Advertisement

அத்தியாயம் 19 
சந்திராவின் வீட்டிற்குள் வருகையிலே கண்கள் வழக்கம் போலே எதிர்வீட்டைப் பார்வையிட, கதிரின் இருசக்கர வாகனம் இல்லை. ஆலைக்குக் கிளம்பியிருப்பான் போலும் என நினைத்தபடியே சென்றாள். வீட்டிற்குள் வந்தவள் நேராகத் தாத்தாவின் அறைக்குள் தான் சென்றாள். அவர் பீரோவைத் திறந்தவள் தனக்கு எழுதிக் கொடுத்த பத்திரங்களை தேடி எடுத்தாள். அதை தன் அலைபேசியில் ஸ்கேன் செய்து கொண்டு மீண்டும் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு வீட்டைச் சுத்தப்படுத்தி பின்னே வீட்டிற்கு வந்தாள். 
சரியாக அவள் வெளியே வரும் நேரம் கதிர் வீட்டிலிருந்து உணவுப்பையோடு கருப்பட்டி வருவதைக் கவனித்தவள் அவனை அழைத்தாள். 
“என்ன மதினி இங்கிருக்கவ? அண்ணன் கூட மறுபடியும் பிரச்சனையா ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வரணுமா?” என்றபடி உள்ளே வந்தவனை, “இங்க வா, இப்படி உக்காரு” எனத் தலைவாசலில் அமர்ந்தபடி அவனையும் அழைத்தாள். 
கருப்பட்டி அமர, “பிரச்சனை தான். உங்க வீட்டுப் பஞ்சாயத்து எல்லாம் தீர்க்குற பெரிய மனுஷன் நீ தானமே செல்வி சொன்னாள், அப்படியே எங்க பிரச்சனை தீர்த்து வை பார்ப்போம்” என்றவள் அவனை ஆராய, அவனோ அண்ணியின் பெயரைக் கேட்டதில் திருட்டு முழி முழித்தான். 
“என்னலே முழிக்கிற?” என அதற்கும் விசாரிக்க, “எங்க மதினி அப்படியெல்லாம் என்ன பாராட்டிச் சொல்லியிருக்க மாட்டாவளே?” என்றான் தப்பிக்கும் விதமாக. 
“ஆமாம், எப்படிப் பாராட்ட முடியும் நீ தான் பஞ்சாயத்துக்கே வரலைல!” என்றதுவும் அவன் மாட்டிக்கொண்ட உணர்வில் அதிர, “சரி சொல்லு? எங்க கல்யாணத்தப்போ நீ எங்க போனல?” என்றாள் விசாரணையாக. 
“அதான் ஊருக்கு போயிருந்தேன்னு சொன்னேன்ல மதினி” என்றவன் நழுவப்பார்க்க, பின்னங்கழுத்தைச் சட்டையோடு பிடித்தவள், “எங்க ஓடுற? அது எப்படி? முதல் நாள் நிச்சியம் அப்போ நீ மண்டபத்துல இருந்தல, சரியா காலையில அரவிந்தனைக் காணும் நீயும் காணாம போயிட்டேல, இரண்டு மூனு நாள் கழிச்சி அவன் ஹஸ்பிட்டல் அட்மீட் ஆகுறான், நீயும் ஒரு வாரம் பின்ன ஊர்க்கு வார, இதுக்கு மேல உங்க அண்ணனும் வேலைக்கு வரலையேன்னு விசாரிக்காம விட்டுடுறார். என்னலே இதெல்லாம்?” என்கிறாள்.
“ஆஹா! சூப்பர் மதினி நடந்த அத்தனையும் கண்ணால பார்த்த மாதிரியே சொல்லுதியே எப்படி மதினி? சூப்பர் போ!” என்றவன் வியப்போடு பாராட்ட, அவளோ பதிலின்றி முறைத்தாள். 
அதன் பின்பு தானே குற்றம் ஒப்புக்கொண்டது புரிய, இனி ஒளிய முடியாது என்பதறிய, அனைத்தையும் உரைத்தான்.
திருமணத்திற்கு முந்திய இரவு அரவிந்தன் அறையிலிருந்து சந்திரா சண்டையிட்டு வெளியேறவும், அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த கருப்பட்டி உள்ளே சென்றான். அரவிந்தனுக்கு ராஜேஷூம் போதையில் ஏதேதோ பேசி உளறிக் கொண்டிருக்க, இறுதியில் ராஜேஷ் கண்ணயரவும் அவன் அலைபேசியைத் தூக்கி வந்தான். பின் அதிலிருந்து அரவிந்தனுக்கு அழைத்தவன் பெண் குரலில் பேசி, அவன் முன்னாள் காதலி என்றும் இறுதியாக அவனைப் பார்க்க வேண்டும் என்றும் வேண்டினான். போதையில் எதையும் உணராது, ஆராயாது சரி என்ற அரவிந்தனும் நள்ளிரவில் தனியாகக் கிளம்ப, கருப்பட்டியும் பின் தொடர்ந்து சென்றான். 
இரவு நேர சந்தையில் வெளியூர் வாகனங்களிலிருந்து லோட் இறங்கிக் கொண்டிருக்க, அங்கு வந்தான் அரவிந்தன். அவனை பின் தொடர்ந்து வந்த கருப்பட்டியும் ஏற்கனவே லோட் ஆட்டோவோடு காத்திருந்த அவன் ஆட்களும் சட்டென அரவிந்தனைத் தூக்கியிருந்தனர்.  அங்கிருந்த வெகுதூரம் சென்று ரெட்டியார்மலை மேல் தூக்கிச் செல்ல, ஏற்கனவே கதிர் அங்கு தான் காத்திருந்தான். 
அரவிந்தனின் திட்டத்தை முறியடிக்க, சந்திராவுடன் தன் திருமணம் முடியும் வரை கடத்தி வைத்துப் பாதுகாப்பது மட்டுமே கதிரின் திட்டமாக இருக்க,  கருப்பட்டி அங்கு சந்திராவோடு நடந்த சண்டையும் அவளைக் குறைவாகப் பேசி, கையை முறுக்கியது வரை தெரிவிந்தான். 
கொதித்துப் போன கதிர் விடியும் வரையிலும் வெளுத்து விட்டு, அதன் பின்னே அரிசி ஆலைக்கு வந்திருந்தான். சரியாக தென்னரசுவிடமிருந்து அழைப்பு வர, அவர் வீட்டிற்குச் சென்று பரிசுப் பொருளான குத்துவிளக்கை எடுத்துக் கொண்டு திருமண மண்டபத்திற்குக் கிளம்பினான். 
சந்திராவின் விசாரணையில் அனைத்தையும் சொல்லிய கருப்பட்டி, “நான் தான் சொன்னேன்னு அண்ணன்ட சொல்லிடாத மதினி” என்றான் வேண்டுதலாக. அவள் சரியெனத் தலையசைத்த பின்பே கிளம்பியவன்,  இன்னைக்கு கதிர் அண்ணனுக்கு கச்சேரி இருக்கு! என மனதிற்குள் புலம்பினான். 
தனவதி, கண்ணீர் நாடகம் வெற்றியடையவும் தான் சற்று நிம்மதியாக இருந்தார். சந்திராவைக் குறைவாகப் பேசியதால், அவள் வீட்டில் சீர் கேட்பாள் என்றே எதிர்பார்க்க, அவளோ கதிருக்காக விவசாயம் செய்யப் போகிறேன் என வந்து நின்ற அதிர்ந்தே போனார். எல்லாம் தன் வாயால் வந்த வினை எனத் தன்னையும் நொந்து கொண்டு, மருமகளையும் கண்ணீரைக் காட்டி ஏமாற்றியாகிவிட்டது. கதிரின் வார்த்தையில் நம்பிக்கை இருந்த போதும் உள்ளுக்குள் பெரும் பயம் தான் சேர்மமூர்த்தியை எண்ணி. 
வீட்டிற்கு வந்த சந்திரா, கதிரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். நேற்றைய இரவு முகம் திருப்பிக் கொண்டதோடு சரி, இன்று வரையிலும் அவளை பார்க்கவில்லை, அவளோடு பேசவுமில்லை, பெரிதும் கோபமாக இருப்பாளோ? சமாதானம் செய்ய வேண்டி இருக்குமோ? என்ற எண்ணத்தில் கதிர் அறைக்குள் வந்தான். 
உள்ளே வர, சட்டென ஓடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள் ஆசையாக. காரணம் புரியாத போதும் இன்பமாய் அதிர்ந்தவனும் இரு கைகளையும் கோர்த்து அணைத்துக் கொண்டான். தலையில் கன்னம் பதிய அழுத்திக் கொண்டவன், “என்ன அதிசயம்? கோபம் எப்படிப் போச்சாம் செல்லத்துக்கு?” என கொஞ்சலாக விசாரிக்க, “சொல்லுறேன். அதுக்கு முன்ன என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க, அரவிந்தனை நீங்க தான் கடத்துனீங்களா?” என்றாள் விலகி நின்று. 
சம்பந்தமில்லாத அவள் கேள்வியில் அதிர்ந்தவன், “எவனாவது ஏதாவது சொன்னா நம்பிடுவியா? உனக்கு யார் இதெல்லாம் சொன்னா? கருப்பட்டியா?” எனக் கேட்க, மறுப்பாய் தலையசைத்தவள், “ஊர்த் தலைவர் சேர்மமூர்த்தி அங்கிள்” என்றாள். 
அவருக்கு எவ்வாறு தெரிந்தது அதை இவளிடம் சொல்ல வேண்டிய அவசியமென்ன? அவன் ஒரு நொடி சிந்தித்து நிற்க, “ஏன் அரவிந்தனை கடந்துனீங்க?” என்றாள் பதில் வேண்டிய பிடிவாதம்.  
அவளை உற்றுப்பார்த்தவன், “கல்யாணத்தை நிறுத்த தான். ஏன் அதுல உனக்கு என்ன கவலை?” என்றான். 
சுள்ளென்று கோபம் வர முறைத்தவள், “ஒரு ஆளை கடத்துற அளவுக்கு பவர் இருந்தா என்னைக் கடத்தியிருக்க வேண்டிய தானே? அவனை ஏன் கடத்துனீங்க? அப்போ எனக்கு யாரோட கல்யாணம் நடந்தாலும் பரவாயில்லை, அரவிந்தனோடு நடக்கக் கூடாது அதான உங்க எண்ணம்?” என்றாள். 
“ஆமாம், இது தான் முழு உண்மை. அரவிந்தன் உன்னை, உனக்காகக் கல்யாணம் செய்யலை, உன்னோட நிலத்துக்காகத் தான். அரவிந்தனை முதல் முறை பார்த்த போதே எங்கோ பார்த்த நியாயம். கருப்பட்டி சொல்லவும் தான் அவன் யாருன்னு தெரிஞ்சது, அதுக்கு அப்புறம் ரிஜிஸ்டர் ஆபிஸ் இருக்கிற ஒரு ஆள் மூலமா ஆள் வைச்சி அவங்க வட்டத்துக்குள்ள விசாரிக்கவும் தான் தெரிஞ்சது, உன்னோட நிலம் குவாரி அமைக்க சரியான இடம்னு, அதுக்கான திட்டத்தோடு இருந்திருக்காங்க அவனோட அப்பாவும், மாமாவும். 
என்னால அதை வேடிக்கை பார்த்துட்டு சும்மா விட முடியலை. என்ன இருந்தாலும் எங்க அப்பா கடைசி வரப் போராடினதும் அதுக்கு தானே? அதான் அரவிந்தனைத் தூக்கினேன். எனக்கு முடிக்க வேண்டிய கணக்கு போக, உன்னையும் தராதரமில்லாமல் பேசி இருக்கானு தெரியவும் இன்னும் கொஞ்சம் நல்ல கவனிச்சேன், போதுமா?” 
அத்தனையும் கொட்டியவன் நீண்ட மூச்சினை விட, அவள் எதிர்பார்த்த பதில் அவனிடமிருந்து இன்னும் வரவில்லை. கைகளை கட்டிக் முறைத்தவளின் பார்வையில் உஷ்ணம் கூடியது. 
அதே நேரம், “அப்போ கல்யாணத்துக்கு முன்னாடியே என் பெயர்ல தான் நிலம் இருக்குனு உங்களுக்குத் தெரியும் தானே? அப்போ அரவிந்தன் மேல சொல்லுற குற்றச்சாட்டை உங்க மேல நானும் சொல்லாம் இல்லையா?” எனச் சீண்டினாள்.
அடக்கப்பட்ட ஆத்திரம் தான் கதிரிடம் இருந்தும், “என்ன சொன்ன? நான் உன் நிலத்துக்கு ஆசை படுறேன்னா? சரி ரைட்டு, இந்த சந்தேகம் எதனாலுன்னு சொல்லிடு” என்றான் பொறுமையாக. 
“அதே காரணம் தான். நான் சுத்தி சுத்தி வந்த போது கண்டுக்காத நீங்க எப்படிப் பகை எல்லாம் மறந்து என்னை கட்டிக்க நினைச்சீங்க? அதுவும் போக, அரவிந்தனுக்கு என்னை விட்டுக் கொடுத்திட கூடாதுன்னு நினைச்சி தானே அவனைக் கடத்தி இருக்கீங்க? அப்போ நான் எங்கே?” 
சந்திராவிற்குக் கதிர் மீது சந்தேகமே இல்லை ஆனாலும் அவளுக்கு ஒரு பதில் அவனிடமிருந்து தேவையாக இருந்தது. 
“உன்னைக் கடத்தியிருந்தால் பொண்ணை காணும்னு சொல்லியிருக்க மாட்டாங்க ஓடிப்போயிட்டானு தான் சொல்லியிருப்பாங்க, அப்படியொரு பெயரை உனக்கு வாங்கிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. அதுவும் போக நம்ம கல்யாணம் ஊரறிய நடக்கணும்னு நினைச்சேன், நம்ம இரண்டு குடும்பத்துலையும் அங்கீகாரிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால தான் தென்னரசு அண்ணாச்சியை வைச்சி உங்க தாத்தா போட்டிருக்கிற திட்டம் தெரிஞ்சி அதுக்கு ஒத்துப்போற மாதிரி அரவிந்தனை கடத்துனேன். இப்போன்னு இல்லை எப்பவும் உன்னைப் பிடிக்கும்! தாலி, மோதிரம், பேப்பர்ஸ் ஓட கல்யாணம் செய்துக்க தானே கேட்டே, நீ என்ன என் பின்னாடி லவ் பண்ணச் சொல்லிய சுத்துன?” என்றவன் சிரிப்பின்றி கேட்டான். 
எட்டி நின்று முறைத்தவள், “அப்படியே கேட்டாலும் நீ லவ் பண்ணிடுவ பாரு..” என்ற முனங்கலோடு அருகே வந்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்து அணைத்துக் கொண்டாள். 
“உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கும் தெரியும், அந்த தைரியத்துல தான் உன் பின்ன சுத்துனேன். ஏதோ தென்னரசு அங்கிள் சொன்னதுக்காகத் தான் என்னைக் கல்யாணம் செய்துகிட்டியோன்னு என் மனசுல ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருந்துச்சு, எப்போ நீ அரவிந்தனை கடத்துனது தெரிஞ்சதோ அப்போ தான் ஏதோ ஒரு நிம்மதி, மனசு நிறைச்ச உணர்வு! கட்டாயத்துல இல்லாம என்னை எனக்காகக் கட்டிக்கிட்டச் சந்தோஷம்” என நெகிழ்ந்து மகிழ, அவள் கன்னத்தில் இதழ் பதித்து உரசிக்கொண்டிருந்தவன் அழுத்தக் கடித்தான். 
வலியில் நிமிர்ந்தவள் அவன் பிடரி முடிகளை கொத்தாகப் பற்றிக்கொண்டு பதிலுக்கு கடிக்க வர, அவன் விலகப் போராட, கால்களை இடறிவிட்டு கட்டிலில் அவனோடு விழுந்தாள். அள்ளிக்கொடுப்பதிலும் அன்னை பெறுவதிலுமான பொழுதுகள் தித்திப்பாய் கரைந்தது. செல்ல ஊடலும், தித்திக்கும் கூடலுமாக அவளுடனான வாழ்க்கை அவனுக்குச் சுவாரஸ்யமாகச் சென்றது. 
என்றோ நாராயணன் அவள் எதிர்காலம் எண்ணிச் செய்தது, இன்று இப்படி ஒரு நிலையை உருவாக்கி இருந்தது. வயோதிகம் சற்றே அவருக்குப் பயத்தைக் கொடுத்திருக்க, பேத்தியின் விருப்பமும் அறிந்தவர் ஆகையால் அவள் திருமணத்திற்கு முன் தான் தவறிவிட்டால் அந்த ஊரோடு அவளுக்கு ஒரு தொடர்பு இருக்க வேண்டுமென்று எண்ணினார். ஆகையாலே மகன், பேரனை விடுத்து நேரடியாகவே கடந்த ஆண்டு சந்திராவிற்கு எழுதி வைத்திருந்தார். 
அந்த நிலம் கதிரோடு அவளை சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்க, அன்று பதிவு அலுவலகம் வந்திருந்த சேர்மமூர்த்தி தகவல் அறிந்து கொண்டார். அத்தனை நாளும் பயன்படுத்தி வந்தவருக்கு அதன் பின்னும் விட்டுவிடும் மனநிலை இல்லை, ஆகையால் நாராயணன் இல்லாத சமயம் வரதராஜனிடம் சந்திராவை அரவிந்தனுக்குத் திருமணம் பேசினார். அத்தனையும் நடக்க விடாது தடுத்திருந்தது இடையில் வந்த இளங்கதிர்! 
கருப்பட்டியிடம் சொல்லி ஊருக்குள் வேலையாட்களை அழைத்திருந்த இளங்கதிர் நிலையத்தைச் சுத்தப்படுத்தத் துவங்கினான். அதற்குப் பின்னான வேலைகளையும் மனதில் பட்டியலிட்டு வைத்தான், அவனுக்கு இருக்கும் வேலைகளோடு இது அதிகபடியான வேலை தான், இருந்தும் மனைவியின் விருப்பத்தோடு தனது ஆர்வமும் அதிகமிருக்க, அதுவே அவனை உத்தியது.
சாலையிலிருந்து பல ஏக்கரில் சேர்மமூர்த்தி வயலும் அதன் பின் கதிரின் நிலமும் அதன் பின் சந்திராவின் நிலமும் இருந்தது. சேர்மமூர்த்தியின் வயல் வழியாக செல்லும் பொதுப்பாதையில் தான் அவர்கள் நிலத்திற்குச் செல்ல வேண்டும். ஊரில் இல்லாத போதும், சேர்மமூர்த்திக்கு உதவியாளர் தகவல் தெரிவிக்க, மறுநாளே ஓடி வந்தார். 

Advertisement