Advertisement

ரேகா தன் போக்கில் தன் வேலைகளை தொடர, அதன்பின் ரேகாவை எந்த வகையிலும் அணுகவே இல்லை பரமேஸ்வரன். ஏன் அவர் கண்களில் படுவதுக் கூட கிடையாது. இப்படியே நாட்கள் நகர, வாசுதேவன் கொண்டு வந்த மாப்பிள்ளையை முகத்தைக் கூட பார்க்காமல் நிராகரித்தார் ரேகா…

                  “இப்போதைக்கு திருமணம் வேண்டாம்…” என்று தந்தையிடமும் அழுத்தமாக கூறிவிட, தந்தைக்கும் மகளுக்கும் இடையே முதல் கருத்து வேறுபாடு. சிறியதாக தொடங்கிய முரண், ரேகா தொடர்ந்து தன் நிலையில் இருந்து இறங்காமல் இருக்கவும் மோதலாக வெடித்தது. வாசுதேவன் கோபத்தில் சில வார்த்தைகளை விட, ரேகாவின் பூஞ்சை மனது அவரின் பேச்சில் பெரியதாக அடி வாங்கியது உண்மை.

                  தந்தைக்கும், தன் மனதிற்கும் இடையில் கிடந்து அவர் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் பரமேஸ்வரன் மீண்டும் ரேகாவின் வாழ்வில் நுழைந்தது. அன்று போலவே ஒரு படப்பிடிப்புத் தளத்தில் ரேகாவை சந்தித்தவர் “என்ன வேணும் உனக்கு.. அதுதான் என்னை வேண்டாம்ன்னு சொல்லியாச்சு இல்ல… உன் அப்பன் கைகாட்டுறவனுக்கு கழுத்தை நீட்ட வேண்டியது தானே… ஏன் வீம்பு பிடிக்கணும்??” என்றார் அதட்டலாக

                    அவரின் பேச்சில் இழையோடிய வலி ரேகாவிற்கு புரிய, “அவர் பார்க்கிற மாப்பிளையை எனக்கு பிடிக்கணும் இல்லையா… ” என்றார் கேள்வியாக

                   “அதையாவது சரியா சொல்லலாம் இல்ல. எதுக்கு அவங்களையும் நிம்மதியில்லாம செஞ்சு, நீயும் நிம்மதியில்லாம இருக்கணும்.. எதுக்காக இதெல்லாம்??” என்று அவர் சத்தமிட

                  “உங்களுக்கென்ன இத்தனை அக்கறை என்மேல..” என்று ரேகா வியக்க, அவரின் கழுத்தை பிடித்து இருந்தார் பரமேஸ்வரன்.

                 “உன்மேல அக்கறையா.. இந்த நிமிஷம் உன்னைக் கொல்ல முடிஞ்சா, அதைவிட வேற சந்தோஷம் எதுவுமே இல்ல எனக்கு. ஆனா, அதுவும் முடியல என்னால.. உன்னை பார்த்திருக்கவே கூடாது நான்..”என்று அவர் புலம்ப, ரேகா இருநொடிகள் அவரை அசையாமல் பார்த்திருந்தவர்

                  “ஏன் வேற எவளையாவது பார்த்துட்டீங்களா.. ” என்று நிதானமாக கேட்க, உண்மையில் அவளை கொண்டு விடும் எண்ணத்துடன் தான் நெருங்கினார் பரமேஸ்வரன்.

                  அவரின் கைகளை இலகுவாக தட்டிவிட்ட ரேகா, “என்னை மேகமலைக்கு கூட்டிட்டு போங்க… உங்க மனைவியா…” என்று வார்த்தைகளை முடிக்க, நம்ப முடியாத திகைப்பில் அவளை நோக்கி கொண்டிருந்தார் பரமேஸ்வரன்.

                  “ரேகா..நீ.” என்று அவரின் வார்த்தைகள் தடுமாற

                   “வீட்ல வந்து பேசுங்க.. அப்பா கோபப்படுவாங்க… ஆனால், அது உங்க பொறுப்பு.. என்னவோ செய்ங்க….” என்றவர் அங்கிருந்து வெளியேற, அவரை தடுத்து இறுக்கமாக அணைத்து கொண்டார் பரமேஸ்வரன்.

                    முதல் முறையாக ஒரு பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டவாறு “தேங்க் யூ ரேகா…” என்று அவர் கூற, சிரித்துக் கொண்டே அவரிடம் இருந்து விலகியவர் அங்கிருந்து புன்னகையுடன் விலகிச் சென்றார்.

                    அடுத்தநாளே பரமேஸ்வரன் ரேகாவின் வீட்டிற்கு வந்து நிற்க, வாசுதேவன் எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை. அவரை சமாளிப்பதே பெரும் வேலையாகிப் போக, ரேகாவின் அன்னை மகளின் முகம் பார்த்து அவள் மனதை ஊகித்தவராக, திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்.  அதர்மேல் வசூதேவனும் ஒன்றும் பேச முடியாமல் சம்மதித்துவிட, தாமதிக்காமல் அடுத்த இரண்டே வாரங்களில் திருமனாத்தை முடித்துவிட்டார் பரமேஸ்வரன்.

                    தன் காதல் மனைவி கேட்டது போலவே, திருமணம் முடிந்த அடுத்த நாளே, மேகமலைக்கும் அழைத்து வந்துவிட்டார் ரேகாவை. பரமேஸ்வரன் ரேகாவை தன் காதலில் மொத்தமாக மூழ்கடிக்க, அவர்களின் வாழ்வு நன்றாகவே அமைந்தது.

                  திருமணத்திற்கு பின் சினிமாவின் மீது நாட்டம் குறைந்து விட, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நாட்டம் குறைந்து விட, பரமேஸ்வரனுக்கு முழுநேர மனைவியாக இருக்கவே விரும்பினார் அவர். ஒப்புக் கொண்ட படங்களை முடித்து கொடுத்துவிட்டு அவர் முழுவதுமாக ஒதுங்கி கொள்ள, அவரை அப்படி ஐடா முடியாமல் தன் மனைவிக்கென ஒரு நாட்டியபள்ளியை நிர்மாணித்துக் கொடுத்தார் பரமேஸ்வரன்.

                  அதற்கும் சில ஆசிரியர்களை நியமித்து தன் பரிசாக காதல் மனைவிக்கு கொடுத்துவிட, ரேகாவின் நேரம் பயனுள்ளதாகவே கழிந்தது. அவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் ரேகா முதல்முறையாக கருவுற, அவரை கண்ணின் மணியாகவே கருதி பாதுகாத்தார் பரமேஸ்வரன்.

                   ரேகா தன் பிரசவத்திற்கு கூட பெரிதாக தன் தாயை தேடவில்லை. பரமேஸ்வரனின் துணை கொண்டு பிள்ளையை பெற்றெடுத்து விட்டார். பரமேஸ்வரனின் வேண்டுதலால் ரேகாவின் பெற்றோர் தான் வந்து பரமேஸ்வரனின்  தங்கி மகளை பார்த்து சென்றனர்.

                   அபிநந்தன் தன் வயிற்றில் தோன்றியது முதலே தங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஆஸ்ரமம் ஒன்றிற்கு வாரம் இருமுறை சென்று வருவார் ரேகா. அவனுக்கு நான்கு  வயதாகியும் இந்தப்பழக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அந்த ஆசிரமத்தில் இருந்த அத்தனை பேரும், அவரிடம் பிரியமாகவே நடந்து கொள்ள, அங்கு செல்வது அப்படி ஒரு நிம்மதியைக் கொடுக்கும் அவருக்கு.

                  இப்போது தன் வயிற்றில் ஸ்ரீகாவை சுமந்து கொண்டிருந்தார் ரேகா. இப்போதும் தவறாமல் வாரம் இருமுறை அந்த ஆசிரமத்திற்கு அவர் வந்து சென்று கொண்டு இருக்க, அப்படி ஒருநாள் தான் துருவனும், அறிவனும் அவர் கண்களில் பட்டனர்.

               ஒருவயதுக் கூட முடியாத அந்த குழந்தைகளை யாரோ உறவினர் வந்து சேர்த்ததாக அங்கிருந்தவர்கள் கூற, பெற்றவர்கள் இருவருமே ஒரு விபத்தில் தவறி இருந்தனர்.ஏனோ அவர்களை பார்த்தது முதலே மனம் நிலையில்லாமல் தவித்தது ரேகாவிற்கு.

                இத்தனைக்கும் இப்படி குழந்தைகளை அவர் இதற்கு முன்பும் கூட பார்த்தது உண்டு. ஆனால், ஏனோ அவர்கள் இருவரையும் அப்படி கடக்க முடியவில்லை அவரால். அன்று அந்த ஆஸ்ரமத்தில் இருந்த நேரம் மொத்தமும் அந்த குழந்தைகளுடன் கழித்தவர் வீடு வந்தும் அவர்களையே சிந்தித்துக் கொண்டிருக்க, அவரின் மன உளைச்சல் காய்ச்சலை கொடுத்தது அவருக்கு.

                   பரமேஸ்வரன் பதறி போனவராக மருத்துவரை அழைத்து வந்து காண்பிக்க, காய்ச்சலுக்கு சிகிச்சை செய்து அவர் நகரவும் மகனைப் பிடித்தார் பரமேஸ்வரன். நான்கு வயது அபிநந்தனிடம் அன்று நடந்தது அனைத்தையும் அவர் கேட்டறிந்து கொள்ள, மனைவி ஆசிரமத்திற்கு சென்று வந்தது முதல் அந்த குழந்தைகள் வரை அத்தனையும் தெரிந்து போனது அவருக்கு.

                  அந்த நிமிடமே ஆசிரமத்திற்கு அழைத்தவர், அதன் நிர்வாகியிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார். கூடவே, மகனையும் தானே கவனித்தவர் அவனை உறங்க வைத்து படுக்கையில் கிடத்திவிட்டு மனைவியின் அருகில் அமர்ந்தார்.

                   “என்னம்மா.. என்ன சொல்றாங்க நம்ம பேபி..” என்று அவர் தொடங்க, அவரின் தோள் சாய்ந்து கொண்டவர் அழ ஆரம்பித்தார். பரமேஸ்வரன் “என்ன வேணும் ரேகா.. நீ என்ன சொன்னாலும் செய்ய நான் இருக்கேனேடா… அப்புறம் எதுக்காக அழணும்… நீ நினைக்கிறதை சொல்லு..” என்று அவரை தேற்ற

                  தன் கணவரின் புரிதலில் அப்படி ஒரு ஆறுதல் ரேகாவிற்கு. “என்னால முடியவே இல்லப்பா.. நம்ம பாப்பா எனக்குள்ள இருக்க இந்த நேரத்துல, இப்படி அந்த குழந்தைகளை பார்க்கவும்…. எனக்கு அந்த குழந்தைங்க வேணும்ப்பா… நான் வளர்த்துகிறேன்… நீங்க ஏதாச்சும் பண்ணுங்களேன்..” என்று அவர் கண்ணீர் விட

                 “ரேகாம்மா.. நீ என்கிட்டே சொல்லிட்ட இல்ல… அப்புறம் ஏண்டா அழுகை.. உனக்கு என்ன??.. அந்த பிள்ளைகள் ரெண்டு பேரும் வேணும்.. அவ்ளோதானே.. நாளைக்கே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவோம்.. போதுமா… நான் ஏற்கனவே அசிரமத்துல பேசிட்டேன். முறைப்படி என்ன செய்யணுமோ அதை செய்யலாம்… நீ உடம்பை கெடுத்து வைக்காத..” என்று அக்கறையாக கூறினார் பரமேஸ்வரன்.

                 முன் எப்போதையும் விட, கணவர் மீது அந்த நொடி காதல் பெருக, கணவரின் கன்னத்தில் முத்தமிட்டவர் அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டார். சொன்னது போலவே, அடுத்த ஒரே வாரத்தில் தேவையான ஏற்பாடுகளை முடித்து சட்டப்படி அந்த குழந்தைகள் இருவரையும் பரமேஸ்வரன்- ரேகா தம்பதிகள் தத்தெடுத்துக் கொள்ள, அந்த இருவரும் அபிக்கு இளையவர்களாகிப் போயிருந்தனர்.

                   நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தாலும் கூட, கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் மகன்களின் பின்னால் சுற்றி வரும் ரேகா, அபிநந்தனுக்கும் அந்த குழந்தைகளை தம்பிகள் என்றே பழக்கினார். அவனும் அன்னைக்கு ஏற்ற மகனாக இருக்க, இருவரிடமும் பாசமாகவே இருப்பான்.

                  அபிநந்தனுக்கு உரிய முக்கியத்துவம் எந்த இடத்திலும் குறையாமல் அவனை முதன்மையானவனாகவே நிறுத்தி, அவனை கொண்டே மற்ற இருவருக்கும் அனைத்தையும் செய்ய வைப்பார் ரேகா. ஸ்ரீகா பிறந்த பின்னும் இதுவே தொடர, அத்தனை பேருக்குமே எது தேவை என்றாலும், முதலில் அபி அண்ணனிடம் தான் வந்து நிற்பர்.

                 பரமேஸ்வரனும் பிள்ளைகள் விஷயத்தில் வேறுபாடு காட்டாமல் போக, வீட்டில் பெரியவர்கள் என்று யாரும் இல்லாததும் ரேகாவின் செயல்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. தன் நடனப்பள்ளி, பிள்ளைகள் கணவர் என்று அவர் சுழன்று கொண்டிருந்தார் அவர்.

                 அபிநந்தனை முதலில் பள்ளியில் சேர்க்க, பின் ஒருவர்பின் ஒருவராக பிள்ளைகள் நால்வரும் அதே பள்ளி என்றாகிவிட, அங்கேதான் அவர்களுக்கு பழக்கமானான் சர்வா. அபிநந்தன் நான்காம் வகுப்பில் இருக்க, துருவன், அறிவழகன், சர்வா மூவரும் ஓன்றாம் வகுப்பு.

                 தானும் பள்ளிக்கு சென்றே தீருவேன் என்று அடம்பிடித்த ஸ்ரீகா, LKG யில் சேர்த்தப்பட்டு இருந்தாள். இதில் அறிவனுடன் தான் இருப்பேன் என்று பாதி நேரம் அடம் பிடித்தாவது அவன் வகுப்பில் சென்று அமர்ந்து கொள்வாள். அவன் வகுப்பில் இருக்கும் பிள்ளைகள் மொத்த பேருக்கும் இந்த அடாவடி ராணியை தெரிந்தே இருக்க, சர்வாவுக்கு எப்போது பார்த்தாலும் அடம் பிடித்து அழும் அவளை வம்பிழுக்க தோன்றிக் கொண்டே இருக்கும்.

                  அவள் துருவன் மற்றும் அறிவனுடன் இருக்கும் நேரங்களில் அமைதியாக இருப்பவன், அவள் தனியாக இருக்கும் நேரம் அவள் இரட்டை குடுமியை பிடித்து இழுத்து விடுவது, அவள் கையில் கிள்ளி வைப்பது என்று ஏதாவது சேட்டை செய்தே கொண்டே தான் இருப்பான் அவளிடம். பொதுவாக அழுவது பழக்கம் இல்லாததால் அவனை முறைப்பாளே தவிர, அழமாட்டாள் ஸ்ரீகா.

                   அன்றும் அதுபோலவே, சர்வா அவளை மிரட்டியவன் அவளின் தலையில் இருந்த பேண்டில் கையை வைக்க, என்றும் இல்லாத திருநாளாக சத்தமாக தன் அழுகையை தொடங்கினாள் அவள. சர்வா பயந்துவிட்டவன் அவளை விட்டு பின்னால் நகர, அவனுக்கு பின்னே அவனை முறைத்து நின்றிருந்தான் அறிவன்.

                சர்வா அவனை கண்டுகொள்ளாமல் நகர, அவன் சட்டையை பிடித்து இழுத்தவன் “எதுக்குடா எங்க ஸ்ரீகாவை அடிச்ச..” என்று கேட்க, அவன் பதில் கூறுவதற்கு முன்பே அவன் வாயில் தன் குட்டைக்கையால் ஒரு அடி கொடுத்திருந்தான்.

                   அவன் அடித்ததில் சர்வா பொங்கிவிட, “என்னை ஏன்டா அடிச்ச… இடியட்..” என்று அவனும் சண்டையை தொடர, இடைவேளை நேரமானதால் இருவரும் சண்டையிட்டது ஆசிரியருக்கு தெரியவே இல்லை. துருவன் கழிவறைக்கு சென்று இருந்தவன் அப்போதுதான் வகுப்பிற்குள் நுழைய, அறிவனை சர்வா அடிப்பதைக் காணவும் பொங்கிவிட்டான் அவன்.

                  அறிவனின் மீது அமர்ந்திருந்த சர்வாவை பிடித்து கீழே தள்ளியவன் அவனை அடித்து விட, அறிவனும் உடன் சேர்ந்து கொள்ள, இருவரும் சேர்ந்து தங்கள் கைவரிசையைக் காட்டியதில் நெற்றியில் ரத்தம் வடிந்தது சர்வாவுக்கு. அவன் அழுது கொண்டே நிற்க, அந்த நேரம் வந்த ஆசிரியர் சர்வாவிற்கு முதலுதவி செய்து அவனை விசாரிக்க, அழுது கொண்டே துருவனையும், அறிவழகனையும் கைகாட்டினான் சர்வா.

               ஆசிரியர் மூவரையும் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து சென்று நிறுத்த, தானும் வருவேன் என்று அப்போதும் அடம் ஸ்ரீகா. ஆசிரியர் அவளை அதட்டி மிரட்டி இரண்டு அடி கூட வைத்து பார்த்துவிட்டார். அப்போதும் அவள் துருவனின் கைய விடாமல் அழுது கொண்டே நிற்க, சலித்து போனவராக நான்கு பேரையும் இழுத்து சென்று தலைமை ஆசிரியர் அறையில் அமர்த்திவிட்டார்.

                     மதியம் உணவு நேரத்திற்கு அபிநந்தன் சிறியவர்கள் வகுப்புக்கு வர, அப்போதுதான் நடந்த கலவரங்கள் தெரியும் அவனுக்கு. அவன் தலைமையாசிரியர் அறைக்கு செல்ல, அங்கு ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தார் பரமேஸ்வரன். தந்தையை கண்டவன் அந்த அறைக்கு வெளியே காத்திருக்க, உள்ளே தன் பிள்ளைகளுக்காக வாதாடிக் கொண்டிருந்தார் பரமேஸ்வரன்.

Advertisement