Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 02

                            ஸ்ரீயும், அறிவும் நல்ல பிள்ளைகளாக துருவனின் ஸ்டுடியோவில் அமர்ந்து இருக்க, அவர்களை கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் துருவன். இப்போது அவனை இடையிட்டால் நிச்சயம் கையில் இருக்கும் நோட்பேட் முகத்துக்கு வரும் என்று புரிந்தவர்களாக இருவரும் அமைதி காக்க, அங்கே நான்காவதாக வந்து சேர்ந்தான் சர்வானந்த். அவர்களுக்கு சர்வா.

                               இந்த நேரத்தில்  இங்கே வந்திருக்கிறானே என்று ஸ்ரீகா அவனை பார்க்க, இதுவரை அவர்களை கண்டுகொள்ளாத துருவன், இப்போது சர்வாவை வரவேற்றான். “வாடா..” என்று அழைத்தவன் அவன் கையில் தான் இதுவரை எழுதிக் கொண்டிருந்த நோட்ஸை கொடுக்க, அதை மேலோட்டமாக பார்த்து நின்றான் சர்வா.

                                   அவனும் அங்கிருந்தவர்களை இதுவரை கண்டு கொள்ளவே இல்லை. துருவ் கீபோர்டில் அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரில் நின்றிருந்தவன் இவர்களுக்கு முதுகை காண்பிக்க, இருவரும் அடுத்து அவன் பாட வேண்டிய பாடலை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

                                    சர்வா.. வளர்ந்து வரும் இளம் பாடகன். அவன் குரல் வளம் அருமையாக இருக்க, திரைத்துறையின் முக்கிய இசையமைப்பாளர்களின் விருப்பத் தேர்வாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறான் சமீப நாட்களில். இப்போது துருவன் அவனை அழைத்ததும் அடுத்து பாட வேண்டிய ஒரு பாடல் பதிவுக்காகத் தான்.

                         சர்வா தன் கையிலிருந்த நோட்டை ஒருமுறை புரட்டிக் கொண்டிருந்தவன் “டேக் போலாம்டா..” என்றுவிட்டு, அங்கிருந்த கண்ணாடி அறைக்குள் நுழைய முற்பட, அவனுக்கு குறுக்கே வந்து நின்றாள் ஸ்ரீகா. சர்வா திரும்பி துருவனைப் பார்க்க,

                      “ஸ்ரீ என் வேலையை கெடுக்கவே இங்கே வந்து இருக்கியா நீ..” என்று அவளை முறைத்தான் துருவன்.

                       “நாங்க உன் வேலையை கெடுக்கிறோமா.. எங்களை ஏன் கூட கூட்டிட்டு வந்த நீ..” என்று ஸ்ரீகா சண்டைக்கு நிற்க

                        “நான் உன்னை கூட்டிட்டு வந்தேனா.. நீயேதான் வந்து கார்ல ஏறின. கூடவே உன் அறிவு கெட்டவனும்..” என்று துருவ் அறிவை திட்ட

                       “நான்தானே பேசறேன். என்கிட்டே பேசுடா.. ஏன் அவனை இழுக்கற..” என்று அதற்கும் ஸ்ரீ நடுவில் வர

                      “என்னதாண்டி வேணும் உனக்கு.. உன் ப்ரெண்டும் பாட மாட்டான். அவனையும் பாட விடமாட்டியா நீ..” என்று துருவன் கத்த

                         “அதெல்லாம் அறிவு பாடுவான்… அவனைப் பாட வைக்கிறத விட, வேறென்ன வேலை உனக்கு..” என்று ஸ்ரீ துருவனை முறைக்க

                          “என்னால உங்களோட மல்லுக்கட்ட முடியாது ஸ்ரீ. இன்னும் ஒன் வீக்ல நான் இந்த ஆல்பம் முடிச்சு கொடுக்கணும். ஒழுங்கா வழியை விடு..” என்று அவன் மிரட்ட

                         “நான் வழியை விட்டா, இந்த தயிர்சாதம் பாட்டு பாடிடுமா… என்னை மீறி நீ உள்ளேப் போய்டுவ..” என்று ஸ்ரீகா சர்வாவை பார்வையால் மிரட்ட

                          “டைம் இல்ல ஸ்ரீ.. விளையாடாம நகரு..” என்று சர்வா முதல் முறையாக வாயைத் திறக்க

                         அறிவு ஸ்ரீகாவை பின்னால் இருந்து இழுத்தவன் “மரியாதையா வந்திடு.. அவனே மலையிறங்கி சர்வாவை பாட சொல்லிட்டான்… என்னை விட்டுடுவான்.. நீயும் விட்டுடுடி..” என்று அவன் ஸ்ரீகாவிடம் கெஞ்ச

                        “நீ சும்மா இரு அறிவு.. அதெப்படி விட முடியும். இந்த சாங் நீதான் பாடற..”

                        “மகளே.. நீ இப்போ ஓடற..” என்று அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தான் அறிவு. அதில் கிடைத்த இடைவெளியில் சர்வா அந்த அறைக்குள் நுழைந்து கொள்ள, அவன் பின்னாலேயே தானும் நுழைந்தாள் ஸ்ரீகா.

                         “நிச்சயமா இந்த சாங் நீ பாடப் போறது இல்ல.. சோ வெளியே போடா..” என்று அவனை துரத்த

                        “நீ முதல்ல வெளியே போடி… உனக்கு இன்னிக்கு வேலை எதுவும் இல்லையா…” என்று சர்வா சத்தமிட

                        வெளியே அறிவுதான் முழி பிதுங்கி நின்றான். “அவனுங்களே விட்டாலும், இவ விடமாட்டா போலயே… ஏதோ முடிவோட தான் இருக்கா..” என்று வியர்த்து நின்றான் அவன்.

                         அவன் நினைத்தது சரி என்பதைப் போல, துருவன் “ஹேய் வானரமே.. வெளியே வாடி.” என்று அவள் கையை பிடித்துக் கொண்டு இழுத்து வந்து அங்கிருந்த சோஃபாவில் தள்ளினான் அவளை.

                          அறிவு “டேய்.. அறிவிருக்கா உனக்கு..” என்று துருவனிடம் பாய

                          அவனை கண்டுகொள்ளவே இல்லை துருவன். ஸ்ரீகாவிடம் “இங்கே பார். உனக்கு இன்னும் அரைமணி நேரம் கொடுக்கறேன். அதற்குள்ள இவன் பாடணும்.. இல்ல, ரெண்டு பேரையும் ஸ்டுடியோவை விட்டு வெளியே தள்ளிடுவேன்… அரைமணி நேரம் மட்டும்தான்..” என்றவன் “வாடா..” என்று சர்வாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டான்.

                            அவர்கள் வெளியேறவும், ஸ்ரீகா தன் டாப்பின் காலரை ஏற்றிவிட்டுக் கொண்டு, ஏதோ பெரிதாக சாதித்தவள் போல் முகத்தை, கையை என்று துடைத்துக் கொள்ள, அவளை கொலைவெறியோடு முறைத்து கொண்டிருந்தான் அறிவு.

                          அவள் அப்பாவியாக “என்னடா அறிவா.. இவ்வளவு போராடி, உனக்காக  இருக்கேன்.. ஒரு நன்றி கூட சொல்லமாட்டியா.. என்னதான் நான் உன் தங்கச்சியா இருந்தாலும், ஒரு நன்றி கூடவா சொல்லக்கூடாது…” என்று அவள் முகத்தை சுழிக்க

                       யோசிக்கவே இல்லை அறிவு. அவள் கையை பின்னால் முறுக்கி அவள் முதுகிலே ரெண்டு வைத்தவன்  “நான் கேட்டேனாடி உன்கிட்ட.. நான் கேட்டேனா… எனக்கு பாட ஆசையா இருக்குன்னு நான் சொன்னேனா… என்னை ஏண்டி இவனுங்க கிட்ட கோர்த்து விடற..” என்று கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான்.

                        “உன்னால கண்டிப்பா முடியும் அறிவா…அதான் நான் உன் கூடவே இருக்கேன்ல..” என்று அவள் கெத்தாக கூற

                       “அதுதான் என் பயமே…” என்றான் அறிவன். அறிவழகன்.

                     “என்னடா..” என்று ஸ்ரீ அப்பாவியாக விழிக்க

                      “எப்புட்றா…” என்று அவளைவிட பாவமாக கேட்டான் அறிவு.

                       “நாம பாடறோம்… “என்று அவனை தோளோடு அணைத்து ஸ்ரீ கூற,

                        “எனக்கு என்னவோ நம்பிக்கையே இல்ல.. நீ அவன்கிட்ட நல்லா வாங்கி கட்டப்போற…”என்று ஆருடம் கூறினான் அறிவா.

                        “உனக்கு ஏன் நம்பிக்கை இருக்கணும். எனக்கு நம்பிக்கை இருந்தா போதும். நீ பாடற.. ” என்றவள் “நான் போய் அவங்களை கூட்டிட்டு வரட்டுமா..” என்று கேட்க

                        “என்னை முடிக்காம விடமாட்டல்ல நீ..” என்று அவளை கொலைவெறியாக பார்த்தான் அறிவா.

                        “முடிச்சுட்டு கிளம்புவோம் அறிவா..” என்று அவள் கூற, “ஏதே..” என்று எழுந்து கொண்டான் அறிவு.

                        “ரெக்கார்டிங்.. ரெக்கார்டிங்கை முடிச்சுடுவோம் ன்னு சொன்னேன்டா..” என்று ஸ்ரீகா சிரிக்க, இன்னமும் பயத்திலேயே இருந்தான் அறிவு.

                        ஸ்ரீகா சர்வா வைத்து விட்டு சென்றிருந்த நோட்டை கையில் எடுத்து பார்த்தவள் “ஹீரோ இன்ட்ரோ போலடா.. ரொம்ப கஷ்டமா எல்லாம் இருக்காது… அப்படியே இருந்தாலும் நாம பாடறோம்…” என்று அவனை சமாதானப்படுத்த

                       “நீ எங்கே பாடப்போற… நான்தானே.. பாடுவேனா தெரியலையே..” என்று புலம்பித் தள்ளினான் அறிவா.

                      அவன் புலம்பும்போதே, “நான் போய் அவனுங்களை கூட்டிட்டு வர்றேன்.. ” என்று ஸ்ரீகா கிளம்பிவிட, “ஹேய் ஸ்ரீ வேண்டாம்டி..” என்று அறிவு கத்தியதெல்லாம் அவள் காதிலேயே விழவில்லை.

                       அதுத ஐந்து நிமிடங்களில் அவள் மீண்டும் அந்த அறைக்குள் நுழைய, அவளுக்கு பின்னால் துருவனும், சர்வாவும் வந்தனர். துருவன் அறிவிடம் எதுவும் பேசாமல், ஸ்ரீகா வைப் பார்த்தான்…

                        “நீ ஒருமுறை பாடிக் காட்டுடா..” என்று ஸ்ரீ அறிவனிடம் கூற

                    “ஒன்னும் வேண்டாம்.. உள்ளேப் போக சொல்லு… அங்கே போய் பாடட்டும்…” என்றுவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் அவன்.

                     “ரொம்ப பன்றாண்டா இவன்.” என்று அறிவிடம் கூறியவள் “நீ போடா… ” என்று அவனை அழைத்துக் கொண்டு தானும் அந்த அறைக்குள் நுழைய

                     “ரெண்டுபேரும் பாடப் போறிங்களா.. நான் டூயட் சாங் கொடுக்கலையே..” என்று கேள்வியாக கிண்டலடித்தான் துருவன்.

                     “ஹான்.. அறிவு பாடுவான்.. நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணுவேன்… ” என்று அவள் அறிவனின் கையை பிடிக்க

                    “ஏன் அவன் வாய்க்குள்ள கையை விட்டு குரலை வெளியே இழுக்க போறியா… அடச்சே.. வெளியே வாடி..” என்று கத்தினான் இசையமைப்பாளன்.

                   இதில் அறிவுக்கு கோபம் வர, “நீ வெளியே போ..” என்று ஸ்ரீகாவிடம் கூறியவன் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். வெளியில் துருவன் தயாராக இருக்க, அறிவு கண்களை திறக்கவும், 1 2 3  என்று கையால் சைகை செய்தவன் பாடும்படி கையசைக்க, அவன் முகத்தில் இருந்த நக்கலில் மீண்டும் திணறியது அறிவுக்கு.

                  அவன் பாடுவதற்கு வாயெடுக்கும் முன்பாகவே, குரலை ஏதோ கவ்வி பிடிப்பது போல ஒரு பிரம்மை. குரலே வரவில்லை அவனுக்கு. துருவன் அவனைப் பார்த்தவன் நக்கலாக ஸ்ரீகாவை பார்க்க, “நீ வெளியே போடா..” என்று துருவனை துரத்தினாள் ஸ்ரீகா.

Advertisement