Advertisement

அத்தியாயம் 22
இருவரும் உள்ளே வர, வீட்டில் யாருமே உறங்கவில்லை. முன் வாசலில் நுழைகையிலே மனோ சிறிது தடுமாற, சட்டென கதிர் கையை பற்றி நிலையாக நிறுத்தினான். 
“மலை ஏறத் தான் மச்சான் தயவு வேணும்னு சொல்லுவாக, எனக்கு வாசல் படி ஏறவே உன் தயவு வேண்டியதா இருக்கு பாரு. எல்லாம் என் நேரம்ல!” என்ற புலம்பலோடு உள்ளே சென்றான். 
கதிரின் சட்டையில் இரத்தத்தையும் மனோவின் தலையில் கட்டையும் காண, பதறிப்போனாள் சந்திரவதனி. 
தன் கோபம் மறந்து, “என்னலே? அவரோட சண்டை போட்டியா?” என அண்ணனிடம் பாய்ந்து கொண்டு வர, வெளிப்படாத சிரிப்போடு அவள் கரம் பற்றி அருகே இழுத்துக் கொண்டான் கதிர். 
“ஆமாம், சண்டை போட நாங்க என்ன இன்னும் ஸ்கூல் பிள்ளைகளா?” என மனோ கேட்க, “அப்படி சண்டை போட்டுக்கிட்டாலும் மறுநாளே மச்சான், மாப்பிள்ளைன்னு கூடிக்கிடுவோம்! உனக்குக் கவலை வேண்டாம் சரியா?” என்றான் கதிர், மெல்லிய நகையோடு. 
என்னடா நடக்குது இங்க? என்றெண்ணத்தில் ஒரு நொடி, எட்டாவது அதிசயம் போலே மெய் மறந்து சந்திரா பார்த்திருக்க, வள்ளியம்மையும் வந்து அதைத் தான் விசாரித்தார். 
“ஒன்னுமில்லலை ஆச்சி, வர வழியில சின்ன விபத்து அவ்வளவு தான்..” என மனோ உரைக்க, நம்ப இயலாது அவன் முன்னே ஓடி வந்து நின்று, முகத்தை உற்றுப்பார்த்தாள் சந்திரா. 
முறைத்தவன், “அதான் உன் புருஷன் புல்லட் பாண்டி, சிலம்பம் மாஸ்டர்! வண்டியிலே கம்பை சொருக்கிட்டு சுத்துதானே, அப்புறம் என்னலே பயம்?” எனக் கேலி போலே சொல்லியவன் அவள் தலையில் கொட்டிவிட்டு விலகி நடந்தான். 
“ஏய்! மாமா உனக்கும் தான் சொல்லித் தந்தார். நீ தான் ஒழுங்கா கத்துக்கிடலையே..” என நொடிந்து கொண்டவள் கதிரை நோக்கி நடந்தாள். 
மனதில் அண்ணன் கதிரை கேலி செய்தானா? பாராட்டினானா? என்ற ஆராய்ச்சி! பொதுவாகக் கதிரை யார் பாராட்டினாலும் மனோவிற்கு பிடிக்காது, பின் எவ்வாறு அவனே பாராட்டுவான் என்ற எண்ணம்!
இருவரும் விடைபெற்று அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அறைக்குள் வந்திருந்த கதிர் குளிக்க நினைத்து சட்டையை கழற்றிக் கொண்டிருக்க, உள்ளே வந்த சந்திரா அவனைத் தொட்டுத் தடவிச் சுற்றி வந்து கண்களால் ஆராய்ந்தாள்.
முன் வந்தவளை இழுத்து அணைத்தவன், “நான் நல்லா தான் இருக்கேன்” என்றான் ஆறுதலாக. 
நெஞ்சில் புதைந்து கொண்டவள், “யாரு சேர்மமூர்த்தியா..?” என்றாள். 
“இல்லை அரவிந்தன்” என்றான் மறுப்பாகத் தலை அசைத்தபடி. சந்திரா பெரும் மௌனத்திலிருக்க, அவள் முகம் உயர்த்திப் பார்க்க, விழி இரண்டும் நீர் தேங்கி இருந்தது. மெல்ல இதழ் பிரித்தவள், “பயமா இருக்குங்க..” என்றாள். 
அணைப்பிலே அவள் உள்ளம் அறிந்தவன், இமை மூடித் திறந்து கண்ணசைத்து, “ஜாக்கிரதையா இருக்கேன்” என்றான் நம்பிக்கையூட்டும் வாக்குறுதியாக.
தந்தை இல்லாது அவன் கொண்ட கஷ்டங்கள் எல்லாம் இன்னும் நினைவிலிருந்தது. சந்திராவும் வரவிருக்கும் வாரிசும் அவன் உயிரினும் மேல்! ஆக இன்னும் எச்சரிக்கையாக தானிருந்தான். 
அதே நேரம் இன்னும் அனுப்பிய ஆட்கள் கதிரோடு வரவில்லை என அரவிந்தன் கத்திக் கொண்டிருந்தான். அவனின் அலைபேசி அழைப்புகளை அவர்கள் ஏற்காமல் நிராகரிக்க, போதையிலும் டென்ஷனிலும் தள்ளாடிக் கொண்டிருந்தவன் நொடியில் கால் இடறி கீழே விழுந்திருந்தான். பள்ளத்தில் சறுக்கி, முட்புதரிலும் விழ, மீண்டும் அதே காயத்தோடு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
சந்திரா, நாராயணன், மனோ மூவருமாகச் சென்று திருநெல்வேலி மாவட்ட நீதி மன்றத்தில் தங்கள் நிலத்தை மீட்டுத் தர வேண்டி வழக்குப் பதிவு செய்து வந்தனர். 
சிறிது நாட்கள் சந்திராவோடு இருந்து கவனித்துக் கொள்வதாக வள்ளியம்மை கேட்க, நாராயணனும் இங்கு இருக்கவே பிரியப்பட்டார். வழக்கு விசாரணைகள் வேறு வரும் என்பதால் அலைச்சல் வேண்டாமென்ற எண்ணத்தில் விட்டுட்டு கதிரிடம் விடைபெற்று மனோ மட்டும் சென்னை திரும்பினான். 
பகலில் வேலையாளும் ஆச்சியும் கவனித்து கொள்ள, இரவில் கதிர் தாங்கிக் கொள்ள, அதிகப்படியான வாந்தி, அசதி இருந்த போதும் சமாளித்தாள் சந்திரா. பெரியவர்களுக்குச் சுமை வேண்டாமென மேலும் ஒரு வேலையாள் வைத்த கதிர், இரு வீட்டுத் தேவைகளையும் அவனே கவனித்தான். 
சந்திராவிற்குள் பெரும் பயமும் யோசனையும்! சுகமாக அனுபவிக்க வேண்டிய பொழுதுகள் எல்லாம் பயத்தில் கழிய, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாள். 
அந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றவள், தென்னரசுவின் வீட்டிற்குச் சென்றாள். அவள் நேரம் அன்று அவர் வீட்டில் இருக்க, இன்முகமாக வரவேற்றார். கல்யாணம் முடிந்த போதே விருந்திற்கு அழைத்திருக்க, கதிர் தான் வேலை இருக்கிறது என நழுவிக் கொண்டிருந்தான். 
பொதுவான நலம் விசாரிப்புகள் முடிய, சேர்மமூர்த்தியால் தனது மாமாவிற்கு நிகழ்ந்த பிரச்சனைகள் தொடங்கி தற்போது அரவிந்தனால் கதிருக்கு வந்த ஆபத்து வரை அனைத்தையும் உரைத்தாள். அதிலே அவள் பயத்தையும் அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நாராயணன் சொல்லியதாலே முதலில் கதிரை வேலைக்குச் சேர்த்துக் கொண்ட தென்னரசுவிற்கு அதன் பின் அவன் கடின உழைப்பும் புத்திக்கூர்மையும் வெகுவாக பிடித்துப் போனது. அதிலே அவர் தட்டிக்கொடுக்க, அவன் மேலும் மேலும் வளர்ந்தான். எப்போதும் அவன் மீது மகனுக்கு நிகராகனதொரு தனிப்பாசம்! 
“இதை ஏன்மா இத்தனை நாளா எங்கிட்ட சொல்லலை?” என்றவர் வருத்தம் தெரிவிக்க, “இத்தனை நாளா இல்லாத பயம் இப்போ தான் வந்திருக்கு அங்கிள்” என்றாள் மெல்லிய குரலில். 
உடன் இருந்த தனவதியின் உண்மை உருவமே இத்தனை நாளாக தனக்குத் தெரியவில்லையே என்ற வேதனை மனதில். 
“நான் செய்து வைத்த கல்யாணம்! உங்க வாழ்க்கை நல்ல விதமா அமைச்சிக் கொடுக்கிறதும் என் பொறுப்பு” என்றவர் நம்பிக்கை தரவுமே நிம்மதியுற்றவள், விடைபெற்றுக் கிளம்பினாள். 
ரேவதிக்கு ஒன்பதாவது மாதம் துவங்கி இருந்தது. ஏழாம் மாதத்திலிருந்தே வளைகாப்பு பற்றி அண்ணனிடம் விசாரிக்கும்படி தனவதியை அரித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவர் இது பற்றி எதுவும் வாய் திறக்காது போக, ரேவதி ஒரு புறம் ஏமாற்றம் மறுபுறம் பெரும் வியப்பு! 
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பது போல் நாளாம் நாளே தனவதிக்கு கசந்துவிட்டது! ரேவதி அவ்வளவு வேலைகளையும் அவரிடமே தள்ளிவிட்டு சோம்பி இருந்தாள். 
ரேவதியின் ஆசை தான்! அதற்காக எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் தன் மகளுக்கு விழா வைக்கக் கேட்க? கூனிக் குறுகி ஊமையாகித் தான் நின்றார். 
இத்தனை மாதங்களில் அவர்கள் தேவைகளில் சிறிதும் குறை வைத்ததில்லை கதிர். மாத மாதம் குடும்ப தேவைகளுக்கான அனைத்தையும் அனுப்பி,  தனவதிக்கு என்று தனியாகப் பணமும் அனுப்பி வைத்து விடுவான். நெல்லு இரைத்த நீர் புல்லுக்கும் என்பது போல் அவர் தயவில் தம்பதிகளும்  சுகமாக வாழ்ந்தனர். 
“என்னம்மா நீ பாட்டுக்குச் சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இங்க கிடைக்குத? அங்க அண்ணன் அவன் பொண்டாட்டி வீட்டு ஆளுகளை வைச்சி கொண்டாட்டிட்டு இருக்கானாம்!” என தன் தோழிகள் மூலம் விசாரித்திருந்த தகவல்களை ஆதங்கமாகக் கொட்டினாள். 
“அதுல என்ன தப்பிருக்கு? உன்னை கவனிச்சிக்க நான் வந்திருக்க மாதிரி, சந்திராவை கவனிச்சிக்க அவ வீட்டு ஆளுக வந்திருப்பாக!” என்றார்.
“அதுக்குன்னு அப்படியே விட முடியுமா?” 
“கதிர் என்ன செய்தாலும் அது சரியா தானிருக்கும்” என்றவர் அதற்கு மேல் அவள் பேச்சைக் கண்டு கொள்ளவில்லை. 
ரேவதிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான பணத்தை மட்டும் கொடுத்தனுப்பியவன், தனக்கு வேலைப்பளு அதிகம் என்றும்  அவர்களையே செய்து கொள்ளும்படியும் சொல்லிவிட்டான். இதைச் சற்றும் எதிர்பாராதவள் அப்போது தான் அண்ணன் ஏதோ தங்களை ஒதுக்குகிறான் என்பது வரைப் புரிந்தது. 
ரேவதியின் சீமந்தத்தைச் சிறப்பாக நடந்த வேண்டுமென்ற கதிரின் ஆசைகள் எல்லாம் நினைவில் வர, தனவதிக்கு மனம் வலித்தது. தன்னால் தானே தன் மகளுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரங்கள் கூட கிடைக்காது போது என  விம்மினார். நாளாக நாளாக எடை கூடிய குற்றவுணர்வு மனதில் பெரும் பாரமாக அழுத்தியது. அது உடலையும் உருக்க, நலிவுற்றார். 
சேர்மமூர்த்தியின் அலுவலகம் சென்று சந்தித்த தனவதி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கொடுத்த பணத்தை அப்படியே திரும்பிக் கொடுத்துவிட்டு வந்தார். தள்ளாடும் வயதில் தாங்கும் கரங்களுக்கு மனம் ஏங்கியது. கணவர் கொடுத்து விட்டுச் சென்ற நிழலில் உறவுகளோடு ஒன்றாக வாழும் ஆசை வந்தது. 
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கி இருக்க, கதிரின் எதிர்பார்ப்பு போலே அவ்விஷயம் சுற்று வட்டாரம் எங்கும் பரவியது.  சேர்மமூர்த்தி சார்ந்திருந்த கட்சியில் இந்த முறை நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான இடம் தர மறுத்து விட்டனர். 
அதிலே நொந்து போயிருக்க, அடுத்த அடியாக வருமான வரித்துறையின் திடீர் சோதனையில் தனவதி கொடுத்துவிட்டுச் சென்ற பணத்தால் சிக்கினார். அதே நேரம் மாமனார் பழனிச்சாமியின் குவாரிகளிலும் சோதனை நடக்க, சட்டத்துக்கு புறம்பாக அதிகப்படியான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அதுவும் அரசால் மூடப்பட்டது. 
மொத்த வருமானத்தில் பெரும் பகுதி அதிலிருந்து கிடைப்பதே! இப்போது மொத்தமாக முடங்கி விட, வாழ்வாதாரமே சறுக்கியது! 
இருவரும் நொறுங்கிப் போய் தான் அமர்ந்தனர். எப்படி நிகழ்ந்தது? யார் செய்தது? என எதுவும் தெரியவில்லை. விசாரித்த வரை கதிருமில்லை, கதிராக இருந்திருந்தால் நேருக்கு நேராகத் தான் மோதுவான் என நன்கு அறிவர்! அப்படியாக இருந்தாலும் இனி எதிர்க்கும் பலம் இப்போதில்லை, முற்றிலும் துணிவு இழந்திருந்தனர். 
ரேவதிக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. கதிருக்குத் தாய்மாமனாகிவிட்ட சந்தோஷம்! விஷயம் அறிந்ததுமே மனைவியோடு மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து,  குழந்தையும் கொஞ்சினான். 
ரேவதி, “நான் என்ன அண்ணா தப்பு செய்தேன்?”  என வறண்ட உதடுகள் துடிக்கக் கேட்க, ஒரு நொடி தனவதிக்கும் கதிருக்கும் சுருக்கென்று குத்தியது. 
மௌனமாக   அறையிலிருந்து வெளியேறி விட்டார் தனவதி. வந்ததிலிருந்து ஒரு வார்த்தை என்ன, ஒரு பார்வை கூட அவரை நோக்கி அவனிடமிருந்த செல்லவில்லை. 
அவள் தலை தடவியவன், “அது அப்பா வீடு! உனக்கும் உரிமை இருக்கு, நீ தான் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போன..” என்க, “எனக்கு சந்திராவை பிடிக்காதுன்னு இல்லை, அவள் குடும்பத்து மேல இருக்கிற கோபம் தான். அதுவும் உனக்கு அவளை பிடிக்கும்னா எனக்கு அவளை ஏத்துக்கிடுறதுல எந்த வித தயக்கமுமில்லை” என்றாள். 
கை கால்கள் அசைய, தன் கரத்தில் ஆசையும் குழந்தையை இமைக்காது பார்த்திருந்தவன், “உடம்பு தேரவும் மாப்பிள்ளை, பிள்ளையோட வீட்டுக்கு வாடா” என்றான். 
குழந்தையின் உச்சி முகர்ந்து முத்தமிட்டவன், விடைபெற்று வெளியே வந்தான். அறைக்கு வெளியே அது வரையிலும் தனவதியோடு பேசிக் கொண்டிருந்த சந்திராவும் உடன் கிளம்பினாள். 
சந்திராவிற்கு எதையும் மனதில் வைக்கத் தெரியாது அத்தனையும் அவனிடம் உளறிக் கொட்டி விடுவாள். ஆனால் இப்போது ஏனோ மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்து பெரும் அமைதியா இருந்தாள்.
மாலதி ஒருமுறை வந்து சென்றிக்க, அவள் பெற்றோர்கள் அடிக்க பார்க்க வருவதுண்டு! இப்போதும் அவர்கள் வந்திருக்க, முழுதாக பாட்டி வீட்டில் தான், இரண்டு நாட்களாக அவனைச் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.  உறங்கும் நேரம் மட்டுமே வீட்டிற்கு வருவாள், அதற்குள் அவன் தான் அவளுக்காக ஏங்கியிருந்தான். 
அன்று படுக்கையில் மெல்லியதாக அணைத்து படுத்திருந்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்திருந்தான். 
“அன்னைக்கு ஹாஸ்டலில அத்தைகிட்ட என்ன பேசுனேன்னு கேட்க மாட்டீங்களா?” என்றவள் ஆரம்பிக்க, “நீயே சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன், ஆமா என்ன சொன்னாங்க?” என்றான். 
“சொல்லுதேன், அது சரி நீங்க ஏன் அத்தையை சின்னம்மானு சொல்லுதீங்க?” 
வேகவேகமாக, “அவங்க எனக்குச் சின்னம்மா தானே..?” என்றவன் ஒரு நொடி நிதானத்திற்குப் பின், “எங்க தாத்தா அப்படி தான் சொல்லிக் கொடுத்தார். அவங்க வரும் போது எனக்கு ஆறு வயசு, ஓரளவுக்கு நல்லாவே விவரம் தெரியும். அது வரைக்கும் என்னை எங்க ஆச்சி தானே வளர்த்தாங்க, அம்மான்னு கூப்பிடலையே தவிர மனசுல அம்மாவா தான் நினைச்சேன். ஆதானல தான் அவங்க செய்ததை என்னால தாங்கிக்க முடியலை! அதே நேரம் அவங்களை விலக்கி வைச்சாலும் செய்ய வேண்டிய கடமைக்கு செய்யுறேன்” என்றான் கசங்கிய முகத்துடன். 
ஆறுதலாக அவன் கரம் பற்றியவள், “இது தான் அவங்களும் சொன்னாங்க. அவங்களுக்கு தேவையானது மட்டும் செய்யுற நீங்க அவங்க முகம் பார்த்துக் கூட பேச மாட்டேங்கிறீங்களாம்! உங்ககிட்ட மன்னிப்பு கேட்கக் கூட முடியாம குறுகி நிக்கிறாங்களாம். அவங்களை ஒதுக்கி வைச்சிடீங்கன்னு வருத்தப்பட்டாங்க” என்றாள் எதையும் மறைக்காது, மிகைப்படுத்தாது. 
“என்னைய விடவும் காசு தான் முக்கியம்னு நினைச்சி இருக்காங்க, அதான் இப்போ அந்த காசை மட்டும் கொடுக்கிறேன்” 
அவள் மெல்லியதாக முறைக்க, “ஆனாலும் எங்க அப்பா இழப்பை விலை பேசி அந்த காசுல தின்னு தான் நாங்க உயிர் வாழணுமா? என்னை எப்படி எல்லாம் வளர்த்தாங்க தெரியுமா? இப்போ யோசிச்சா பழிக்குக் கொடுக்கிற ஆடுங்கிறதால பாசமா வளர்த்துட்டாங்க போல..” என்றான். 
“ஏன் அப்படி செய்தாங்கன்னு யோசிக்க மாட்டேங்களா?” 
“எங்க அப்பா இழப்புக்கு ஒரு நியாயம் கிடைக்கலைன்னு எவ்வளவு வருந்தியிருக்கேன் தெரியுமா? அதை விடவும் காசு தான் பெருசுன்னு அவங்க வாங்கி இருக்காங்கன்னா என் மேல நம்பிக்கை இல்லாம தானே?” 
“இல்லை, அந்த நம்பிக்கை நீங்க அவங்களுக்கு கொடுக்காததால!” 
“என்ன..?” 
“அவங்க ஏன் அப்படி செய்தாங்கன்னு யோசிங்க, உங்க பக்கம் தான் ஏதோ தவறு இருக்குன்னு தோன்றும்! அவங்க ரொம்ப பாதுகாப்பின்மையா உணர்த்திருக்காங்க, எதிர்காலத்தை நினைச்சி பயந்து இருந்திருக்காங்க..!” 
 “அது எப்படி எங்க அப்பா இல்லைனா நான் விட்டுடுவேனா? அவங்க தானே என்னை வளர்த்தாங்க? அவர் மேல இருந்த நம்பிக்கை என் மேலையும் இருந்திருக்கணுமே!” 
“ஆனால் அவங்களுக்கு தான் மாமா மேலையே நம்பிக்கையில்லை போல! இந்த வீட்டுக்குக் கல்யாணம் செய்து வந்த நாள்ல இருந்தே ஒரு இன்செக்யூர்பீல்ல தான் இருந்திருக்காங்க போல” 
“வ்வாட்? ஏன்? நாங்க ஒரு போதும் அவங்களை வித்தியாசமாக நடத்துனதே இல்லையே!” 
“இல்லை, நீங்க எப்பவுமே மாமாவை உங்களோட அப்பானு நினைக்கிற அளவுக்கு அவங்களுக்கு கணவர் நினைக்கலையே! இதே தப்பைத் தான் மாமாவும் செய்திருக்கார்” 
“இல்லை அப்பா அப்படியெல்லாம் இல்லை, சின்னம்மா மேல பிரியமா தான் இருந்தார். அவங்களுக்குத் தேவையான எல்லாமே செய்தார்”
“இல்லைங்க, பூவோ புடைவையோ ஒரு பொண்ணோட மனசை நிறைக்காது. தன்னவன் கிட்ட மொத்த உரிமையும் தனக்கென்னு எதிர்பார்க்கும், இல்லை கொடுக்குற அன்புல தனக்கான தனித்துவத்தை தேடும். 
ஏங்க மாமாவுக்குத் தான் இது இரண்டாவது கல்யாணமே தவிர, அவங்களுக்கு இது முதல் கல்யாணம் தானே? எத்தனை எதிர்பார்ப்பு இருந்திருக்கும்?” 
“புரியுது வது, ஆனால் எனக்கு நல்லா தெரியும் எத்தனை வருஷம் பார்த்திருக்கேனே! அப்பாவுக்குச் சின்னம்மா மேல ரொம்ப பாசம்!” 
சலிப்போடு, “ம்ச்.. இருக்கலாம்ங்க, மாமா தான் எல்லார் மேலையும் அன்பா இருப்பாரே! அந்த அன்பை அவங்க மனசுக்குள்ள தரவரிசை செஞ்சு பார்க்கும் போது மகனுக்குப் பிறகு தான் மனைவின்னு தோன்றியிருக்கலாம். பிள்ளைகளுக்காகத் தான் நானான்னு தோன்றி இருக்கும், அது அவங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கலாம், இல்லை எந்த நேரமும் நம்மை கை விட்டுடுவாங்களோன்னு பயத்தைக் கொடுத்து இருக்கலாம்! ஏதோ ஒரு வகையில அவங்க பாதுகாப்பின்மையை உணர்ந்திருக்காவ, அதை நீங்க புரிஞ்சிக்காமலே விட்டுட்டீங்கலே!” என்றாள் ஆதங்கமாக.
“அது எங்க தப்பு தானோ?” என்றவனுக்கு குரலே உள்ளிறங்கியது. மனமும் அவன் தவறு என்றே குத்தியது. 
அவன் முகம் பார்த்திருந்தவள், “மிரட்டலுக்குப் பயந்து வாங்கிட்டாங்களே தவிர, இது நாள் வரைக்கும் அந்த பணத்தை அவங்க பயன்படுத்தவேயில்லையாம். அதற்கான தேவை வரவேயில்லை அந்த அளவுக்குக் கதிர் எங்களை நல்லா பார்த்துக்கிட்டான்னு சொன்னாங்க. பிள்ளைகள் ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்க பாசத்தால தான் குடும்பம் பிரியாம இருந்தது. இப்போ அந்த பணத்தை சேர்மமூர்த்திகிட்ட திரும்பிக் கொடுத்துட்டாகளாம்! அவக செய்தது தப்புன்னு இப்போ உணர்ந்துட்டாங்க” என்றாள். 
கதிர் எதுவும் பதில் பேசவில்லை. இன்னமும் அவன் மனம் சமாதானம் அடையவில்லை.
நிலையான உறவு, நீங்காது நான் இருக்கிறேன் என்பது போல் மெல்ல நெருங்கிப் படுத்து அவனை ஆறுதலாய் அணைத்தாள். மேட்டிட்ட வயிற்றைப் பார்த்திருக்க, “மன்னிக்க முடியலைனாலும் மறக்க முயற்சி செய்யுங்க..” என்றவள் உரைக்க, தலையசைத்தவன் விழி மூடினான். 
காலங்கள் காயங்கள் ஆற்றும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் ஊறியது! 
 

Advertisement