Advertisement

                          எத்தனை பெரிய காரியத்த எத்தனை சுலபமாக செய்துவிட்டு, அதை பற்றிய சிறு கவலையும் இன்று வளம் வருகிறான் என்று அதிசயப்பட்டது அவள் மனது. என்ன மனிதன் இவன்?? அடுத்தவர்களின் உணர்வை பற்றி கவலையே இல்லையா ?? என்று தீராத வெறுப்புதான் வளர்ந்தது அவளிடம்.

                          அவனைப் பற்றிய எண்ணங்களிலேயே உழன்று கொண்டிருந்தவளுக்கு நிஜத்திற்குமே தலைவலி வந்துவிட, ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு உறங்கினாள் அவள்.

                          அதே இரவில் தன் மனைவியிடம் பீஷ்மனை பற்றிய விவரங்களை கூறிக் கொண்டிருந்தார் பரமேஸ்வரன். மனைவியிடம் எதையும் மறைக்கும் வழக்கம் இல்லாதவர் என்பதால் அவன் ஸ்ரீகாவை திருமணம் செய்ய விரும்புவது வரை மொத்தமும் கூறிவிட்டார்.

                       ரேகாவின் முகம் கலவையான உணர்வுகளை காண்பிக்க, அவர் தலையில் தட்டிய பரமேஸ்வரன் “நீ பயப்பட இதெல்லாம் சொல்லல. உனக்கு தெரியணும் ன்னு சொன்னேன்.. நான் இருக்கேன்ல. நீ ஏன் கவலைப்படற..” என்றார்.

                        “நீங்க சொல்றதை எல்லாம் வச்சுப் பார்த்தா, கொஞ்சம் பயமாதான் இருக்குப்பா… துருவன் விஷயத்துல நடந்ததே சாட்சி இல்லையா. எந்த எல்லைக்கும் போகக்கூடியவன் தான் போல. நாம ஸ்ரீகாவை கவனமா இருக்க சொல்லணும்.” என்றார் ரேகா.

                        “ரேகா கவனமா இருக்க எல்லாம் ஒண்ணுமில்ல. அவனும் அந்த அளவுக்கு இறங்குறவன் கிடையாது. ஸ்ரீயை பார்த்தவுடனே பிடிச்சுருக்கு. என்கிட்டே கேட்டான். முடியாது ன்னு சொல்லியாச்சு. அதோட முடிஞ்சுதும்மா.. நீ கவலைப்படாத.” என்று பரமேஸ்வரன் கூற

                        “எனகென்னவோ அப்படி தோணல. நீங்க சொல்றதை வச்சு பார்க்கும்போது, இது முடியுற விஷயமாகவும் தெரியல. என் மகள் பத்திரமா இருக்கணும். அவளை அவளுக்கு ஏத்த ஒருத்தன்கிட்ட சீக்கிரமே ஒப்படைக்கணும். ” என்று புலம்ப தொடங்கிவிட்டார் ரேகா.

                         “ரேகா.. நாந்தான் சொல்றேனே. பீஷ்மன் ஸ்ரீகாவை எல்லாம் எதுவும் செய்யமாட்டான். அவனுக்கு அவளை பிடிச்சுருக்கு.. அவ்ளோதான்.” என்று அவர் கூற

                          “அப்படி சொல்லாதீங்க..” என்று சத்தம் போட்டார் ரேகா.

                        “ரேகா… இதெல்லாம் ஒரு விஷயமா..இவ்ளோ டென்சன் ஆகணுமா??” என்று பரமேஸ்வரன் அவரை சமாளிக்கப் பார்க்க

                          “டென்சன் ஆகாம எப்படி இருக்க முடியும்??” என்று கணவரை ரேகா முறைக்க

                          “நான்கூட அவனைப் போல சுத்திட்டு இருந்தவன் தான் ரேகா.. அதனால தான் சொல்றேன். அவனைக் கண்டு பயப்பட வேண்டாம்.” என்று பரமேஸ்வரன் கூற

                             “என்ன சொல்ல வர்றிங்க நீங்க… யாரை யாரோட சேர்க்கறீங்க..” என்று கேட்ட ரேகாவின் குரலில் கனல் தெறித்தது.

                              “ஹேய் நீ பயப்பட வேண்டாம் ன்னு சொன்னேன் ரேகா..” என்று விழிக்க

                              “நம்ம விஷயமும் இந்த விஷயமும் ஒன்னு கிடையாது. நான் உங்களோட வந்ததுக்கு உங்கமேல இருந்த காதல் மட்டும்தான் காரணம். என் பொண்ணுக்கு அப்படி எதுவும் இல்லையே. பிறகு அவளுக்கென்ன தலையெழுத்துஇவனோட வாழ. இப்படிப்பட்ட ஒருத்தன் என் மகளுக்கு வேண்டவே வேண்டாம்.” என்றார் அழுத்தம் திருத்தமாக

                                 “சும்மா சத்தம் போடக்கூடாது ரேகா. இப்போ யார் அவனோட வாழ சொன்னது. நாந்தான் முடியாது ன்னு அப்போவே சொல்லிட்டு வந்துட்டேனே. உனக்கு தெரிஞ்சு இருக்கனும்ன்னு தான் இப்போ உன்கிட்ட சொன்னது கூட. நீ டென்சன் ஆகி ஸ்ரீகாவையும் பதட்டப்பட வைக்காத… புரியுதா..” என்று கண்டிப்புடன் பரமேஸ்வரன் கூற

                                “நிச்சயமா என் மகளால அவனோட வாழ முடியாதுப்பா.. அவ வாழ்க்கை நல்லா இருக்கணும். நீங்க பார்த்துப்பிங்க தானே..” என்று பாவமாக அவர் கணவரை கேட்க

                                “அட பைத்தியக்காரி… அதுதான் இத்தனை தூரம் சொல்றேனே. நம்ம மகளோட வாழ்க்கை நிச்சயமா உன் விருப்பபடி தான் அமையும். நான் உயிரோட இருக்க வரைக்கும் என்னை மீறி யாரும் என் பிள்ளைகளை தொட முடியாது. நிம்மதியா தூங்கு..” என்று தட்டிக் கொடுத்து மனைவியை உறங்க வைத்தார் பரமேஸ்வரன்.

                                         அடுத்தநாள் காலை வழக்கமான நாளாக தொடங்க, ஸ்ரீகா தன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள். அன்றைய நாளின் வேலைகளை அவள் கவனித்துக் கொண்டிருக்க, உணவு இடைவெளியில் அவளுக்கு பீஷ்மனிடமிருந்து அழைப்பு வந்தது.

                      அவன் எண் நினைவில் இருக்க, அழைப்பை ஏற்காமல் விட்டுவிட்டாள் முதல் இருமுறை. மூன்றாம் முறையும் விடாமல் அவன் அழைக்க, ஒரு சலிப்புடன் தான் அழைப்பை ஏற்றாள். அவனோ அவள் மனநிலையை அறியாமல் “தட்ஸ் குட் ஸ்ரீகா..” என்றான்.

                        ஸ்ரீகா அமைதியாக இருக்க, “இனிமே முதல் ரிங் வரும்போதே எடுத்திடு டார்லீ..” என்றான் சிரிப்புடன்.

                       ஸ்ரீகா வந்த கோபத்திற்கு “பைத்தியமாடா நீ..” என்று மெல்லிய குரலில் கடிய

                        “வாட்..” என்றான் ஆச்சரியமாக

                        “என்ன வாட். உன்னை பிடிக்கல சொல்லிட்டேன் இல்ல. இன்னும் ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற. நீ துருவன் விஷயத்துல நடந்த விதத்துக்கு உன்னை கொன்னு இருக்கணும். என் அப்பாவோட வார்த்தைக்காக அவன் அமைதியா இருக்கான். மரியாதையா ஓடிடு. என் வாழ்க்கையில குறுக்கிட முயற்சி பண்ணா, நிச்சயமா நீ வேதனைப்படுவ.” என்றாள் ஸ்ரீகா.

                        “என்ன நாலு தடியர்கள் இருக்காங்க ன்னு தைரியமா…. நேத்து முழுக்க ஒருத்தன் பட்டும் புத்தி வரலையே உனக்கு… சத்தம் அதிகமா இருக்கு. நாளைக்கு வேணும்ன்னா அடுத்தவனை அலைய விடவா??” என்று பீஷ்மன் இரக்கம் இல்லாதவனாக சிரிக்க

                         “உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா.. மனுஷ ஜென்மம் தானா நீ..” என்று கோபத்தில் ஸ்ரீகா வார்த்தைகளை விட

                           “நான் மனுஷன் ன்னு யார் சொன்னது. அரக்கன் நான்… என்னை அழிக்கணும்ன்னு நினைச்சாலே அழிச்சிடுவேன். உன் அண்ணன் என்னை தொட்டுப் பார்த்திருக்கான். உன்னோட அண்ணனா போனதால, இதோட விட்டு இருக்கேன். “என்று பெரிய மனித தோரணையில் பீஷ்மன் பேச, ஏளனமாக உதட்டை சுழித்தாள் அவள்.

                          “ரொம்ப பெரிய மனசு தான்..” என்று வெளிப்படையாகவே அவள் நக்கலடிக்க

                          “நிச்சயமா பெரிய மனசு தான் பேபி. என்னோட பழகின அத்தனைப் பேருக்கும் தெரியும். கேட்டுப் பாரேன்..”

                           “என்ன தேவைக்கு…” என்றாள் மீண்டும்.

                            “உனக்கு தேவைப்படும் பேபி. என் பொண்டாட்டியாகப் போற. தெரிஞ்சுக்கணும் இல்ல..” என்று அவன் சொன்ன நிமிடம், சத்தமாக சிரித்து விட்டாள் ஸ்ரீகா.

                            “நல்லா காமெடி பண்ற நீ.” என்று வேறு கூற, கடுப்பாகி விட்டான் எதிர்முனையில் இருந்தவன்.

                         “நான் சொன்னது கண்டிப்பா நடக்கும் ஸ்ரீகா. அன்னைக்கு உன் நிலைமை தான் காமெடியா இருக்கும். சோ இப்போவே சிரிச்சுக்கோ..” என்று அவன் அழுத்தமாக கூற,

                           “நீ சொல்றது எல்லாம் நடக்க இது உன் பிசினஸ் இல்ல.. என்னோட வாழ்க்கை. இங்கே என் முடிவு தான் எல்லாமே. அப்படியே நீ சொல்றது நடக்கிற நிலை வந்தா, அப்போ அதுக்கான பதில் கொடுக்கவும் எனக்கு தெரியும்… நான் சாஷா இல்ல பீஷ்மா… என்கிட்டே விளையாட வேண்டாம்..” என்று அவனுக்கு மேல் அழுத்தமாக ஸ்ரீகா கூறிவிட்டாள்.

                                                          “சாஷா… நிறைய விசாரிச்சு இருக்க போல. “என்று பீஷ்மன் சிரிக்க

                 “நான் விசாரிக்கிற அளவுக்கு நீ முக்கியமானவன் கிடையாது. உங்கிட்ட பேசின இந்த பத்து நிமிஷம் என்னைப் பொறுத்த வரைக்கும் மொத்தமா வேஸ்ட். இனி கூப்பிடாத.. நீ நூறு முறை கால் பண்ணாலும், அட்டென்ட் பண்ண மாட்டேன்…காட் இட்.” என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

                  ஸ்ரீகாவுக்கு தலையை வலிப்பது போல் இருக்க, அன்று மீதமிருந்த வேலைகளைத் தலைவலியுடனே தொடர்ந்தவள் நான்கு மணிக்கு மேலாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள். அவளின் மீத நேரம் நடனப்பள்ளியில் கழிய, பீஷ்மன் அவனது மாலில் அமர்ந்து இருந்தான். அவன் மனம் ஸ்ரீகாவுக்கான திட்டத்தை தீட்ட தொடங்கி இருந்தது.

                  மதியம் பரமேஸ்வரனிடமும் பேசி இருக்க, அவர் கூறிய விஷயங்களும் உவப்பாக இல்லை. இன்னமும் மகளின் விருப்பம், பெயர், பழக்கம் என்று அவர் பிதற்றிக் கொண்டிருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. ஸ்ரீகாவின் தைரியம் அவன் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாக இருக்க, அவளின் துடுக்குப் பேச்சும் சீண்டி விட்டது அவனை.

                      இதற்கு மேலும் அவளை விட முடியாது என்று அவன் முடிவெடுத்த நேரம் தான், பரமேஸ்வரன் மகளுக்கு மாப்பிளையை தேர்வு செய்யும் பணியில் இறங்கி இருப்பதும் தெரிய வந்தது அவனுக்கு. இனி தாமதிக்க முடியாது என்று தீர்மானித்து கொண்டவன் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டான்.

                       ஸ்ரீகா அவளாக வழிக்கு வரமாட்டாள் என்பது தான் அவனுக்கே தெரிந்ததே. அவளை வளைக்கும் முயற்சி வீண் என்று புரிய, அவளை வதைக்கும் வேலையை செய்ய துணிந்து விட்டான் பீஷ்மன். தனது அருகில் நின்றிருந்த தேவனிடம் “தூக்கிடு.” என்றான் நிதானமாக. பார்வை எதிரே தெரிந்த நீச்சல் குளத்தை வெறித்து இருந்தது.

                       இதுவரை காதல் என்று பிதற்றியவனுக்கு இப்போது ஸ்ரீகா குறி என்று ஆகிவிட்டாள். அவளை விரும்புகிறேன் என்ற நிலை எப்போதுமே இருந்ததில்லை என்றாலும், அவனளவில் அவளை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தவன் இன்று எப்படியும் அவளை அடைந்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான். அவளின் உதாசீனப் பேச்சு அவனை அந்த நிலையில் நிறுத்தி இருந்தது.

                   தோல்வியே கண்டிராதவன் முதல் தோல்வியை தாங்க முடியாமல், அதை வெற்றியாக்க முடிவெடுத்து துணிந்திருந்தான். தேவன் அவனின் முதற்கட்ட அடியாள். அவன் சொன்னதை சொன்னபடி செய்து முடித்துவிட்டு தான் மூச்சுக் கூட விடுவான் என்பது போலத்தான்.

                      அவனிடம் வேலையை ஒப்படைத்து விட்ட நிம்மதியில் இவன் கண்களை மூட, அங்கே தன் நடன பள்ளியில் இருந்து வெளியே வந்தாள் ஸ்ரீகா. வழக்கமாக அழைக்க வரும் சர்வா, அன்று ஏதோ முக்கிய வேலையாக சென்று இருக்க, அவளே வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்று அலுப்புடன் தான் வெளியே வந்தாள் ஸ்ரீகா.

                     வழக்கமான இடத்தில் நின்றிருந்த தன் காரை எடுத்துக் கொண்டு அவள் கிளம்ப, அவளைப் சீரான இடைவெளியில் பின் தொடர்ந்தது அந்த லம்போகினி. காரின் உள்ளே இருந்தவன் காதுகளில் ப்ளூடூத் கருவியை இணைத்திருக்க, அதில் கசிந்த பாடலுக்கு ஏற்றபடி ஸ்டியரிங் வீலில் தாளமிட்டுக் கொண்டிருந்தது அவன் விரல்கள்.

                       ஆலிவ் நிற சட்டை.. சாம்பல் வண்ண பேண்ட் அணிந்திருந்தவன் வலது கையில் சிங்க முகம் பதித்த காப்பு ஒன்றை அணிந்திருந்தான். தாளமிட்ட விரல்களில் கடைசி விரலில் மட்டும் ஒரு மோதிரம் மின்னிக் கொண்டிருந்தது. பாடலில் மூழ்கி இருப்பது போல இருந்தாலும், அவன் கவனம் முழுவதும் முன்னால் சென்ற ஸ்ரீகாவின் மீது தான் இருந்தது.

                           அவன் கண்கள் சரியான இடத்தை எதிர்பார்த்து காத்திருக்க, அவள் வீட்டை நெருங்குவதற்குள் அவளை நெருங்கிவிட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே அவனிடம். அவன் எதிர்பார்த்தது போல் ஆள் நடமாட்டமில்லாத ஒரு திருப்பத்தில் அவள் கார் திரும்ப, தனது வண்டியின் வேகத்தை சட்டென கூட்டியவன் அடுத்த நிமிடம் அவளை முந்திக் கொண்டு அவளை முன்னேற விடாமல் அணைவாக தன் காரை நிறுத்தி இருந்தான்.

                              ஸ்ரீகா அந்த வாகனத்தின் வேகத்தில் மொத்தமாக பயந்தவளாக, சட்டென பிரேக் பிடித்து தன் வாகனத்தை நிறுத்தி விட்டாலும், இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது இன்னும். ஒருநொடி தாமதித்து இருந்தால் என்ற எண்ணம் இன்னும் அச்சம் கொடுக்க, முன்னால் நிறுத்தி இருந்த காரை ஆத்திரமாக உறுத்து விழித்தவள் தன் காரிலிருந்து இறங்கி அந்த காரின் ஓட்டுநர் இருக்கையை நெருங்கினாள்.

                            வந்த வேகத்தில் காரின் கதவை அவள் திறக்க முற்பட, அவள் சிரமப்படுபடி இல்லாமல் அவனாகவே கதவைத் திறந்து கீழே இறங்கி நின்றான் புதியவன். ஸ்ரீகாவின் கண்கள் அதிர்ச்சியில் இன்னும் பெரியதாக, அவளை கண்டு கண்களை சிமிட்டினான் அவன்.

                          ஸ்ரீகா கோபமாக ஏதோ பேச முற்பட, “சாரி பேபி..” என்றவன் தன் கையில் இருந்த கைக்குட்டையை அவள் முகத்தின் மீது திணிக்க, சட்டென தடுமாறியவளை மற்றொரு கையால் தாங்கி கொண்டான். ஸ்ரீகா ஒரு நிமிடம் போராடி, அடுத்த நிமிடம் அவன் கைகளில் தொய்ந்து விழ, இடது கையால் அவளை அணைத்து கொண்டவன் அவளின் இதழ்களில் அழுத்தமாக தன் இதழ்களை புதைத்து விலகினான்.

                         தன் மீது விழுந்து கிடப்பவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, அவளை தன் காரில் ஏற்றியவன் அருகில் இருந்த தன் ஆட்களுக்கு அழைக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்ரீகாவின் காரை எடுத்துக் கொண்டு அவர்கள் கிளம்ப, அவர்கள் கிளம்பிய மறுநிமிடம் இவனும் கிளம்பி இருந்தான்.

                      காரில் ஸ்ரீகா ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க, மீண்டும் “சாரி பேபி..” என்றவன் அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டு தன் பயணத்தை தொடங்கி இருந்தான்.

                      இவன் கிளம்பிய அதே நேரம், பீஷ்மனுக்கு அழைத்த தேவன் “பாஸ்..” என்று திணற

                      “விஷயத்தை சொல்லுடா..” என்று எரிச்சலுற

                       “பாஸ்.. ஸ்ரீகா.. அவங்களை சென்ட்ரல் மினிஸ்டர் தூக்கிட்டாரு பாஸ்..” என்றவன் குரலில் குழப்பம் மேலோங்கி இருக்க,

                        “சரியா சொல்லு.” என்று கர்ஜித்தான் பீஷ்மன்.

                       “பாஸ்… மினிஸ்டர் தான் பாஸ்.. நான் பார்த்தேன். மினிஸ்டர் ஜேஆர்கே தான். ” என்றான் உறுதியாக

                         பீஷ்மன் தனக்கு முன்னால் இருந்த டீபாயை ஓங்கி உதைக்க நீச்சல் குளத்தில் சென்று விழுந்தது அது. “கிருஷ்ணா…” என்று ஆத்திரமாக கத்தியவன் அடுத்த நிமிடம்,  “தேவா..” என்று போனில் கத்த,

                  “பாஸ்..” என்றவரிடம்

                            “நீ என்ன செய்வியோ தெரியாது எனக்கு.. அவ என் கைக்கு வந்தாகணும். அவனை போடுடா.. அவனை முடிச்சுட்டு அவளை தூக்கு..” என்று கத்த

                        “பாஸ்.. பெரியவர்..” என்று அவன் முதல் முறையாக தயங்க

                        “நீ அவனை முடிச்சாகனும் தேவா… யார் வந்தாலும் நான் பார்க்கிறேன்.. நீ முடிக்கிற இன்னைக்கு..” என்று அவன் கத்திக் கொண்டிருக்க, அவன் முடிக்க சொன்னவன் சென்னையின் எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

Advertisement