Advertisement

அவளின் பதிலில் சீதாவுக்கு தான் நெஞ்சடைத்தது. “எத்தனை தைரியமாக என்னிடமே சொல்கிறாள்..” என்று கொதித்தவர் “ஏய்..” என்று விரல் நீட்டி மிரட்ட, எந்த எதிர்வினையும் இல்லாமல் நின்றாள் ஸ்ரீகா.

                      அவரே தொடர்ந்து, “என்ன.. உன் அம்மா திட்டம் போட்டுக் கொடுத்தாளா.. பெரிய பணக்கார வீட்டுப் பையனா பார்க்க சொன்னாளா… என தைரியம் உனக்கு.. என் பையனை மயக்கி வச்சிருக்கேன் ன்னு என்கிட்டயே சொல்ற..” என்று நிதானமிழந்து அவர்சத்தமிட

                        “இந்த திட்டம் போடற பழக்கம் எல்லாம் என் அம்மாவுக்கு வராது. ஆனா, உங்களுக்கு அது ரொம்ப பழக்கம் போல.. பார்த்தாலே தெரியுது. அதுவுமில்லாம திட்டம் போட்டு பணக்காரரை காதலிச்சு ஓடிவந்தவங்க தானே நீங்களும். நீங்க என் அம்மாவைப் பேசலாமா??” என்று சிரிப்புடன் ஸ்ரீகா பதிலடிக் கொடுக்க

                   அவளை அறையவே கையை உயர்த்திவிட்டார் சீதா. அவர் கையை பிடித்து தடுத்தவள் “சொன்னதுக்கே வலிக்குதே.. இப்படிதான இருக்கும் மற்றவர்களுக்கும்… ஆனா, மினிஸ்டர் பாவம்… அப்படி ஒரு நல்ல மனுஷனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டி… கஷ்டம்தான்…” என்று அவர் கையை கீழே இறக்கியவள்

                     “பணத்தை வச்சு எங்களை அளவிட வேண்டாம்… அதோட நீங்க சொன்னிங்களே கௌரவம்.. உங்களைவிட நிச்சயம் மரியாதையான குடும்பம் தான் என்னோடது. ஜெய்யோட அம்மா ங்கிறதால மட்டும்தான் இன்னும் நீங்க பேசிட்டு இருக்கீங்க… இதே வேற யாராவது இருந்தால் தெரியும்..”என்று விரல் நீட்டி மிரட்டினாள் ஸ்ரீகா.

                      “உங்களுக்கு நான் மருமளா வர வேண்டாம் ன்னா, உங்க மகன்கிட்ட சொல்லுங்க.. என்னைத் தேடி வர வேண்டாம் ன்னு சொல்லுங்க.. அதைவிட்டு இங்கே வந்து இப்படி என்னை கூப்பிட்டு வச்சு அதிகாரம் பண்ண முயற்சிக்க கூடாது.. எல்லா நேரமும் இப்படியே பேசிட்டு இருக்கமாட்டேன் நானும்…”

                     “மது அங்கிள் மனைவி நீங்க.. உங்க தவறுகள் அவரையும் அதே அளவுக்கு பாதிக்கும். பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் முன்ன, நீங்க உங்க கணவரோட  மரியாதையைப் பற்றி நினைச்சு பாருங்க… உங்க தகுதிக்கு இது நல்லதே இல்லை..” என்று மரியாதையாகவே பதில் கொடுத்து கிளம்பி இருந்தாள் அவள்.

                           அங்கிருந்து விலகி நெடுந்தூரம் வந்த பிறகும் கூட, சீதாலட்சுமியின் வார்த்தைகளின் தாக்கம் மீதமிருந்தது ஸ்ரீகாவிடம். “என்னென்ன பேசிவிட்டார்…” என்று தவித்து போனது நெஞ்சம். அமைதியான முகத்துடன் வந்து நின்ற அவரிடம் இப்படி ஒரு கேவலமான மனம் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அவள்.

                           அதுவும் ரேகாவைப் பற்றி பேசியதெல்லாம் இன்னுமே ஆத்திரத்தை கிளறிவிட, யார் கையில் கிடைத்தாலும், கிழித்தெறியும் வேகத்தில் தான் இருந்தாள் ஸ்ரீகா. அவள் வேகத்திற்கு இலக்காக அன்று மாலையே வந்து நின்றான் ஜெய்ராம் கிருஷ்ணா..

                         அவன் நண்பனின் வழியாக, அவன் அன்னை கல்லூரிக்கு வந்து சென்றது தெரியவர, இதோ ஸ்ரீகாவைத் தேடி வந்திருந்தான் அவன். தன் அன்னையை அறிந்தவனாக “என்ன சொன்னாங்க..” என்று தான் கேட்டான் முதலில்.

                         ஸ்ரீகா பதில் எதுவும் கூறாமல் கண்ணீர் விட, அவளுக்கு மேலாகத் துடித்துப் போனான் ஜெய். “ஹேய் ஸ்ரீ.. என்னடா..” என்று முதல் முறையாக அவளை நெருங்கியவன் லேசாக அவளை அணைத்து கொள்ள, அவன் நெஞ்சில் முகம் பதித்து சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, விலகினாள் அவள்.

                            ஜெய் அவளை அங்கிருந்த இருக்கையில் அமர்த்தியவன் “என்ன ஆச்சு.. என்ன சொன்னாங்க.. முழுசா சொல்லு..” என்று அவள் கையை பிடித்துக் கொள்ள

                           அவன் அன்னை பேசியது, அதற்கு தான் பதில் பேசியது என்று அத்தனையையும் கூறி முடித்தாள் ஸ்ரீகா. கூடவே “என் அம்மாவைப் பற்றி பேச இவங்க யாரு.. இவங்களுக்கு என்ன தெரியும் என் அம்மாவை… இவங்களை விட எவ்வளவோ நல்லவங்க அவங்க… அவங்களை போய் என்னெல்லாம் பேசிட்டாங்க…” என்று அவன் மீதும் பாய்ந்தது அவள் கோபம்.

                           ஜெய் என்ன சொல்ல முடியும். அவளுக்கும் பேச முடியாமல், அன்னையையும் கடிந்து கொள்ள முடியாமல் திண்டாடும் நிலை அவனுடையது. ஸ்ரீகா வெகுவாக காயப்பட்டு போயிருப்பது புரிந்தாலும், அவள் பார்வையில் அன்னை கீழிறங்கிப் போனதை ஏற்க முடியவில்லை அவனால்.

                        “இவங்களுக்கு ஏன் இந்த வேலை..” என்று மனதிற்குள் தான் நொந்து கொள்ள முடிந்தது. ஸ்ரீகாவை இயல்பாக்கும் வழி அறியாமல், “தெரியாம ஏதோ பேசி இருப்பாங்க ஸ்ரீகா.. விட்டுடேன்..” என்று அன்னையின் செயலுக்கு அவன் சமாதானம் கூறியது தான் வினையாகிப் போனது.

                       “உங்க அம்மா தெரியாம பேசினாங்களா… நீங்க வேற ராம்.. அவங்க தெளிவா இருக்காங்க… இப்படி ஒரு லேடியை நான் பார்த்ததே இல்லை என் வாழ்க்கையில..” என்றவள்

                       “எப்படித்தான் முகத்தை அமைதியா வச்சுட்டு, வாயைத் திறந்தா விஷத்தை கக்க முடியுதோ..” என்றுவிட

                         “போதும் ஸ்ரீகா..” என்று அவளை இடையிட்டான் ஜெய். ஸ்ரீகா இப்போது அழுத்தமாக அவனைப் பார்க்க

                       “அவங்க பேசினது தப்பாகவே இருக்கட்டும்.. அவங்க என்னோட அம்மா..அதை மனசுல வச்சுக்கோ.. அவங்க அளவுக்கு நீ பேச வேண்டாம்… என்னைக் கேட்டால், இதோட இதை விட்டுடு.. அதுதான் நமக்கு நல்லது..” என்றான் அவன்.

                          “எது நல்லது… உங்க அம்மா என்ன பேசினாலும், நான் வாங்கிட்டு அமைதியா நிற்பதா… என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தையே உங்க அம்மா பேசினாலும் நான் கேட்டுட்டு நிற்கணுமா..” என்று கூர்மையாக அவள் கேட்க

                          “நீ கேட்டுட்டு தான் இருந்தாயா.. அதுதான் பதிலுக்கு நீயும் பேசி முடிச்சுட்ட இல்ல.. இன்னும் என்ன..” என்றான் அவன்.. அவனுக்கும் லேசாக கோபம் வந்திருந்தது இப்போது.

                          “ஓஹ்.. ங்க அம்மாவை எதிர்த்து நான் பேசினது தான் தப்பா தெரியுதா உங்களுக்கு..” என்று ஏளனமாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

                           “ஆமா.. தப்புதான்.. பெரியவங்க அவங்க.. தப்பாகவே பேசி இருக்கட்டுமே.. கொஞ்சம் பொறுமையா போகக்கூடாதா… காலத்துக்கும் ஒண்ணா இருக்க வேண்டிய உறவு உங்களோடது.. உன் அம்மாவை பேசினதுக்கு அவங்க நியாயம் கேட்டு இருந்தால் வேற… ஆனா, நீ அவங்களை பேசுறது எப்படி சரியாகும்..” என்று நியாயம் பேசினான் அவன்.

                        “என்னைப் பொறுத்தவரைக்கும் நான் பேசினது தப்பில்ல ராம். அதோட உங்க அம்மா பேசினதுக்கு தான் நான் பதில் கொடுத்தேன்… என்னால மனசுல ஒண்ணை வச்சுட்டு, வெளியே ஒன்னு பேச முடியாது..” என்றாள் கோபமாக

                         “நாம ரெண்டு பேர்தானே பேசிட்டு இருக்கோம்.. எதுக்காக இப்படி கத்திட்டு இருக்க..” என்று எரிச்சலான குரலில் ஜெய் வினவ

                          “எப்போதுமே என் குரல் இப்படிதான் ராம். இத்தனை நாள் நான் கத்திட்டு இருப்பதா தோணவே இல்லையே உங்களுக்கு..” என்று அவள் குத்தலாக கேட்டாள் ஸ்ரீகா.

                          ஜெய்ராம் மௌனம் சாதிக்க, “பரவாயில்லை… என்னோட சத்தம் நல்லதுதான்… பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு இப்படி மௌனமா இருந்து தப்பிப்பதை விட, சத்தமா பதில் கொடுக்கிறது மேல் இல்லையா..” என்றாள் மேலும்.

                           ஜெய் அவள் குத்தலில் நிமிர்ந்தவன் “என்ன சொல்ல ட்ரை பண்ற நீ… என்ன தப்பிக்கிறேன் நான்..” என்று அழுத்தமாக கேட்க,

                           “அது உங்களுக்குதான் தெரியணும்… எனக்கு டான்ஸ் க்ளாஸ்க்கு டைம் ஆச்சு.. நான் கிளம்புறேன்..” என்று எழுந்து கொண்டாள் ஸ்ரீகா.

                             அவள் கையை எழவிடாமல் பற்றி இறுக்கியவன் “எனக்கு பதில் சொல்லிட்டு போடி..”என்றான் ஆத்திரமாக

                          அவன் “டி..” என்றதிலாத்திரம் இன்னும் மிகுந்தது அவளுக்கு.. பாசமாகவோ, விளையாட்டாகவோ “டி..” என்பது வேறு. ஆனால், கோபத்தில் அவன் வார்த்தையை விட, ஸ்ரீகாவால் ஏற்க முடியவில்லை.

                          அவள் “இப்படி பண்ணாதீங்க ராம்… உங்களுக்கு நான் சொல்றதை கேட்கிற பொறுமை இல்ல… பிறகு பேசுவோம்.. என் கையை விடுங்க..” என்றாள் நிதானமாக

                          ஜெய் தன் பிடியில் இன்னும் அழுத்தம் கூட்ட, ஸ்ரீகா இன்னுமின்னும் இறுகினாள் தனக்குள். அவன் கையை விடமாட்டான் என்று புரிய, “என்ன கேட்கணும்.. கேளுங்க..” என்றாள் இறுகிய குரலில். எதையும் எதிர்கொள்ளும் ஒரு அலட்சியம் குடி கொண்டது அவள் வார்த்தைகளில்.

                             ஜெய் “எதுல இருந்து தப்பிக்க நினைக்கிறேன் நான்.. ” என்று மீண்டும் அவள் வார்த்தையை நினைவூட்ட

                             “நான் பேசிய ஒரு வார்த்தையை விட முடியலையே உங்களால.. ஆனா, உங்க அம்மா பேசின மொத்தத்தையும் நான் விட்டுடனும் ன்னு எப்படி எதிர்பார்க்கிறிங்க..” என்றாள் ஸ்ரீகா

                             “இப்போ பேச்சு உன்னையும் என்னையும் பற்றி தான் ஸ்ரீகா..” என்று மீண்டும் அவன் நினைவுபடுத்த

                           “அப்படியா.. உங்களுக்கும், எனக்கும் இடையில உங்க அம்மா வந்து ரொம்ப நேரமாச்சு ராம். “

                           “அவங்களை பத்தி பேச வேண்டாம் ஸ்ரீகா.. உன் லைப் நாந்தான்.. என்னை பத்தி மட்டும் பேசு..”

                          “இதையே அவுங்க அம்மாகிட்ட சொல்லுங்க ராம்.. உங்களோட வாழ நினைச்சது நான் தான்.. அதுக்கான தண்டனையை எனக்கு கொடுக்க சொல்லுங்க.. என் குடும்பத்தை இழுக்க வேண்டாம்…”

                            “அதோட, நீங்களும் நானும் மட்டும் வாழப் போறது இல்ல.. உங்க குடும்பத்தோட தான் நான் வாழ்ந்தாகணும்.. எனக்கான மரியாதையை உங்க அம்மா கொடுத்தே ஆகணும்..” என்று வாதிட்டாள் அவள்.

                          “நாம லவ் பண்றது பிடிக்காத கோபத்துல இருக்காங்க ஸ்ரீ அவங்க.. கொஞ்ச நாள் போனா அவங்களே சரியாகிடுவாங்க.. நம்மை புரிஞ்சிப்பாங்க.. கொஞ்சம் பொறுமையா இரேன்..” என்று அவன் எடுத்துரைக்க

                         “உங்க அம்மா புரிஞ்சிக்கிற வரைக்கும் என்னால வதைப்பட முடியாது ராம்…” என்றாள் ஸ்ரீகா.

                         “ஒஹ்.. அப்போ வேற என்ன பண்ணலாம்.. என்ன முடிவுல இருக்க நீ.. சொல்லிடேன்..” என்றான் அவனும் நக்கலாக

                          “என்னோட முடிவு எதுவுமில்லை.. நீங்கதான் முடிவு செய்யணும்…” ஸ்ரீகா.

                          “கொஞ்ச நாளைக்கு இந்த டான்ஸ், சினிமா இதை விட்டு ஒதுங்கி நில்லு.. நான் என் அம்மாவை சமாளிக்கிறேன்.. நம்ம கல்யாணம் முடிஞ்சதும், நீ உன் கேரியரை பார்க்கலாம்…” என்றான் முடிவாக.. சொல்லும்போதே அவனுக்கு பதில் தெரிந்து தான் இருந்தது.. ஆனாலும், கேட்டு வைத்தான் அவன்.

                             அவன் எதிர்பார்த்தது போலவே, “என் கனவை காவு கேட்கிற காதல் வேண்டாம் எனக்கு… என் கல்யாணத்தை விட, என் கனவு பெருசு.. உங்களுக்காக என்னால அதை தூக்கி எறிய முடியாது ராம்…நீங்க உங்க அம்மாவுக்கு ஏற்ற மருமகளை பாருங்க..” என்றவள் அவன் கையில் இருந்த தன் கையை உருவிக் கொண்டு எழுந்து கொள்ள முற்பட, அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து இருந்தான் ஜெய்.

                                           ஸ்ரீகா அவன் அணைப்பில் நெகிழாமல் நிற்க, அவள் நெற்றியில் முத்தமிட்டான் அவன்.

                           ஸ்ரீகா இப்போது அவனை முறைக்க, அவளை அமர வைத்து அவள் அருகில் அமர்ந்தான் ஜெய். ஸ்ரீகா அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து எங்கோ பார்க்க, “உனக்கு வலி கொடுக்கும்ன்னு தெரிஞ்சுதான் கேட்டேன் ஸ்ரீகா… “என்று அவள் கவனத்தை தன்புறம் திருப்பினான் ஜெய்.

                         ஸ்ரீகா அவனுக்கு பதில் கொடுக்காமல் இருக்க, அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் அவன். அவனை முறைத்து கையை விடுவித்துக் கொண்டவள் “காலேஜ்ல இருக்கோம்.. “என்று கோபமாக முணுமுணுக்க

                         அவள் தடையை பிடித்து தன் முகம் பார்க்க செய்தவன் “இப்படியே இரு.. நான் பேசணும்.. ” என்றவனை “என்ன செய்யலாம்..” என்று ஸ்ரீகா முறைக்க

                          “என் அம்மா விஷயம் இன்னொரு நாள் பேசுவோம் ஸ்ரீகா… இப்போ நம்மைப் பத்தி பேசுவோம்…” என்றான் ஜெய்.

Advertisement