Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 26

                           ஸ்ரீகா, தீக்ஷி இருவரும் நன்கு பயிற்சி எடுத்து முழுவதுமாக தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். சர்வா, அறிவன், துருவன் என்று அவர்களும் உதவ, ஸ்ரீகா, தீக்ஷியின் நடன ஒத்திகை அவர்கள் திட்டமிட்டபடியே முடிந்து இருந்தது.

                         அதுவும் அறிவன் “நல்லா ஆடற தீக்ஷி… கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணா போதும்.. சூப்பரா வருவ..” என்று ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளியிருக்க, சிறிது நம்பிக்கையுடனே வலம் வந்தாள் தீக்ஷி. அதுவும் கலைவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவள் தந்தை வருவதாக இருக்க, அதுவேறு உற்சாகத்தைக் கொடுத்தது அவளுக்கு.

                       ஆனால், ஸ்ரீகா எப்போதும் போல இயல்பாகவே  காணப்பட்டாள். அவளுக்கு மேடை அனுபவங்கள் புதிது இல்லையே. தன் பயிற்சி நேரம் முடிந்ததும், சர்வா, துருவனை பயிற்சி செய்ய விடாமல் வம்பிழுத்துக் கொண்டு, அவர்களது இசைக்கருவிகளை பிடுங்கி வைத்துக் கொண்டு என்று அவள் இயல்பு மாறாமல் தான் இருந்தாள்.

                    இவர்களின் பயிற்சி நேரங்கள்  இப்படியாக கழிந்துவிட, கலைவிழாவுக்கான நாளன்று காலை எட்டு மணிக்கே தயாராக நின்றது கல்லூரி வளாகம். அலங்கார பதாகைகள், வரவேற்பு வாசகங்கள், பலவண்ண கொடிகள், உடற்கல்வித் துறையினரின் அணிவகுப்பு என்று சிறப்பாக தொடங்கியது அந்த நாள்.

                    சிறப்பு விருந்தினராக, தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர். மதுபாலகிருஷ்ணன் சொன்ன நேரத்திற்கு வந்துவிட, கூடவே, அவரின் மனைவி சீதாலட்சுமி. கல்லூரி முதல்வரும், மற்ற நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களும் அவர்களை வரவேற்று அமர வைக்க, முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர் அந்த தம்பதிகள்.

                   விழா தொடங்கி, கல்லூரி முதல்வர், மற்ற சில பேசி முடிக்க, அடுத்ததாக அமைச்சர் மேடையேறினார். மதுபாலகிருஷ்ணன் அடுத்த இருபது நிமிடங்களுக்கு மாணவர்களின் முன்னேற்றம், பெண்கல்வியின் முக்கியத்துவம், இளைஞர் அரசியல் என்று பல்வேறு தலைப்புகளை முன்னெடுத்து பேச, அவர் பேச்சில் எங்குமே சிறு சலிப்புக் கூடத் தோன்றவில்லை யாருக்கும்.

                   வழக்கமாக அனைவரும் பேசும் தலைப்புகள் என்றாலும், அவர் கூறிய சின்ன சின்ன கதைகளும், நகைச்சுவையான நிகழ்வுகளும், அதனோடு இணைந்த கருத்தும் மாணவர்களை கட்டி வைத்தது. அந்த ஆண்டு விழாவுக்கான மாணவர் பொறுப்பாளனாக ஒரு ஓரம் நின்றிருந்த ஜெய், தந்தையின் பேச்சை ரசித்துக் கொண்டிருக்க, அவனுக்கே தெரியாமல் அரங்கின் உட்புறம் சற்று தள்ளி நின்று அவனை ரசித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீகா.

                   அவர்கள் நிகழ்ச்சிக்கான உடைகள், தலையலங்காரம் என்று அனைத்தும் முடித்து அவள் நிற்க, ம்ஹும்.. ஜெய்யின் பார்வை அவள்மீது விழவே இல்லை. அதில் சிறு ஏமாற்றம் தாக்கினாலும், எப்போதும் உள்ளது தானே என்று தன்னை தேற்றிக் கொண்டாள் அவள்.

                    மதுபாலகிருஷ்ணன் பேசி முடித்து கீழே இறங்க, கரவொலி அந்த அரங்கத்தை அதிர வைத்து அடங்கியது. அடுத்தடுத்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்க, ஸ்ரீகா, தீக்ஷியின் முறை வரவே அவர்களும் மேடையேறினர்.

                    இருவரும் ஒன்று போலவே தலையலங்காரம், உடைகள் என்று தங்களை அலங்கரித்துக் கொண்டிருக்க, தலையில் அந்தக்கால அரசிகளின் மகுடம் போல ஒரு கிரீடம் வேறு. கையில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த ஒரு வயலினை ஏந்திக் கொண்டு பெண்கள் நிற்க, பின்னணியில் “திவானி மஸ்தானி..” என்ற வேற்றுமொழி பாடல் இசைக்க தொடங்கியது.

                    பாடல் நடனம் பழகியவர்களுக்கே ஆடுவதற்கு சற்று கடினமானது தான். ஆனால், அத்தனை அழகாக அந்தப் பாடலை காட்சிப்படுத்தினர் பெண்கள். அதுவும் தீக்ஷிக்கு நடனம் தெரியாது என்பதே தெரியாத விதத்தில் , ஸ்ரீகா அந்தப்பாடலை வடிமைத்து இருக்க, பெரும்பாலும் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஆடுவது போலவே வடிவமைத்து இருந்தாள்.

                      ஏற்கனவே அழகான பெண்கள் தான் இருவரும். இதில் இன்னும் சிரத்தை எடுத்து, தங்களை அழகுபடுத்திக் கொண்டு, அதற்கேற்ப உடைகள், அணிகலன்கள், விரிந்து இடைவரை நீண்ட கூந்தல்.. என்று மோகினிகளாகவே இருவரும் வந்து நிற்க, அத்தனைப் பேரின் கண்களும் அவர்கள் மீதுதான்.

                      அதுவும் உடலை வளைத்து, நெளித்து பாடலுக்கேற்ப ஆடியவர்கள், சுழன்று திரும்பும் வேளைகளில் எல்லாம் அவர்கள் அணிந்திருந்த உடை அழகாக விரிந்து வட்டமிட்டு அடங்க, ரசிக்கும்படியாகவே இருந்தது அவர்கள் நடனம்.

                     கீழே அமர்ந்து பார்த்திருந்த மதுவுக்கும், சீதாவுக்கும் கூட, மகளின் இந்த நடனத்திறமை அதிசயம் தான். தங்கள் பெண் இத்தனை அழகாக ஆடுவாள் என்பதே தெரியாதே அவர்களுக்கு. அனைத்தையும் மறந்து மகளை மட்டுமே அவர்கள் ரசிக்க, அவர்கள் பெற்ற மகன் தன் மனதிற்கினியவளை மட்டுமே ரசித்து நின்றான்.

                     அவன் கண்களுக்கு அசைந்து ஆடும் அந்த பருவமங்கை, ஒரு பொம்மையைப் போலவே தெரிந்தாள். அவள் நளினமும், அவள் முகம் காட்டிய பாவங்களும், அவள் கைகள் சுழன்ற விதமும்… ம்ஹும்… பார்வையை திருப்பவே முடியவில்லை அவனால்.

                     அந்த பாடலின் வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் போனாலும், அவ்வபோது தன்னை சந்தித்த அவள் பார்வைகளின் பொருள் புரிந்ததே அவனுக்கு. அவள் விழிகளின் ஏக்கத்தையும், தவிப்பையும் மட்டுமே கருத்தில் கொண்டவன் அந்த கணத்தில் தன்னிலை மறந்து இருந்தான்.

                     அதுவரை வார்த்தைகளில் கூட காதலை கூறியிராதவன், அன்று பார்வையில் தன் மொத்தக் காதலையும் உணர்த்திவிட முயன்று கொண்டிருந்தான். சற்று தள்ளி அமர்ந்திருந்த பெற்றவர்களோ, மேடையில் உடன் ஆடிக் கொண்டிருந்த அவன் தங்கையோ யாருமே அவன் கண்களுக்கு புலனாகவில்லை அந்த சமயம்.

                    ஸ்ரீகா ஆடி முடிக்கும் வரை அவன் பார்வை மொத்தமும் அவள் மீதே இருக்க, புதியதான அவனின் பார்வையில் ஸ்ரீகாவும் சற்று தடுமாறி இருந்தாள். மேடையில் இருப்பதால் அவள் பார்வை பொதுவாக நோக்குவதுப் போல் இருந்தாலும், அவள் கண்களை தொடர்ந்து கொண்டிருந்த ஜெய்க்கு அவள் பார்வையில் இருந்த தடுமாற்றம் பிடிபட்டுவிட்டது. அது பிடித்தும் இருந்தது.

                      காதல் சொல்லும்போதுகூட, அவள் விழிகளில் இந்த தடுமாற்றம் இல்லையே என்று மனது எடுத்துக் கொடுக்க, என் ஒரு பார்வை இத்தனை தடுமாறச் செய்கிறதா இவளை என்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொண்டது அவன் உள்ளம்.

                     கல்லூரி மாணவனாக இருந்தாலும் கூட, தந்தையின் பதவியை மனதில் கொண்டு தான் பெரும்பாலும் ஜெய்யின் செயல்கள் அமையும். பெண்கள் விஷயமும் இதுவரை அப்படிதான். ஏன் ஸ்ரீகா காதல் சொல்லும் வரையிலும் கூட, எப்படியோ ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்யத்தானே போகிறோம்…. அப்போது பார்த்துக் கொண்டால் போதாதா என்பது தான் அவன் எண்ணம்.

                   ஸ்ரீகா காதல் சொல்லாமல் போயிருந்தால், அவன் எண்ணப்படி நடந்தும் இருப்பான் அவன். இத்தனைக்கும் எத்தனையோ அழகான பெண்களை தினம் கல்லூரியிலும், மற்ற இடங்களிலும் சந்திப்பவன் தான். ஏன், கல்லூரி மாணவனாக இருந்தாலும் கூட, அவன் தந்தையின் பதவியை மனதில் வைத்து அவனை நெருங்கும் சில பெண்களும் கூட இருக்கத்தானே செய்தனர்.

                  அவன் தவறு செய்ய அத்தனை வாய்ப்புகளும் கொட்டிக் கிடந்தாலும், தந்தையின் மரியாதைக்காக என்று கண்ணியம் காப்பவன்தான் ஜெய்ராம் கிருஷ்ணா. ஆரம்பத்தில் தந்தைக்காக என்று ஏற்றுக் கொண்ட சில விஷயங்கள் நாளைடைவில் பிறரிடமிருந்து அவனை தனித்துக் காட்ட, அவனுக்கே ஒருவித பெருமிதம் தான். அது பிடித்தும் இருக்க, அப்படியே பழகிப் போயிருந்தான் ஜெய்.

                   ஆனால், இது மொத்தத்தையும் உடைத்து, பலர் கூடி இருந்த அந்த அரங்கில் ஒரு பெண்ணை பார்த்து எங்கும் நிலையில் அவனை நிற்க வைத்திருந்தாள் அவன் மோகினி. அவளின் உடையும், விரிந்த அவளின் கூந்தலும்….  அப்படித்தான் அழைக்கத் தோன்றியது அவனுக்கு. அவனை மயக்குவதற்காகவே வந்த மோகினி….

                 அந்த மேடையில் இருந்து இறங்கி பக்கவாட்டில் அவள் மறையும் வரை அவளையே பார்த்திருந்தவன் அவள் கண்களில் இருந்து மறையும் சமயம் “மோகினி..” என்று சத்தம் வராமல் இதழசைக்க, புரியவில்லை அவளுக்கு.

                நின்று கேட்கவும் நேரமில்லாமல் தீக்ஷி அவளை இழுத்துச் சென்று விட, “என்ன சொன்னான்..” என்பதே மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. தீக்ஷி வேகமாக தன் அணிகலன்களை களைந்தவள், ஸ்ரீகாவையும் நச்சரித்துவிட்டாள். ஸ்ரீகாவும் நகைகளை கழட்டி வைத்து, கூந்தலை முடிந்து கொள்ள, அவள் அன்னையிடம் அறிமுகப்படுத்துவதாக கூறி அவளை இழுத்துச் சென்றாள் தீக்ஷி.

                ஸ்ரீகாவின் மறுப்பெல்லாம் அவள் காதிலேயே விழவில்லை. நேராக ஸ்ரீகாவை அழைத்துச் சென்று அவள் அன்னையிடம் நிறுத்தி இருந்தாள் தீக்ஷி. சீதாலட்சுமி ஸ்ரீகாவை பார்த்து புன்னகைத்தாலும், ஏனோ அவருக்கு ஸ்ரீகாவை பிடிக்கவில்லை.

                சிலரை முதல் பார்வையிலேயே மனம் தள்ளி வைக்க சொல்லுமே அப்படியொரு உணர்வுதான் அவருக்கு. தன் மகள் இவளுடன் சேர்ந்து கொண்டு நடனம் ஆடியதோ, ஸ்ரீகாவின் நேர்கொண்ட பார்வையோ, அவளின் அதிகம் குழைவில்லாத உபசரிப்பு வார்த்தைகளோ எதுவோ பிடிக்காமல் போனது சீதாவுக்கு.

                   ஆனாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல் அவர் இயல்பாகவே புன்னகையுடன் பேச, அவருக்கு பேச்சை வளர்ப்பதில் ஆர்வம் இல்லை என்று ஸ்ரீகாவுக்கும் புரிந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்து அவள் நிற்க, மது எந்த வித தோரணையும் இல்லாமல் “நல்லா ஆடினம்மா… நீதான் எங்க தீக்ஷிக்கு கற்றுக் கொடுத்ததா..” என்றார் அமைதியான குரலில்.

                  ஸ்ரீகா மரியாதையாக புன்னகைத்து, “ரெண்டு பேரும் சேர்ந்து தான் செய்தோம் அங்கிள்..” என்று முடித்துக் கொள்ள, அவளின் தன்னடக்கமான வார்த்தைகள் மதுவை கவர்ந்தது. அதிக நேரம் பேச முடியாது என்பதால் இருவரும் விலகி வந்து மாணவர்கள் இடத்தில் அமர்ந்து கொள்ள, ஜெய் இது அத்தனையும் தூரத்தில் இருந்து கவனித்து நின்றான்.

                   என்னவோ அன்னை தந்தையை நெருங்கவே இல்லை அவன். தன் மோகினியின் மீதான காதல் கண்களில் வெளிப்பட்டு காட்டிக் கொடுத்துவிடுமோ என்று அச்சம் கொண்டானோ என்னவோ, அவர்கள் கிளம்புவரை தள்ளியே நின்றான்.

                        அவனும் அன்றைய நிகழ்ச்சியில் பாடல் ஒன்றைப் பாடுவதாக இருக்க, நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டி இருந்ததால், பெரும்பாலும் மேடைக்கு அருகிலேயே தான் இருந்தான் ஜெய்.

                                           இதற்கிடையில் துருவன், அறிவன் இருவருமே தாங்கள் பெயர் கொடுத்திருந்த பிரிவுகளில் பாடியும், ஆடியும் முடித்திருக்க, சர்வா அப்போதுதான் மேடையேறி இருந்தான். அவன் பெயரை அறிவிக்கவுமே, ஸ்ரீகா தன்னை மறந்து எழுந்து நின்று சத்தமிட தொடங்கிவிட்டாள்.  அறிவன், துருவனும் குரலெழுப்பி சர்வாவை உற்சாகப்படுத்த, எப்போதும் போலவே அசத்தலாக பாடினான் அவன்.

 மாலை என் வேதனை

கூட்டுதடி

காதல் தன் வேலையை

காட்டுதடி

என்னை வாட்டும் வேலை ஏனடி

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு எந்தன் பௌர்ணமி

என் காதல் வீணை நீ……

                                        என்று அவனது இளமை ததும்பும் குரலில் கண்களை மூடிக் கொண்டு, அழகாக முகத்தில் நிறைந்திருந்த புன்னகையுடன் கைகளை காற்றில் அசைத்து அவன் பாடப்பாட, அரங்கம் மொத்தமும் ஒரு மாய உலகிற்கு பயணித்துக் கொண்டிருந்தது. அவன் குரலில் இருந்த காதல் ரசமும், புன்னகை விரவி இருந்த அவன் வார்த்தைகளும் அங்கிருந்த பலரை வசப்படுத்தி இருந்தது.

                             ஸ்ரீகா அவன் பாடி பலமுறை பார்த்திருக்கிறாள் என்பதால் அவள் ஒரு பெருமித புன்னகையோடு தன் தோழனை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க, அருகில் இருந்தவள் அப்போதுதான் புதிதாக பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள் சர்வாவை.

                            எப்போதுமே அளந்து வைத்ததை போல் சிரிப்பு என்ற பெயரில் உதட்டை இழுத்துப் பிடிப்பவன் இன்று இப்படி காதலான புன்னகையுடன் உருகி உருகி பாட, பார்த்திருந்தவளுக்கு வயிறு எரிந்தது. “என்கிட்டே பேசணும்ன்னா மட்டும் இவன் வாயில சுளுக்கு வந்திடுமா…”என்று கொதித்துப் போனாள் தீக்ஷி.

                        முதலில் அவனிடம் பேச முயன்று, பின் அவன் இயல்பே இதுதான் என்று முடிவுக்கு வந்து அறிவன், துருவனோடு மட்டும் அரட்டை அடிக்க பழகி கொண்டவள் அவள். ஆனால், இப்போது அவன் பாடிய விதமும், அவன் சிரிப்பும் அவள் அறியாததை உணர்த்த, “அப்படியென்ன பெரிய இவன்…” என்று கோபம் கொண்டாள் அவள்.

                        இவள் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே மேடையில் அவன் பாடி முடித்து இறங்கிவிட, அவனும் முன்பக்கம் துருவனுடனே நின்றுக் கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் ஜெய் மேடையேற, அவனும் வழக்கம் போல நன்றாகத்தான் பாடினான்.

                     “சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா

காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா…” என்று கேள்வி கேட்டது அவன் குரல். ஸ்ரீகா அவன் பாடி முடிக்கும் வரை அவனை விட்டு பார்வையை அங்கே இங்கே திருப்பாமல் அவனை ரசித்துக் கொண்டிருக்க,அவன் பாடி முடித்த நிமிடம் அவள் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது.

                     ஏனோ காலை முதல் தொடர்ந்த அவன் பார்வைகளும், இப்போதைய பாடலும் எதையோ உணர்த்த, அந்த உணர்வு கொடுத்த தாக்கத்தில் மௌனித்து இருந்தாள் அவள். அந்த போட்டியில் சர்வா, ஜெய் இருவருமே அசத்தி இருக்க, முதல் பரிசை சர்வா தட்டிச் சென்றிருந்தான்.

                      விழா முடிவதற்கு சற்று முன்பாகவே மதுவும், சீதாவும் அங்கிருந்து புறப்பட்டுவிட, ஸ்ரீகா ஜெய்யை தேடிச் சென்றிருந்தாள். அவனும் இவளை எதிர்பார்த்தது போலவே காத்திருக்க, வேகமாக அவன் அருகில் வந்தவள் “அப்போ என்ன சொன்னிங்க..” என்றாள் கேள்வியாக.

                     ஜெய்க்கு புரிந்தாலும், “எப்போ..” என்றான் புரியாதவனாக.

                    “அப்போ நான் ஸ்டேஜ்ல இருந்தேன்ல அப்போ..” என்று அவள் பல்லைக்கடிக்க

                    “நான் என்ன சொன்னேன்.. ஒன்னும் சொல்லலையே..” என்று ஜெய் சமாளிக்கப் பார்க்க, முகம் சுருங்கியது ஸ்ரீகாவுக்கு.

                      “போடா..” என்று வாய்திறக்காமல் முனகியவள் அங்கே நிற்காமல் நகர, முதல் முறையாக அவள் கையைப் பிடித்து நிறுத்தி இருந்தான் ஜெய்.

                      “என்ன சொன்ன இப்போ..” என்று அவன் முறைக்க

                       “ஒன்னும் இல்ல…” என்றாள் ஸ்ரீ.

                      “நான் பார்த்தேன்.. சொல்லு.” என்று அவன் மிரட்ட, “போடா.. ன்னு சொன்னேன்..விடுங்க..” என்றாள் ஸ்ரீ.

                        “உடம்பு மொத்தமும் கொழுப்புதான் இல்ல உனக்கு..” என்று நக்கலாக கேட்டவன் அவள் கையை சற்று அழுத்த. “ஹா…” என்று மெல்லியதாக சத்தமிட்டாள் ஸ்ரீகா.

                       ஜெய் தன் பிடியைத் தளர்த்த, அவனை முறைத்தவள் “கையை விடுங்க..” என்று தன் கையை உதறி விடுவித்துக் கொண்டாள். ஜெய் கையை கட்டிக்கொண்டு அவளை பார்த்தபடி நிற்க, கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தாள் ஸ்ரீகா.

                       அவள் சில அடிகள் வைத்திருக்க, “மோஹினி..” என்று சற்றே சத்தமாக அவன் அழைக்க, அப்படியே நின்றாள் அவள். “என்னையா சொல்றான்..” என்று அவள் யோசித்து நிற்க, அவளை நெருங்கி “நிச்சயமா மோகினி தான் நீ.. மயக்குற..” என்றதோடு விலகிச் சென்று இருந்தான்.

                       அவன் சென்று சில நிமிடங்கள் கடந்தும் கூட, ஸ்ரீகா அப்படியே இருக்க, உண்மையில் அவள் தான் பேயடித்தவள் போல் இருந்தாள். அந்த நேரம் அறிவன் ஸ்ரீகாவின் முன்னால் வந்து நிற்க, பூரித்து போயிருந்த தன் முகத்தை எங்கே கொண்டு மறைக்க, என யோசித்து நின்றாள் ஸ்ரீகா.

                      அறிவன் எதுவுமே கேட்காமல் அமைதியாக நிற்க, அவன் என்ன நினைக்கிறான் அல்லது அவனுக்கு என்ன தெரியும் என்று எதுவுமே தெரியாத நிலை ஸ்ரீகாவுக்கு.

                                                       மாட்டிக் கொண்டவளாக அவள் விழிக்க, அவளைக் கண்டிக்கும் விதமாக அழுத்தமான பார்வையுடன் நின்றான் அறிவன். அவன் பார்வையில் இருந்தே தன் தவறு புரிய, “அறிவா… சாரி… நான் சொல்றதை..” என்று ஸ்ரீகா தொடங்கவுமே, கையை உயர்த்தி தடுத்துவிட்டான் அவன்.

                       அவனே ‘என்ன லவ்வா..” என்று கேள்வி கேட்க, ஸ்ரீகாவின் தலை ஆமென்பதாய் அசைந்தது.

                        “நேத்துதான் லவ் பண்ண ஆரம்பித்தாயா..” என்று அடுத்த கேள்வி கேட்க, தவிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தோழி. அறிவன் அவளின் பார்வைக்கெல்லாம் அசரவே இல்லை.

                          ஸ்ரீ பதில் சொல்ல முடியாமல் மௌனமாக “ஹேய்… ஒழுங்கா பதில் சொல்லுடி.. நேத்துதான் தெரியுமா அவரை… இல்ல, இன்னிக்கு தான் லவ் பண்ண ஸ்டார்ட் பன்றியா…” என்று மிரட்டினான் அவன்.

                        ஸ்ரீகா தவறு தன்மீது என்பதால் அமைதி காக்க, “கூடவே தானே சுத்திட்டு இருக்கோம். ஒரு வார்த்தை சொல்லத் தோணலையா உனக்கு. இத்தனைக்கும் அபி அண்ணாவோட பிரெண்ட் வேற… என்ன நினைக்கிற ஸ்ரீ நீ..” என்று அவன் சண்டையிட, ஸ்ரீயிடம் பதில் இல்லை.

                       “நீ நினைக்கிறதெல்லாம் செய்ய முடியாது. ஒழுங்கா எனக்கு பதில் சொல்லு. இல்ல அபிண்ணாக்கு போன் பண்றேன்…” என்றவன் அலைபேசியை கையில் எடுக்க, ஸ்ரீகா அவனைப் பாவமாக பார்த்து வைத்தாள்.

                      “இந்த லுக் எல்லாம் கொடுக்காத… ஏன் சொல்லல..” என்று மூத்தவனாக அவன் மிரட்ட

                      “அவங்க ஒத்துக்கவே இல்லடா.. அப்புறம் எப்படி சொல்றது…”

                     “ஒத்துக்கவே இல்லன்னா… நீதான் லவ் சொன்னாயா..” என்றான் அறிவன்.

                   ஆமென்று தலையசைத்தவள் “இப்போ இல்ல.. கிட்டத்தட்ட இரண்டு வருஷம் ஆகப்போகுது. இப்போதான் ஏதோ பேசினாங்க.. நான் அதை பீல் பண்றதுக்குள்ள நீ வந்துட்ட…” என்று அவள் புலம்ப, அறிவுக்கே சிரிப்பு வரப் பார்த்தது.

                     “நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. இவ எதைப்பற்றி  கவலைப்பட்டுட்டு இருக்கா..” என்று கடுப்பானான் அவன். ஜெய்யின் பின்புலம் அறிந்தவன் தானே அவனும். அபியின் தோழன் என்றாலுமே தங்களிடம் கூட ஒரு எல்லையோடு தான் நிற்பான் அவன்.

                     அப்படிப்பட்ட ஒருவன் ஸ்ரீகாவை காதலிக்கிறானா?? ஆனால், அப்படித்தானே எதையோ சொல்லிச் சென்றான்…. என்று எண்ணமிட்டவனுக்கு அவன் குடும்பத்தை எண்ணியும் யோசனையாக இருக்க, அபிநந்தனுக்கு அழைத்துவிட்டான்.

                          அவன் அழைத்து கல்லூரிக்கு வரச்சொல்ல, அபி என்ன ஏதென்று விசாரிக்க தொடங்கிவிட்டான். அவனை சமாளித்து “நீ கிளம்பி வா அபிண்ணா.. முக்கியமான விஷயம்..” என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டு காத்திருந்தான் அறிவன்.

                         அடுத்த அரைமணி நேரத்தில் அபி வந்து சேர, அபி அறிவன் இருக்குமிடம் வந்து சேர்ந்த ஐந்தாவது நிமிடம் அங்கே வந்து நின்றான் ஜெய்ராம் கிருஷ்ணா.

                        

Advertisement