Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 27

                              அபியும், அறிவனும் ஸ்ரீகாவை முறைத்து நிற்க, “எங்களிடம் சொல்லவில்லையே..” என்ற ஆதங்கம் தான் முழுதாக இருந்தது அவர்கள் பார்வையில். ஸ்ரீகா ஒன்றுமே அறியாதவள் போல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு,  தலையை குனிந்து நின்றிருந்தாள்.

                           தங்கையின் இந்த முகம் அபிநந்தனை உருகச் செய்ய, அதற்குமேல் அவளை கேள்வி கேட்க முடியவில்லை அவனால். ஆனால், தங்கையின் வாழ்க்கையை நினைக்க வேண்டுமே.. சிறுபிள்ளை விளையாட்டு இல்லையே.. என்று தன்னை அடக்கி கொண்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான் அவன்.

                         ஸ்ரீகாவுக்கு அவர்களிடம் மறைத்ததைக் கொண்டு ஏற்பட்ட குற்றவுணர்ச்சி… அதன் தாக்கத்தில் தான் எதுவும் பேச முடியாமல் மௌனித்திருந்தாள் அவள். அறிவன் மீண்டும் அபிநந்தனிடம் “அரைமணி நேரமா நானும் கேட்டுட்டு இருக்கேன்.. எதுவும்  சொல்லல..” என்று முறையிட

                        அவனை இப்போது நன்றாகவே முறைத்தாள் ஸ்ரீகா. அறிவனும் சளைக்காமல் அவள் பார்வையை எதிர்கொள்ள. “என்னடா சொல்ல சொல்ற.. லவ் பன்றியா கேட்ட.. பதில் சொல்லிட்டேன் இல்ல.. இன்னும் என்ன சொல்லணும்…” என்று தன் இயல்புக்கு திரும்பியவளாக சண்டைக்கு நின்றாள் அவள்.

                        அறிவன் இப்போது அபியைப் பார்க்க, “ஆமா அபிண்ணா.. நான்… எனக்கு பிடிச்சிருந்தது… உங்க பிரெண்ட் ஜெய் தான்… நானே சொல்லிட்டேன்… அவர் எனக்கு பதில் எதுவும் சொல்லலண்ணா… லவ் எல்லாம் வேண்டாம் ன்னு அட்வைஸ் பண்ணிட்டு போய்ட்டார்.. இதை என்னனு நான் உங்ககிட்ட சொல்லணும்…”

                    “நான் லவ் சொல்லி இரண்டு வருஷம் ஆகப்போகுது. இதுவரைக்கும் ஒரு மூணு டைம் பேசி இருப்பேன் உன் பிரெண்ட் கிட்ட. அவ்ளோதான்… இன்னிக்கு நான் ஸ்டேஜ்ல இருக்கும்போது ஏதோ சொன்னாங்க.. அது புரியாம தான் கேட்க வந்தேன்..”

                   “அவங்க பேசிட்டு இருக்கும்போது தான் இவன் பார்த்தான் போல. இதுல நான் என்ன தப்பு பண்ணேன்…” என்றாள் நிமிர்வாக

                     “அவங்களும் என்னை லவ் பண்ணி, அதை நான் உங்ககிட்ட சொல்லாம விட்டிருந்தா, என்னைக் கேட்கலாம்.. ஆனா, லவ் வேண்டாம்ன்னு சொன்னவர்களை பத்தி என்ன சொல்லணும்… நான் அவரை லவ் பண்ணேன்… அவர் என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டார் ன்னு நானே வந்து சொல்வேனா…”

                    “இப்போகூட அவர் என்னை லவ் பண்றேன் ன்னு சொல்லவே இல்லை அபிண்ணா… அப்போ நான் மட்டும் எப்படி எல்லார்கிட்டயும் சொல்வேன். பிடிச்சிருந்தது கேட்டேன்… அது என்ன கொலைக்குற்றமா.. ஏன் பொண்ணுங்கன்னா லவ் எல்லாம் சொல்லக்கூடாதா…”

                    “என்னை மட்டும் கேட்கிறான் இல்ல.. இவன் காலேஜ் சேர்ந்து எத்தனைப் பொண்ணுங்களுக்கு ப்ரபோஸ் பண்ணி இருப்பான்.. எல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டு தான் செய்தானா..?? அப்போ என்னை மட்டும் ஏன் தப்பு செஞ்சது போல ட்ரீட் பண்றிங்க..” என்று பொரிந்து கொட்டினாள் ஸ்ரீகா.

                     அபிநந்தனால் தங்கையை புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு அண்ணனாக அவளின் எண்ணங்களும், செயல்களும் புரிந்தது அவனுக்கு. அதே சமயம் அறிவன் மீதும் குறை சொல்ல முடியாதே. தனக்கு இருக்கும் அதே பதைப்பு தானே அவனுக்கும்.

                      ஸ்ரீகா சுதந்திரமாக உலா வருவது போல் தோன்றினாலும், எப்போதும் நிழலாக நான்குபேரின் கவனமும் அவள்மீது இருக்கும். அவளின் விஷயங்கள் எதுவும் இதுவரை அவள் சகோதரர்களிடம் மறைக்கப்பட்டதே இல்லை. அப்படியிருக்க, இப்போது அவள் சொல்லாத அவளின் காதல் அறிவனை கோபப்படுத்தி இருப்பதை உணர முடிந்தது மூத்தவனால்.

                      தங்கையை நெருங்கி அவள் தோள் மீது கைவைத்து, அவளை அணைவாக அபி பிடிக்க, அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் ஸ்ரீகா. கூடவே, அறிவினை நோக்கி ஒரு கோபப்பார்வை. இந்த சிறுபிள்ளைகள் கோபப்பட்டால் கண்ணை சுருக்கிக் கொண்டு முறைத்து வைக்குமே.. அப்படியான ஒரு பார்வைதான் அவளிடம்.

                     அறிவன் அவள் பார்வையில் லேசாக சிரிக்க, இப்போது முகத்தை திருப்பிக் கொண்டாள். ஜெய் இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க, ஸ்ரீகாவின் பேச்சை முழுமையாக கேட்டிருந்தான். அவர்களின் பாசமழையில் அதற்குமேல் நனைய முடியாமல் அறிவனை நெருங்கி அவன் தோளில் கையை போட்டுக் கொண்டான் அவன்.

                      அறிவன் கொஞ்சம் அதிர்ச்சியுடன் ஜெய்யை பார்க்க, அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தான் ஜெய். இப்போது அபி ஜெய்யை முறைக்க, “என்னை ஏண்டா முறைக்கிற..” என்று கேள்வி கேட்டான் அவன்.

                     கூடவே, அறிவனிடமும் “நீ கேளு அறிவா.. இவ என்னை லவ் பண்றதா சொன்னதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. நியாயமா அவளைத்தானே முறைக்கணும்…” என்று கேட்டு நிற்க

                      “அவள் லவ் பண்றேன் ன்னு சொன்னா, நீங்க அண்ணாகிட்ட சொல்லி இருக்கலாம் இல்லண்ணா… எதுக்காக அவளை இப்படி அலைய விடணும்…” என்று ஒரே நிமிடத்தில் ஸ்ரீகாவுக்கு ஆதரவாகப் பேசினான் அறிவன்.

                      “டேய்.. இவ்ளோநேரம் அவளைத் திட்டிட்டு தானேடா இருந்த.. இப்போ உடனே கட்சி மாறிட்ட..” என்று ஜெய் அதிர்ச்சியாக

                      “அதெல்லாம் எப்பவும் அவ கட்சிதான்… அவதான் முதல்ல.. நீங்க ஏன் அண்ணாகிட்ட சொல்லல… அப்பவே சொல்லி இருந்தா, நாங்க அவகிட்ட பேசி இருப்போம்ல.. அவ இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாமே..” என்று கவலை கொண்டான் அறிவன்.

                       ஆனால், அதற்கும் “யாரு இவ கவலைப்படறா.. “என்று நக்கலாக கேட்டான் ஜெய்.

                      அபி இப்போது கோபம் கொண்டவனாக “ஜெய் இந்த விளையாட்டு பேச்செல்லாம் வேண்டாம்.. என்ன நடக்குது உங்களுக்குள்ள…” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டு வைத்தான்.

                        “இன்னுமென்னடா தெரியணும் உங்களுக்கு. அதுதான் எல்லாம் அவ சொல்லிட்டா இல்ல.. எதுக்கு இத்தனை கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க…” என்று அபியையும் அதட்டினான் அவன்.

                       அபி ஜெய்யை இப்போது முறைக்க, “அவ படிப்பை முடிக்கட்டும்ன்னு வெய்ட் பண்ணேண்டா… நானே வந்து உன்கிட்ட பேசணும்ன்னு இன்னிக்குதான் நினைத்தேன்.. நீ வந்துட்ட…” என்றான் ஜெய்.

                        அபி “இதெல்லாம் சரியா வருமா ஜெய்… “என்று அவனை அறிந்தவனாக கேட்க

                       “நிச்சயமா அபி.. சரியா வரவைப்போம்..” என்றான் ஜெய்ராம் கிருஷ்ணா. அவன் வார்த்தையில் தெறித்த நம்பிக்கையில் ஸ்ரீகாவின் முகம் அழகாக மலர, அறிவனுக்கும் லேசாக ஜெய்யை பிடித்தது.

                         ஆனால், ஜெய்யின் பின்னணியை நன்கு அறிந்திருந்த அபிக்கு இன்னும் முழுமையான திருப்தி இல்லை. அதோடு ஜெய்யின் குணநலன்களையும் அவன் நன்கு அறிவானே… அவன் குணத்திற்கும், தங்களின் குட்டி பூவிற்கும் ஒத்து வருமா?? என்ற யோசனை அப்போதே தொடங்கிவிட்டது அவனுக்கு.

                        ஆனாலும், அந்த நிமிடம் தனக்கு பிரியமான இருவரை அதிகம் வாடவிடாமல் புன்னகைத்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினான் அபி. அதுவே ஜெய்க்கும் போதுமாக இருக்க, ஸ்ரீகாவை வருடியது அவன் பார்வை. “என்னை லவ் பண்றேன்ன்னு இப்போவரைக்கும் சொல்லல.. ஆனா, என் அண்ணன்கிட்ட வாய் பேசிட்டு இருக்காங்க..” என்று அப்போதும் மனதில் அவனை தான் வறுத்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீகா.

                        அறிவன் அப்போதே ஜெய்யை லேசாக கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அவன் வழியாகவே விஷயம் துருவன், சர்வனுக்கும் தெரிய வந்தது. துருவன் சற்று யோசித்தாலும், ஸ்ரீகாவின் மகிழ்வை எண்ணி அமைதியாகிவிட, சர்வாவால் அது முடியவில்லை.

                       நேராக ஸ்ரீகாவிடமே சென்று நின்றான் அவன். “இது சரியா வருமா ஸ்ரீகா.. உனக்கும், ஜெய்க்கும் ஒத்துப் போகுமா. எந்த நம்பிக்கையில அவரை காதலிக்கிறதா முடிவு பண்ண நீ.. யோசிக்கவே மாட்டியா..” என்று அக்கம்பக்கம் பாராமல் கத்தி தீர்த்தான் அவன்.

                         “சர்வா.. பொறுமையா பேசேன்.. ஏன் இப்படி சத்தம் போடற..” என்று ஸ்ரீகா அதட்ட

                      “ஏன்.. ஏன் பொறுமையா பேசணும்.. கேட்கட்டுமே.. இல்லாததை சொல்லலையே நான். நிச்சயமா உனக்கு ஜெய் சரியா வரமாட்டார் ஸ்ரீகா.. உன்னோட பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை எதுவுமே அவரோட பொருந்தி போகாது. வாழ்க்கை முழுக்க போராட வேண்டி இருக்கும் நீ… தேவையா இது..” என்று மேலும் குரலை உயர்த்தினான் அவன்.

                          தீக்ஷி அதிகம் அதிர்ந்து கூட பேசாதவள் முதல் முறையாக வாய் திறந்தாள். “நீங்க ஏன் இப்படி இருக்கீங்க சர்வா.. ஆரம்பத்துல இருந்தே உங்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது…அதைக்கூட விட்டுடலாம்.. உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. ஆனா, உங்க தங்கச்சி விரும்பறவரை கூட இப்படித்தான் பேசுவீங்களா..”

                         “அப்படி என்ன

வெறுப்பு உங்களுக்கு.. எந்தவிதத்துல என் அண்ணா குறைஞ்சிட்டாங்க… ஏன் இப்படி வார்த்தையை விடணும்..” என்று கேட்டிருந்தாள் சர்வாவிடம்.

                    சர்வா அவள் பேச்சில் இன்னும் ஆத்திரம் கொண்டவனாக, “என்ன வார்த்தையை விட்டாங்க.. உன் அண்ணன் பேசாததா… உன் அண்ணன் அன்னிக்கு இவளை பேசும்போது அமைதியா தானே இருந்த.. இப்போ என்ன.. நாளைக்கு திரும்பவும் எதுவும் பிரச்சனை வந்தால் கூட உன்னால இவளுக்காக எதுவும்செய்ய முடியாது…”

                     “இது அவளோட வாழ்க்கை.. அவ முடிவு பண்ணட்டும்.. நீ உன் வசதிக்கு அவளை மோல்ட் பண்ணாத…” என்று இரக்கமே இல்லாமல் கூறிவிட, தீக்ஷிக்கு கண்கள் கலங்கிப் போனது..

                      “சர்வா.. டேய்.. என்னடா பேசற…” என்று ஸ்ரீகா சத்தமிட

                     “நான் உண்மையைத் தான் பேசறேன் ஸ்ரீகா.. நீ தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிற.. நல்லா யோசிச்சுக்கோ..” என்றவன் அவள் பதிலைக் கூட எதிர்பாராமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டான். தீக்ஷி கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு, “நான் கிளம்புறேன் ஸ்ரீகா… நாளைக்கு பார்க்கலாம்..” என்று அவளும் நிற்காமல் நடந்துவிட்டாள்.

                    ஸ்ரீகா அவளைத் தடுத்ததெல்லாம் கணக்கில் கொள்ளவே இல்லை அவள். சர்வாவின் வார்த்தைகள் ஸ்ரீகாவுக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுத்திருந்தது. ஒரு நண்பனாக தன்னை விமர்சிக்கவோ, தன் வாழ்க்கையை குறித்து முடிவெடுக்கவோ, விவாதிக்கவோ அத்தனை உரிமையும் உண்டு அவனுக்கு… ஆனால், தீக்ஷி…. அவளைக் குறித்து எப்படி அவன் பேசலாம்… அவள் நிலையை கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி வார்த்தைகளை  கொட்டி விடுவானா ?? என்று கண்மண் தெரியாத ஆத்திரம் அவன்மீது.

                     ஆனால், இத்தனை கலவரத்திலும், சர்வா புரிந்து கொள்ளவில்லை என்று கலங்கினாளே தவிர, சர்வா கூறியது போல் நடக்க வாய்ப்பிருக்கிறதா என்று கூட யோசிக்கவில்லை அவள். காதல் மயக்கமோ இல்லை ஜெய்யின் மீது கொண்ட நம்பிக்கையோ எதுவோ ஒன்று துணை நிற்க, சர்வாவுக்கு எப்படி புரிய வைப்பது என்று மட்டுமே சிந்தித்தாள் அவள்.

                     அந்த சிந்தனையின் முதற்கட்டமாக, சர்வாவை முழுவதுமாக தவிர்க்க தொடங்கினாள் பெண். சிறு வயது முதல் ஒரு நாள் கூட அவனிடம் பேசாமல் இருந்ததில்லை அவள். ஏன்.. கல்லுரி வந்தபின்பும் கூட பெரும்பாலான நேரங்கள் அவனுடன் தானே.. அப்படிப்பட்டவள் அவனிடம் பேசாமல் அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பாராமல் அலையவிட்டாள் அவனை.

                     சர்வா முதலில் கோபத்தில் இருந்ததால் அவளின் பாராமுகத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், அடுத்தநாள் இடைவேளையின் போதே அவளை தேட ஆரம்பித்துவிட்டது அவன் உள்ளம். அவளைத் தேடி அவள் வகுப்பிற்கே செல்ல, அவனை நிமிர்ந்தும் பாராமல் தீவிரமாக புத்தகத்தில் மூழ்கி இருந்தாள் ஸ்ரீகா. இத்தனைக்கும் அன்று தீக்ஷியும் கல்லூரிக்கு வந்திருக்கவில்லை.

                       சர்வா பொறுத்துப் பார்த்தவன் மூன்றாம் நாள் மீண்டும் அவளிடம் சண்டைக்கு நின்றான். “ஹேய் என்ன நினைச்சுட்டு இருக்க நீ.. உன்னை எதுவும் கேட்ககூடாதா.. இப்போ ஏன் என்கிட்டே பேசாம இருக்க…” என்று அவன் தொடங்க

                        “நீ என்னை மட்டும்தான் கேட்டாயா..” என்று அவனை திணறடித்தாள் ஸ்ரீகா. சர்வா புரியாதவன் போல் விழிக்க

                        “என்னைப் பேச மட்டும்தான் உனக்கு உரிமையிருக்கு சர்வா.. தீக்ஷி யார் உனக்கு.. நீ எப்படி அவளை பேசுவ… ஜெய்யை பற்றி பத்தி பத்தியா குறை சொல்றியே.. இப்போ நீ என்ன செய்து வச்சிருக்க.. அவருக்கும் உனக்கும் என்ன வித்யாசம்…”

                         “தீக்ஷியோட குடும்பம் இப்படித்தான் ன்னு  முன்னமே நமக்கு தெரியும் சர்வா. தெரிஞ்சுதான் அவளோட பிரெண்ட்ஷிப் வச்சுக்கிட்டோம்… இப்போ உனக்கு பிடிக்காத ஒரு விஷயம் நடக்கவும், மொத்தப் பழியையும் அப்படியே அவ மேல போட்டுடலாமா…”

                        “அவ எவ்வளவு ஹர்ட் ஆவா யோசிச்சு பார்த்தியா… அவளே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா அவ இயல்பாய் மீட்டுட்டு இருக்கா… நீ திரும்பவும் அவளை குத்தி பேசி, இப்படி குதறி வைக்கணுமா… எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா…”

                        “யாரால உனக்கு பதில் கொடுக்க முடியுமோ, அவங்ககிட்ட பேசணும்… இவங்க பேசவே மாட்டாங்க ன்னு நல்லா தெரிஞ்ச பின்னாடி, அவங்களை பேசி, கஷ்டப்படுத்தி என்ன சாதிக்கப் போற…”

                  “பிடிச்ச விஷயங்களுக்காக ஏங்கி தவிக்கிறது எப்படிப்பட்ட வலி ன்னு உனக்கு நல்லாவே தெரியும் சர்வா.. நீ அனுபவிச்ச அதே வலியை இப்போ நீ அவளுக்கு கொடுத்து இருக்க…” என்று ஸ்ரீகா சுட்டிக்காட்ட, சர்வாவுக்கு தன் தவறு முழுதாகப் புரிந்தது.. ஆனால், ஒப்புக் கொள்ள மனம் வேண்டுமே.

                   “அப்போ அவளுக்காக தான் என்னோட பேசாம இருக்கியா நீ..” என்று அவன் முறுக்க

                 “எனக்கு அவ முக்கியமா நீ முக்கியமா… உன்னையே கேட்டுக்கோ… நான் அவளுக்காக பேசாம இல்ல.. உனக்காக.. நீ இப்படி உன் தகுதியை குறைச்சுக்க கூடாது ன்னு நினைச்சு தான் உன்கிட்ட பேசாம இருக்கேன்.. நமக்கு இடையில தீக்ஷியை இழுக்காத..” என்றாள் உத்தரவாக

                     சர்வா அவள் பேச்சில்,அவள் தன்னைக் கண்டு கொண்டதில் மாட்டிக் கொண்டவனாக புன்னகைக்க, அவனைக் கண்டு கொள்ளாமல் தாண்டி நடந்தாள் ஸ்ரீகா.. அவள் பின்னால் வந்தவன் “சாரி..” என்று நிற்க,

                     “என்கிட்டே ஏன் சொல்ற..” என்றாள் அவன் தோழி.

                     “சரி.. அவகிட்டேயே சொல்றேன்..” என்று அவன் இறங்கி வர, அப்போதுதான் சற்று உக்கிரம் தணிந்தாள் ஸ்ரீகா.

                    அதன்பின் அடுத்தநாளே சர்வா தீக்ஷியிடம் மன்னிப்பு கேட்டது, அவள் அவனை அதிசயமாக பார்த்து வைத்து எல்லாம் தனிக்கதை. ஸ்ரீகா அந்த நிகழ்வை பற்றி அதன்பின் இருவரிடமும் பேசவே இல்லை.

                    ஜெய்- ஸ்ரீகாவின் காதல் அவர்களை சுற்றி இருந்த அத்தனைப் பேருக்கும் தெரிந்தே இருக்க, பெரிதாக கண்டு கொண்டதாக கூட காண்பித்துக் கொள்ளவில்லை சம்பந்தப்பட்டவர்கள். கல்லூரி வளாகத்திலும் அங்கே நின்று பேசுவது, இங்கெனின்று சிரிப்பது, வெளியே சுற்றுவது, பார்வை பரிமாற்றங்கள் எதுவுமே இருக்காது இருவருக்கும் இடையிலும்.

                       பல நேரங்களில் கூடவே சுற்றுபவர்களுக்கே, “இதுங்க உண்மையிலேயே லவ் பண்ணுதுங்களா..” என்று சந்தேகம் தோன்றிவிடும் அளவுக்கு தான் இருக்கும் இருவரின் செயல்களும். ஆனால், இது அத்தனைக்கும் அத்தனைக்கும் முதற்காரணம் ஜெய்ராம் என்பதே சரியாக இருக்கும்.

                    காதலை தெரிவித்த கணமே, “ஒழுங்கா படிக்கணும் ஸ்ரீகா..தூரமா நின்று ஒளிந்து பார்ப்பது, போற இடமெல்லாம் பின்னாடி வர்றது இதெல்லாம் செய்ய கூடாது. இதுக்கு முன்ன எப்படியோ, ஆனால் இனிமே இன்னும் கவனமா இருக்கணும்.”

                      “எப்படியும் காதலிக்கிறோம்… நமக்கு நாமதான்.. அது மட்டும் போதும். மற்ற விஷயங்கள் எல்லாம் படிப்பை முடிச்சுட்டு பார்ப்போம்… புரியுதா..” என்று அழுத்தமாக அவளின் மனதில் பதிய வைத்து இருந்தான் அந்த நல்லவன்.

             அவன் சொல்வது நியாயமாக இருந்ததால் ஸ்ரீகாவும் மௌனமாகவே அவன் வார்த்தைகளை ஆமோதித்தாள்.

                      ஆனால், நேரில் எந்த அளவுக்கு விலகி நின்றனரோ அந்த அளவுக்கு, அலைபேசி அழைப்புகள் வழியே நெருங்கி இருந்தனர் இருவரும். ஸ்ரீகாவை பற்றிய அத்தனை விஷயங்களும் அத்துப்படி ஜெய்ராம் கிருஷ்ணாவுக்கு. அவனிடம் கதையளக்க தினம் தினம் ஏதாவது ஒரு புதிய விஷயம் கிடைத்துவிடும் ஸ்ரீகாவுக்கு.

                     பெரும்பாலான நேரங்கள் அவளை பேசவிட்டு, அவள் பேசுவதற்கு காது கொடுத்து மௌனம் சாதிப்பது தான் ஜெய்யின் வேலையாக இருக்கும். இயல்பிலேயே அதிகம் பேசாததும் காரணமாக இருக்கலாம். ஆனால், ஸ்ரீகாவுக்கு அவன் புன்னகையும், இடையிடையே சிரிப்போடு அவன் கொடுக்கும் ஓரிரு வார்த்தை மறுமொழிகளுமே போதுமாக இருக்கும்.

                        அவர்கள் அளவில் இருவருக்குள்ளும் புரிதல் மிக அதிகம். ஸ்ரீகாவின் தன்னம்பிக்கை நிறைந்த செயல்களும், அவளின் நேர்மையான பேச்சுக்கும் தீவிர ரசிகனாகி இருந்தான் ஜெய். எப்போதுமே மனதில் பட்டதை பட்டென போட்டு உடைப்பது ஸ்ரீகாவின் குணம்.

                   அது பிறப்பிலேயே ஆவலுடன் வந்திருக்க, பிடித்தமோ பிடித்தமின்மையோ எதுவாக இருந்தாலும், அழுத்தமான அமைதியுடன் அப்போதே முகத்தில் வெளிப்பட்டுவிடும்.பல நேரங்களில் மனதில் இருபிப்பது வார்த்தையாக அவளையும் மீறி வெளியே வந்துவிடும்.

                    அவளின் அந்த குணம் ஜெய்க்கு மிகவும் பிடித்தமும் கூட..ஆனால், எப்போதும் பிடித்தங்கள் பிடித்தமாகவே இருப்பதில்லையே….

          

              

Advertisement