Advertisement

“இடத்துக்கு எல்லாம் இராசி இருக்கா என்ன?” என்றவள், அவர் கலங்குவதைக் கண்டு, “அத்தை உங்க பயம் தேவையில்லாதது, இப்போ எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க” என்றாள் ஆறுதலாக. 
தனவதியின் கண்ணீர் சந்திராவையும் பதற செய்தது. கதிரின் முகமும் கவலையுற, “அவளுக்குத் தான் தெரியலை, நீயாவது புரியுற மாதிரி எடுத்துச் சொல்லக் கூடாதா ராசா?” என அவனிடம் வேண்டினார்.
இடையிட்ட சந்திரா, “உங்க இடத்துல தானே பிரச்சனை? எங்களோட இடத்துல நான் செய்துக்கிறேன். யார் தடுப்பா? யாரால என்ன செஞ்சிட முடியும்?” என்றாள் வேகமாக. 
“ஐயோ! பிரச்சனை உங்களோட நிலத்தால தான். உங்க நிலத்தைக் காப்பாதப் போய், எங்க வாழ்வாதாரத்தை இழந்து வேதனையோடு உயிர் விட்டார். இராசி இல்லாத இடம், திருப்பவும் அதே இழப்பு இந்த வீட்டுல வேண்டாம். அதைப் பார்க்கிற சக்தி எனக்கு இல்லைம்மா. நீ வாழ வேண்டிய பிள்ளை, இந்த வீட்டுக்கு வெளிச்சமே நீ தான்! ஒரு வாரிசை பெத்து கதிரோட சந்தோஷமா வாழணும் தாயி நீ!” என அவள் கைகளைப் பற்றியபடி கண்ணீரோடு வேண்டினாள். 
சந்திராவிற்கு எதுவுமே புரியவில்லை, காலையில் தன்னை அத்தனை குறைவாகப் பேசியதும் இவர் தானே! நம்ப இயலவில்லை அவளால். நடிக்காரோ ஒரு நொடி தோன்றினாலும் மறுநொடியே மனம் கரைந்தது அவர் கண்ணீரில். அவர் இழப்பும் பெரிது தானே, ஆகையால் அதீத அச்சத்தில் இருக்கிறார் என்றே நினைத்தாள். 
அதற்குள் இளங்கதிர், “வது அப்படி எதுவும் செய்ய மாட்டாள், பயப்படாதீங்க சின்னம்மா நான் சொல்லுதன்ல” என்றான் ஆறுதலாக. அப்போதும் அவர் நம்பிக்கையற்றுப் பார்க்க, “நான் சொன்னா வது கேட்ப, தைரியமா இருக்க”என்றான் உறுதியாக. அந்த நேரத்திற்குச் சந்திரா எதையும் மறுத்துக் கூறவில்லை, மௌனமாக இருந்தாள். 
புடவை தலைப்பால் முகம் துடைத்துக் கொண்டவர், “இது வேறும் என்னோட பயம் மட்டுமில்லை, உங்க நல்லதுக்காகத் தான் சொல்லுதேன்” என்றார் அக்கறையாக.
அப்போது எதுவும் பேசாது அமைதியாக வந்துவிட்ட சந்திரா அறைக்குள் வந்ததுமே கதிரிடம் முகம் திரும்பினாள். அவள் பின்னே அவன் வர, தலையணை படுக்கை விரிப்பைச் சுருட்டி வீசியவள், “அப்படியே மாடிக்குப் போய் படுத்திடு போ, உள்ள வந்த புருஷன்னு கூட பார்க்க மாட்டேன் தொலைச்சிடுவேன்” என்றாள் மிரட்டலாக. 
“என்ன கோபம்ல உனக்கு? நம்ம நல்லத்துக்கு தானே சொல்லுறாக” எனத் தன்மையாகக் கேட்டபடி நெருங்கி வந்தான். 
“இது எப்படி நல்லதாகும்? உனக்காக நான் ஒன்னு செய்யணும்னு ஆசைப்படுதேன் அவங்க  கூடாதுன்னு சொல்லுறாங்க. இதை எந்த வகையில நல்லது எனக்குத் தெரியலை” 
“இடம் இராசியில்லைன்னு சொல்லுதாவ, நமக்கு எதுவும் பிரச்சனை வரக் கூடாதுன்னு நினைக்கிறாக. உனக்கு அப்படியே ஆசைன்னா சொல்லு நான் வேற இடம் வாங்கித் தாரேன்” 
“தேவையில்லை, உனக்கு தெரியுமா? லாஸ்ட் இயர் தாத்தா எனக்கு அந்த இடத்தை எனக்கு எழுதிக்கொடுத்துட்டார். என் இடத்துல என் விருப்பப்படி நான் விவசாயம் செய்துக்கிறேன். எனக்கு யார் உதவியும் வேணாம், என்ன பிரச்சனை வரும் பார்த்துகிறேன்!” 
“என்ன பிரச்சனை?  எல்லாம் சேர்மமூர்த்தியால தான் வரும். அப்பா இறந்ததுல சின்னம்மா ரொம்ப பயந்துட்டாவ, அதான் சொல்லுதேன் வேண்டாட்டி” 
“அத்தையை விடு, உனக்குப் பயமா?” என்றவள் கேட்க, புரியாது பேசுகிறாளே என நொந்து போய் அவன் பார்க்க, “பயம் தான்! என் இடத்தை விட்டுக் கொடுத்திடக் கூடாதுன்னு மாமா போராடி இருக்கார்ல, இப்போ அவர் இல்லாட்டா அவர் விட்டதை நீ தானே செய்யணும். அது உன் கடமை தானே? அதைத் தானே மாமாவும் எதிர்பார்த்திருப்பார்? அதை விட்டுட்டு பயந்து விலக்கிட்டு, நாங்க செய்தது தான் துரோகம்னு எங்க மேல பலியை போட்டு சமாளிக்கிற தானே?” என்றாள். 
கதிரால் பதில் சொல்ல இயலவில்லை. அவன் அமைதி இப்படியொரு அர்த்தம் கொடுத்திருக்கும் என எதிர்பார்த்தானில்லை. தந்தையின் விருப்பமாகப் பார்க்கையில் இவள் சொல்லுவது சரி தான் ஆனால் தனவதியின் கண்ணீரும் அவன் குடும்பச் சூழலும் தானே அவனை தேக்கியது, எவ்வாறு அதை புரிய வைப்பான்?
“மாமாவோட விருப்பம், என்னோட ஆசை, நான் செய்வேன். பிரச்சனை வந்தாலும் என் உயிர் இருக்கிற வரைக்கும் போராடுவேன், நல்ல கணவனான நீ உதவி செய்யாட்டாலும் பரவாயில்லை ஆனால் என்னை கண்ட்ரோல் பண்ண நினைக்காத, தள்ளி நின்னு நல்லா வேடிக்கை பாரு போ” என விரட்டாத குறையாக அவள் முடிவை உறுதியோடு உரைத்தாள். 
சிறிதும் அவன் சமாதானத்தை எதிர்பாராது முகம் திரும்பிக் கொண்டு படுத்தும் விட்டாள். கதிர் யோசனையோடு அறைக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். 
கதிரின் நெஞ்சுக்குள் பெரும் பாரம் ஏறியதைப் போலே மனம் கனத்தது. இப்போது தான் வாழ்க்கை சீராகவும் நிம்மதியாகவும் செல்வது போன்றிருந்தது, மீண்டும் பிரச்சனை வேண்டுமா? என்ற யோசனை. தனவதியின் கண்ணீரும் சந்திராவின் உறுதியும் அவனை வெகுவாக வலுவிழக்கச் செய்தது. இருபக்கமும் இழுக்க எந்த பக்கம் சரிவதென்ற பெரும் யோசனை!
அப்படியொன்றும் சந்திராவைத் தனியாக விட்டுவிட மாட்டான், அவனால் அது இயலாது தான். இறுதியில் தனவதியின் பயம் தான் தேவையற்றது எனத் தோன்றியது!
தந்தைக்குத் தான் துணை இல்லாது விட்டுவிட்டேன், தானும் கடமை செய்யாது விட்டுவிட்டேன். சந்திராவோ தந்தையின் பிம்பமாய் அதே இடத்திற்கு அதே விவசாயத்திற்கு உயிர் உள்ள வரை போராடுவேன் என உறுதியாக உரைக்கிறாளே! என வியந்தான். சந்திரா அவனுக்கு இன்றியமையாதவள், உயிரினும் மேல்! ஆகையால் விட்டுவிட இயலாது!
அன்று காலையில் சந்திரா தான் அவனுக்கு முன்பே விழித்திருந்தாள். அவன் உறங்கியதே விடியலில் தான் ஆகையால் இப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஒரு பார்வை பார்த்தவள் விலகி எழுந்து சென்றாள். 
கீழே வர, தனவதி சமையலறையில் இருப்பது தெரிய, காலையிலே அவரோடு பேச்சு வார்த்தை வேண்டாமென்ற எண்ணத்தில் அமைதியோடு வெறியேறினாள். வழக்கம் போலே வயல்வெளிகளில் ஓரம் நடைப்பயிற்சிக்கு சென்றவள், இறங்கிச் சென்று அவள் நிலத்தையும் அருகில் சென்று பார்த்தாள். புதராய் கிடந்தது, வேப்பமரம் மட்டும் வாடாது பசுமையாய் வளர்ந்து நின்றிருந்தது. கிணறும் சிதையவில்லை நீர் ஊறி இருந்தது, ஆனால் புதராய் செடிகள் மூடிக்கிடந்தது. 
அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் அதற்கு வேலையாட்களை அழைக்க வேண்டும், பின் நிலத்தை அளந்து வேலி அமைக்க வேண்டும், மண் பரிசோதனைக்குக் கொடுத்து மண்ணின் தரத்தை அறிய வேண்டும் என்றெல்லாம் மனதில் திட்டங்களைப் பட்டியலிட்டபடி திரும்பி வந்து கொண்டிருந்தாள். 
சிறிது தூரம் வரப்பில் அவள் நடந்து வந்திருக்க, சரியாக அவள் பாதையில் குறுக்கே நின்றிருந்தனர் சேர்மமூர்த்தியும் அவர் உதவியாளரும். 
“என்னம்மா சந்திரா? என்ன காலையிலே எங்க வயக்காட்டுப் பக்கம் உன் காத்து வீசுது?” என்றார் விசாரணையாக. 
சிறிய பாதையும் அவர் மறித்து நிற்க, செல்ல வழியில்லாது நின்றிருந்தவள், அவர் கேள்விக்குப் பதிலாய், “எது உங்க நிலம்? இந்த வரப்பா? படித்துறை வரைக்கும் இது தான் பொதுப்பாதைன்னு கேள்விப்பட்டேன்! ஹோ… பொதுப்பாதை மேல தான் நீங்க வரப்பு குவிச்சி வைச்சி இருக்கீங்களோ?” என்றாள். 
ஒரு நொடி திடுக்கிட்டவர், பின் சமாளித்து, “சும்மா பேசதா, ஊருலையே இல்லாத உனக்கு எப்படி இந்த ஊரைப் பத்தி தெரியும்?” என்றார். 
அவளும் விடாது, “நாங்க ஊருலை இல்லாட்டாலும் நாராயணன்கிற பெயருக்கான அடையாளம் இங்க எப்பவும் மறையாது, யாரலையும் மறைக்க முடியாது. அதுவும் போக நான் இப்போ குலசேகரன் வீட்டு மருமவ, இனி இது தான் என் இடம்!” என்றாள். 
“ஆனாலும் உன்னை பார்த்தால் பரிதாபமாகத் தான் இருக்கு! எங்க வீட்டுல வாழ வேண்டிய புள்ளை, எப்படி இருக்க வேண்டிய உன் வாழ்க்கை இப்படியாகிட்டுச்சே!” எனப் பரிதாபம் கொட்ட, “நீங்க பரிதாபப்பட அவசியமேயில்லை, நான் கதிரோட சந்தோஷமா தான் இருக்கேன்” என்றாள் வேகமாக. 
“சந்தோஷமாவா? எத்தனை நாளைக்கு? கதிரோடு உண்மை முகம் தெரியுற வரைக்கும் தானா? உனக்கு அமைய இருந்த நல்ல வாழ்க்கையை குலைச்சது அவன் தான். அரவிந்தனைக் கடத்தி தென்னரசோட சேர்ந்து திட்டம் போட்டு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி உன்னைக் கட்டிக்கிட்டான். ஏன் தெரியுமால? உன் சொத்து பத்துக்காவும் உன் குடும்பத்தைப் பழிவாங்கவும் தான்ல” என்றார். 
சற்றும் அதை எதிர்பாராது அதிர்ந்த சந்திரா, “நான் நம்ப மாட்டேன்” என்றாள் உள்ளிறங்கி குரலில். 
“அரவிந்தன் தான் தன்மானம் பார்த்து வெளியே சொல்லிக்கலை அது தான் கதிருக்கு வசதியாப் போச்சி, நீ வேணா உங்க அண்ணன் மனோட்ட விசாரில உண்மையை சொல்லுவான்” என்றார்.
சந்திரா அமைதியாகி விட, அதைக் கவனித்த சேர்மமூர்த்தி குழம்பிவிட்டாள் என நினைத்து திருப்தியுற்றார். அவர் வழி விட, அவளும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் நடந்து சென்றாள். 
அவள் செல்ல, “ஏலே, எதுக்கும் ஒரு பார்வை வைச்சிகிட்டே இரு..” என்றார் உதவியாளரிடம். 
அன்று தானே தனவதி திருமண மண்டபடத்தில் சந்திரா ஊரை விட்டுச் சென்று விட்டதாகவும் அவள் நிலத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுமாறும் தெரிவித்தார். ஆனால் இவள் என்ன நிலத்தைப் பார்த்துச் செல்கிறாள் என்ற சந்தேகம் அவருக்கு.
அரவிந்தன் காணாமல் போன காரணம் கடத்தலா? தாத்தாவும் தென்னரசும் தானே இந்த திருமணத்தை நடத்தினர், இவர் ஏன் இவ்வாறு சொல்கிறார்? மனோவிற்கு தெரியுமாமே! ஆம் அவன் கூட கதிரிடம் தன்னை அனுப்ப மறுத்து இதே காரணத்தைத் தானே சொன்னான், தனவதியும் கூட சீர் கொண்டு வரவில்லை எனக் குறைவாய் பேசினார் தானே? என்றெல்லாம் யோசித்தபடி வந்த சந்திரா வீட்டிற்குச் செல்லாது, நேராக எதிர்வீட்டிற்குச் சென்றாள். 

Advertisement