Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 23

 

                        அன்றைய நிகழ்வுக்குப்பின் ஜெயராம் கிருஷ்ணாவை சந்திக்கும் வாய்ப்பு அமையவே இல்லை ஸ்ரீகாவுக்கு. அவளின் வகுப்புகள், மற்ற வேலைகள் அவளை இழுத்துக் கொள்ள அவளும் அன்று ரசித்ததோடு ஜெய்யை மறந்து போயிருந்தாள்.

 

                        இதில் அபி வேறு ஜெய்ராம் கிருஷ்ணாவிடம் கோபப்பட்டது தவறு.. அவன் மிகவும் நல்லவன், வல்லவன் என்று தங்கைக்கு பாடமெடுத்திருக்க, அண்ணனுக்காக தலையாட்டிக் கொண்டாலும், ஜெய்யின்  ஒற்றைத்துளியாக எங்கோ ஒரு கோபம் இருந்தது.

 

                           மீண்டும் அவனைச் சந்தித்தால் கண்டிப்பாக முட்டிக் கொள்வோம் என்று அவளுக்கே தெரிந்திருக்க, அவன் தீக்ஷியின் அண்ணன் என்பதால் அவனைத் தவிர்த்து விடுவதே நல்லது என்று முடிவு செய்திருந்தாள் ஸ்ரீகா.

 

                           தீக்ஷியிடம் கூட அவனைப் பற்றிய பேச்சை தவிர்த்துவிடுவாள் பெரும்பாலும். அவள் என்னதான் விலக நினைத்தாலும், விதி என்று ஒன்று உள்ளதே.

 

                           ஸ்ரீகா எந்த அளவுக்கு ஜெய்ராம் கிருஷ்ணாவிடம் இருந்து விலகி இருக்க நினைத்தாளோ, அதே அளவிற்கு தீக்ஷியிடம் நெருங்கி கொண்டிருந்தாள் அவள். தீக்ஷிக்கும் நடனத்தில் ஆர்வம் இருக்க, ரேகாவின் நடன வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ள விரும்பினாள் அவள்.

 

                            ஸ்ரீகாவிடம் அவள் தன் விருப்பத்தை தெரிவிக்க, மகிழ்வுடன் ஒப்புக் கொண்டாள் ஸ்ரீகா. அன்றே  அன்னையிடம் பேசிவிட்டு விரைவில் சேர்ந்து கொள்வதாக கூறியவள், அதன்பிறகு அந்தப்பேச்சை எடுக்காமல் இருக்க, ஸ்ரீகாவே “என்னாச்சு தீக்ஷி.. எப்போ டான்ஸ் கிளாஸ் வரப்போற..” என்று கேட்டிருந்தாள்.

 

                           தீக்ஷி முதலில் தயங்கியவள் “இல்ல ஸ்ரீ.. நமக்கே படிக்க நிறைய இருக்கு.. எனக்கு அது முடிஞ்சதும் கம்ப்யூட்டர் கிளாஸ், ஹிந்தி ட்யூஷன் எல்லாம் இருக்குடி. இப்போ என்னால வர முடியாது ஸ்ரீகா.. சாரி..” என்று எப்படியோ ஒருவழியாக கூறிவிட்டாள்.

 

                         “ஏன் இதற்கு முன்னாடி உனக்கு ஹிந்தி கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் எல்லாம் இல்லையா..” என்று கேட்க நினைத்தாலும், தோழியின் குழப்பமான முகத்தைக் கண்டே அவளிடம் எதையும் கேட்கவில்லை ஸ்ரீகா. வெறுமனே “பரவாயில்லை தீக்ஷி… விடு.. அதுவும் முக்கியம் தானே..” என்று சிரிப்புடன் விட்டுவிட்டாள். அதன் பின் அதைப்பற்றிய பேச்சை அன்று முழுவதுமே அவள் எடுக்கவே இல்லை.

 

                     ஆனால், தீக்ஷிக்கு தன் செயல் குடைந்து கொண்டே இருக்க, அவளே “சாரி ஸ்ரீ.. அம்மா போகக்கூடாது சொல்லிட்டாங்கடி.. அண்ணாவும் கோபப்பட்டாங்க. டான்ஸ் எல்லாம் நமக்கு சரியா வராது. மினிஸ்டர் பொண்ணு நீ, அதற்கேற்ப நடந்துக்கோ ன்னு திட்டிட்டாங்க..” என்று கண்களில் துளிர்த்த கண்ணீருடன் ஒப்பித்துவிட்டாள் ஸ்ரீகாவிடம்.

 

                          ஸ்ரீகாவிற்கு தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். “ஏன் மினிஸ்டர் பொண்ணுன்னா டான்ஸ் ஆடக்கூடாதா… சட்டமா என்ன..” என்று தான் நினைத்தாள் அவள். அதற்கென்ன செய்ய முடியும்.?? அவள் ரேகாவின் வளர்ப்பாயிற்றே. அவருக்கு ஆண், பெண் என்று பேதமோ, பணம், அந்தஸ்து என்ற போதையோ எதுவுமே இருந்ததில்லையே. அதையே தன் மக்களுக்கும் கற்பித்து இருந்தார் அவர்.

 

                          ஸ்ரீகா ரேகாவின் மறுபதிப்பாக இருக்க, தீக்ஷியின் தாய் மீது வெறுப்பு தான் வந்தது. “எந்த காலத்துல இருக்காங்க..???” என்று திட்டிக் கொண்டவள் தீக்ஷியிடமும் அதையே கேட்டு வைக்க,

                                         “அம்மா கொஞ்சம் அப்படித்தான் ஸ்ரீ. அவங்களை சில விஷயங்கள்ல மாற்றவே முடியாது. அப்பா அம்மாவோடது லவ் மேரேஜ். அதனால அம்மா வீட்ல கொஞ்சம் ப்ராப்லம்ஸ்… தாத்தா கடைசி வரைக்கும் அம்மாவை ஏற்றுக் கொள்ளல. இப்பவும் அம்மாவுக்கு தாத்தா பேசல ன்னு வருத்தம் இருக்கு ஸ்ரீ. ஆனா, அதை வெளியே காட்டிக்க மாட்டாங்க.”

 

                  “அப்பாவோட சந்தோஷமா இருக்காங்க.. ஆனா, உள்ளுக்குள்ள எப்பவுமே ஒரு வலி இருக்கு. இங்கே பாட்டியும் முதல்ல அம்மாவை கொஞ்சம் குத்தி பேசிட்டாங்க போல. சோ, யாரும் குறை சொல்லிடக் கூடாதே ன்னு மெனக்கெடல் அதிகமாகவே இருக்கும் ஸ்ரீ. சில சமயம் இப்படி ஓவர் ப்ளோ கூட ஆகிடும்.”

 

                 “இது மட்டுமில்ல.. இன்னும் ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் இருக்கு. கூடவே, லவ் பண்ணிடக்கூடாது ன்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டரும் கூட இருக்கு. என்ன நியாயம் பாரு ஸ்ரீ. அவங்க லவ் மேரேஜ் பண்ணிப்பாங்களாம்.. ஆனா, நான் லவ் பண்ணவே கூடாதாம்.”

 

                   “நான் கண்டிப்பா லவ் மேரேஜ் தான். நேரா என் அப்பாகிட்ட போய் நின்னுடுவேன்.” என்று சிரிப்புடன் முடித்தாள் தீக்ஷி.

 

                   ஸ்ரீகாவுக்கு சீதாவை நினைத்து பாவமாக இருந்தாலும், ஏனோ அவர் தன் எண்ணங்களை தீக்ஷியின் மீது திணிப்பது பிடித்தமில்லை அவளுக்கு. அதைப் பிரதிபலிப்பவளாக “ஏன் இப்பவும் டான்ஸ் கிளாஸ்க்கு உன் அப்பாகிட்ட கேட்க வேண்டியது தானே..” என்று கேட்க

 

                  “ம்ச். வேண்டாம் ஸ்ரீ. அப்பா ஓகே சொன்னாலும், இவங்க முகத்தை தூக்கி வச்சுட்டே சுத்தி வருவாங்க. அது மெண்டல் டார்ச்சரா இருக்கும். விடு.. நான் நீ ஆடறதைப் பார்த்தே கலையை வளர்க்கிறேன்…” என்று தட்டிவிடுவது போல் கூறினாலும், அவள் குரலில் ஏக்கம் நன்றாகவே தெரிந்தது.

 

                  “நீ களையை வளர்ப்பியோ, கறிவேப்பிலையை வளர்ப்பியோ.. இப்போ பசிக்குது எனக்கு. கேன்டீன் போகலாம் வா..” என்று அவளை இழுத்துக் கொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்த கேன்டீனுக்கு வந்து சேர்ந்தாள் ஸ்ரீகா.

 

                  அவள் வரும்போதே துருவனுக்கு அழைக்க, அவனுக்கும் இடைவேளை நேரம் தான் என்பதால் அறிவன், சர்வாவையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீகா இருக்குமிடம் வந்தான் துருவ். ஒரே மேசையில் ஐந்து பேரும் அமர்ந்து கொள்ள, சமோசா, பப்ஸ், சாண்ட்விச் என்று அடுத்தடுத்து ஆர்டர் பறந்தது அங்கே.

 

                 இதில் தனித்தனியாக வாங்கி உண்ணாமல் வர வர ஒரே பிளேட்டில் இருந்தே அனைவரும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த வயதில் அதுவும் கல்லூரி பிள்ளைகளுக்கு அது சாதாரண ஒரு விஷயம். ஆனால், ஒரு பெண்ணின் அண்ணனாக ஜெய்ராம் கிருஷ்ணாவும் அப்படியே எடுத்துக் கொள்வான் என்று நினைக்க முடியாதே.

 

                 ஜெய்க்கு தலைவலிப்பது போல் இருக்க, அவனது வழக்கமான ப்ளாக் டீக்காக தான் அவன் கேன்டீன் வந்தது. அவனும் முதலில் தீக்ஷியை கவனிக்கவில்லை. ஆனால், நம் ஸ்ரீகாவின் குரல் சத்தமாக அவ்வபோது ஒலித்துக் கொண்டே இருக்க, ஏற்கனவே தலைவலியில் இருந்தவனுக்கு இன்னும் எரிச்சலாக இருந்தது. அந்த எரிச்சலோடு தான் அவன் திரும்பியதே.

 

                   அங்கே கண்ணில் கண்ட காட்சி இன்னும் அவனை மூர்க்கனாக்க, முயன்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான். அடுத்த இருபது நிமிடங்கள் அரட்டையில் கழிய, அதன்பிறகே அங்கிருந்து கிளம்பினர் அறிவன், துருவன், சர்வா மூவரும்.

 

                    பெண்களுக்கு அடுத்த வகுப்பு பிரீயாக இருக்க, அவர்கள் மட்டும் அங்கேயே தேங்கினர் இன்னும். ஜெய் அதுவரை கிளம்பும் எண்ணமில்லாமல் அமர்ந்திருந்தவன் இப்போது அவர்கள் கிளம்பவும், தங்கையை நெருங்கினான். தீக்ஷி அண்ணனின் முகத்தை வைத்தே அவன் மனநிலை சரியில்லை என்று உணர்ந்து கொள்ள, “என்னண்ணா..” என்று உடனே எழுந்து கொண்டாள்.

 

                 ஜெய்ராம் நிதானமாக அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, தங்கையை அழுத்தமாக பார்த்தவன், அடுத்து அங்கே சேர்ந்திருந்த தட்டுகளைப் பார்க்க, “அதுண்ணா.. ஸ்ரீயோட பிரதர்ஸ் வந்து இருந்தாங்க.” என்றாள் மெல்லிய தயக்கத்துடன்.

 

                  ஜெய்யின் பார்வை அப்போதும் மாறாமல் இருக்க, “அண்ணா..” என்று தீக்ஷி மீண்டும் அழைக்க, “உன்கிட்ட இதை எதிர்பார்க்கல தீக்ஷி. என்ன பண்ணிட்டு இருக்க நீ. பசங்களோட சேர்ந்துட்டு, இப்படி வெட்டி அரட்டை அடிக்கவா காலேஜ் வர்றோம். உன் காலேஜ் லைப் என்னால டிஸ்டர்ப் ஆகக்கூடாது ன்னு தான், நான் உன்னோட விஷயங்களை பெருசா கவனிக்கிறது இல்ல.”

 

                    “அதோட, நீ சரியா தான் இருப்பே ன்னு ஒரு நம்பிக்கை. ஆனா, அது தப்பு ன்னு பீல் பண்ண வைக்கிற நீ. நாம என்ன செய்தாலும், அப்பாவையும் யோசிக்கணும். காலேஜ் கேம்பஸ் தான்.. ஆனால், இங்கேயும் ஏதாவது நடக்கலாம். நம்ம சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுத்து, அவரை பதில் சொல்ற இடத்துல நிறுத்திடக் கூடாது.”

 

                  “கவனமா இருக்கணும் எப்போதும். அதோட நீ இப்படி செய்யுறது அம்மாவுக்கு தெரிஞ்சா, எவ்ளோ பீல் பண்ணுவாங்கன்னு யோசி.” என்றதும் அவள் தானாக தலையைக் குனிந்து கொண்டாள்.

 

                ஜெய் தொடர்ந்து “இதற்கு முன்ன இப்படி இல்லையே நீ.. இப்போ என்ன..” என்று கேட்க, அவன் பார்வை குற்றம்சாட்டும் பார்வையாக ஸ்ரீகாவின் மீது அழுத்தமாக படிந்தது.

 

                ஏற்கனவே அவன் பேச்சில் கடுப்பாகி இருந்த ஸ்ரீகா, அவன் பார்வையை கண்டதும் சட்டென பொங்கிவிட்டாள். “ஹேய் லுக்… இந்த இன்டைரக்டா பேசுற வேலை எல்லாம் இங்கே வேண்டாம். அவ என்ன பண்ணிட்டா இப்போ.. எதுக்காக இந்த லெக்ச்சர்.. என்ன நினைக்கிறீங்க நீங்க… நீங்கப் பேசுறது அத்தனையும் சரியான விஷயங்கள் ஆகிடுமா..??” என்று அவனை கையை நீட்டிக் கேள்வி கேட்டாள்.

 

                 தீக்ஷி இதில் இன்னும் அலறியவளாக நிமிர, ஜெய் இப்போதும் அழுத்தமாக தன் தங்கையைத் தான் பார்த்திருந்தான். தீக்ஷி ஸ்ரீகாவிடம் “ஸ்ரீ ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு..” என்று கெஞ்ச

 

                ஸ்ரீகா அதற்கும் ஜெய்யின் மீது தான் பாய்ந்தாள். “என்ன பிரச்சனை உங்களுக்கு.. கேள்வி கேட்டது நான், அவளை ஏன் முறைக்கிறீங்க. எனக்கு பதில் சொல்லுங்க.. என்ன தப்பு பண்ணிட்டா அவ. எதுக்காக இப்படி ரியாக்ட் பண்றிங்க..” என்று அவள் அழுத்தமாக கேள்வியெழுப்ப

 

                “உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். நான் ஏன் உனக்கு பதில் சொல்லணும். இவ என்னோட தங்கச்சி… நான் அவளைக் கண்டிக்கறேன். இதுல நீ ஏன் தலையிடணும்.. உன்னை ஏதாவது கேட்டேனா நான்??” என்று ஏளனமாக ஜெய் பார்க்க

 

               “பெட்டர்.. நீங்க என்னைக் கேள்வி கேட்கல.. கேட்டு இருந்தால் தெரியும்..” என்று முறைத்தவள் “தேங்க் காட்.. என் அண்ணன் இப்படி இல்ல. தயவு பண்ணி கேட்கிறேன்.. என் அண்ணனோட சேராதிங்க. அப்புறம் அவனும் உங்களை மாதிரி மாறிடப் போறான். “

 

                  “அதோட, இங்கே இருந்த மூணுப் பேரும் என்னோட பிரதர்ஸ். எங்களைப் பற்றி எங்களுக்கு தெரியும். அவளுக்கும் தெரிஞ்சதால தான், எங்களோட ப்ரெண்ட்ஷிப் வச்சு இருக்கா.. முதல்ல மனுஷங்களை படிக்க கத்துக்கோங்க. பிறகு, அவளுக்கு எப்படி நடந்துக்கணும்ன்னு பாடம் எடுக்கலாம்.”

 

                  “என்ன தெரியும் உங்களுக்கு. ஏதோ அவங்களை பொறுக்கி மாதிரி ட்ரீட் பண்ணி உங்க தங்கச்சிக்கு அட்வைஸ் பண்றிங்க.”என்று அவனைப் பேசவே விடாமல் ஸ்ரீகா பேசி முடிக்க

 

               “எனக்கு உன்னைப் பற்றி எந்த அக்கறையும் இல்ல. பட், என் தங்கச்சி யார்கிட்ட பேசணும், பேசக்கூடாது இதெல்லாம் நான் சொல்லுவேன்… அவ உன்னோட பேசுறது பிடிக்கல எனக்கு. எங்கே உன்னை மாதிரி பஜாரி ஆகிடுவாளோ ன்னு பயமா இருக்கு. சோ, அவகிட்ட பேசாத. “என்றவன் எழுந்து கொண்டான்.

 

                 ஸ்ரீகாவை அவன் வார்த்தைகள் காயப்படுத்த, கண்கள் கலங்கி விடாமல் தன்னை சமாளித்துக் கொண்டவள் “என்னை மாதிரியா…”என்று கிண்டலாக கேட்டு நிறுத்த, ஜெய்யின் கண்கள் சுருங்கியது.

                         “என்னைப் போல நிச்சயமா உங்க தங்கச்சி இருக்க முடியாது. எனக்கு முதுகெலும்பு இருக்கு.” என்றுவிட்டாள் ஸ்ரீகா.

 

                    ஜெய் “ஏய்..” என்று கையை உயர்த்தியவன் “பார் உன் நட்பின் லட்சணத்தை.” என்று தீக்ஷியை பார்க்க, ஸ்ரீகாவின் வார்த்தைகளில் வலியுடன் நின்றாள் தீக்ஷி.

 

                     ஸ்ரீகா தீக்ஷியிடம் “சாரி தீக்ஷி..” என்றவள் ஜெய்யிடம் “என்ன அடிப்பீங்களா… நான் தீக்ஷி ன்னு நினைச்சிட்டிங்க போல. என் மேல கையை வச்சு இருந்தா தெரிஞ்சிருக்கும்…” என்று நிறுத்தியவள்

 

                    “என் முடிவுகளை நானே எடுத்து தான் பழக்கம் எனக்கு. அதற்கான தைரியமும், தன்னம்பிக்கையும் முழுசா என்கிட்டே இருக்கு. எனக்கான சுதந்திரம் என் கைகள்ல இருக்கு. அதைஎப்படி உபயோகிக்கணும் ன்னு அடிப்படை அறிவும் இருக்கு.”

 

                    “ஆனாப் பாருங்க.. உங்க தங்கச்சி யாரோட பேசணும், ப்ரெண்ட்ஷிப் வைக்கணும் ன்னு கூட நீங்க தான் முடிவு பண்ண வேண்டி இருக்கு. ஏன்னா, அவளுக்கு தனியா முடிவெடுக்க தெரியாதே. அவளோட நியாயமான ஆசைகளுக்கு கூட, அவ உங்களோட அனுமதியை வாங்கி ஆகணும் இல்லையா…”

 

                   “எப்படி இப்படி ஒரு மனநிலைல இருக்கீங்க… ப்பா.. கஷ்டம்…” தோள்களை குலுக்கி கொண்டவள் “இப்போ என்ன.. உங்க தங்கச்சி என்கிட்டே பேசக்கூடாது..அதானே.. அதுக்காக இன்னும் அழ வைக்காதிங்க அவளை. நானே இனி அவகிட்ட பேசமாட்டேன்.போதுமா..” என்றதோடு தன் புத்தகங்களையும், பையையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் ஸ்ரீகா.

 

                       தீக்ஷி கண்ணீருடன் அவளைப் பார்த்து நிற்க, கண்டு கொள்ளாமல் கிளம்பி இருந்தாள் அவள். தீக்ஷியின் அமைதியில் சற்றே கோபம் தான் ஸ்ரீகாவுக்கு. நியாயமான விஷயங்களுக்கு கூட , வாய் திறந்து பேச மாட்டாளா என்று ஆதங்கம் தான். “இனி நான் வேண்டுமென்றால் நீயே உன்  வா..” என்ற எண்ணத்தில் தான் வேகமாக நகர்ந்து விட்டாள்.

 

                       ஆனால், ஸ்ரீகா சென்றபின்பும் கூட தீக்ஷி அப்படியே கண்ணீருடன் நின்றாளே தவிர, ஜெய்யை எதிர்த்தோ, இல்லை கெஞ்சலாகவோ எதுவுமே கேட்கவே இல்லை. சில நிமிடங்கள் அவள் சென்ற திசைப் பார்த்தவள் பின் தன் பையை எடுத்துக் கொண்டு அமைதியாக நடக்கத் தொடங்கிவிட்டாள்.

 

                      ஜெய்க்கு ஸ்ரீகாவின் பேச்சு சாட்டையடி தான் போலும். இயல்பிலேயே தங்கை மீது பாசம் அதிகம் அவனுக்கு. தீக்ஷியும் அப்படிதான். எப்போதுமே “அண்ணா, அண்ணா” என்று அவன் பின்னால் சுற்றி வருபவள் தான்.

 

                       அவள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும்  பலமுறை யோசித்து தான் முடிவெடுப்பான் ஜெய். அதுவும் தந்தை அரசியலில் இருப்பதால் வீட்டில் இருப்பதே அரிது என்றாகிவிட, தீக்ஷியின் சின்ன சின்ன தேவைகள் கூட ஜெய்யிடம் தான் வந்து நிற்கும்.

 

                          அவனும் வெகு பிரியத்துடன் தான் அவளின் எண்ணங்களை நிறைவேற்றி வைத்திருக்கிறான் இதுவரையில். அப்படியிருக்க, இந்தப்பெண் என்ன பேசி விட்டாள் என்று ஆதங்கமாக இருந்தாலும், அவனது மனமே அவள் சொல்வது சரிதானோ என்று சிந்திக்க தொடங்கிவிட்டது.

 

                       அதுவும் தீக்ஷியின் மறுப்பில்லாத மௌனம் இன்னும் சுட்டது. தங்கையை புரிந்து கொள்ளவே இல்லையோ என்று நினைத்தவனுக்கு, அப்போது தான் ஸ்ரீகா பேச மாட்டேன் என்று சென்றபோதும் கூட, தங்கை தன்னிடம் எதுவும் கேட்டு நிற்கவில்லை.அவள் பாட்டிற்கு கலங்கி தவித்து, பின் அவளாகவே தேற்றிக் கொண்டு கிளம்பிவிட்டாள் என்பதும் உரைத்தது.

 

                      இதுபோல இன்னும் எத்தனையோ என்று துடித்தது அவன் மனம்.

 

                          

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                        

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement