Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 18

                    ஸ்ரீகாவின் வீட்டில் அமர்ந்து இருந்த ஜெயராம் கிருஷ்ணாவிற்கு ஸ்ரீகாவின் பார்வையும் அதில் இருந்த கோபமும் புரிந்தது. அதுவும் அன்று அந்த புகைப்படங்களை  மலர்ந்து விகசித்துப் போயிருந்த அவள் முகமும், அது வெளிப்படுத்திய வர்ணஜாலங்களும் கண்முன் தோன்றி மறைய, அவள் பார்வையை சட்டென எதிர்கொள்ள முடியவில்லை அவனால்.

                   ஸ்ரீகாவின் பார்வையை தெரிந்தே அவன் தவிர்க்க, அவன் தவிர்ப்பது புரிந்தும் அவனை விடாமல் தொடர்ந்தது பெண்ணின் பார்வை. ஜெய் கொஞ்சமும் அவளைக் கண்டுகொள்ளாமல் ரேகாவிடம் “நிச்சயம் முடிஞ்சதா சொன்னது நிச்சயம் தப்புதான் அத்தை.” என்றான் அவன்.

                    ரேகா அவன் விளிப்பில் திகைத்தவராக நோக்க, ஜெயராம் தொடர்ந்தான். “ஆனா, அது எங்களோட அந்த நேர சந்தோஷம். கிட்டத்தட்ட நான்கு வருட காத்திருப்பு. அந்த நிமிஷம் ஸ்ரீகா என்னோட இருக்கவும், அந்த நொடியை கொண்டாடணும் ன்னு தோன்றியது. செஞ்சுட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க…” என்று அவன் எழ

                     “என்ன ஜெய்.. எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம்..” என்று அவனை தடுத்த பரமேஸ்வரன் ரேகாவை கண்டிக்கும் விதமாக பார்த்து வைக்க, “நீங்க மன்னிப்பு கேட்கறதுக்காக நான் இதை பேசல ஜெய். நீங்க செய்தது உங்களை பொறுத்தவரை சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா, அதோட பாதிப்புகள் ரொம்பவே அதிகம். டிவி, பேப்பர், சோசியல் மீடியா எல்லாத்துக்கும் பதில் சொல்லியே நொந்து போயிருக்கோம் நாங்க.”

                    “இதுல ஸ்ரீகாவோட காதலுக்கு நாங்க மறுப்பு தெரிவிக்கவும், அவ உங்களோட வந்துட்டதாகவும், நீங்க கல்யாணமே பண்ணிட்டதாகவும் வேற நிறைய நிறைய கதைகள். வயசுப்பொண்ணு அவ. அவளோட அம்மாவா என் நிலையை கொஞ்சம் யோசிசு பாருங்க…” என்று ரேகாவும் தன்னிலையை விளக்கி கூற, சீதாலட்சுமி இப்போது ஆச்சரியமாக பார்த்தார் அவரை.

                    ரேகாவை பற்றிய அவரின் எண்ணமே வேறல்லவா. ஜெய் “என்னால உங்களை புரிஞ்சிக்க முடியுது அத்தை. நீங்க இதைப்பத்தி கவலைப்படாதீங்க.. இனி எல்லாமே நீங்க நினைச்சபடி நடக்கும்…” என்று அவன் புன்னகைக்க, ரேகாவின் மனம் சற்றே அமைதி கொண்டது.

                  மது மகனின் தோளில் தட்டிக் கொடுத்தவர் மகனைப் பெருமிதத்துடன் பார்க்க, ஜெய் தந்தையை பார்த்து மெல்லியக் கோடாக சிறிது வைத்தான். தன்மீது தவறென்று வந்துவிட்டால் தயங்காமல் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பை யாசிக்கும் இந்தக்குணம் ஜெய்யின் உடன்பிறந்தது. பிறந்தது முதலே அவன் அப்படிதான். தவறென்றால் அதற்கான உபாயத்தை தேடுவானே ஒழிய, வீண் சச்சரவுகளையோ,. சமாளிப்புகளையோ நாடவே மாட்டான்.

                    இன்று இந்த நாட்டின் மத்திய அமைச்சர் என்ற நிலையில் இருந்தும் கூட, அவன் தன்னிலையில் இருந்து மாறாமல் இருப்பது கர்வம்தான் தந்தைக்கு. அதுவும், பீஷ்மனை அடக்கி வைக்க அவன் செய்த ஒரு விஷயம் தான் அந்த பதிவு, அதையும் முழுதாக சொல்லாமல் ஸ்ரீகாவின் பெயர் எங்கும் வெளிவராமல் தன்மீது மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டு மன்னிப்பு வேண்டிய விதம் தந்தையாக மகனை நன்கு வளர்த்து இருக்கும் நிம்மதியை கொடுத்தது அவருக்கு.

                             பரமேஸ்வரனுக்கும் ஜெய்ராம் கிருஷ்ணாவின் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது என்றே சொல்ல வேண்டும்.தன் மனைவியிடம் கூட, அவன் ஸ்ரீகாவை விட்டுக் கொடுக்கவில்லையே. அது போதாதா… என்று நினைத்தவர் மேற்கொண்டு பேச்சை எப்படி தொடர்வது என்று சிந்திக்க, அதற்கு தேவையே இல்லாமல் சரோஜினி தானாகவே பேசத் தொடங்கினார்.

                             “அப்பனும் மகனும் வீட்டுக்கு போய் கொஞ்சிக்கலாம்டா… இங்கே வந்த வேலையைப் பாருங்க. சீக்கிரமே என் பேத்தியை என் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும். நல்ல நாள் ஒன்னு பாருங்க.” என்று மகனையும், பேரனையும் அதட்டியவர்

                             “என்ன மருமகளே.. நான் சொல்றது சரிதானே.. “என்று சீதாவையும் பேச்சில் இழுக்க, என்ன சொல்வார் அவர்…  “நீங்க சொன்னா சரிதான் அத்தை..” என்றுவிட்டார்.

                            “அவ்ளோதான்.. என் மருமகளே சொல்லியாச்சு. நீ சொல்லு பரமேஸ்வரா.. எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்..” என்று தடாலடியாக அவர் அடிக்க, நெடுநாள் பழகியவர் போல அவர் பேசியதில் பரமேஸ்வரனும் சற்று இலகுவானார்.

                           “எங்களுக்கும் பூரண சம்மதம்தான்மா… பெரியவங்க நீங்க இருக்கீங்களே.. நீங்களே ஒரு நாள் பார்த்து சொல்லுங்க.. சிறப்பா செஞ்சிடுவோம்.” என்று அவர் ஒப்புக்கொடுக்க, ரேகாவுக்கும் அதே எண்ணம்தான் என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.

                           ஸ்ரீகா அந்தப் பேச்சுவார்த்தைக்கு, தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிற்க, “என்னமா புது மருமகளே..  என் பேரனை கட்டிக்க உனக்கு சம்மதமா…”என்று அடுத்து ஸ்ரீகாவிடமே கேட்டு வைத்தார் சரோஜினி.

                        ஸ்ரீகா “என்னையா கேட்கிறார்..” என்று விழிக்க, தீக்ஷி அவளுக்கு துணை நின்றாள். “வாயைத் திறந்து சொல்லு ஸ்ரீகா.. உங்க பேரனுக்கு நான் வாழ்க்கை கொடுக்கிறேன் பாட்டி ன்னு சொல்லு..” என்று அவள் சிரிக்க, அவள் கூறிய விதத்தில் ஸ்ரீக்கு மெல்ல சிரிப்பு வந்தது.

                    அவள் நிமிர்ந்து சரோஜினியை பார்க்க, அவளைப் பார்த்து சிரித்த அந்த பெரியவரை அந்தக்கணமே பிடித்துப் போனது அவளுக்கு. ஸ்ரீகாவை பார்த்து சிரித்தவர் “இங்கே வா.” என்று அவளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டார். அவளின் மறுபுறம் சீதா அமர்ந்திருக்க, முயன்று தன்னை இயல்பாக காட்டிக் கொண்டது பெண்.

                                சரோஜினிக்கு அவளிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தது. “நீ சினிமாகாரங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுப்பியாமே… தீக்ஷி சொன்னா… உனக்கு எல்லா நடிகரும் தெரியுமா??” என்று  பிரமிப்புடன் வினவினார் அவர்.

                            ஸ்ரீகா இவர் நம்மை கிண்டலடிக்கிறாரோ என்று சந்தேகமாகப் பார்க்க, அவருக்கு மறுபுறம் இருந்து “பாட்டிக்கு சித்தார்த் வர்மாவை ரொம்ப பிடிக்கும்… அதுக்குதான் உன்கிட்ட போட்டு வாங்குறாங்க..” என்றான் ஜெய்ராம் கிருஷ்ணா.

                            ஸ்ரீகா சிரிப்புடன் பாட்டியைப் பார்க்க, “அது என்னவோ அப்படி ஒரு லவ்ஸ் நம்ம சித்தார்த் மேல…இல்ல பாட்டி..” என்று தீக்ஷியும் சேர்ந்து கொண்டாள்.

                              இப்போது அறிவன் குறுக்கிட்டு, “அட உங்களுக்கும் சித்தார்த் பிடிக்குமா பாட்டி??” என்று கேட்டவன் “சூப்பர் பாட்டி..” என்று ஹை பை அடித்துக் கொண்டான். கூடவே “நீங்க கவலையை விடுங்க பாட்டி. சித்தார்த் நம்ம ஸ்ரீயோட க்ளோஸ் ப்ரெண்ட்.. நாம நேரிலேயே அவனை மீட் பண்ணலாம்..” என்று தானம் சேர்ந்து கொண்டான்.

                              சீதாவிற்கு தான் எங்கேயாவது சென்று முட்டிக் கொள்ள மாட்டோமா என்று இருந்தது. சினிமாக்காரர்கள் என்று ஒரே காரணத்திற்காகத் தான் அவர் ஸ்ரீகாவை மறுத்தது. ஆனால், இப்போது இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன என்று குமைந்து கொண்டிருந்தார் அவர். அவரின் முகத்தை வைத்தே அவரை புரிந்து கொண்ட ஸ்ரீகா, அவரைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்

                       “அதற்கென்ன பாட்டி.. நீங்க சரின்னு சொல்லுங்க.. நாம இன்னிக்கே சித்தார்த்தை மீட் பண்ணலாம்.. என்னோட செல்ல பாட்டி ஆகப் போறீங்க.. இதைக்கூட பண்ணமாட்டேனா…” என்று அவர் தாடையை பிடித்துக் கொஞ்சினாள் ஸ்ரீகா. சீதா வெகுவாக சிரமப்பட்டு முகத்தை சீராக வைத்துக் கொண்டார்.

                         சரோஜினி “ஹ்ம்ம்.. இது பிள்ளை. இவனும் இருக்கானே. பேருக்கு சென்ட்ரல் மினிஸ்டரூ… “என்று பேரனை நொடித்துக் கொள்ள, அவரின் பேச்சில் விரிந்து சிரித்தாள் ஸ்ரீகா.

                          ஜெய் சின்னதான முறைப்புடன் சரோஜினியைப் பார்க்க, “என்னடா முறைப்பு… உங்கிட்ட எத்தனைமுறை கேட்டேன்… அதைக்கூட விடு. நீ சின்னப்பிள்ளையா இருக்கையில எத்தனை சினிமாக்கு கூட்டிட்டு போய் இருப்பேன்.. அதுக்காக வாவது என்னை ஒருமுறை கூட்டிட்டு போனியா நீ… ஒரு படத்துக்கு கூப்பிட்டா கூட வரமாட்டான் ஸ்ரீமா…” என்று புகார் படித்தார் அவர்.

                            சீதா இப்போது “என் மகன் சென்ட்ரல் மினிஸ்டர்.. உங்ககூட கோயம்பத்தூர் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கணுமா அவன். அவனுக்கு அதுதான் வேலையா… ” என்று குறுக்கிட

                             “ஒரு சினிமா பார்க்க கூட்டிட்டு போக முடியலை.. இவன் மினிஸ்டரா இருந்து என்ன?? இல்லாட்டி என்ன..  ஒன்னும் தேவையில்லை. வந்து என்னோட விவசாயம் பார்க்கட்டும். இப்போ பேத்தி வேற வரப்போறா… என்னோடவே இருக்கட்டும் ரெண்டு பேரும்..” என்று சரோஜினி அடித்துவிட, “சூப்பர் பாட்டி.” என்ற எண்ணம் தான் ஸ்ரீகாவுக்கு.

                சீதா ஏற்கனவே பயத்தில் இருப்பவர் அல்லவா. தனது அத்தையின் வார்த்தைகளில் பதறிப் போனார் அவர். “ஏன் அத்தை என்ன பேசறீங்க புரியுதா. இந்த சின்ன வயசுல என் மகன் எத்தனை கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கான்.. ரொம்ப சுலபமா தூக்கிப்போட சொல்றிங்க நீங்க. அதுவும் அவன் மினிஸ்டர் வேலையை விட்டுட்டு வந்து உங்களோட வயல்ல இறங்கி வேலை பார்க்கணுமா..” என்று வேகமாக கேட்டுவிட்டார்.

                   ஜெய்ராம் அன்னையின் நிலை உணர்ந்தவனாக “அம்மா.. இந்த கிழவி சொன்னா, உடனே நான் கிளம்பி கோயம்புத்தூர் போய்டுவேனா… அதெல்லாம் என் மகன் எங்கேயும் வரமாட்டான் ன்னு சொல்லுங்கம்மா… அதை விட்டுட்டு டென்சன் ஆவிங்களா..” என்று அன்னையை சமாளித்தான்.

                     சரோஜினி இப்போது ஸ்ரீகாவிடம், “அவன் கிடக்கிறான் அம்மா கோந்து.. நீ என்னோட வந்திடு ஸ்ரீகா.. ஊர்ல நம்ம நிலம், தோப்பு, துறவு ன்னு எல்லாம் இருக்கு… நம்ம வீட்ல நீ ராணி மாதிரி இருக்கலாம். இவனோட போகாத. அந்த வேகாத ரொட்டியை தவிர, வேறொன்னும் தேறாது..’ என்று அவர் இன்னும் பேரனை வெறுப்பேற்ற

                       ஜெயராம் “போய்டுவ நீ..” என்று மிரட்டலாக பார்த்தான் ஸ்ரீகாவை. அவன் மீது கடுப்பில் இருந்தவளோ “கண்டிப்பா பாட்டி.. சென்ட்ரல் மினிஸ்டரோட நமக்கு என்ன வேலை.. நாம ஜாலியா இருப்போம். பன் பண்ணுவோம்..”என்று அவருடன் கையடித்துக் கொண்டாள்.

                  ஜெயராம் பாட்டியை எதுவும் கூறாமல் பேத்தியை ஒற்றைப்புருவம் உயர்த்தி “அப்படியா..” என்று ஒரு பார்வை பார்த்துவைக்க, அவன் பார்வையை தாங்க முடியாமல் வேறு புறம் திரும்பிக் கொண்டாள் ஸ்ரீகா.

                     மது இவர்களின் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தவர் இப்போது இடையிட்டார். “அம்மா… உங்க அரட்டை எல்லாம் போதும்.. வந்த வேலையை பார்ப்போம். ஜோஸ்யரைப் பார்க்கணுமா.. வரச்சொல்லவா.” என்று அன்னையைக் கேட்க

                     “மனப்பொருத்தத்துக்கு மேல என்ன இருக்கு மது. பொருத்தம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்ல… ஆனா, ரெண்டு பேரோட ஜாதகத்துக்கு ஒத்துப் போற மாதிரி நாள் குறிக்கனும். வரச்சொல்லு.” என்றார் பொறுப்பாக.

Advertisement