Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 28

                          ஜெய்- ஸ்ரீகாவின் கல்லூரி வாழ்க்கை அதன் முடிவை எட்டியிருக்க, வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பதில் சற்றே தீவிரமானார்கள் இருவரும். சர்வா,அறிவன், துருவன் மூவரும் கல்லூரியை முடித்து, ஏற்கனவே தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, ஸ்ரீகா விஷயத்தில் அதுவும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது அவளுக்கு.

                          சர்வா, துருவன் இருவரும் அவர்களின் இசைப்பயணத்தை தொடங்கி இருக்க, சமூக வலைத்தளங்கள் வழியாக இருவருமே பிரபலமாகி இருந்தனர். துருவன் தனது முதல் படத்திற்கான வாய்ப்பையும் பெற்று இருக்க, அதற்கான வேலைகளில் தீவிரமாகி இருந்தான் அவன்.

                          அவனது வெற்றி ஸ்ரீகாவை தொற்றிக் கொள்ள,கல்லூரி நேரம் போக மீத நேரங்கள் மொத்தமும் ஸ்டுடியோவில் தான். அன்னை பணியாற்றிய படங்களில் சில பாடல்களுக்கு அவளே நடனம் அமைத்து கொடுப்பது, மேடை நடனங்களை வழிநடத்துவது என்று அதில் ஆர்வமாகி அவள் அலைந்து கொண்டிருந்த நேரம் அது.

                       அவள் அவள் துறையில் வளர்ந்த அதே நேரம் ஜெய் தனது தந்தையுடன் அரசியல் விஷயங்களில் ஈடுபட தொடங்கி இருந்தான். அவனது தெளிவான திட்டமிடல் எப்போதும் போல அங்கேயும் கைகொடுத்தது அவனுக்கு. தந்தையின் அனுமதியுடன் களத்திற்கு செல்ல தொடங்கி இருந்தான் அவன்.

                     ஏழைகளுக்கான உணவு, இருப்பிட வசதி, மாணவர்களின் படிப்பு, மருத்துவ முகாம்கள், என்று சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவன் செயல்பட, அவன் எதிர்பார்த்தது போலவே மீடியாக்களில் பரிட்சையமாக தொடங்கி இருந்தது அவன் முகம்.

                    மதுபாலகிருஷ்ணனுக்கு நெருக்கமான சில அரசியல் புள்ளிகளின் கண்களிலும் அந்த இருபத்தி ஐந்து  வயது இளைஞன் விழுந்து வைக்க,அவனின் அரசியல் எதிர்காலம் விவாதப் பொருளானது. தங்களுக்குள் பேசி முடித்து அவன் எதிர்காலத்தை கணித்து கணக்கு போட்டவர்களில் சிலர் மதுவை நெருங்க, அவன் அரசியலில் நுழைவதற்கு முன்பாகவே அவனின் திருமணப்பேச்சு தொடங்கி இருந்தது.

                    அதிலும் மதுவின் தொழில்முறை நண்பர் ஒருவர் மதுவை மிகவும் நெருக்க, மறுக்க மனமில்லை அவருக்கு. அந்த பெண்ணையும் மதுவுக்கு நன்றாக தெரிந்திருக்க, ஜெய்க்கு பொருத்தமாக இருப்பாள் என்ற எண்ணம் தான். தனது மனைவியிடம் கூறியவர் அவரும் சம்மதம் தெரிவிக்கவே தன் மகனிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி இருந்தார்.

                    முதலில் மகன் வயதைக் கூறி மறுக்க, ஏற்றுக் கொள்ளவில்லை தந்தை. அடுத்து அவன் அரசியலை காரணம் காட்ட, அந்த பெண்ணால் அரசியலில் பல புள்ளிகள் முன்னேற வாய்ப்புண்டு என்று ஆசைகாட்டினார் தந்தை. அவரும் மகனின் விருப்பம் அறிந்து தானே  பெண்ணை தேர்ந்தெடுத்திருந்தார். அந்த தொழிற்புள்ளிக்கு மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்க, தன் மகனுக்கு பயன்படட்டுமே என்ற அரசியல் கணக்கும் பார்த்திருந்தார் மது.

                    எல்லா வழியிலும் தந்தை நெருக்க, வேறு வழி இல்லாமல் தன் காதலை அவர்களிடம் கூறி இருந்தான் மகன். மதுவுக்கு மகனின் காதலில் லேசான வருத்தம் தான். அவர் பார்த்திருக்கும் பெண்ணை மணந்து கொண்டால், மகனின் வாழ்க்கை வளமாகி விடும் என்பது அவர் அளவில் நிச்சயம் தான். ஆனால், விருப்பமில்லை என்பவனை கட்டாயப்படுத்தவா முடியும்… என்று பெரிய மனிதராக சிந்தித்தவர் மகனின் காதலுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

                    ஆனால், அவர் மனைவிக்கு அப்படியான எண்ணம் ஏதுமில்லை போலும். மகனின் வாழ்க்கையும், அவனின் எதிர்காலமும் பெரிதாக தெரிந்தது சீதாவுக்கு. அதன்பொருட்டு மகனிடம் அவர் வாதிட, எதற்கும் அசையாமல் காதலில் உறுதியாக நின்றான் மகன்.

                     அவன் உறுதியில் சீதா கொஞ்சம் மனமிறங்கியவராக, பெண்ணைப் பற்றி விசாரிக்க, ஸ்ரீகாவைப் பற்றியும், அவளின் குடும்பம் பற்றியும் கூறியவன் ஸ்ரீகாவின் புகைப்படத்தையும் அன்னைக்கு காண்பிக்க, “சினிமாக்காரங்களா… “என்று முதல் வார்த்தையிலே தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார் சீதா.

                      “இது வேண்டாம் ஜெய்.. நம்ம குடும்பத்திற்கு இதெல்லாம் ஒத்துவராது.. உன் அப்பாவோட பேருக்கு உன்னால எந்த ஆபத்தும் வரக்கூடாது ஜெய். இந்த சினிமா, டான்ஸ் இதெல்லாம் வாழ்க்கைக்கு சரியா வராது. அவங்க பழக்கவழக்கம், நடைமுறை எல்லாம் வேறமாதிரி இருக்கும்… நமக்கு வேண்டாம்.. நீ அவளை மறந்திடு..” என்று ஒரே பிடியாக மறுத்தார் சீதா.

                      இதில் தீக்ஷி அண்ணனுக்கு பரிந்து கொண்டு அன்னையிடம் பேச முயற்சிக்க, கன்னம் பழுத்தது அவளுக்கு. “எல்லாத்துக்கும் காரணமே நீதான்.. உன்னை வச்சு தான் உன் அண்ணனுக்கு வலை விரிச்சிருக்கா அந்த நாட்டியக்காரி.. நீயும் பைத்தியம் மாதிரி அவளுக்கு பேசிட்டு இருக்க.. கொன்னுடுவேன்.. சின்னப்பிள்ளையா லட்சணமா நடந்துக்கப் பாரு..” என்று மகளையும் மிரட்டி வைத்தார் சீதா.

                       அவர் கோபமாக இருக்கிறார்.. பொறுமையாக பேசுவோம் என்று ஜெய் நினைத்திருக்க,அதற்குள் அவனுக்கு வேறு பெண் பார்க்கும் வேலையிலும் இறங்கி இருந்தார் சீதா. இது எதுவுமே மதுவுக்கு தெரியாமல் அவர் நிகழ்த்திக் கொண்டது தான் அவரின் சாமர்த்தியம்.

                        கணவருக்கு தெரியாமல், மகனிடம் சில பெண்களின் புகைப்படங்களை நீட்டி, அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்லி சீதா நிற்க, அன்னையை எதிர்த்து பேச முடியாமல் மௌனமாக தன் மறுப்பை வெளியிட்டுக் கொண்டிருந்தான் ஜெய்.

                            ஆனால், அவனது மௌனத்திற்கெல்லாம் மதிப்பு கொடுப்பவரா சீதா.. மகனின் உறுதியை கண்டு கொண்டவர் அடுத்ததாக வந்து நின்றது ஸ்ரீகாவிடம். அவளின் நடவடிக்கைகள் அனைத்தையும் தனக்கு நெருக்கமான ஒருவரை வைத்து அவர் ஆராய்ந்து முடிக்க, அவளைப்பற்றி கேள்விப்பட்ட விஷயங்களும் ஏற்புடையதாக இல்லை அவருக்கு.

                            அவளின் திரைத்துறை கனவும், அவள் பணியாற்றிக் கொண்டிருந்த நடனப்பள்ளியும் இன்னும் சஞ்சலத்தைக் கொடுக்க, மகனை அசைக்க முடியாமல், ஸ்ரீகாவை அசைத்துப் பார்க்கும் முடிவோடு அவள் கல்லூரியை அடைந்தார் சீதா.

                            கல்லூரி முதல்வரின் அறையில் அமர்ந்து கொண்டு, தன் அதிகாரத்தால் ஸ்ரீகாவை அங்கேயே வரவைத்தார் அவர். தன் திட்டத்தின் முதல்படியாக ஏற்கனவே தீக்ஷியை கல்லூரிக்கு செல்ல விடாமல் தடுத்து விட்டு தான் கிளம்பி இருந்தார் அவர்.

                           கல்லூரி முதல்வர் அமைச்சரின் மனைவிக்கு நெருக்கமான தோழியாகிவிடும் எண்ணத்தில் அவர் கேட்டதை செய்து கொடுக்க, அவரையும் வெளியே அனுப்பிவிட்டுதான் ஸ்ரீகாவிடம் பேசத் தொடங்கினார் சீதா.

                          ஸ்ரீகாவுக்கு இப்படி வந்து நிற்பதே பிடித்தமில்லை. அதுவும் சீதாவின் உணர்ச்சிகளற்ற முகம் வரப்போவதை உணர்த்திவிட, அதில் இன்னமும் மனம் சோர்ந்தது. ஜெய்யின் மீது அளவு கடந்த நம்பிக்கை இருக்க, “பேசுவதைக் கேட்டு விட்டு போவோம்..” என்ற எண்ணத்தில் தான் நின்றாள் அவள்.

                         ஆனால், சீதா அவள் எண்ணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராக இருந்தார்… முதல் வார்த்தையிலே அவளை அடித்துப் போடும் வேகத்தில் இருந்தார் அவர்.

                          “உன் அம்மா அந்தகாலத்துல பெரிய நாட்டியக்காரியாமே… அவங்க நாட்டியத்துல மயங்கிதான் உன் அப்பா உன் அம்மாவை கல்யாணம் பண்ணாராம்.. பெரிய ஆள்தான்..” என்று போலியாக அவர் சிலாகிக்க, கொதித்து கொண்டு வந்தது ஸ்ரீகாவுக்கு.

                          “என் அம்மா இப்பவும் பெரிய ஆள் தான். எத்தனைப் பேருக்கு அவங்க குருவா இருக்காங்க தெரியுமா.. என் அப்பா அம்மாவோட காதல்.. அவங்க பிள்ளைகளான எங்களுக்கு தெரியும் ஆன்ட்டி… எங்களைவிட வேற யார் சொல்ல முடியும்..” என்று தன்னை அடக்கி கொண்டு பதில் கொடுத்தாள் அவள்.

                             “அதுவும் சரிதான்.. நீயென்ன பொய்யா சொல்லிடப் போற.. உன் குடும்பமே நாட்டியக்காரங்க தானா..” என்று அவர் அடுத்த கேள்வியை வீச

                              “ஆமா.. நாங்க நாட்டியம் ஆடறவங்க தான்.. அதுல உங்களுக்கு ரொம்ப மனவருத்தம் போலவே… “

                             “ஊர்ல யார் எப்படிப்போனால் எனக்கு என்ன.. என் மகன் வாழ்க்கையை நாசம் பண்ண நினைக்கிறது தானே, எனக்கு தலைவலியா இருக்கு..” என்றார் அவர்.

                             “நாசம் பண்ணத்தான் ன்னு நீங்களே முடிவு பண்ணிட்டிங்களா.. ஏன் நாங்க நல்லா வாழ முடியாதா..”

                         “நிச்சயமா முடியாது… உன்னை மாதிரி சினிமாக்காரியை எல்லாம் என் வீட்டுக்குள்ள விட முடியாது. எங்களுக்கு என்று ஒரு கௌரவம் இருக்கு.. உன்னைமாதிரி ஒருத்தியால அதெல்லாம் காப்பாத்த முடியாது. அதோட என் மகனோட அரசியல் வாழ்க்கைக்கும் நீ ரைட் சாய்ஸ் கிடையாது…” என்றார் அழுத்தமாக

                        “இவர் எப்படி ஜெய்யின் தாயாக இருக்க முடியும்” என்று மனம் கசந்து போனது ஸ்ரீகாவுக்கு. அதற்குமேல் அவரிடம் பேசுவது கூட, அவளுக்கு இழிவாகத் தோன்ற, அங்கிருந்து நகர நினைத்தாள் அவள்.

                      ஆனால், அவளை நகர விடாமல் “என் மகன் வாழ்க்கையில் குறுக்கிடாமல் ஒதுங்கிக்கோ.. அதுதான் உனக்கு நல்லது. உண்மையாகவே அவனைக் காதலித்தால், அவன் நல்லதுக்காக தியாகம் பண்ணிட்டு போயேன்..” என்றார் எகத்தாளமாக

                      அவரை சும்மா விட மனதில்லாமல், “நான் ஏன் தியாகம் பண்ணனும்.. உங்க மகனைத் தான் மயக்கி வச்சிருக்கேனே.. இப்படி ஈஸியா தியாகம் பண்ணவா, அவரை என் கைக்குள்ள வச்சிருக்கேன்..” என்று கையை கட்டிக்கொண்டு நின்றாள் ஸ்ரீகா.

Advertisement