Advertisement

அத்தியாயம் 21.1
அன்று சந்திராவுக்குக் காலையில் எழுந்ததிலிருந்தே சற்று சோர்வாகத் தான் தோன்றியது. வேலையில் ஒரு மந்த நிலையும் தடுமாற்றமுமாக இருக்க, பஞ்சாயத்து வரை சென்று வந்த அலைச்சல், என நினைத்துச் சுருண்டு படுத்துக் கொண்டாள். மாலை நேரம் எழுந்தவளுக்கு குமட்டிக் கொண்டு வர, வீட்டின் பின்புறம் சென்றாள். 
சற்றே நேரம் அங்கிருக்கும் கல்லில் அமர்ந்தவள் சுற்றலும் வேடிக்கை பார்த்தாள். வேப்பமரமும் அதன் ஒரு கிளையில் அணில் ஒன்றுமிருக்க, அதைச் சுற்றி குட்டிகள் தாவி விளையாடிக் கொண்டிருக்க, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு  திடீரென சிந்தையில் ஒரு மின்னல் வெட்டியது. 
முகத்தில் ஒரு புதுப்பிரகாசம் வர, மெல்ல கைகள் வயிற்றை வருட, அவள் உடல் மாற்றம் அவளுக்குப் புரிந்தது. தான் கருவுற்றிருப்பதாகச் சந்தேகம் தோன்றுகையிலே ஆயிரம் வண்ண மத்தாப்புகள் நெஞ்சில் பூத்தது. 
சட்டென அவள் கற்பனைகள் வெகு நீண்ட காலம் வரைக்கும் வண்ணம் தெளித்து வர, மனமானது உடனே கதிரிடம் செய்தி பரிமாறத் துள்ளியது. தோன்றிய நொடி கூடத் தாமதிக்கவில்லை அலைபேசியில் அவனை அழைத்தாள். 
அட்டென் செய்ததுமே, “என்ன திட்டினது எல்லாம் பத்தாதுன்னு போன் போட்டுத் திட்டப்போறீயா?” என்றவன் ஆரம்பிக்க, “ம்கூம்..கொஞ்சப் போறேன்..” என்றாள் மெல்லிய குரலுக்குள் ஒளித்து வைத்த நாணம் பொங்க! 
ஒரு நொடியிலே அவள் மாறுதல் புரிய, “என்னட்டி ஆச்சி?” என்றான் நம்ப இயலாது. 
“நீ ஒரு லேடி டாக்டர்ட அப்பொய்ண்ட்மெண்ட் புக் பண்ணிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வா” என அழைப்பதற்குள் வார்த்தை மெல்லினமாய் தேய, முகம் சிவந்து போனாள். 
அவன் எங்கே அதைக் காண, புரியாது பதறியவன், “வது, ஏலே! என்னாச்சு? உடம்புக்கு என்னச் செய்து? காலையில நல்லாயிருந்தேயம்மா..!” என்றான். 
மக்கு, மரமண்டை, மனதில் திட்டியவள், பல்லைக் கடித்துக்கொண்டு, “அது.. அது, நான் ப்ரக்னஸ்சி செக் பண்ணும், நீ கேள்வி கேட்காம சீக்கிரம் வா” என்றாள் கட்டளையாக. 
“என்ன..!” என அதிர்ந்தவனுக்குப் புரிவதற்கு சில நொடிகள் தேவையாகி இருக்க, “நிச தானாலே?” என ஆர்ப்பரித்தான். அவள் கடுப்பாகி பல்லைக்கடிக்க, “ஆமாம், ஆமாம் அப்படியும் இருக்கலாம். எல்லாம் என்னால தான்..” என்றவன் உற்சாக மிகுதியில் உளற, அவளக்கு ஐயோ! என்றாகிப் போனது. 
அவள் பதில் சொல்லும் முன்பே, “சரி, சரி, நான் வரேன்.. நீ போய் சீக்கிரம் ரெடியாகி இரு” என்றவன், “இல்லை பார்த்து, மெல்லப் போய் சீக்கிரம் ரெடியாகு” என்றான் மீண்டும் திருத்தமாக. 
இந்த நேரத்திற்குள் சந்திராவைத் தேடி, அவள் அறைக்கு வந்த தனவதி, அவள் இல்லாது வரவேற்பு அறையில் அமர, சரியாக சேர்மமூர்த்தி வந்து மிரட்டிச் சென்றிருந்தார். 
அனைத்தையும் கேட்டிருந்த சந்திரா இடியும் மின்னலும் ஒன்றாய் தாங்கியதை போன்ற பேரதிர்ச்சியில் உரைத்தே போனாள். இத்தனை நாளும் தன் குடும்பத்தைப் பிடிக்காத வெறுப்பு அதைத் தான் தன்னிடம் காட்டுகிறார் போலே என்றே நினைத்திருந்தவளுக்கு அப்போது தான் புரிந்திருந்தது அவர் தவறை மறைக்க, தங்கள் மீது கதிரின் வெறுப்பைத் திருப்பி விட்டிருக்கிறார் என! 
கனத்த மனதோடு அருகில் வந்தவள், “என்ன அத்தை? இதெல்லாம் உண்மையா?” என்றாள். அப்போதும் அவர் மீதான சிறு நம்பிக்கை இருந்தது. 
அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்பது அவருக்குப் புரிய, தன் முகமூடி கிழிந்ததை ஒப்புக் கொள்ள மனமின்றி மௌனமாய் நின்றார். சந்திராவோ பொறுமையின்றி, “சேர்மமூர்த்திகிட்ட காசு வாங்கிட்ட காரணத்துக்காகத் தான் எமோஷனல் டிராமா காட்டி அவரை கண்ரோல்ல வைச்சி இருக்கீங்களா? போன வாரம் கண்ணீர் விட்டீங்களே அதுவும் அது மாதிரி தானா? ஆமாம், அவர் உங்களுக்குக் காசு தர வேண்டிய காரணமென்ன? கதிர் ஏன் பிரச்சனைக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்லுறாவ?” என விடாது கேள்விகளை அடுக்கினாள்.  
அதிர்ந்த தனவதி, “அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம்? என்னை கேள்வி கேட்க எனக்கு எந்த உரிமையுமில்லை” என்றார் பட்டென. 
“ஹோ அப்படியா? அப்போ கதிருக்கு இருக்கா? வரட்டும், அவரையே விசாரிக்கச் செல்லுதேன்” என்றவள் மடக்க, பதறிப் போனார். 
உண்மையில் மிரட்டி விட்டாளே தவிர, கதிரிடம் இதை எவ்வாறு சொல்லுவேன்? என இயலாது தவித்தாள். தனவதியை விடவும், கதிர் இதை எவ்வாறு தாங்கிக் கொள்வான்? என உள்ளம் அவனுக்காகத் தான் யோசித்தது. 
“இது வரைக்குமே நீங்கச் செய்த எதையும் அவர்கிட்ட நான் சொன்னதில்லை. உங்க மேல மரியாதை வைச்சிருந்தேன், அதனால தான் கேட்குதேன் நீங்களே உண்மையை சொல்லுறீங்களா? இல்லை உங்க பிள்ளைங்க மருமகன்கள் எல்லாரையும் வரச் சொல்லட்டுமா?” என்றாள். அவர்களுக்கு விஷயம் தெரியுமோ? என்ற எண்ணத்தில் போட்டு வாங்கக் கேட்டாள். 
“ஆமாம், காசு கொடுத்தார் வாங்கியிருந்தேன். கதிர் ஆம்பிளைப்பிள்ளை போராடிப் பிழைத்துப்பான். ஆனால் நான்? அவர் இறந்த போது இரண்டு பொண்ணுங்களோட ஆதரிக்க யாருமில்லாமல் இருந்தேன். எனக்குத் தேவை, அதான் வாங்கினேன்”
“அதான் ஏன் கொடுத்தார்? லட்சங்கள்ல கொடுக்க வேண்டிய அவசியமென்ன? அதைச் சொல்லுங்க” 
“அவருக்குக் கதிரை நினைச்சி பயம் ரொம்பவும் பயம்! அப்போ தான் முதல்முறை தேர்தல்ல நிக்கிற நேரம். கதிர் அப்பா இறந்ததைப் பெரிய பிரச்சனை ஆக்கிடுவானோ இல்லை அப்பா விட்டதை தொடருவானோ, திரும்ப விவசாயம் நிலம்னு வருவானோன்னு எல்லாம் அவருக்குப் பயம். ஏன்னா கதிர் அப்போ அவ்வளவு துடிப்பா இருந்தான், இது எதையும் அவன் செய்திடக்கூடாது, அவர் வழியில அவன் தடையா வந்திடக்கூடாதுன்னு காசு கொடுத்தார். நான் வாங்கலைன்னா கதிரோட அப்பா நிலமை தான் அவனுக்கும் வரும்னு மிரட்டினார். எனக்கும் பிரச்சனை வேண்டாம் விலகிப் போகலாம்னு தோனுச்சு அதான் வாங்கினேன்” 
கேட்ட சந்திராவிற்கு மனம் கொதித்தது, முகம் இறுக, “சபாஷ், இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாது, அவர் இந்த வழியில யோசிச்சிடக் கூடாதுன்னு தான் எங்க குடும்பத்தைக் குற்றவாளி ஆக்கிட்டீங்க அப்படித் தானே? செய்றதெல்லாம் நீங்க செய்துட்டு, எங்க குடும்பத்துக்குத் துரோகி பட்டமா?” என்றாள். 
அப்போதும் தனவதிக்கு ஏற்றுக் கொள்ளவில்லை, “என்ன இல்லாததையா சொல்லிட்டேன், நீங்களும் துரோகம் செய்தவங்க தானே?” என்றார். 
சந்திரா உள்ளம் குமுறியது, “நீங்க தெரிஞ்சி செய்த பாவத்தை நாங்க தெரியாம செய்த தப்போட ஒப்பிடாதீங்க, மாமா இருந்திருந்தால் மறுநாளே மறந்து, மன்னிக்கிற தப்பு. அதை நீங்க மறக்க விடாமா ஊதி, ஊதி உங்க பிள்ளைங்க மனசுல வெறுப்பா விதைச்சி இருக்கீங்களே! என்னவொரு நடிப்பு? கண்ணீர் நாடகம்!” என்றாள் கசந்த முகத்தோடு. 
தனவதி வாயடைத்து நிற்க, “ஏன் அத்தை உங்க பையன் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா? அவரை விடுங்க, மாமா! மாமா மேல பாசமில்லையா? இத்தனை வருஷம் அவரோட வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமென்ன? மாமா இழப்புக்கான நியாத்தை மறைக்க, நீங்கக் காசு வாங்கியிருக்கீங்க..!” என்ற சந்திரா சின்னதாய் முகம் சுளிக்க, அவர் மெல்ல நொறுங்கினார்.
சந்திராவின் கேள்விகள் முகத்தில் அடித்தது போலிருக்க, குலசேகரனின் முகம் மனதில் விரிய, கண்கலங்கினார். 
அவர் கண்ணீர் சந்திராவையே உருக வைக்க, “சரி, இப்போ நான் என்ன தான் செய்யட்டும் அத்தை? அவர்கிட்ட எப்படி இதைச் சொல்லுவேன்?” என்றாள் சோர்ந்த குரலில். 
மறுநொடி, “நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” எனக் கதிரின் குரல் சற்று தொலைவில் கேட்க, இருவரும் அதிர்ந்து திரும்பினர். ஒரு காதில் அலைபேசியைத் தாங்கியபடி கதிர் உள்ளே வர, கருப்பட்டி காரோடு வாசலில் நின்றிருந்தான். 
அவன் காதில் அலைபேசியைக் கவனித்த பிறகே, தன் கையிலும் அதிர்வை உணர்ந்த சந்திரா குனிந்து தனது அலைபேசியைப் பார்க்க, இன்னும் அவன் அலைபேசியோடு தொடர்பிலிருந்தது. அப்போது தான் தொடர்பை துண்டிக்காது விட்டது நினைவில் வர, நொந்து போய் சட்டென நெற்றியில் அடித்துக் கொண்டாள். 
தனவதி சந்திராவைப் பார்க்க, தான் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என்ற பதைபதைப்பில் சந்திரா பதில் பார்வை பார்க்க, கதிர் உள்ளே வந்திருந்தான். 
பதட்டத்தில் சந்திரா, “இந்த நேரம் ஏன் வீட்டுக்கு வந்துருக்கீங்க?” எனத் தான் அழைத்ததையே மறந்து கேட்க, பேசாதே எனச் சைகை செய்தான் அதட்டலாக. 
அதிலே அனைத்தையும் கேட்டிருப்பான் என்பது இருவருக்கும் புரிய, “அவங்க துணியெல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்ப சொல்லு, கருப்பட்டி ரேவதி வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்திடுவான்” என சந்திராவின் மூலம் செய்தி பரப்பினான். தனவதியிடம் பேசுவதற்கு என்ன, அவர் முகம் பார்க்கவே கசந்தது கதிருக்கு. 
விசும்பலும் கண்ணீருமாக நின்றிருந்த தனபதியைப் பார்த்திருந்த மனம் தாங்கவில்லை. செய்வதறியாது வார்த்தை வராது அவள் நிற்க, “இந்த மாதிரியெல்லாம் இனி நடிக்க வேண்டிய அவசியமில்லை, சீக்கிரம் கிளம்பச் சொல்லு வது” என்றான் அவர் புறம் முகம் திருப்பாமலே! 
ஏற்கனவே பல முறை நம்பி ஏமார்ந்திருந்த வலி, இப்போதைய அவர் கண்ணீர் அவன் முன் பொய்யாகிப் போனது. எதுவுமே மறுத்துப் பேசவில்லை அறை நோக்கிச் சென்றவருக்கு, பெரும் கேவலோடு அழுகை வெடிக்க, விசும்பியபடியே கிளம்பியவர் வீட்டை விட்டு வெளியேறினார். 
சந்திரா வெம்மிய நெஞ்சோடு பார்த்திருக்க, கருப்பட்டி காரில் அழைத்துச்செல்ல, கதிர் வாசல் பக்கம் கூட திரும்பவில்லை. கார் சென்ற மறுநொடி, விறுவிறுவென தன் அறை நோக்கிச் சென்றிருந்தான். 
கதிரிடம் எவ்வாறு சொல்வது என மலைத்து நின்ற சந்திராவிற்குக் கதிர் விஷயம் அறிந்ததில் நிம்மதி என்றாலும் அவன் வாடிய முகம் அவளை வருந்தச் செய்ய, வார்த்தைக்குக் கூட அவள் தனவதியை தடுக்கவில்லை. அவன் முடிவில் தலையிடாது நின்று விட்டாள். 
கதிருக்கு தனவதியின் மீது கோபமில்லை, ஆனால் மனதில் மலையளவு வருத்தமிருந்தது. எத்தனை தூரம் மரியாதை வைத்திருந்தான், அன்னைக்கு நிகரான பாசம் வைத்திருந்தான். துரோகம், எவ்வளவு பெரிய துரோகம்! அது கூட அறியாமல் இத்தனை நாளும் பாசத்தில் முட்டாளாக இருந்திருக்கிறேனே எனத் தன்னையே நொந்தான். அத்தனை உறவும் பொய்யாகிப் போக, நஞ்சாய் நெஞ்சு எரிந்தது. 
ஒரு கையை நெற்றிக்கு மேல் வைத்து கண்களை மறைத்தபடி படுத்து விட்டான், காபி டம்ளரோடு உள்ளே வந்த சந்திரா ஒரு நொடி தயங்கி நின்று பார்த்தாள். கோபம் கொள்வானா, வருந்துகிறானா? எதுவும் கணிக்க முடியவில்லை. வார்த்தை வராது மெல்ல கை நீட்டி, தோள் தொட்டு உலுக்க, சட்டென கை விலக்கி அவள் முகம் பார்த்தான். 
இறுகிய முகமாக, கண் இரண்டும் கலங்கி கண்ணீர் நிறைய, சிவந்திருந்தது. அவள் அருகில் அமர, நகர்ந்து அவள் மடி சாய்த்தான். அப்போதே அவனுள்ளம் புரிய, மெல்லத் தலை வருடியவள், “ஏன் இப்படிப் செய்தீங்க? என்னனு ஒரு வார்த்தையாவது விசாரிச்சி இருக்களாமே?” என்றாள் மெல்லிய குரலில். 
ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, அவன் உள்ளே வந்ததுமே அவரை கிளம்பச் சொல்லியிருந்தான். 
அனைத்தையும் தான் இவள் விசாரிக்க அலைபேசியில் கேட்டு விட்டானே! முகம் வாடியவன், “ம்ச், என் மேல ஏன் நம்பிக்கை இல்லாம போச்சு? எங்க அப்பா இல்லைனா நான் அப்படியே அவங்களை விட்டுடுவேனா? இதுவே அவங்க பெத்த பிள்ளையா இருந்தால் அப்படி நினைச்சிருக்க மாட்டாங்க தானே..!” எனக் கேட்டவனுக்குத் தொண்டை அடைத்தது. 
என்னவென்று சொல்லுவாள்? அவர் பாசம் மெய்யோ? பொய்யோ? இப்போது வந்த அவள் எங்கே அறிவாள்! தனது மறுகையில் அவன் கரத்தை பற்றியிருந்தவள் மெல்ல விரல்களை வருடிக் கொடுத்தாள். 
கதிர் மனம் ஆறவேயில்லை, “இவங்க எப்படி அப்படிப் பண்ணலாம்? எங்க அப்பா இறப்புக்கு ஒரு நியாயம் கிடைக்கலைன்னு நான் எத்தனை நாள் வேதனைப்பட்டு, வெந்திருக்கேன் தெரியுமா? பக்கத்துலையே இருந்து பார்த்துட்டு எப்படி அவங்களால எதுவுமே சொல்லாம இருக்க முடிச்சது? சேரம்மூர்த்தி மிரட்டினா அப்போவே எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? ஏன் காசு வாங்கணும்? எங்க அப்பா, என்னை விடவா அவங்களுக்கு காசு முக்கியமா போச்சு?” எனப் புலம்பினான். 
கதிர் மனதில் அவ்வளவு வலி! எதிர்பாராத நம்பிக்கை துரோகம் இத்தனை நாட்களுக்குப் வெளி வர, தாங்க முடியாது மனதிலிருந்த ஆதங்கத்தை எல்லாம் சந்திராவிடம் புலம்ப, ஆறுதலாக அமைதியோடு கேட்டவள் அவனை உறங்க வைத்து, அவனுடனே அவளும் உறங்கிப் போனாள். 
பஞ்சாயத்துப் பிரச்சனையை நாராயணனிடம் தெரிவித்திருந்த சந்திரா, அவர் சுகமாக இருந்தால் கிளம்பி வரும்படி சொல்லியிருந்தாள். நேற்று அழைத்திருக்க, அதன் பின் அவள் வீட்டில் நடந்தது எதுவும் தெரியாது, நாராயணன் கிளம்ப, அவருக்குத் துணையாக மனோவும் கிளம்பினான். 
ஏற்கனவே தனவதி சந்திராவைக் குறைவாகப் பேசியதை அறிந்ததிலிருந்து ஊருக்குச் செல்ல வேண்டும் அவரை ஒரு கை பார்க்க வேண்டுமென நினைத்திருந்த வள்ளியம்மையும் வரிந்து கொண்டு உடன் கிளம்பிவிட்டார். 
தனவதி இல்லாத அடுப்பறை அமைதியாக இருக்க, குளித்து முடித்திருந்த கதிர் பாலை காய்ச்சி எடுத்து வந்து சந்திராவை எழுப்பினான். நேற்றை விடவும் இன்று சற்று தெளிவாக இருந்தான். சந்திரா மட்டுமே தன் ஓர் உறவு, உயிர்!
அவளோ அசதியோடு சிணுங்கியபடியே எழ மறுக்க, “ஹாஸ்பிட்டல் போகணும்னு சொன்னியே எழுந்திரு வது!” என அதட்டினான். 
தலையணையில் முகம் புதைத்திருந்தவள் மெல்ல விழிகளை மட்டும் திறந்து பார்த்தாள். அவன் தெளிந்த முகம் அவள் மனதை நிறைக்க, ஒற்றை விரலை நீட்டி அருகே அழைத்தாள். அவளை நோக்கிக் குனிந்தவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், சட்டென அவன் இதழில் தன்னிதழ் பதிய அழுத்த முத்தமிட்டாள். 
சற்றும் எதிர்பாராது இன்பமாக அதிர்ந்த கதிர்,  சுகமாக இசைந்தான். மூச்சுமுட்ட விலக்கியவள், கழுத்தில் முகம் புதைத்தபடி வாசமிழுந்தாள். 
இதழ் விரிய, குறுகுறுப்பில் கூசியவன், “வெள்ளைச் சட்டை! அழுக்கு பண்ணாதட்டி..” என்றான் கண்டிப்போடு. 
இதுல மட்டும் தெளிவா இரு! மனதில் குமைந்தவள், மீண்டும் ஆழ்ந்த மூச்சோடு அவனையும் தன்னிடம் இழுத்தபடி, “நீ வாசமா இருக்க..!” எனச் சிணுங்க, “நீ மாசமா இருக்க வேண்டான்டி..” என்றான் எச்சரிக்கையாக. 
சட்டெனச் சிரித்துவிட்ட சந்திரா, “வேண்டாம்னா போ” என நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டுத் திரும்பிப்படுத்தாள். 
உன்னை.. இருடி, மனதில் நினைத்து பல்லைக் கடித்தவன், “இப்போ மட்டும் கும்பகர்ணன் மாதிரி தூங்குற?  கல்யாணத்துக்கு முன்ன அதிகாலையிலலாம் எழுந்து வாசம் பெருக்கி, கோலம் போட்டது எல்லாம் நடிப்பா சந்திரா? நடிப்பா?” என்றவன் ராகமிழுக்க, கேட்கச் சகிக்காதவள் எழுந்து தலையணையால் அவனை அடித்து விட்டு காதுகளை இறுக மூடிக்கொண்டாள். 
அப்போதெல்லாம் அவன் ஆலைக்குச் செல்லும் முன் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும், வம்பிழுக்க  வேண்டுமென்ற ஆசையோடு சுற்றிய நாட்கள்! அந்த நினைவில் முகம் இளக அவள் அமர்ந்திருக்க, உதடு பிரியா சிரிப்போடு பார்த்திருந்தான் இளங்கதிர். 
நெற்றி முடிகளை விலக்கி முத்தமிட்டபடி, “அதான் எழுத்தாச்சுல போய் குளிச்சிட்டு வா” என விலகிச் சென்றான். 
சந்திரா தயாராகி வர, இருவரும் மருத்துவமனை சென்று கர்ப்பம் உறுதி செய்து, ஆலோசனை பெற்றுக் கொண்டு வெளி வந்தனர். அவளுக்குத் தேவையானது, அவள்  ஆசையாகக் கேட்டது என அனைத்தையும் வாங்கிக் கொண்டு மகிழ்வோடு வீடு திரும்பினார். 
இவர்கள் வீடு திரும்புகையிலே எதிர்வீடு திறந்திருக்க, வாசலில் மனோவின் கார் நிற்பதையும் கண்டு கொண்ட சந்திரா, “தாத்தா வந்திருக்காக போல!” என்ற மகிழ்வோடு உள்ளே ஓட, “மெல்ல.. பார்த்துப் போ வது” என்றபடி வாசலிலே தேங்கி நின்றான் கதிர். 
அவள் உள்ளே வருகையிலே எதிர் வந்த பாட்டியைக் கண்டு கொண்டவள் குதூகலமாகக் கட்டிக்கொண்டாள். வெகு நாட்களுக்குப் பின் அவர்களைப் பார்க்கும் சந்தோஷம் அவளுக்கு, அவளைச் சந்தோஷமாகப் பார்க்கும் சந்தோஷம் அவர்களுக்கு! 
சந்திரா விலக, முதல் கேள்வியே, “உன்னை ஒன்னுமில்லாம வந்தவன்னு சொன்னால அந்த தனவதி? இதே கேள்வியை அவளைப் பார்த்து கேட்டா என்ன சொல்லுவாளாம்? நான் பார்த்து குலசேகரனுக்குக் கட்டி வைச்சேன், என் பேத்தியைச் சொல்லுவாளா அவா? கூப்பிடு அவளை?” எனக் கொதித்த வள்ளியம்மை சந்திராவை முடுக்கினார். 
அதன் பின்னே, நினைவு வந்தவளாகத் திரும்பி வாசலைப் பார்க்க, கதிர் முகம் இறுக நின்றிருக்க, அவனைக் கவனித்தவர், “உள்ள வாலே..” என வரவேற்றார்.
“கொஞ்சம் வேலையிருக்கு, அவளை பார்த்துக்கோங்க..” என்றவன், சந்திராவிடம் திரும்பி, “மில்லுக்கு போயிட்டு வாறேன். கவனமாயிரு” என வாசலோடு கிளம்பியிருந்தான். 
அவனுக்கு தலையசைத்த சந்தரவதனி தாத்தாவைக் காணும் துள்ளலில் பாட்டியோடு வீட்டிற்குள் சென்றாள்.  

Advertisement