Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 13

                     பீஷ்மனுக்கு சொந்தமான மாலில் அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்தார் பரமேஸ்வரன். அவரது பார்வை எதிரில் இருந்தவனை துளைத்துக் கொண்டிருந்தது. அவனும் சளைத்தவன் இல்லையே. ஒன்றுமே அறியாதவன் போல், “சொல்லுங்க அங்கிள்..” என்றுவிட்டு அவர் பேச்சைத் தொடங்கத் தான் காத்திருந்தான்.

                     பரமேஸ்வரன் நிதானமாக “ஏன் இப்படி பண்ண பீஷ்மா… எதுக்காக இதெல்லாம்..” என்று கேட்க

                      “உங்களுக்கு தெரியும் அங்கிள்… தெரியாமல் இங்கே வந்து இருக்க மாட்டிங்க..” என்றான் உறுதியாக

                     “துருவன் உன்மேல கையை வச்சது தப்புதான். ஆனா, அதே சமயம் நீ ஸ்ரீகாவிடம் நடந்து கொண்ட விதமும் தப்புதானே.” என்று அவர் வாதிட

                      “எப்படி நடந்தேன் உங்க மககிட்ட.. உங்க பொண்ணு எதுவும் கம்ப்ளெயிண்ட் பண்ணாளா…” என்று அவன் விசாரிக்க

                       “ஒரு பொண்ணோட கையை பிடிக்கிறது உன்னைப் பொறுத்தவரைக்கும் தப்பு இல்ல போல..” என்று அவர் குட்ட

                        “ஓஹ்.. கமான் அங்கிள்.. கையை பிடிக்கிறது எதுக்காக ன்னு ஒரு விஷயம் இருக்கே.. எனக்கு ஸ்ரீகாவை பிடிச்சது. கல்யாணம் பண்ணிக்க கேட்டேன். இது நாங்க சம்பந்தப்பட்ட விஷயம். இதுல துருவன் எங்கே இருந்து வந்தான். அவன் உள்ளே வந்ததும் இல்லாம என் மேல கையை வச்சிருக்கான். அவனை விட சொல்றிங்களா…”

                          “சொல்லப்போனா, இப்போவே அவனை விட்டு தான் வச்சிருக்கேன். அதுவும் உங்க முகத்துக்காக. அதுவும் புரிஞ்சிருக்கணுமே உங்களுக்கு.” என்றான் பீஷ்மன்.

                          “நீ தப்பு பண்ற பீஷ்மா… நீ காலையில் தொடங்கி வைத்ததை நான் மாலைக்குள் முடிச்சுட்டு வந்திருக்கேன். இதுக்கு மேலேயும் முடியும் என்னால. இதுல உன் பேரையும் இழுத்து விட்டு இருக்கலாம். ஆனா, நீ என் நண்பனோட மகன்.”

                         “சின்னப்பிள்ளைகள் தப்பு செய்தா, பொறுமையா எடுத்து சொல்வோம் இல்லையா.. அப்படிதான் இப்போ உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் நான். ஆனா, எப்போதும் இதே பொறுமையோட இருக்க மாட்டேன். எனக்கு என் பிள்ளைகள் என்னைவிட முக்கியம். இனி நீ அவங்க வழில குறுக்கிட கூடாது.” என்று விரல் நீட்டி அவர் மிரட்ட

                         “இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல அங்கிள். உங்களுக்கு என்னைப் பற்றி நல்லாவே தெரியும். முடிவு பண்ணிட்டா முடிச்சிடுவேன்… ஆனா, இந்த நிமிஷம் உங்க பேச்சை அப்படியே கேட்கணும்ன்னு தான் தோணுது. காரணம் ஸ்ரீகா..” என்றான் அப்போதும்.

                         “ஸ்ரீகாவை பத்தி பேசாத பீஷ்மா. அது சரி வராது..”

                         “ஏன் அங்கிள்..”

                         “உனக்கும் அவளுக்கும் ஒத்து வராது பீஷ்மா…”

                         “அதுதான் ஏன்..”

                        “நீ எப்படி வேணாலும் வாழலாம் ன்னு நினைக்கிறவன். அவ இப்படித்தான் வாழனும் ன்னு வாழ நினைக்கிறவ.. உன்னோட பழக்கவழக்கங்களுக்கும் அவளுக்கும் எப்பவும் ஒத்து வராது..”

                        “பழக்கவழக்கங்கள் பத்தி நீங்க பேசறது ஆச்சரியமா இருக்கு அங்கிள். ரேகா ஆன்டி க்கு முன்னால உங்களோட பழக்கவழக்கங்களும் கூட, என்னை போலத்தான் இல்லையா..” என்று அவன் மடக்க

                      “இங்கே தான் பீஷ்மா நீ தப்பு பண்ற. நீ பரமேஸ்வரன் கிடையாது, அதோட ஸ்ரீகாவும் ரேகா கிடையாது. அவ மொத்தமா வேற. திரும்பிக் கூட பார்க்கமாட்டா..” என்றார் பரமேஸ்வரன்.

                        “அவ பார்க்காம போகவும் தானே உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்.” என்று பீஷ்மன் சிரிக்க,

                     “யார்கிட்ட பேசினாலும் வேஸ்ட் தான். ” என்று பரமேஸ்வரனும் சிரித்து வைத்தார்.

                      “உங்க பிள்ளைகள் உங்க பேச்சை மீற மாட்டாங்க ன்னு பேசிக்கிறாங்களே அங்கிள்.”

                    “அவங்க மீறும்படியான விஷயங்களை நான் எப்பவும் பேச மாட்டேன் பீஷ்மா…” என்று அப்போதும் அவர் நழுவ,

                        “நீங்க எனக்காக பேசுவீங்க அங்கிள்.” என்று உறுதியாக அவரிடம் கூறியவன் இதழ் விரித்து சிரிக்க, பரமேஸ்வரன் விடைபெறுவதற்காக எழுந்து நின்றார். அவர் விடைபெறும் நேரம் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் துருவன்.

                          அவன் முகம் கோபத்தில் செக்கச்சிவந்து காணப்பட, அவன் வந்த வேகத்திற்கு பீஷ்மனின் சட்டையை கொத்தாக கையில் பிடித்தும் இருந்தான். பீஷ்மன் அப்போதும் சிரித்துக் கொண்டே நிற்க, பரமேஸ்வரன் மகனை பிடித்து இழுத்தார். அறிவனும் துருவனின் பின்னால் ஓடி வந்திருக்க, அவனும் பிடித்து நிறுத்தினான் துருவனை.

                          பீஷ்மன் கைகளை மேலே தூக்கி, தோள்களை குலுக்கி மெல்ல புன்னகைத்தான். துருவன் அவன் சிரிப்பில் இன்னும் ஆத்திரம் வர பெற்றவனாக அவனை நெருங்க “அன்னைக்கு என் மேல கையை வச்சதுக்கு தான், இன்னிக்கு முழுக்க அலைஞ்சிருக்க… திரும்பவும் அதே தப்பை செய்ய நினைக்காத துருவ்..” என்று சட்டையின் காலரை நீவி விட்டுக் கொண்டான்.

                         துருவ் “வெட்கமா இல்லையாடா உனக்கு. நேரா நிற்க தைரியம் இல்லாம, இப்படி கேவலமா கேம் பிளே பண்ணுவியா… தைரியம் இருந்தா, இப்போ வாடா..” என்று அவன் குதிக்க, பீஷ்மன் பரமேஸ்வரனைத் தான் பார்த்திருந்தான்.

                        “இப்போ எனக்கு டைம் இல்ல துருவ். பட் நிச்சயம் ஒருநாள் மோதிப் பார்ப்போம்..” என்று விளையாட்டாகவே முடித்தான். துருவன் சண்டைக்கோழியாக நிற்க, அறிவனுக்கும் அவனின் இந்த பேச்சில் லேசான எரிச்சல் தான். பரமேஸ்வரன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் விடைபெற்றவர் மகன்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

                                 பரமேஸ்வரன் அவரின் காரில் ஏற, ஓட்டுனரை தடுத்து தான் ஏறினான் அறிவன். அவனுக்கு அருகில் துருவன் அமர்ந்து கொள்ள கார் வேகமெடுத்தது. அறிவன் அதற்குமேல் பொறுக்க முடியாமல் “என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க நீங்க… அங்கேயே அவன் பேரையும் சேர்த்து சொல்லி இருந்தா, இந்நேரம் உள்ளே இருந்திருப்பான் அவன்.” என்று கத்த, மென்மையாக புன்னகைத்தார் பரமேஸ்வரன்.

                           “அவனை உள்ளே வைக்கிறது அத்தனை சுலபமான விஷயம் கிடையாது அறிவா… அதோட அவன் இதையெல்லாம் ஒரு விஷயமா கூட எடுக்க மாட்டான். ஆனா, நாம அப்படி இல்லையே.” என்றார் அவர்.

                           “அப்பா.. அதுக்காக அவன் என்னசெஞ்சாலும் நாம வேடிக்கை மட்டுமே பார்க்கணுமா..” என்று அவன் கோபப்பட

                            “அப்படி இல்ல அறிவா… இது அவனுக்கும் எச்சரிக்கை தான். திஷாவோட வாக்குமூலத்தை வச்சே அவனுக்கும் புரிஞ்சிருக்கும். இனி அவனும் நம்ம பக்கம் வரமாட்டான்.இதோட விடுங்க.” என்று முடித்தார் அவர்.

                                 அவர் சுலபமாக சொல்லிவிட்டாலும் துருவனால் அப்படி சாதாரணமாக கடந்து விட முடியவில்லை. இத்தனைக்கும் பரமேஸ்வரன் அந்த புகைப்படங்கள் வெளியான அடுத்த மூன்று மணி நேரத்தில் மொத்தத்தையும் முடித்து இருந்தார்.

                      முதலில் திஷாவை தேடி, அவள் கைக்கு கிடைக்காமல் போகவும், அவள் குடும்பத்தை தூக்கி அவர்கள் மூலம் அவளை வழிக்கு கொண்டு வந்து, அவள் வாயாலேயே மறுப்பு செய்தி கொடுக்க வைத்ததோடு நடந்தது அனைத்தும் அவள் வாய்மொழியாகவே வீடியோ பதிவாக பதிந்து கொள்ளப்பட்டது.

                       இது அத்தனையும் சென்னையின் காவல்துறை அலுவலகத்தில் வைத்தே பரமேஸ்வரன் நடத்தி முடித்திருக்க,அதுவே அவரின் அதிகாரத்திற்கு அத்தாட்சி. அவள் மீது புகார் கொடுக்கும்படி காவலர்கள் கூறியும் அவளை மன்னித்து வெளியே விட்டிருந்தார் பரமேஸ்வரன். இந்த செய்தியே அரசால் புரசலாக கசிந்து இருக்க, இனி அவளின் சினிமா எதிர்காலம் கேள்விக்குறி தான்.

                      அவருக்கு நன்கு தெரியும் இதன் பின்னால் இருப்பது பீஷ்மன் என்று. திஷாவும் அதை ஒப்புக்கொண்டிருக்க, அதற்குமேல் அவளை மட்டும் எங்கே தண்டிப்பது என்ற எண்ணத்தில் தான் அவளை அனுப்பி விட்டிருந்தார். இதோ பீஷ்மனிடமும் நேரிலேயே எச்சரித்துவிட்டார்.

                      ஒரு தந்தையாக எந்த இடத்திலும் தன் மகனை தனித்து விடாமல் மொத்தமாக அவனை அடைகாத்து கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன். அவருக்கு பீஷ்மனின் பலமும் தெரியும் என்பதால் தான், விஷயத்தை சுமுகமாகவே முடிக்க நினைக்கிறார்.

                       ஆனால், துருவன் அப்படி இல்லையே. அவன் வயதிற்கும், வேகத்திற்கும் அவன் பட்ட அவமானம் பெரிதாக தெரிய, வாய்ப்புக் கிடைத்தால் இப்போதும் “வந்துபாருடா..” என்று நெஞ்சை நிமிர்த்த தயாராகத் தான் இருக்கிறான் அவன். வாய்ப்பு கிடைக்குமா??…

                                             தந்தையும் மகன்களும் வீட்டிற்கு வந்து சேர, அவர்களுக்காக மொத்த குடும்பமும் காத்திருந்தது அங்கே. ரேகா மகனின் முகத்தை கவலையோடு ஏறிட “ஐ ஆம் ஓகேம்மா..” என்று அவரை தான் முதலில் அணைத்தான் மகன். அவனின் அந்த வார்த்தை போதுமாக இருக்க, கணவரை ஏறிட்டார் ரேகா.

                     பரமேஸ்வரன் சிறு ஊடலோடு தன் இணையை நோக்க, இப்போது மன்னிப்பு வேண்டும் கண்களோடு தன்னவரை பார்த்தார் ரேகா. அவரின் மன்னிப்பில் பரமேஸ்வரன் கண்டிப்புடன் பார்க்க, காதலாக மீண்டும் ஒரு பார்வை… அதற்குமேல் தாங்க முடியாமல் “பிள்ளைகளை சாப்பிட வை..” என்றவர் தனது அறைக்கு சென்றுவிட்டார்.

                                         குளித்துவிட்டு வருவார் என்று புரிய, பிள்ளைகளிடமும் “குளிச்சுட்டு வா துருவா.. சாப்பிடலாம்..” என்றவர் மற்றவர்களையும் அனுப்பி வைத்தார். உணவு நேரம் ஓரளவு இறுக்கம் தளர்ந்து காணப்பட, இயல்பாக ஒன்றிரண்டு பேச்சுக்கள் வந்தது அனைவரிடமும்.

                பரமேஸ்வரன் அறிவனிடம் ஒப்படைத்திருந்த வேலை பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டிருக்க, திக்கி திணறிக் கொண்டிருந்தான் அவன். அபி சற்று நக்கலான புன்னகையுடன் அவனை பார்த்திருக்க, பொறுப்பாக தந்தையின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருப்பதாக காட்டிக் கொண்டான் அறிவன்.

                  பரமேஸ்வரன் ஒன்று கேட்க, அதற்கு அறிவன் வேறொன்றைக் கூற என சற்று சிரிப்பாக இருந்தது அந்த இடம். சர்வா வேறு “ஒரே வாரத்தில எப்படி இவ்ளோ விஷயம் கத்துகிட்ட அறிவா… சான்ஸே இல்ல. அப்பா உன்னை சரியாதான் செலக்ட் பண்ணி இருக்காரு. உன்னால மட்டும்தான் இதெல்லாம் முடியும்..” என்று ஏற்ற இறக்கத்தோடு கூறி முடிக்க, துருவனுக்கே சிரிப்பு வந்தது.

                   இறுதியில் ரேகா “சாப்பிடும்போது என்ன கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க.. அவனை சாப்பிட விடுங்க.” என்று கணவரிடம் ஒரு அதட்டல் போட

                    “அப்படி சொல்லுங்க ம்மா.. மனுஷனை நிம்மதியா சாப்பிட விடறாங்களா..” என்று சலித்து கொண்டான் அறிவன். ரேகா சிரிப்புடன் நிற்க, உணவை முடித்த பின்பும் கூட, வெகுநேரம் அரட்டை தொடர்ந்தது. ஆனால், இது எதிலும் பங்கு கொள்ளாமல் உணவை முடித்த நிமிடம் தலைவலி என்று அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஸ்ரீகா.

                       அவளின் சிந்தனையில் பீஷ்மன் தான் ஓடிக் கொண்டிருந்தான். நடந்தவை அனைத்தும் அறிவன் வாயிலாக அவளுக்கு தெரிய வந்திருக்க, பீஷ்மனை குறைவாக மதிப்பிட்டதற்காக தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள் அவள்.

Advertisement