Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 25

                                 ஸ்ரீகா காதல் சொல்லி முடித்திருக்க, அதற்கான எந்த எதிர்வினையும் இல்லை ஜெய்யிடம். அவன் அமைதியாக ஸ்ரீகாவை வேடிக்கைப் பார்த்து நிற்க, காதல் சொன்னதற்கான எந்த அறிகுறியும் இல்லை அவளிடம். வெட்கமோ, படபடப்போ எதுவும் இல்லை.

                    கண்களில் சற்று முன்னால் பார்த்த கண்ணீரும், குழப்பமும் கூட விடைபெற்று இருந்தது. கைகளை கட்டிக் கொண்டு அவள் நின்ற விதம் “என்ன சொல்லப் போற.. சீக்கிரம் சொல்லு.” என்று கேட்பது போல் தோன்றியது ஜெய்க்கு. இவள் தன்னிடம் காதல் சொன்னாளா இல்லை மிரட்டல் விடுக்கிறாளா என்று அவனுக்கே மெல்லியதாய் ஒரு சந்தேகம்.

                       அந்த சந்தேகம் மெல்லிய சிரிப்பைக் கொடுக்க, இதழ்களில் தேங்கிய புன்னகையுடன் அவளை ஏறிட்டவன் “என்ன வேணும் உனக்கு…” என்று கைகளை கட்டிக் கொண்டு வினவ

                       “நீங்கதான் வேணும்ன்னு சொன்னா, சினிமாட்டிக்கா இருக்கும் சீனியர்..” என்றாள் ஸ்ரீகா.

                    ஜெய் “உன்கிட்ட இதை நான் நிச்சயமா எதிர்பார்க்கல ஸ்ரீகா. எனக்கு என்ன சொல்ல தெரியல. ஆனா, இப்போ இந்த காதல் எல்லாம் வேண்டாம்ன்னு தோணுது.” என்றான் பொறுமையாக

                       “இப்போ வேண்டாமா.. இல்ல, எப்போதுமேவா..” என்று அவள் கேட்டு நிற்க

                      “இந்தக் கேள்விக்கு உறுதியா என்னால பதில் சொல்ல முடியாது ஸ்ரீ. எண்ணங்கள் நேரத்திற்கு ஏற்ப மாறிட்டே இருக்கும். இதோ காலேஜ் முடியப் போகுது. வெளியே போறோம்… வேற வேற இடங்கள், சூழ்நிலை, மனிதர்கள் எல்லாமே மாறிடும். நானும் மாறலாம்.”

                       “உனக்கு போலியான நம்பிக்கையை கொடுக்க விருப்பமில்லை எனக்கு… உனக்கும் இது படிக்கிற வயசு. உன் எதிர்காலத்தை முடிவு பண்ணப்போறது உன் படிப்பு தான். தேவையில்லாத விஷயங்களை மனதில் ஏற்றி படிப்பை கோட்டை விட்டுடாத.” என்று அறிவுறுத்தினான் ஜெய்.

                       “முடிச்சிட்டீங்களா… இந்தப் படிப்பு எவ்ளோ முக்கியம்ன்னு எனக்கு தெரியும். ஆனா, இது என்னோட எதிர்காலம் இல்ல, அதுவும் தெரியும் எனக்கு. என்னோட கனவுகள் வேற… இலட்சியங்கள் வேற.. அது எதையும் நான் எப்போதும் மறந்ததே இல்லை.”

                       “என்னோட காதல் என் கனவுகளை பறிக்க முடியாது. ஒரு விஷயம் நீங்க சொன்னது சரி. எண்ணங்கள் மாறலாம். உங்களோட மனநிலை மாறலாம். அதுக்காக என் காதலை ஏத்துக்க முடியாது ன்னு சொல்றது நியாயமான விஷயம் தான்.”

                      “உங்களை நான் கட்டாயமெல்லாம் படுத்தமாட்டேன். ஆனால், என்னோட காதல் எப்போதும் மாறாது. என்னோட எண்ணங்கள் எப்போதுமே வலிமையானது தான். என் எண்ணங்களுக்கு சக்தி இருக்கு… நிச்சயமா எனக்கு அதுல நம்பிக்கை இருக்கு… “

                      “சோ… நான் மாறமாட்டேன். நீங்க என்னை நூறு சதவீதம் நம்பலாம். என்னைக்காவது உங்களோட எண்ணங்கள் என் காதலை ஏத்துக்க சொன்னால், உடனே என்கிட்டே வந்து சொல்லிடுங்க.” என்றாள் திடமாக

                      தான் இத்தனை சொல்லியும் ஏற்றுக் கொள்ளாமல், அவள் பிடியில் நிற்பவளைக் காண, லேசாக  எரிச்சல் எட்டிப் பார்த்தது ஜெய்க்கு. அப்படி என்ன பிடிவாதம் இந்த வயதில் என்று எண்ணமிட்டவன், அதை வார்த்தையிலும் வெளிப்படுத்திவிட,

                     

                       “வயசுக்கும் பிடிவாதத்திற்கும் என்ன சம்பந்தம். “என்று வினா எழுப்பினாள் அவள்.

                     ஜெய் அவளுக்கு பதில் கொடுக்காமல் முறைக்க, “சும்மா சும்மா முறைக்காதீங்க சீனியர். இப்போ எல்லாம் கொஞ்சம் அழகா வேற தெரியறீங்க..” என்று வேறு புறம் பார்த்தாள் ஸ்ரீகா.

                     ஜெய் அவளை கடுப்புடன் நோக்கி “இதையெல்லாம் உன் அண்ணாகிட்ட சொல்லவா..” என்று மிரட்ட

                    “ஈவினிங் வீட்டுக்குப் போனதும் நானே சொல்லிடுவேன்.. நீங்க வேற ஏன்  தனியா சொல்லணும்.. என்ன சீனியர் மிரட்டலா… நான் ஒளிச்சு மறைச்செல்லாம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை சீனியர். நான் தப்பு பண்ணல” என்று அடங்கா திமிருடன் நின்றவளை என்ற செய்வது என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்தான் ஜெய்.

                       ஸ்ரீகாவுக்கு அவனைப் பார்த்து பாவமாக இருந்ததோ என்னவோ. அவளே “உங்களுக்கு என்னை பிடிக்குமா சீனியர்..” என்று கேட்க

                     “பிடிச்சவங்களை எல்லாம் லவ் பண்ண முடியாது ஸ்ரீகா…முதல்ல அதை புரிஞ்சிக்கோ…” என்று கண்டித்தான் அவன்.

                      “ஆனா, எனக்கு உங்களை லவ் பண்ற அளவுக்கு பிடிச்சிருக்கு.. நீங்களும் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்..” என்று சிரிப்புடன் கண்களை சுருக்கி வேண்டியவள் “ஓகே… நீங்க யோசிச்சு சொல்லுங்க.. நான் கிளாஸ்க்கு போறேன்.” என்று கிளம்பி இருந்தாள்.

                        ஜெய் தான் மொத்தத்தில் குழம்பி நின்றிருந்தான். “என்னடா நினைச்சுட்டு இருக்கா இவ,… வந்தா லவ் சொன்னா, போய்ட்டா..” என்று புலம்பியது அவன் உள்ளம்.

                        நேற்று தன்னிடம் காதல் சொன்ன பெண்ணை தான் குழப்பியடித்து அனுப்பி வைத்தது இப்போது நினைவிற்கு வந்தது ஜெய்க்கு. ஆனால், நேற்று புரிந்து கொள்ளாமல் எரிச்சலூட்டிய அவளை திட்டி அனுப்பி வைத்து போல் ஸ்ரீகாவை அனுப்ப முடியவில்லையே ஏன்..??? என்று கேள்வி எழ, அதற்கு பதில் தேடும் தைரியம் இருக்கவில்லை அவனுக்கு.

                       ஸ்ரீகா அவள் அளவில் தெளிவாக இருக்க, ஜெய் தன் நிலையில் நிலையாக நின்றான். அவனுக்கு ஸ்ரீகாவிடம் மாறுபட்ட எண்ணங்கள் எதுவும் இல்லை இந்த நிமிடம் வரை. சில நாட்கள் அமைதியாக இருந்து விட்டால் அவளே புரிந்து கொண்டு ஒதுங்கி விடுவாள் என்பது தான் அப்போதைக்கு அவனின் எண்ணம்.

                      தீக்ஷியும், அவளும் ஒன்றாகவே சுற்றுவதால், இப்போதெல்லாம் தீக்ஷியின் வகுப்புக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டிருந்தான் ஜெய். ஸ்ரீகா கண்ணில் படாமல் இருப்பதே நல்லது என்பதால் அவனும் ஒதுங்கியே தான் இருந்தான்.

                      

                       ஆனால், அடுத்தடுத்து வந்த நாட்களில் முழுமையாக அவளை தேட வைத்தாள் ஸ்ரீகா. இத்தனைக்கும் அன்று காதல் சொன்னதோடு சரி. அதன்பின் அனாவசியமாக அவன் பார்வையில் கூடப் படுவதில்லை அவள்.

                         தீக்ஷியுடனான அவள் நட்பு அப்படியே இருக்க, அறிவன், துருவன், சர்வா என்று அவர்கள் குழுவுடன் தான் மொத்த நேரமும் சுற்றிக் கொண்டிருக்கிறாள் எப்போதும் போலவே. ஜெய்யிடம் காதல் சொன்னதுகூட நினைவில் இல்லை என்பது போல தான் சுற்றி வந்தாள் அவள்.

                        எந்த இடத்திலும் அவள் இயல்பைத் தொலைத்து விடாமல் ஸ்ரீகா வலம் வர, முற்றிலுமாக தன்னை இழந்து நின்றிருந்தான் ஜெய். என்னவோ ஸ்ரீகா தன்னை விடாமல் துரத்துவது போல ஒரு விம்பம். எந்த வகையிலும் அவன் பார்வையில் படாமல் அவனை சிறை பிடிக்க தொடங்கி இருந்தாள் அவள்.

                     ஆனால்,ஜெய்யின் மனதை அவனே முழுதாக அறியாமல் இருக்க,இன்னமும் குழப்ப நிலை தான் அவனுடையது. இவர்கள் கதை இப்படியே ஓடிக் கொண்டிருக்க, ஜெய்யின் இறுதித் தேர்வுகளும் முடிந்து இருந்தது அன்று.

                  காதல் சொல்லிச் சென்ற தினம் முதல் கண்ணில் படாதவள் அன்று ஜெய்யை தேடி வந்து நின்றாள். கல்லூரி இறுதி நாள் என்பதால், மாணவர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்க, தங்களின் பிரிவுத்துயரை கட்டியணைத்து கடக்க முயன்று கொண்டிருந்தனர் அவர்கள்.

                 அவர்களின் கொண்டாட்டம் முடிந்து அவர்கள் கிளம்பும் சமயம் தான் ஸ்ரீகா வந்தது. ஸ்ரீகா தன்னருகில் வரவும் சுதாரித்துக் கொண்டான் ஜெய். அவன் உடல் சற்றே நிமிர்ந்து கொள்ள “என்ன விஷயம்..” என்றான் ஏதுமற்ற குரலில்.

                    ஸ்ரீகாவுக்கு அவன் குரல் எதையோ உணர்த்த, அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியாமல் சில நிமிடங்கள் நின்றவள், அவன் கேள்விக்கு பதில் கொடுக்காமல் வந்த வழியே நடக்கத் தொடங்கிவிட்டாள். அவளின் வாடிய முகம் ஏதோ செய்ய, தனது வண்டியை ஓங்கி குத்திவிட்டு அவள் பின்னால் ஓடினான் ஜெய்.

                     அன்று அவள் காதலை சொன்ன அதே படிகளில் தான் சென்று அமர்ந்து கொண்டிருந்தாள் ஸ்ரீகா. முழங்கால்களை கையால் கட்டிக் கொண்டு யாருமற்ற அந்த விளையாட்டரங்கில் எதையோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

                      பார்த்த நிமிடம் “இவளுக்கென்ன தலையெழுத்தா..” என்றுதான் எண்ணினான் ஜெய். அதையே அவளிடம் கேட்கும் முடிவில் ஸ்ரீகாவை நெருங்க, வெய்யிலில் இருந்து தன்னை மறைத்துக் கொண்ட அவன் நிழலை பார்த்து, பின் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் ஸ்ரீகா.

                     இன்னும் கோபம் மீதமிருக்க, “அட.. என்ன சீனியர். கிளம்பலையா நீங்க.. இங்கே வந்து இருக்கீங்க..” என்று நக்கலாக அவள் கேட்க

                      “எதுக்கு என்னைத் தேடி வந்த..” என்று கேள்வி எழுப்பினான் ஜெய்.

                     “ஒன்னுமில்ல..” என்றாள் ஒரே வார்த்தையாக

                      “ஹேய்.. என்ன ஒண்ணுமில்ல.. முன்னாடி வந்து நின்று, அப்படி ஒரு லுக் கொடுத்திட்டு, இங்கே வந்து உட்கார்ந்தாச்சு… என்ன நினைச்சுட்டு இருக்க நீ..”என்று ஜெய் ஆத்திரத்துடன் கேட்க

                        “நான் என்ன விஷயமா வந்தேன் ன்னு உங்களுக்கு தெரியாதா சீனியர். அப்பவும் என்ன விஷயம் ன்னு நீங்க கேட்பிங்க.. நான் பதில் சொல்லனுமா.. என்னால முடியாது. அதான் வந்துட்டேன்..” என்றாள் திடமாக.

                      “திமிர் குறையுதா உனக்கு..”

                     “ஏன் குறையனும்..எல்லாம் அளவாத்தான் இருக்கு.. நீங்க என்ன நினைக்கறீங்க.. உங்களை லவ் பண்ணா, உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கணுமா நான்..” என்று அவனை பார்வையால் ஸ்ரீகா எரிக்க,

                      “நான் எப்போ அப்படி சொன்னேன்… ” என்று அமைதியாக வினவினான் ஜெய்.

                         ஸ்ரீகா அவன் பேச்சில் எரிச்சலுற்று, “நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம்.. கிளம்புங்க..” என்றுவிட

                   ” உன்கிட்ட பேசணும். உட்காரு..” என்று அவளிடம் கூறி படிகளில் அமர்ந்தான் ஜெய்.

                  ஸ்ரீகா அவனை சந்தேகமாக பார்வையிட்டுக் கொண்டே அவன் முகம் பார்த்து அமர, “நீ இன்னும் அதே மைண்ட்செட்ல தான் இருக்கியா..” என்று கேட்டு வைத்தான் ஜெய்.

                  “என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது உங்களுக்கு…மாறிட்டேன் ன்னு நினைக்கறீங்களா..” என்று ஸ்ரீகா பதில் கொடுக்க

                                 அவளுக்கு பதில் எதுவும் கூறாமல், மௌனமாக மோகனப்புன்னகை  ஒன்றை சிந்தினான் ஜெயராம் கிருஷ்ணா. ஸ்ரீகா அவன் சிரிப்பை புரியாமல் பார்க்க, அவள் தலையில் கையை வைத்து அழுத்தியவன்  “நீ ரொம்ப டேஞ்சரஸ் ஸ்ரீ..” என்று கூறி மீண்டும் சிரித்தான்.

                   ஸ்ரீகா அவனை விழியெடுக்காமல் நோக்க, “நிச்சயமா லவ் பண்றேன் ன்னு சொல்லமாட்டேன். எதிர்பார்க்காத…” என்று அவளை அதிர வைத்தான் அவன்.

                  ஸ்ரீ அப்போதும் மௌனம் சாதிக்க, “எனக்கு கொஞ்சம் டைம் கொடு… என்னோட காலேஜ் லைஃப் முடிஞ்சிடுச்சு ஸ்ரீ. நான் அடுத்து என்ன ன்னு யோசிக்கணும். உன் அளவுக்கு பெரிய கனவு, லட்சியம் லாம் இல்ல. ஆனா, என் அப்பா போல அரசியல்ல பெரிய ஆளா வரணும்ன்னு ஒரு ஆசை இருக்கு எனக்கு. அதற்காக நான் நிறைய உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும்.”

                         “உன் காதல் உன்னை பாதிக்காம இருக்கலாம். ஆனால், என்னை முழுசா பாதிக்குதே.. உன் கண்கள்ல தெரியுற அந்த ஏக்கமும், கேள்வியும் நிம்மதியா விடல என்னை. என்னை கொஞ்சம் யோசிக்க விடேன். நான் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து கொள்ளவா..” என்று அவனுக்கே உரிய அமைதியான, அழுத்தமான குரலில் ஜெய் உரைத்துவிட, அதற்குமேல் அவனிடம் என்ன பேச முடியும்.

                          தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சம்மதமாக தலையசைத்தாள் ஸ்ரீகா. முகம் இன்னமும் வாட்டத்துடனே இருக்க, “இந்த அழுத முகத்தோட தான் என்னை அனுப்பி வைக்க போறியா நீ.. எனக்கு இந்த முகமே ஞாபகத்துல இருக்கும் ஸ்ரீ. இப்படி பண்ணாத..” என்று கெஞ்சலாக ஜெய் கேட்டு நிற்க

                         அவனை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை ஸ்ரீகாவுக்கு. “லவ் பண்ணமாட்டானாம்.. ஆனா, நான் சிரிச்சிட்டே வழியனுப்பி வைக்கணுமாம். இவன் பொண்டாட்டியா நான்..” என்று நொடிப்பாக எண்ணமிட்டவள்   “அதான் லவ் வரல ன்னு சொல்லிட்டீங்க இல்ல. அப்புறம் என்ன.. கிளம்புங்க. என்னை லவ் பண்ணும்போது சிரிக்கிறேன்..” என்று அவள் எழுந்து கொள்ள, ஜெய் இன்னமும் அதே இடத்தில தான் அமர்ந்து இருந்தான்.

                         ஸ்ரீகா அவனைப் பார்த்து நிற்க, இன்னமும் சிரித்த முகம் தான். அவன் சிரிப்பு அவளை வெறுப்பேற்ற “சிரிக்காதிங்க… கோபமா வருது எனக்கு.” என்றாள் முறைப்புடன்.

                          ஜெய் அவள் பேச்சைக் கேட்காமல் மீண்டும் சிரிக்க, தன் கையில் இருந்த புத்தகத்தை அவன் தலைமீது போட்டு விட்டாள். ஜெய் அவள் செய்கையை எதிர்பார்த்தவன் போல் பக்கவாட்டில் சாய்ந்து நகர்ந்து, புத்தகத்தை கையில் பிடுங்கி கொண்டான்.

                              ஸ்ரீகா இப்போதும் முறைப்புடனே நிற்க, எழுந்து அவள் புத்தகங்களை அவளிடம் கொடுத்தவன் “நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு ஸ்ரீகா. பசங்க வெய்ட் பண்ணுவாங்க. போகணும்..” என்று நின்றான் ஜெய்.

                         ” “போங்க.. “என்றதோடு ஸ்ரீகா முடித்துக் கொள்ள,

                      “நிச்சயமா போய்தான் ஆகணும்.. ஒழுங்கா படி. தீக்ஷியையும் பார்த்துக்கோ.” என்று கட்டளையிட்டவனை என்ன செய்தால் தகும் என்று ஸ்ரீகா பார்க்க, அவள் பார்வையின் பொருள் உணர்ந்த ஜெய்யின் புன்னகை இன்னும் விரிந்தது.

                       அதே புன்னகையோடு அவள் தலையில் கையை வைத்து அழுத்தியவன் “சீக்கிரம் படிச்சு முடி. அப்புறம் லவ் பண்ணலாம்..” என்று புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றுவிட, அவன் விதி மீண்டும் அவனை அவளிடமே கொண்டு வந்துசேர்த்தது.

                       அரசியல் தான் எதிர்காலம் என்றவன் தந்தையின் முன் சென்று நிற்க, தந்தை அவனை மேற்படிப்பு படிக்க சொன்னார். ஜெய்க்கு விருப்பமே இல்லை என்றாலும், தந்தையை மறுத்துப் பேச முடியாமல் ஒப்புக் கொண்டான்.

                       “நமக்கு நிறைய தொழில் இருக்கு ஜெய். நீ முழுநேர அரசியல்ல இறங்கினாலும், நம்ம தொழில்களை நீதான் பார்த்தாகணும். யாரையும் நம்பியெல்லாம் விட முடியாது. அதுக்காக தான் சொல்றேன். இரண்டு வருஷம் தானே. MBA முடிச்சிடு…” என்று அவர் கூறியதை மறுக்க முடியவில்லை அவனால்.

                      தந்தையின் ஆலோசனையின் பேரில் மீண்டும் அதே கல்லூரியில் அவன் முதுநிலை வணிக நிர்வாகம் சேர்ந்துவிட, ஸ்ரீகாவுக்கு வசதியாகப் போனது. எப்போதும் போலவே தூர நின்று ரசித்துக் கொள்வாள் அவனை.

                    ஜெய்க்கும் முழுதாக தெளிவு தான். ஸ்ரீகாவைத் தவிர்த்து யாரையும் தன்னால் அந்த இடத்தில வைத்து பார்க்க முடியாது என்று புரிந்தது அவனுக்கு. அவள் படிப்பு முடியட்டும் என்று அவன் காலம் தாழ்த்த, அவன் மனதை அறிந்தவளாக அவனை தொந்தரவு செய்யாமல், தன்னை உணர்த்திக் கொண்டிருந்தாள் ஸ்ரீகா.

                          கல்லூரி நாட்கள் அதன்பாட்டிற்கு நகர, அந்த ஆண்டிற்கான கலைவிழாவுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது நிர்வாகம். ஸ்ரீகா நடனப்பிரிவில் பங்கெடுத்துக் கொள்வதாக இருக்க, தீக்ஷியின் பெயரையும் சேர்த்துக் கொடுத்துவிட்டாள் அவள்.

                   தீக்ஷி “எனக்கு என்னடி தெரியும்..” என்று பதற, “நான் இருக்கேன்ல தீக்ஷி.. பார்த்துக்கலாம்..” என்று அவளை சமாளித்து, அவளுக்கும் பயிற்சியளிக்க ஆரம்பித்திருந்தாள் ஸ்ரீகா. சர்வா, துருவன், அறிவன் என்று மூவருமே ஆளுக்கொரு பிரிவில் பங்கேற்க, கல்லூரி கலைவிழா களைகட்டியது அந்த ஆண்டு.

                    தீக்ஷி அவள் நடனமாடுவதை வீட்டில் ஆர்வ மிகுதியில் உளறி வைத்திருக்க, சீதா அப்போதே கண்டனமாக ஒரு பார்வை பார்த்தார் மகளை. ஆனால், இந்த முறை ஜெய்ராம் தங்கைக்கு ஆதரவாக நின்றுவிட, எதுவும் வாய் திறக்கவில்லை சீதா.

                  ஆனால், விதி வேறு விதத்தில் வேலையைக் காட்ட, கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஜெய்யின் தந்தையையே அழைத்திருந்தது நிர்வாகம்.

                   

                

                  

                     

                    

Advertisement