Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 30

 

                        ஜெய்- ஸ்ரீகாவின் திருமண வேலைகள் தொடங்கி நடந்து கொண்டிருக்க, பத்திரிக்கைகள் அடித்து வந்திருந்தது. பரமேஸ்வரன் தன் செல்ல மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்க, அவர் எண்ணத்தை அப்படியே செயல்படுத்த தொடங்கி இருந்தனர் அவர் பிள்ளைகள்.

 

                        துருவன், அறிவன், சர்வா, அபி, ஆர்த்தி என்று ஐந்து பேரும் ரேகாவுடன் அமர்ந்து இருக்க, திருமண அழைப்பிதழ்கள் கொடுக்க  தயாராகிக் கொண்டிருந்தது அங்கே. பரமேஸ்வரனின் நட்பு வட்டம் மட்டுமே, சுலபமாக ஆயிரத்தை கடந்துவிட, அதில் சரிபாதி திரைத்துறையினர். அவரது சென்ற தலைமுறை நட்புவட்டம் என்றால், துருவன், சர்வாவின் நட்பு இன்றைய தலைமுறை திரைத்துறையின் முக்கியஸ்தர்களோடு.

 

                         அழைக்க வேண்டியவர்களின் பட்டியல் மட்டுமே ஐயாயிரத்தை கடந்து போக, பாதுகாப்பு காரணங்களுக்கு மதுவுடன்  கலந்தாலோசித்தார் பரமேஸ்வரன். ஜெய்யின் திருமணம் என்பதால மத்திய அமைச்சர்கள் சிலர் நிச்சயம் வருகை தருவார்கள்.. பரமேஸ்வரனுக்கு ஆளும்கட்சியில் சில அமைச்சர்களோடு நெருக்கமான பழக்கம் இருக்க, அவர்களையும் அழைத்த தீர வேண்டிய கட்டாயம்.

 

                      அதன் பொருட்டே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவலை கொண்டார் அவர். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடகளை தான் கவனித்துக் கொள்வதாக மது உறுதி கொடுக்க, அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடந்தது. திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்க, ஸ்ரீகாவுக்கான, ஆடைகள், நகைகள் என்று சுழன்று கொண்டிருக்கிறார் ரேகா.

 

                      தனக்கென அதிகம் மெனக்கெடாதவர் மகளின் திருமணத்திற்காக ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கொண்டிருக்கிறார். இதில் மாப்பிளை வீட்டில் பட்டெடுக்கும் சமயம் “நாங்க எடுத்து கொடுக்கிறது தான் கட்டணும், ஆனாலும், என்ன செய்ய.. எல்லாம் மாறிப் போச்சு.. நீ உனக்கு பிடிச்சதா எடு.. விலையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத..” என்று சீதா ஸ்ரீகாவிடம் கூறி இருக்க, அந்தப்பக்கமாக வந்த ரேகாவின் காதுகளில் விழுந்திருந்தது.

 

                      அதுவேறு அவரை கொதிப்படைய செய்ய, “பணத்தை பற்றி கவலைப்பட வேண்டியவளா என் மகள்..” என்று ஒரு எண்ணம். “நீ என்ன எடுத்து கொடுப்பது, என் மகள் கட்டுவது..” என்று நினைத்தாரோ என்னவோ, ரேகா குவித்து கொண்டிருந்தார்.

                      இதுநாள் வரை வீட்டின் செலவுகள் மொத்தமும் பரமேஸ்வரன் தான். பிள்ளைகளின் செலவுகள் கூட இதுவரை அவரே கவனித்துக் கொண்டிருக்க, ஸ்ரீகாவின் சுயசம்பாத்தியம் அப்படியே வங்கி கணக்கில் தான் உறங்கி கொண்டிருக்கிறது. அதுவே சில கோடிகளாக இருக்க, “என் மகளுக்கு எடுக்கும் புடவைக்கு கணக்கு பார்ப்பாரா இவர்..” என்று அப்போதே ஒரு வீம்பு வந்து ஒட்டிக் கொண்டது ரேகாவிடம்.

 

                  காதல் திருமணம் தான்.. ஆனால், அதற்காக எதிலும் தாங்கள் குறைந்து போய்விட வில்லை என்று காட்டிவிடும் வேகம் மிகுந்து விட்டது ரேகாவிடம். திருமணம் மாப்பிளை வீட்டார் செலவாக இருக்க, வரவேற்பு பரமேஸ்வரன் பொறுப்பு. எனவே, தன் கணவரிடம் கண்டிப்பாக சொல்லி இருந்தார் ரேகா.. மகளின் திருமணம் ஏற்கனவே கனவு தான் என்பதோடு இப்போது சீதாவுக்காக என்பதும் சேர்ந்து கொண்டது.

 

                  அன்று ஸ்ரீகாவின் கைக்கு மருதாணி இடும் சடங்கு மாலையில் நடப்பதாக இருக்க, காலையில் இருந்தே அவளை வீட்டில் பிடித்து வைத்திருந்தார் ரேகா. நேற்றுவரை அவளும் படப்பிடிப்பு, பயிற்சி வேலைகள் என்று ஓடிக் கொண்டே இருக்க, நேற்று இரவே கண்டித்து சொல்லி இருந்தாலும், காலையிலும் மகள் வெளியே கிளம்பி விடாமல் காவல் காத்துக் கொண்டிருந்தார் அவர்.

 

                         திருமணப் பெண்ணுக்கான எந்த அடையாளமும் இல்லாமல், வேலை வேலை என்று சுற்றி வருபவளை அவரும் தான் என்ன செய்ய முடியும். அழகானவள் தான் என்றாலும், இடைவிடாத வேலையால் மகளின் அழகு வதனம் சற்றே வாடிப் போயிருக்க, அதற்கே பதட்டமாகி இருந்தார் ரேகா.

 

                      காலையில் மகள் உறங்கி கொண்டிருக்கவும், அவள் உறக்கத்தை கலைக்க மனமில்லாமல் அவளை உறங்கவிட்டு, மாலை விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார் அவர். மாலை நிகழ்வு அத்தனை பெரியதானது அல்ல. இவர்கள் வகையில் பழக்கமில்லை என்றாலும், பிள்ளைகளின் விருப்பத்திற்காக ஒப்புக் கொண்டிருந்தனர் பெற்றோர்.

 

                    மாலை நிகழ்ச்சிக்கு ஜெயராம் கிருஷ்ணாவும், அவன் குடும்பமும் வருவதாக இருக்க, ரேகா ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார். மாலை ஸ்ரீகா, துருவன், சர்வாவின் தோழமைகளுக்கும், சில நெருங்கிய சொந்தங்களுக்கும் மட்டுமே அழைப்பு என்பதால் வீட்டின் தோட்டம் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 

                      ஸ்ரீகா நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நேரம், அவள் காதுக்கு அருகே “பூம்…” என்று கோரஸாக கத்திய அவளின் வானரசேனை அவளை எழுப்பி விட, அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் அவள்.  அவளுக்கு எதிரே அவளின் உடன்பிறப்புகள் சிரிப்போடு நிற்க, “எரும மாடுகளா.. எதுக்குடா இபப்டி பண்றிங்க.” என்றவள் “அம்மாஆ…” என்று சத்தமாக கத்த, சர்வா அவசரமாக அவள் வாயை கைக்கொண்டு மூடி இருந்தான்.

 

                       அவன் தலைமுடியை இரண்டு கையாளும் ஸ்ரீகா பிடித்து இழுக்க, அவளின் கையை பின்னால் இருந்து இழுக்கப் பார்த்தான் அறிவன். இறுதியில் துருவனும் உதவ ஸ்ரீகாவின் கையிலிருந்து சர்வாவை விடுவித்து இருந்தனர். ஸ்ரீகா இருவரையும் முறைத்தவள் எழுந்து அவர்களை துரத்த, அறைக்குள் அவள் கைகளுக்கு அகப்படாமல் ஓடிக் கொண்டிருந்தனர் துருவனும், அறிவனும்.

 

                     “அறிவா மரியாதையா நில்லுடா..” என்று கத்திக் கொண்டே அவள் ஓட, அவள் கைக்கு அகப்படாமல் கட்டில் மீதும், சோஃபாவின் மீதும் ஏறி தப்பித்துக் கொண்டிருந்தனர் மூவரும். ஸ்ரீகா அவர்களை பிடிக்க முடியாமல் போகவும், மீண்டும் சத்தமாக தன் அன்னையை அழைக்க, ரேகா ஓடிவந்தார் இவள் சத்தத்தில்.

 

                     இவர்கள் நால்வரையும் ஒன்றாக பார்த்ததுமே “ஆரம்பிச்சிட்டீங்களா..” என்ற பார்வை தான் ரேகாவிடம். ஸ்ரீகா “என்னை தூங்கவே விடலம்மா.. கத்தி எழுப்பிட்டானுங்க..” என்று புகார் சொல்ல.

 

                     சர்வா “அம்மா.. ஈவினிங் பங்க்ஷன் இருக்கு.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருந்தா ம்மா.. அதனால தான் எழுப்பினோம்..” என்று நல்லவனாக கூற, அறிவன் தலையசைத்து ஆமோதித்தான்.

                   ரேகா இவர்கள் சேட்டையில் சிரிக்க, “அம்மா.. என்னை ஏன் எழுப்பினாங்க கேளுங்க.. உங்க பிள்ளைகளை கண்டதும் உடனே நான் மறந்திடுவேனே உங்களுக்கு..” என்று ஸ்ரீகா சண்டையிட

                       “அம்மா உன்னை எப்படி மறப்பேன் ஸ்ரீகா… உன்னை விட்டு எப்படி இருக்க போறேனோ தெரியல…” என்று அவர் கலங்க, “ம்மா..” என்று உதட்டுப்பிதுக்களுடன் அவரைக் கட்டிக் கொண்டாள் மகள்.

                      ரேகா சிலநொடிகள் மகளை அணைத்து நின்றவர் “போதும்டா… அழாத..” என்று என்று மகளின் தலையைக் கோதி முதுகில் தட்டிக் கொடுக்க, ஆண்பிள்ளைகள் அன்னையை அணைத்துக் கொண்டனர் இதமாக.

 

                      ஸ்ரீகா நிமிர்ந்து அன்னையின் முகம் பார்த்தவள் “ம்மா.. நீங்க என்னோட வந்திடுங்க… நான் உங்களை என்னோட கூட்டிட்டு போய்டுறேன்..”  என

 

                      “ஹேய்… உன்னை கல்யாணம் செய்ய சொன்னா, எங்க அம்மாவை கடத்த பார்க்கிற நீ…” என்று சர்வா அவள் முதுகில் அடிக்க

 

                      “ம்மா.. எனக்கு கல்யாணம் வேண்டாம்.. நான் உங்களோட இருக்கேன்..” என்று அன்னையின் கழுத்தைக் கட்டி கொண்டு அவள் செல்லம் கொஞ்ச

 

                       “அம்மா.. கல்யாணம் வேண்டாமாம்.. அப்போ ஜெய்கிட்ட சொல்லிடுவோம்… ஸ்ரீகாக்கு நீங்க வேண்டாமாம் மாமா ன்னு சொல்லிடுவோம்..” என்று அறிவன் அலைபேசியைக் கையில் எடுக்க.

 

                      “ம்மா.. பாருங்க இவனை…” என்று மீண்டும் கண்ணை கசக்கினாள் அவள்.

 

                     துருவன் தங்கையை தோளோடு அணைத்து ஆறுதல்படுத்தி “இங்கேதானே இருக்கப் போற ஸ்ரீ.. நினைச்ச நேரம் வந்து பார்க்க போற. அதோட டான்ஸ் ஸ்கூல்க்கு டெய்லி வரப்போற.. பிறகு என்ன.. அம்மாவை அழ வைக்காத…” என்று கூற

 

                     “ஓஹ்.. உன் அம்மாவுக்காக என்னை சமாதானப்படுத்தறியா.. துரு நீ கூட கட்சி மாறிட்டியாடா…” என்று கேட்டவள் மூவரையும் பார்த்து “மூணு பேருமே அம்மா பிள்ளைங்க.. நான் இல்லேன்னா, இன்னும்செல்லாம் கொஞ்சுவாங்க… நான் மட்டும் ஏன் போகணும்.. அம்மா.. நீங்க என்னோட வாங்க..” என்று அன்னையின் கையைப் பிடித்து அவள் இழுக்க

 

                      அறிவனும், சர்வாவும் ஆளுக்கு ஒரு பக்கமாக ரேகாவை பிடித்துக் கொண்டனர். “ஹேய்.. நீ கிளம்பு உன் மாமியார் வீட்டுக்கு.. என் அம்மாவுக்கு இதுதான் மாமியார் வீடு… நீ முதல்ல கிளம்புடி…” என்று சர்வா விளையாட்டாக கூறி வைக்க, கடகடவென்று கண்ணீர் வழிந்து விட்டது ஸ்ரீகாவின் கண்களில்..

 

                      அழுகையோடு துருவனின் தோளில் சாய்ந்து கொண்டவள் கண்களை மூடிக் கொண்டு தேம்ப, அறிவன் ” சர்வா.. வாயை வச்சிட்டு சும்மா இருக்கியாடா நீ…” என்று அவனைத் திட்டிக் கொண்டே தங்கையை அணைத்து கொண்டான்..

 

        “ஸ்ரீ அவன் விளையாட்டுக்கு சொல்றாண்டி.. இதுக்கெல்லாம் அழுவியா… அழுமூஞ்சி..” என்று தங்கையை தேற்ற தொடங்கினான்.

 

                    “போ.. நீயுந்தானே போக சொன்ன.. போங்கடா.. என்கிட்டே வராத போ..” என்று ஸ்ரீகா அழ, அவளின் மனநிலை ரேகாவுக்கு புரிந்தது.. ஆனால், இதற்கு அவராலும் எதுவும் செய்ய இயலாதே. காலம் காலமாக பெண்களுக்கு விதிக்கப்பட்டதல்லவா இந்த துயரம்.

 

                    ரேகா நிதர்சனம் உணர்ந்தவராக “ஸ்ரீகா அழக்கூடாது.. இங்கே வா..” என்று அவளை அழைத்து கட்டிலில் அமர்த்தி தானும் அருகே அமர்ந்து கொண்டார். அவரே “இப்படி சின்னப்பிள்ளை மாதிரி எடுத்ததுக்கெல்லாம் கண்ணை கசக்கக்கூடாது. அங்கே பார்த்து கவனமா இருக்கனும். உன்னால ஜெய்க்கு எந்த சங்கடமும் வரக்கூடாது ஸ்ரீகா.”

 

Advertisement