Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 17

                              துருவனிடம் இருந்து தப்பிக்க நினைத்து கடல் அலையிடம் சிக்கி கொண்டவள், அதன் வேகம் தாங்காமல் தடுமாறி கீழே விழ, அந்த நொடி மொத்தமாக அவளை மூழ்கடிக்க முயன்று தோற்றுப் போனது கடல்நீர். ஆனாலும், தன் அடையாளத்தை விட்டுச் செல்வது போல் அவள் உடையை முழுவதும் ஈரமாக்கி சென்றிருக்க, அன்று பார்த்து சேலை கட்டி இருந்தாள் அவள்.

                          ராகவிக்கு கீழே விழுந்த அதிர்ச்சியே விலகாமல் இருக்க, உடையை பற்றி எல்லாம் சிந்தனையே இல்லை. கடல்நீர் வாய்க்குள் சென்றுவிட, அதை வேறு விழுங்கி வைத்திருந்தாள். தட்டுத் தடுமாறி, அடுத்த அலை வருவதற்குள் அவளாகவே சுதாரித்து எழுந்து நிற்க, அவளின் ஈர ஆடை அவளின் அங்க லாவண்யங்களை அப்பட்டமாக படமாக்கி காட்டியது.

                           எதிரில் இருப்பவனை எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வையை உணர்ந்த பின்பே, தன் உடையை குனிந்து பார்த்தாள். தன்னிலை உணர்ந்த நிமிடம் “ஐயோ..” என்றாக, சட்டென அவனுக்கு முதுகை காட்டி நின்றுவிட்டாள் ராகவி.

                            அவள் வேகமாக தன் சேலையை இழுத்து சரிசெய்து கொள்ள முற்பட, கைகள் நடுங்கி கொண்டிருந்தது. அவன் முன்னிலையில் இப்படி இருக்கும் தன்னிலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால். ஏற்கனவே அவன் பேசிய வார்த்தைகள் ஆறாத ரணமாக இருக்க, இப்போது இதை வைத்து இன்னும் ஏதாவது பேசிவிடுவானோ என்று அச்சம் கொண்டது அவள் மனம்.

                          “முதலில் இங்கிருந்து விலகிச் சென்றுவிடு.” என்று மனம் கட்டளையிட, தன் ஈர ஆடைகளை பொருட்படுத்தாமல், கண்ணீர் தேங்கிய கண்களை மறைத்துக் கொண்டு அவள் நடக்க, ஈர சேலை காலை இடறியது. தடுமாறி மீண்டும் அவள் கீழே விழப்போக, அதுவரை அவள் தவிப்பை ரசித்து நின்றவன் முதல் முறையாக கைநீட்டி அவளை பிடித்து நிறுத்தினான்.

                          அவன் தன்னை பிடித்து நிறுத்தியதில் அதிர்ச்சியானவள் அவன் கையை விலக்கிவிட முயற்சிக்க, ம்ஹும்.. அசைக்க கூட முடியவில்லை அவளால். அவள் தங்களை சுற்றி பார்வையை சுழற்ற, இவர்களைத் தவிர பெரிதாக யாருமே இல்லை அங்கே. அந்த உச்சிவேளையில் கடற்கரையை விட்டு சற்று தள்ளி இருந்த அந்த கடல் பகுதியில் யாரும் இருந்தால் தான் அதிசயம் என்று அறிவு நக்கலடிக்க, தன் நிலையை நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவளுக்கு.

                     தன் மொத்த கோபத்தையும் துருவனிடமே காட்டிவிடுபவள் போல் “என் கையை விடுங்க..” என்று விழிகளைப் பெரிதாக்கி அவள் முறைக்க, அவள் பார்வையை கண்டுகொள்ளாமல் சட்டென தன் இரண்டு கைகளாலும் அவளை ஏந்தி கொண்டான் துருவன்.

                   “ஐயோ..” என்றானது பெண்ணுக்கு. பேச்சே வரவில்லை சில நிமிடங்கள். கனவில் கூட நினைத்து பார்த்திருக்காத நிமிடங்கள் அவை. அவளுக்கு முதற்கட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள்ளாகவே, கார் அருகில் வந்துவிட்டிருந்தான் துருவன்.

                   அவளை கீழே இறக்கிவிடவும், சட்டென மீண்டவள் “எதுக்காக என்னை தூக்கிட்டு வந்திங்க… எவ்ளோ தைரியம் உங்களுக்கு..” என்று சண்டையிட தொடங்க, அவனது பார்வையில் வாய் தானாக மூடிக் கொண்டது.

                            துருவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட…” என்று நக்கலாக உரைத்து, கார்கதவை திறந்து விட்டான். ராகவி அப்படியே நிற்க, “ஏறு..” என்றான் அதட்டலாக.

                          ராகவி “முடியாது…’ என்பது போல் தலையசைக்க, அவளது இடது கையை முழங்கைக்கு மேலாக பற்றியவன் அவளை காரின் முன்சீட்டில் தள்ளி விட்டிருந்தான்.

                       “சார்..” என்று கத்தியவள் மீண்டும் வெளியே வர முயற்சிக்க, அவள் கையை தட்டிவிட்டு கார்கதவை அழுத்தி மூடியவன் ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.

                         ராகவி இப்போது உண்மையிலேயே பயந்தவளாக, “சார் என்னை இறக்கி விடுங்க.. எதுக்காக இப்படி பண்றிங்க..” என்று அழுது விடுபவள் போல் கேட்க

                        “அழறியா..” என்று நக்கலாக கேட்டான் துருவ்.

                      “நான் ஏன் அழணும்..” என்று அவள் முகத்தை சுருக்க, “அப்புறம் என்ன…” என்றவன் காரை இயக்கி இருந்தான்.

                         “அய்யோ… எங்கே கூட்டிட்டு போறீங்க..” என்று அவள் அலற, காரில் இருந்த அவனது துண்டை எடுத்து அவளிடம் நீட்டினான் துருவன்.

                          அதை கையில் வாங்காமல், “என்னை இறக்கி விடுங்க சார்.. ப்ளீஸ்…” என்றவள் கண்களில் இப்போது கண்ணீர் தேங்கி இருந்தது.

                          துருவன் அசையாமல் துண்டை நீட்டிக் கொண்டிருக்க, காரை ஓரமாக நிறுத்தி இருந்தான் இதற்குள். ராகவி அசையாமல் அமர்ந்து இருக்க, வாங்க முடியுமா, முடியாதா என்று கேள்வி கேட்டது அவன் பார்வை.

                         அவன் பார்வையில் தடுமாறியவள் இரண்டு கைகளளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். அவள் உடல் அழுகையில் குலுங்க, அப்போதும் அசராமல் வேடிக்கை தான் பார்த்திருந்தான் துருவன். சில நிமிடங்கள் அவளின் தேம்பல் மட்டுமே கேட்க, “ப்ளீஸ் சார்.. எனக்கு ஆசை காட்டாதிங்க… என்னால தாங்க முடியாது. என் ஆசை ரொம்பவே அதிகம் ன்னு தெரிஞ்சு தான் விலகிப் போறேன் சார். என்னை அப்படியே விட்டுடுங்க ப்ளீஸ்…” என்று அவள் அழுகையினூடே சொல்லி முடிக்க, அவளை ஆதுரமாக பார்த்திருந்தான் துருவன்.

                          என்னவோ கடற்கரையில் அவளை பார்த்ததும் ஒரு ஆறுதல். அவளின் பார்வை ஏற்கனவே உணர்ந்திருந்தாலும், அன்று அவள் கோபப்பட்டபோது முழுமையாக புரிந்தது. ஆனாலும், அப்போது இருந்த கோபத்தில் வேறு எதையும் அவன் யோசிக்காமல் விட்டிருக்க, அதன்பின்பு அவனை குறித்து யோசிக்க எங்கே நேரம் இருந்தது.

                          நிச்சயம் அவளை காணும் வரை, அவளை பற்றிய எண்ணம் துளிகூட இல்லை அவனிடம். ஆனால், அவளை கண்ட நிமிடம்… சட்டென எழுந்த உந்துதலில் தான் அவளை நெருங்கினான். அவள் கண்ணில் கண்ணீரைக் காணவும்ம் அதற்குமேல் விலகி இருக்க முடியவில்லை அவனால்.

                   அதுவும் உயிர் வரை ஊடுருவிய அவளின் அந்த ஏக்கப்பார்வைதான் அசைத்தது அவனை. அந்த நிமிடம் அவனுக்குள்ளும் துளியாக அவள் படர, அவன் தன்னிலை உணரும்போது தான் அவள் தண்ணீரில் விழுந்து வைத்தது. அதில் இன்னுமே ரசனைக் கூடிப் போக, தன்னவள் தானே என்று உரிமையுடன் தழுவிக் கொண்டது அவன் பார்வை.

                    அவளாகவே விழுந்து, எழுந்து, விலக முற்படும் போது தான், விடாமல் அவளைப் பிடித்து நிறுத்தி இருந்தான். நிச்சயம் மறுக்கமாட்டாள் என்ற தைரியத்தில் தான் கைகளில் தூக்கி கொண்டதும். அவன் நினைப்பை அப்படியே அவள் மெய்ப்பித்து விட, காதலன் வெகு கர்வமாக தன்னை உணர்ந்த நொடிகள் அவை.

                    இதோ  இப்போது அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்று புரிந்தாலும், அவள் காதல் கொடுத்த பிரமிப்பு அவனை மீள விடாமல் மீட்டிக் கொண்டிருக்கிறது. ராகவியும் இதற்குள் அழுது தீர்த்துவிட்டாள் போல.தானாகவே கண்களையும் முகத்தையும் அழுந்த துடைத்துக் கொண்டாள். அவன் அழவைத்து வேடிக்கைப் பார்க்க, அவன் முன்னால் அழுதது வேறு அவமானமாக இருந்தது.

                      முகத்தை துடைத்து அவன் முகம் பார்த்தவள் “எனக்கு நேரமாச்சு சார். டோர் ஓபன் பண்ணுங்க.. நான் போகணும்..” என்று உணர்ச்சியற்ற குரலில் கூற

                      “மேக்கப்பை குறைச்சுக்கோ.” என்றான் சம்பந்தமே இல்லாமல்.

                       அவள் “பைத்தியமா இவன்..” என்று பார்க்க, அவள் எண்ணம் புரிந்தது போல துருவனுக்கு. அவள் தலையில் லேசாக தட்டியவன், தன் அலைபேசியில் அவளை படமாக்க, “என்ன பண்றிங்க..” என்று முகத்தை மூடினாள் அவள்.

                         அது இன்னும் அவனுக்கு வசதியாக, சட்டென நகர்ந்து அவள் அருகில் வந்தவன், அவள் கழுத்தைச் சுற்றி இடக்கையால் வளைத்துக் கொண்டான். ராகவி “அம்மாடி..” என்று பயந்து நிமிர, அவளின் பயந்த பார்வையை அப்படியே படமாக்கி கொண்டது அவன் அலைபேசி.

                       இன்னும் மீளாதவளாக அவள் அமர்ந்திருக்க, அதைப் பயன்படுத்திக் கொண்டவன் மேலும் சில படங்கள் எடுத்துக் கொண்டான். ராகவி அதுவரையிலும் அதிர்ச்சியில் தான் இருந்தாள். துருவன் தான் எடுத்த படங்களை அலைபேசியில் அவளிடம் காண்பித்து, “பாரு..” என்று அவள் முகத்தை பெரிதாக்கி காண்பிக்க, கண்ணில் இருந்த மை கன்னத்தில் வழிந்திருந்தது.

                     ராகவி அமைதியாகவே இருப்பதை உணர்ந்து, அவள் கன்னம் தட்டியவன் “என்னம்மா..” என்று காதலாகிய குரலில் வினவ, மறுப்பாக தலையசைத்தாள் அவள்.

                    துருவன் அவள் நிலை உணர்ந்து, தன் கைக்குட்டை கொண்டு அவளின் கன்னத்தை துடைக்க முற்பட, சட்டென பின்னால் நகர்ந்து கொண்டாள் அவள். துருவன் சிரிக்க, “ப்ளீஸ் வேண்டாம்…” என்றாள் மீண்டும்..

                      துருவன் அதே சிரிப்போடு, “நான் ஏதாவது கொடுத்தேனா..” என்று இதழைக் குவித்து காட்ட, அவன் மொழியில், அவன் சிரிப்பில் தொலைந்து விடுவோமோ என்று துடித்துக் கொண்டிருந்தாள் அவள். ஆனாலும், தெளிவாக “இதெல்லாம் வேண்டாம் சார். சரியா வராது… என் தகுதி எனக்கு தெரியும்… அதனால தான் ரசிக்கற எல்லையில் நிற்கிறேன். அதைத் தாண்டி வர எனக்கு விருப்பமில்லை… நீங்களும் வர வேண்டாம்..” என்றவள் “என்னை போக விடுங்க..” என்று தலை குனிந்து கொண்டாள்.

                        “ரசிக்கிற எல்லை.. நல்லா இருக்கே… நீ ரசிக்கிற யார் வேணாலும், உன்னை தூக்கிட்டு வரலாமா… இப்படி கட்டிபுடிச்சு செல்பி… இதெல்லாம் கூட அலோவ் பண்ணுவியா..” என்று அவன் கேட்டுவிட, ஆத்திரமாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

                       அவள் கோபத்தை ரசித்தவன் “என்ன அடிக்க போறியா..”என்று கன்னத்தை காட்ட, “ஏன் இப்படி பண்றிங்க..” என்று சலித்து கொண்டாள் ராகவி.

                       எட்டி அவள் கையை பிடித்துக் கொண்டவன்  “உன்னோட தகுதியை நீ சொல்லிட்ட. என் தகுதி என்னன்னு தெரிஞ்சிக்க ஆசை இல்லையா..” என்றான் அவள் கண்களை பார்த்து. அவள் பதில் கூறாமலே இருக்க

                    “ரேகா பரமேஸ்வரன்.. என்னோட அம்மா.. அவங்க ஒரு ஆள் என்னைப் பார்க்காம போயிருந்தா, இன்னிக்கு துருவ் பரமேஸ்வரன் இல்ல. என் ரேகாம்மா எனக்கு உயிரைத் தவிர மற்ற எல்லாமே கொடுத்திருக்காங்க. இந்த வாழ்க்கை என் ரேகாம்மாவுக்காக மட்டும்தான். அவங்க இல்லாம போயிருந்தா, நான் அனாதையாகி இருப்பேன் ராகா…”

                    “அனாதை ங்கிற வார்த்தை மட்டும்தான் அன்னைக்கு என்னோட அந்தஸ்து. இப்போ சொல்லு.. உன் தகுதிக்கு நான் ஏற்றவனா..” என்று அவன் கேள்வி எழுப்ப

                    “நீங்க எப்போதுமே ரேகா ஆண்டியோட பையன் தான். உங்க தகுதி உங்க அம்மாவை வைத்து தான். தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு கஷ்டப்படாதிங்க…” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள் ராகவி.

                    துருவன் மென்மையாக சிரிக்க, ராகவியின் முகத்திலும் அந்த புன்னகை விரவியது.

                          துருவன் “சரி. இப்போ சொல்லு. ரேகா பரமேஸ்வரன் பையனை கல்யாணம் செய்து கொள்கிறாயா??” என்று கேட்க, ராகவி பதிலின்றி மௌனமானாள். துருவன் “இன்னும் என்ன..” என்று அவள் முகம் பார்க்க

                      

                          “கொஞ்சம் பயமா இருக்கு…” என்று உண்மையை உரைத்தாள் ராகவி.

                          துருவன் கேள்வியாக பார்க்க, “என் வீட்டுக்கு நானும் என் அப்பாவும் மட்டும்தான். தம்பி, தங்கையோட படிப்பு இன்னும் இருக்கு. எங்க பொருளாதாரமும் எங்க கையளவு தான்… இது எப்படி சரிவரும்… உங்க அளவுக்கு நிச்சயமா என் அப்பாவால்  எதுவும் செய்ய முடியாது சார். இப்போ காதல் நல்லா இருக்கும். ஆனா, என்னால அவங்க கஷ்டப்படறதை பார்க்க முடியாது…” என்று அவள் நிறுத்த

                          “சோ, இதெல்லாம் யோசிச்சு தான் சான்ஸ் கிடைச்சதும் ஓடிப் போனாயா..” என்று துருவன் முறைக்க, மாட்டிக் கொண்ட பாவனையில் விழித்தாள் ராகவி. அவள் மண்டையில் குட்டியவன் “ஒழுங்கா நாளைக்கு வேலைக்கு வந்து சேர்..”என்று மிரட்டினான்.

                     ராகவி “நான் சொல்றது ஏதாவது புரியுதா சார் உங்களுக்கு..” என்று சந்தேகமாக கேட்டு வைக்க,

                     “ஏன் புரியாம… நல்லாவே புரியுது…”என்றான்.

                      ராகவி அப்போதும் சந்தேகமாகவே பார்த்து வைக்க, “எனக்கு பிடிச்சுருந்தா, அதை தாண்டி அம்மா யோசிக்கமாட்டாங்க ராகா. அவங்க ஸ்டேட்டஸ் பார்க்கிற ஆளும் கிடையாது. சோ, நீ இந்த அளவுக்கு எல்லாம் கவலைப்பட வேண்டாம். “என்று மென்மையாக துருவன் எடுத்துக் கூறவும், மெல்லியதாக புன்னகைத்தாள் ராகவி.

                      அவள் புன்னகை துருவனை கொள்ளை கொள்ள, “கனவு போல இருக்கு… கலைஞ்சிடாதே.” என்று அவள் பயத்துடன் சிரிக்க, அவளை மென்மையாக அணைத்து கொண்டான் துருவன். அவன் நெஞ்சில் சுகமாக சாய்ந்து கொண்டவள் கண்மூடி அந்த நொடிகளை ரசிக்க தொடங்கினாள்.

                    அவர்களின் முதல் தனிமை பெரும்பாலும் மௌனத்திலேயே கழிய, அவன் நெஞ்சில் இருந்தும் விலகவே இல்லை ராகவி. துருவனுக்கு அவள் நிலை புரிய, அவள் காதல் களிப்படையச் செய்தது அவனை. அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை அழைத்து சென்று வீட்டில் விட்டு, அதன் பிறகே தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

                     அவன் வந்த சமயம் மொத்த வீடும் ஹாலில் அமர்ந்திருக்க, கேள்வியாக பார்த்தவனிடம் “ஜெய் ஸ்ரீகாவை அழைச்சுட்டு வர்றார் துருவ்..” என்றான் சர்வா.

               அபி துருவனின் முகத்தை ஆராய, அவன் இயல்பாக இருக்கவும் நிம்மதியாக உணர்ந்தான் அவன். ஆர்த்தி “வந்து சாப்பிடுங்க துருவ்…”என்று அழைக்க

                      “இல்ல அண்ணி.. பசியில்லை..” என்றவன் தன்னறைக்கு சென்றுவிட்டான். அவனது அறை கட்டிலில் விழுந்தவனுக்கு மனம் மொத்தமும் ரகவியின் நினைவுகள் தான். உள்ளம் எங்கோ பறப்பது போல் இருக்க, மொத்தமாக அவள் காதலில் தொலைந்து போயிருந்தான் அவன்.

                    கூடவே, வீட்டில் நடக்கும் நிகழ்வும் மனதில் வரிசையாக வலம் வர, பொறுப்பான அண்ணனாக, குளித்து முடித்து கீழே இறங்கினான். ரேகாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டவன் அவர் கையை பிடித்துக் கொள்ள, அவன் கையை லேசாக அழுத்தினார் ரேகா.

                    அந்த நேரத்திலும், “என்ன துருவ்.. ஏன் எப்படியோ இருக்க..” என்று அவர் விசாரிக்க

                     “ஒண்ணுமில்லம்மா.. நம்ம குட்டிப்பிசாசு வரப்போறா இல்ல..அவ வந்ததும் சரியாகிடுவேன்.” என்றான் சிரிப்புடன். மனம் சீக்கிரமே ராகவியைப் பற்றி அன்னையிடம் கூறிவிட வேண்டும் என்று உறுதி கொண்டது.

                  அதே நேரம், வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க மொத்த பேரின் கவனமும் அங்கே திரும்பியது. காரில் இருந்து முதலில் ஸ்ரீகா இறங்க, அவளுக்கு மறுபுறம் இருந்து இறங்கினான் ஜெயராம் கிருஷ்ணா. இருவரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைய, பார்த்திருந்த அனைவரின் கண்களும் அவர்களின் பொருத்தத்தில் மயங்கி நின்றது. ரேகா மகள் மீது கடும் கோபத்தில் இருந்தவர் தான். ஆனால், மகளைக் கண்ட நிமிடம் அத்தனையும் மறந்துபோக, “ஸ்ரீ..” என்று அவர் முணுமுணுக்க, “அம்மா..” என்று வேகமாக வந்து அன்னையை அணைத்து கொண்டாள் மகள்.

                     ரேகா மகளை தழுவிக் கொண்டு கண்ணீர் விட, பரமேஸ்வரன் மகளின் தலையை தடவிக் கொடுத்தார் இதமாக. மறக்காமல் தங்கள் வீட்டு மாப்பிளையாகப் போகும் ஜெய்யை அவர் வரவேற்க, அவர் நீட்டிய கையை பற்றி குலுக்கியவன் அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.

                     அபியும் அவனோடு அமர்ந்து கொள்ள, ஆர்த்தி வீட்டுப் பெண்ணாக காஃபி எடுத்து வந்து உபசரித்தாள். எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது அதுவரை. துருவன், அறிவன், சர்வா என்று அடுத்தடுத்து ஸ்ரீகாவை அணைத்து விடுவித்தவர்கள் “ஏண்டி இப்படிப் பண்ண..” என்று ஆளுக்கொரு பக்கம் இழுத்துக் கொள்ள, துருவன் எதுவும் பேசாமல் அவள் கைகளை பிடித்தே நின்றிருந்தான்.

                     ரேகா மகளை அருகில் அமர்த்திக் கொண்டு அமர்ந்துவிட, இவர்கள் வந்து சேர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் காரில் வந்து இறங்கினர் ஜெய்யின் உறவுகள். அவன் தந்தை தாய், அவனது பாட்டி, அவன் தங்கை என்று நால்வர் மட்டுமே வந்திருந்தனர்.

                     ஜெய் சொல்லித்தான் வந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிந்தது பரமேஸ்வரனால். வீட்டு மனிதராக வந்தவர்களை அவர் வரவேற்க, ஜெய்யின் தந்தை மதுபாலகிருஷ்ணன் தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்.  

                     “இவங்க என்னோட அம்மா சரோஜினி.. இவங்க என்னோட மனைவி சீதாலட்சுமி, இது என்னோட மகள் தீக்ஷிதா.. ” என்று அவர் ஒவ்வொருவராக தனித்தனியே அறிமுகம் செய்து வைக்க, மரியாதையுடன் அவர்களை அழைத்து அமர வைத்தார் பரமேஸ்வரன். அவர் தன் மகன்களையும், மனைவி, மகள், மருமகளையும் அறிமுகம் செய்து வைக்க, பேச்சு அப்படியே ஓடியது.

                    சரோஜினி பெரியவராக, “வந்த விஷயத்தை பேசு மது. நல்லநேரம் இது. இப்போவே பேசு..” என்று நினைவுபடுத்தினார்.

                      மது தயக்கம் எதுவும் இல்லாமல், மகனைப் பார்த்து சிரித்தவர் “என் மகனுக்கு உங்க பொண்ணு ஸ்ரீகாவை பெண் கேட்டு வந்திருக்கோம் பரமேஸ்வரன். நீங்க சம்மதிச்சா, இப்போ நமக்குள்ள நிச்சயம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு நாள் குறிச்சுக்கலாம்.” என்று பட்டென பேசிவிட்டார்.

                       பரமேஸ்வரன் அவர் பேச்சில் திருப்தியாக உணர்ந்தவர் மனைவியைப் பார்க்க, “அதுதான் ஏற்கனவே நிச்சயம் முடிஞ்சதா சொல்லிட்டாரே மாப்பிளை.” என்று கேள்வியாக ஜெய்யை பார்த்தார் ரேகா. நீ பதில் கொடுத்தே ஆக வேண்டும் என்ற குறிப்பு இருந்தது அதில். ஸ்ரீகா அன்னையின் பேச்சு புரியாமல், அவர் முகம் பார்க்க, மகளின் முகத்தை வைத்தே அவளுக்கு தெரியாது என்று புரிந்தது ரேகாவுக்கு.

                   அது இன்னும் கோபத்தைக் கொடுக்க, ஜெய்யை சற்றே கண்டனமாக பார்த்தார் அவர். அவர் பேச்சுக்கு ஜெய் பதில் கொடுப்பதற்கு முன்பே, “ரேகா..” என்று கண்டித்தார் பரமேஸ்வரன்.

                   மது “அவங்க கேட்கிறது நியாயம் தானே பரமேஸ்வரன். அவன் பதில் சொல்லட்டும்..” என்றுவிட, சீதா தன் மகனை கடுப்பாக பார்த்தார். “தேவையாடா உனக்கு..” என்று கேள்வி கேட்டது அவர் பார்வை.

                   ஒருபுறம் மாமியார்… மறுபுறம் அன்னை.. என்று இரண்டு பக்கமும் போட்டி போட்டுக் கொண்டு ஜெய்யை முறைத்து வைக்க, அவர்களுக்கு மேலாக பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீகா. ஆர்த்தி இதற்குள் தன் அலைபேசியில் டீவ்ட்டரில் வெளியான புகைப்படங்களை காட்டி இருக்க, யாரை சமாளிப்பது என்று விழி பிதுங்கி போயிருந்தான் மத்திய மந்திரி

                   

              

                            

Advertisement