Advertisement

ரகுவரனும் அவளிடம் அன்பாக நடந்து கொள்வது அவனுக்கு புரிந்திருந்தும் அவனால் அவரை ஏற்க முடிந்ததில்லை. தள்ளியே நின்று பழக்கப்பட்டுவிட்டான் அவன். இதோ இப்போதும் அத்தனை ஆரவாரமாக ரகுவரன் ஸ்ரீகாவிடம் பேசி கொண்டிருக்க, அவன் தூர நின்றதோடு சரி.

                    அப்படி நின்றதால் தான் யமுனாவின் துவேஷம் நிறைந்த பார்வையை உடனே கண்டுகொண்டான் அவன். “இதெல்லாம் எப்போதுதான் திருந்துமோ..” என்று கேவலமாக தூற்றிக் கொண்டவன் “எல்லாம் இவளால்…. இந்தாள்கிட்ட எல்லாம் ஏன் பேச்சு வச்சுக்கணும்..” என்று தோழியையும் சேர்த்தே திட்டிக் கொண்டிருந்தான்.

                     அறிவனும், துருவனும் அவனைத் தனியே விடாமல் அவனுடன் சுற்றிக் கொண்டிருக்க, “டேய்.. ஏண்டா நீங்கவேற என்பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க.. போய் ஜெய்யை கவனிங்கடா..” என்று சர்வா அதட்டிய பின்பும் கூட அவனை விட்டு நகரவில்லை இருவரும்.

                    அபிநந்தன் ஜெய்யை வரவேற்று அமர வைத்திருக்க, பரமேஸ்வரன் மாப்பிள்ளையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். மறுபுறம் ஜெய்யின் அப்பா அமர்ந்திருக்க, அவரைத் தொடர்ந்து ஜெய்யின் குடும்பம். ஆனால், ஜெய் அதைப் பற்றியெல்லாம் கவலை கொண்டவனாக தெரியவில்லை.

                     அவன் விழிகள் தன் நாட்டியக்காரியின் ஒவ்வொரு அசைவையும் ரசனையுடன் உள்வாங்கி கொண்டிருந்தது. அந்த புடவையின் நிறம் அவளுக்கு பாந்தமாக பொருந்தியிருக்க, அவளின் அலங்காரமும், கன்னத்தில் இருந்த சந்தனம், குங்குமமும் பித்தனாக்கியது அவனை.

                    அவள் மீது இருந்து பார்வையை நகர்த்த முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான் அமைச்சன். அவனின் ஆகச்சிறந்த போதை அவள் விழிகளில் இருப்பதாக தோன்றியது அவனுக்கு. அவனை கிட்டத்தட்ட ஒரு மயக்கநிலை ஆட்கொள்ள, சுற்றி இருப்பவர்கள் மறைந்து போக, அவனும், அவனது நாட்டியப்பெண்ணும் மட்டுமே அந்த அரங்கத்தில் நிறைந்து இருப்பது போல ஒரு பிரம்மை அவனிடம்.

                     ஸ்ரீகாவும் அவனின் இந்த இடைவிடாத பார்வையை உணர்ந்தே இருந்தாலும், முயன்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்தாலே அவன் பார்வையில் முகம் சிவந்து விடுகிறதே. இதில் சந்தோஷியும், தீஷி, ஆர்த்தியும் வேறு அவள் அருகிலேயே நின்றிருக்க, ஏற்கனவே ஜெய்யின் பார்வையை வைத்து அவளை ஒட்டிக் கொண்டிருந்தனர்.

                     அவர்களை அவ்வபோது முறைப்பதும், பின் வருபவர்களிடம் கவனம் வைப்பதுமாக தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள். இவர்கள் தங்கள் உலகத்தில் ஆழ்ந்து போயிருக்க, ரேகா சீதாவை நலங்கு வைக்க அழைத்தார்.

                     ரேகா அமைதியாக வந்து அழைக்கவும், சீதாவின் தலையில் உடனடியாக ஒரு கிரீடம் வந்து ஒட்டிக் கொண்டது போல. முதலில் எழுந்து செல்ல நினைத்தவர் பின், “மண்டபத்துல வைக்கும்போது பார்த்துக்கலாம் ரேகா… இங்கே உங்க ஆளுங்களே நிறைய இருக்காங்களே.. நீங்க வைங்க..” என்று கூறிவிட்டார் அவர்.

                       ரேகாவிற்கு முகத்தில் அடித்தது போலான அவரின் பேச்சு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் மண்டபத்தில் வைத்தால் இங்கே நலங்கு வைத்து பெண்ணை வாழ்த்தக்கூடாது என்று  இருக்கிறதா?? என்று எண்ணிக் கொண்டவர் தன் எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

                     அவர் அமைதியாக நகர, ஓய்வறைக்கு சென்று திரும்பிய சரோஜினி ரேகாவை பிடித்துக் கொண்டார். மருமகள் பேசியது அவர் காதிலும் விழுந்திருக்க, மருமகளை கண்டனமாக ஒரு பார்வை பார்த்து வைத்தார் சரோஜினி.

                   சீதா பயத்தோடு, எதுவும் பேசிவிடுவாரோ என்று அவரைப் பார்க்க, “நலங்கு கணக்கு பண்ணனும் இல்ல.. அதனால சீதா மறுத்திருப்பா ரேகா.  அவளுக்கு முறை ஏதும் மாறிடுமோ ன்னு கவலை.”என்று மருமகளை பார்த்தவர் ரேகாவிடம் “இப்போ என்ன.. சீதா நலங்கு வைக்கவும், தீக்ஷியை வைக்க சொல்லு.. கூட ஒரு நலங்கு கணக்கு பண்ணிக்கோங்க…கூட்டிட்டுப் போ..” என்றுவிட்டார்.

                     சீதாவையும் “இப்போது எழுந்து சென்றாக வேண்டும் நீ..” என்பது போல் அழுத்தமாக பார்க்க, மாமியாரின் பார்வையில் அடங்கியவராக எழுந்து நடந்தார் சீதா. மனதில் தன் மாமியாரை அர்ச்சித்துக் கொண்டே அவர் மேடையேற, மேடையில் இன்னும் அவரை பிபி ஏற்றினாள் ஸ்ரீகா.

                     அவர் அருகில் வந்து நிற்கவுமே, “என்ன அத்தை.. நாட்டியக்காரிக்கு நலங்கு வைக்க வந்துட்டிங்க போல… உங்க கௌரவத்தை காப்பாத்திடுவேனா நான்.??? “என்று சவாலாக அவரைப் பார்க்க, அவளின் இந்த வாய்க்கு பயந்து தான் உண்மையில் மேடையேற தயங்கி நின்றார் சீதா.

                      இதோ இப்போது அவள் பேசி வைக்க, அங்கே வைத்து ஒன்றும் பேச முடியாமல் பல்லைக் கடித்து கொண்டு சிரித்தவர், நலங்கிட்டு முடித்த நிமிடம் கீழிறங்கி விட்டார். அடுத்தடுத்து பெண்கள் வரிசையாக நலங்கு வைக்க, அந்த வைபவம் முடியவும் ஸ்ரீகா எழுந்து கொண்டாள். சபையை வணங்கி அவள் சென்றுவிட, அடுத்து அவளுக்கு மருதாணி வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.

                   அதற்கென ஆட்கள் அழைக்கப்பட்டிருக்க, ஸ்ரீகாவுக்கு மட்டும் இல்லாமல் அங்கிருந்த பெரும்பாலான பெண்களும் மருதாணி இட்டுக் கொண்டனர். ஸ்ரீகா அதுவரை சேலையில் இருந்தவள் மருதாணி போட்டுக் கொள்வதற்காக, அவளின் வழக்கமான தொளதொள பேண்ட், ஒரு குட்டைக்கை குர்த்தியுடன் வந்து அமர, அது தவறாகிப் போனது சீதாவுக்கு.

                   “கல்யாணப்பெண் போலவா உடை அணிந்து இருக்கிறாள்… என் மகன் மத்திய அமைச்சர் அதையாவது யோசிக்கணும் இல்ல.. இப்படி பஞ்சத்துல அடிபட்டவ மாதிரி வெளுத்துப் போன உடுப்பை மாட்டிட்டு வந்து இருக்காளே..” என்று மனதில் நொந்தவர் அதைக் கணவரிடமும் வெளிப்படுத்த,

                    “ஏன் மருமக ட்ரஸ்க்கு என்ன.. மருதாணி வைக்கப்போறாங்க… புடவை கட்டிட்டா வந்து உட்கார முடியும்… எந்த காலத்துல இருக்க சீதா…”என்று அமைதியாக மனைவியை அதட்டினார் மது. அதன்பின் வாயை இறுக மூடிக் கொண்டார் சீதா.

                      ஆனால், அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் அவரை கொதிக்க செய்ய, தன் எண்ணம் சரியானது தான் என்று அவரின் எண்ணம் வலுப்பெற்றது. அதுவே ஸ்ரீகாவின் மீது வன்மத்தையும் இன்னும் அதிகரிக்கச்  செய்தது.

                      துருவன் டிஜே ஏற்பாடு செய்திருக்க, ஸ்ரீகாவுக்கு மருதாணி இடும் நேரத்தில் மேடையில் ஆட்டம் பாட்டம் என்று களைகட்டியது. துருவன், அறிவன், அபி, சர்வா என்று அத்தனைப் பேரும் களமிறங்க, ஜெய்யை மட்டும் விடுவார்களா என்ன??

                     சர்வாவும், அறிவனும் ஜெய்யை மேடைக்கு தூக்கிக் கொண்டே சென்றுவிட, அவன் அமைச்சர் என்பதெல்லாம் அவர்கள் கவனத்தில் இல்லவே இல்லை. அவனை தங்கள் உறவு என்று மட்டுமே கொண்டாடியது ஸ்ரீகாவின் உறவுகள்.

                      ஜெய்க்கும் அது புரிந்தே இருந்ததால் அவனும் இயல்பாகவே அவர்களுடன் ஒன்றினான். ஆனால், இது எதையுமே புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாத சீதா அனைத்தையும் குற்றமாகவே கருதும் நிலையில் இருந்தார்.

                        ஜெய் சர்வா, அறிவனுடன் சேர்ந்து அப்படி ஒரு ஆட்டம்… அபியின் திருமணத்தில் ஆடியதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைக்கும் அளவு, டிஜேவை அதிர விட்டனர் அவர்கள். ஸ்ரீகா சிரிப்புடன் அவர்களை பார்த்திருக்க, அவளின் நடனப்பள்ளி தோழர்களும் வந்திருந்தனர் நிகழ்ச்சிக்கு.

                          அவர்களும் தங்கள் பங்கிற்கு இறங்கி ஆட்டம் போட, மேடையில் கூட்டம் கூடிக் கொண்டே சென்றது. மேடையில் இருந்த ஜெய் அபியை இழுத்து ஆட வைக்க, அடுத்து அவன் மனைவி ஆர்த்தியை இழுத்து வந்தான் அறிவு.

                       அவள் தயங்கி நின்று பயத்துடன் ரேகாவை பார்க்க, “ம்ம்..” என்று தலையசைத்து சிரித்து கைதட்டினார் ரேகா. ஆர்த்திக்கு நடனம் பழக்கமில்லை என்பதால் அபியை ஒத்து அவள் ஆட, அடுத்து சந்தோஷியை இழுத்து விட்டனர்.

                       அவளும் சளைக்காமல் அறிவன், துருவனுடன் ஆட்டம் போட, அடுத்து மேடைக்கு அருகில் நின்ற சரோஜினியை ஜெய் கைபிடித்து மேடைக்கு அழைத்து செல்ல, “அடேய்.. என்னை எங்கடா இழுத்துட்டுப் போற..” என்று திட்டினாலும், அவனுடன் நடந்தார் சரோஜினி..

                      மேடையில் நின்ற அத்தனைப் பேரும் சூழ்ந்து கொண்டனர் அவரை. சரோஜினி பேரனுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு தோன்றியது போல் கையை, காலை அசைக்க, அதற்கே கூட்டம் ஆர்ப்பரித்தது. ஸ்ரீகா அதுவரை அமர்ந்து பார்த்திருந்தவள் இப்போது அவளும் எழுந்து சரோஜினியோடு இணைந்து கொள்ள, முழங்கையில் மட்டுமே மருதாணி விடப்பட்டிருந்தது அதுவரை.

                      அது வசதியாகிப் போக, பாட்டியின் கையை பிடித்துக் கொண்டு ஆட்டம் போட்டாள் அவள். தீக்ஷியும் அவளோடு சேர்ந்து கொள்ள, ஸ்ரீகா எழுந்து வரவும் அனிச்சையாக அன்னையை பார்த்த ஜெய் “அடிப்பாவி… தேரை இழுத்து விட்டுட்டாளே…” என்று நொந்து போனான்.

                     சீதாவின் முகத்தில் கடுகை போட்டால் கூட உடனே பொரிந்து விடும் அளவுக்கு உஷ்ணம் ஏறியிருக்க, ஜெய்க்கு வருத்தமாக இருந்தாலும், ஸ்ரீகாவை எதுவும் சொல்வதாக இல்லை அவன். அவள் கோபப்படும் அளவிற்கு எதுவும் செய்துவிடவில்லையே என்பது தான் அவனது எண்ணம்.

                  அன்னையை சமாளித்துக் கொள்வோம் என்று அவன் தன்னை தயார் செய்து கொண்டு ஸ்ரீகாவை பார்க்க, அவனைப் பார்த்து அழகாக ஒற்றைக் கண்ணை சிமிட்டினாள் அவள்.

                   “மோஹினிப்பிசாசு..” என்று அவன் வாய் முணுமுணுக்க, அவனின் உதட்டசைவில் புரிந்து கொண்டவள் “நான் தான்..” என்று அவளும் சத்தம் வராமல் வாயசைத்தாள்.

Advertisement