Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 21

                        தனக்கு முன்பாக நின்றிருந்த தன் சித்திரப் பெண்ணை ஆழ்ந்து தன்னுள் நிறைத்துக் கொண்டிருந்தான் சர்வா. அவளின் கண்களில் குடி கொண்டிருந்த கனல், அவள் முகத்தை சிவக்க வைத்திருக்க, அதில் கள்வெறி கொண்டது அவன் மனது.

                        “அவளுக்கு நான் வேண்டாம்…” என்று நினைத்ததுண்டே தவிர, “எனக்கு அவள் வேண்டாம்…” என்று அவன் எண்ணம் சென்றதே இல்லை. அவனைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த படைப்பு அவள், தன்னைவிட சிறந்த ஒருவனை பெரும் தகுதி உடையவள் அவள் என்ற எண்ணம் தான்.

                        தனது குடும்பச் சூழல், ஸ்ரீகா-ஜெய் காதல் என்று அவன் தயக்கத்திற்கான காரணங்கள் தடையில்லாமல் அணிவகுத்ததில் எப்போதுமே சற்று தள்ளி நின்றே பழக்கப்பட்டுவிட்டான் சர்வா. ஆனாலும், சில நாட்களுக்கு முன்பு வரை அவனை விடாமல் இழுத்துப் பிடித்து காதலை யாசித்தவள் தீக்ஷிதா தான்.

                       விலகிச் சென்றாலும் விடாமல் துரத்தி நேசத்தை மட்டுமே பரிசளிக்கும் தன் தீக்ஷியை நிரம்ப பிடிக்கும் சர்வாவுக்கு. அவள் முன்பு கோப முகமூடி அணிந்து கொண்டாலும், அதன் பின் ஒளிந்து இருந்ததெல்லாம் காதல் மட்டுமே. அதுவும் எத்தனை தூரம் விரட்ட முடியுமோ, அத்தனை தூரம் விரட்டிய பிறகும், காலைச் சுற்றி வரும் நாய்க்குட்டியாய் கண்முன் வந்து நிற்கும் அவன் கர்வம் அவள்.

                      காதலிப்பதை விட சுகமானது அல்லவா…… காதலிக்கப் படுகிறோம் என்ற உணர்வு. அதைப் பரிபூரணமாக அனுபவிக்க வைத்தாள் தீக்ஷி. ஆனால், அத்தனை இன்பத்தையும் அவன் மொத்தமாக தொலைத்து நின்றது ஸ்ரீகா கடத்தப்பட்ட நாளில் தான்.

                    அன்று அவன் வாயில் சனி தான் குடி புகுந்ததோ என்னவோ, ஏகத்திற்கும் பேசி விட்டிருந்தான் காதலி என்றே ஒப்புக் கொள்ளாத தன் கர்வத்தை. எப்போதும் அவனை துரத்தி வரும் காதல் இம்முறை தவிக்கவிட்டது. மொத்தமாக தன்னைக் குறுக்கி கொண்டாள் பெண்.

                   தன் காதல் விழலுக்கு இறைத்த நீர் என்று முடிவெடுத்து விட்டாளோ என்று அவன் அஞ்சும் அளவுக்கு அவனுக்கு ஆட்டம் காட்டி இருந்தாள் இந்த சில நாட்களில். கிட்டத்தட்ட, ஒரு வாரகாலம் அவள் பின்னோடு அலைந்து திரிந்து, இதற்குமேல் அலுவலகத்தை கவனிக்காமல் விட முடியாது என்ற எண்ணத்தில் தான் இங்கே வந்து அமர்ந்திருந்தான் அவன்.

                    ஆனால், வந்து அமர்ந்த நொடி தொட்டே, “விட்டுவிட்டாளா என்னை..” என்று மனம் அடித்துக் கொண்டே இருக்க, அவன் இதயத்தின் துடிப்புகள் கூட, “தீக்ஷி..” என்று அவள் பெயரை உச்சரிக்கிறதோ என்று மெல்லிய சந்தேகம் அவனுள்.

                    அவன் பிரித்து கையில் வைத்திருந்த அந்த கோப்பு எதைப் பற்றியது என்று கேட்டால் கூட, நிச்சயம் பதில் சொல்ல முடியாத நிலை தான் அவனுடையது. அங்கே இருக்கவும் முடியாமல், எழுந்தால் எங்கே செல்வது என்றும் புரியாமல் அவன் அமர்ந்திருந்த நேரமது.

                     அந்த சலிப்பான நிமிடங்களில் தென்றல் சாரல் வீசி வரும் என்று அவன் நினைத்திருக்க முடியுமா… ஆனால் வந்தது அவன் தென்றல். என்ன…. குணம் மாறுபட்டுப் போயிருந்தது. தென்றல் தன் இனிமையை மறைத்து புயலாக தன் வடிவை மாற்றிக் கொண்டிருந்தது.

                     தனக்கு முன்னால் அத்தனை கோபத்துடன் வந்து நின்றவள் தன்னவள் தானா என்று உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்தான் சர்வா. தன்னைக் கண்டாலே காதலை அள்ளித்தரும் விழிகள், இன்று கடுமையை வாரியிறைக்க, அவளைப் புரிந்து கொண்டவனாக சரணடையும் முடிவில் தான் எழுந்தான் சர்வானந்த்.

                     ஆனால், அவனைப் பேசவே விடாமல், ” என்னடா நினைச்சுட்டு இருக்க நீ… உன் தேவதாஸ் வேஷமெல்லாம் ஒரு வாரம் தானா… அதற்குள் உன் வேலையைப் பார்க்க ஆபிஸ் வருவாயா… நான் எப்படிப் போனாலும் கவலை இல்லையா உனக்கு…” என்று அவளின் வழக்கத்திற்கு மாறாக சத்தமாக கத்தி இருந்தாள் தீக்ஷி.

                      அவள் பேச்சில் பெரிதாக கோபமெல்லாம் வரவில்லை சர்வாவுக்கு. மாறாக அவள் கண்களில் இருந்த கண்ணீரின் தடங்கள் தான் வேதனைப்படுத்தியது அவனை. தன் காதல் அழ வைக்கிறதா இவளை??… தான் இவளுக்கு என்ன நியாயம் செய்யவில்லையா??… என்று கேள்வியெழுப்பிக் கொண்டவன் பதிலை அவள் கண்களில் தேடத் தொடங்கி இருந்தான்.

                    கண்ணீரில் முத்தெடுத்த கண்களில் பதிலுக்கு பதிலாகப்,  பாவி அவன் முகமே தெரிய, தன் கேள்விகளுக்கு விடை கிடைத்த உணர்வுடன் அவளை நெருங்கினான் சர்வானந்த். இன்னும் சில அடிகளில் அவளை தொட்டு விடுவேன் என்று மனம் கணக்கிடும் வேளையில், அவனை நெருங்க விடாமல் பின்னால் தள்ளிச் சென்றது அவன் கர்வம்.

                   கண்களில் இன்னும் கோபம் மீதமிருக்க, அதை அவன் அருகாமையில் தொலைத்து விடக் கூடாதே என்ற பதட்டமும் குடி புகுந்திருந்தது. அவளை நெருங்கவிடாமல் தகித்து எரித்தாலும், அவளின் உணர்வுகள் அணுஅணுவாக அத்துப்படி ஆகிற்றே அவனுக்கு. இந்தப் பதட்டம் பிடிபடாமலா இருக்கும்.

                   அவளைப் படித்து விட்ட கணமே, அவனின் கர்வம் மீண்டு விட்டது அவன் கண்களில். அவனை அறிந்தவளுக்கு அவனின் இந்த கர்வப் பார்வையும் அகப்பட்டுவிட்டது. அதில் அவனின் குற்ற நடவடிக்கைகள் இன்னும் கூடிப் போக, “அங்கேயே நில்லுங்க. என்னை நெருங்க வேண்டாம் சர்வா…” என்று எச்சரித்தது அவனது கர்வம்.

                  ஆனால், எச்சரிக்கைகளை எல்லாம் எடுத்து சாப்பிடும் வேகத்தில் இருந்தவன், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் இன்னும் முன்னேறினான். அவள் கால்கள் தானாக பின்னடைந்தாலும், பார்வை “நெருங்குவாயா நீ..” என்று வாளின் நீட்சியாய் நீண்டது.

                    அவளின் பார்வையில் கண்களின் சுவாரசியம் கூடிப் போக, “நெருங்கினால் என்ன நடக்கும்..” என்று கேள்வியுடன் மூச்சுத் தொடும் தூரத்தை தொட்டுவிட்டான் அவன். அவனை குத்திக் கிழித்து எறியும் வேகத்தில் வந்தவள் தான். ஆனால், அதற்குப் பதிலாக வழக்கமான அவனின் சிடுசிடுப்பையும், கடுஞ்சொற்களையும் தான் எதிர்பார்த்திருந்தாள் பெண்.

                     இப்படி கண்களில் என்னவென்றே புரியாத உணர்வுடன் அவளை நெருங்கும் இந்த சர்வா நிச்சயம் புதிது அவளுக்கு. கத்திக் கூச்சலிட்டு விரட்டி அடிக்கும் அந்த முரடனை விட, இவன் அச்சம் கொடுத்தான். அவன் பேசும் அத்தனை வார்த்தைகளையும் நொடியில் துடைத்தெறிந்து தூக்கி வீசிவிடுபவள், இதோ தனக்கு முன்னால் நிற்கும் இவனது ஒற்றைப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தயங்குகிறாள்.

                     “இன்றைக்கு என்ன ஆகிற்று இவனுக்கு..” என்று எண்ணங்கள் ஊர்வலம் செல்ல, அவள் ஊர்வலத்தை தடை செய்பவன் போல, தன் மூச்சுக் காற்றினால் திரையிட்டான் சர்வா. அவன் சுவாசம் தன்மீது பதிந்த நொடி, பெண்மைக்கே உண்டான எதேச்சையான கூச்சத்தில் சட்டென்று விலக முயன்று ஒரு அடி எடுத்து வைக்க முயன்றாள் தீக்ஷி.

                       ஆம். முயற்சி மட்டுமே அவளுடையது. சர்வாதான் அவளை அசையவிடாமல் பிடித்து நிறுத்தி இருந்தானே. அதுவும் அந்த இளநீல நிற சுவற்றுக்கும், அவளுக்கும் இடையே தன் கைகளை கம்பிகளாக்கி சிறை பிடித்து வைத்துக் கொண்டிருந்தான் அவளை.

                   தீக்ஷியின் தொண்டைக்குழி ஏறி இறங்க, மூச்சுக்காற்றின் வேகம் சற்றே அதிகரித்தது. நெற்றியில் பொட்டு பொட்டாக வியர்த்து வழிய, தன் வலதுகையின் ஆட்காட்டி விரலால் மெல்ல அவள் வியர்வைத் துளியை தொட்டவன் “என்ன ஆச்சு தீக்ஷி… மூச்சு வாங்குதா…” என்று கையை கீழே இறக்க, அவள் மூக்கிற்கும் அவன் விரலிற்கும் இடையே ஒரு அங்குலத்திற்கும் குறைவான தூரம் தான்.

                     தீக்ஷி தடதடத்த இதயத்தோடு அவனை ஏறிட, மெல்ல மெல்ல அவளின் உதடுகள், வாய், தாடை, கழுத்து என்று நீண்டது அவன் கைவிரல்கள். தீக்ஷியின் உடல் மெல்லிய நடுக்கம் கொள்ள, அவளின் மூச்சு விடும் வேகம் இன்னுமே கூடிப் போனது. இதயம் துடிப்பது வெளியே கேட்கிறதோ என்று சந்தேகிக்கும் அளவு, அவளின் இதயத்துடிப்பு இருக்க, சர்வாவின் கவனமும் அங்கே தான் இருந்தது போலும்.

                       “என்ன பண்ணுது தீக்ஷி… மூச்சு விட முடியலையா..” என்றவன் தன் கைவிரல்களின் தூரத்தைக் குறைத்து இன்னும் நெருங்க, “கொன்னுடுவேன் சர்வா..” என்ற அவள் வார்த்தையில் அப்படியே அடங்கி நின்றான்.

                         தீக்ஷி இப்போது அவன் நீட்டிக் கொண்டிருந்த விரலை தட்டி விட்டவள், அவன் நெஞ்சிலும் கையை வைத்து பின்னால் தள்ளிவிட, அவளுக்கு சிரமம் கொடுக்கவில்லை அவன். அவளின் மெல்லிய விரல்களின் தடவலுக்கே, இரண்டடிகள் தள்ளி நின்றான். தீக்ஷி இன்னும் தீவிரமாக அவனை முறைத்து வைக்க, இப்போது கைகளை கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றான் காதலன்.

                        அவனின் இந்த அசராத தன்மை, தீக்ஷியை அலைக்கழிக்க “நீ வேண்டாம் எனக்கு.. இதை சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்.” என்றாள் அழுத்தமாக.

                         “ம்ம்… ஓகே…” என்று தலையசைத்து அவன் ஏற்றுக் கொள்ள, அதில் இன்னும் கலவரம் பெண் நெஞ்சில். அவனை நெருங்கி அவன் கன்னத்தில் பட்டென்று அடித்தவள் “ஓகே ன்னு சொல்றவன், எதுக்குடா பக்கத்தில் வந்த.. ஏன் என்னை தொட்ட… அன்றைக்கு என்ன உரிமையில்லை என்கிட்டே அப்படி பேசின…” என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அடி வைக்க, சட்டென அவளின் கையைப் பிடித்துக் கன்னத்தோடு அழுத்திக் கொண்டான் சர்வா.

                        “கை வலிக்கப் போகுது தீக்ஷிமா…” என்று கொஞ்சலான வார்த்தைகள் வேறு. அவள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் கிடைக்காத அவன் கொஞ்சல்… இப்போது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளும் எண்ணமில்லாமல் அவள்.

                         “இதைவிட அதிகமா வலிச்சது நீ பேசினது.” என்று சட்டென பதில் கொடுத்தவள், அவன் பிடியில் இருந்த தன் கைகளை விலக்கிக் கொண்டாள்.

                          “என்னால உன் காதலுக்காக தவம் எல்லாம் பண்ண முடியாது. நீ எந்த நிமிஷம் என்னைப் பார்ப்பாய் என்று கனவு கண்டுட்டே இருக்க முடியாது என்னால். எனக்கு இந்த அவஸ்தை வேண்டாம். இதை எனக்கு கொடுக்கிற நீயும் வேண்டாம்.”

                           “என் அப்பா சொன்னாங்க.. அண்ணன் கல்யாணம் முடியவும் எனக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்களாம். நான் கண்ணை மூடிட்டு எவனோ ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டிட்டுப் போறேன். ஆனா, இதற்குமேல் உன் பின்னால வரமாட்டேன். நீயும் என்னைக் கூப்பிடக் கூடாது.”

                          “என்ன நடந்தாலும், நீ என்பக்கம் வரக்கூடாது..” என்று கட்டளையிட்டவள் அந்த இடத்திலிருந்து விலகிச் செல்ல முற்பட,

                            “ஒரு நிமிஷம்.” என்று அவளை நிறுத்தி இருந்தான் சர்வா.

                             அவனை விட்டு மூன்றடி தூரத்தில் நின்றிருந்தவள் அங்கிருந்தபடியே அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்க்க, “ஏன் கண்ணை மூடிட்டு கழுத்தை நீட்டுவ. கண்ணைத் திறந்தா, சர்வானந்த் தெரிவானோ…??” என்று மயக்கும் புன்னகை ஒன்றை வீசினான்.

Advertisement