Advertisement

                   “ஏய் லூசு.. நாந்தான் இங்கே மியூசிக் போடறது. என்னை வெளியே போக சொல்லுவியா..” என்று அவன் நிற்க

                   “பெத்த பெருமைதான்.. அதான் உன் கைப்புள்ள இருக்கு இல்ல.. அவன் பார்த்துப்பான்.. நீ கிளம்பு..” என்று அவள் முறைக்க

                    “பாட்டு முடியாம இருக்கட்டும்.. அப்புறம் பேசறேன்.. ” என்றவன் சர்வாவிடம் “முடிஞ்சா பாரு.. இல்ல .ரெண்டையும் துரத்திவிடு..” என்றுவிட்டு வெளியேறினான்.

                    அவன் வெளியேறவும், அறிவனிடம் திரும்பியவள் “ஏண்டா இப்படி என் மானத்தை வாங்கற… அவன் என்ன பேயா பிசாசா… ” என்று கத்த

                    அவளைப் பார்த்து மௌனமாக சிரித்தான் அறிவன். “ஒழுங்கா பாடுற..” என்று அறிவனிடம் அவள் அறிவுறுத்த

                   சர்வா அவளை அழைத்துக் கொண்டு அந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்தவன் “நான் பாடறேன் அறிவா.. அதையே பாலோவ் பண்ணிக்கோ..” என்றவன் ஒருமுறை பாடிக் காட்ட

                   அதை அப்படியே திருப்பி பாடினான் அறிவு. என்னவோ சர்வாவை விட அவன் நன்றாக படுவதாக தோன்றியது ஸ்ரீகாவுக்கு. அதை அவள் அப்படியே கூறவும், “அப்புறம் என்ன.. சூப்பரா பாடுவ நீ.. ம்ம்” என்று தலையசைத்து வெளியேறியவன் ஸ்ரீகாவை வெளியே அழைத்து வரவில்லை.

                 ஸ்ரீகா அமைதியாக அவன் கையை பிடித்து நிற்க, வெளியே நின்று கையசைத்த சர்வா, மெல்ல தலையசைக்க அறிவனின் குரல் ரீங்காரமாக இசைத்தது அங்கே. அந்த பாடல் ஸ்ரீகா ஊகித்தது போல, ஹீரோ இன்ட்ரோ வாக இருக்க, அறிவனின் கணீர் குரல் பாந்தமாக பொருந்திக் கொண்டது பாடலில்.

                                               வெற்றிகரமாக அவன் பாடலை முடித்து நிமிர, ஸ்ரீகாவின் கையில் இருந்த அவன் கைகள் வியர்த்து விறுவிறுத்து போயிருந்தது. சர்வா வெளியே இருந்து கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்க, ஸ்ரீகா உற்சாகமாகி விட்டாள். அறிவனின் கையை பிடித்துக் கொண்டு நின்ற இடத்தில குதித்தவள், அவனை அணைத்து விடுவித்து வெளியே வந்தாள்.

                              துருவனும் அப்போது தான் வெளியே இருந்து அறைக்குள் நுழைய, இவளின் கொண்டாட்டத்தை பார்த்ததுமே புரிந்து விட்டது அவனுக்கு. அவன் சர்வாவை பார்க்க, அவன் கையை உயர்த்திக் காட்டவும்,அமைதியாக சோஃபாவில் அமர்ந்துவிட்டான்.

                          அறிவன் அந்த அறையில் இருந்து வெளியே வர, அவனை நிமிர்ந்து பார்த்தான் துருவன். “உன்னை எனக்கு தெரியும்டா..” என்பது போல், அறிவன் துருவனை பார்க்க, “அதான்.. பாடியாச்சு இல்ல. கிளம்பு..” என்று நக்கலாக கூறி தலையை பின்னால் சாய்த்துக் கொண்டான் அவன்.

                        ஸ்ரீகா “கிளம்புன்னா… எங்கே கிளம்ப.. எங்க பெய்மென்ட் எடு.. எவ்ளோ கஷ்டப்பட்டு பாடி இருக்கோம்.. கிளம்பாமே…” என்று நக்கலடிக்க

                        “அடி வாங்காம ஓடிடு..” என்று மிரட்டினான் துருவன்.

                       “துருவா.. இதெல்லாம் டூ மச்டா.. ” என்று ஸ்ரீகா நிற்க

                       “அவன் என்னை அலைய விட்டதுக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. இதுல பெய்மென்ட் வேணுமா உனக்கு… உங்கள பாட வச்சதுக்கு நீங்க தான் எனக்கு பெய்மென்ட் தரணும்..” என்றான் நக்கலாக

                        ஸ்ரீகா அறிவனை திரும்பி பார்க்க “உனக்கு ஐஸ் கிரீம் தானே.. நான் வாங்கித் தரேன் வா..” என்று அவன் அழைக்க

                        “மச்சி நானும்டா..” என்று உடன் சேர்ந்து கொண்டான் சர்வா.

                       “இவனோட கூட்டு சேர்ந்தல்ல. போ.. அவனோடவே போ..” என்று அவனை ஸ்ரீகா மிரட்ட

                       “கிளம்பட்டும் விடுடா… உனக்கு நான் ஐஸ் கிரீம் வாங்கித் தரேன்..” என்றான் துருவன்.

                       “ரொம்ப பண்ணிட்டு இருக்க துருவா…என்ன பண்ண சொல்ற இப்போ.. அதான் அவன் பாடிட்டான் இல்ல..” என்று ஸ்ரீகா துருவனிடம் நேராகவே கேட்க

                       “ரொம்ப சீக்கிரம் பாடிட்டாரு சாரூ… ரெண்டு வாரமா என்னை அலைய விட்டு இருக்கான். ஒழுங்கா அமைதியா போய்டு ஸ்ரீ.. அவனுக்கு சப்போர்ட் பண்ணி அடி வாங்காத என்கிட்டே.” என்று துருவன் கொதிக்க

                        “டேய் வேணும்ன்னு பண்ணலடா… நிஜமாவே எனக்கு வரல துருவா..” என்று அறிவு பரிதாபமாக கூற

                       “என் வாயில நல்லா வந்திடும் அறிவா… உனக்கு வராது ன்னு தெரிஞ்சா, உன்னை பாட சொல்லுவேனா நான்.. என்மேல நம்பிக்கை வைக்கமாட்டியா டா.. “

                       “எத்தனை டைம் சொல்லி கொடுத்திருப்பேன். அப்படி என்னடா பயம் உனக்கு… இப்போ இந்த குட்டிபிசாச பார்த்ததும் தைரியம் வந்துடுச்சா…” என்று அவன் பொரிய

                        “ஹேய்.. யாரடா குட்டிப்பிசாசு சொல்ற.. எருமைமாடு..” என்று ஸ்ரீகா கோபத்துடன் அவனை நெருங்க

                       துருவன் அவளிடம் கோபமாக திரும்ப, அவன் கையை பிடித்து நிறுத்தினான் சர்வா. “உங்களால தாண்டா.. அவளுக்கு வாய் அதிகமா ஆகிட்டு இருக்கு.. இன்னிக்கு வாங்குற பாரு..” என்று துருவன் அவளிடம் நெருங்க, கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டாள் ஸ்ரீகா.

                       துருவன் அவளை துரத்துவதை விட்டு அவனின் சொந்த உபயோகத்திற்காக, அங்கே இருந்த மற்றொரு அறைக்குள் நுழைய, தூரமாக நின்று அவனைப் பார்த்திருந்தாள் ஸ்ரீகா. அவன் உள்ளே நுழையவும், நின்ற இடத்தில் அவள் நிற்க, கையில் ஒரு பேமிலி பாக் ஐஸ் கிரீமுடன் வெளியே வந்தான் அவன்.

                     ஸ்ரீ அடுத்த நொடி துள்ளிக் குதித்துக் கொண்டு அவனிடம் ஓட, கைக்கு அருகில் வந்தவளின் காதை பிடித்து திருகினான் துருவன். அவனை கண்டு கொள்ளாமல் அவன் கையிலிருந்த ஐஸ் கிரீமை வாங்கி கொண்டவள், அவனது அறைக்குள் நுழைந்து அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொள்ள, நண்பர்களை அழைத்து விட்டு தானும் தன் அறைக்குள் நுழைந்தான் துருவன்.

                     சர்வா “அடிப்பாவி.. அது எனக்கு வச்சது..” என்று அவள் அருகில் வர

                     “ஐஸ்கிரீம்ல கையை வச்ச, முதல் டெட்பாடி நீதான்..” என்று வடிவேலு மாடுலேஷனில் கூறியவள், சோஃபாவில் இருந்து எழுந்து கட்டிலின் மீது ஏறி நின்றுவிட்டாள்.

                      “ஸ்ரீ எனக்கும் கொஞ்சம்டி.. நாந்தான் கேட்டேன் அவன்கிட்ட..” என்று அவன் முறைக்க

                    “நீ கேட்ட, பட் கிடைச்சது எனக்கு தான்..” என்றவள் “கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு..” என்று சம்பந்தமே இல்லாமல் கேட்க

                    “அது எதுக்கு எனக்கு. ஐஸ் கிரீம் கொடு..” என்றவன் கட்டிலை நெருங்க

                    “அங்கேயே நில்லுடா…” என்று கத்திக் கொண்டே மீண்டும் ஒரு வாய் அள்ளி  திணித்துக் கொண்டாள் அவள்.

                      “டேய்.. காலி பண்றாடா..” என்று சர்வா துருவனிடம் முறையிட

                    “உன் வாய்ஸ் கெட்டுப் போய்டும் சர்வா.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்… என் பேச்சைக் கேளு..” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் ஒரு வாய் திணித்துக் கொண்டாள்.

                      “ஹேய் டார்லிங்.. எனக்கு கொடுடி.. உன் பேச்சைக் கேட்டு பாட்டெல்லாம் பாடி இருக்கேன்..” என்று கூற

                     “நீயும் சிங்கர் ஆகிட்ட அறிவா.. ஒழுங்கா ப்ராக்டிஸ்க்கு போ.. அதை விட்டுட்டு..” என்றவள் மீண்டும் மீண்டும் அவர்களை வெறுப்பேற்றியபடி உள்ளே தள்ள

                      “நான் பாடப் போறதே இல்ல.. எனக்கு கொடுடி..” என்றான் துருவன்.

                      “ஐஸ் கிரீம் காலிடா துருவா.. நாளைக்கு பார்க்கலாம்..” என்றவள் மீண்டும் டப்பாவினுள் கையை விட, “உன்னை..” என்று கட்டிலின் மீது ஏறினான் துருவன். அவனைத் தொடர்ந்து சர்வா, அறிவு இருவரும் ஏற, சில நொடிகளில் ஸ்ரீயிடம் இருந்த ஐஸ் கிரீம் டப்பா அவர்களிடம் இருந்தது.

                     மூன்று பேருமே ஆறு அடிக்கு குறையாமல் இருக்க, நான்கரை அடியில் இருந்த ஸ்ரீ எப்படி அவர்களிடம் இருந்து பிடுங்குவது. அதுவும் மூன்று  பேருமே கையை தலைக்கு மேல் உயர்த்திக் கொண்டு அவளை வெறுப்பேற்ற, கடுப்பானவள் “போங்கடா..” என்று வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளில் அவர்களை திட்டிவிட்டு சோஃபாவில் அமர்ந்து விட்டாள்.

                   அந்த டப்பாவை முழுவதுமாக அவர்கள் தீர்த்துவிட, “கடவுளே.. இவனுங்களுக்கு கண்டிப்பா வயித்தைக் கலக்கி விடணும்… குறைஞ்சது மூணு மாசத்துக்கு வாய்ஸ் வெளியே வரவேக் கூடாது…” என்று சத்தமாக வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

                   துருவன் “கொலைகாரி.. கொலைகாரி..”என்று அவள் தலையை பிடித்து அழுத்திவிட்டு, குளிர்சாதன பெட்டியில் இருந்து இன்னொரு பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினான் அவன். அதைப் பார்த்ததும் கண்கள் விரிய, கையை நீட்டி வாங்கி கொண்டவள் முதலில் சர்வாவைத் தான் பார்த்தாள்.

                  ‘டேய் பக்கத்துல வந்த… உன்னைக் கொன்னுட்டு தான் மறுவேலை..” என்று அவனை மிரட்டிவிட்டு, அதை திறந்து உண்ணலானாள். பாதி உண்டு முடித்து மீதியை அவர்களிடமே கொடுத்து விட்டவள், சோஃபாவில் வந்து அமர்ந்து, பின் அங்கே அமர்ந்திருந்த துருவனின் மடியிலேயே தலைவைத்து படுத்து விட்டாள்.

                    துருவன் அரைமணி நேரம் அவளை உறங்கவிட்டவன் அதன்பின் அவளை எழுப்பி அழைத்து சென்று வீட்டில் விட கிளம்ப, சர்வாவும், அறிவனும் உடன் கிளம்பினர். நால்வரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைய, அவர்களை கண்டதுமே அலறினான் அபிநந்தன். அவன் ஸ்ரீகாவின் மூத்தவன்.

                    அவர்களை கண்ட நிமிடமே, “டேய்.. அம்மா வீட்ல இல்லடா..” என்று அவன் முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட,

                    “அதான் நீங்க இருக்கீங்க இல்ல… பசிக்குது அபிண்ணா… ” என்றனர் நால்வரும். இத்தனைக்கும் அவனைவிட மூன்று வயது தான் சிறியவர்கள் எல்லாரும். ஆனால், அண்ணன் என்றே அழைக்க, இன்றுவரை மறுத்ததே இல்லை அபிநந்தன்.

                     நான்கு பேருக்கும் அவன் ஒருவனாக நின்று தோசை வார்த்துக் கொடுக்க, வயிறு நிறைய உண்டுவிட்டு ஸ்ரீகா தன்னறைக்கு கிளம்ப, மற்ற மூவரையும் கீழே இருந்த அறையிலேயே தங்க சொல்லி அனுப்பிவிட்டான் அபிநந்தன்.

Advertisement