Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 11

                      தனக்கு முன்னால் இருந்த உதிர்ந்த பூக்களை அசையாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரீகா. அவளுக்கு மிகவும் பிடித்த வெண்ணிற ரோஜாக்கள். ஆனால், முழுதாக அவற்றின் அழகில் லயிக்க முடியவில்லை அவளால். நெஞ்சின் ஓரம் ஏதோ பாரமேறிய உணர்வு.

                       யாராக இருக்கும் என்று எத்தனை முறை சிந்தித்தாலும், எந்த ஒரு முடிவுக்கும் வரவிடாமல் அவள் மனமே அவளை அலைக்கழித்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பீஷ்மன் பேசிய விதத்திற்கும் இந்த பூச்செண்டிற்கும் கொஞ்சமும் ஒத்துப் போகவில்லையே என்று முரண்டியது மனம்.

                        ஆனால், அவனைத் தவிர…. வேறு யாரும் இருக்க முடியாது என்று தனக்குள் தீர்மானமாக எண்ணிக் கொண்டவள் அந்த பூக்களை கொஞ்சம் கூட யோசிக்காமல் குப்பைக் கூடையில் போட்டு மூடினாள். அதன் அழகுக்காக கூட, அவற்றை ஆராதிக்க தயாராக இல்லை அவள்.

                       இது என்னுடையது அல்ல. அனுப்பி இருப்பவனும் எனக்கானவனாக இருக்க முடியாது என்று என்ற எண்ணம் வலுப்பெற, அந்த விஷயத்தை அடியோடு ஒதுக்கிவிட நினைத்தவள் அடுத்தடுத்த வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டாள்.

                    அதே நேரம் பீஷ்மன் தனது மாலில் இருந்தவன் தனக்கு முன்னால் இருந்த மடிக்கணினியில் ஸ்ரீகாவைத் தான் ரசித்துக் கொண்டிருந்தான். அன்று விழா மேடையில் அவள் ஆடிய காட்சிப்பதிவு கைக்கு வந்திருக்க, அதில் அவளது வளைவு நெளிவுகளையும், அசைந்து ஆடும் அவளின் கருவிழிகளையும் இமையகலாமல் பார்த்து இருந்தான் அவன்.

                    நின்றும், அமர்ந்தும், நடந்தும் என்று விதவிதமாக முத்திரை பிடித்திருந்தாள் ஸ்ரீகா. அவளின் அந்த கைவிரல்களுக்குள் ஒளிந்து கொள்ள மாட்டோமா என்பதே ஏக்கமாகிப் போக, அவள் தந்தை கூறிய வார்த்தைகளும் காதுகளில் லேசாக ஒலித்தது.

                     தன் முன் இருந்த அலைபேசியை அமைதியாக பார்த்தவன் என்ன நினைத்தானோ, அழைத்துவிட்டான் ஸ்ரீகாவுக்கு. இவன் அழைத்த நேரம் அவள் அவளது அறையில் இருக்க, பீஷ்மனின் அலைபேசி எண்ணும் கிடையாதே அவளிடம்.

                       சாதாரணமாக தான் அந்த அழைப்பை ஏற்றாள் ஸ்ரீகா. தன் வழக்கமாக “ஹலோ.” என்றுவிட்டு அவள் காத்திருக்க, மறுமுனை மௌனம் காத்தது. இரண்டு நொடிகள் பொறுத்தவள் மீண்டும் “ஹலோ..” என்று விட, “ஸ்ரீகா…” என்று ஆழ்ந்து ஒலித்தது பீஷ்மனின் குரல்.

                     ஆனால், அப்போதும் அவன் குரல் ஸ்ரீகாவுக்கு பிடிபடவில்லை போலும். “ஸ்ரீகாதான்.. சொல்லுங்க.. ” என்றாள். குரலும் அலுவல் தொனி தான். அவளின் இந்த பேச்சில் எதிர்முனையில் இருந்தவன் சற்று சத்தமாகவே சிரித்து விட்டான்.

                     அவனின் ஆழ்ந்த குரலை கண்டுகொள்ள முடியாமல் திணறிய ஸ்ரீகா, அவனின் இந்த சிரிப்பு சத்தத்தை வைத்துக் கண்டுகொண்டாள் அவனை. அவள் இதழ்கள் “பீஷ்மன்…” என்று முணுமுணுக்க,

                      “கண்டுபிடிச்சிட்டியே… மறக்கவே இல்லையோ என்னை..” என்று விஷமமாக கேட்டான் பீஷ்மன்.

                     அந்த குரலில் சிலிர்த்துக் கொண்டவள் “என்ன விஷயம்..” என்றாள் ஒட்டாத குரலில்.

                     “இப்போதைக்கு விஷயம் எதுவும் இல்ல.. ஆனா, இனி நமக்குள்ள பேச நிறைய இருக்கும்.. அதை உனக்கு சொல்லணும் இல்லையா..”

                      “உங்களோட பேச எனக்கு விருப்பமும் இல்ல. அதற்கான அவசியமும் இல்ல. உங்களோட முயற்சி வீணானது… இனி எனக்கு கூப்பிடாதிங்க…” என்றாள் மரியாதையாக

                     “அதை நீ முடிவு செய்யகூடாதே பேபி…” என்று அவன் சிரிக்க, தன் நிதானத்தை தவறவிடாமல் இழுத்து பிடித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீகா.

                      பீஷ்மன் தொடர்ந்து “நீ எனக்கானவ ஸ்ரீகா. உன்னால என்னை தவிர்க்கவே முடியாது. இனி உன் வாழ்க்கையோட ஒவ்வொரு நிமிஷமும் ஏதோ ஒரு விதத்துல பீஷ்மனோட சம்பந்தப்பட்டு இருக்கும் பேபி.” என்று கூற

                     “உன் உளறலை முடிச்சாச்சா…” என்று நக்கலாக கேட்டாள் ஸ்ரீகா.

                      “எல்லாரும் உன்னைப்பத்தி சொன்னதை வச்சு, உன்னை கொஞ்சம் ஓவர் எஸ்டிமேட் பண்ணிட்டேன் நான். ஆக்ச்சுவலா, நீ கொஞ்சம் மண்டை கழண்ட கேஸ் போல. அதனால தான் உன்னோட பேச்சு இப்படி இருக்கு.

                        “லுக்… என் வாழ்க்கையை நாந்தான் முடிவு பண்ணனும். பீஷ்மன் இல்ல பிரம்மனே வந்தாலும், என்னோட முடிவுகளை அவர் எடுக்க முடியாது. புரிஞ்சுதா. உன்கிட்ட இந்தளவு பொறுமையா பேசிட்டு இருக்க ஒரே காரணம் என்னோட அப்பாதான்.”

                        “என்னால உங்களோட தொழில்ல எந்த சங்கடமும் வரக்கூடாது. அதற்காகத்தான் அமைதியாக பேசிட்டு இருக்கேன். அதோட அன்னைக்கு என் அண்ணன் உன்னை அடிச்சதும் தப்பு. அதற்காக சாரி. இனி எங்க வாழ்க்கையில எந்த விதத்துலேயும் குறுக்கிடாத. இஸ் தட் க்ளியர்.” என்று அவள் நிறுத்த

                         “நீ டான்சர் ன்னு சொன்னாங்க. பட்டிமன்றம் கூட ட்ரை பண்ணலாம். அந்தளவுக்கு நல்லா பேசற..” என்று சிலாகித்தான் அவன்.

                         “ஏய்..” என்று ஸ்ரீகா பல்லைக் கடிக்க

                         “கூல் பேபி… நீ என்னோட கண்ல படாத வரைக்கும் உன்னோட வாழ்க்கைக்கான முடிவுகள் உன்னோடது தான். ஆனா, இனி உனக்கும் சேர்த்து யோசிக்க பீஷ்மன் இருக்கேன். அதை மறந்திட வேண்டாம். நீ கவலைப்படாத பேபி, என்னால உன் அப்பாவோட தொழிலுக்கு ஒரு பாதிப்பும் வராது.” என்று அவன் பெரிய மனதுடன் கூற

                        “என்ன மிரட்டலா..” என்று சற்று நக்கலாகவே கேட்டாள் ஸ்ரீகா.

                       “ஏன் பேபி.. பயமா இருக்கா..”

                        “நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட பீஷ்மன். நான் ரேகா பரமேஸ்வரன் பொண்ணு. எனக்கு பயப்பட தெரியாது.” என்றாள் நிமிர்வாக

                        “அப்புறம் என்ன பேபி. விளையாடிப் பார்ப்போமே. அதான் உன் அப்பா, நாலு உடன்பிறப்புகள் அத்தனைக்கும் மேல ரேகா பரமேஸ்வரன் எல்லாம் இருக்காங்களே.. அவங்களை வச்சு விளையாடுவோம்.” என்று குரூர சிரிப்புடன் அவன் கூற

                       “உன்னால எங்களை எதுவும் செய்ய முடியாது பீஷ்மா. அதோட எதுவுமே இல்லாத நிலையில கூட பரமேஸ்வரன் பொண்ணு பரமேஸ்வரன் பொண்ணாதான் இருப்பா. அதுல எந்த மாற்றமும் வராது.” என்று பட்டென கூறிவிட்டாள் ஸ்ரீகா.

                      “மாற்றம் ஒன்றே மாறாதது ஸ்ரீகா. கேள்விப்பட்டது இல்லையா…”

                     “எதை யார் பேசுறது ன்னு இல்லாம போச்சு. எந்த மாற்றம் வந்தாலும், என் வாழ்க்கையில உனக்கு இடம் கிடையாது. அதை மறந்திடாத..” என்று ஒரு முடிவுடன் கூறியவள் அழைப்பை துண்டிக்க பார்க்க, “வெய்ட்..” என்று ஒற்றை வார்த்தையில் அவளை நிறுத்தினான் பீஷ்மன்.

                      “உன் வாழ்க்கையில நான் இடம் கேட்கல ஸ்ரீகா பேபி. என் வாழ்க்கைக்குள்ள உன்னை தூக்கிட்டு வருவேன் ன்னு சொல்றேன். நீ விலகவே முடியாதபடி உன்னை என் கைகளுக்குள்ள கொண்டு வருவேன் டார்லீ..” என்று ஆணித்தரமாக கூறியவன் குரலில் அத்தனை உறுதி.

                       “ஆல் தி பெஸ்ட்..” என்று தைரியமாகவே பதில் கொடுத்து அழைப்பை துண்டித்தாள் ஸ்ரீகா.

                               அவனிடம் நிமிர்வாக பேசிவிட்டாலும், இது என்னடா புது தலைவலி என்று ஒரு உறுத்தல் தொடங்கிவிட்டது அவளுக்கு. அதுவும் அவன் கூறிய தந்தை, உடன்பிறப்பு, அம்மா என்ற வார்த்தைகள் எல்லாம் அவன் எதிர்பார்த்த உணர்வை அப்படியே கொண்டு வந்தது பெண்ணிடம்.

                        ஸ்ரீகாவின் மனம் எதையெதையோ யோசித்து குழம்ப, தன் குடும்பத்தினருக்கு ஒன்றென்றால் தன்னால் தாங்க முடியுமா?? என்ற திசையில் பயணித்தது மனது. எங்கிருந்துடா வந்து குதிச்ச நீ.. அய்யா ராசா.. என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவள் எப்போதும் போல தானாகவே தேறி கொண்டாள்.

                       “என்ன செய்து விட முடியும் அவனால். அவன் எந்த அளவுக்கு ஆளோ, அதைவிட மதிப்பு மிகுந்தவர் என் தந்தை. அவனால் முடியும் என்றால் என் அப்பாவால் முடியாதா??” என்று சரியாக யோசித்தவள் அதற்குமேல் அவன் மிரட்டலுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.

                        இதை யாரிடம் சொன்னாலும் வம்பு தான் என்று தோன்ற, தந்தையிடமோ, தன் குழுவிடமோ ஒருவரிடமும் ஒரு வார்த்தைக் கூட கூறவில்லை அவள். பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டு விட்டாள்.

                            இளங்கன்று பயமறியாது என்பார்களே அந்த வார்த்தை அப்படியே பொருந்திக் கொண்டது அவளுக்கு. பாரதி கண்ட புதுமை பெண்ணாகவே தன் அன்னையால் வளர்க்கப்பட்டவள் “என்னை மீறி என்ன செய்துவிடுவான்..” என்று சற்று திமிராகவே வளைய வந்தாள்.

                          மனம் அலைபாய்ந்தது கூட அந்த முதல் சில நிமிடங்கள் தான். அதன் பின் அந்த விஷயத்தையே மறந்து விட்டவளாக அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டாள் அவள்.

                           ஸ்ரீகா இயல்பாக இருந்தாலும், பரமேஸ்வரனுக்கு தெரியும். இது சாதாரண விஷயம் இல்லை என்று. அவருக்கு பீஷ்மனின் குணமும் ஓரளவு தெரியும். அனைத்தையும் மனதில் ஓட்டிப் பார்த்தவர் அன்று இரவே மகளின் திருமணத்தை பற்றி பேச்சை தொடங்கிவிட்டார்.

                          ரேகாவிடம் அவர் தன் விருப்பத்தை கூற, அவரும் நச்சரித்துக் கொண்டே இருந்தவர் தானே. உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டார். பரமேஸ்வரன் யோசனையாக கழுத்தை நீவிக் கொண்டே அமர்ந்திருக்க, “என்னப்பா.. என்ன விஷயம்..” என்றார் ரேகா.

                          “லேசா கழுத்து வலிக்குது ரேகா…” என்றவர் அதற்குமேல் மனைவியிடம் எதுவும் கூறாமல், அவர் மடியில் படுத்துக் கொண்டார். ரேகாவும் அவரைப் புரிந்தவராக, கையில் தைலத்தை எடுத்து மென்மையாக அவர் கழுத்தில் தேய்த்து விட்டவர், மெதுவாக நீவிவிட மனைவியின் கை கொடுத்த சுகத்தில் அப்படியே உறங்கிப் போனார் பரமேஸ்வரன்.

                          பீஷ்மன் ஸ்ரீகாவிடம் பேசி இரண்டு நாட்கள் முடிந்து போயிருக்க, இதுவரை எந்த வித்தியாசமும் இல்லை ஸ்ரீகாவின் வாழ்வில். அவள் நாட்கள் வழக்கம் போலவே நகர்ந்து கொண்டிருந்தது. வீட்டிலும் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த விஷயமும் இல்லை என்பதால் பீஷ்மனை அடியோடு ஒதுக்கி விட்டாள் அவள்.

                      ஆனால், அவளுக்கு பதிலாக துருவன் குழம்பத் தொடங்கி இருந்தான் இந்த இரண்டு நாட்களில். அவன் வெளியே செல்லும் நேரங்களில் அவனையறியாமல் யாரோ தொடர்வது போலவே ஒரு எண்ணம் இந்த இரண்டு நாட்களாக.

                       அவன் இருக்கும் துறையில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று தட்டிக் கழிக்க நினைத்தாலும், என்னவோ தவறாகப் பட்டது அவனுக்கு. ஆனால், அதை யோசிக்கும் அளவிற்கு நேரமில்லாமல் அவன் வேலைகள் வேறு அவனை சுற்றிலும் குவிந்து கிடக்க, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தான் அல்லாடிக் கொண்டிருந்தான் துருவன்.

                       அன்று முழுவதுமே அவனது வேலைகள் அவனை பிழிந்தெடுத்து இருக்க, வீட்டிற்கு செல்லும் எண்ணம் கூட இல்லாமல், இன்னமும் அவனது பதிவுக் கூடத்தில் தான் இருந்தான். தலைவேறு விண் விண் என்று வலிக்க தொடங்க, ஒரு காஃபியை கொண்டுவர சொல்லிவிட்டு தனது அறையில் சென்று அமர்ந்து கொண்டான் அவன்.

                       அடுத்த சில நிமிடங்களில், அங்கு வரவேற்பில் இருக்கும் பெண் அவனுக்கான காஃபியைக் கொண்டுவர, வாங்கி கொண்டவன் அவளை கேள்வியாக பார்த்தான். “அப்பா இன்னும் வரல சார்.. அவங்க வந்ததும் கிளம்பிடுவேன்..” என்று தானாகவே பதில் கொடுத்தாள் அவள்.

                      அமைதியாக அவன் தலையசைக்க, விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள் அவள். துருவன் அந்த காஃபியைக் குடித்து முடிக்க, உறக்கம் எங்கோ ஓடி இருந்தது. ஏதோ ஒரு புதுவித உணர்வு அவனை சற்றே துள்ளலாக உணர வைக்க, அவனின் சோர்வு போன இடம் தெரியவில்லை.

                      அடுத்த நிமிடம் அங்கிருந்து வெளியேறியவன் காரில் ஏறிக் கிளம்ப, வாயில் அருகே அந்த வரவேற்பு பெண் ராகவி அவள் தந்தையின் வண்டியில் ஏறிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டு கொள்ளாமல் இவன் கிளம்ப, அவன் காரை சற்றே ஏக்கமாக தழுவி மீண்டது அவள் கண்கள்.

                    துருவன் தன் வீட்டிற்கு செல்லும் பாதையில் வண்டியை செலுத்த, வழியில் ஸ்கூட்டியோடு சாலை ஓரம் நின்று அவனை வழி மறைத்தாள் ஒருத்தி. எப்போதும் கவனத்துடனே இருப்பவன் தான். ஆனால், இன்று உள்ளே சென்ற வஸ்து அதன் வேலையைக் காட்ட, கைகள் தானாக காரின் வேகத்தைக் குறைத்தது.

                   அந்தப் பெண் இவன் காரை நிறுத்தியதும் இவன் அருகில் ஓடி வந்தவள் “வண்டி கொஞ்சம் ப்ராப்ளம் சார்.. “என்று தொடங்கி “சார்.. சார் நீங்க துருவ் பரமேஸ்வரன் தானே.. தி கிரேட் மியூசிக் டைரக்டர்.. ” என்று ஆர்ப்பரிக்க,

                      வாயின் மீது விரல் வைத்து அவளை அமைதியாக்கியவன் அதே நிதானத்துடன் “கெட் இன்..” என்றுவிட, சட்டென ஏறி அவன் அருகில் அமர்ந்துவிட்டாள்.

       துருவன் அதற்குமேல் அவளைப் பற்றி சிந்திக்காமல் வண்டியை செலுத்த, நேரம் செல்ல, செல்ல கிட்டத்தட்ட ஒரு மயக்கநிலைக்கு சென்று கொண்டிருந்தான் அவன். ஸ்டியரிங்கை பிடித்திருந்த அவன் கைகள் தடுமாற, அருகில் இருந்த பெண் “சார் என்னாச்சு சார்.. என்ன பண்ணுது சார்..” என்று பதற தொடங்கினாள்.

                    ஒரு கட்டத்தில் துருவன் விழிகள் சொருக ஆரம்பிக்க, பழக்கமில்லாத விஷயம் மொத்தமாக அவனை சாய்க்க முற்பட்டது. அந்தப்பெண் சுதாரித்தவளாக அவனை பக்கத்து இருக்கைக்கு மாற்றி, தான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அந்த நேரம் அவளின் அலைபேசி அழைத்தது.

                    அடுத்த நிமிடம் அவள் அந்த அலைபேசியின் கட்டுப்பாட்டில் வந்துவிட, அலைபேசியில் இருந்தவன் கூறிய விலாசத்தில் துருவனின் காரை நிறுத்தி இருந்தாள் அவள். அந்த பங்களாவின் வாசலில் நின்றிருந்த திஷா, துருவ் இருந்த பக்கம் வந்து கார் கதவை திறக்க, வேரற்ற மரமாக அவள் கைகளில் விழுந்தான் துருவ்.

                       அவனை அப்படியே தாங்கி கொண்டவள் தனது அறையை நோக்கி நடக்க, அவளின் மேனேஜர் சில ரூபாய் நோட்டுகளை வெளியே நின்றிருந்த பெண்ணிடம் திணித்து, அவளை அங்கே இருந்து அனுப்பி வைத்தான்.

                      எத்தனை பேர் வந்தாலும், எதிர்த்து நின்று அடிப்பவன் இன்று மொத்தமாக பெண்களின் வலையில் சிக்கி இருந்தான். திஷா அவனை தனது கட்டிலில் படுக்க வைத்தவள் குளியலறைக்குள் நுழைந்து உடையை மாற்றிக் கொண்டு வெளியே வர, மெல்லிய சாட்டின் இரவு உடை அவளின் அங்க லாவண்யங்களை அப்படியே எடுத்து காட்டியது.

                       உடலை நெளித்து நடந்து வந்தவள் துருவனின் அருகே படுத்து தன் கைகளால் அவனை அணைத்து கொள்ள, அந்த நிலையிலும் லேசாக விலகி சென்றான் துருவன். அவனின் இந்த செயலில் சிரித்துக் கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தம் பதித்து அதை தன் அலைபேசியில் படமாக்கிக் கொண்டவள் மேலும் அவனுடன் நெருக்கமாக இழைய, அத்தனைக்கும் அவளது அலைபேசி சாட்சியாக இருந்தது. அந்த இரவு நேரத்தில் தன் அலைபேசியில் இருந்த புகைப்படங்களை வேறொரு எண்ணுக்கு அனுப்பி வைத்தவள் அவனை அணைத்து கொண்டே உறங்கிப் போனாள்.

                      அடுத்தநாள் அவனுக்கு முன்பாகவே எழுந்து கொண்டவள் தன் உடையை மாற்றிக் கொண்டு அவன் விழிப்பதற்காக காத்திருக்க, நன்றாக விடிந்த பிறகே மெல்ல தெளிந்து எழுந்தான் துருவன். தலைவலி மண்டையை பிளக்க, அவனுக்கு முன்னால் கையில் காஃபியை நீட்டிக் கொண்டு நின்றாள் திஷா.

                    அவளைக் கண்ட நிமிடமே, துருவனுக்கு நேற்று நடந்தவை அனைத்தும் நிழலாக கண்முன் ஓட, அவன் இருந்த வேகத்திற்கு அவள் கழுத்தை நெரித்து இருந்தான் அவன். திஷா சற்றும் பதறாமல் “நீ இப்படி ரியாக்ட் பண்ண வேண்டாம் துருவ். இது என் வீடு தான். அண்ட் நீ நீயாகவே தான் இங்கே வந்தாய். உன் தங்கச்சி என்னை அடிச்சதைக் கூட மறந்து, மயக்கத்தில் இருந்த உன்னை நைட் முழுக்க கேர் பண்ணி இருக்கேன். அதற்காக நன்றி சொல்லாம போனாலும் பரவாயில்ல… இப்படி கழுத்தை நெரிக்கணுமா..??” என்று அப்பாவியாக அவள் பேச, எதுவோ அவள் குரலில் நெருடியது அவனுக்கு.

                    அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்து விட்டாலும் சந்தேகமாக அவளை பார்த்து நின்றவன் “நான் எப்படி இங்கே வந்தேன்.” என்று நிதானமாக கேட்க

                     “ரோட்ல கிடந்த… அதோட போதை மயக்கம் வேற…அப்படியே விட்டுட்டு வர மனசில்லை. சோ தூக்கிட்டு வந்தேன்.” என்றாள் அலட்சியமாக

                      அவள் பேச்சு நம்பும் படியாக இல்லை துருவனுக்கு. என்னவோ தவறு தவறு என்று அவன் மனம் அடித்துக் கொள்ள, முதலில் இங்கேயிருந்து கிளம்புடா என்று அவனை விரட்டியது அவன் மனசாட்சி. அவனுக்கு யோசிக்க சற்று அவகாசம் தேவைப்பட, அவள் முகத்தைக் கூட ஏறிட்டு பார்க்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன்.

                       வாசலில் அவன் கார் நிற்க, திஷாவும் அவனுடன் தான் இறங்கி வந்திருந்தாள். தன் கார் அருகில் சென்றவன் ஒரு நிமிடம் நின்று, “இந்த விஷயத்துல நீ சொன்னதே நடந்து இருக்கனும்ன்னு வேண்டிக்கோ திஷா… என்னை வச்சு நீ வேற பிளான் ஏதும் போட்டு இருந்தா, என்னால கூட உன்னை காப்பாத்த முடியாது.” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் துருவன்.

                     அவன் கார் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதை வெளி வாயில் அருகே ஒரு கேமரா கிளிக்கி கொள்ள, அவன் வீட்டை அடைந்த நேரம் வாசலிலேயே பதட்டமாக நின்றிருந்தார் பரமேஸ்வரன். அவன் கார் சத்தம் கேட்டு ரேகாவும் வெளியே வர, மகனைக் கண்டதும் “எங்கேடா போன நைட் முழுக்க..” என்று வேகமாகி வந்து அவன் கைகளை பற்றிக் கொண்டார் அன்னை.

                              

Advertisement