Advertisement

அத்தியாயம் 20
இளங்கதிர் பள்ளிப் பருவத்தின் மேல்நிலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். சந்திராவின் தாத்தா முதல் அனைவருமே சென்னையில் குடியேறி விட்டனர். பெரியவர்கள் கிளம்பும் நேரம் வரதராஜனும் நாராயணனும் வீட்டையும் நிலத்தையும் கவனித்துக் கொள்ளும் படி குலசேகரனிடம் வேண்டினர். அவர்கள் செல்லாவிடினும் அவர் பாதுகாப்பார் தான், பெரியவரே கேட்டுவிட, அது அவருக்கு தெய்வத்திற்கு ஆற்றும் திருப்பணி போன்று, கடமைப்பட்டவன் என்ற உணர்வைத் தந்திருந்தது. 
பொறுப்பான தலை மகன், அன்பான பெண் பிள்ளைகள், கனிவான மனைவி என அழகான குடும்ப அமைப்பில் மகிழ்வோடு வாழ்ந்தார் குலசேகரன். பெரிதான சேமிப்புகள் எதுவுமில்லை, நான்கு வருடங்கள் முன் கட்டிய வீடு மட்டுமிருந்தது. விவசாய நிலமிருந்தது, உழைக்கும் திடம் உடலிலிருந்தது. ஊருக்குள், மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பு இருந்தது. 
அது தான் சேர்மமூர்த்தியின் கண்களை உறுத்தியது. ஊர்த்தலைவர் நோய்வாய்ப்பட்டிருக்க, அவர் இறப்பிற்குப் பின், தான் ஊராட்சி தேர்தலில் நிற்கும் ஆசையிருந்தது. அவரிடமிருக்கும் செல்வ நிலைமைக்கு ஜெவித்துவிடுவார் தான் ஆனால் அதற்குக் குலசேகரன் போட்டியாக வராமல் இருக்க வேண்டும். 
பக்கத்துப் பக்கத்து வயலாக வேறு இருக்க, சேர்மமூர்த்தியின் கண்கள் எப்போதும் குலசேகரனின் மீது தான். சேர்மமூர்த்தி தன்னை போட்டியாக நினைப்பது கூட அறியாது அவர் இயல்போடு அவர் இருந்தார். குலசேகரின் நிறைவான வாழ்வு சேர்மமூர்த்தி வெகுவாக வயிற்றெரிச்சல் கொள்ளச் செய்தது. அவரை முன்னேற விடாது அமுக்கி வைக்க வேண்டும், எழவே விடாது அடக்கி வைக்க வேண்டுமென்று நினைத்தவர் மெல்ல குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். 
முதலில் குலசேகரின் வயலுக்குச் செல்லும் வாய்க்கால் நீரை அடைத்தார், பின் வேலையாட்களைச் செல்ல விடாது, தனது தொழிலில் அதிக கூலிக்கு அமர்த்திக் கொண்டார். அதன் பின்பு தான் குலசேகரனுக்கும் புரிய ஆரம்பித்தது. அப்போதும் விவசாயத்தை விடாது, குலசேகரன் கடுமையாக உழைக்க, கதிரும் உதவினான். சிறுவயதிலிருந்தே ஆர்வமோடு தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டவன் இளங்கதிர். 
அவர்களின் குறையாத உத்வேகம் சேர்மமூர்த்தியை மேலும் வெறியேற்றியது, அடுத்ததாக அவர் நிலத்தைச் சுற்றி மின்சார வேலி அமைக்க, அனைவருமே வியப்பாகத் தான் பார்த்தனர். அந்த நேரம் அத்தனை செலவில் சுற்று வட்டாரத்தில் யாருமே மின்சார வேலிகள் அமைத்ததில்லை. அதன் வீரியம் அவ்வழியாக வரும் குலசேகரின் கால்நடைகள் பாதிக்கப்படுகையில் தான் புரிந்தது, வியப்பாகப் பார்த்தவர்கள் எல்லாம் பரிதாபமாக பார்வையை மாற்றினர். குலசேகரன் கண்ணீர் வடிய, கலங்கிப் போனார். வாயில்லா ஜீவராசிகள் துடிக்க அவர் மனம் தாங்கவில்லை. போதும் வேண்டவே வேண்டாமென மொத்தமாக கால்நடை வளர்ப்பை நிறுத்தினார். 
தொடர்ந்த அடுத்தடுத்த அடிகள், பொறுமையாக இருந்தவரின் பொறுமைகள் எல்லாம் நொறுங்க, சேர்ம மூர்த்தியைத் தட்டிக் கேட்டார். அதற்காகவே காத்திருந்தது போல் சேர்மமூர்த்தி தகராறு செய்ய, அவ்வப்போது இருவருக்குள்ளும் சண்டையும் கைகலப்பும் பிரச்சனையுமாகத் தான் இருந்தது. 
குலசேகரின் நிம்மதி குலைந்த போதும் அத்தனை இம்சைகளையும் தாங்கிக் கொண்டு விடாது அவர் நிலத்தில் விவசாயம் செய்தார். ஆனால் அதிகம் தாக்குப்பிடிக்க முடியவில்லை, ஒரு வருடத்தில் எல்லாம் ஓய்ந்தநிலை! வீட்டிலிருக்கும் பெண்களின் நகைகள் வரை வங்கியில் அடைமானமாக அடைக்கப்பட்டது. பார்த்திருந்த கதிருக்கு அனைத்தும் புரிந்தது, சேர்மமூர்த்தியை வெட்டி வீசும் ஆவேசமிருந்ததே தவிர, பிரச்சனை தீர்க்கும் யோசனை வரவில்லை. 
பெண்பிள்ளைகளுக்கு குடும்ப கஷ்டம் தெரிந்ததே தவிர, காரணம் தெரியவில்லை. இடைப்பட்ட நாட்களில் முடியாமலிருந்த ஊர் தலைவரும் காலமாகியிருந்தார். 
அன்றொரு நாள் காலை நாராயணனின் நிலத்தை பார்வையிடச் செல்ல, அங்கிருக்கும் தேக்கு, சந்தனமரங்கள் வெட்டப்பட்ட அடையாளங்கள் இருந்தது. பெரியவர்கள் பின் வரும் சந்ததியினருக்குச் சேர்த்து வைத்த செல்வங்கள் அவை! வார வாரம் தண்ணீர் இரைத்து, பராமரித்து வந்தது குலசேகரன் தான். ஒரே நாளில் இரவோடு இரவாக வெட்டப்பட்டு, மரக்கட்டைகளும் கடத்தப்பட்டிருக்கிறது என்றால் அது சேர்மமூர்த்தியின் வேலையாகத் தான் இருக்குமென நினைத்தார். அந்த அளவிற்கு வேலையாட்கள் பலமும், வாகன வசதிகளும் ஊரில் அவரிடம் மட்டும் தானிருந்தது. 
தங்கள் நிலத்தைத் தாண்டி நாராயணன் நிலம் வரை சென்றதைக் குலசேகரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே நேரம் சேர்மமூர்த்தி தேர்தலில் நிற்பதற்கான ஏற்பாட்டிலிருந்தார், அது தான் அவருக்கு அரசியலில் முதல் அடி. அரசியலில் நீண்ட பாதையை வகுத்துக் கொள்ளும் ஆசை அவருக்கு அதிகமிருந்தது. 
அதற்கு மேலும் அமைதி கொள்ள இயலாது, குலசேகரன் அருகே இருக்கும் சிறிய காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து வந்தார். ஊருக்குள்ளும் இவ்விஷயம் அரசல் புரசலாகப் பேசு பொருளாகியது, காவலர் ஒருவர் சேர்மமூர்த்தியை விசாரணைக்கு அழைக்க வர, வீட்டிலிருந்தது புது மனைவி அம்சவேணி மட்டுமே! காவலர் விஷயம் தெரிவித்துச் சென்றிருக்க, உடனே சென்னைக்குச் சென்றிருந்த கணவன் சேர்மமூர்த்திக்கு அழைத்து அனைத்தையும் தெரிவித்தார் அம்சவேணி. 
தன்னை எதிர்க்கும் அளவு துணிந்து விட்டானா? என குலசேகரனின் மீது கோபம் கொண்டு அவர் கொதிக்க, அம்சவேணியோ அங்கிருந்தபடியே பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேறு யோசனை தெரிவித்திருந்தார். 
வரதராஜன் அப்போது தான் அவரது தொழிலை பெரும் முதலீட்டில் விரிவிபடுத்தி இருந்தார். ஆம்னிபஸ்கள் மட்டுமே முதலில் ஓடிக் கொண்டிருக்க, கால் டாக்ஸ்சிக்களில் கையிருப்பு அனைத்தையும் போட்டு இந்தியாவின் அத்தனை பெரும் நகரங்களில் எல்லாம் தொடங்கியிருந்தார். அதைப் பிரபலப்படுத்த விளம்பரச் செலவுகள் என ரிதாக இழுத்தும் வைத்திருந்தார். பெயரும் ஓரளவிற்குப் பிரபலமாகி வரும் நேரம், சரியாக மனோ கல்லூரிப் படிப்பை அப்போது தான் நிறைவு செய்திருந்தான். 
மறுநாளே காரொன்றை எடுத்துக் கொண்டு, நண்பர்கள் சிலரோடு சுற்றுலாவிற்கு எனக்  கோவா சென்றிருந்தவன் மூன்று நாட்கள் கொண்டாடிவிட்டு ஊர் திரும்பினான். அப்போது எல்லையில் வாகனச் சோதனையின் போது மனோவின் நண்பர்களிடம் போதை வஸ்துக்கள் இருக்க, மொத்தமாகச் சிக்கினர். இதில் அவர்கள் நிறுவத்தின் வாகனமும் நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டு இழுபடப் பதறிப்போனார் வரதராஜன். 
மொத்தமாக அனைவரும் கைது செய்துவிட, அதிகாலையில் வரதராஜனுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மகன் மாட்டிக்கொண்டான் என்பதை விட, நிறுவனத்தின் பெயர் கலங்கப்படுவதையும் தொழில் சரிவதையும் தான் அவரால் தாங்க இயலவில்லை. அத்தனை வருட கடும் உழைப்பு, பெரும் முதலீடு, வாழ்வாதாரம், மொத்த குடும்பத்திற்குமான எதிர்காலம் என்றே தான் கலங்கிப் போனார். 
எத்தனை செலவானாலும் தங்கள் பெயர் வெளியில் தெரியாமல் பிரச்சனையை முடிக்க நினைத்தவர், பெரியதொரு பெயர் பெற்ற வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்க வீட்டிற்கு அழைந்திருந்தார். 
சரியாக அன்று காலை சேர்மமூர்த்தி வரதராஜனின் வீட்டிற்கு வருகை புரிய, ஊர்க்காரன் என்ற பூரிப்பில் வீட்டினர் அனைவரும் சிறப்பாக வரவேற்றனர். 
பிரச்சனை வெளியே தெரியாமல் இருக்கவும், மனோவை வெளியே கொண்டுவரவும் பெரும் தொகை ஒன்றை வழக்கறிஞர் பேச, வரதராஜனுக்கு வேறு வழியிருக்கவில்லை ஆகையால் சம்மதித்தார். 
அதே நேரம் சொத்து பத்தாகவோ அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பரிவர்த்தனையோ அல்லாது கையில் பணமாகத் தான் வேண்டுமென்றார். வரதராஜனிடம் அவ்வளவு இருப்பு இல்லாது முழித்து நிற்க, அனைத்தையும் கவனித்திருந்த சேர்மமூர்த்தி சட்டென, முன் வந்து தன் கையிலிருந்து கொடுத்தனுப்பினார். 
அவர் செல்ல அதன் பின்னே ஆசுவாசமானவர், “ரொம்ப நன்றி சேர்மா.. கூடிய சீக்கிரம் இங்க ஒரு பிளாட் இருக்கு வித்துக் கொடுத்துறேன்லே” என்றார் கரம்பற்றி நன்றியோடு.
பின்னின்ற நாராயணன் அதையே தெரிவிக்க, குடும்பமே நன்றி உணர்வோடு பார்க்க, “அவசரமே இல்லை, உங்களுக்கு தோதுபடுறப் போது தாங்க” என்றார் இன்முகமாக.
அதன் பின் காலை விருந்து பரிமாறியவாறே, “என்ன விஷயம்லே இவ்வளவு தூரம் வந்திருக்க?” என்றார் மரகதவல்லி. 
“சும்மா பார்த்துட்டுப் போவாலாம்னு வந்தேன், வேற ஒன்னுமில்லலை ஆத்தா! ஊருக்கு மேற்குப்புறம் என் வாயலுப் பக்கமா உங்க வயல் இருக்கே அதை கொடுத்திகன்னா அதுலையும் அப்படியே சேர்ந்து இந்த வருஷ அறுவடை வைச்சிப்பேன்” என்றார் வேண்டுதலாக. 
உதவி செய்தவனுக்கு மறுப்பது நியாயமில்லையே என அனைவரும் நினைக்க, சட்டென ஒரு நிமிடம் யோசித்த நாராயணன், “நீ வேணா ஒரு பத்து வருஷத்துக்கு ஒத்தியா எடுத்துக்கோலே, எனக்கு அந்த நிலத்தை விக்க விருப்பமில்லை” என்றார் உறுதியாக. 
சேர்மமூர்த்திக்கு ஏமாற்றம் தான் இருந்தும் கிடைத்தது போதுமென, பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டார். 
ஊரில் நடந்த பிரச்சனைகள் எதுவும் இவர்களுக்குத் தெரியாது, குலசேகரின் சொல்லிக்கொள்ளவில்லை. அப்போதெல்லாம் அஞ்சல் அலுவலகத்திலிருக்கும் ஒரு தொலைபேசி தான், அதிலும் எப்போதாவது பேசிக்கொள்வார்கள், குடும்பக் கஷ்டம் எனச் சொல்ல, உதவியை எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்றெண்ணி குலசேகரன் எதையும் தெரிவிக்கவில்லை. 
அன்றே ஊர் திரும்பிய சேர்மமூர்த்தி விசாரணைக்கு காவல் நிலையம் சென்றார். அங்கு ஒப்பந்தப் பத்திரத்தைக் காட்டியவர், தனக்கு உரிமைப்பட்ட நிலத்தில் தான் மரத்தை வெட்டியதாகவும், தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் குலசேகரன் பொய் புகார் கொடுத்தாகவும் தெரிவிந்தார். 
கொஞ்சம் கையூட்டு கொடுத்து அவர்களையும் தனக்குச் சாதமாக வளைத்துக் கொண்டார். இதில் மீண்டும் குலசேகரனை விசாரணைக்கு அழைத்த காவலர்கள், சேர்மமூர்த்தியின் பக்கம் நியாயமிருப்பதாக உரைக்க, குலசேகரன் நம்ப மறுக்க, ஒப்பந்தப் பத்திரத்தைக் காட்டினார். பார்த்த குலசேகரன் இதயம் அடைக்க, அதிர்ந்தே போனார். அப்போதும் அவர் நம்ப மறுக்க, அவர்களோ சேர்மமூர்த்திக்கு சாதமாக அவரை மிரட்டினர். அதிலும் மிரட்டுதல் என்பது அவர்கள் மொழியில் தாக்குதல்! 
பள்ளி சென்று திரும்பி வந்த பிள்ளைகள் தந்தையை எதிர்பார்த்திருக்க, வீட்டில் ஒரு பெரும் மௌனம்  சூழ்ந்தநிலை. உள்காயங்களோடு சற்று இரத்தம் கன்றி, முகமும் வீங்கிய நிலையில் இரவு வீடு திரும்பினார் குலசேகரன். 
தனவதியோடு அனைவருமே பதறிப்போனர். உடலின் வலியோடு மனதில் தான் பெரும் வலி! வரதராஜனின் செயலை நினைக்க நினைக்க மனம் தாங்கவே இல்லை குலசேகரனுக்கு. சேர்மமூர்த்தியிடம் கொடுக்கும் முன் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்கலாமே! இத்தனை வருடமும் அவன் சொன்ன ஒரு வார்த்தைக்காகப் பாதுகாத்திருந்தே! என்றெல்லாம் புலம்பினார். 
அவர் மனதில் அத்தனை வேதனை! அந்த நிமிட வருத்தம், மூச்சு விடாது அவர் புலம்ப, தனவதி ஆறுதல் சொல்லாது நாராயணன் குடும்பமே துரோகிகள் என தூபமிட்டுக் கொண்டிருந்தார். 
பார்த்திருந்த பிள்ளைகள் மூவர் மனதிலும் அது தான் ஆழப் பதிந்து போனது. ரேவதிக்கும், மாலதிக்கும் அவர் வயதிற்குத் தோழியான சந்திராவின் மீது தான் வெறுப்பு வேரூன்றியது! தன் முகம் பார்த்திருக்கும் பிள்ளைகளின் முகம் பார்த்த பின்பே சற்று அமைதியடைந்த குலசேகரன், தன் கலக்கத்தை அவர்கள் முன் காட்டாது, பிள்ளைகளை உண்ண வைத்து, உறங்க வைத்தார். 
வீடே பெரும் இருள் சூழ்ந்ததைப் போன்று மயான அமைதியிலிருந்தது. தனவதிக்கு என்னவோ மனதைப் பிசைந்தது. யாருக்குமே அன்றிரவு சரி வர, உறக்கமில்லை. அதிகாலை நேரம் குலசேகரன் நெஞ்சுவலி என மார்பை அழுத்திப் பிடிக்க, பதறிப் போன தனவதி கதிரை எழுப்பினார். கதிர் உடனே ஊருக்குள் சென்று கருப்பட்டியின் தந்தை, சில உறவுகளை அழைத்து வர, அவர்கள் உதவியுடன் குலசேகரனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். ஆனாலும் பலனில்லை, குலசேகரனின் உயிர் உடலிலிருந்து பிரிந்திருந்தது!

Advertisement