Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 31

 

                               ஜெய்- ஸ்ரீகா இருவருக்கும் நாட்கள் வேகமாக கடந்திருக்க, இதோ அவர்களின் திருமணநாள். எதிர்பார்த்து காத்திருந்த அழகிய தருணம். ஸ்ரீகாவை மூன்று மணிக்கே எழுப்பி விட்டிருக்க,அரைத் தூக்கத்தில் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.

 

                            நேற்று இரவு நெடுநேரம் ஜெய்யுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவள் மொத்தமாக இரண்டு மணி நேரங்கள் மட்டுமே உறங்கி இருக்க, இதோ பிரம்மமுஹூர்த்தம் என்று மூன்று மணிக்கெல்லாம் எழுப்பி விட்டிருந்தனர்.

 

                              அவள் அலங்காரம் முடித்து அமரவும், மணமகளை மேடைக்கு அழைக்கவும் சரியாக இருக்க, அடுத்தடுத்து மணமக்களுக்கு உடைகள் வழங்கப்பட்டது. சடங்குகள் தொடர, முழுக்க முழுக்க சைவப் பெரியவர்கள் நடத்தி வைக்கும் தமிழ் முறை திருமணம்.

அழகான கலசங்களில் அம்மையும், அப்பனும் நிறுத்தப்பட்டு பொட்டிட்டு, பூச்சூடி அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். மாப்பிள்ளையும்,மணப்பெண்ணும் அடுத்தடுத்து அழைக்கப்பட்டு அருகருகே அமர்த்தப்பட்டனர்.

நம் வழக்கப்படி தெய்வத்தமிழை முதலில் வணங்கி, அடுத்து அம்மை அப்பனை வணங்கி, அவன் பிள்ளைகளை வணங்கி, குல தெய்வத்தை பூஜித்து, பூக்கள் கொண்டு அர்ச்சித்தனர் மணமக்கள்.

சடங்குகளின் இடையிடையே ஜெய் வேறு ஶ்ரீகாவை சீண்டிக் கொண்டிருக்க, பூரண நிலவாக ஜொலித்துக் கொண்டிருந்தவள் இப்போது இன்னும் சிவந்து செஞ்சோதி பிழம்போ என்று ஐயம் கொள்ளச் செய்தாள் ஜெய்யை.

            அவன் மத்திய அமைச்சர் என்பதால் அவனை கடிந்து கொள்ள முடியாமல், அந்த சிவனடியார் முறைத்து வைக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை ஜெய்.

             “யார் என்ன மனநிலையில் இருந்தாலும், நான் என் வேலையில் சரியாக இருக்கிறேன்” என்று அவன் வேலையை தொடர, பூஜை அதன் போக்குக்கு தொடர்ந்தது.

             அடுத்து மணமக்கள் பெற்றவர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்வு தொடங்க, அப்போதே மனம் அடித்துக் கொள்ள தொடங்கிவிட்டது ஶ்ரீகாவுக்கு.

               பெற்றவரை நிமிர்ந்து பாவமாக அவள் பார்க்க, பரமேஸ்வரனின் கலங்கிய கண்கள் மேலும் வாடச் செய்தது பெண்ணை.

                  அவளுக்கும் கண்கள் கலங்கி விட, அவளை உணர்ந்தவனாக அவளைத் தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினான்.

                  ஶ்ரீகா அவனை நோக்கி திரும்பினாலும், அவளின் தடுமாற்றம் குறையவே இல்லை. ஜெய் அவளின் காதருகில் “போதும்டி… நாம என்ன ஆப்ரிக்காவுக்கா போகப் போறோம். நான் வேணா, வீட்டோட மாப்பிள்ளையா வந்திடவா,” என்று கண்சிமிட்டினான்.

 

                    “இப்போ இருக்கும் மனநிலைக்கு நிச்சயமா கூப்பிடுவேன்.. அவசரப்பட்டு வாயை விடாதீங்க..” என்று அப்போதும் அடங்காமல் அவனுக்கு பதில் கொடுத்தாள் ஸ்ரீகா.

 

                      ஜெய் அவளுக்கு பதில் கூற முற்படுகையில், அபி இருவரின் பின்பக்கம் வந்து முழங்காலில் அமர்ந்தான். ஜெய்யின் காதில் “ஏண்டா… ஒரு ஒரு இரண்டு மணிநேரம் அமைதியா இரேன்டா.. அந்த சாமி கலசத்தை தூக்கி மண்டையில் அடிப்பது போலவே பார்த்துட்டு இருக்கார்… அடங்குடா..” என்று எச்சரிக்கை செய்ய, ஸ்ரீகாவின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

         

 

                       அபி அதுவே போதுமென, அவளிடம் பெற்றவர்களை கண்களால் சுட்டிக்காட்ட, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பரமேஸ்வரன்-ரேகா தம்பதிக்கு பாதபூஜை செய்து முடித்தாள் பெண். பெற்றவர்கள் பூத்தூவி அவளை ஆசிர்வதிக்க, அடுத்த நிகழ்வுகள் தொடங்கியது.

 

                        மாப்பிள்ளையின் பெற்றவர்களும், பெண்ணின் பெற்றவர்களும் பரஸ்பரம் மாலை மாற்றிக் கொள்ள, மதுவும், பரமேஸ்வரனும் வாய் நிறைய புன்னகையை ஏந்தி, கைநிறைய வணக்கம் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். சீதா ரேகாவைப் பார்த்து பெயரளவுக்கு புன்னகைக்க, ரேகா தானும் அந்த எல்லையோடு நின்று கொண்டார்.

 

                          அதனைத் தொடர்ந்து பெண்ணை தாரை வார்த்துக் கொடுக்க, கையில் தண்ணீர் செம்புடன் ஸ்ரீகாவின் அருகில் பரமேஸ்வரன், ரேகா நிற்க, அவர்களுக்கு எதிரில் மது, சீதா இருவரும்.. அந்த சிவனடியார் சொல்ல சொல்ல “ஆண்டவன் சாட்சியாக, ஐம்பூதங்கள் சாட்சியாக..” என்று கிளப்பிள்ளையாக திருப்பி சொன்ன பரமேஸ்வரன் இறுதியாக “என் மகளை தாரை வார்த்துக் கொடுக்கிறேன்..” என்ற வார்த்தையை கூறும்போதே உடைந்து போனார்.

 

                            பேசவே முடியாதவர் போல் அவர் தவிக்க, தலையை நிமிரவே இல்லை அவரது மகள். அவளின் வலது கை தந்தையின் கையிலேயே இருக்க, அவர் முகத்தை பார்க்காமல், தன் கலங்கிய முகத்தை அவருக்கு காட்டாமல் குனிந்து கொண்டிருந்தாள் பெண்.

 

                           ஸ்ரீகாவின் உடன்பிறப்புகள் மொத்தமும் பரமேஸ்வரனை ஆதரவாய் சூழ்ந்து கொள்ள, அவருக்கு இருபக்கமும் தூணாக நின்றனர் அறிவனும், சர்வாவும்… துருவன் “அப்பா.. நீங்க இப்படி இருந்தா, அவ எப்படிப்பா சந்தோஷமா இருப்பா…” என்று தந்தையின் காதருகில் உரைக்க, அவன் சொல்வது புத்தியில் உரைத்தாலும், மனது ஏற்கவே இல்லை.

 

                      அபி மீண்டும் “அப்பா.. ஸ்ரீகா எப்பவும் உங்கப்பொண்ணு தான்.. அதெல்லாம் மாற்றவே முடியாதுப்பா.. இப்போ அவ சந்தோஷம் தானே உங்களுக்கு முக்கியம். அவளை அழ வைப்பிங்களா..” என்று சின்ன குரலில் எடுத்துக் கூற, தன்னை நிதானித்துக் கொண்டு, தன் மகளை தாரை வார்த்தார் அவர்.

 

                     மதுபாலகிருஷ்ணன் முழு மகிழ்வோடு ஸ்ரீகாவை தன் மருமகளாக ஏற்றுக் கொள்ள, பெற்றவர்கள் நால்வரும் பிள்ளைகளை ஆசிர்வதித்து நகர்ந்தனர். தாம்பூலத்தட்டில் மஞ்சள்பூசிய முக்கண் கொண்ட தேங்காயின் மீது கம்பீரமாக அமர்ந்து இருந்தது ஸ்ரீகா கழுத்தில் ஏற இருந்த பொன்மஞ்சள் கயிறு.

 

                          தமிழ் முறைப்படி, தட்டில் ஏற்றப்பட்ட கற்பூர ஜோதியுடன் மங்கலநாண் அடங்கிய தாம்பூலம் அனைவரது கைகளாலும் தொட்டு ஆசிர்வதிக்கப்பட, அழகான பூக்கள் மட்டுமே வழங்கப்பட்டது ஆசிர்வாதத்திற்கு.

 

                          தாலி மீண்டும் மேடையேற, மேடையில் இருந்தவர்கள் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளவும், அந்த சிவனடியார் எழுந்து நின்று தாலியை தன் கைகளில் ஏந்தி அனைவரின் பார்வைக்கும் உயர்த்திக் காட்டி, பின் ஜெய்யிடம் நீட்ட, முகத்தில் நிறைந்த அழகான அவன் புன்னகையுடன் பெற்றுக் கொண்டான் ஜெய்.

 

                            சற்றும் பதறாமல், அவசரம் கொள்ளாமல், நிறுத்தி நிதானமாக அந்த கணங்களை அனுபவித்து உள்வாங்கியவனாக ஜெய் மங்கலநாணை கையில் ஏந்தி ஸ்ரீகாவின் கழுத்தை சுற்றி வளைக்க, ஸ்ரீகா வெட்கப்பட்டு தலையை எல்லாம் குனிந்து கொள்ளவில்லை.

 

                           கழுத்தை சுற்றி இருந்த ஜெய்யின் கரங்கள் அவள்மீது உரிமையாக உரசிச் செல்ல, அந்த ஸ்பரிசம் கொடுத்த பதட்டத்தில் தான் நிமிர்ந்தது. ஆனால், அவன் பார்வை அவளை இம்மியும் அசையவிடாமல், அழுத்தமாக தன் ஸ்பரிசத்தை உறுதி செய்ய, அவன் தாலி அணிவித்ததெல்லாம் கனவு தான் பெண்ணுக்கு.

 

                          அவன் கண்களை அவள் படித்து முடிக்கும் முன்னமே அவள் கழுத்தில் தாலி அணிவித்து முடித்திருந்தான் அவன். தீக்ஷி தன் உரிமையை விட்டு கொடுக்காமல், மூன்றாம் முடிச்சுட்டு பந்தத்தை உறுதி செய்ய, அதில் மஞ்சள் குங்குமம் இட்டு மங்கலமாக்கினான் ஜெய்.

 

                         அவன் கரங்கள் தன்னை விட்டு நீங்கவும், சுய உணர்வு பெற்றவளாக ஸ்ரீகா தன் கழுத்தைப் பார்க்க, தாலி ஏறி முடிந்திருந்தது. இன்னும் ஜெய் தாலியை கையில் ஏந்தி அதன்மீது மஞ்சள் குங்குமம் இட்டு, பின் மீண்டும் அவள் கழுத்தை சுற்றி வளைத்து அவள் நெற்றியில் திலகமிட்டான் காதலாக.

 

                         அவன் விலகப் பார்க்கும் நேரம், “சார் ஒரு பிக்..” என்று கேமராமேன் குரல் கொடுக்க, இன்னும் அழகாக விரிந்தது அவன் புன்னகை. உடலைத் தளர்த்தி ஸ்ரீகாவை இன்னும் நெருங்கியவனாக, அவள் நெற்றியைத் தொட்டுக் கொண்டு அவன் பாஸ் கொடுக்க, “வாழறாண்டா…” என்று அபி அறிவனிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

 

                        காலைத் திருமணத்திற்கு உறவுகள் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு மாலை வரவேற்பிற்கான அழைப்பு தான். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் நேரடியாக காலைத் திருமணத்தில் கலந்து கொள்வதாக இருக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

 

                      தாலி கட்டி முடித்த சில நிமிடங்களில் எல்லாம் மணமக்கள் அருகில் அமைக்கப்பட்டிருந்த மற்றொரு மேடையின் மீது அமர்த்தப்பட, தன் பாதுகாப்பு படையோடு அந்த இடத்திற்கு வருகை தந்தார் முதலமைச்சர் ஆதிநாராயணன்.

 

                      ஜெய்யின் நேர்மையின் மீதும், அவனின் துடிப்பான நடவடிக்கைகளின் மீதும் எப்போதுமே மதிப்பு கொண்டவர் ஆதிநாராயணன். அதுவும் மாநில கோரிக்கைகள் எதை அவனிடம் நீட்டினாலும், நியாயமாக இருந்தால், காலம் தாழ்த்தாமல் உடனே அதற்கான ஆவண செய்பவன் என்ற பெயரும் ஜெய்க்கு இருக்க, தன் விருப்பத்தின் பேரில் அவனை வாழ்த்த நேரில் வந்திருந்தார் அவர்.

 

                      ஒரே கட்சியை சார்ந்தவர்கள் என்பதை தாண்டி, ஆதிநாராயணன் மீது ஜெய்க்கும் இயல்பாகவே ஒரு மரியாதை உண்டு.

              ஜெய் அவரின் பாதம் பணிய முற்பட, ஆதிநாராயணன் அவனைத் தடுத்து கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். ஸ்ரீகாவிடமும் “நல்லா இருக்கனும்மா…” என்று வாழ்த்தி, மேலும் சில வார்த்தைகளுடன், பரிசுப்பொருளைக் கொடுத்து அவர் விடைபெற, அடுத்தடுத்து உறவுக்கூட்டம் மேடையேறியது.

 

                       இத்தனை நிகழ்வுகளுக்கும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், நான் திருமணத்தை ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற பாவத்தை முகத்தில் தாங்கி அலட்சியமாக முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் பீஷ்மன். அவன் கண்களில் ஸ்ரீகா மீதான காதலோ, வன்மமோ, எரிச்சலோ எதுவுமே வெளிப்படவில்லை.

 

                       முகம் ஆழ்ந்த அமைதியுடன் புன்னகையை சுமந்திருக்க, அவன் அருகில் அவனது தாய் தந்தை.. அவனது மறுபுறம் அவனது தாத்தா சத்தியநாராயணன். தன் கையில் இருந்த அலைபேசியை அவ்வபோது சுழற்றிக் கொண்டு பீஷ்மன் அமர்ந்திருக்க, அவனை மேடைக்கு அழைத்தார் சத்யநாராயணன்.

 

                       “நீ கூப்பிடவும் தான் வந்தேன்… அவனை வாழ்த்த வேற வரணுமா… போ தாத்தா..” என்று அலட்சியமாக கூறியவன் இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

                    “நீ கூப்பிடவும்தான் வந்தேன்… இதுல அவனை வாழ்த்த வேற செய்யணுமா.. போ சத்யா..” என்றவன் இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

                சத்யா அவனை கண்டிப்புடன் நோக்கி, “என்ன பண்ற பீஷ்மா..பங்க்ஷனுக்கு வந்துட்டு மேடைக்கு வராம இருப்பியா.. உங்களுக்குள்ள பகை ன்னு ஊருக்கே காட்டிக் கொடுக்கணுமா..” என்று வினவ, அவரை முறைத்துக் கொண்டே எழுந்தான் அவன்.

 

                   சங்கரநாராயணனும், பார்கவியும் ஏற்கனவே எழுந்து நின்றிருந்தனர். நால்வரும் ஒரே நேரத்தில் மேடையை நெருங்க, அவன் கீழே நிற்கும்போதே அவனை கவனித்திருந்தாள் ஸ்ரீகா.

 

                   அவனைக் கண்ட நொடியே, அவள் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகையும், சிறு கர்வமும் மிளிர்ந்தது. “நான் வென்றுவிட்டேன்..” என்று அவனை எள்ளி நகையாடியது அவள் பார்வை. பீஷ்மனுக்கு அவர் பார்வையின் பொருள் புரிய, அதற்கும் மறுமொழி இல்லை அவனிடம்.

 

                  ஒரு அளவான புன்னகையோடு மணமக்களை நெருங்கியவன் “ஹாப்பி மேரீட் லைப் கைஸ்…” என்று வாழ்த்த, கேலியான பார்வையோடு லேசாக தலையசைத்தாள் ஸ்ரீகா… ஜெய் “தேங்க் யூ பீஷ்மா..” என்று பேச்சுக்காக சொல்லி வைத்தான்.

 

                    பீஷ்மனுக்கு ஸ்ரீகாவின் புன்னகையை அப்படியே விட்டுச் செல்லும் எண்ணமில்லை. “என்ன ஸ்ரீகா.. ரொம்ப ஹாப்பியோ… இந்த மேரேஜ்ல..” என்று பீஷ்மா சற்று நக்கலாக கேட்க

 

                    “கண்டிப்பா பீஷ்மா… எத்தனை வில்லன்ஸ்… எத்தனை ஏழரைஸ்… எல்லாம் தாண்டி சேர்ந்திருக்கோம் இல்லையா..” என்று ஜெய்யின் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டு, அலட்டிக் கொள்ளாமல் பதில் கொடுத்தது பெண்.

 

                    பீஷ்மா முகத்தில் சிரிப்போடு நின்றவன் “ஆல் தி பெஸ்ட் ஸ்ரீகா… கல்யாணத்துக்கு பிறகு தான் வாழ்க்கை ஆரம்பிக்கும் இல்லையா.. இப்படியே சிரிச்சிட்டே இரு..” என்று வாழ்த்த

 

                  “என்ன வேதமா பீஷ்மா.” என்று சிரித்தவள் “ஜெய் என்னோட இருக்கும்போது எனக்கு என்ன.. எப்பவும் சிரிச்சிட்டே இருப்பேன்…” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

Advertisement