement