Advertisement

“கூட யார் இருக்காங்க, நாம என்ன பேசறோம்.. எல்லாமே யோசிச்சு நடக்கணும். உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை..ஆனா, நீ இன்னும் கவனமா இருக்கணும்… “என்று அவள் முகத்தை அழுத்தமாக துடைத்துவிட்டார். ஸ்ரீகா அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டியவள், அவர் மடியில் படுத்துக் கொள்ள, அவளின் உடன்பிறப்புகளும் அவளுடனே அமர்ந்து கொண்டனர்.

 

                     ஸ்ரீகாவின் கையை பிடித்துக் கொண்டும், அவள் தலையைத் தடவிக் கொண்டும் அவர்கள் தங்களை வெளிப்படுத்த, ரேகாவிற்கு பிள்ளைகளை நினைத்துசற்றே கவலையாக இருந்தது. ஸ்ரீகா எப்போதுமே வருவதை எதிர்கொள்ளும் குணம் கொண்டவள் தான். இந்தப் பிரிவையும் நிச்சயம் அவளால் சமாளிக்க முடியும்.

 

                       ஆனால், என் மகன்கள் இந்த ஒற்றைப்பெண் இல்லாமல் துவண்டு போவார்களே என்று மகன்களை குறித்து தான் அதிக கவலை அந்த அன்னைக்கு. மகளின் திருமணத்திற்கான மகிழ்ச்சியோடு இந்த மெல்லிய கவலையும் சேர்ந்து கொள்ள, ஏக்கமாக தங்கையைப் பார்த்திருந்த துருவனின் சிகையை கோதியது அவர் விரல்கள்.

 

                     துருவன் நிமிர்ந்து அன்னையை பார்த்து, வேகமாக தன் கண்களைத் துடைத்து கொள்ள, சர்வா அவரின் மறுபக்கம் அமர்ந்து கொண்டான். அறிவு கீழே அமர்ந்தபடி அவர் மடியில் லேசாக தலையை சாய்த்துக் கொள்ள, ஸ்ரீகா இவர்களை உணராமல் கண்மூடி இருந்தாள்.

 

                    பரமேஸ்வரன் அப்போதுதான் வீட்டிற்கு வர, அவரும் நேராக மகளின் அறைக்கு தான் வந்து சேர்ந்தார். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மகள் தன் வீட்டில் தனக்கு மகளாக இருப்பாள் என்பதே அவரை நிலைகுலைய செய்ய, அலுவலகத்தில் இருக்க முடியாமல் வீட்டிற்கு வந்திருந்தார்.

 

                    மகளின் அறையில் மனைவியை சூழ்ந்து கொண்டிருந்த பிள்ளைகளை எண்ணி அவர் நெஞ்சம் சத்தமில்லாமல் விம்ம, எப்போதும்  தன்னை மறைத்துக் கொண்டவர் “என்னடா பண்றிங்க என் பொண்டாட்டியை..” என்று சிரிப்புடன் தான் தன் குடும்பத்தை நெருங்கினார்.

 

                    ஸ்ரீகா அதுவரை கண்மூடி இருந்தவள் “அப்பா..” என்று தந்தையை நோக்கி கையை விரிக்க, பரமேஸ்வரனுக்கு இன்னும் சிறுபிள்ளைதான் மகள். வேகமாக அவளை நெருங்கி அவர் நிற்க, தந்தையை கழுத்தோடு கட்டிக் கொண்டாள் ஸ்ரீகா…

 

                      சில கணங்கள் லேசான கனத்துடன் நகர, பரமேஸ்வரன் தன்னை நிலைப்படுத்தி கொண்டார். “எங்கே போகப்போற ஸ்ரீகா. உன் ஜெய் வீட்டுக்கு தானே. அப்புறம் என்ன, உனக்கு இங்கே வரணும்ன்னு சொன்னா, ஜெய் அடுத்த நிமிஷம் கூட்டிட்டு வந்திட போறார்.. ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க.. கல்யாணப்பொண்ணு அழுது வடியலாமா..” என்று மகளின் தலையில் தட்டினார் அவர்.

 

                    “போங்கப்பா.. நான் உங்களை எல்லாம் மிஸ் பண்ணுவேன்..”

 

                    “அதெல்லாம் கடந்து வர பழகணும் ஸ்ரீகுட்டி. மத்திய அமைச்சர் மனைவியாக போற.. இப்படி அழுது வடியலாமா..” என்று மீண்டும் எடுத்துக் கூறி, அவளை எப்படியோ சரிக்கட்டி சமாளித்தார் பரமேஸ்வரன். மற்றப் பிள்ளைகளையும் ஆளுக்கு ஒரு வேலையை கொடுத்து அனுப்பி விட்டு, தன் மனைவியை முறைத்து வைத்தார் பரமேஸ்வரன்.

 

                       அதற்குள் அழகுநிலையம் செல்வதற்காக ஸ்ரீகாவை அழைக்க, ஆர்த்தி வந்து விட, பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு வருவதாக கூறி குளியலறைக்குள் ஓடி இருந்தாள் ஸ்ரீகா. பரமேஸ்வரன் தன் மனைவியை முறைத்து அந்த அறையில் இருந்து வெளியே வர, அவரின் பின்னால் தங்களின் அறைக்கு வந்தார் ரேகா.

                              அவர் அறைக்குள் நுழைந்த நிமிடமே, “நீதான் எப்பவும் சின்னப்பிள்ளையாவே இருக்க. இப்போ என் மகளையும் அப்படியே பழக்கி விடறியா.. பிள்ளைங்க அழுதால், சமாதானம் சொல்லாம நீயும் கூட உட்கார்ந்து கண்ணைக் கசக்கிட்டு இருக்க…” என்று மனைவியை கடிந்து கொண்டார் பரமேஸ்வரன்.

 

                   அதற்கே ரேகாவின் முகம் சுருங்கிவிட, “இங்கே வா..” என்று மனைவியை அழைத்து அருகில் அமர்த்தி “என்னடா. என்ன யோசிக்கிற ரேகாம்மா..” என்று கணவர் வாஞ்சையாய் தலையை தடவி கொடுக்க,

 

                     “எனக்கு பயமாயிருக்குங்க..ஜெய்யோட அம்மா, அவங்க குடும்பத்தோட ஸ்ரீ எப்படி பொருந்திப் போவாளோ.. அதுவே யோசனையா இருக்கு. சீதாவை நினைத்து கொஞ்சம் பயமா இருக்கு..” என்று மனதில் இருப்பதை அவர் கணவரிடம் கூறிவிட

 

                      “ரேகா… ரேகா..” என்று அவர் மண்டையில் கையை வைத்து அழுத்தியவாறு “உனக்கு மாமியார் இல்ல.. அதனால உனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு. இங்கே இருக்க எல்லா மாமியாரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் ரேகா… மருமகள் ன்னு வந்துட்டாலே, கொஞ்சம் கெத்து காண்பிக்கத் தான் நினைக்கிறாங்க.. ஜெய்யோட அம்மாவும் அப்படி இருக்கலாம்…”

 

                      “அதெல்லாம் என் பொண்ணு ஈஸியா ஊதி தள்ளிடுவா.. அதோட ஜெய்யும் நம்ம ஸ்ரீகுட்டியை அப்படியெல்லாம் விட்டுட மாட்டார்.நீ உன் மகளோட கல்யாணத்தை என்ஜோய் பண்ணு.. தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு உன்னை குழப்பிக்காதடா..” என்று மனைவியின் தாடையை பிடித்து அவர் கொஞ்ச, கணவரின் தெளிவான பேச்சு ரேகாவின் சஞ்சலத்தை சிறிதே குறைத்தது.

அதே தெளிந்த மனதுடனே அவர் மாலை விழாவிற்கு தயாராக, அவர்கள் வீட்டுத் தோட்டமே குட்டி அரங்கம் போல அழகாக காட்சியளித்தது.

 

                       மணப்பெண்ணிற்கு மருதாணி இடுவதற்கு முன்பாக, நலங்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அப்போதுதான் ஜெய்ராம் தன் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான். பரமேஸ்வரன் முன்னே நின்று அவர்களை வரவேற்று அமரவைக்க, அதேநேரம் ஸ்ரீகா மேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.

 

                      ஒரு ஆலிவ் நிற பட்டுபுடவை, அதற்கேற்ற அணிமணிகள் என்று அழகுபதுமையாக பெண் வந்து அமர,  அவளின் தாய்மாமன் இடத்தில இருந்து நலங்கு வைத்து நிகழ்வைத் தொடங்கி வைத்தவர் ரகுவரன். ஆம். என்னதான் மகன் மொத்தமாக ஒதுக்கி வைத்தாலும், ஸ்ரீகா எப்போதும் செல்லப்பிள்ளை தான் அவருக்கு.

 

                       பரமேஸ்வரன் குடும்பத்தில் ரேகா உட்பட யாருமே ரகுவரனிடம் முகம் கொடுத்து பேசியதே இல்லை எப்போதும். அவர்கள் அத்தனைப் பேருக்கும் சர்வா இன்றியமையாதவனாக இருக்க, அவன்பொருட்டு, அவனை தவிக்க விட்ட ரகுவரனை பிடிக்காது யாருக்கும்.

 

                      இதில் பரமேஸ்வரன் மட்டுமே விதிவிலக்கு. நண்பன் என்ற முறையில் முகம் கொடுத்து பேசுபவர் அவர் ஒருவர் மட்டுமே. ஆனால், தன் மகனை ரேகா கவனித்துக் கொள்ளும் விதத்தில் அவர் பேசாதது எல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை ரகுவரனுக்கு.

 

                     தன் பிள்ளையை காப்பாற்றி சொந்தப் பிள்ளையை போல் வளர்த்து ஆளாக்கி இருக்கும் ரேகா மீது எப்போதுமே ஒரு பாசம் இருக்கும். தனக்கு ஒரு தங்கை இருந்திருந்தால், இப்படி இருந்திருப்பாரோ என்ற எண்ணம் தான் ரகுவரனுக்கு. முதல்நாள் ரேகாவை பார்த்தபோது அவரிடம் சண்டையிட்டதுதான்.

 

                      அதன்பின் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட, மகன் விஷயத்தில் ரேகாவை மீறி எதுவும் செய்ய முற்பட்டது இல்லை ரகுவரன். சர்வாவின் வளர்ச்சியைத் தான் கண்முன் கண்டு கொண்டிருக்கிறாரே மனிதர். அதற்குமேல் என்ன பேசுவது??..

 

                      ஆனால், ரேகாவும், அவரின் சொந்த மகனும் அவரிடம் இருந்து விலகி நிற்க, வீட்டிற்கு வந்து அவ்வபோது பாவமாக நின்று செல்லும் ரகு அங்கிளிடம் தானாகவே தானாகவே நெருங்கிப் பழக தொடங்கி இருந்தாள் ஸ்ரீகா.

 

                  அவளின் இயல்பான குணமே அதுவாக இருக்க, ரேகாவும் மகளைத் தடுத்ததில்லை. ஸ்ரீகாவிடம் இருந்த அந்த உரிமையில் தான் இப்போது சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தார் ரகுவரன். யமுனா அவரை மீறி எதுவும் பேச முடியாமல் நிற்க, ஸ்ரீகாவின் அருகில் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் அவளுக்கு நலங்கிட்டுக் கொண்டிருந்தார் ரகுவரன்.

 

                     அவர் உணர்ச்சி வசப்பட்டதில் அவரது கைகள் லேசாக நடுங்கி கொண்டிருக்க, “ஐயோ ரகு அங்கிள்.. நான் இந்த கூட்டத்துல உங்களுக்கு ஒரு பொண்ணு பார்க்கலாம் ன்னு நினைச்சேன்.. ஆனா, உங்களுக்கு வயசாகிடுச்சு போலவே.. இப்படி கை நடுங்குது… இனிமே ரகுத்தாத்தா ன்னு கூப்பிடணுமோ..” என்று கன்னத்தில் விரல் தட்டி யோசிப்பவள் போல் ஸ்ரீகா கூற,

 

                “உனக்கு ஒரு பொண்ணு பிறக்கட்டும்.. அதுக்குப்பிறகு தாத்தாவாக ப்ரமோஷன் வாங்கிக்கறேன்…”

 

                “அப்போ இன்னும் நாளைக்கு ஜாலியா சைட் அடிப்பீங்க…”

 

                “உன் ஆன்ட்டி பக்கத்துல நிற்கிறா ஸ்ரீகுட்டி.. இப்படி என்னை மாட்டிவிடணுமா..”

 

                “இதுக்கெல்லாம் பயப்படற ஆளா நாம… என்ன அங்கிள் நீங்க.. அன்னிக்கு பீச்ல அந்த ரெட் சுடி போட்ட ஆண்ட்டிகிட்ட எவ்ளோ தைரியமா பேசுனீங்க…” என்று சிரித்துக் கொண்டே ஸ்ரீகா அவரை கோர்த்துவிட

 

                 “கல்யாணப்பொண்ணே.. உனக்கு கல்யாணம் முடியறதுக்குள்ள, நீ என்னை முடிச்சிடுவ போல… நான் கிளம்புறேன்..” என்று அவர் நகர முற்பட,

 

                “என் கிப்ட் எங்க..” என்றாள் ஸ்ரீகா உரிமையாக

                 “என்ன ஸ்ரீகா கிப்ட் எல்லாம் கல்யாணத்துக்கு தானே கொடுப்பாங்க…” என்று யமுனா குறுக்கிட

 

                ஸ்ரீகா ரகுவரனை மட்டுமே பார்த்திருந்தாள். ரகுவரன் தன் மகள் சந்தோஷியிடம் கையை நீட்ட, அவள் கைப்பையிலிருந்து ஒரு வண்ணக்காகிதம் சுற்றப்பட்ட சிறிய பெட்டியை அவரிடம் கொடுத்தாள். ரகு அந்த பெட்டியை ஸ்ரீகாவிடம் நீட்ட, ஆவலாக அதை வாங்கி கொண்டவள் “பிரிச்சுப் பார்க்கவா..” என்று கண்களை விரித்து ரகுவரனிடம் கேட்க

 

                   “அப்புறம் பாரு.. இப்போ மத்தவங்க நலங்கு வைக்கணும் இல்ல..” என்று அவள் தலையில் ஆசிர்வதிப்பது போல் கையை வைத்து கீழிறங்கினார் ரகுவரன். யமுனாவுக்கு என்ன பரிசு என்று மண்டையைக் குடைந்தது. கூடவே தன் கணவர் தன்னிடம் சொல்லாமல் அவளுக்கு பரிசு வாங்கியிருந்தது வேறு தலையிறக்கமாக இருந்தது அவருக்கு.

 

                      எதுவும் பேசாமல் அமைதியாக அவர் கணவரின் அருகில் அமர்ந்து கொள்ள, தூரத்தில் இருந்து அவரின் முகபாவனைகளை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தான் சர்வா. அவனுக்கு ஸ்ரீகா அவன் தந்தையுடன் பேசுவது எப்போதுமே பிடிக்காது.

 

                      நிச்சயம் பொறாமையெல்லாம் கிடையாது. யமுனாவின் குணம் அறிந்தவனாகிற்றே. எதற்கு தன் தோழி அவர் வாயில் விழ வேண்டும்? என்ற எண்ணம்தான். ஆனால், ஸ்ரீகா இந்த ஒரு விஷயத்தில் அவன் பேச்சைக் கேட்பதே கிடையாது.

Advertisement