Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 03

                         ரேகா வாசுதேவன்… எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் இருந்த பல நடிகர், நடிகைகளை ஆட வைத்து அழகு பார்த்தவர். இவரின் அன்னை முறையாக நடனம் கற்றவராக இருக்க, அவரே மகளுக்கு குருவாக இருந்து நடனம் கற்பித்து இருந்தார்.

                          மகள் முழுவதுமாக நடனத்தில் தன்னை தொலைக்க விரும்புவதை அவளின் பதினைந்து வயதிலேயே புரிந்து கொண்டார் அந்த அன்னை. பரதநாட்டியம் மட்டும் இல்லாமல் மற்றவகை நடனங்களையும் மகளுக்கு கற்பிக்க விரும்பியவர் அதற்காக இருந்த பள்ளி ஒன்றில் அவளை சேர்த்துவிட, அந்த பள்ளியின் உரிமையாளர் சினிமாவுக்கு மிகுந்த பரிட்சயம்.

                        ரேகாவின் திறமையை உணர்ந்தவர் அவளுக்கு முறையாக நடனம் கற்பித்து அவளை தன் உதவி இயக்குனராகவும் நியமித்துவிட, அவர் ஏற்கும் பாதிப் படங்களுக்கு இவளே நடன காட்சியை முடித்துக் கொடுத்துவிடுவாள். அவர் நல்ல மனிதராக இருக்க, ஐந்து வருடங்கள் தனக்கு கீழ் ரேகாவை பயிற்றுவித்து, அதன் பின் அவளுக்கும் தனியாக சில வாய்ப்புகளை பெற்றுத்தர, அவள் ஏற்கனவே பரிச்சயமாக இருந்ததால், அவளின் திறமையை உணர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது அவளுக்கு.

                   முதலில் சிறிய பட்ஜெட் படங்களில் தன் திறமையை அவர் நிரூபித்துக் காட்ட, வரிசையாக வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. பெரிய இயக்குனர்கள் முதல், உச்ச நடிகர், நடிகைகள் வரை அத்தனை பேருடனும் அவர் வேலை பார்த்து வந்த காலகட்டத்தில் தான் பரமேஸ்வரன் அவர் வாழ்க்கையில் நுழைந்தது.

                  படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தார் பரமேஸ்வரன். தந்தையின் தொழிலை சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் கையில் எடுத்திருக்க, தொடர்ந்து ஏறுமுகம் தான். அவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் அத்தனையும் சக்கைபோடு போட, வெற்றி கொடுத்த மிதப்பில் அவர் முழுவதுமாக மிதந்து கொண்டிருந்த நேரம் அது.

                     பெண்கள் சகவாசம், குடி, பார்ட்டி என்று அத்தனையும் கைவரப் பெற்ற தனவானாக வளம் வந்து கொண்டிருந்தவர் கண்களில் எப்படியோ பட்டுவிட்டார் ரேகா. பார்த்த நிமிடமே அவரின் நீளமான விழிகளும், அது பேசும் மொழிகளும் பரமேஸ்வரனை கொள்ளையிட, அந்தோ பரிதாபம் ரேகா அவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

                      பொதுவாகவே மிகவும் அமைதியான பெண்தான் ரேகா. தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர் இருக்க, செட்டில் கூட அனாவசியமாக யாரிடமும் பேச்சு வராது. தன் குழுவினர், இயக்குனர், ஆட வேண்டிய நடிகர்கள் என்பதோடு அவர் வட்டம் குறுகிவிடும். படப்பிடிப்பு நடக்கும் இடங்களை தவிர்த்து எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் அவரை மேடையிலோ, அல்லது பார்வையாளர் இடங்களிலோ பார்க்கவே முடியாது. முற்றிலுமாகவே தவிர்த்து விடும் குணம் கொண்டவர் தான்.

                    அப்படிப்பட்ட ஒருவர் பரமேஸ்வரனை ஏறிட்டு பார்த்திருந்தால் தான் அது அதிசயம் அல்லவா. ஆனால், இது புரியாத பரமேஸ்வரன் அவர் தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக எண்ணிக் கொண்டு, அவரே வலுவில் சென்று ரேகாவிடம் பேச்சை வளர்க்க, அதுவும் எடுபடவில்லை. ரேகாவுக்கு இயல்பாகவே பேச்சுக்கள் குறைவு தானே.

                    பொறுத்து பார்த்த பரமேஸ்வரன் ஒருநாள் தன் காதலையும் ரேகாவிடம் தெரிவித்துவிட, ஒரு நொடிக்கூட யோசிக்காத ரேகா உடனடியாக மறுத்து விட்டார். பரமேஸ்வரன் தன்னை புரிய வைக்க பல வழிகளில் முயன்றும் தோல்வியையே தழுவ, ரேகா திரும்பிக்கூட பார்ப்பதில்லை அவரை.

                    ஒருநிலைக்கு மேல் ரேகாவின் பெற்றோர்களை சந்தித்த பரமேஸ்வரன் தான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ரேகாவை பெண் கேட்க, அவரின் வீரதீர பராக்கிரமங்களை அறிந்தே இருந்ததால், வாசுதேவன் நிர்தாட்சண்யமாக மறுத்து அவரை திருப்பி அனுப்பிவிட்டார். கூடவே ரேகாவுக்கு வேறு இடத்தில மாப்பிள்ளையும் பார்த்துவிட, தனது தோல்வியை ஏற்கவே முடியவில்லை பரமேஸ்வரனால்.

                 ரேகாவின் போக்குவரத்தை கணநேரமும் தவறாமல் கவனித்துக் கொண்டே இருந்தவர், படப்பிடிப்பு முடிந்து தனியாக அவர் கிளம்பும் சமயம் அவரை வழி மறித்தார். ரேகா சற்று பயத்துடன் அவரை ஏறிட, “உன்னிடம் பேச வேண்டும்..” என்று அமைதியாக தொடங்கியவர், ரேகா மறுத்து விலகிச் செல்ல பார்க்கவும் அவரை காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்னையை விட்டே பறந்திருந்தார்.

                    ரேகா அவரின் இந்த அதிரடியில் அச்சம் கொண்டவராக, அதிர்ந்து அழுகையுடன் அமர்ந்துதிருக்க, மேகமலையில் இருந்த தனக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸிற்கு அவரை அழைத்து வந்திருந்தார் பரமேஸ்வரன். ரேகா காரிலிருந்து இறங்கவே முடியாது என்று நிற்க, அவரிடம் போராடி எப்படியோ அவரை வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

                     அப்போதும் வீட்டின் வாசலிலேயே நின்றுவிட்டவர் “எத்தனைப் பேரை இப்படி கூட்டிட்டு வந்து இருக்கீங்க… நான் எத்தனையாவது ஆள்…???” என்று கேள்வி கேட்க

                    “நீதான் முதலும், கடைசியும்… இது என் அம்மா வாழ்ந்த வீடு… அவங்களுக்கு பிறகு இங்கே வர முதல்பெண் நீதான்.. என் உயிர் இருக்கும் வரை கடைசிப்பெண்ணும் நீதான்…” என்று அவர் உறுதியான காதலுடன் கூற

                    “உங்க விஷயம் உங்களோட… ஆனா, நான் ஏன் இங்கே வரணும். அதுவும் நீங்க என்னை வலுக்கட்டாயமாக கடத்திட்டு வந்து இருக்கீங்க கிட்டத்தட்ட. உங்க அராஜகத்துக்கு நான் அடிபணியனுமா..” என்று அவர் கோபத்தில் முகம் சிவக்க

                      “நானே உனக்கு அடிமையா இருக்க ஆசைப்படறேன் ரேகா… நீ ஏன் எனக்கு அடிபணியனும்… உன்னை ராணி மாதிரி வாழ வைக்கத்தான் நான் ஆசைப்படறேன்..”

                      “இப்பவும் என் வீட்டுக்கு நாந்தான் ராணி… நீங்க என்னை புதுசா வாழ வைக்கிறது எல்லாம் வேண்டாம்… எனக்கு உங்களோட இந்த சினிமா வசனங்கள் மேல நம்பிக்கையும் இல்ல.” என்றவர் அப்படியே திரும்பி வெளியில் நடக்க

                      “நில்லு ரேகா…” என்று நொடியில் அவருக்கு முன்பாகஅ வந்து நின்றார் பரமேஸ்வரன். ரேகா அவரின்  தடுமாறியவராக இரண்டடி பின்னால் நகர்ந்து நிற்க, “நான் ராவணன் இல்ல…உன்னை கஷ்டப்படுத்துற எண்ணமும் எனக்கில்லை..” என்றார் பரமேஸ்வரன்.

                       “நீங்க ராவணன் இல்ல.. நான் இங்கே நின்று இப்படி பேசிக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி. ஆனால், நீங்க கிருஷ்ணர்… கேள்விப்பட்டு இருக்கேன்.. உங்க தாராள மனதையும், வள்ளல் குணத்தையும்… கர்ணனும், தர்மனும் தோற்றுப் போய்டுவாங்க ன்னு சீட்ல பேசிக்கிட்டாங்க…” என்றார் ரேகா..

                        “நீ நான் வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டு பேசிட்டு இருக்க ரேகா.. நான் மாறவே கூடாதா.. என்னை நம்பக்கூடாதா..” என்று அவர் விரக்தியுடன் கேட்டு நிற்க

                        “உங்களை நம்பி என் வாழ்க்கையை நான் பணயம் வைக்கணுமா… யார் நீங்க?? நான் எதுக்காக உங்களை நம்பனும். உங்களுக்கு என்மேல இருப்பது காதல் எல்லாம் இல்ல.. ஒருவேளை நான் உங்களுக்கு இசைந்து கொடுத்தால், உங்க காதல் காணாமலே போய்டும்….” என்று காட்டமாகவே ரேகா பேசிவிட

                       பதில் பேச முடியாமல் தளர்ந்து நின்றார் பரமேஸ்வரன். அவர் செய்த தவறுகளின் அளவு அந்த நிமிடம் மண்டையில் ஓங்கி அடித்தது. பிடித்த பெண்.. முதல் முறையாக உடல் இச்சை என்பதைத் தாண்டி மனதை தொட்டவள்.. ஆனால், அவள் வாயிலிருந்து தன்னை குறித்து வெளிப்பட்ட வார்த்தைகள் தாங்கவே முடியவில்லை மனிதரால்.

                       ஓய்ந்து அமர்ந்துவிட்டார் அந்த வீட்டின் படிகளில். ரேகாவுக்கு அவர் நிலை என்னவோ செய்ய, “நமக்குள்ள ஒத்துவராது… என்னை மறந்துட்டு உங்க வேலையை பாருங்க.. என்னையும் என் வேலையை பார்க்க விடுங்க..” என்றார் அமைதியாக

                       பரமேஸ்வரன் எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்தவர் “என்னால உன்னை விட முடியாது ரேகா.. நீ எனக்கானவள்.. நான் என்ன செய்தால் என்னை நம்ப முடியும்… நான் என்ன செய்யணும் உனக்காக.. சொல்லு… ” என்று அவள் கண்களை பார்த்து நிற்க, அந்த நிமிடம் ஏதோ அசைந்தது ரேகாவினுள்.

                     இதற்குள் ரேகாவின் கைகளும் பரமேஸ்வரனிடம் இருக்க, “என்னை கூட்டிட்டு போய் என் வீட்ல விடுங்க..” என்றார் அழுத்தமாக

                     “அது மட்டும் முடியாது ரேகா.. உன்னை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுத்துட்டு வேடிக்கை பார்க்க நான் ஆளில்லை..” என்றவர் மீண்டும் சிம்மமாக கர்ஜிக்க

                    “உங்க காதல் உண்மையானதா இருந்தால், என்னை கூட்டிட்டு போய் என் வீட்ல விடுங்க… இந்த நிமிஷமே…” என்று ரேகா அவர் கண்களை நேராக பார்த்து உரைக்க, அதில் இருந்த நேர்மை பரமேஸ்வரனை கட்டிப் போட்டது.

                       அந்த நிமிடமே “கார்ல ஏறு..” என்றுவிட்டவர் பின்கதவை திறந்துவிட்டு தான் ஓட்டுநர் இருக்கையில் அமர, பின்கதவை மூடி முன்னால் அவர் அருகில் அமர்ந்தார் ரேகா. ஆனால், அதற்குமேல் திரும்பி அவர் முகத்தைக் கூட பார்க்கவில்லை.

                       அந்த நள்ளிரவு நேரத்தில் அவர்களின் கார் மலையிலிருந்து கீழே இறங்க, “எனக்கு என் அம்மாவோட பேசணும்..” என்று ரேகா கூற, மலையிருந்து அவர்கள் வெளியே வரவும், ஒரு இடத்தில் நிறுத்தி தொலைபேசி வாயிலாக அவள் வீட்டை தொடர்பு கொண்டு, அவளை பேச வைக்க, பதறிப் போயிருந்தார் அவளின் அன்னை.

                      அவரை ஒருவழியாக சமாளித்து “பயமில்லை.. வந்து கொண்டிருக்கிறேன்..” என்று விவரம் கூறி வைத்தவள் கண்களில் கண்ணீர் வடிய, பார்த்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன் துடித்துப் போனார். அதன் பின்னும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் தான் அந்த பயண நேரம் கழிந்தது.

               முதல் நாள் மதியம் சென்னையிலிருந்து கிளம்பியவர்கள் அடுத்தநாள் முன்பகலில் வீடு வந்து சேர, அதுவும் பரமேஸ்வரனுடன் வந்து நின்ற மகளை பார்க்கவும், ரத்தம் கொதித்தது வாசுதேவனுக்கு. வந்த கோபத்திற்கு பரமேஸ்வரனை ஓங்கி அறைந்தே இருந்தார் வாசுதேவன்.

                  ரேகா தன் தந்தையின் செயலில் பயந்து போய் பரமேஸ்வரனை பார்க்க, முகத்தில் நிலைத்து விட்ட ஒரு சின்ன சிரிப்புடன் ரேகாவைத் தான் பார்த்திருந்தார் பரமேஸ்வரன். வாசுதேவன் மீண்டும் அவரை நெருங்க, தன் தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டவள் “கிளம்புங்க இங்கே இருந்து..” என்று அவரை அனுப்பி வைத்தாள்.

                இந்த விஷயம் அரசல்புரசலாக சிலருக்கு தெரிந்தாலும், தன் செல்வாக்கினால் ஒருவரையும் வாய் திறக்க விடாமல் செய்துவிட்டார் பரமேஸ்வரன்.

Advertisement