Advertisement

அத்தியாயம் 23
வான் நிலவுக்கும் மின்னும் நட்சத்திரத்திற்கும் நிகராக, வண்ண விளக்குகளாலும் வாசல் தோரணங்களாலும் இளங்கதிர் வீட்டின் முகப்பு ஜொலித்துக் கொண்டிருந்தது. ஊரையே கூட்டி சிறப்பாக சந்திராவின் சீமந்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். 
ஆனாலும் அவ்விடம் கொண்டாட்டத்துக்கு மாறாக, அடர் இறுக்கமும் மெல்லிய சலசலப்பு சத்தத்தாலும் நிறைந்திருந்தது. கதிர் முகத்தில் தன் உடைமை, தனக்கு மட்டுமே உரிமை அதை விட்டு கொடுக்க முடியாது என்பது போன்ற உறுதியான பிடிவாதம்! ஆனாலும் உள்ளுக்குள் சிறு பயமும் தள்ளாடிக் கொண்டிருந்தது. 
அவனை விடவும் பிடிவாதமாக எதிரே நின்றிருந்தான் மனோ. வீட்டுப் பெரியவர்களுக்கு யார் பக்கம் பேசுவது, யாரைச் சமாதானம் செய்வது எனத் தெரியாது விழித்து நின்றது தான் மிச்சம்! 
“எப்பப்பாரு மல்லுக்கு நிக்கிறதே இதுகளுக்கு வேலையா இருக்கு, நல்ல மச்சான், மாப்பிள்ளைலே..” என சுற்றி நின்ற உறவுகள் எல்லாம், கேலியும் சலிப்புமாக விலகினர். 
இருவருக்கும் வாக்குவாதம் இதில் தான்! நாளை சீமந்தம் முடியவும் மனோகர் தங்கையைச் சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூற, மறுத்த கதிர் இத்தனை நாட்களை போலே இங்கே ஆச்சி வீட்டில் பெரியவர்களோடு இருக்கட்டும் என்றான்! 
தங்கள் வீட்டிற்குச் சந்திரா வந்து வெகு நாட்களாகிவிட்டது, அங்கு வர வேண்டும் அவளுக்கு நிறையச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆசையிலும் அண்ணனிருக்க, இந்த நிலையில் மனைவியும் பிறக்கவிருக்கும் மகவையும் பிரிந்திருக்க விருப்பமின்றி தவிப்போடு இருந்தான் கதிர். 
அப்போது தான் தகவல் அறிந்து முன் வந்து நின்ற நாராயணன், இருவரையும் ஒரே போல் கண்டிப்பான அதட்டல் பார்வை பார்த்தார். 
இருவரும் உறுதியாக நிற்க, “சந்திராவை வைச்சி நீங்க இரண்டு பேரும் ஏன்ல சண்டை கட்டிக்கிடுறீங்க? அவ இருக்க விரும்புற இடத்துல இருக்கட்டும், அது அவ விருப்பம். நீங்கப் போய் வேலையை பாருங்கலே” என்றார் முடிவாக. 
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் குற்றமாகப் பார்க்க, சுற்றியிருந்த அனைவரும் சிரிக்க, நாராயணன் தளர்வாய் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். 
நாராயணன் வீட்டில் உறவுக்கார பெண்கள் பூக்கட்டிக் கொண்டும்,  தாம்பூலப்பைகளை தயார் செய்து கொண்டுமிருந்தனர். சந்திராவின் அறையில் அவள் அண்ணி அர்ச்சனாவும் மாலதியும் ஆளுக்கொரு கையை பற்றிக் கொண்டு மருதாணி வைத்துக் கொண்டிருந்தனர். 
சரியாகக் கதிர் பால் கிளாஸ்சோடு உள்ளே வர, சந்திரா முறைக்க, மற்ற இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு கேலியாகச் சிரித்தனர். 
“இது மட்டும் கொஞ்சம் குடிச்சிடு வது, நீ பசி தாங்க மாட்டே” என்றவன் நிற்க, அவளோ பார்வையால் தன் கரம் இரண்டையும் சுட்டிக்காட்டினாள். 
அருகே இருக்கும் மேசையில் வைத்தவன், “மாலதி இதை உங்க அண்ணிக்குக் கொடு” என்க, அவளும் தலையசைத்தாள். 
அப்போதும் அவன் கிளம்பாமலே நிற்க, “அண்ணா இப்படி தவமா நிக்கிறதுக்கு நீயே கொடுத்திடு போ” என்ற மாலதி எழுந்தாள். 
அவளிடத்தில் அமர்ந்தவன், டம்ளரை எடுத்து சந்திராவிற்கு புகட்டிவிட, “ஆனாலும் தம்பி, பொண்டாட்டி மேல எப்படி அக்கறையா இருக்கணும்னு உங்களைப் பார்த்துத் தான் கத்துக்க சொல்லணும்” என மறுபுறமிருந்த அர்ச்சனா கேலி உரைத்தாள். 
சிறிதும் அசராதவன், “யாருக்கிட்ட அக்கா? மனோ மச்சான் கிட்டையா? சொல்லிட்டாப் போச்சு” என்றவனும் சிரித்தபடியே சந்திராவின் முகம் பார்த்தான். 
மூக்கு சிவக்க முறைத்தபடி,  “உங்களுக்கு வேற வேலையில்லையா? கிளம்புங்க..!” என்றவள், “அண்ணி கேலிச் செய்யாதிக” என்றாள் சிணுங்கலாக. 
மூவரும் சிரித்துவிட, அவள் மலர்ந்த முகம் பார்த்தபடியே வெளியே வந்தான் கதிர். 
வாசல் பந்தலின் கீழ் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி, கேசவன் அலைபேசியில் பார்வை பதித்திருக்க, இரு கைகளிலும் காபி கப்போடு வந்தமர்ந்த கருப்பட்டி அவனிடம் ஒற்றை நீட்டினான். 
அலைபேசியில் பேசியபடி வீட்டிற்குள்ளிருந்து வரும் கதிரை பார்த்தபடியே வாங்கியவர், “ஏன்டா கருப்பட்டி மச்சான் தான் பம்பரமா சுத்தி சுத்தி ஒத்தை ஆளா வேலை பார்க்கிறாரு, நீ கொஞ்சம் அவருக்கு ஒத்தாசை செய்யக் கூடாதா?” என்றான். 
“அட! நீ வேற மாமா! அவர் உண்ட சோறு செரிக்காமா வாசலுக்கும் மாடிக்குமா உருண்டுகிட்டு கிடைக்காரு, இதுல நான் வேற போய் குடை பிடிக்கணுமா?” என்றவன் சலித்துக் கொள்ள, “என்னடா சொல்லுத?” என்றான் புரியாமல். 
“இது கூட புரியலை நீங்க எல்லாம் கல்யாணம் கட்டி என்னத்த சாதிச்சீங்களோ? அவரு சுத்தி சுத்தி சந்திரா மதினியை பார்த்துட்டு வந்திட்டு இருக்காரு. இதுல நான் போய் என்ன ஒத்தாசை செய்ய?” என நொந்து கொண்டு காபியை உறிஞ்சினான். 
அவன் தோளில் தட்டிய கேசவன், “ஆனாலும் சும்மாச் சொல்லக் கூடாதுலே என் மச்சானை! நாம கேலி செஞ்ச மாதிரியே பத்தே மாசத்துல மொத்த மொய்யையும் வசூலிக்க, சிறப்பா சீமந்தம் வைச்சிட்டாரே!” என்றான் மகிழ்வாக. 
பொங்கிய சிரிப்பை அடங்கியபடியே, “அது சரி,  நம்ம வாக்கு தானே பலிச்சிருக்கு மாமா, அப்போ மொய் பணத்துல பாதி நமக்கு தானே?” என்றான்.
அதற்குள் நெருங்கி வந்திருந்த கதிர் அருகே அமர, “வாங்க மச்சான், வைச்ச மருதாணி காச்சிருச்சா?” என்றான் கேசவன்.
எதுகை மோனையான கேலியில் கருப்பட்டி பொங்கிச் சிரிக்க, “ஏலே! உன்னை சமையல்காரங்களை கவனிக்க தானேல சொன்னேன்? இங்க என்ன செய்யுத?” எனக் கதிர் முறைப்போடு அதட்ட, முணுமுணுப்போடு எழுந்து சென்றான் அவன். 
காலை நேரம், ரேவதி வீட்டில் அனைவரும் விழாவிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். குழந்தை பிறந்த போதே கதிர் வீட்டிற்கு அழைத்திருக்க, அன்னையை அழைக்காததால் அவள் இது நாள் வரை செல்லவில்லை. அதே நேரம் தன் மீதல்ல தனவதியின் மீது தான் ஏதோ மனத்தாங்கலில் உள்ளான் என்பதையும் புரிந்து கொண்டாள். 
இரு தினங்களுக்கு முன் வந்திருந்த இளங்கதிர், சீமந்தத்திற்கு தனவதியோடு அனைவரையும் அழைத்திருந்தான். இத்தனை வருடங்களாகத் தவறு செய்த உணர்வு மனதை அழுத்த, அவன் ஒதுக்கி வைத்த போது, தண்டனை என அவரும் ஒதுங்கிக் கொண்டார். யாரிடமும் தன்னை குற்றம்சாட்டாததில் குறுகி இருந்தவர், இன்று அவன் மீண்டும் அழைத்ததில், உடைந்து நொறுங்கினார். 
கரம் குவித்தவர், “மன்னிக்க முடியாது தப்பு தான் செய்துட்டேன், மன்னிச்சிடு ராசா!” என வேண்ட, “மறந்துடலாம் சின்னம்மா..” என்ற ஒரே வார்த்தையில் உடைந்த இருவரின் உள்ளங்களுக்கும் ஆறுதல் சொல்லிச் சென்றிருந்தான். 
அன்றிரவு தனவதிக்கு தூங்கமே வரவில்லை. கதிரே மறந்தாலும், தன் கணவரின் பிம்பம் கலங்குவதாய் தோன்ற, நீங்காத பாரம் நெஞ்சோடு அழுத்தியது. குலசேகரனோடு வாழ்ந்த வாழ்க்கை காட்சியாக விரிந்தது. 
தனவதி பிறந்தவீட்டில் ஆறு பெண்பிள்ளைகள்! மிகுந்த ஏழ்மையான குடும்பம்! வள்ளியம்மை மூலமாக குலசேகரனுக்குப் பெண் கேட்டு வந்த போது, சிறிதும் அவர்கள் வீட்டில் மறுப்புச் சொல்லவில்லை! தங்கள் பெண் செல்லும் இடத்தில் வசதியாக இருப்பாள் என்பதை விடவும் அவள் சென்று விட்டால் தங்கள் சுமை குறையும் தோள் தளரும் என்ற எண்ணத்திலே திருமணம் செய்து வைத்தனர். 
தனவதிக்கு அவர் பிறந்து வளர்ந்த சூழல் சிறிதும் பிடிக்காது, வேம்பாய் கசந்தது வறுமை! வசதியாக அல்ல, ஒரு நிலையான வாழ்வின் மீது ஏக்கமிருந்தது. திருமணம் முடிந்து வந்த நாளே குலசேகரின் வீட்டை ஒரு பிரமாண்டமாகப் பார்த்திருந்தார். எதிர் வீட்டில் வள்ளியம்மையும் அவர்கள் மருமகளும் உறவுப்பெண்களையும், அவர்கள் கழுத்தில் மின்னும் வைரமும் தங்கமும் மேனியைச் சுற்றியிருக்கும் பட்டையும் காண, தனவதி தன்னை தான் கீழாக நினைத்தார். 
உழைக்கும் குலசேகரன், வயதான தந்தை, வளரும் பிள்ளை என மூவர் மட்டுமே வீட்டில் இருக்க, பெண்ணான அவர் எதிர்பார்ப்பும் ஏக்கமும் யாருக்குமே புரியவில்லை! ஆரம்ப நாட்களில் குலசேகரனும் ஒட்டாமல் இருக்க, இங்கு வீட்டு வேலைக்கு மட்டும் தான் நான் தேவையாகிப் போனேனா! என்ற எண்ணம் தான். 
ஒருவேளை கதிரை பாசமாகச் சீராட்டினால் கணவரின் பார்வை தான் மீது திரும்புமோ என நினைத்து அதையும் முயற்சித்தார். குளிப்பாட்டி விடுகிறேன், தலைவாரி விடுகிறேன் என அருகே அழைத்தால் அவனோ நானே செய்து கொள்வேன் சின்னம்மா எனப் பெரிய மனித தோரணையில் விலகியோடு விடுவான். கதிரை தொட்டுத் தூக்கிக் கொஞ்சியதே இல்லை, கதிரிடம் அன்னை என்ற உணர்வை உணரவில்லை. 
அதே நேரம் வரதராஜன் மொத்த குடும்பமும் சென்னைக்கு குடியமர, சந்திரா சென்றதும் கதிர் ஏங்கிப் போனான். அவளை அனுப்பி அன்றே அழுது ஆர்ப்பாட்டம் செய்தவன் அதன் பின் வந்த நாட்களும் வாடியிருந்தான். 
அந்த நேரம் தான் கதிருக்காக பெண்பிள்ளை பெற்றுக்கொள்வோம் என்றே குலசேகரன் தனவதியை நெருங்கினார். குலசேகருனுக்கு தனவதியை நெருங்குவதிலிருந்த தயக்கம் மெல்ல அப்போது தான் விலக, தனவதியோ தன் ஆசைக்குப் பிள்ளை பெற்றுக் கொள்ளக் கூட அங்கீகாரம் அற்றுப் போனேனா என மறுகினார். ஒரு பாதுகாப்பின்மை உணர்வு மனதில் பாசியாய் படரத் துவங்கியிருந்தது. 
எதையுமே அவர் வாய்விட்டுச் சொல்லியிருக்கவில்லை. குலசேகரன் இறக்க, எதிர்காலம் எண்ணிய பெரும் பயம்! படிப்பறிவு கிடையாது, வெளியுலகம் தெரியாது, வாழ்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பயம்! மீண்டும் அந்த வறுமையான வாழ்க்கை மிரட்டியது. தாய் வீடுமில்லை ஆதரிப்பாரும் யாருமில்லை. 
கதிர் காப்பாற்றுவான் என்ற எண்ணவில்லை, கதிரை காப்பாற்றும் எண்ணமில்லை ஆகையாலே பணத்தை வாங்கியிருந்தார்! 
ஆனால் அன்று வராத வருத்தம், கதிர் குடும்பத்தையே தாங்குகையில் வந்தது. இருந்த போதும் தன் தவறை வெளிப்படுத்தும் தைரியம் அவருக்கு இருக்கவில்லை! 
ஒதுக்கி வைத்த சந்திரா கதிர் வாழ்வில் வருவாள் என்றோ அவளால் அத்தனை உண்மையும் வெளிவரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.  ஆனால் இன்று எல்லாம் நிகழ்ந்திருந்தது. 
அழகான விடியலில் ரேவதி, செந்திலும் அவர்கள் குழந்தையைத் தூக்கியபடி தனவதியும் வந்திருந்தனர். வீட்டில் வைத்துத் தான் சீமந்தம் சிறப்பாக நிகழ்ந்தது. 
ரேவதியும் மாலதியும் சந்திராவின் இரு கைகளைப் பற்றி தங்க வளை பூட்டினர். சந்திராவைக் குறைவாகப் பேசியதற்கு தனவதி மட்டுமல்லாது ஊரும் உறவும் பிரமிக்கும் அளவிற்கு சீர் செய்திருந்தார் வரதராஜன்.
சந்திராவின் உப்பிய கன்னங்களில் சந்தனமும் குங்குமமும் மின்ன, பேரழகு எனப் பார்த்து பார்த்து நெஞ்சு நிறையப் பூரித்து நின்றான் இளங்கதிர்.  
இடைப்பட்ட நேரத்தில் தனவதியை தனியாக அழைத்து வந்திருந்தாள் மாலதி. 
“அம்மா இது அப்பா கட்டின வீடு, இங்க இருக்க உனக்கும் உரிமை இருக்கு. அண்ணனை மட்டுமில்லாது சந்திராவையும் அவ குழந்தையுமே மனசார ஏத்துக்கிடணும் நீ, புரியுதா?” என்றாள் அறிவுரை போலே. 
நடந்த அத்தனையும் தெரியாத போதும், ஏதோ அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பது புரிய, அவள் அக்கறையில் சொல்லிய அறிவுரையை ஏற்றார். 
சந்திராவை மனதார வாழ்த்த, “என் புருஷனை வளர்க்காததுக்குச் சேர்ந்து வைச்சி என் புள்ளைய நீங்க தான் வளர்க்கணும்” என்றாள் மலர்ந்த முகமாக. 
இளகிய முகமாக பார்த்திருந்த கதிர் எதுவும் சொல்லவில்லை. அவள் வீட்டிற்கு அழைப்பது புரிய, நெஞ்சுருகிப் போனார். 
விழா முடிந்த அனைத்து உறவுகளும் கிளம்பி இருக்க,  சந்திராவின் முன் தான் தனவதியை அழைத்த கதிர் புதிதாகக் கட்டியிருக்கும் வணிக கட்டிடத்தின் பத்திரத்தை அவர் கையில் வைத்தான். அவர் பதறிப்பார்க்க, “இனி நானே இல்லாட்டியும் ஒரு நாளும் உங்களுக்கு எதிர்காலத்தை நினைச்சி பயம் வேண்டாம் சின்னம்மா! வாங்கிக்கங்க” என்றான். அவரோ மறுக்க, சந்திரா வாங்கிக்கொள்ளச் சொல்ல, பெண்பிள்ளைகளும் அதைத் தான் சொல்லினர். மனதோடு குடும்பமும் நிறைந்திருந்த உணர்வு! 
மனோ மட்டும் அவன் மனைவி பிள்ளைகளோடு கிளம்பி இருந்தான். அத்தனையும் சரி செய்து விட்டு, இரவு நேரம் வீடு திரும்பிய கதிர், நேராக எதிர்வீட்டிற்குத் தான் சென்றான். 
சந்திராவின் அன்னையும் தந்தையுமே வரவேற்பறையில் இருக்க ஒரு சிறு புன்னகையில் சமாளித்தவன் அவள் அறை நோக்கிச் சென்றிருந்தான். பார்த்திருந்த வரதராஜன், கலைவாணி தம்பதியினருக்கு மனம் நிறைந்த உவகை! எங்கே ஆகாத பகையைக் கதிர் மனதில் வைத்துக் கொள்ள, மகளின் வாழ்வு வீணாகிவிடுமோ என்ற பயமெல்லாம் தற்போது வீணாகியது!
அவன் உள்ளே செல்ல உறங்காமல் அமர்ந்திருந்தவள், “நினைச்சேன், இதுக்கு தான் என்னை இங்க இருக்கச் சொன்னீங்களா?” என்றாள். 
சத்தமில்லாத சிரிப்போடு அவன் அருகே அமர, “ஆமா மனோவை எப்படிச் சரி கட்டுனீங்க?” என்றாள் சுவாரஸ்யமான எதிர்பார்ப்போடு. 
இன்னும் பெரிதாய் சிரிப்பு விரிய, “அதுவா இப்போ ஆறுமாசம் இங்க இருக்கட்டும், குழந்தை பிறக்கவும் அடுத்த ஆறுமாசம் சென்னைக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொன்னேன். சரியான இளிச்சவாயன் அதை நம்பிட்டான்..!” என்றான். 
மறுநொடி மூக்குச் சிவக்க, முறைப்போடு அவள் அடிக்க, சுகமாக வாங்கியவன், பின் மெல்லியதாக அணைத்தான். 
அதில் அடங்கியவள், “இப்படி வளைகாப்பு போட்டு அனுப்பி வைச்சிட்டு கொஞ்ச நேரத்துலையே பின்னாடி நீங்க வந்தீங்கன்னா என்ன அர்த்தம்?” என்றாள் சுகமாக அவன் மார்பில் சாய்ந்தபடி. 
காலையிலிருந்தே ரசித்திருந்த அழகு முகத்தை நிமிர்த்தி முத்தமிட்டபடி, “ஒரு நிமிஷம் கூட உங்களை பிரிஞ்சி இருக்க முடியலைன்னு அர்த்தம்..! உனக்கு எப்படி?” என்றான் காதலாக. 
வார்த்தையின்றி அதே காதலைப் பார்வையில் அவன் பைங்கிளி மொழிய, தீராத நேசத்தோடு அள்ளி அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சினான். 
*சுபம்*

Advertisement