Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 29

                         ஜெய் “என் அம்மா விஷயம் இன்னொரு நாள் பேசுவோம் ஸ்ரீகா.. இப்ப நம்மைப் பத்தி பேசுவோம்..” என்று ஸ்ரீகாவிடம் கூற, அவனை வார்த்தைகளின்றி குற்றம் சாட்டியது அவள் பார்வை.

                         “நீங்க பேச வேண்டியதெல்லாம் பேசி முடிச்சிட்டீங்க ராம்…” என்று வெகு நிதானமாக கூறியவள், அவன் முகம் பார்க்க விரும்பாதவளாக திரும்பிக் கொண்டாள்.

                         ஜெய் அவளை உணர்ந்தவனாக “என்னை என்ன செய்ய சொல்ற ஸ்ரீ.. நான் சொன்னது உனக்கு பிடிக்கல சரி.. நீயே ஒரு வழி சொல்லு…”என்று அவளிடமே அவன் கேட்க

                       “நீங்க எதுவும் செய்ய வேண்டாம். உங்க அம்மாவுக்கு நல்ல மகனா மட்டும் இருங்க எப்போதும்… அட் தி சேம் டைம் என்னையும் அப்படி இருக்க விடுங்க.” என்றாள் கோபத்துடன்.

                        “அவங்க பேசினதுக்கு எனக்கு தண்டனையா ஸ்ரீகா… உனக்கு புரியவே இல்லையா… ” என்று ஜெய் அவளை இளக்க முயற்சிக்க

                         “நீங்க புரிஞ்சிகிட்டீங்களா… வந்த உடனே, என்ன பேசின ன்னு என்னை தானே கேட்டிங்க.. இதையே உங்க அம்மாகிட்ட  கேட்டு இருக்கலாம் இல்ல… நான் உங்களை காதலிக்கிறேன் தான்.. நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது தான்… ஆனா, அதே சமயம் என்னோட சுய கௌரவத்தை இழந்துட்டும் என்னால வாழ முடியாது…”

                       “நீங்க உங்க அம்மாவுக்காக அதை பலியா கேட்கறீங்க… எவ்ளோ சுலபமா சொல்றிங்க.. உன் டான்ஸை தள்ளி வை என்று. எனக்கு இது எவ்ளோ பிடிக்கும்ன்னு உங்களுக்கு தெரியாதா… அப்போ என்ன புரிதல் உங்களோடது…”

                       “உங்களை காதலிச்சால் என் அப்பா அம்மாவோட மரியாதை, என்னோட லட்சியம் எல்லாத்தையும் நான் மறந்திடணுமா.. நான் உங்க அம்மாவுக்கு மருமகளா வர நினைக்கிறன் ராம்.. உங்க வீட்டு வேலைக்காரியா இல்ல…. ஆனா, வேலைக்காரி கோடா பொறுத்துக்க மாட்டா உங்க அம்மாவோட பேச்சை..” என்று வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டாள் அவள்.

                   ஜெய் எதுவும் பேச முடியாமல் மௌனம் காக்க, தன்னை நிதானித்துக் கொண்டவள் “எனக்கு அவ்ளோ கோபம் வருது… அழுகையா வருது… பிடிக்கவே இல்ல.. நான் அழுதால் என் அம்மா, அப்பா, என் அண்ணங்க எல்லாம் அழுவாங்க.. நான் சின்னதா முகம் மாறினா கூட தெரிஞ்சிடும் அவங்களுக்கு… அவங்களை என்னால கஷ்டப்படுத்த முடியாது ராம்..”

                   “எனக்காக உங்க அம்மா பேசறதை எல்லாம் பொறுத்துக்க கூட செய்வாங்க தான். ஆனால், அவங்க ஏன் பொறுத்துக்கணும். என்னால அதை அனுமதிக்க முடியாது ராம்…”

                   “உங்க அம்மா மாறட்டும்.. அவங்க இப்படி ஒரு மனநிலையில் இருக்குறப்போ நாம காதல், கல்யாணம் ன்னு எது செய்தாலும் அது தப்பாகி தான் போகும்… அவங்க என்னை காயப்படுத்த நினைச்சு என் அம்மாவை மறுபடியும் ஏதாவது பேசிட்டா, நானே பொறுத்துப் போக மாட்டேன்..”

                  “கொஞ்ச நாள் போகட்டும். அவங்களுக்கான நேரத்தை கொடுப்போம்… அவங்க எனக்கான மரியாதையை கொடுக்கிற மனநிலைக்கு வரட்டும்.” என்றாள் ஒரே முடிவாக

                     “இதெல்லாம் நடக்கும் ன்னு தோணுதா உனக்கு… ” என்று ஜெய் கேட்டு வைக்க

                    “நடந்து ஆகணும் ன்னு விருப்பப்படறேன் ராம்… உங்க அம்மாவுக்காக அவ்ளோ பேசினீங்க… எனக்காக இதை செய்ங்களேன்… ஏன் முடியாதா உங்களால…” என்று கேட்டு அவனை திணறடித்தாள் ஸ்ரீகா.

                    ஜெய் எதுவும் பேசாமல் அவளை பார்த்திருக்க, “நீங்க எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் ஜெய். நமக்கு நாமதான்.. அப்புறம் என்ன.. கொஞ்ச நாள் காத்திருப்போம்.. உங்க அம்மா மாறட்டும்.. இல்லை, மரியாதை கொடுக்கிற மனநிலைக்கு வரட்டும்.. அப்போ கல்யாணம் செய்துப்போம்..” என்றாள் முடிவாக

                    “அம்மாவை நீ நினைக்கிற மாதிரி எல்லாம் சரிபண்ண முடியாது ஸ்ரீகா.. நிச்சயமா அவங்க மாறமாட்டாங்க..” என்று ஜெய் அன்னையை அறிந்தவனாக கூற

                      “அப்போ நாமும் கனவிலேயே குடும்பம் நடத்த பழகிக்க வேண்டியது தான்..” என்றாள் சலனமில்லாமல்

                       ஜெய் அயர்ச்சியுடன் அவளை ஏறிட, “இது சரியா வராது… இன்னைக்கு கல்யாணம் சரின்னு தோணலாம்.. ஆனால், நிச்சயமா தப்பு பண்ணிட்டோம் ன்னு நீங்க வருத்தப்படுவீங்க.. என்னால அதை தாங்க முடியாது..” என்றாள் அவனுக்காகவும் யோசித்து.

                       “என் அம்மா கடைசி வரைக்கும் மாறாமல் இருந்தால், நாமளும் இப்படியே இருந்திடலாமா..”

                      “நிச்சயமா ஜெய். என் நினைவுகளோடே மட்டுமே வாழ என்னால முடியும்..”

                     “ஏன்.. உன் வீட்ல பொண்ணுக்கு கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டாங்களா..”

                       “என் விருப்பத்தை மீறி திணிக்கமாட்டாங்க…நானும் அவங்க சொல்றதுக்கு தலையாட்டிட மாட்டேன்..”

                        “இங்கேயும் யாரும் தலையாட்டிட்டு வரல..” என்று கடுப்புடன் மொழிந்தான் ஜெய்.

                       ஸ்ரீகாவுக்கு அவன் வார்த்தைகள் புன்னகையை கொடுக்க, “சிரிக்காத..” என்றான் முதல்முறையாக.

                        “நான் ஏன் சிரிக்க கூடாது.. சிரிப்பேன்..” என்று அவள் இடக்காக கூற

                        அவள் கழுத்தை பற்றினான் ஜெய். “உன்னை காதலிச்சிருக்கவே கூடாது நான்.. ஒழுங்கா என் அப்பா சொல்ற பெண்ணை கட்டிட்டு போயிருக்கலாம்.. சீக்கிரமே மினிஸ்டர் ஆகி இருப்பேன்..” என்று அவன் புலம்ப

                        “இப்போ கூட ஒரு வாய்ப்பிருக்கு உங்களுக்கு.. ஒழுங்கா உங்க அம்மா பேச்சை கேளுங்க… பிரைம் மினிஸ்டர் பொண்ணைக் கூட பார்ப்பாங்க..” என்றாள் குத்தலாக

                         “தைரியமடி உனக்கு.. எங்க அம்மா சொல்ற மாதிரி என்னை மயக்கி வச்சிருக்க இல்ல.. அந்த திமிர்..” என்று ஜெய் முறைக்க

                        “ஆமா… திமிர்தான்.. உங்ககிட்ட கொடுத்துட்டு போறேன், உங்க மகனை… உங்களால முடிஞ்சதைப் பாருங்க ன்னு சொல்ற திமிர் தான் இது.. உங்க அம்மா ட்ரை பண்ணட்டுமே… நான் ஏன் குறுக்கே நிற்கணும்…” என்றாள் எகத்தாளமாக

                        “என்ன ஆனாலும் என் அம்மாவை விடவே மாட்டியா நீ..”

                       “என்ன ஆனாலும், உங்க அம்மாவுக்கு கூஜா தூக்குறதை விடவே மாட்டிங்களா நீங்க..” என்றாள் பதிலுக்கு..

                      “ஒரு பேச்சுக்கு கூட, பேசிவிட மாட்டியா ஸ்ரீ..” என்று ஜெய் விழிக்க

     

                      “ஒரு பேச்சுக்கு கூட உங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராதீங்க நீங்க.. இன்னும் நிறைய பேசுவேன்..” என்று கொதித்தாள் பெண்.

                        “கல்யாணம் முடிஞ்சா அடுத்த நாளே தனிக்குடித்தனம் போய்டணும்… அதுதான் அறிவார்ந்த செயல்..”என்று தனக்கு தானே அவன் பேசிக்கொள்ள

                        “நீங்க மட்டும் போவீங்களா..” என்று  எழுப்பினாள் ஸ்ரீகா.

                        “ஏன் இப்படி..” என்று ஒரு பார்வையை அவன் செலுத்த, “நான் ஏன் தனியாக போகணும். நான் கல்யாணம் முடிச்சு வந்து அதே வீட்ல தான் குடும்பம் நடத்துவேன். உங்க அம்மாவால என்னை ஏத்துக்க முடியாம போனால், அவங்க தனியாக போகட்டும்…” என்று மீண்டும் அவள் வாய் பேச

                         “போதும் ஸ்ரீ.. வாய் வலிக்க போகுது..”

                         “இது என் வாய் மேல இருக்க அக்கறையா.. இல்ல உங்க அம்மாவுக்கானதா..” என்று ஸ்ரீகா நக்கல் செய்ய

                          “உன் வாய் மேல உன்னைவிட எனக்குதான் அக்கறை அதிகம் ஸ்ரீகா…” என்றான் ஜெய். முகத்தில் தீவிரமான ஒரு பாவனைதான்.

                          “அது ஏன் அப்படி..” என்று ஸ்ரீகா மேற்பார்வையாக பார்த்து கேள்வியெழுப்ப

                       “உன்னைவிட எனக்குதான் அதிகமா யூஸ் ஆகும்… உன்னைவிட ஸ்வீட் உன் லிப்ஸ்…” என்று அவன் நாவால் தன் இதழ்களை வருடிக் காட்ட, முகம் சிவந்து போனது ஸ்ரீகாவுக்கு. முயன்று தன் முகத்தை சீராக்கியவள் “நான் என்ன பேசிட்டு இருக்கேன்..” என்று அவனை முறைக்க

                       “ஹேய் நீ என்ன உண்மையைச் சொன்னாலும் முறைக்கிற… நிஜமாகவே ஸ்வீட் தான் ஸ்ரீ..” என்று மீண்டும் அழுத்திக் கூற, அவன் எதிர்பார்த்தது போலவே, “சாப்பிட்டு பார்த்திங்களா நீங்க..” என்று வாயை விட்டாள் ஸ்ரீகா…

                         கூறியபின்பே வார்த்தையின் பொருள் உணர்ந்தவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொள்ள, “அதுக்கென்ன. இப்போவே டேஸ்ட் பண்ணி டெஸ்ட் பண்ணிடுவோம்..” என்று அவளை நெருங்கினான் அவன்.

                       “கொலை விழும் இப்போ..” என்று விரல் நீட்டி அவள் மிரட்ட, மீண்டும் முகத்தை சோகமாக்கி கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டான் ஜெய்.

                          “நான் இங்கே எவ்ளோ கோபமா பேசிட்டு இருக்கேன்..நீங்க கொஞ்சம் கூட அலட்டிக்காம ரொமான்ஸ் பண்ணுவிங்களா..” என்று ஸ்ரீகா கத்த

                          “அதுதான் சொல்லி முடிச்சு, என் வாழ்க்கையில விளக்கேத்தி வச்சாச்சே… வேற என்ன செய்ய முடியும்… எப்படியும் நீ சொல்றதுக்கு தலையாட்ட வேண்டியது தான..” என்றான் அவனும்.

                        “அதென்ன.. அப்படி ஒரு சலிப்பு உங்களுக்கு..” என்று அவள் முரண்ட

                        “என்ன பண்ண சொல்ற இப்போ… அதுதான் சொல்லிட்ட இல்ல.. என் அம்மா மரியாதை கொடுத்தால் தான் கல்யாணம் செய்துப்பேன் னு… அவ்ளோதானே.. கிளம்பு போ..போய் பொழப்பை பாரு… உன் டான்ஸ் வேற வெய்ட் பண்ணும்..” என்றான் நக்கலாக

                          “என் டான்ஸ் ப்ராக்டிஸ் பத்தி நீங்க பேசாதீங்க…நிச்சயமா பிழைப்பை தான் பார்க்க போறேன்… போங்க.” என்று அவள் புறப்பட, அசையாமல் அமர்ந்திருந்தான் அவன்.

                        “உங்க அம்மா சொல்றாங்க ன்னு எவளுக்காவது தாலி கட்ட பிளான் பண்ண… பர்ஸ்ட் நைட்க்கு முன்னாடியே கொலை பண்ணிடுவேன் உங்களை…” என்று மிரட்ட, சரியென்பதாய் தலையசைத்தான் ஜெய்.

                        அதில் கடுப்பானவள் நகராமல் நின்ற இடத்தில நின்று அவனை முறைக்க, முறைப்பு லேசான  கண்ணீராக பெருகியது. அவள் கண்ணீரைக் கண்டவன் எழுந்து அவள் அருகில் வர, விலகி நின்றாள் பெண்.

                        அவள் கைகளை பிடித்துக் கொண்டவன் “சீக்கிரமே உன் டான்ஸ் மண்ணாங்கட்டில உருப்படியா எதையாவது சாதிச்சிடு… நீ திரும்ப என்கிட்டே வரும்போது நான் தான் உனக்கு முதன்மையா இருக்கணும்.. உனக்கு ரொம்ப பிடிக்கிறதாலயே உன் டான்ஸ் பிடிக்கவே இல்ல எனக்கு…” என்று முறைப்புடன் அவளை கரைத்து கொண்டிருந்தான் அவன்.

                        அவளும் “சீக்கிரம் மினிஸ்டராகிடுங்க… டான்ஸ் மாஸ்டர்ல இருந்து மினிஸ்டர் பொண்டாட்டியா பிரமோஷன் வாங்கிக்கறேன்…” என்று கண்ணீர் நிறைந்த புன்னகையுடன் கூற, அவள் கைகளை அழுத்தி விடை கொடுத்தான் ஜெய்.

                     அவளுக்கு அந்த போதவில்லை போலும். அவனை ஒருமுறை அணைத்து விடுவித்தவள் சுற்றிலும் கவனித்து,யாருமில்லா தைரியத்தில் அவன் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தெடுத்தாள்… ஜெய் கனவு நிலையை அடைந்தவனாக நிற்க, “நான் கிளம்புறேன்.. அடிக்கடி என் முன்னாடி வராதீங்க, என்னை கூப்பிடாதிங்க… உங்களை பார்த்தால் என்னால் யோசிக்க முடியாது..” என்றாள் அப்போதும்.

                     “நம்பிட்டேன் கிளம்பு..” என்று அவன் விரட்ட, மீண்டும் கண்ணீர் அவள் விழிகளில்.

                     “உன்னை விடற ஐடியா எல்லாம் இல்ல… என் அம்மா ஓகே சொன்னா பார்ப்போம். இல்ல.. தூக்கிட்டு போய்டறேன்… போ..” என்று அவளை சிரிப்புடன் அனுப்பி வைத்தான் ஜெய். அன்றுதான் அவன் கடைசியாக ஸ்ரீகாவைப் பார்த்தது.

                       அவளை அனுப்பிவிட்ட பின்பும் கூட அவளின் அழுகையும், வலியும், வேதனையும் நிறைந்த அவள் முகமும் கண்ணிலாட, அன்னையின் மீது சொல்ல முடியாத ஆத்திரம் தான். இப்போது எது பேசினாலும் தவறாகிப் போகும் என்று தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.

                                             அன்று முழுவதும் வீட்டிற்கே செல்லாமல் சுற்றி திரிந்தவன் இரவு பதினோரு மணி அளவில் தன் வீட்டை அடைந்தான். வெளியில் அவன் தந்தையின் கார் நிற்க, அமைதியாக உள்ளே சென்று விடத் தான் நினைத்தான் அவனும். ஆனால், சீதா விட வேண்டுமே

                    அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தார் அவர். வீட்டின் போர்டிகோவில் அமர்ந்து இருந்தவர் மகன் வந்து நின்ற நிமிடமே தொடங்கி விட்டார்.

                      “என்ன நேரமாகுது ஜெய்.. வீட்டிற்கு வராமல் இத்தனை நேரம் வெளியில் என்ன வேலை… இதற்கு முன் இப்படி இல்லையே நீ…” என்று கண்டனமாக அவர் கடிந்து கொள்ள, அன்னையை ஆழ்ந்து பார்த்தான் ஜெய். சிறு வயது முதலே சற்றுக் கண்டிப்பானவர் தான் சீதா. ஆனால், அதேஅளவுக்கு பிள்ளைகளிடம் அன்பு கொண்டவர்.

                        தன் அன்னையால் இப்படி எல்லாம் பேச முடியும்.. என்பதே இப்போதுதான் தெரியும் ஜெயராம் கிருஷ்ணாவுக்கு. அதுவும் ஸ்ரீகாவை எத்தனை வேதனைப்படுத்தி இருக்கிறார் என்று நினைத்த கணம், அவளின் வேதனை நிறைந்த முகம் கண்ணில் மின்னியது அவனுக்கு.

                       தான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் மகன் நிற்க, “நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் ஜெய்.. நீ உன் இஷ்டத்துக்கு இப்படி அமைதியா நிற்கிற… என்ன நினைக்கிற நீ..”என்று அவர் சத்தமிட

                       “இங்கே தான் எல்லாரும் நினைச்சதை செய்யலாமேம்மா.. அப்புறம் எனக்கு மட்டும் என்ன தடை..” என்றான் மகன்.

                         “என்ன சொல்ற.. நேரடியா பேசு..” என்று அன்னையக அவர் பார்க்க

                         “ஸ்ரீகாகிட்ட என்ன பேசினீங்கம்மா..” என்றான் விலகல் நிறைந்திருந்தது அவன் குரலில்.

                          “அதுக்குள்ள சொல்லி அனுப்பிட்டாளா.. பரவாயில்ல சமத்து தான்…”என்று கேலிபோல் குத்தினார் அவர்.

                           “அவ சொல்லாம போனா, எனக்கு தெரியவே செய்யாதா…என்னம்மா நினைக்கிறீங்க நீங்க.. அப்படியே அவ என்கிட்டே சொன்னாலும் என்ன தப்பு. நான் அவளை காதலிக்கிறேன். கல்யாணம் செய்வதாய் நம்பிக்கை கொடுத்திருக்கேன். அப்போ என்கிட்டே சொல்லாம யார்கிட்ட சொல்வா..” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான் அவன்.

                           “கல்யாணமே ஆகல..அதுக்குள்ள நல்லா இருந்த உன்னை இப்படி மந்திரிச்சு விட்டாச்சு. இதற்குத்தான் பயப்படறேன் நான்.. நான் பயந்தது போலத்தான் எல்லாம் நடக்குது..” என்று சீதா தன் பிடியில் நிற்க, இவர்களின் சத்தத்தில் மதுபாலகிருஷ்ணன் வெளியே வந்திருந்தார்.

                         வந்தவர் மனைவியிடம் “என்ன நடக்குது இங்கே.. எதுக்காக வீட்டு வாசல்ல நின்னு சத்தம் போட்டுட்டு இருக்க அவனை..” என்று மனைவியை கேட்க

                        “உங்க மகன் தான் எவளோ ஒருத்திக்காக என்னை கேள்வி கேட்டுட்டு இருக்கான்.” என்று கணவரிடம் கண்ணீர் வடித்தார் சீதா…

                           “அவ யாரோ ஒருத்தி எல்லாம் இல்லம்மா.. இனி அப்படி பேசாதீங்க..” என்று கண்டிப்புடன் உரைத்தவன் தந்தையிடம் திரும்பினான்.

                          “நான் ஸ்ரீகாவை விரும்புறது அம்மாக்கு பிடிக்கலப்பா.. என்கிட்ட அதை நேரடியாகவே சொல்லிட்டாங்க.. ஆனா, அது போதவே இல்லை அவங்களுக்கு.. ஸ்ரீகாவை காலேஜ்ல பார்த்து, வாய்க்கு வந்தபடி பேசி முடிச்சாச்சு.. அவ குடும்பத்தையும் விட்டு வைக்கல…

                                       ஆனா, அவங்களுக்கு அது போதலப்பா..ஸ்ரீகாவை காலேஜ்க்கே போய் பார்த்து கண்டபடி பேசிட்டு வந்திருக்காங்க.. அவளை மட்டும் இல்லாம, அவ குடும்பத்தையே கேவலமா பேசி இருக்காங்க..” என்றான் இறுக்கமாக

                      மகனின் வேதனை ஒரு தகப்பனாக மதுவுக்கு புரிய, அவனின்  உணர்வுகள் தொலைத்த,  இறுகிய முகம் அவ்ருக்கும் வேதனையை கொடுத்தது.  “ஜெய்..” என்று அவர் மகனை நெருங்க, சட்டென விலகி நின்றான் ஜெய்.

                      “எனக்கு உங்களோட ஆறுதல் தேவையே இல்லப்பா… இவங்க இனி ஸ்ரீகா பக்கம் போகக்கூடாது. நான் ஸ்ரீகாவை காதலிக்கிறது தானே இவங்க கவலை. இனி அதற்கு அவசியமில்லை… இனி நானே போனாலும், அவ என்னை ஏத்துக்கறதா இல்ல… சோ, இவங்களும் அவளைத் தேடிப் போகக்கூடாது.”

                       “இன்னொரு முக்கியமான விஷயம்.. இனி என் கல்யாணத்தை பத்தி இந்த வீட்ல யாரும் பேசக்கூடாது… அப்படி என் கல்யாணப் பேச்சை யாரும் எடுத்தால், நிச்சயமா வீட்டை விட்டு கிளம்பிட்டே இருப்பேன்..” என்றவன் நிற்காமல் படிகளில் ஏறி தனதறைக்கு சென்றுவிட்டான்.

                         மது மனைவியை முடிந்த மட்டும் முறைக்க, “அவனோட நல்லதுக்கு தாங்க செஞ்சேன்.. கொஞ்ச நாள் போகட்டும்.. சரியாகிடுவான்..” என்று நம்பிக்கையாக உரைத்து அவர் வழியில் சென்றுவிட்டார் சீதா. ஆனால், மகன் அத்தனை எளிதானவன் இல்லை என்று மதுவுக்கு புரிந்தது.

                          இது எங்கே சென்று முடியுமோ” என்று மனைவி, மகனை நினைத்து கவலை கொண்டதைத் தவிர, மகனின் பேச்சை மீறி அவரும் ஸ்ரீகாவைத் தேடிச் செல்லவே இல்லை. அடுத்த நான்கு ஆண்டுகள் இருவரின் வாழ்விலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிப்போக, ஓட்டம்.. ஓட்டம்… ஓட்டம் தான் இருவருக்குமே…

                           இருவருமே அவரவர் விரும்பிய இலட்சியத்தை எட்டிப் பிடித்திருக்க, இதோ தள்ளி வைத்த தங்கள் காதலையும் கைக்கொள்ள முடிவு செய்துவிட்டனர்.

                          சீதாவை சமாளிப்பது என்பதே பெரிய இலக்காக அமைந்து போனது ஜெயராமுக்கு.. சீதாவும் பல வழிகளில் முயற்சிக்க, இறுதியில் ஒருநாள் சொன்னது போலவே மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு அவன் டெல்லி புறப்பட்ட பின்புதான் சற்று அடங்கி வழிக்கு வந்திருக்கிறார் அன்னை.

                         மகனைப் பிரிந்திருக்க முடியாமல் அவர் மருமகளை வரவேற்க தயாராகி இருக்க, அவரை வைத்து செய்யும் முடிவுடன் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறாள் ஸ்ரீகா. இவர்கள் இருவரின் இடையில் மாட்டிக் கொண்டு என்னவாகப் போகிறானோ ஜெய்ராம் கிருஷ்ணா.

Advertisement