Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 05

                      உறக்கத்தில் இருந்த சர்வாவின் அருகே ரேகா அமர்ந்திருக்க, எதிரில் அவரை முறைத்து கொண்டு நின்றிருந்தார் பரமேஸ்வரன். யமுனாவிடம் ரேகா நடந்து கொண்ட விதம் பரமேஸ்வரனுக்கு அத்தனை உவப்பாக இல்லை. அவளுக்காக தன் மனைவி தன் நிலையை விட்டு இறங்குவதா???… என்ற கோபம் தான் பரமேஸ்வரனுக்கு.

                       அவர் ரேகாவை முறைத்து கொண்டே நிற்க, “நீங்க தூங்க போறதில்லையா..” என்று மிரட்டலாகவே ரேகா கேட்க

                       “உன் தகுதிக்கு இது அழகில்லை ரேகா.. உன்னோட சரிக்கு சமமா நின்று பேசக்கூட தகுதி இல்லாதவள் அவ.. அவளைப் போய் கை நீட்டி அடித்து, வெளியே தள்ளி உன் மதிப்பை நீ குறைத்து கொள்வாயா???…” என்று அவர் ஆதங்கத்துடன் கூற

                          “என் தகுதியை பற்றி யோசித்ததில் தான் அவளை இந்த அடியோட விட்டு இருக்கேன் அபிப்பா.. இல்ல, எனக்கு இருக்க கோபத்துக்கு அவளை கொன்னு இருக்கணும்..” என்று ரேகா முகம் சிவக்க ஆத்திரத்துடன் பதில் கூறினார்.

                         மனைவி சர்வாவின் நிலையால் தன் நிலை இழந்து நிற்பது புரிய, பரமேஸ்வரன் அப்போதைக்கு எதுவும் பேசவில்லை. கீழே சென்றவர் சமையல் அறைக்கு சென்று தானே பால் கலந்து எடுத்து வந்து மனைவியிடம் நீட்டினார்.

                   ரேகா அமைதியாகி வாங்கி கொள்ளவும், “குடி முதல்ல..” என்று பரமேஸ்வரன் அதட்ட, பொறுமையாக குடித்து முடித்தார் அவர். “படுத்து தூங்கு.. காலையில பேசுவோம்..” என்று அவர் நகர,

                   “அவ பேசும்போது நீங்க ஏன் அமைதியா நின்னிங்க.. ஒரு அடி க்கொடுத்திருக்க வேண்டியது தானே..” என்று ரேகா மீண்டும் வினவ

                   “வீட்டுக்கு ஒரு ரவுடி போதும்.. அதான் போதும் ன்னு நீ நினைக்கிற அளவுக்கு கொடுத்துட்டியே..” என்று சிரித்தவாறு “நான் பிள்ளைகளோடு படுத்துக்கிறேன்.. நீ இவனை பார்த்துக்கோ..”  என்று தங்கள் அறைக்கு  சென்றார் பரமேஸ்வரன்.

                      ஆனால், மனம் முழுதும் சிந்தனை தான். ரேகா அடித்து துரத்தி விட்டதால், அதோடு முடிந்து விடாது என்று தெரிந்தது அவருக்கு. உண்மையில் இனி தான் பிரச்சனை தொடங்கும்.  அந்த யமுனா ரகுவிடம் என்ன சொல்லி அவனை வரவழைப்பாளோ என்னவோ?? அவன் வந்து என்ன சொல்வானோ ??… என்று இரவு முழுவதும் சிந்தனை தான் பரமேஸ்வரனுக்கு.

                      ஆனால், இத்தனை சிந்தனையிலும் மனைவி தனக்காக யமுனாவை அடித்தது உவகை தான். எத்தனை கோபம் வருது என் பொண்டாட்டிக்கு???… என்று சிரிப்புடன் நினைத்தவர் “பூனை மாதிரி இருக்கா, ஆனா, அடி ஒவ்வொண்ணும் இடி தான்..” என்று மனைவியை சிலாகித்துக் கொண்டே தூங்கிப் போனார் பரமேஸ்வரன்.

                     ஆனால், அவர் நினைத்தது போலத்தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் அமைந்துவிட்டது. அடுத்தநாள் காலை விடிந்தும் விடியாமலும் ரகுவரன் பரமேஸ்வரனின் வீட்டில் வந்து நின்றுவிட்டார். வேலையாள் வந்து எழுப்பியதில் ரேகா முதலில் எழுந்து வெளியே வர, அவரை கோபத்துடன் முறைத்து கொண்டு அமர்ந்திருந்தார் ரகுவரன்.

                     ரேகா வரவேற்பு வார்த்தைகள் ஏதும் கூறாமல், எடுத்த எடுப்பில் “என்ன விஷயம்..” என்று கோப முகத்துடன் வினவ

                       “எனக்கு உங்ககிட்ட பேச எதுவும் இல்ல.. பரமேஸ்வரனை கூப்பிடுங்க..” என்று தானும் கோபத்துடன் உரைத்தார் ரகுவரன்.

                      ரேகா நிதானமாக நேரத்தைப் பார்த்தவர் திரும்பி எதிரில் அமர்ந்திருந்தவரைப் பார்க்க, கண்டுகொள்ளவே இல்லை அவர். ரேகா “இது அவர் தூங்குற நேரம்.. இப்போ எழுப்ப முடியாது.. நீங்க போயிட்டு எட்டு மணிக்கு மேல வாங்க..” என்று அதிகாரமாக கூற, கொந்தளித்துவிட்டார் ரகுவரன்.

                     “என்ன தைரியம் உங்களுக்கு. என் மகனை நீங்க தூக்கிட்டு வந்து வச்சிருக்கீங்க.. என் மனைவியை அடிச்சு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளி இருக்கீங்க.. இப்போ நான் கேட்க வந்தால், என்னையும் கிளம்ப சொல்விங்களா..” என்று அவர் சத்தமிட

                    “யார் உங்க மகன்..” என்று முன்னிலும் நிதானமாக வினவினார் ரேகா.

                    “நீங்க தூக்கிட்டு வந்து இருக்க சர்வா என் மகன். என் மகனை நீங்க கடத்திட்டு வந்து இருக்கீங்க ன்னு உங்க மேல புகார் கொடுக்க முடியும் என்னால..” என்று ரகுவரன் மிரட்டலில் இறங்க

                  “ப்பா.. என்ன ஒரு அக்கறை உங்க மகன் மேல.. ” என்று வியந்தவர் “புகார் தாராளமா கொடுங்களேன்…” என்றார் ஆலோசனையாக

                   ரகுவரன் இப்போது விழிக்க, “என்ன ஆச்சரியமா இருக்கா… நீங்க என் மேல புகார் கொடுத்தா, நான் பதிலுக்கு உங்க மேல கேஸ் கொடுப்பேன். வன்கொடுமை ன்னு கேஸ் கொடுப்பேன். “

                   “வந்து பத்து நிமிஷம் ஆகி இருக்குமா.. என் பிள்ளை எப்படி இருக்கான் ன்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா நீங்க… உங்க பொண்டாட்டியை அடிச்சது தான் தெய்வகுத்தமா தெரியுதா உங்களுக்கு…?? என்ன மனுஷன் சார் நீங்க எல்லாம்??… உங்க முதல் மனைவி உங்களுக்கு தானே சர்வாவை பெத்தாங்க?” என்று ரேகா சுருக்கென கேட்டுவிட, ரகு ஆத்திரத்துடன் வாயைத் திறக்கும் போதே “ரேகா..” என்று சத்தமாக அதட்டி இருந்தார் பரமேஸ்வரன்.

                     மாடியின் முதல் படியில் நின்றிருந்தவர் போட்ட அதட்டலில் ரேகா அமைதியாக, கீழே வந்தவர் “உள்ளேப் போ..” என்று மனைவியை முறைத்து கொண்டே கூற, அவரின் குரல் தந்த கோபத்தில் அமைதியாக விலகிச் சென்றார் ரேகா.

                   அவர் நகரவும் நம்பனிடம் திரும்பியவர் “உட்காருப்பா..” என்று விட்டு வேலையாளை அழைத்து காஃபி கொண்டு வரச் சொன்னார். ரகுவரன் “அதெல்லாம் வேண்டாம் பரமேஷ்.. என் மகனை என்னோட அனுப்பி வை.. நான் கூட்டிட்டு போறேன்..” என்று விலகல் குரலில் கூற

                  “எப்படி கூட்டிட்டு போவ.. உன்கூட வர அளவுக்கு அவன் உடல்நிலை சரியாக இருக்கணும் இல்லையா…” என்று நிதானமாக கேட்டார் பரமேஸ்வரன்.

                   “என்னடா சொல்ற… சாதாரண காய்ச்சல் தானே..” என்ற ரகு, எதிரில் இருந்தவரின் பார்வையில், அதற்குமேல் பேசவில்லை.

                    பரமேஸ்வரன் “எழுந்து என்னோட வா..” என்றுவிட்டு சர்வா இருந்த அறைக்குள் நுழைய, அவன் அருகில் தான் ரேகா அமர்ந்திருந்தார். இரவில் ரேகா குடித்துவிட்டு வாய்த்த காஃபி கோப்பைகள் அந்த டேபிளில் இருக்க, அவர் பாதியில் முடித்து கவிழ்த்து வைத்திருந்த ஒரு புத்தகமும் அருகில் இருந்தது. அனைத்தும் ரகுவரனின் கண்ணிலும் பட, அவர் கட்டிலில் சோர்ந்து உறங்கிய மகனிடம் தான் கவனம் செலுத்தினார்.

                   அவர் சர்வாவின் அருகில் செல்லவும், ரேகா எழுந்து தள்ளி நிற்க, “சர்வா..”என்று தந்தை அழைக்கவுமே, “ரேகாம்மா..” என்று பயத்தில் முனகினான் குழந்தை.

                   ரகு மீண்டும் ‘சர்வா..” என்று அவனை கைகளில் தூக்க முயற்சிக்க, அவன் அணிந்திருந்த பனியன் காயத்தில் லேசாக உரசிவிட, “ஆஅ… ” என்று அலறியவன் கண்களை விழிக்க, தந்தையை அப்போது தான் கண்டான்.

                 அடுத்த நொடி அவன் கண்கள் ரேகாவைத் தேட, மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டோமோ என்று பயத்திலேயே சத்தமாக “ரேகாம்மா..” என்று அழுகையில் வீறிட்டான் சர்வா. ரேகா அவன் அருகில் வர, அவரை அணைத்துக் கொண்டவன் “ம்மா.. ப்ளீஸ்.. நான் போகமாட்டேன்.. இவர் வேண்டாம்… நான் இங்கே தான் இருப்பேன்.. நான் போ மாட்டேன் ரேகாம்மா.. என்னை அனுப்பாதீங்க..” என்று அழுது ஊரைக் கூட்ட, ரகுவரனை புழுவினும் கேவலமாக ஒரு பார்வை பார்த்தார் ரேகா.

                        அந்த பார்வையே ரகுவரனைக் கொன்றுவிடும் போல் தோன்ற, எதுவும் பேசாமல் எழுந்து வெளியே வந்துவிட்டார் ரகுவரன். மகனின் வயிற்றில் இருந்த தீக்காயத்தையும் ரகுவரன் பார்த்திருக்க, மகனின் அலறல் அவரது மனசாட்சியை உலுக்கியது.

                      யமுனா மகனை சரிவர கவனிப்பதில்லை என்று புரிந்தே இருந்தது அவருக்கு. ஆனால், வேலையாட்கள் இத்தனைப் பேர் இருக்க, யமுனா பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என்ன என்று தான் எண்ணம் அவருக்கு. கூடவே சர்வா என்ன குழந்தையா… பசித்தால் சாப்பிடப் போகிறான்.. இப்போது பள்ளிக்கு வேறு செல்கிறானே, தன் மகன் தன்னைக் கவனித்துக் கொள்ள மாட்டானா என்று ஒரு மெத்தனம் தான்.

                              ஆனால், யமுனா அவன் சுயத்தையே அழிக்கும் அளவிற்கு சீண்டியதெல்லாம் அவர் காதுக்கு வந்திருக்கவே இல்லை. மகனும் பெரும்பாலும் அறைக்குள்ளேயே இருப்பதால் பெரிதாக விஷயங்கள் எதுவும் தெரியவே இல்லை ரகுவரனுக்கு. இப்போதும் பரமேஸ்வரனிடம் “என்னடா நடக்குது இங்கே..” என்று கேட்கும் நிலையில் தான் இருந்தார் அவர்.

                      பரமேஸ்வரன் அவரை கண்டனமாகப் பார்த்தவர் “ரெண்டாவது கல்யாணம் செய்யறது தப்பில்ல ரகு. ஆனா, அதுக்காக பெத்த மகனை மறந்து போகணும்ன்னு எதுவும் இல்லையே..” என்று கேட்க, ரகு தன்னை கேவலமாக உணர்ந்தவர் தலையைக் குனிந்து கொண்டார்.

                      பரமேஸ்வரன் “ஒரே நாள் பார்த்த என்னோட கண்ணுக்கே  அவன் மெலிஞ்சு இருப்பது தெரியுது. கூடவே இருக்க.. கண்ணை மூடிட்டு இருக்கியா ரகு.. இப்போகூட பொண்டாட்டியை அடிச்சதுக்கு நியாயம் கேட்கத்தான் வந்த இல்லையா..”

                     “கேட்டுக்கோ.. உன் மனைவி நேற்று ராத்திரி இங்கே வந்து பேசிய வார்த்தைகள் எல்லாம் கேவலம்ன்னு சொல்றதை விட மோசம்… பொண்ணாச்சே ன்னு நான் அமைதியா கேட்டுட்டு நின்றேன். ரேகா அப்படி இல்லையே. என்னை சொல்லவும் அடிச்சுட்டா…’ என்றவர்

                       “ஆனா, அவளுக்காக நீ இந்த அளவுக்கு கவலைப்படுவது தான் ஆச்சரியமா இருக்கு எனக்கு. இதுல ஒரு பங்கு அக்கறை உன் மகன் மேல வச்சிருக்கலாம் ரகு. நீ கவனிச்சு இருந்தா, அவனுக்கு இந்த நிலைமை வந்து இருக்காது.”

                      “தோசை கரண்டியால சூடு வச்சிருக்கா உன் மனைவி. சூடுபடற அளவுக்கு என்ன தப்புசெய்திருப்பான் உன் மகன். சின்னக்குழந்தைடா… மகனா பார்க்க வேண்டாம், ஒரு குழந்தையா அவனை கொஞ்சம் கனிவா நடத்தி இருக்கலாமே.. இல்ல, அவன் போக்கில் விட்டு இருந்தால் கூட போதுமே..” என்று பரமேஸ்வரன் வாங்கு  வாங்கு என்று வாங்கிவிட, தலையைக் குனிந்து அமர்ந்தவர் தான் ரகுவரன்.

                     அதற்குமேல் ஒன்றுமே பேசவில்லை. தன் தவறுகளின் அளவு பூதாகரமாக தெரிந்தது ரகுவரனுக்கு. தன் இச்சைக்காக மகனை பலி கொடுத்திருக்கிறோம் என்று புரிய, தன்னோடு வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகனை சரிசெய்யும் வழி தெரியாமல் அப்போதைக்கு பரமேஸ்வரனின் பொறுப்பிலேயே அவனை விட்டுவிட்டு வீடு திரும்பினார் அவர்.

                      வீட்டிற்கு வந்து யமுனாவை அறைக்கு அழைத்துச் சென்றவர் தன் இடுப்பில் இருந்த பெல்டால் அவரை விளாசித் தள்ள, உடலெங்கும் வரிவரியாக சிவந்து போனது யமுனாவிற்கு. “என் மகனுக்கு சூடு வைப்பியா நீ.. கொன்னுடுவேன்.” என்று அப்போதைக்கு யமுனாவை அவர் மிரட்டி வைக்க, உண்மையில் யமுனா பயந்து தன் இருந்தார்.

                      ஆனால், அதற்குமேல் எத்தனை போராடியும் சர்வா மீண்டும் அவரிடம் ஒட்டவே இல்லை. அவன் உண்ணுவது, உறங்குவது, படிப்பது, பள்ளிச் செல்வது என்று அனைத்துமே பரமேஸ்வரன் வீட்டில் தான் என்றாகிவிட்டது. ரேகாவும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் அவனை தன் கூட்டுக்குள் சேர்த்துக் கொள்ள, பரமேஸ்வரன் “நம்ம வீட்ல தானே இருக்கான் ரகு.. சரியாகிடும் விடு..” என்று ரகுவரனிடம் கூறி வைக்க, மகனைப் பற்றிய கவலை குறைந்தவராக காணப்பட்டார் ரகுவரன்.

                     இதற்கிடையில் சர்வாவின் நல்ல நேரமோ, கெட்ட நேரமோ யமுனா கருவுற, சர்வா அப்போது மூன்றாம் வகுப்பில் இருந்தான். ரகுவரன் பழைய கசப்புகளை மறந்தவராக மனைவியைத் மீண்டும் தாங்க ஆரம்பிக்க, இந்த முறை சர்வாவை நெருங்காமல், ரகுவரன் மீதான தன் பிடியை இன்னும் இறுக்கினாள் யமுனா.

                     முழுநேரமும் வாந்தி, மயக்கம், ஏதோ ஒரு வலி என்று சுருண்டு கொள்பவள் கணவனின் கவனம் நுஸுதாக தன்மீது இருப்பது போல் பார்த்துக் கொள்ள, இம்முறை சர்வா எதற்காகவும் எங்க வேண்டியது இல்லாமல் அவனை கண்ணில் வைத்து கவனித்தனர் ரேகாவும், பரமேஸ்வரனும்.

                     ரேகா இடத்தில வேறு ஒருவர் இருந்திருந்தாலோ, அல்லது பரமேஸ்வரனின் இடத்தில வேறு ஒருவர் இருந்திருந்தாலோ சர்வாவின் வாழ்க்கை ஒருவேளை முடிந்தேக் கூட போயிருக்கலாம். ஆனால், அவனின் நல்ல நேரமாக அவன் ரேகாவின் கையில் கிடைக்க, அவன் வாழ்வுக்கு வெளிச்சமாக இருந்தார் ரேகா.

                    ரேகாவின் செயல்களுக்கு எந்த விதத்திலும் தடை சொல்லாத பரமேஸ்வரன் தன் பிள்ளைகளை போலவே சர்வாவையும் கவனித்துக் கொள்ள, கடவுள் முழுமையாக அவர்களை ஆசிர்வதித்து தான் இருந்தார் போல. நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்ற வாக்கு பரமேஸ்வரனின் விஷயத்தில் உண்மையாக தொழிலும் வளர்ச்சி தான்.

                 பிள்ளைகள் படிக்கும் போதே அவர்களை இசை, நாட்டியம், தற்காப்புக்கலைகள், பியானோ வகுப்புகள் என்று ஒன்றுவிடாமல் அனுப்பி வைப்பார் ரேகா. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் சிறந்து விளங்க, பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி எந்த போட்டி நடந்தாலும் நிச்சயம் ஐந்து கோப்பைகள் சில சமயம் அதற்கும் மேலும் கூட வீடு வந்துவிடும்.

                  அதில் அலாதிப் பெருமை ரேகாவிற்கு. வீட்டின் ஹாலில் இரு அலமாரியை தயார் செய்து கண்ணாடி சட்டமிட்டவர் அதில் பிள்ளைகளின் கோப்பைகளையும், பதக்கங்களையும் காட்சிப் பொருளாகவே வைத்திருப்பார். கூடவே ஹால் முழுவதும் இவர்கள் ஐவரின் குறும்புத்தனங்கள் நிறைந்த புகைப்படங்கள் தான். இதில் மகள் முழுமையாக பரதம் கற்று தேர்ந்துவிட, அவளின் நாட்டிய படங்களும் ஆங்காங்கே வீற்றிருக்கும்.

                 என்னவோ ரேகாவிற்கு இயல்பிலேயே யாரையும் பிரித்து பார்க்க முடியாமல் போனது. தன பெட்ரா பிள்ளைகள், வளர்த்தப் பிள்ளைகள் என்றெல்லாம் சிறு பொறியாக கூட எண்ணம் இருந்ததில்லை அவருக்கு. எப்போதுமே என் பிள்ளைகள் என்ற எண்ணம் தான். ஒரு குறிப்பிட்ட வயது வரவுமே, பரமேஸ்வரன் துருவன், அறிவனிடம் அவர்களின் பிறப்பையும் தெரிவித்தே வளர்க்க, அன்றுமுதல் இன்னமும் ரேகாவிடம் ஓட்டுதல் அதிகம் தான் மகன்களுக்கு.

                 பிள்ளைகள் வளர வளர, அம்மாச்செல்லம் என்பதெல்லாம் மாறி, ரேகா பிள்ளைகளின் செல்லமாக மாறி இருந்தார். ஐந்து பேரில் ஸ்ரீகா ஒருத்தியை தவிர்த்து மற்ற அனைவருக்குமே ரேகா செல்லம் தான். ஸ்ரீகா ஒருத்தி தான் எப்போதும் அன்னையிடம் மல்லுக்கு நிற்பாள். ரேகா எப்போதும் மகன்கள் பக்கமே பேசுவதாக ஒரு குற்றச்சாட்டு அவளுக்கு.

                  எப்போதும் எதையாவது ஒன்றை இழுத்துக் கொண்டு ரேகாவிடம் வம்புக்கு நிற்பது அவள் ஒருத்தி தான். ரேகா “சண்டைக்காரி..” என்று செல்லமாக சலித்து கொள்ளும் அளவுக்கு சண்டைக்காரி அவள். ஆனால், அவளை நம்பி அவள் அன்னைக்கெதிராக ஒரு வார்த்தை யாரும் பேசிவிட முடியாது.

              

                   ரேகாவிடம் எத்தனை வம்பு வளர்த்தாலும், அவளுக்கும் அன்னை தான் ரோல் மாடல். அவளுக்கு இன்னும் கூட தன் அன்னையின் குணங்கள் ஆச்சரியம் தான்.. அவளின் அன்னை அவளை பொறுத்தவரை மிக மிக நல்ல ஆன்மா… பத்துக்கைகள், அத்தனையிலும் ஆயுதங்கள், சாந்தமான முகம் என்று சன்னதியில் நிற்கும் தெய்வத்தை விடவும் ரேகா உயர்ந்தவர் என்று தான் வாதிடுவாள் ஸ்ரீகா.

                     ஆனால், அதற்காக அதையெல்லாம் ரேகாவின் முன் ஒப்புக்கொள்ளவும் மாட்டாள். மகன்கள் அத்தனைப் பேரும் அன்னைக்கு செல்லம் கொடுத்தாலும், அன்னை தனக்கு மட்டும் செல்லம் கொடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தான் எப்போதும்.

                     இன்று ஐந்து பேரும் வளர்ந்து நிற்க, ஐந்து பேருமே பொறியாளர்கள் தான். துறை மட்டுமே ஆளுக்கு தக்காற் போல மாறி இருக்க, ஐந்து பேரும் சொல்லிக் கொள்ளும் படியான மதிப்பெண்களோடு தான் வெளியே வந்திருந்தனர்.

                    இதில் ஸ்ரீகா, அன்னையை போலவே நடனம் தான் என்று நின்றுவிட, அவளின் படிப்பு தூரச் சென்று நின்றது. அடுத்ததாக துருவ். அவனும் படிப்பைக் காட்டிலும் இசையை காதலிக்க, தன் துறையை காதலோடு தேர்ந்து எடுத்துக் கொண்டான்.

                   அபிநந்தன் படித்து வெளியே வரும் போதே, தன் துறையான மென்பொருளில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வெளியே வர, பரமேஸ்வரன் துணையோடு ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி அமர்ந்து விட்டான் அவன்.

                      அறிவன்… ரேகா வளர்த்த ஐவரில் இவன் மட்டும் சற்று வித்யாசம். சில நேரம் அபியோடு அலுவலகம் செல்பவன், மற்றொரு நேரத்தில் ஸ்ரீகாவுடன் நடன ஒத்திகைக்கு சென்றுவிடுவான். “உனக்கென ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு..” என்று ரேகாவே வலியுறுத்தியும், “எனக்கென்னமா.. எதுவும் ஒத்து வராம போனா, என் அப்பாவோட கம்பெனில போய் உட்கார்ந்திருவேன்…” என்று சிரிப்போடு சொல்லிவிட்டு ஓடி விடுவான் அவன். விளையாட்டுத்தனமும், குறும்புத்தனமும் இயல்பிலேயே அதிகம் அவனிடம்.

                     சர்வாவிற்கு தந்தையின் தொழில்கள் பல இருக்க,அதில் எதுவுமே கவனம் செலுத்துவது இல்லை என்று முடிவோடு இருந்தவனை அதட்டி, மிரட்டி அவன் தொழிலை கவனிக்க வைத்தவள் ஸ்ரீகா தான். எப்போதுமே ஸ்ரீகா அவனின் கிரைம் பார்ட்னர். அவனின் அத்தனை விஷயங்களும் அவளுக்கு தெரியும் என்பது போலத்தான். அப்படிப்பட்டவள் தந்தையின் தொழிலை கவனிக்க சொல்லி அவனை கட்டாயப்படுத்த, வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொண்டவன் சிறப்பாகவே செய்தான்.

                       இவனை வைத்து ஸ்ரீகா வகுத்து வைத்திருக்கும் திட்டங்கள் அவள் ரகசியங்கள். இதுவரை அதைப்பற்றி யாரிடமும் வாய் திறந்ததே இல்லை அவள். இந்த ஐந்து பேரும் படித்த படிப்போ, செய்யும் தொழிலோ எதுவுமே ஒரு பொருட்டே இல்லை ரேகாவிற்கு.

                      ஐந்து பேருமே அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத நல்லவர்கள். தான் வாழும் இந்த சமூகத்திற்கு தங்களால் என்ன செய்ய முடியும் என்று திட்டமிடும் அளவிற்கு மக்களை  தயார் செய்திருந்தார் ரேகா. அதுதான் அவரின் பெருமிதம். என் பிள்ளைகள் இவர்கள் என்று தான் முன்னிறுத்துவார் எங்கும்.

Advertisement