Advertisement

காலையிலே வேலையாட்கள் வேலை செய்ய, கதிர் மேற்பார்வை பார்த்து கொண்டிருக்க, சேர்மமூர்த்தி, அவர் உதவியாளர் மற்றும் இருவரோடு வந்தார். 
“கதிரு உடனடியா வேலையை நிறுத்து” என்றவர் அதிகாரமாகச் சொல்ல, “ஏன்? என் இடம் நான் செய்றேன், இதுல உங்களுக்கு என்ன இடைஞ்சல்?” என விஷயம் அறிந்தும் அறியாதவன் போலே கேட்டான். 
முகம் இறுகியவர், “ஏதா இருந்தாலும் உன் இடத்தோட நிறுத்திக்கோ, ஆனால் நாராயணன் ஐயா இடத்துக்குள்ள நீ கால் வைக்கக் கூடாதுல. உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன், அந்த நிலத்தை எங்கிட்ட ஒத்திக்கு (ஒப்பந்தத்தில்) விட்டு இருக்காங்க. எனக்கு உரிமைப்பட்டது நீ உள்ள நுழையக் கூடாது” எனப் பல்லைக் கடித்தார். 
“தாத்தா நிலமா இருந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன் தான், ஆனால் இது என் மனைவியோடது, எனக்கும் அதுல உரிமை இருக்கு. ஒருவேளை நீங்க ஒத்திக்கு எடுத்து ஏமாந்திருந்தீங்கன்னா நேரா போய் சம்மந்தப்பட்டவுங்ககிட்ட பேசிக்கோங்க. சும்மா என்னை மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம்” என்ற கதிர் சிறிதும் அசராது பதில் உரைத்தான். 
கோபமும் துவேஷமுமாக முறைத்த சேர்மமூர்த்தி, “வேண்டாம் கதிரு, நீ ஏற்கனவே பாதிக்கப்பட்டவன் அந்த ஞாபகம் கொஞ்சமாவது இருக்கட்டும்ல..” என மறைமுகமாக மிரட்ட, “ஆமாம்ல அந்த கோபமும் இன்னும் அடி மனசுல அப்படியே தான் இருக்கும். அதுவும் போக நான் இன்னும் அதே பொடியன் இல்லை. உங்களுக்கே ஏன் உயரம் தெரியும்னு நினைக்கிறேன்” என அவனும் பதிலிலே சவால் விட்டான். 
சேர்மமூர்த்திக்கு முகமே சினத்தில் சிவந்தது, அவர் பின்னிருந்திருந்த பயில்வான் ஒருவன், “என்னால செய்வ? ஊர்த் தலைவரு, ஐயாவே இவ்வளவு தூரம் வந்து சொல்லுதாறுல கேட்க மாட்டியோ?” என்றவன் எகிற, “எலும்புத் துண்டுக்கு நாய் தான் வாலாட்டணும், எனக்கு என்ன?” என்றவன் அசட்டையாகக் கேட்டான். 
அதற்குள் பொறுமை இழந்த மற்றொருவன் கையோங்க, சட்டெனக் கதிர் தன் முகத்திற்கு நேராக வந்த அவன் கைகளை மடக்கி உதைக்க, வரப்பிலிருந்து நிலத்திற்குள் விழுந்தான். வேலையாட்கள் அப்படியே வேலையை நிறுத்த, சேர்மமூர்த்தி கைகலப்பு வேண்டாமென்று சொல்லும் முன் மற்றொரு அடியாளும் பாய்ந்து வந்தான். அதற்குள் சுற்றி இருக்கும் நிலத்துக்காரர்கள், ஊர் பெரியவர்கள், சாலையில் செல்பவர்கள் என ஒரு கூட்டமே சேர்ந்திருந்தது. 
தனவதி பின் கட்டிலிருக்க, சந்திரா வாசலில் வற்றல் காய வைத்துக்கொண்டிருக்க, கதிரிடம் சிலம்பம் கற்கும் சிறுவன் ஒருவன் ஓடி வந்து சந்திராவிடம் விஷயத்தைத் தெரிவித்தான். மறுநொடியே அவளும் அவள் ஸ்கூட்டியை இயக்கிக்கொண்டு அவ்விடம் சென்றாள். 
கைகலப்பை அடக்கிப் பேச்சு வார்த்தையைத் துவங்கியிருந்தனர். அத்தனை பேரும் ஒரு பெரிய வேப்பமரத்தின் அடியில் நிற்க, விரைந்து வந்த சந்திரா அருகில் வந்ததுமே பார்வையால் கதிரை அளந்திருந்தாள், வெள்ளைச் சட்டை அழுக்குப்படச் சற்று கசங்கியிருந்தது மற்றபடி காயமேதுமில்லை. அதிலே ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டவள் அவன் அருகே சென்று நின்றாள். 
“நீ எதுக்குல இங்க வந்த?” என்ற கதிர் கண்டிக்கும் போதே, “நம்ம பிரச்சனை, நான் தான் பேசணும்” எனப் பிடிவாதமாக நின்றாள். 
“கதிர் நிலத்துல அவன் என்ன வேணா செய்துகட்டும், ஆனால் நாராயணன் ஐயா நிலத்தை அவன் தொடக்கூடாது. அது எங்கிட்ட ஒப்பந்தத்துல இருக்கு” என மீண்டும் சேர்மமூர்த்தி அதையே சொல்ல, மறுத்த சந்திரா, “தாத்தாவோடது இல்லை, அது இப்போ என்னோட நிலம். அன்ட் உங்ககிட்ட ஒத்திக்கு வைச்சது பத்து வருஷத்துக்குத் தான். அது முடிச்சி இரண்டு வருஷமாச்சு, முடியவும் தான் தாத்தா நிலத்தை எங்கிட்ட கொடுத்து இருக்காங்க. இனி நீங்கப் பிரச்சனை செய்யக் கூடாது” என்றவள் தனது அலைபேசியில் இருக்கும் பத்திரத்தின் புகைப்படத்தைக் காட்டினாள். 
“உன் பெயருல இருக்கலாம்மா ஆனால் பதினைந்து வருஷத்துக்குள்ளல ஒப்பந்தம் எழுதிக் கொடுத்திருக்காங்க. அது முடியிற வரைக்கும் எனக்குத் தான் உரிமை, நீங்க எதுவும் செய்ய முடியாது” என்ற சேர்மமூர்த்தியும் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டினார். 
அதிலும் அவ்வாறு தான் இருக்க, கதிர் சந்திரா இருவருமே மறுத்தனர். “உங்களுக்கு எப்படிப்பா விவரம் தெரியும்? அப்போ நீங்க சின்னப்பிள்ளைங்களே” என அவர்களை சேர்மமூர்த்தி ஆதரவாளர்கள் அடக்க முயன்றனர்.
மறுத்த கதிர், “சின்னபிள்ளையா? பதினேழு வயசு என்ன விவரம் தெரியாத வயசா?” என எகிற, “நான் கோர்ட்ல கேஸ் போட்டு, பத்திரத்தோட தன்மையைச் சோதித்து அங்க பார்த்துக்கிறேன்” என நின்றாள் சந்திரா. 
பஞ்சாயத்து பெரியவர்களால் யாருக்கும் சாதகமாகப் பேச இயலவில்லை. இப்போதைக்குக் கதிர் அதில் எதுவும் செய்யக்கூடாது என்றும் சந்திரா வீட்டுப் பெரியவர்கள் வர வேண்டுமென்றும் அதன் பின்னே பஞ்சாயத்து பேச முடியும் என்றும் உரைத்தனர். இல்லையெனில் காவல் நிலையம் சென்று சட்டப்படி பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியவர்கள், முடிவு வரும் வரைக்கும் கைகலப்பு, பிரச்சனை எதுவும் செய்யக் கூடாதென இரு தரப்பினரிடமும் வாக்குறுதி வாங்கிய பின் கூட்டத்தை முடித்தனர். 
மிகுந்த ஆத்திரத்தில் இருவரையும் ஒரு பார்வை பார்த்த சேர்மமூர்த்தி புல்லட்டை உதைத்துக் கொண்டு சென்றார். கதிருக்கும் எரிச்சல், கோபம், பல்லைக் கடித்து நிற்க, வேலையாட்கள் அவன் முகத்தைப் பார்த்து நின்றனர். 
“இன்னும் என்ன இங்கேயே பார்த்துட்டு நிக்குறீங்க, என்னோட வயலை மட்டும் சுத்தப்படுத்துங்க போங்க” என்றவன் எரிய, “இவங்க என்ன செய்தாங்க? ஏன் கத்துறீங்க?” என நியாயம் பேசினாள் சந்திரா. 
அவன் இருக்கும் எரிச்சலில் அளவு தெரியாது அவள் இடையிட, “ஆமாம் இவங்க ஒன்னும் செய்யலை, எல்லாம் உங்க தாத்தாவும் நீயும் செய்த வினை. இப்போ என் தலையை உருட்டுது” என்றவன் மேலும் கத்த, சுற்றுப்புறம் புரிய, பதிலின்றி மூக்கு விடைக்க முறைத்தவள் முன்னே நடந்தாள். 
சந்திரா சாலையை நோக்கி நடக்க, பதில் பேசாத அவள் மௌனம் அவனை மேலும் குடைய, அவள் பின்னே வந்தவனும், “இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை, உங்க தாத்தாவும் அப்பாவும் தான் பணத்துக்காக ஒத்திக்கு விட்டாங்க. அதனால பிரச்சனை வரும்னு தெரிஞ்சும் நீ இங்க தான் விவசாயம் செய்யணும்னு அடம் பண்ற?” என்றான். 
என்ன தான் கோபமாக இருந்த போதும் அவள் வரப்பில் நடக்கத் தடுமாறுகையில் எல்லாம் கைப்பிடித்துத் தாங்கி வந்து சாலையில் விட்டான். கதிர் அவன் வண்டியை இயக்க, சந்திராவும் அவள் வண்டியை இயக்கியபடி, “சும்மா இப்படிக் கத்தாதீங்க, அப்படி செய்திருக்காங்கன்னா அவங்க சூழ்நிலை என்ன? அவங்க தேவை என்ன? ஏன் அப்படி செய்தாங்கன்னு கொஞ்சமாது யோசிக்கணும் இல்லை விசாரிக்கணும். அந்த பொறுமை எல்லாம் உங்களுக்கு எப்பவும் கிடையாதே” எனக் குத்தியவள் முகத்தைச் சிலுப்பிக் கொண்டு சென்று விட்டாள். 
அதானே அவங்க வீட்டு ஆட்களை ஒரு நாளும் விட்டுக்கொடுக்க மாட்டாளே! போடி! என மனதில் நினைத்தவன் கண்டு கொள்ளாது அலைக்கு கிளம்பிச் சென்றான். 
வேலைகள் எல்லாம் முடிய பதினோரு மணியளவில் பக்கத்து வீட்டினரோடு பேசுகையில் தான் தனவதிக்கு நடந்த விஷங்கள் அனைத்தையும் தெரிந்தது. சந்திரா வெளியில் போனதும் தெரியாது, வந்ததும் தெரியாது அவருக்கு. இதைப்பற்றி சந்திரா எதுவும் சொல்லவில்லை என்றவர் நினைக்க, இது வரைக்கும் தானும் அவளை அவ்வாறு தானே நடத்தினோம் என குத்திக் காட்டியது மனசாட்சி. 
தனவதிக்கு பெரும் ஏமாற்றம், கதிர் சொல்லிய வாக்குறுதியைக் கண்மூடித் தனமாக நம்பியிருந்து விட்டேனே? என நொந்து கொண்டார். அனைத்தும் தன் கை மீறிச் சென்ற பின் இனி என்ன செய்வது என்ற கலக்கம்! இறுதியாக சந்திராவிடம் கெஞ்சி, பயமுறுத்தி, அழுதாவது கேட்டுப் பார்ப்போம் என நினைத்தவர் அவள் அறைக்குச் சென்றார். 
ஆனால் சந்திரா அங்கில்லை. எதிர் வீட்டிலிருப்பாளோ என நினைத்தவர் கலக்கத்தோடு வரவேற்பறையில் காத்திருக்க, மாலை நேரம் வாசலில் வண்டிச் சத்தம். அவர் எட்டிப் பார்ப்பதற்குள் விறுவிறுவென உள்ளே நுழைந்தார் சேர்மமூர்த்தி. 
வாசல் தாண்டிய முன் கூடத்தில், “தனவதியம்மா..” என்ற கோபக்குரலோடு நின்றிருக்க, பதைபதைப்போடு வந்தார் அவர். 
“நடந்த விஷயம் தெரியுமா? இல்லை உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு தான் சொல்லப் போறீங்களா?” என்றவர் காட்டமாக வினவ, “இல்லைங்க, இப்போ தான் தெரியும். கேள்விப்பட்டேன்” என்றவரின் குரலே உள்ளிறங்கியது. 
முகம் கடுகடுக்க, “என்னவோ சந்திரா ஊருலயே இல்லை, அவள் நிலத்துல என்ன வேணா செய்துக்கோங்க, யாரும் கேட்க மாட்டோம்னு எல்லாம் வாக்குக் கொடுத்தீங்க! இப்போ என்னாச்சு? ஒருவேளை நீங்களே உங்க மருமகளைத் தூண்டி விட்டீங்களா? பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுற கதையா?” என்றார். 
பதறிய தனவதி மறுப்போடு, “அப்படியெல்லாம் இல்லைங்க, அவ ஊருக்கே போகலைப் போல, எனக்கே விஷயம் அப்புறம் தான் தெரியும். பிரச்சனை வேண்டாம்னு சொல்லித் தான் வைச்சிருக்கேன். கொஞ்சம் அவகாசம் கொடுத்தா திருப்பவும் சொல்லி வைப்பேன்” என வேண்டினார். 
ஆனாலும் அவர் ஆதங்கம் அடங்கவில்லை, “இதை என்னை நம்பச் சொல்லுறீங்ளா? என்னவோ, பிரச்சனை எனக்கும் உங்க மருமவ சந்திராவுக்கும் தான், இதுல கதிர் ஏன் இடையில வரான்? வரக்கூடாதுல?” என்றவர் மிரட்டலாகக் கேட்க, ஆமென்று தலையாட்டிய தனவதி, தலை குனிந்தார். 
தொண்டையை செருமியவர், “பிரச்சனையை எந்த வழியில கொண்டு போனாலும் எனக்குச் சாதகமா முடிச்சிக்க எனக்குத் தெரியும், ஆனால் கதிர் இடையில வரக்கூடாது. பிரச்சனை எனக்கும் சந்திராவுக்கும் தானே? நான் கவனிச்சிக்கிறேன். நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது, கதிர் இந்த நிலப்பிரச்சனைக்குள்ள வரக் கூடாது, அதுவும் எனக்கு எதிரா வரவே கூடாது. இதுக்காக தான் பல வருஷம் முன்னாடியே சில லட்சங்கள் பணம் எங்கிட்ட வாங்கியிருக்கீங்க ஞாபகமிருக்கா? அப்படியே அவன் வந்தாலும் எனக்கு ஒன்னும் கவலை இல்லை சேதாரம் உங்களுக்குத் தான் பார்த்துக்கோங்க” என்றார் மிரட்டலாக. 
தொண்டை தாண்டி வார்த்தை வராது, திக்கென்று அடைத்த நெஞ்சோடு தனவதி குறுகி நிற்க, அது தான் இறுதி மிரட்டல் என்பது போல் தான் சொல்ல வேண்டியதைச் சொல்லியவர் வந்த வேகத்திலே திரும்பிச் சென்றார். அடி வயிற்றிலிருந்து தொண்டை வரை கருநாகம் போலே பயம் கவ்வ, திரும்பிய தனவதி கண்டது நேரெதிராக பின்கட்டிலிருந்து உள்வரும் வாசலில் அதிர்ந்த முகமாக நின்றிருந்த சந்திராவை. 

Advertisement