Advertisement

இடிந்து போய் விழுந்த தனவதி பெரும் குரலில் ஒப்பாரி வைத்து அழ, ரேவதியும் மாலதியும் அன்னையின் பின்னே விசும்பிக் கொண்டிருந்தனர். கதிருக்குத் தந்தையோடு அவன் உயிரே போனது போலிருந்தது, அவனின் மொத்த தைரியமும் அவர் தான், அவர் இழப்பை அவன் நம்புவதற்கே நேரம் தேவையாகிப் போக, கண்ணீர் விடக்கூட இயலாது கல்லாய் இறுகிப் போனான். 
தந்தை நிழலில் இருக்கும் வரை அத்தனை பேரும் எதிர்காலம் குறித்த கவலையற்ற குழந்தைகள் தான். தந்தை தரும் பாதுகாப்பு உணர்வை யாரால் தந்துவிட இயலும். இனி என்ன செய்வேன்? எதிர்காலம் அறியாத கேள்வி பெரிதாய் மிரட்டியது. 
உறவினர்களோடு ஊருக்கு வர, இறுதிச்சடங்குகளை அவர்கள் முன்னெடுத்துச் செய்ய, கதிரும் தன் பொறுப்பை உணர்ந்து இறுதிக் கடமைகளைச் செய்தான். 
தகவல் அறிந்து நாராயணன் குடும்பத்தில் மனோ, சந்திராவைத் தவிரப் பெரியோர்கள் அனைவரும் ஊருக்கு வர, மாலை நேரமாகி இருந்தது. துக்கம் விசாரிக்க வந்தவர்களைக் குற்றவாளிகளாக தனவதி குற்றம் சாட்ட, கதிரோ அவர்களை வாசல் வரை கூட விடவில்லை. 
அடங்கியிருந்த வேதனை, ஆத்திரம், கோபம் எல்லாம் மொத்தமாக வெடித்தது. பெரிதாகக் கத்தி, சண்டையிட்டு, அவர்கள் உறவே வேண்டாமென்று மொத்தமாக அன்றோடு ஒதுங்கி விட்டான் கதிர். அவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை, அவன் கோபம் குறையவும் சமாதானம் செய்வோம் என்றெண்ணித் திரும்பி விட்டனர். 
ஆனாலும் கதிருக்குப் பொங்கிய வெறி அடங்கவில்லை, அடுத்த ஐந்து நிமிடத்தில் காவல் நிலையம் சென்றவன் தந்தையை அடித்தவர்கள் யாரோ தன்னோடு சண்டைக்கு வருமாறு வம்புக்கு நின்றான். அவர்கள் தான் ஏதோ செய்து விட்டார்கள் எனப் போராட்ட வெறியில் நிற்க, மீசை கூட அரும்பாத பொடியன் என அவர்களும் மிரட்டி அனுப்ப முயன்றனர்.  உறவினர்கள் தான் இரவு நேரம் பிடிவாதமாக இழுத்து வந்து கதிரை வீட்டில் விட்டுச் சென்றனர்.
விஷயம் அறிந்த சேர்மமூர்த்தி பெரிதும் அதிர்ந்தார். பயம் நெஞ்சைக் கவ்வியது. தனக்கு எதிராகப் புகார் கொடுக்கும் அளவிற்குத் தைரியம் இருக்கிறதா? தன்னை எதிர்க்கும் எண்ணம் இனி வரக்கூடாது எனும் அளவிற்கு மிரட்டத் தான் நினைத்திருந்தார். ஆனால் அது இவ்வாறு முடியும் என அவரே எதிர்பார்க்கவில்லை! 
அப்போது தான் ஊராட்சி மன்ற வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஊருக்குள் அனைவருமே குலசேகரன் நெஞ்சுவலியில் இறந்தார் என்றே நினைத்திருக்க, கதிரின் இந்த செயல் அவரை பயமுறுத்தி இருந்தது. குலசேகரனை வேகமும் வெறியும் பிடிவாதமும் அந்தச் சிறுவயதிலே கதிரிடம் இருக்கக் கண்டார். அத்தனை எளிதாக விட்டுவிட மாட்டான் என்றே தோன்றியது, என்னவோ கதிரின் மீது ஒரு பெரும் பயம்! 
கதிரை திண்ணையில் படுக்க வைத்துவிட்டு வந்திருந்த சொந்த பந்தமெல்லாம் சொல்லிக் கொள்ளாமல் சென்றிருந்தனர். பிள்ளைகளும் ஆளுக்கொரு பக்கம் முடங்கிவிட, நடுச்சாமத்தில் பின் கட்டில் ஏதோ சத்தம்! 
திடுக்கிட்ட தனவதி எழுந்து சென்று பார்க்கப் போனார். கணவன் இல்லாத முதல் நாளே ஆண் துணையில்லாத எதிர்காலம் நினைத்து பயம் வந்தது. பின் கட்டிற்குச் செல்ல ஒரு டார்ச் லைட்டை ஒளிர விட்டபடி நின்றிருந்தது சேர்மமூர்த்தி. 
கதிரின் மீதிருந்த பயத்திலே தனவதியை தனியாகச் சந்தித்தவர், சில லட்சங்களைக் கட்டுகளாக அவர் முன் நீட்டினார். 
ஏனென்றே காரணம் புரியாது சுற்றும் முற்றும் பார்த்து அவர் முழிக்க, “வாங்கிக்கங்க தனவதியம்மா. இதை வைச்சிக்கிட்டு பிள்ளைகளை கூட்டிட்டி ஊரை விட்டே போயிடுங்க” என்றார். 
ஏற்கனேவ பயத்திலிருந்தவர்  மேலும் அரண்டு போனார், “இப்படி திடீருன்னு போகச் சொன்னா புள்ளைக் குட்டிகளோடு சொந்த வீட்டை விட்டு நான் எங்க போவேன்?” என்றவர் அழுதார். 
ஏன் செல்ல வேண்டும்? என எதிர்க் கேள்வி கேட்கவோ, எதிர்த்து நிற்கவோ சிறிதும் தைரியமில்லை. 
“ஹோ! அப்போ இங்கையே இருந்து உங்க புருஷன் விட்டுப்போன நிலத்துல விவசாயம் பார்த்து, என்னை பகைச்சிக்கப் போறீங்களா? அந்த அளவுக்கு உங்களுக்குத் தைரியமிருக்கா? இப்போ நாராயணன் ஐயா நிலமும் என் கையில இரண்டு பக்கமிருந்தும் குடைச்சல் கொடுப்பேனே தாங்கிக்கிற வலு இருக்கா?” என்றார். கேள்வி தான் என்றாலும் அது கூட தனவதிக்கு மிரட்டலாகத் தான் தெரிந்தது. 
“இல்லை நான் வர மாட்டேன். எப்பவுமே அந்த நிலத்துக்குள்ள நான் வர மாட்டேன்” என்றவர் சொல்லும் போதே, “நீங்க மட்டுமில்லை கதிரும் தான். அதுக்கு தான் இந்தப் பணம்!” என்க, தனவதி மேலும் நொந்து போனார். 
“அவங்க அப்பா விட்டுட்டுப் போனதை செய்றேன்னு கதிர் அந்த நிலத்துல விவசாயம் பார்க்க வரக் கூடாது, அவங்க அப்பா இறப்புக்கு நியாயம் கேட்குதேன், போராடுறேன்னு எதுவும் செய்யக்கூடாது. எனக்குக் குடைச்சல் இல்லாம இருந்தால் விட்டு வைப்பேன், இல்லை குடும்பத்தோட சீரழிய வேண்டி இருக்கும். இரண்டு வயசு பிள்ளைகளை வைச்சி இருக்கீங்க அதுக வாழ்க்கையாவது யோசிப்பீங்கன்னு நினைக்குதேன். இந்தாங்க வாங்கிக்கங்க.. எத்தனை வருஷமானாலும் இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாது” என்றவர் மீண்டும் பணத்தை நீட்டினார். 
தனவதி நின்று முழுதாய் ஒரு நொடி யோசித்தார் பின் மனம் கனக்க, கை நீட்டி பணத்தைப் பெற்றுக் கொண்டார். 
அதிகாலை நேரம் கதிரை தேட அவன் எங்குமே இல்லை. அவர்கள் வயலில் பார்த்தாக பால்காரன் சொல்லிச் செல்ல, தனவதி வயலுக்கு ஓடிச் செல்ல, அப்போது தான் விழித்திருந்த மாலதியும் ரேவதியுமே என்னவென்று புரியாது அறை உறக்க நிலையில் அன்னையின் பின் ஓடினர். இரவே உறக்கம் துளியுமின்றி தந்தையின் நினைவோடு தவித்தவன் சிறிதும் பயமின்றி வயலுக்கு வந்து வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டான். விடிந்ததும் தெரியவில்லை, தன்னை நோக்கி ஓடி வரும் தனவதியுமே கதிருக்குத் தெரியவில்லை. 
பெரிதாய் மூச்சு வாங்க, “ஏன் ராசா இங்க வந்து உக்காத்திருக்க? வீட்டுக்கு வாயா?” என அழைத்தார். 
“ம்ம், அப்பா வடக்கு பக்கம் வரைக்கும் தண்ணீர் பாய்ச்சி இருக்கார். மிச்சம் கிடக்குதுல தெக்குப்பக்கம் நான் பாய்ச்சப் போறேன்” எனத் தந்தையின் வேலையைத் தான் தொடரப் போவதாக உரைத்தவன் எழுந்து மண்வெட்டியைத் தூக்கினான். 
அதிர்ந்த போன தனவதி, “வேண்டாம் ராசா, இது இதுவுமே நமக்கு வேண்டாம். உங்க அப்பா உயிர் போனதே இதால தான் ராசியில்லாத நிலம். நமக்கு பிரச்சனையே வேண்டாம், ஒதுங்கிப் போயிடலாம், விட்டுட்டு வீட்டுக்கு வந்திரு” எனக் கண்ணீரோடு கெஞ்சினார். 
“ஏன் சின்னம்மா? நாம யாருக்கு பயப்படணும்? ஏன் பயப்படணும்?” என்றவன் வலியோடு வைராக்கியமாக நிற்க, “உன்னை விட்டா எங்களுக்கு யார் இருக்க? உன் தங்கச்சிகளை நினைச்சிக்கோயா? வந்திரு” என்றவரோ அதற்கு மேலும் கண்ணீர் வடித்தார். 
அதற்குள் பெண்பிள்ளைகள் இருவரும் ஓடி வந்திருக்க, ரேவதி வந்து அன்னையைக் கட்டிக் கொள்ள, மாலதி அண்ணன் வீட்டிற்கு வர மறுக்கிறான் என நினைத்து அவன் கைகளைப் பற்றி இழுத்தபடி, “வீட்டுக்கு வாண்ணா..” என்றாள் விழி நிறைந்த நீரோடு. 
தனவதியின் கண்ணீர் கண்டு பெண்பிள்ளைகள் இருவரும் அழுது விட்டனர். அதில் ரேவதி, “அந்த வீடு உன் வீடாம்,  அப்பா இல்லைன்னா எங்க எல்லாரையும் வீட்டை விட்டு எங்க அம்மாச்சி ஊருக்கே அனுப்பிட்டுவியாம்? அதுக்கு தான் வர மாட்டேங்கிறீயா?” என்றாள் பெரும் குற்றம் கண்டது போல். 
வந்திருந்த உறவுகளின் ஒரு சிலரின் உளறல்கள் அவ்வாறு அவளுக்குப் புரிந்திருந்திருந்தது. 
“நீ இல்லாம நாங்க ஊருக்கு எல்லாம் போகமாட்டோம், அப்பா இல்லை இனி யாரு இருக்கா எங்களுக்கு?” என்ற மாலதி உரிமையோடு பற்றிய அவன் கையை விடவேயில்லை. 
கதிருக்குச் சுருக்கென்று நெஞ்சில் தைத்தது, அவர்களின் கண்ணீர் அவனை உருக்கியது. அவர்களுக்குக் கடமைப்பட்டவன் என்ற உணர்வை தூண்டியது. நிலம் மட்டுமல்ல இந்த குடும்பத்தையும் தானே பாதியில் விட்டுச் சென்றிருக்கிறார்!
அன்னையின் முகம் அறியாதவனுக்கு அன்னையென்று அறிந்ததெல்லாம் தனவதியின் முகம் தான்! பிறந்த நாள் முதல் தங்கைகள் இருவரும் அவனுக்குச் சந்தோஷம் தரும் தேவதைகள்! அவர்கள் கலங்க, அவனால் தாங்க முடியவில்லை. 
கதிருக்கும் கண்கள்.கலங்கி விட, “யார் சொன்னது அப்படியெல்லாம்?” என அதட்டலாகக் கேட்டவன், “அப்படியெல்லாம் இல்லை நாம எப்பவும் ஒரு குடும்பம் தான். நீங்க வீட்டுக்குப் போங்க நான் குளிச்சிட்டு வாரேன்” என அனுப்பினான். 
தனவதிக்கு அந்த வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை. பெரியவர் அவர் கூட அவ்வளவு நினைக்கவில்லை. குற்றவுணர்வில் நெஞ்சம் விம்ம, வார்தையின்றி குறுகியவர் வெடித்த அழுகையோடு அவனை நோக்கி கரம் குவித்தார். 
தடுத்தவன் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். பின் ஆற்றில் குளித்து விட்டுக் கரை ஏறினான். அன்று விட்டவன் அதன் பின் அந்த நிலத்தில் நிழலுக்குக் கூட ஒதுங்கவில்லை. தூரத்தில் சாலையில் செல்லும் போதெல்லாம் ஏக்கமாய் எட்டி ஒரு பார்வை பார்ப்பான். 
அடுத்த நாளிலிருந்து பள்ளி, படிப்பு, விளையாட்டு என அனைத்தையும் மறந்து தினக்கூலியாக வேலைக்குச் சென்றான். குடும்பம் தான் அனைத்திற்கும் முதலாய் முன்னின்றது. தந்தையில்ல இடத்தில் தான் நிற்க வேண்டும் எதற்கும் இவர்களை வாட விடக்கூடாது என்ற பொறுப்புணர்வு தானாக வந்திருந்தது.

Advertisement