Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 16

                             பீஷ்மன் அவனது தனி சாம்ராஜ்யமான அவன் மாலில் இருந்தான். தனக்கு முன்னால் இருந்த மடிக்கணினியில் ஜெயராம் கிருஷ்ணாவின் ட்விட்டர் பக்கத்தை தான் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அவன். இப்போது என்று இல்லாமல் கிட்டத்தட்ட, மூன்று மணி நேரமாக. ஜெயராம் தன் புதிய பதிவை பதிவேற்றம் செய்தது முதலே,இதே வேலையென்று அமர்ந்திருக்கிறான் பீஷ்மா.

                              இருவரும் பால்கனியில் நிற்பது போலவும், ஸ்ரீகா ஜெய்யின் தோளில் சாய்ந்து கொண்டிருப்பது போலவும், ஒரே டிசைனில் மோதிரம் அணிந்திருந்த இருவரின் விரல்களும் அருகருகே இருப்பது போலவும், ஒன்றாக பிணைந்து கொண்ட இருவரின் கரங்கள் என்று மொத்தமாக ஏழு படங்கள். கூடவே, “காத்திருப்பு கைசேர்ந்தது…” என்று இரண்டே வார்த்தைகளில் ஒரு வாக்கியம்.

                               இது அனைத்திற்கும் மேலாக பீஷ்மனை கொதிக்க வைத்தது ஸ்ரீகாவின் கழுத்தில் இருந்த சங்கிலி. அதில் ஜெய் என்ற எழுத்துக்கள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு இருக்க, அவனுக்கு மிகவும் பரிட்சயமான சங்கிலி அது. அதை அவள் கழுத்தில் போட்டிருக்கிறான் என்றால், இனி ஸ்ரீகா நிச்சயம் அவன் வசம் தான். பலமுறை பல இடங்களில் ஜெய்யை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த தோல்வி பெரிதாக பாதித்தது பீஷ்மனை.

                                பார்த்த முதல் கணமே, திருமணம் என்ற எண்ணத்தை அவனுக்குள் விதைத்தவள். கைக்கெட்டாமல் போயிருக்க, வாழ்வில் முதல் முறையாக ஒரு வலி. ஆனால், அதையும் விட மேலான வலியை ஜெய்க்கு கொடுக்க அந்த கணமே தீர்மானித்துவிட்டான் பீஷ்மன். ஜெய்யின் முகத்தில் இருந்த அந்த புன்னகை நிச்சயம் போலியில்லை.

                             அவன் புன்னகைக்கு இணையான அதே புன்னகை ஸ்ரீகாவின் முகத்திலும். கூடவே அத்தனை காதல் அவள் கண்களில். அந்த மொத்த காதலும் ஒரே நாளில் சாத்தியமில்லை என்று ஐயம் திரிபற அவன் உணர்ந்துவிட, தன்னை ஏறிட்டுக் கூட பார்க்காத அவள் பார்வையின் அர்த்தம் இந்த நிமிடம் விளங்கியது. ஆனால், அதற்காக பெரிய மனதுடன் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்த, அவன் தயாரில்லை.

                            இருவருக்குமே வலிக்க வேண்டும்… வலி பீஷ்மன் கொடுத்ததாக இருக்க வேண்டும் என்று அவன் மனம் கணக்கு போட, அவன் தண்டனைக்கான வழியை யோசித்துக் கொண்டிருந்த நேரம் தான், அவன் தாத்தா சத்யநாராயணன் பீஷ்மனை அழைத்தார்.

                          அவரின் அழைப்பை காணவுமே, லேசாக புருவம் நெறித்து சில நொடிகள் சிந்தித்தவன் அழைப்பை ஏற்கவில்லை. அவரும் விடாமல் நான்கு முறைக்கும் மேலாக அவனை அழைக்க, அழைப்பை எடுத்தால் அவரை மறுக்க முடியாது என்ற காரணத்திற்காகவே அவரை தவிர்க்க முயன்றான் பீஷ்மன்.

                          அவனுக்கு இந்த விஷயத்தில் சத்தியநாராயணன் உள்ளே நுழைவது விருப்பமில்லை. அவர் தன்னை நெருங்குவதற்குள் தன் காரியம் முடிந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தவனாக அவன் தன் அறையிலிருந்து அந்த கணமே கிளம்பிவிட்டான். அவர் கண்ணில் படாமல், ஆட்டம் காட்ட முடிவெடுத்து அவன் மின்தூக்கிக்குள் நுழைய, மின்தூக்கி தரைத்தளத்தை அடைந்து கதவு திறந்த நிமிடம் அவனுக்கு முன்பாக வந்து நின்றார் சத்யநாராயணன்.

              தாத்தாவின் வேகம் பேரனை பிரமிக்க வைக்க, வெளியில் உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்தான். சத்தியநாராயணன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், தன் நிதான நடையோடு மின்தூக்கிக்குள் நுழைந்தார். தங்கள் தனிப்பட்ட தளத்தின் எண்ணை அழுத்திவிட்டு அவர் நிற்க, அவர் முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான் பேரன்.

                         பீஷ்மனின் தனிப்பட்ட அறைக்கு வந்து அவன் இருக்கையில் அமரும் வரை ஒரு வார்த்தைக் கூட பேசவோ கேட்கவோ இல்லை சத்யநாராயணன். தனக்கே உரிய கம்பீரத்துடன் அவர் அமர்ந்து கொள்ள, அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் பேரன்.

                        “ரொம்ப அவசரமா பீஷ்மா…” என்றவர் அவனை இமைக்காமல் நோக்க,

                       “அதான் கேட்டை போட்டாச்சே… சொல்லு என்ன விஷயம்..” என்றான் பேரன்.

                        “உனக்கும் பரமேஸ்வரன் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்..”

                        “எனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்.. ஒன்னும் கிடையாது… உன் செல்லப்பேரன் தான் அவளை தூக்கிட்டு போயிருக்கான்.” என்றான் எதுவுமே தெரியாதவன் போல்.

                        “அவன் கதை இருக்கட்டும்.. யாருன்னே தெரியாத ஒருத்தியை நீ ஏன் தூக்க சொன்ன..” என்று பெரியவர் கேட்க

                        “நான் ஏன் அவளை தூக்கணும்.. கனவு ஏதும் கண்டியா… இல்ல உன் பேரன் ஓதி அனுப்பினானா..” என்று முறைத்தான் பேரன்.

                       “நீ சொல்லாம தேவன் ஏன் அவளை தூக்கிட்டு வரப் பார்த்தான். தேவா உன்கிட்ட வேலைக்கு இருக்கானா.. இல்ல, அவனுக்கு வேலை பார்க்கிறானா…”என்று சந்தேகம் போல் அவர் கேட்க

                        “அதை அவன்கிட்டே கேட்கணும்.. என்னை ஏன் பிடிச்சு வச்சுருக்க..” என்று அப்போதும் அவன் நழுவ

                       “எனக்கு உண்மையை சொல்லாம உன்னை எங்கேயும் விடறதா இல்ல…” என்று திடமாக கூறியவர் பேரனை தீர்க்கமாக நோக்க

                         “இதுக்குள்ள மொத்தமும் உனக்கு தெரிஞ்சிருக்கும்… இன்னும் என்ன…அதான் உன் பேரன் எல்லாம் சொல்லியிருப்பானே…” என்றவன் கோபத்தில் தன் முன் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்ட

                        “எனக்கு நீ சொல்லு பீஷ்மா.. எங்கே கிளம்பின..” என்று தீவிரமாக அவர் கேட்க

                                                         “நான் உன் பேரனை விடறதா இல்ல சத்யா… அவனை அவ்ளோ சீக்கிரமா என்னால விடமுடியாது..” என்று தீவிரத்துடன் அவன் கூறிவிட, முன்பை விடவும் நிதானமாக அவனைப் பார்த்தார் சத்யநாராயணன்.

                          அவரின் பார்வையில் “இந்த விஷயத்துல நிச்சயமா நான் உன் பேச்சை கேட்க மாட்டேன்…” என்று தீர்மானமாக அவன் உரைக்க,

                          “நீ கிருஷ்ணாவை எதுவும் செய்யக் கூடாது பீஷ்மா..” என்றார் ஆணையாக.

                         பீஷ்மா தன் கையில் இருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி பக்கவாட்டில் அடிக்க, அந்த கண்ணாடி திரை நொறுங்கியது அவன் கோபத்தில். சத்யநாராயணன் அசையாமல் அமர்ந்து இருக்க, தன் இயலாமையை ஒப்புக் கொள்ள முடியாமல் இருக்கையை உதைத்து தள்ளிவிட்டு எழுந்து நின்றான் அவன்.

                        இரண்டு கைகளாலும் தலையைக் கோதிக் கொண்டு, மூச்சை இழுத்து விட்டவன் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் திண்டாடிப் போனான். இரு நிமிடங்கள் அமைதியில் கழிய, “இங்கே வந்து உட்கார்..” என்று எதுவுமே நடக்காத தொனியில் கூறினார் சத்யநாராயணன்.

                        பீஷ்மன் அப்போதும் ஆத்திரம் குறையாதவனாக “இன்னும் என்ன சொல்லணும்… அதுதான் எப்போதும் போல ஆர்டர் போட்டாச்சே.. கிளம்பு..” என்று இரைய,  சின்னதாக சிரித்தார் அவன் தாத்தா.

                           அதே சிரிப்புடன் “வந்து உட்காருடா..” என்று பாசமாக அவர் அழைக்க, அந்தக்குரலை மீறிப் பழக்கம் இல்லாதவன் அவர் எதிரில் வந்து அமர்ந்தான்.

                           சத்யநாராயணன் “அவன் இது வரைக்கும் என்கிட்டே எதுவுமே கேட்டதில்லை பீஷ்மா. இப்போ அந்தப் பெண்ணுக்காக நம்மை தேடி வந்திருக்கான். எனக்கு அவளைப் பிடிக்கும் தாத்தா ன்னு வந்து நிற்கிறானே. நான் என்ன செய்யட்டும் சொல்லு.” என்று பேரனையே அவர் கேட்க

                            “எனக்கும் அந்தப் பெண்ணை பிடிச்சிருக்கே..அதுக்கு என்ன செய்யப்போற..”என்று பேரன் கேள்வியெழுப்ப

                            “விதண்டாவாதம் பண்ணாதடா… அந்தப்பெண்ணுக்கு அவனைத்தானே பிடிச்சிருக்கு.” என்றார் பெரியவர்.

                           “அந்தப் பொண்ணு சொன்னாளா உன்கிட்ட…” என்று பீஷ்மன் நிற்க

                            “அவ தனியா வேற சொல்லனுமா.. அதுதான் நான் கொடுத்த சங்கிலியை அவ கழுத்துல போட்டு இருக்கானே.. அவ சம்மதம் இல்லாமலா போட்டு இருப்பான்..” என்று அதட்டலாக பெரியவர் கேட்க, பேரன் பதில் சொல்லாமல் பெரியவரை நக்கலாக பார்த்தான்.

                               அவனுக்கு மேல் நக்கலாக பார்த்தவர் “நிச்சயமா அவ சம்மதம் இல்லாமல் போட்டு இருக்கமாட்டான். ஏன்னா அவன் ஜெயராம் கிருஷ்ணா…” என்றுவிட

                                 “நான் அவனைப் போடணும்ன்னு நினைச்சது தப்பு. உன்னைப் போடணும் முதல்ல. என்கூட இருந்துட்டு அவனுக்கு ஜால்ரா போட்டுட்டு இருக்கியா..” என்று அவன் கேட்க

                               “நீ என் பேரன்டா… உன்னைப்பத்தி எனக்கு “என் பேரப்பிள்ளைகடா நீங்க ரெண்டு பேரும். உங்களைப் பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரியும் இல்லையா. அதை வச்சு தான் சொல்றேன். இதுல ஜால்ரா எங்கே இருந்து வருது.” என்று அவர் கேள்வியெழுப்ப

                     “சரி கிளம்பு.” என்றான் கோபமாக

                     “ஏன் கிளம்பனும்..”

                      “அதுதான் வந்த வேலை திவ்யமா முடிஞ்சதே.. உன் பேரனை காப்பாத்திட்டதா நினைக்காத… நிச்சயமா பதில் கொடுப்பேன் ..” என்று உறுதியாக பீஷ்மன் கூற, அவனை கவலையாகப் பார்த்தார் சத்யநாராயணன்.

                       “நீங்க ரெண்டு பேரும் எனக்கு முக்கியம் பீஷ்மா. யார் யாரை அடிச்சாலும் எனக்கு வலிக்கும். அடிவாங்கின உங்களை விட அதிகமா வலிக்கும்.” என்றவர் தன் இடத்திலிருந்து எழுந்து விட்டார்.

                       “பீஷ்மா உன் விஷயத்துல இனி குறுக்கிடமாட்டான் ன்னு நான் கிருஷ்ணாகிட்ட சொல்லி இருக்கேன். மறந்துடாத.” என்று எச்சரிக்கையுடன் அவர் கிளம்ப

                       “வர்றேன் இரு..” என்று அவர் பின்னால் நடந்தான் பீஷ்மன்.

                       அவர் கீழே வந்து காரில் ஏற, ஓட்டுநர் இருக்கையில் தானே அமர்ந்து கொண்டான். “உனக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லையா… என்னோட கிளம்பிட்ட..” என்று அவர் கேட்க, அவரை திரும்பி முறைத்தான் அவன்.

                       அவன் முறைப்பில் சிரித்துக் கொண்டவர் “உன் சினிமாக்காரி என்ன ஆனா.. இப்படி கல்யாணம், காதல் ன்னு இறங்கிட்ட..” என்று மீண்டும் அவர் நக்கலடிக்க

                       காரை ஓரமாக நிறுத்திவிட்டான் பீஷ்மன்.”வயசுக்கு தகுந்தா மாறி பேசறியா நீ.” என்று சத்யநாராயணனை அவன் சுட்டெரிக்க

                         “இல்லாததையா சொன்னேன். நீயும் அவளும் காதலிக்கிறதா இப்போ வரைக்கும் கிசுகிசு எழுதிட்டு இருக்கானுங்களே..”

                          “அவ என் பிரெண்ட் சத்யா. தேவையில்லாததை பேசாத.” என்று அவன் முடிக்கப்பார்க்க

                          “இந்த வார்த்தை ஒன்னு வசதியா போச்சுடா உங்களுக்கு. பண்றது மொத்தத்தையும் பண்ணிட்டு பிரெண்ட் ன்னு சொல்லி தப்பிச்சிடலாம்..” என்று மேலும் அவர் நக்கலடிக்க

                            “அவளுக்கு தெரியாமலா நடக்குது. அவளே கவலைப்படல  உனக்கு என்ன..” என்றான் சிரிப்பாக

                            “அவ கவலைப்பட்டாலும் கண்டுக்கற ஆளா நீ.. ஏண்டா காமெடி பண்ற.” என்று அவர் நிறுத்த

                            “எங்களுக்குள்ள என்ன நடக்குது ன்னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும் தாத்தா…” என்றான் பீஷ்மன்.

                          “அந்தளவு புரிதல் இருந்தா அவளையே கட்டிக்க வேண்டியது தானே. ஏன் அடுத்தவ பின்னாடி அலையனும்..” என்று அவர் கேட்டதில் சிரித்து விட்டவன் “காமெடி பண்ணாத சத்யா..” என்றதோடு அந்த பேச்சை முடித்துவிட்டான்.

                          அவரை வீட்டில் இறக்கிவிட்டு தன் அலுவலகத்திற்கு அவன் கிளம்ப, தாத்தாவிடம் பேசியது மொத்தமும் மீண்டும் மண்டையில் ஓடியது. சாஷாவின் நினைவும் தானாகவே எழ, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் அவளைக் காண சென்றான் பீஷ்மன்.

Advertisement