Advertisement

அத்தியாயம் 21.2
தூத்துக்குடியில் மாமனார் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார் சேர்மமூர்த்தி. சரியா வெளியே சென்றிருந்த மாமனார் பழனிச்சாமியும் அரவிந்தனும் வந்தனர். 
“வாங்க மாப்பிள்ளை..” என்றவர் வரவேற்க, “நான் ஒன்னும் விருந்து கொண்டாட வரலை மாமா. பிரச்சனையில வந்திருக்கேன்” என்றார் இழுத்துப் பிடித்த மூச்சோடு. 
அவர் என்னவென்று விசாரிக்க, ஊரில் நேற்று நடந்த அனைத்தையும் தெரிவித்தவர், “இப்போ நாராயணனும் வந்துட்டாரு. சும்மா மிரட்டினா அந்த புள்ளை சந்திரா பயந்து பம்மிடுவாங்கன்னு நினைச்சேன். இப்போ கதிரும், நாராயணன் வந்திருக்காங்க” என்றார். 
“இப்போ பஞ்சாயத்துல என்ன சொல்லுறாக?”
“அவக தான் பஞ்சாயத்துக்கே வரலைன்னு சொல்லுதாகலாம், கோர்ட் போற முடிவுல இருக்காவ போல! கோர்ட்கு போனா என் கையில இருக்கிற பத்திரம் திருத்தம் பண்ணத்துன்னு கண்டு பிடிச்சிட மாட்டாவளா? அப்புறம் நிலம் நம்ம கையை விட்டுப்போயிடும். நீங்க என்னை சடைச்சி புரோஜானமில்லை சொல்லிட்டேன். எனக்கு ஒரு மண்ணும் வேண்டாம், உங்களுக்கு வேணும்னா நீங்க என்ன செய்யணுமோ செய்துகோங்க”
“என்னை மாப்பிள்ளை, இப்படிச் சொல்லுதீரும்? உம்மை தானையா நம்பி இருக்கோம்”
“நானே அந்த தனவதியம்மா வார்த்தையைத் தானே நம்பியிருந்தேன். இப்போ எல்லாம் மோசம் போச்சு, இனி நான் இறங்க மாட்டேன். உங்களுக்கு வேணும்னா நீங்க பார்த்துக்கோங்க” என உறுதியாக உரைத்தவர் கிளம்பி விட்டார். 
இத்தனை வருடங்களாக இல்லாது இரண்டு வருடம் ஊர் திருவிழாவிற்கு சேர்மமூர்த்தி வீட்டிற்கு வந்திருந்தார் பழனிச்சாமி. அதில் மூன்றாம் நாள் தோப்பில் ஆண்கள் மட்டுமே கறி விருந்து கொண்டாடினர். சுற்றியிருக்கும் இடங்களைப் பார்வையிட்டவர் சந்திராவின் வயலை காட்டி, சேர்மமூர்த்தியிடம் விசாரித்தார். 
மாமனார் விசாரிக்க, தன் இடம் இல்லை என்றும் கடந்த பத்து வருடங்களாக தன் உரிமையில் இருந்ததாகவும் தெரிவித்தார் சேர்மமூர்த்தி. அவ்விடம் குவாரி அமைக்க ஏற்ற இடமென்றும், இடத்தை கைப்பற்றித் தந்தால் மகள் அம்சவேணி பெயரில் இருவருக்குமாகத் தானே குவாரி அமைத்துத் தருவதாகவும் தங்கள் தொழிலோடு இணைத்துக் கொள்வதாகவும்  தெரிவித்தார். அதில் சேர்மமூர்த்திக்கு ஆசைப் பற்றிக்கொள்ள, இடத்தை கைப்பற்ற பல்வேறு வழிகளில் முயன்று இறுதியில் தான் சந்திராவிற்கும் அரவிந்தனுக்கும் திருமணம் பேசினார். ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிய, இறுதியாக குறுக்கு வழியாக முயன்று, தற்போது பழைய குற்றம் வெளி வந்து விடுமோ எனப் பயந்து நொந்து போய் இருக்கிறார். 
தந்தையும் மகனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருக்க, “இப்போ நமக்கு அவகாசமில்லை. கேஸ் கோர்ட்கு போய் அவகளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வார வரைக்கும் தான் டைம்” என்க, “அது போதும் நான் பார்த்துக்கிடுதேன்பா” என்றான் அரவிந்தன். 
ரேவதி வீட்டிற்கு வந்த தனவதி எதுவும் தெரிவிக்கவில்லை. சில மாதங்கள் உடன் இருந்து மகளைக் கவனித்துக் கொள்ளட்டும் என்றே கதிர் தெரிவித்திருக்க, அவளும் உதவிக்கு என வைத்துக்கொண்டாள். 
நாராயணனிடம் நலம் விசாரித்த சந்திரா, அதன் பின் தன் உடல்நிலையைக் கூறினாள். வள்ளியம்மை தனவதியை கேட்க, ரேவதியுடன் இருப்பதாகச் சொல்லியவள் அதற்காகக் காரணத்தைச் சொல்லிக் கொள்ளவில்லை. 
மனோவிடம் மட்டும் பேசாது முகம் திரும்பிக் கொண்ட சந்திரா, வள்ளியம்மையின் சீராட்டலில் உண்டு உறங்கி விட்டாள். 
இரவு கதிர் வரவும் வீட்டிற்கு வந்தவள், “மதியம் சாப்பிட்டீங்களா?” என்றாள். 
உடை மாற்ற நினைத்து சட்டையைக் கழற்றி இருந்தவன், கட்டிலில் அமர்ந்து அவளையும் இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான். 
“ம்ம், ஹோட்டல்ல! வீட்டு வேலைக்கு ஆள் வரச்சொல்லி இருக்கேன், நாளைக்கு வந்திடுவாங்க.  சமாளிச்சிப்ப தானே?” என்றான் ஆழ்ந்த குரலில். தனவதி இல்லாது அவளைத் தனியே விடும் கவலை அவனிடம்! 
முகம் திரும்பியவள் அவன் தாடையைப் பற்றிக் கொண்டு, “அதான் உன் பிள்ளை என்னோட   இருக்கே! உன் வாசமும், உன் நிழலுமே எங்களுக்கு போதும்!”  என்றாள் கொஞ்சலாக. 
சிறு நிம்மதியோடு ஆழ்ந்த மூச்சிழுந்தவன் நெற்றியில் இதழ் பதித்து, “இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவே இல்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாம் உன்னால தான் லவ் யூடி” என்றவன் முகம் முழுவதும் முத்தமிட, இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 
நேற்றிலிருந்தே மனத்தில் சிறு சலனம், இந்த நேரம் தான் கருவுற்றதை அவன் மகிழ்வாக ஏற்கவில்லையோ? என, ஆனால் தற்போது நிம்மதியுற இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 
அவன் நெகிழ்ந்து போயிருக்க, உச்சந்தலை முடிகளை கோதிக் கொண்டிருந்தவள் நினைவு வந்தவளாக, “தாத்தா உங்ககிட்ட பேசணும், வீட்டு வரலாமான்னு கேட்டுட்டு வரச்சொன்னாவ..” என்றாள். பதிலை எதிர்பார்த்து அவன் முகம் பார்த்திருந்தவளின் மூக்கை பற்றிக் கிள்ளியவன், “வேண்டாம், பெரியவர்! நானே பார்க்க வாரேன்” என்றான். 
முகம் மலர்ந்தவள், சந்தோஷமிகுதியில் சட்டென அவன் இரண்டு கன்னங்களில் முத்தமிட்டுவிட்டு, மடியிலிருந்து இறங்கி ஓடியிருந்தாள். 
“மெல்ல.. போ..” என அதட்டியவன் எழுந்து உடை மாற்றச் சென்றான். 
தந்தையின் இழப்பிற்கு பின் பலமுறை நாராயணன் பேச முயன்றார், சந்திராவிற்குத் திருமணம் ஏற்பாடான போது கூட பேச வந்தார். ஆனால் அவன் தான் வாய்ப்பு அளிக்காது நழுவி ஓடியிருந்தான். சந்திரா சொன்னது போலே தன் தந்தை இருந்திருந்தாலே மன்னிக்க கூடிய தவறு தான். அதுவும் போக, பெரியவர் தள்ளாடும் வயதில் வேண்டுகிறார், தனக்கு இல்லை என்றாலும் சந்திராவிற்காகவாவது அவர்கள் உறவு அவசியமானது. 
சந்திராவும் வள்ளியம்மையும் சமையலறையில் இருக்க, மனோ அலைபேசியில் பேசியபடி முன் வாசலில் நடந்து கொண்டிருக்க கதிர் உள்ளே வந்தான். 
அதைக் கவனித்த மனோ, ஒரு தலையசைப்பில் வரவேற்று விட்டு, விலகி நின்று கொண்டான். உள்ளே சென்ற கதிர், நாராயணனிடம் நலம் விசாரிக்க, சந்திராவும் வந்து அருகில் அமர்ந்தார். 
“ஏற்கனவே ஒரு தடவை தான் கேட்காம செய்து இத்தனை வருஷமும் பிரிச்சி நிக்குத்தோம். அதே தப்பை திரும்பச் செய்வேனா? அதான் உங்கிட்ட ஒரு வார்த்தை கேட்போமேன்னு கூப்பிட்டு விட்டேன்” என ஆரம்பிக்க, “பழசெல்லாம் பேச வேண்டா தாத்தா” என இடையிட்டான் கதிர். 
அதே நேரம் உள்ளே வந்த மனோவும் கதிரை ஒரு பார்வை பார்த்துவிட்டு தாத்தாவின் அருகே அமர்ந்தான். 
“அப்போ நாளைக்கே பஞ்சாயத்துக் கூட்டச் சொல்லுங்க தாத்தா முடிச்சிட்டு ஊருக்குப் போவோம், வேலை கிடைக்கு” என மனோ ஆரம்பிக்க, “பஞ்சாயத்து வேண்டாம், கோர்ட்ல கேஸ் போடுவோம். இங்க நடந்தால் ஊர்த்தலைவருன்னு யாரும் சேர்மமூர்த்தியை எதிர்த்து பேச மாட்டாவ!” என மறுத்தான் கதிர். 
“கோர்ட், கேஸ்னா இழுத்துக்கிட்டு இருக்கும். பஞ்சாயத்து ஒரே நாள்ல பேசி முடிச்சிடலாம், நம்ம பக்கமும் ஆள் இருக்குல தாத்தா” என்ற மனோ கதிரைப் பார்த்தான். 
எப்போதும் போலே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை.  கதிரை பார்க்கையிலே மனோவிற்கு மனதில் குமைச்சல் தான், ஆனாலும் வார்த்தையை விடாது அமர்ந்திருந்தான். சண்டையிட்டதும் சட்டையைப் பிடித்த நாட்களும் இப்போதும் கதிரின் நினைவிலிருந்தது. 
“அது தான் எனக்கு வேணும். பாஞ்சாயத்துல முடிச்சிட்டா ஊரைத் தாண்டி வெளியே தெரியாம போயிடும். கோர்ட்கு போய் இழுத்துகிட்டு இருந்தால் தான், சுத்து வட்டாரத்துக்கே தெரியும், சேர்மமூர்த்திக்கு அரசியல்ல அது ஒரு நெருக்கடியைக் கொடுக்கும்” என்ற கதிரின் முகத்தில் அத்தனை ஒரு தீவிரம்! 
இனி ஒரு முடிவு காணாமல் பின்வாங்குவதாக இல்லை எனத் தீவிரமாக இருந்தான் கதிர். சந்திராவிற்குள் அது ஒரு சிறு நடுக்கத்தைக் கொடுக்க, வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இத்தனை தூரம் தான் யோசிக்காது போனோமே என நினைத்த மனோ  உள்ளுக்குள் ஓர் மெச்சுதலாக எண்ணினான் கதிரை.
கதிரின் தோள்களில் தட்டிக் கொடுத்த நாராயணனும், “கதிர் சொல்லுறது சரி தான். அடுத்து என்ன செய்யலாம்னு நம்ம வக்கீல்ட பேசிடு மனோ” என்றார். 
பின் வள்ளியம்மை உணவுண்ன அழைக்க, அனைவருமாக இணைத்து உண்டனர். சந்திரா கதிரை இணைத்து பார்க்கையில் மனமொத்த தம்பதிகளாகப் பெரியவரின் கண்களை நிறைத்தனர். குலசேகரனுக்கு தவறு செய்த  குற்றவுணர்வு நீக்க, நிம்மதியாக உணர்ந்தார் நாராயணன். 
வள்ளியம்மைக்கு சந்திராவின் தேர்வு சரியான சந்தோஷம்! அனைவரையும் விட, மனோ மனம் நிறைந்து, நெகிழ்ந்திருந்தான்! அவன் அறிந்து சந்திரா தான் கதிரை விரும்பினாள், அதனால் கதிர் மீது சிறிதும் நம்பிக்கை கிடையாது. பழைய பகையை மனதில் கொண்டு சந்திராவை வதைத்து விடுவானோ என்றெல்லாம் கற்பனையிலிருந்தான். ஆனால் இன்று இருவரிடமும் ஒருவர் மீதான ஒருவரின் காதலையும் அக்கறையும் கண்டு கொண்டவனுக்கு, தன் கணிப்பு தவறாயினும் மனம் ததும்பும் சந்தோஷம். 
இருவரும் விடை பெற்று வீட்டிற்குச் சென்றனர். சந்திரா தான் உறங்கும் வரையிலும் வாய் ஓயாது, அன்றைய நிகழ்வுகளைப் பேசிக் கொண்டிருக்க, மெல்லிய அணைப்போடு தட்டுக் கொடுத்தபடி அமைதியாகக் கேட்டிருந்தான் இளங்கதிர். 
தந்தை கேட்டு கொண்டதற்காக மட்டுமில்லாது ஏற்கனவே பட்ட அடியைத் திருப்பிக் கொடுத்து, வெறியைத்  தீர்த்துக்கொள்ளவும் கதிரை கடத்தும் முடிவிலிருந்தான் அரவிந்தன். சேர்மமூர்த்தியால் எதுவும் வேலையாகாது ஆகையால் கதிரை கடத்தி சந்திராவை மிரட்டி, புதிய ஒப்பந்தம் ஒன்றை எழுதி வாங்கும் திட்டம்! 
இதில் கதிரை பலி வாக்கும் ஆசை வேறு! ஆகையால் கதிரை கடத்தி வர, தனது ஆட்களை அனுப்பிவிட்டு அதே மலையில் காத்திருந்தான் அரவிந்தன். தனக்குத் துணையாகவும் இரண்டு ஆட்களை வைத்திருந்தவன், இரவையும் குளிரையும் தாங்காது, வேட்டையாடும் வெறியில் அவர்களோடு போதைக்காகக் குடித்துக் கொண்டிருந்தான். 
நேற்றே தங்கள் வழக்கறிஞரிடம் பேசியிருந்த மனோ, அவர் பரிந்துரையில் திருநெல்வேலியில் ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து வந்திருந்தான். அவரிடம் ஆலோசித்து விட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் காட்டுப் பாதையில் மனோவின் கார் பழுதாகி நின்றிருந்தது. 
வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பும் நேரம், கதிர் சந்திராவிற்கு அழைத்திருந்தான். ஏதேனும் தேவையா? வாங்கி வர வேண்டுமா? எனக் கேட்க, அவளோ மனோ வழியில் நிற்பதாகவும் அழைத்து வரும் படியும் கேட்டாள். 
பல்லைக் கடித்தவன், தனக்கு தெரிந்த மெக்கானிக்கு அழைத்து வரச் சொல்லிவிட்டு அவனும் தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பி விட்டான். இருளும் தனிமையும் ஒரு பயத்தைக் கொடுக்க, காருக்குள் அமர்ந்திருந்தான் மனோ. 
கதிர் வரவும் சற்றே நம்பிக்கை வர, மனோ நிம்மதிப் பெரு மூச்சை விட்டுக் கொண்டான். அதைக் கவனித்த கதிரும்  இதழோரம் மெல்லிய நகை பொங்க அடக்கினான். தனது மெக்கானிக்கு அழைத்து காரை எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தங்கள் ஊர் செல்லும் பாதையில் வண்டியைத் திரும்பினான்.
இருளான ஒத்தையடிப் பாதையில் சென்று கொண்டிருக்க, முன்புறம் சிறு தொலைவில் வழி  விடாது சுமோ ஒன்று சென்று கொண்டிருக்க, சரியாகப் பின்புறம் வேகமாக ஒரு லாரியும் வந்தது. முதலில் கவனித்தது மனோ தான், கதிரின் தோள்களைத் தட்ட, அதற்குள் அவனும் கவனித்திருந்தான். 
முன் செல்லும் கார் நின்றுவிட, பின் வரும் வாகனமும் நெருங்கி வர, மனோவிற்கு ஏதோ சரியில்லை எனத் தோன்ற, தங்களைக் குறி வைத்துத் தான் வருகின்றனர் எனக் கதிரும் யூகித்தான். 
மேலும் அருகே வர, “ஏதாவது உள்ள புகுத்துப் போவ முடியுமாலே?” மனோ பதட்டத்தில் கேட்க, அது வரையிலும் முன்னிற்கும் வாகனத்துக்கு விடாமல் ஹாரன் அழுத்திக் கொண்டிருந்த கதிர், “எங்கடே வழி இருக்கு?” என்றபடி சட்டென வண்டியை நிறுத்தி விட்டான். 
“அம்புட்டு தான் அப்பளமா நொறுக்கப் போறோம்டே..” என்றவன் பதற, கதிர் வண்டியிலிருந்து இறங்கியிருந்தான். அதே முன்னால் வாகனத்திலிருந்து இருவர், பின்னால் வாகனத்திலிருந்து இருவர் என நால்வர் கையில் கயிறு, கட்டை, அரிவாளோடு இறக்கி வந்தனர். 
ஏதோ விபரீதம் என இருவருக்கும் புரிய, கதிரின் பார்வை சுற்றிலும் ஆராய, வந்தவனுள் ஒருவன் நொடி நேரத்தில் அரிவாள் வீச குனிந்து தடுத்த கதிர், மனோவிடம் கண் ஜாடை காட்டினான். 
அதைக் கவனித்தவனும் வண்டியில் சொருகி வைத்திருந்த ஒரு நீளக் கம்பை உருவி வர, அதற்குள் மற்றொருவன் கட்டையை வீசிக் கொண்டு வர, கீழே விழுந்தவன் எழுந்திருக்க, மற்றவர்கள் சூழ்ந்திருந்தனர். 
கதிர் அத்தனை பேரையும் ஓர் அளவிடும் பார்வையில் அலச, மனோ கம்பை கதிரிடம் வீசியிருக்க, சரியாக கையில் பிடித்தவன் தான் அறிந்திருந்த சிலம்பமுறைகளில் சுற்றினான். 
அதிலும் கதிரின் முதல் சுழற்சியிலே அவர்களின் ஆயுங்கள் தூர விழுந்திருந்தது.  அதில் ஒருவனிடமிருந்து நழுவிய கட்டை சரியாக மனோவின் தலையில் தாக்கி கீழே விழ, மறுநொடி கதிர் வேகமுடன் சுழன்று தாங்கினான்.
சுழன்றே மனோவை நெருங்கி இருந்தவன் பாதுகாப்பாக முன் நின்று கொண்டு, அத்தனை பேரையும் ஓர் அடி கூட நெருங்கவிடாது சில அடி தூரத்தில் நிறுத்தி இருந்தான். ஏதோ பொம்மையைத் தூக்குவது போலே அசால்டாக தூக்கிவிடும் எண்ணத்தில் வந்தவர்கள் கதிரின் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 
கதிரை ஒரு அடி கூட  நெருங்க இயலயலாது போக, அவன் தாக்குதலில் இவர்கள் தான் காயப்பட்டிருந்தனர். அதில் சற்றே அவர்களுக்கு வலியும் பயமும் பற்றிக் கொள்ள, தலையில் இரத்தம் வலிய  மனோ காவல்துறையினருக்கு தொலைப்பேசியில் அழைத்திருந்தான். 
அவர்கள் இறுதி முயற்சியாக முயற்சித்துப் பார்க்கச் சிறிதும் முடியவில்லை, அதற்குள் பின்புறம் வாகனம் வரும் சத்தமும் வெளிச்சமும் தெரிய, பயத்தில் காட்டுக்குள் இறங்கிப் பதுங்கி ஓடி விட்டனர். 
கதிர் திரும்பி மனோவை பார்க்க, தலையிலிருந்து இரத்தம் வழிய, வலியோடு நின்று கொண்டிருந்தான். கதிர் நெருங்கியதும், “ஒரு நாள் உங்கூட ஓசியில வந்ததுக்கு என் உசுருக்கே ஆப்பு வைச்சிட்டியேடே!” என்றவன் வலியோடு காய்ந்தான். 
பல்லைக் கடித்த கதிர், “யாரு நானா? அடேய் கோட்டிப் பயலே, நீ அருமை பெருமையா உன் தங்கச்சி மாப்பிள்ளை பார்த்தியே அந்த அரவிந்தன் ஆளுக தான் அடி வாங்கிட்டு ஓடிப் போறானுக” என்க, மனோ வாயடைத்துப் போனான். 
ஆட்களை அடையாளம் தெரியாத போதும், அவர்கள் வந்த வண்டியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை வைத்து சரியாகக் கண்டு கொண்டான் கதிர். தந்தையின் நிழலிலே வளர்ந்து விட்ட மனோவிற்கு இன்னும் மனிதர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளத் தெரியவில்லை. கதிரையும் ஆரம்பத்தில் அவ்வாறு தான் நினைத்திருந்தான். 
ஒரு நொடி காயத்தை ஆராய்ந்த கதிர், “வண்டியில ஏறுலே ஹாஸ்பிடல் போவோம்” என அழைத்தான். 
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், சின்ன அடி தான் சரியாப் போயிடும், வீட்டுக்கு போவோம்” என மறுக்க, “இரத்தம் கொட்டுதுலே! ஏற்கனவே அரைக் கிறுக்கா சுத்துறே, இப்போ தலையில வேற அடி! இனி முழுக்கிறுக்கா தான் சுத்துவ போ..” என அதட்டினான் கதிர். 
சரியாக மனோவின் காரோடு மெக்கானிக் வர, அவனிடமிருந்து வண்டியை வாங்கிக்கொண்டு மனோவையும் அழைத்துக் கொண்டு மீண்டும் அதே பாதையில் திரும்பினான். 
அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்திருந்தனர், பின் சிகிச்சை முடிந்து இருவரும் வீடு திரும்ப நள்ளிரவாகி இருந்தது. 

Advertisement