Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 01

                         சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருந்த படப்பிடிப்பு தளம் அது. ஒரு திரைப்படத்தின் பாடல்காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, நடனக்குழுவினர் தயாராக நின்றனர்.  படத்தின் இயக்குனர் ஒருபுறம் அமர்ந்திருக்க, கேமராவை சரியான இடத்தில் பொருத்தி, ஒளிப்பதிவாளரும் காத்திருந்தார் அங்கே.

                        இன்னும் படத்தின் கதாநாயகி கீழே இறங்கவே இல்லை. கம்பெனியில் கொடுத்திருந்த கேரவனில் அமர்ந்திருந்தவள் இரண்டு முறை ஆள் அனுப்பியும் இன்னும் வெளியே தலைகாட்டவில்லை.அந்த எரிச்சலில் அந்த செட்டில் இருந்தவர்கள் முனகி கொண்டு அமர்ந்திருக்க, இன்னும் பத்து நிமிடங்கள் அவர்களை காக்க வைத்த பிறகே கேரவனில் இருந்து இறங்கினாள் அந்த அழகுப்புயல்.

                        ஆம்.. அப்படிதான் இருந்தாள் அவள். வயது முப்பதை தாண்டி இருந்தாலும், இன்றைய தமிழ் சினிமாவின்  இளம் கனவுக்கன்னி அவள். அடுத்தடுத்து அவள் நடித்த நான்கு படங்கள் பெரிய ஹிட் அடித்திருக்க, இது அவளது ஐந்தாவது படம்.  படத்தின் நாயகன் ஏற்கனவே உச்சம் தொட்டுவிட்ட ஒரு பெரிய ஹீரோ. தயாரிப்பு, இயக்கம் அனைத்துமே சிறந்தவர்கள் என்று சொல்லும்படிக்கு தான்.

                           கதைப்படி படத்தின் நாயகி ஒரு நடன வகுப்பின் ஆசிரியையாக இருக்க, அவளை நம்பி அவளுக்கு ஒரு தனிப்பாடலும், ஒரு கனவுப்பாடலும் வைத்துவிட்டிருந்தார் இயக்குனர். அதுவும் அவள் நடனத்தின் அத்தனை பரிமாணங்களும் தெரியும் என்று சொன்னதை நம்பி.

                       இதோ ஒட்டுமொத்த குழுவும் இரண்டு நாட்களாக பயிற்சி எடுத்திருக்க, இவள் நேராக முழு ஒப்பனையுடன் தான் வந்து நின்றதே. அதற்குமேல் அங்கு நின்ற நடன இயக்குனரின் உதவியாளரிடம் “என்ன ஸ்டேப்..”என்று கேட்டுக் கொண்டு, அவன் சொல்வதை ஒருமுறை ஆடிக் காட்டினாள். அதில் ஓரளவு திருப்தியடைந்து நேராக இயக்குனர் ஷாட்டுக்கு சென்றுவிட, ஏனோ நடன இயக்குனருக்கு அவள்மீது நம்பிக்கையே இல்லை.                   

                              ஆனாலும், இயக்குனர் சொல்லிவிட்டபிறகு மறுத்து பேசாமல், ஷாட்டுக்கு சென்றுவிட, 1 2 3 4… 1 2 3 4… என்று செவியில் விழுந்த குரலுக்கு ஏற்றவாறு ஒரே சீராக ஆடிக் கொண்டிருந்தாள் அவள். அவள் கைகளும், உடலும் அவள் சொல்லுக்கு பணிந்து அவள் சொன்னபடி வளைய, அவளின் கண்கள் அவள் உத்தரவை சட்டை செய்யவே இல்லை. தமிழே தகராறு எனும்போது அவள் எங்கே தமிழ்பாடலுக்கு அபிநயம் பிடிப்பது.

                      அவள் முகத்தில் தான் எதிர்பார்த்த பாவம் வராமல் போகவும், இயக்குனர் திரும்பி நடன இயக்குனரை பாவமாக பார்க்க, அவரின் பார்வையில் சிரித்துக் கொண்டே  “கட்..”என்றுவிட்டாள் அவள். மொத்த அரங்கும் பார்வையை அவளிடம் திருப்ப, கொஞ்சம் கூட யாரையும் சட்டை செய்யாமல் ‘அறிவு..” என்று தன் உதவியாளனை சத்தமாக அழைத்தாள் அவள்.

                      அவன் அடுத்த நிமிடம் அவள் அருகில் வர, “என்னடா பண்ற நீ.. கண்ல ஜீவனே இல்ல… இடுப்பையும், உடம்பையும் வளைத்து, கையை காலை அசைத்துவிட்டால் போதுமா..” என்று அவனை வாட்ட

                     “அவங்க என்ன வச்சுட்டா வஞ்சனை பண்றாங்க.. வந்தா தருவாங்க மேடம்..” என்றான் அவன் மரியாதையாக

                     அவள் திரும்பி அவனை முறைக்க, “மேடம்.. அவங்ககிட்ட நீங்க முழுசா எல்லாம் எதிர்பார்க்காதிங்க… அவங்களுக்கு என்ன வருதோ அதுதான். தமிழே புரியல.. பின்ன எப்படி எக்ஸ்பிரஷன் வரும்..”என்றான் அவன்.

                       “அவங்களுக்கு எக்ஸ்பிரஷன் வரணும்.. அதற்குத்தான் நீயும் நானும்…போய் வேலையை பாருடா.. வெட்டிக்கதை பேசாத…” என்று துரத்தினாள் அவனை.

                      அறிவு புலம்பிக் கொண்டே அந்த நடிகையிடம் சென்று புரிய வைக்க முயல, அவன் நிலை பரிதாபம் தான். அவனுக்கு ஹிந்தி தெரியாது,அந்த நடிகைக்கு தமிழ் தெரியாது. இவன் ஆடுவதை கவனித்து அவள் இவனைப்போலவே ஆடிக் காட்டினாளே தவிர்த்து, முகத்தில் உணர்ச்சிகள் மாறவே இல்லை.

                       இயக்குனர் பொறுத்து பார்த்தவர் “ஸ்ரீகா.. ப்ளீஸ் டூ சம்திங்… ஐ நீட் டு பினிஷ் த சாங் பை டுடே..” என்றார் பாவமாக

                      மெல்ல தலையசைத்து எழுந்தாள் அவள். ஸ்ரீகா.. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடன இயக்குனர். அதுவும் இந்த இருபது ஐந்து வயதில் அவள் அடைந்திருந்த உயரங்கள் அவளின் போராட்டத்தை சொல்லும். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்க, திரைத்துறையில் நுழைந்த இந்த பத்து ஆண்டுகளில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்தாள் அவள்.

                       அவளின் அன்னை ஏற்கனவே திரைத்துறையில் நடன இயக்குனராக இருக்க, நான்கு வயதிலிருந்து அவரிடம் நடனம் கற்றவள், அவரிடமே உதவியாளராகவும் பணியாற்றி தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தாள்.

                        அவரிடம் உதவியாளராக இருந்தாலும், அவரின் உதவி இல்லாமல் தான் நுழைந்திருந்தாள் இந்த கனவு லோகத்திற்குள். இங்கு அவளுக்கு கிடைக்கும் மரியாதையும், கௌரவர்களும் முழுக்க முழுக்க அவளின் திறமைக்கு மட்டுமே.

                         ஆனால், அதற்குரிய கர்வமோ, அலட்டலோ சிறிதும் இன்றி, செட்டில் இருக்கும் கடைசிகட்ட பணியாளர்கள் வரை அன்பு செலுத்துவதால் தானோ என்னவோ அத்தனை பேருக்கும் பிடிக்கும் அவளை. எப்போதும் ஒரு தொள தொள பேண்ட், காலர் வைத்த டாப் என்று அதுமட்டுமே அவளின் ஆஸ்தான உடை.

                       வண்ணங்கள் மட்டுமே மாறும் எப்போதும். இடுப்புவரை நீண்ட கூந்தலாக இருந்தாலும், ஒரு ஹேர்பின் கூட இருக்காது அவள் தலையில். ஒரு பேண்டில் மொத்தக் கூந்தலையும் இறுக்கி கட்டிக் கொண்டு தான் காணப்படுவாள் எப்போதும்.

                      கையில் அணிந்திருக்கும் அந்த விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை தவிர, வேறு எந்த ஆபரணங்களும் இருக்காது அவள் உடலில். இப்போதும் அவள் அப்படியே காணப்பட, அந்த நடிகையை நெருங்கியவள் அவளுக்கு அருகில் நின்றிருந்த அறிவின் முதுகில் ஒன்று வைக்க, ஓடியே போனான் அவன்.

                   அந்த நடிகையிடம் ஐந்து நிமிடங்கள் இயல்பாக பேச்சுக் கொடுத்தவள் அவளுக்கு ஹிந்தி தெரியுமென்பதால் அந்த நடிகையிடம் ஹிந்தியிலேயே பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தாள். அந்த நடிகையிடம் பாடலின் பொருளையும், அதில் வரவேண்டிய நுணுக்கங்களையும் அவள் மொழியிலேயே ஸ்ரீகா எடுத்துக் கூற, ஓரளவு புரிந்தது அவளுக்கு.

                  இந்த சில நிமிடங்களில் ஸ்ரீகாவின் பேச்சில் அவள் மீது ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ள, “மாஸ்டர்… நீங்க ஒருமுறை எனக்கு எக்ஸ்ப்ரஸ் பண்ணி காட்டுங்க..” என்றாள் அந்த ஹீரோயின்.

                   ஸ்ரீகா அந்தப்பாடலை ஒலிக்கவிட்டவள் தன்போக்கில் அந்த பாடலுக்கு நடனம் ஆட, ஆவலுடன் சேர்ந்து அவள் கண்களும் ஆடியதாகத் தான் தோன்றியது அந்த நடிகைக்கு.அவர்கள் தன்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதும் புரிந்து விட, தன்னால் முடியுமா என்று சந்தேகம் தான் அவளுக்கு.

                  அதை அப்படியே அவள் ஸ்ரீகாவிடம் தெரிவிக்க, “சூப்பரா ஆடறீங்க… நிச்சயமா உங்களால முடியும். நான் சொல்றதை மட்டும் அப்படியே பாலோவ் பண்ணிக்கோங்க..” என்று ஹிந்தியில் சொன்னவள் சொன்னது போலவே, முழுப்பாடலையும் அடுத்த மூன்று மணி நேரத்தில் முடித்துவிட்டாள்.

                  கேமராவில் பதிவாகி இருந்ததை இயக்குனருடன் சேர்ந்து ஒருமுறை பார்வையிட, வெகு திருப்தி அவர்களுக்கு. அந்த நடிகை சட்டென உணர்ச்சி வசப்பட்டவளாக ஸ்ரீகாவை இறுக அணைத்து விடுவித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். கூடவே “தேங்க் யூ ஸ்ரீகா. யூ டிட் இட்… நான்தானே இது.. எனக்கே சந்தேகமா இருக்கு.. இந்த சங்க்கு எவ்ளோ கிரெடிட்ஸ் வந்தாலும் மொத்தமும் உனக்குதான்..” என்று வெளிப்படையாக பாராட்டினாள்.

                  ஸ்ரீகா அப்போதும் இயல்பாகவே இருந்தவள் “இது உங்களோட ஹார்ட்ஒர்க் நேஹா.. மொத்த கிரெடிட்சும்  எனக்கே கொடுக்காதீங்க..” என்று சிரித்துவிட்டு  தன் குழுவினருடன் சென்று சேர்ந்து கொண்டாள் அவள்.

                 அறிவு அந்த நடிகை அவளை கட்டியணைத்ததில் பொசுங்கி போனவனாக நின்றிருக்க, அருகில் இருந்தவனிடம் “என்ன ஜாக்.. உங்க அண்ணன் ரொம்ப சோகமா இருக்கான்..” என்று அவள் வினவ

                  “அட நீங்க வேறக்கா,… அவரே அந்த நேஹா உங்களை கட்டிபிடிச்சதுல கதறிட்டு இருக்காரு பாவம்..” என்று அவன் வாயை பொத்தி சிரிக்க

                  “வெட்கமாவே இல்லையாடா உனக்கு. அறிவுகெட்டவனே.” என்று கடிந்து கொண்டாள் ஸ்ரீகா.

                “ஏன் எனக்கென்ன வெட்கம்… நாந்தான் காலையில் இருந்து அவளுக்கு ஸ்டெப் சொல்லி கொடுத்தேன். ஒரு சின்ன சிரிப்பு கூட வரல.. நீ வந்து ஹிந்தில நாலு பிட்டை போடவும், உன்னை கட்டிப்பிடிக்கிறா..” என்று அவன் வயிறெரிய

                    “அவளுக்கு எக்ஸ்பிரஷன் சொல்லிக் கொடுடா ன்னு சொன்னா, நீ விதவிதமா எக்ஸ்பிரஷன் கொடுத்திட்டு நிற்கிற.. அப்புறம் எங்கே இருந்து… “என்று நக்கலாக ஸ்ரீகா பெருமூச்சு விட

                   “ஹேய்… ரொம்ப ஓவரா பண்ணாத ஓகே வா.. எனக்கு ஹிந்தி தெரியாது.. அது ஒண்ணுதான் விஷயம்.. அவளுக்கு நான் பேசறதே புரியல அப்புறம் எங்கே இருந்து எக்ஸ்பிரஷன் வரும். அதை நான் சொன்னா, வச்சு வாங்குவ.. அதான் உன்னையே வர வச்சேன்..” என்றவன் அவளை கெத்தாக ஒரு லுக் விட

                 அருகில் நின்றவனிடம் “உனக்கு மீசையே இல்லையாடா ஜாக்…” என்று சிரிப்போடு அவள் கேட்கவும், உடன் நின்ற மற்றவர்கள் சிரித்துவிட, ஸ்ரீகாவை அடிக்க பாய்ந்தான் அறிவு. அந்த ஜாக் என்பவனை சுற்றி ஓடியவள், “ஹேய் அருள்.. வேண்டாம்டா.. மரியாதையா ஓடிரு.. செட்ல இருக்கோம்.. அம்மாக்கு போன் பண்ணுவேன்..” என்று அவள் மிரட்ட

                  “ஸ்கூல் பிள்ளையை எல்லாம் வேலைக்கு வச்சிருந்தா இப்படித்தான்… இன்னும் அம்மாவை கூட்டிட்டு வரேன் ன்னு சொல்றியே உனக்கு வெட்கமா இல்லை..” என்று அவன் நக்கலடிக்க

                                   “சத்தியமா இல்ல.. நான் நேஹாவோட முத்தத்துல பறந்துட்டு இருக்கேன்டா.. எனக்கெதுக்கு வெட்கம்..” என்று அவள் இதழ்களை வளைத்து சிரிக்க

              “உன்னை என்ன செய்யுறேன் பாரு…” என்று மீண்டும் அவளை நெருங்கினான் அறிவு.

               அவள் மீண்டும் அவனிடம் இருந்து விலகி ஓட, அந்த வழியே வந்த ஒரு நெடியவன் மீது முட்டிக் கொண்டுதான் நின்றாள். அவன் உக்கிரமாக ஸ்ரீகாவை முறைத்து கொண்டிருக்க, அறிவு வந்த வழியே அப்படியே  பின்னால் நகர்ந்து கொண்டிருந்தான்.

               அவன் பார்வை அடுத்ததாக அறிவின் மீது பதிய, “நேரம் சிறப்பா செய்யுதுடா அறிவு.. இன்னிக்கு ன்னு இவன்கிட்ட சிக்கினோமே..” என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தான் அறிவு.

                        ஸ்ரீகா வந்தவனை கண்டு பெரிதாக அதிரவெல்லாம் இல்லை. அவள் அறிவை பரிதாபமாக பார்க்க, அறிவு அவளை முறைத்துவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.

                        இதற்குள் ஸ்ரீகாவை தாண்டி நடந்த அந்த புதியவன் “எருமைமாடு மாதிரி வளர்ந்து இருக்கியே.. அதுல பாதியாவது அறிவு வளர்ந்திருக்காடா உனக்கு. இதுல அறிவு ன்னு பேரு வேற.. அறிவே இல்லாத உனக்கு அறிவு ன்னு பேர் வச்சு இருக்காங்கல்ல, அவங்களை சொல்லணும்..” என்று கத்திக் கொண்டிருந்தான்.

                     அறிவு அவன் திட்டியதை காதில் வாங்காதவன் போல காதைக் குடைந்து கொண்டே நிற்க, அதில் இன்னமும் கடுப்பானான் வந்தவன். அவன் துருவன். இதே சினிமாவில் முன்னேற போராடிக் கொண்டிருக்கும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவன். நான்கைந்து படங்கள் இதுவரை முடித்திருக்க, அதில் மூன்று படங்கள் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியை தக்க வைத்திருந்தது.

                                     அதில் ஓரளவு அவனும் பிரபலம் தான். அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் அவனுக்கு பெண் ரசிகைகள் தாராளமாகவே இருந்தனர். அவனது துள்ளலான இசையும், மனதை மெல்லிய நாதமாக மீட்டிச் செல்லும் குரல் தேர்ந்தெடுப்பும் அவனை வெற்றியாளனாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

                 அப்படிப்பட்ட ஒருவன் இப்படி பொது இடத்தில் வைத்து அறிவை திட்டி தீர்க்க, அவனை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தான் அந்த அறிவு. ஸ்ரீகா துருவனின் கையை பிடித்து அவன் பேச்சை தடை செய்தவள் “ஏன் இவ்ளோ கோபம் துருவ். கொஞ்சம் பொறுமையா பேசு…” என்று அதட்ட

                 அவளையும் முறைத்து வைத்தான் அவன். “என்ன பொறுமையா பேசணும். பப்ளிக் பிளேஸ்ல இப்படி ஒடிபிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க… உங்ககிட்ட நான் பொறுமையா பேசவா.. சின்னக்குழந்தைகளா ரெண்டு பேரும். நாம இருக்க பீல்டு பத்தி தெரிஞ்சு நடக்கணும் ஸ்ரீ..” என்று கண்டிப்புடனே அவன் கூற

              “நீயும் பயந்து என்னையும் பயப்பட வைக்காத துருவ். என்னோட பேர் மட்டும்தான் நிறைய பேருக்கு தெரியும். உன் அளவுக்கு எல்லாம் எங்க முகம் பரிட்சயமில்ல. சோ, இவ்ளோ பயம் எல்லாம் வேண்டாம்டா…” என்று அவள் அலட்சியமாக கூற

                அவளை உறுத்து விழித்தவன் தன் கையில் இருந்த அலைபேசியை நீட்ட, அதில் அறிவு, ஸ்ரீகா இருவரும் ஓன்றாக நிற்க, ஸ்ரீகாவை அறிவு அடிக்க கையோங்குவது படமாக்க பட்டிருந்தது. நிச்சயம் அது இன்று எடுத்த படம் இல்லை என்பது பார்த்தவுடன் புரிய, கேள்வியாக துருவனை பார்த்தாள் ஸ்ரீகா.

                   “ரெண்டு நாள் முன்னாடி ஹைதராபாத்ல நீங்க அடிச்சு விளையாண்ட போட்டோ… இதுக்கு பிறகும் உன் முகம் பரிட்சயமில்ல ன்னு சொல்வியா… நீ டான்ஸ் மாஸ்டர் ரேகா பரமேஸ்வரன் பொண்ணு..அதுவே உனக்கான பபப்ளிசிட்டி தான். நீங்க ரெண்டு பேரும் யார் ன்னு எல்லாருக்கும் நாம விளக்கம் கொடுக்க முடியாது.. அது தேவையும் இல்ல.. பொது இடத்துல கவனமாக இருக்க பழகிக்கோ… இந்த வளர்ந்து கெட்டவனுக்கும் சொல்லு.”

                     “இவன் வளராம இருந்தா, அதுக்கு நானா பொறுப்பு.. பொறாமைபிடிச்சவன்…” என்று துருவனை திட்டியவன் “இவன் பொய் சொல்றான் பேபி.. நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பதை பார்த்து லேசா வயிறு எரியுது இவனுக்கு. நீ பீல் பண்ணாதடா..” என்று அறிவு ஸ்ரீகாவின் தோள்மீது கையை போட

                   துருவனின் பார்வை தங்களை சுற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது. அறிவின் பேச்சைக் கண்டுகொள்ளாமல் “அதான் ஷூட் முடிஞ்சதே.. உங்களுக்கு இங்கே என்ன வேலை. கிளம்பு..” என்று ஸ்ரீகாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான் அவன்.

                    அவன் இழுப்பிற்கு நடந்தாலும், அறிவிடம் “ஏன்டா அவனை டென்சன் பண்ற..” என்று ஸ்ரீகா கத்த

                  “அவன் ஏன் என்கிட்டே பேசல… என்கிட்டே பேசற வரைக்கும் இப்படித்தான் பண்ணுவேன்.. “என்று சட்டமாக கூறினான் அறிவு.

                    துருவ் திரும்பி அவனை முறைத்தவன் எதுவும் பேசாமல் நடக்க, “என்னடா நடக்குது இங்கே. ஒருவாரம் ஊர்ல இல்ல. அதுக்குள்ள என்ன சண்டை போட்டிங்க ரெண்டு பேரும்..” என்று ஸ்ரீகா அதட்ட

                     “அவன்கிட்டேயே கேளு..” என்றான் அறிவு.

                     “அவனையே சொல்ல சொல்லு ஸ்ரீ.. நான் இருக்க கோபத்துல அவனை ரெண்டு வைக்காம இருப்பதே பெருசு..” என்று இன்னும் கத்தினான் துருவ்.

                      “ஹேய் துருவ். இரு.. நான் கேட்கிறேன். டென்சன் ஆகாத..” என்றவள் “என்னடா செஞ்ச.. சொல்லித் தொலையேன்..” என்று அறிவழகனிடம் சத்தமிட

                       “ஸ்ரீகா… நான் என்ன பண்ணி இருப்பேன் ன்னு நினைக்கிற நீ.. அவன்தான் என்னை வச்சு காமெடி பண்ண பார்க்கிறான்.” என்று அவன் முடிக்க கூட இல்லை. துருவன் ஸ்ரீயின் கையை உதறிவிட்டு அங்கிருந்த நடக்க தொடங்கிவிட்டான்.

                         தங்களை தனியே விட்டு கிளம்பமாட்டான் என்ற தைரியத்தில் அறிவிடம் திரும்பியவள் “கொன்னுடுவேன் அறிவா உன்னை.. என்னடா பண்ணி வச்ச.. ” என்று கேட்க

                       “ஹேய் நான் ஒண்ணுமே பண்ணல.. நீ என்ன அவனுக்கே பேசற.. ” என்று அவனும் குரலுயர்த்த

                      ஸ்ரீகா நிதானமானவள் “என்ன நடந்துச்சு ன்னு சொல்லு..” என்று கையை கட்டிக் கொண்டு நின்றுவிட்டாள்.

                     அதற்குமேல் அவளிடம் பொய் சொல்ல முடியாது என்பதால் “என்னை பாட்டுப்  பாட  சொல்றான் ஸ்ரீகா…” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினான் அவன்.

                        ஸ்ரீ சற்று அதிர்ச்சியுடன் “என்ன..” என்று வினவ

                      “உன்னாலதான். நான் அன்னிக்கு பசங்களோட சும்மா பாடிட்டு  இருந்ததை நீ ஏண்டி அவனுக்கு அனுப்பி வச்ச.. அவன் அதை கேட்டுட்டுதான் என் பின்னாடி சுத்திட்டு இருக்கான்..”என்றான் அறிவு.

                        அவன் கூறியதில் சிரித்தவள் “அவன் சொன்னா செய்ய வேண்டியது தானே.. நீ ஏன் அவனை டென்சன் பண்ற..” என்று ஸ்ரீகா முறைக்க

                      “ஸ்ரீ ரெக்கார்டிங் பாடுற அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லடி நான். அவனுக்கு தான் புரியல..”என்று அவன் புலம்ப

                      “அதெல்லாம் உனக்கு எதுக்கு. அவன் பாட சொன்னதை பாட வேண்டியது தானே அறிவா.. அது ஓகே வா இல்லையா ன்னு அவன் முடிவு பண்ணட்டுமே..” என்று ஸ்ரீ அவனை மடக்க

                       “ஐயோ ஸ்ரீ ரெக்கார்டிங் ரூம் வரைக்கும் இழுத்துட்டு போய்ட்டான் உன் நண்பன். ஆனா, என்னாலதான் முடியல. ” என்று அவன் கூறவும்

                     “அதெப்படி முடியாம போகும்… அவன் பேச்சைக் கேட்கலாம் இல்ல அறிவா..” என்று அவள் முறைக்க

                 “புரிஞ்சிக்கோ ஸ்ரீகா.. அந்த ரூமுக்குள்ள நுழைந்தால் வாய்ஸ் வரல.. வைப்ரேஷன் தான் வருது. ஷிவர் ஆகுது ஸ்ரீ..” என்று அவன் கூறவும் சிரித்துவிட்டாள் ஸ்ரீகா.

                  சத்தமாக சிரித்துக் கொண்டே “நீ வா.. அப்படி என்ன நடக்குது ன்னு நானும்இன்று பார்க்கிறேன்..” என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்று காரில் ஏற்றினாள் ஸ்ரீகா. சொன்னதுபோலவே அவனை ரெக்கார்டிங் தியேட்டருக்கும் இழுத்து சென்றுவிட்டாள்.

               

                  

                

                         

Advertisement