Advertisement

அத்தியாயம் 18
சந்திராவின் முகத்தில் புது பொழிவு, கதிரின் நடத்தையில் துள்ளும் உற்சாகம்! அனைத்தும் தனவதியின் கண்களுக்குத் தப்பவில்லை. திடீர் திருமணம் என்றே நினைத்திருந்த தனவதிக்கு தற்போது நம்ப இயலாது, சந்தேகம்! 
சந்திராவின் மீது கதிருக்கு ஒரு வெறுப்புணர்வு வரும் என்றே எதிர்பார்த்திருக்க, அதை அவன் பொய்யாக்கி இருந்தான். தாங்கள் காட்டும் ஒதுக்கத்தில் தன்மானம் பார்த்து சந்திராவே சென்றுவிடுவாள் என எதிர்பார்க்க அதை அவள் பொய்யாக்கி இருந்தாள். ஆக, இருவருக்குள்ளும் ஒரு பிடித்தமிருக்கிறது என்பதே அப்போது தான் அவருக்குப் புரிந்தது. 
அன்றொரு நாள் பழக்கம் போலே கதிர் வரும் நேரம் குலசேகரனின் புகைப்படத்தை வெறித்தபடி விழி இரண்டிலும் நீரோடு அவர் நிற்க, அவனும் பழக்கம் போலே ஆறுதல் சொல்லினான். சந்திராவின் குடும்பத்தை மறைமுகமாக அவர் பழிக்க, அவனோ நடப்பதெல்லாம் தந்தையின் ஆசீர்வாதம் என்றிருந்தான். 
சந்திராவின் மீது மட்டுமல்லாது அவள் குடும்பத்தின் மீதான வெறுப்பும் அவனுக்குக் கரையத் தொடங்கியிருப்பது புரிந்தது. ஆனாலும் அது அவருக்கு உவப்பாய் இல்லை. அவள் மருமகளாக வருவாள் என்றோ விட்ட உறவு தொடருமென்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. துரோகம் செய்துவிட்டு அவளுக்கு இந்த வீட்டில் இத்தனை உரிமையா? என்ற ஆதங்கத்தில் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடவும் இருவருக்குள் இருக்கும் அன்பு அவருக்குள் ஒரு பெரும் பயத்தை உருவாகியிருந்தது. 
செந்திலிடம் பேசிய கதிர், வீட்டு வேலைக்கு ஒரு ஆளை அனுப்பி வைத்தான். அப்படியிருந்தும் தனவதிக்கு திருப்தியில்லை.
அதிகாலையிலே வெளியில் கிளம்பியிருந்த கதிர், சந்திரா இருவரும் வீட்டிற்கு வரும் போது புதிதாக ஹோண்டாய் சிட்டி காரொன்று உடன் வந்து நின்றிருந்தது. சந்தனம் தெளித்து, மாலையிட்டு வந்திருப்பதைப் பார்க்க, புதிதாக எடுத்து கோவிலுக்கும் சென்றே வந்திருந்திருக்கின்றனர் என்பதும் புரிந்தது. 
வாசலில் நின்றவரிடம், “எப்படியிருக்கு சின்னம்மா?” என முகம் மலரக் கதிர் கேட்க, “நல்லாயிருக்குயா..” என்றார் வாழ்த்துவதாக. 
“வாங்கப்போறேன்னு சொல்லவேயில்லையே..? அதுவும் இப்போ எதுக்கு இது?”என்றவர் கேட்க, “இந்த கேள்வி எல்லாம் உங்க மருமகளைப் பார்த்துத் தான் கேட்குணும், எனக்கே தெரியாது, ஷோரூம் போய் மாடல் பார்த்து, இன்ஷியல்பே போட்டு புக் பண்ணது எல்லாம் இவள் தான். இன்னைக்கு காலையில என்னைக் கூட்டிட்டிப் போய் காட்டும் போது தான் எனக்கே விஷயம் தெரியும். எதுக்குலன்னு கேட்டா, நாலு இடத்துக்கு போறீங்க, லாங் ட்ரவல் அப்போ எல்லாம் வெளியே தானே வண்டி புக் பண்றீங்க, அதுவும் போக ரேவதியை பார்க்க அத்தை எல்லாம் இரண்டு பஸ் மாறிப் போக வேண்டியிருக்கு. இந்த ஊருக்குள்ள தான் கேப் வசதி எதுவுமில்லை, ஒரு கார் இருந்தால் உபயோகமாக இருக்கும்னு சொன்னாள். எனக்கும் அதெல்லாம் சரின்னு தோனுச்சு சின்னம்மா” என்றான் மனைவியின் பெருமை பாடி. 
தனவதி பதிலின்றி பார்த்திருக்க, “என்ன அத்தை நான் சொன்னது சரி தானே? ஆடம்பரத்துக்கு இல்லாட்டியும் அவசியத்துக்குத் தேவை இருக்கு தானே?” எனச் சந்திரா கேட்டாள். 
மனமில்லாத போதும், அவனே தலையாட்டுகையில் மறுத்துப் பேச என்ன இருக்கு? என நினைத்தவர், “படிச்ச புள்ளை நீ செய்தால் சரி தான்” என்றார் கதிர் முன் பெருமையாக. 
அவர் வாயாலே பாராட்டு வாங்கிவிட்டதில், சந்திராவிற்கு இதழ் ஓரம் குறுநகை ஒன்று பூத்தது. பிரசாத கூடையோடு சந்திரா உள்ளே செல்ல, கதிர் வாசலோடு விடைபெற்று அவன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி விட, தனவதியும் உள்ளே சென்றார். 
மனமானது உலைகலனான கொதித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஆதங்கத்திலிருந்தவரை மேலும் உசுப்பிவிட்ட நிலை! தன் மகளுக்கு வளைகாப்பு நிகழ்த்த இயலவில்லை என்றவனால் எவ்வாறு வாகனம் வாங்க இயன்றது. அதை விடவும் சந்திரா சொல்லி வாங்கியது, அவள் ஆலைக்கு சென்று வருவதெல்லாம் அவன் வரவு, செலவு, சேமிப்புகளில் இவள் தலையிடுகிறாளோ என்ற சந்தேகத்தை கொடுத்தது! மெல்ல உரிமை எடுத்துக் கொள்கிறாளோ? அவள் கைக்குள் அடக்க நினைக்கிறாளோ? என்றெல்லாம் கற்பனை நீண்டது. 
வீட்டிற்குள் வந்திருந்த சந்திரா அவரிடம் பிரசாதத்தை நீட்ட, “பிறந்ததுல இருந்து சுகமாக வாழ்ந்தவள், இங்க வந்தும் அப்படியிருக்கணும்னு நினைச்சா உங்க வீட்டுல இருந்து கொண்டு வந்திருக்கணும், அதை விட்டு அவனை ஏன் கஷ்டப்படுத்துற?” எனக் கதிருக்காக பரிந்து பேசுவது போலே கேட்டவர் பிரசாதமும் எடுத்துக் கொண்டார்.
சந்திராவிற்கு எதுவும் புரியவில்லை, அவள் முழிக்க, “நேத்து வரைக்கும் இருந்த அதே சூழ்நிலை தானே இன்னைக்கும் இருக்கு? நேத்தும் பைக்குல தான் சுத்துனான், இப்போவும் பைக்ல தான் போறான். பின்ன திடீர்னு கார் வாங்க வேண்டிய அவசியம் என்ன? உன் ஆசையும் அவசரமும் தான். உனக்காகத் தான் வாங்கியிருக்கான்” என்றார் குற்றமாக. 
மகளுக்குச் செய்யாத கோபத்தை அவள் மீதான ஒரு போலி குற்றத்தை வைத்துக் கொட்டிவிட்டார். சந்திராவிற்கு சுருக்கென்று இருந்தது, சற்று முன் தான் தேவை என்ன என்று அவனே சொல்லியிருந்தான்.  இத்தனை வருஷமும் இவர்களுக்காக உழைத்தவன், அவனுக்கு என்று ஒன்றை செய்து கொள்ள அதற்கு ஏன் தன்னை குற்றம் சொல்லவேண்டும்? அதை விடவும் இவளுக்குத் தேவையென்றால் யாரிடமும் கேட்டு நிற்க வேண்டிய அவசியமில்லை. அவளே செய்து கொள்வாளே! 
“இரண்டு தங்கச்சிகளுக்கும் கழுத்து, கையில நிறைச்சி, வெள்ளி, வெண்கலம், பைக்குன்னு எவ்வளவு சீர் செய்தான் தெரியுமா? வெறும் கைய வீசிட்டு வந்த உனக்கு எங்க கதிரோடு கஷ்டம் தெரியப் போவுது?” 
சந்திராவிற்கு மேலும் கடுப்பானது. வரும் போது கலையாத மணக்கோலத்தில் கழுத்து நிறைய நிறைய நகையோடு வந்தவள் தானே! அதுவும் போக, அவர்கள் பாரம்பரிய சொத்துகளும் இங்கு தான் இருக்கிறது, இவளுக்கு என்று வைத்த சீரும் எதிர்வீட்டில் தான் இருக்கிறது. அதுவும் போக இப்போது சொன்னால் கூட தந்தையும் தமையனும் ஓடி வந்து நிறைவாகச் செய்வார்கள் தான், ஆனால் முறையாக அழைக்காத போது எதுவும் வேண்டாமென இவள் தான் மறுத்திருந்தாள். 
எப்படி என் குடும்பம் மட்டும் வேண்டாம், அவர்கள் செய்வது மட்டும் வேண்டுமாக்கும்? என பொறுமினாள். தனவதிக்கு அதெல்லாம் தேவையில்லை ஆனாலும் அவளைக் குறைவாகப் பேசிவிடும் எண்ணம்! 
எரிச்சலை முகத்தில் காட்டாது சிலுப்பலுடன், “ஹோ..! தங்கச்சிகளுக்கே இவ்வளவு செய்த என் புருஷன் எனக்குச் செய்யாமலா விடப்போறார்? உரிமைப்பட்டவ நான் தானே, அவர் செய்யட்டும்” என்றுவிட்டு அறை நோக்கிச் சென்றாள். 
தனவதிக்கு மூக்குடைந்தது போன்றிருந்தது. எரிச்சல், சினம், ஆறாத நிலையில் அனலாய் தகித்துக் கொண்டிருந்தது. என்ன தான் வாயடைக்கும் விதமாகப் பேசிவிட்டு வந்தாலும் சந்திராவிற்கு மனதில் ஒரு வாட்டம், ஏனோ மனம் சமநிலைப் படவில்லை. தனவதி பேசியது ஒருவாறு அவளை வதைத்திருந்தது. 
சரியாக அதே நேரம் ஆச்சியிடமிருந்து அழைப்பு வர, எடுத்துப் பேசினாள். பொதுவான நலம் விசாரிப்புகள் தான், அவர் பேச பின், தாத்தா, அம்மா, அண்ணி என அந்த நேரம் வீட்டிலிருந்த அனைவரும் பேசினர். வீட்டினருடன் பேசுகையில் சிறு பிள்ளை போன்றே மாறிப்போனவள், கதிரிடம் கூடச் சொல்ல முடியாத மனக்குமுறல்களை மேலோட்டமாக ஆச்சியிடம் மட்டும் சொல்லி வைத்தாள். 
அப்படியே சோர்ந்து படுத்தவள் மாலை நேரம் தான் எழுந்தாள். தனவதி அவள் அறை பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை.  தங்கமும் வைரமும் கொட்டிக் கொடுத்தாலும் மகிழாதவனை எவ்வாறு சந்தோஷப்படுத்துவது? கதிருக்காக ஏதாவது செய்திடும் வேகம் அவளிடமிருக்க, என்ன செய்வது? எனப் பெரிதாக யோசித்தாள். அதிலும் தனவதி பேசியது அவளைப் பெரிதாகத் தாக்கியிருந்தது. 
தலைக்குக் குளித்து புடவை ஒன்றை எடுத்து உடுத்திய சந்திரா கோவிலுக்குக் கிளம்பினாள். கருப்பட்டியின் அண்ணி செல்வி கோவிலில் விளக்குப் பூஜை இருப்பதாக அறிவித்திருக்க, வேடிக்கை பார்க்கவாவது செல்வோம் எனக் கிளம்பி இருந்தாள்.
கோவிலுக்குச் சென்றவள் முதலில் சாமிக் கூம்பிட்டுவிட்டு பின் சில நிமிடம் நின்று விளக்கு பூஜையை கவனித்தாள். அதன் பின் கவனிக்கும் ஆர்வமில்லாது போக, கோவிலிருந்து வயல்வெளிகளின் ஓரம் சற்று தூரம் நடந்தாள். மங்கும் மாலை நேரமும் சுற்றுப்புறமும் இயற்கை காற்றும் வெகுவாக அவளை ஈர்க்க, ரசித்தாள். 
அப்போது தான் உட்புறம் சற்று தூரம் வந்திருப்பதைக் கவனிக்க, பின்னே நினைவு வந்தவளாகப் பார்வைக்குத் தூரத் தெரியும் அவர்கள் நிலத்தை நோக்கினாள். சிறிது தூரத்திற்கு ஒற்றையடி பாதையாகச் செல்ல, பயன்பாட்டாற்று புதர் மண்டிய நிலமும், இன்னும் சிதையாத வட்டக் கிணற்றின் மேடும் பார்வைக்குத் தெரிந்தது. முதலில் இருப்பது கதிரின் நிலமும் இடையில் பொதுவான கிணறும் அதன் பின் சந்திராவின் நிலமும். அதன் பின் மலைக் குன்றும் ஆற்றங்கரை செல்லும் பாதையும், விவரம் அறிந்த வயதில் விளையாடிய இடங்கள் எல்லாம் இப்போதும் நினைவில் இருக்கிறது. 
அதே பாதையில் திரும்பி விட்ட சந்திரா வீடு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தாள். பரம்பரை நிலங்கள் ஆங்காங்கே இருந்த போதும் கதிரின் தாத்தாவோடு இணைத்து விரும்பி நிலம் வாங்கி ஒன்றாக விவசாயம் செய்தார் நாராயணன். அவர்கள் காலத்திற்கு பின் கதிரின் தந்தை வரை பார்த்திருக்க, அதன் பின் பராமரிப்பின்றி வீணாய்ப் போனது, ஏன் இவ்வாறு கவனிக்காது விட்டுவிட்டான்? எனக் கதிரை மனதிற்குள் திட்டிக்கொண்டபடி வீடு வர, வாசலில் அவன் இரு சக்கரவாகனமும் உள்ளே அவன் குரலும் கேட்டது. 
ஒரு கையில் காபி டம்ளரும், மறுகையில் அலைபேசியுமாக அமர்ந்திருந்த கதிரைக் கண்டவள், “என்ன இவ்வளவு சீக்கிரமே வந்துட்டீங்க?” என்றபடி அருகே வந்தமர்ந்தாள். தனவதி பின்கட்டில் இருப்பதும் தெரிந்தது. 
நிமிர்ந்து அவளை பார்த்தவன், “அதான் கார் வாங்கியாச்சே எங்காவது வெளியே கூட்டிட்டுப் போவோம்னு வந்தா, நீ வீட்டுல இல்லை” என்றான் குறையாக. 
அவன் தோளில் இடித்தவள், “நம்புற மாதிரி இல்லையே..!” என்றாள் சந்தேகக் குரலில். 
சட்டெனச் சிரித்தவன், “சரி தான், வெளியே வேலையா போயிருந்தேன் முடியவும் நேரா வீட்டுக்கு வந்துட்டேன்” என்றான். சற்று அவளைச் சீண்டிப்பார்க்கும் ஆசை அவனுக்கு. ஆனால் அவள் அதையெல்லாம் கவனித்தாளில்லை. 
“உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்?” என்க, என்ன என்றவன் விழிகளாலே சைகை செய்ய, “உங்க லேண்டை வித்துடீங்களா?” என ஆரம்பித்தாள். 
பார்வை மாற, கூர்மையாக அவளைக் கவனித்தவன், “இல்லையே, ஏன் இப்போ இதை கேட்குற?” என்றான் விசாரணையாக. 
“பின்ன ஏன் நீங்க அதைக் கவனிக்கிறதில்லை?” 
“விருப்பமில்லை விட்டேன்” என்றவனை நம்ப இயலாது ஒரு பார்வை பார்த்தவள், “எனக்கு ஆர்வமிருக்கு நான் விவசாயம் செய்யப் போறேன், நீங்க விதை நெல்லு மட்டும் கொடுங்க” என்றாள். குரலிலே ஒரு பிடிவாதமும் உறுதியும். 
அதற்குள் சந்திராவின் குரல் கேட்டு, தனவதி வரவேற்பறைக்கே வந்து விட்டார். ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை அடைக்கத் தவிப்போடு அவளைப் பார்த்த கதிர், “ம்ச், வேண்டாம்ல ரொம்ப கஷ்டமான வேலை! உனக்கு இது பத்தி என்ன தெரியும்? விட்டுடு” என்றான் தன்மையாக. 
அவன் மறுக்க, அவளுக்கு பிடிவாதம் கூடியது, “எனக்குத் தெரியாது தான், ஆனால் உங்களுக்கு தெரியும் தானே? நீங்கச் சொல்லிக் கொடுங்க. தெரிஞ்ச ஆள் வைச்சி பார்த்துக்கலாம், செலவானாலும் பரவாயில்லை இதை நான் இலாபத்துக்குச் செய்யலை” என்றாள் உறுதியாக. 
“ம்ச்.. வேண்டாம்ல” என சலித்துக் கொண்டவன், “நானே வேண்டாம்னு விட்டதை, நீ ஏன் செய்த? வேண்டாம்ல விட்டுடு” என்றான் கடினமான குரலில் உத்தரவாக. 
அது அவளைச் சீண்டிவிட, “உனக்கு வேண்டாம்னா விலகிப் போ, நான் செய்வேன்” என்றாள் அடமாக. 
கதிர் பதில் சொல்லும் முன் தனவதி நெருங்கி வந்திருக்க, அவர் கையிலிருந்த பித்தளை உருளி கீழே விழுந்து உருண்டது. அந்த சத்தத்தில் அதிர்வோடு திரும்பிய இருவரும் பதற்றமோடு எழுந்து அவர் அருகே வந்தனர். 
சட்டெனத் தரையில் அமர்ந்தவர், பெரும் குரலில் விசும்பியபடி, கண்ணீர் வடித்தார். இருவரும் அருகே வந்துவிட, சந்திராவின் முகம் பற்றியவர், “வேண்டாம்மா, வேண்டாம் ராசாத்தி, அந்த இடம் இராசி இல்லாதது. உனக்குத் தெரியுமா என்ன? கதிர் அப்பா உசுர போனதே அதனால தான் விட்டும்மா” என்றார் கெஞ்சலாக. 

Advertisement