Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 10

                        அந்த மொட்டை மாடி முழுவதுமே காரிருள் சூழ்ந்திருக்க, அதன் ஒருபக்கத்தில் அமைந்திருந்த நீச்சல் குளம் மட்டும் மெல்லிய கடல் நீல நிற விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது. அந்த இருட்டில் தனிமையை மட்டுமே துணையாக கொண்டு நீந்திக் கொண்டிருந்தான் பீஷ்மன். அவனின் பாதுகாவலர்கள் சற்று தள்ளி அந்த மொட்டை மாடி ஆரம்பிக்கும் இடத்திலேயே நின்று விட்டிருக்க, நேரம் இரவு மூன்றை நெருங்கி கொண்டிருந்தது.

                         அந்த விருது நிகழ்ச்சியில் இருந்து நேராக இங்கு வந்தவன் தான். முதல் சில நிமிடங்கள்  விலையுயர்ந்த சோமபானங்கள் அருந்தி தன்னை நிலைப்படுத்த பார்த்தான். அது முடியாமல் போகவும், மொத்தமாக இந்த நீரில் மூழ்கி எழுந்து கொண்டிருக்கிறான். ஆனால், அவன் மனதில் இருந்த வன்மம் மட்டும் இம்மியளவும் குறையாமல் நெருப்புக்கு இணையாக கனன்று கொண்டிருந்தது.

                         பிறக்கும்போதே தான் எனும் அகங்காரம் கொண்டே பிறந்திருப்பானோ என்று ஐயத்தை மற்றவர்களுக்கு கொடுப்பவன், இன்று தன்னை ஒருவன் கைநீட்டி விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் எரிந்து கொண்டிருந்தான். அவன் நினைத்தால் இந்த நிமிடமே அடித்த அவன் கையை மொத்தமாக வெட்டி எடுத்துவிட கூட முடியும். அதற்கும் அவனிடம் ஆட்கள் இருந்தனர்.

                      ஆனால், ஸ்ரீகா… அவளை அப்படி விட முடியாதே. பார்த்த நாள் முதலாக உறக்கம் திருடிக் கொண்டவள் ஆகிற்றே. அவளுக்காக துருவனை விட்டு வந்திருந்தான் பீஷ்மன். ஆனால், எத்தனை சமாதானம் கூறியும் அவன் மனம் ஏற்கவில்லை. அதிலும் அவன் மனசாட்சி ஒரு பெண்ணுக்காகவா என்று ஏளனமாக கேலி செய்ய, அதை மறக்கவே மிதந்து கொண்டிருக்கிறான் பீஷ்மன்.

                       இப்போது வரை அவனும் தெளியவில்லை அவன் மனமும் தெளியவில்லை. அன்று இரவு முழுவதுமே அங்கேயே கழிந்து விட விடியும் நேரம் அவனது உதவியாளன் அவனை வற்புறுத்தி அழைத்து வந்து அவனது அறையில் விட்டிருந்தான். அங்கே அவனுக்கென்ன ஒரு தனியறை இருக்க, அதில் அவனை உறங்கவைத்து வெளியே அவனுக்கு காவலாக நின்றுக் கொண்டனர் அவன் பாதுகாவலர்கள்.

                       ஒரு வழியாக, காலை பத்து மணிக்கு மேல் அவனது உறக்கம் கலைய, நிதானமாக எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தான். அவனது ஆட்கள் தயாராக இருக்க, அன்று கவனிக்க வேண்டிய விஷயங்களின் மீது அவன் கவனம் திரும்பியது. ஆனால், இன்னமும் அவன் மனம் துருவனை மறந்துவிடவில்லை.

                       எங்கோ ஓர் மூலையில் துருவனும், அவன் கைகளுக்குள் நின்ற ஸ்ரீகாவும் இருவேறு திசையில் அவனை இம்சித்துக் கொண்டிருந்தனர். இதற்குமேல் தாங்க முடியாது என்று முடிவெடுத்தவன் நேராக வண்டியை தன் வீட்டிற்கு செலுத்தினான். அவன் அன்னை பார்கவி மகனின் காரைக் கண்டு வாசலுக்கு வர, புன்னகையுடன் தன் அன்னையை அணைத்து கொண்டான் பீஷ்மன்.

                                     நீண்ட நாட்களுக்கு பிறகான மகனின் அணைப்பில் பார்கவியும் சில நிமிடங்கள் நெகிழ்ந்து நின்றுவிட்டார். மகன் அன்னையை அணைத்தபடியே வீட்டிற்குள் அழைத்து வந்தவன் அவரை ஹாலில் அமர்த்தி அவர் மடியில் தலையை சாய்த்து படுத்துக் கொள்ள, அது போதுமே பார்கவிக்கு.

                மகனின் தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்தார் பார்கவி. கூடவே “இப்போதான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா பீமா..” என்று சிறு தாங்கலுடன் அவர் கேட்க

                 “மாம் உங்களுக்கு தெரியாதா.. எனக்கு வேலை அதிகம் மாம். இந்த தாத்தா அப்பாவோட வேலையையும் சேர்த்து என்கிட்ட கொடுத்துட்டு, அவர் ஜாலியா இருக்காரு. நான் உங்க புருஷன், அப்புறம் உங்க மாமனார் ரெண்டு பேர் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கே..” என்று கொஞ்சலான குரலில் அன்னைக்கு விளக்கி கொண்டிருந்தான் பீஷ்மன்.

                “அவங்கவங்க திறமைக்கு ஏற்றபடி தான் பொறுப்புகளும் பீமா. உன்னோட தகுதிக்கும், திறமைக்கும் இன்னும் நாலு பேரோட வேலையைக் கூட சேர்த்து உன்னால செய்ய முடியும். உன் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் வயசாகுது இல்லையா… அப்போ நீ பொறுப்பேற்க வேண்டியது அவசியம் தான். ஆனால்,. அதுக்காக வீட்டுக்கே வராமல் இருக்கணும் ன்னு எதுவும் இல்லையே..” என்று அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த

                  “இப்போ என்ன மாம்.. நான் நேரத்தோட வீட்டுக்கு வரணும்.. அவ்ளோதான…” என்று அவன் அன்னையின் முகம் பார்க்க

                    “அதைவிட எனக்கு என்னடா வேணும்..” என்று அவன் தாடையை பிடித்துக் கொஞ்சினார் அன்னை.

                    “சீக்கிரமே ஒரு பொண்ணை பார்த்து கட்டி வச்சிடுங்க.. அப்புறம் பொண்டாட்டியை பார்க்க நேரத்தோட நானும் வீட்டுக்கு வந்துட போறேன்…” என்று சிரிப்புடன் அவன் கண்களை சிமிட்ட

                     “பொண்ணு நான் பார்க்கணுமா… உன் வேகத்தை பார்த்தா, அப்படி தெரியலையே.. நீயே பார்த்து முடிவு பண்ணிட்டு தான் வந்து இருக்கியோ??” என்று ஒரு மாதிரிக் குரலில் அவர் வினவ, அன்னையின் குரலின் பேதம் உடனே பிடிபட்டது மகனுக்கு.

                      அவர் மாடியிலிருந்து எழுந்து அவர் அருகில் அமர்ந்து அவர் தோளை சுற்றிக் கைகளை போட்டுக் கொண்டவன் “மாம்.. நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும்… உங்களுக்கு பிடிக்காத பொண்ணை நான் பார்ப்பேனா..” என்று அவன் செல்லம் கொஞ்ச, அன்னைக்கு உள்ளுக்குள் பதறியது.

                        எங்கே அந்த சினிமாக்காரியை மகன் கைகாட்டி விடுவானோ என்று. அவரின் ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருக்க, அதை உணராமல் அவரை வளைக்க முயன்று கொண்டிருந்தான் மகன்.

                  இப்படியே போனால் மகன் தன்னை கவிழ்த்து விடுவான் என்று புரிந்தவராக, தன் கன்னத்தில் இருந்த அவன் கையை எடுத்து விட்டவர் “நீ முதல்ல என்ன  விஷயம் சொல்லு.. முழுசா சொல்லு எனக்கு.” என்று கண்டிப்புடன் கேட்டார்.

                    அன்னையை விட்டு நகர்ந்து அமர்ந்தவன், பெரிதும் தயங்கியவன் போல் சில நொடிகள் அவரை அலைக்கழித்து பின், “ஸ்ரீகா… பரமேஸ்வரன் அங்கிள் பொண்ணு… எனக்கு பிடிச்சிருக்கு உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க பேசி முடிங்க..” என்றான் சட்டென முறுக்கி கொண்ட குரலில்.

                    அவன் பேச்சில் ஆனந்தமாக அதிர்ந்து போனார் பார்கவி. எங்கே சாஷாவை கைநீட்டி விடுவானோ என்று பயந்து போயிருந்தாரே அவர். மகன் வேறு பெயரை சொல்லவும், சட்டென ஒரு நிம்மதி சூழ்ந்தது அவரை. 

                   அதுவும் பரமேஸ்வரனின் மகள் என்றதில் இன்னமும் கூடுதல் மகிழ்ச்சி. கணவரின் நண்பர் என்ற முறையில், அவர் குடும்பமும் நல்ல பழக்கம். அந்த வகையில் அவர் மனம் சற்றே ஆறுதல் அடைய, ஸ்ரீகாவையும் தெரியும் அவருக்கு.

                   நல்ல பெண் என்று நினைத்தவர் இப்போது மகனின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தார். பீஷ்மன் இன்னும் கோபத்துடன் அமர்ந்திருக்க, “உண்மையைத் தான் சொல்றியா நீ… உனக்கெப்படி அந்த பெண்ணை தெரியும் பீமா..” என்று மகனை மீண்டும் அவர் கேள்வி கேட்க

                   “மாம்.. எனக்கு பிடிச்சிருக்கு, உங்ககிட்ட சொன்னேன். நீங்க இத்தனை கேள்வி கேட்பிங்களா.. நீங்க என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது. பேசி முடிக்கணும்… எனக்கு ஸ்ரீகா வேணும்.” என்றான் உத்தரவாக

                    அவன் பேச்சில் கோபம் வந்தாலும், அவனிடம் காட்டாமல் தன்னை அடக்கி கொண்டார் பார்கவி. மகனே இப்போதுதான் கொஞ்சமாக வழிக்கு வருகிறான். அவனை ஏதாவது சொல்லப்போய் மீண்டும் அவன் பழைய குழியில் விழுந்து விடக் கூடாதே என்பது அவர் எண்ணம்.

                      அதை மனதில் கொண்டு “நான் அப்பாகிட்ட பேசறேன் பீமா.. நீ நிம்மதியா இரு. உன் கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ..” என்று சிரிப்புடன் அவன் தலையில் தட்டினார் அன்னை.

                     “தேங்க் யூ மாம்..” என்று அவரை கட்டியணைத்து முத்தமிட்டவன் மேலும் சிறிது நேரம் அவருடன் செலவிட்டு அதன்பிறகே வெளியில் கிளம்பினான்.

                     பார்கவிக்கு மகனின் ஆசை மட்டுமே கண்முன் இருக்க, அன்று மாலை கணவர் வந்த நிமிடமே விஷயத்தி அவரிடம் தெரிவித்து விட்டார் .

                      சங்கரநாராயணன் இயல்பிலேயே சற்று நிதானமாக யோசிக்கக்கூடியவர் என்பதால், மனைவியைப் போல் மகிழ்ந்து போகவில்லை அவர். அவருக்கு மகனின் லீலைகள் முழுதாகத் தெரியும். சாஷா என்று இல்லாமல் அவனைப் பற்றிய அத்தனை தகவல்களும் ஆதி முதல் அந்தமாக மொத்தமும் தெரியும் அவருக்கு.

                 சாஷாவைக் கூட மகன் தன் விருப்பத்திற்கு தான் வளைத்திருக்கிறான் என்பதும் அவருக்கு தெரியும். ஆனால், இதையெல்லாம் பார்கவியிடம் அவரால் புரியவைக்க முடியாது. மகன் பிறந்தது முதலே, அவன் செய்யும் அனைத்தும் சரி என்ற மனநிலை தான் பார்கவிக்கு.

                  அவரிடம் இப்போது பேசினாலும் கூட, சாஷா இப்படி நடப்பது தவறென்று சொல்வாரே தவிர,பீஷ்மனைப் பற்றி ஒரு வார்த்தைக்கு கூட குறையாக பேசமாட்டார் அந்த பாசமிகு அன்னை. சங்கரநாராயணனுக்கு இதுவும் புரிந்தே இருக்க, அமைதியாக மனைவிக்கு எடுத்து சொல்லவே முற்பட்டார் அவர்.

                    “நிச்சயமா பரமேஸ்வரன் வீட்ல இதுக்கு சம்மதிக்கமாட்டாங்க பார்கவி. நாம இதைப்பத்தி பேசாம இருப்பது மரியாதை.” என்று பொறுமையாக அவர் கூற, அதற்கே முகம் மாறிவிட்டது பார்கவிக்கு.

                    “ஏன்.. ஏன் சம்மதிக்கமாட்டாங்க… நாம எந்த விதத்துல அவங்களுக்கு குறைஞ்சு போய்ட்டோம். சொத்து, அந்தஸ்து, மரியாதை எல்லா விதத்துலேயும் நாம அவங்களை விட மேலதான் இருக்கோம். அப்புறம் எப்படி சம்மதிக்காம போவாங்க..” என்று படபடக்க

                     “பரமேஸ்வரன் அவன் மகளை நல்லா வளர்த்து இருக்கான்.. நாம அப்படி இல்லையே..” என்று ஒரே வார்த்தையில் தன் மனதில் இருப்பதை உரைத்துவிட்டார்

                     பார்கவியின் கண்கள் கலங்கி போக, அதற்குமேல் தாங்க முடியாமல் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டார் நாராயணன். “கடைசியில நீங்களே நான் என் மகனை ஒழுங்கா வளர்க்கல ன்னு சொல்லிட்டீங்களே..” என்று அழ, மறுப்பாக தலையசைத்தார் நாராயணன்.

                         “உன்னை மட்டுமில்ல என்னையும் சேர்த்து தான் சொன்னேன். நாம பீஷ்மனை இன்னும் நல்லா வளர்த்து இருக்கலாம் பாரு. அவனுக்கான நேரத்தை அவனுக்கு நாம கொடுத்திருக்கணும்.  அவனை அவன் போக்கில் விட்டு தப்பு பண்ணிட்டோம்..” என்று தன்னையும் சேர்த்தே அவர் குறை கூறிக் கொள்ள, கணவரின் தோளில் ஆதரவாக சாய்ந்து கொண்டார் பார்கவி.

                     சில நிமிடங்கள் மௌனத்தின் வசமாக, பார்கவி “எனக்காக ஒருமுறை உங்க பிரெண்ட்கிட்ட பேசிப் பாருங்களேன். ஒருவேளை அவர் சம்மதிச்சுட்டா, நாம கேட்டு பார்ப்போமே… கேட்காம நமக்குள்ளேயே ஏன் வாதம் செய்யணும்..” என்று சிறு பிள்ளையாக கெஞ்சினார் பார்கவி.

                      நாராயணன் எத்தனையோ எடுத்துக் கூறியும், எதையும் காதில் வாங்காமல் மகனுக்கும் மேல் பிடிவாதம் பிடித்தார் பார்கவி. என்னவோ ஸ்ரீகா கிடைத்துவிட்டால், தன்மகன் நல்வழிப் பட்டுவிடுவான் என்று உறுதியாக நம்பியது அவர் மனம்.

                     அந்த நம்பிக்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் கணவரை படுத்திக் கொண்டிருந்தார். சங்கரநாராயணனும் அவர் தொல்லை தாங்காமல் ஒருவழியாக பரமேஸ்வரனுக்கு அழைத்துவிட, அவர் அழைப்பை ஏற்கவும் என்ன பேசுவது என்றே தெரியாமல் ஒரு தயக்கம் அவரை சூழ்ந்து கொண்டது.

                    பரமேஸ்வரன் என்னவோ வெகு இயல்பாக, “சொல்லு நாராயணா…” என்று எப்போதும் போலத்தான் பேசினார்.

                      நாராயணனுக்குத் தான் வார்த்தைகள் திக்கியது. தன்னை சமாளித்துக் கொண்டு “உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே பரமேஸ்வரா.. மீட் பண்ணுவோமா..” என்று கேட்டுவிட

                       “அதுக்கென்னப்பா… தாராளமா பார்க்கலாமே. எங்கே வரட்டும்.” என்று அப்போதும் தன்னியல்பு மாறாமல் தான் உரைத்தார் பரமேஸ்வரன்.

                       “ஈவினிங் நானே உன் ஆபிசுக்கு வர்றேன்ப்பா..” என்றதோடு முடித்துக் கொண்டார் சங்கரநாராயணன்.

                       ஆனால், இங்கே அலைபேசியை இன்னமும் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த பரமேஸ்வரனின் முகம் தீவிர யோசனையைக் காட்டியது. சங்கரநாராயணன் தயங்கிய குரல் பல செய்திகளை தெரிவிக்க முற்பட்டது அவருக்கு. விஷயத்தின் ஆழம் இன்னும் புரியாமல் இருந்தாலும், விஷயம் பெரியது என்பதை உணர முடிந்தது அவரால்.

                      அந்த அறையின் ஒரு ஓரம் அமர்ந்திருந்த தன் பிஏ வை அழைத்தவர், அவரிடம் ஒரு சில வேலைகளை ஒப்படைத்து விட்டு தன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் அவர் முன் வந்து நின்றார் அவர் உதவியாளர்.

                       “என்ன நாதா..” என்று பரமேஸ்வரன் கேட்க, தான் விசாரித்தது மொத்தத்தையும் அவரிடம் ஒன்றுவிடாமல் தன் ஐயாவிடம் கூறிவிட்டார் அந்த விசுவாசி.

                         பரமேஸ்வரனின் முகம் ஆஸ்ந்த சிந்தனையைக் காட்ட, அவரை அதற்குமேல் தொந்தரவு செய்யாமல் ஒரு காஃபியை வாங்கி வந்து அவர் முன்பு வைத்ததோடு ஒதுங்கி கொண்டார். பரமேஸ்வரன் சில நிமிடங்கள் தனக்குள்ளாக யோசித்தவர் முடிவில் துருவனுக்கு அழைத்தார்.

                        அடுத்த அரைமணி நேரத்தில் அவன் அவர் முன்னால் அமர்ந்திருக்க, “என்ன நடந்தது நேத்து..” என்றார் எடுத்த எடுப்பில்.

                                        தந்தையின் கூரிய பார்வையை சந்திக்க முடியாமல் பார்வையை திருப்பிக் கொண்டவன் நேற்று நடந்த அனைத்தையும் மொத்தமாக அவரிடம் கூறி முடிக்க, “நீ அவசரப்பட்டுட்ட துருவா.. கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்..” என்றார்.

                 துருவன் அப்போதும் கோபம் கொண்டு “அவன் ஸ்ரீகா கிட்ட கண்டபடி உளறுவான். அதை கேட்டுட்டு என்னை அமைதியா இருக்க சொல்விங்களாப்பா..”என்று எகிற, மகனின் கோபத்தில் சிரித்தவாறு, “உட்காருடா முதல்ல..” என்று அதட்டினார் பரமேஸ்வரன்.

                “நீ அவனை அடிச்சது தப்பு இல்ல. ஆனா, நீ கொஞ்சம் அமைதியா இருந்து இருந்தா, ஸ்ரீகாவே அவனுக்கு பதில் கொடுத்திருப்பா. நீ இந்த விஷயத்துல இன்வால்வ் ஆகி இருக்கவே வேண்டியதில்லை. இது வேண்டாத பகை துருவா.”

                 “நீ இப்போதான் வளர்ந்து வர்ற.. உனக்கு இதெல்லாம் வேண்டாம். பீஷ்மன் விஷயத்துல நீ இனி தலையிடக் கூடாது. இதுக்குமேல இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன். நீ உன் மியூசிக் மட்டும் பாரு.” என்று நல்ல வழிகாட்டியாய் அறிவுறுத்தினார் அவர்.

                   “அவன் ஸ்ரீகா விஷயத்துல தலையிட்டா, நான் நிச்சயம் அவனுக்கு எதிரா தான் இருப்பேன். எனக்கு அவளைவிட வேற எதுவும் முக்கியம் இல்லப்பா… நீங்க இதை என்கிட்டே விடுங்க.. அவன் நம்ம பக்கம் திரும்பி பார்க்கக்கூட யோசிக்கணும். நான் முடிக்கிறேன் இதை..” என்றவன் தன் கையில் இருந்த வெள்ளிக்காப்பை முறுக்கிவிட, அவனை அமைதியாக பார்த்திருந்தார் தந்தை.

                     தந்தையின் அமைதியில் சற்றே நிதானித்தவன் அவர் முன்பு பவ்யமாக அமர, “ரைட்… என் பிள்ளைகளை நான் ரவுடியா வளர்க்கல துருவா. இனி நீ பீஷ்மன் விஷயத்துல தலையிடப் போறதில்ல. ஸ்ரீகா சம்பந்தப்பட்ட விஷயம் எதுவா இருந்தாலும், அடுத்த நிமிஷம் என் காதுக்கு வந்தாகணும். நீ உன் தொழிலைப் பாரு. ” என்றவரிடம் துருவன் மறுத்து எதையோ பேச வர, “இது என்னோட ஆர்டர் துருவ். நீ கிளம்பு..” என்றுவிட்டார் ஒரேடியாக.

                               அதற்குமேல் தந்தையை எதிர்த்து பேச முடியாமல் அவன் மௌனமாக “நான் உங்க எல்லாருக்கும் அப்பா துருவ். நீங்க அத்தனைப் பெரும் எனக்கு முக்கியம். ஒருத்தருக்காக இன்னொருத்தரை விட்டுட முடியாது.” என்று மனதிற்குள் கூறிக் கொண்டார் பரமேஸ்வரன்.

                  ஏனோ, பீஷ்மன் அமைதியாக இருக்கமாட்டான் என்று நிச்சயமாக தோன்றியது அவருக்கு. துருவ் அங்கிருந்து கோபத்துடன் கிளம்பி செல்ல, சில மணிநேர இடைவெளிக்குப் பின்னர் சங்கரநாராயணன் வந்து சேர்ந்தார். அவர் தயங்கியவாறே விஷயத்தை கூறி முடிக்க, எதிர்பார்த்தே இருந்ததால் பெரிதாக அதிர்ந்து எல்லாம் போகவில்லை பரமேஸ்வரன்.

                     தன்னை இயல்பாகவே காட்டிக் கொண்டார். மேலும் சங்கரநாராயணன் மனம் புண்படாத வகையில் “எங்க ஸ்ரீகா கல்யாணம், முழுக்க முழுக்க அவளோட விருப்பம் தான் நாராயணா. இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல. ஆனா, அவளும் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு தான் சொல்லிட்டு இருக்கா… அவ டான்ஸ்ல இன்னும் நிறைய சாதிக்க நினைக்கிறா… நாம ஏன் அவ விருப்பத்துக்கு தடையா இருக்கணும்.” என்று ஏதோ ஒன்றை அவர் கூற

                      “ஸ்ரீகா சின்னப்பொண்ணு தானே பரமேஸ்வரா.. நாமதானே எடுத்து சொல்லணும். கல்யாணத்துக்கு பிறகு கூட, அவ நாட்டியத்தை பார்க்கலாமே. பீஷ்மன் அதுக்கெல்லாம் தடையா இருக்கமாட்டான்.” என்று அவர் மேலும் பேச

                      “இல்ல நாராயணா. இது சரிவராது. என் மகளோட மனசு என்னன்னு எனக்கு தெரியும் இல்லையா. நான் அவளுக்கு அநியாயம் செய்ய முடியாது. அவளோட குணம் வேற. நான் பீஷ்மனை எந்த விதத்துலயும் குறைவா சொல்லல.. ஆனா, என் மக குணத்துக்கு பீஷ்மனோட ஒத்து போகமாட்டா.. இந்த பேச்சு நமக்குள்ள எப்பவும் வேண்டாம் நாராயணா..” என்று ஒரேடியாக மறுத்துவிட்டார் பரமேஸ்வரன்.

                     சங்கரநாராயணனுக்கும் அதற்கு மேல் தழைத்து போக விருப்பம் இல்லாமல் போகவே, அமைதியாக அங்கிருந்து வெளியேறினார். விஷயம் பார்கவி வழியாக பீஷ்மனை அடைய, பெரிதாக எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் சிரித்தவன் “மக விருப்பத்துக்கு மாறா எதுவும் செய்யமாட்டாரா..” என்று நக்கலாக சிரித்துக் கொண்டான்.

                               அடுத்த நாள் ஸ்ரீகா படப்பிடிப்புத் தளத்தில் வேலையாக இருக்கும் நேரம், அழகான வெள்ளை நிற ரோஜாக்களால் அலங்கரிப்பட்ட போக்கே ஒன்று அவள் இருக்குமிடம் தேடி வந்தது. பொக்கேயை அவளிடம் திணித்தவன் கூடவே ஒரு உறையிட்ட கடிதத்தையும் கொடுத்துவிட்டு போக, லேசான குழப்பத்துடன் தான் அதை பிரித்தாள் ஸ்ரீகா.

                       உள்ளே அழகான இதய வடிவ வாழ்த்தட்டையின் ஒரு மூலையில் அவள் படம் ஒன்றை ஒட்டி இருக்க, அதன் கீழே

                  “இதயமற்றவளின் இதயம் தேடி….

                    வெண்ணிலவு கைக்கு எட்டாததால்,

                     வெள்ளைநிற ரோஜாக்களை தூது விட்டிருக்கும்,

                     உனக்காக துடிக்கும் உன் இதயம்…

                                 என்ற வார்த்தைகள் அழகான ஓவியம் போல் தீட்டப்பட்டிருந்தது. பார்த்ததுமே மனத்தைக் கவரும் வகையில் இருந்தாலும், யாராக இருக்கும் என்ற குழப்பமும், அவங்க இருக்குமோ என்ற பயமும் சரி விகிதத்தில் ஆட்டி வைத்து பெண்ணவளை.

                     கண்ணுக்கு முன்னால் மின்னி மறைந்த முகம் உடலை லேசாக நடுங்க வைக்க, கையில் இருந்த பூச்செண்டு தரையில் விழுந்து சிதறியது.

                     

                       

                     

                      

                    

   

                     

Advertisement