Advertisement

தனவதி மதிய உணவைக் கட்டி வைக்க, அதை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டவள் கருப்பட்டிக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு, அவளே எடுத்துக் கொண்டு கிளம்பினாள். 
சந்திரா செல்லும் போதே எதிரே வந்த கருப்பட்டி, கவனித்து விட, அவளோ வண்டியைத் திருப்பும்படி சைகை செய்தாள். திருப்பியவன் அதே பாதையில் அவளுக்கு இணையாக ஓட்டிக்கொண்டு வந்தபடி, “ஏம் மதினி அண்ணனைப் பார்க்கத் தானே வாரவ?” என்றான். 
மறுத்தவள், “ச்சே, இங்க ஒரு வேலை அதான் அப்படியே சாப்பாடும் கொடுத்துட்டுப் போயிடலாம்னு வந்தேன்ல” என்றவள் சமாளிக்க, “அப்போ சாப்பாட்டுக் கூடையை கொண்டாங்க, நீங்க உங்க வேலையைப் போய் பாருங்க” எனக் கேட்டான். 
திருதிருவென முழித்தவள், “ஏலே நீ வேற, கல்யாணத்துக்கு முன்னையும் நான் தான் அவரு பின்னே சுத்துனேன், கல்யாணத்துக்குப் பின்னவும் நான் தான் சுத்துதேன்” என்றவள் வருத்தம் கொள்ள, “ஏன் இம்புட்டு சலிச்சிக்கிறீங்க மதினி? எங்க அண்ணன் பாசத்தை மட்டும் குறைவா நினைச்சிக்கிடாதிக, நீங்க ம்ம்னு ஒரு வார்த்தைச் சொன்னா ஷாஜகான் மாதிரி வசந்தமாளிகையே காட்டுவாரு!” என்றான் பெருமையாக. 
“ஏலே! வரலாறு ஒழுங்கா படிக்கலையோ, ஷாஜகான் கட்டுனது தாஜ்மகால்டே” என்றாள் நம்பிக்கையற்ற குரலில். 
“ஏதோ ஒன்னு, எல்லாம் செங்கல் மண்ணுல கட்டுனது தானே”என்க, “அது சரி, அப்போ உங்க அண்ணன் நான் உயிரோட இருக்குத வரைக்கும் எனக்கு எதுவும் செய்யப்போறதில்லை. அப்படித் தானே?” என்றாள். 
“இப்படி குதர்க்கமா பேசுனா என்னத்த பதில் சொல்லுதது?” என்றவன் சலித்துக்கொள்ள, இருவரும் ஆலைக்குள் வந்திருந்தனர். அவள் இறக்கும் முன்பே அவளிடமிருந்து உணவு கூடையை அவன் வாங்கிக் கொள்ள, இருவரும் கதிரின் அறை நோக்கிச் சென்றனர். 
அறையில் கதிர் இல்லாது போக, வேலையாளிடம் விசாரித்த கருப்பட்டி, “அண்ணனே பின்னாடி நெல் குடோன்ல இருக்காகளாம், நான் போய் என் வேலையை பார்க்குதேன்” என உணவோடு உள்ளே சென்றுவிட்டான். 
அவளும் வேலையாட்களிடம் விசாரித்து இருட்டான குடோன் பகுதிக்குச் செல்ல, எதிரே ஒருவர் நெல் மூட்டையைத் தூக்கிச் செல்ல, தொலைவில் கதிர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தான். 
மெல்ல அங்கே செல்ல, “சரிங்க அண்ணாச்சி, மூனுக்கு நாலு மூட்டையாவே தாரேன். நீங்கச் செய்த உதவிக்கு ஏதோ என்னால முடிச்சது” என்க, “எனக்கு அவ்வளவு வேணும்னு இல்லை ஐயா, ஆனால் நல்ல விதைகளா வேணும். ஏன்னா தரமான விதைகள் விதைச்சாவே பாதி சேதாரத்தைக் குறைக்கலாம். என்ன ஐயா?” என்றான் கதிர். 
“சரி தான், என்ன மாதிரி விரும்பி வர இன்னும் நாலு பேருக்கு கொடுப்பிங்கல அதுக்கு தான். சரிங்க அண்ணாச்சி, நடவு நாள் அன்னைக்குத் தகவல் சொல்லுதேன், கண்டிப்பா நீங்க வரணும்” என்றவர் பின் விடைபெற்றுச் சென்றார். 
அதன் பின்னே கதிரை நெருங்கிய சந்திரா, “நீங்க மட்டும் தான் இருப்பீங்கன்னு நினைச்சு வந்துட்டேன்” என்றாள் தவறு போலே.
சின்ன சிரிப்போடு ஏற்றவன், “அதனால என்ன? இங்க வாலே”என வரவேற்றான். 
“மில்லுக்காரரு நெல்லு வாங்குவீங்கன்னு பார்த்தால் நெல்லு விக்கிறீங்களே..! அதுல என்ன லாபம்?” எனக் கேட்டபடி அவ்விடத்தைச் சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். 
தலையசைத்தவன், “இது விதை நெல்லு லாபத்துக்கு இல்லை, நான் விதை நெல்லை விக்கிறதுமில்லை. இப்போ எங்கிட்ட ஒருகிலோ விதை நெல்லு வாங்கிட்டுப் போனா அறுவடை முடிச்சி அதை மூனு கிலோவா திருப்பித் தருவாங்க” என்றபடி முன்னே சென்றவன் ஒரு அறை கதவைத் திறந்து உள்ளே சென்றான். 
அவன் பின்னே சென்றவள், “அறுவடை வரைக்கும் ஏன் வெயிட் பண்ணும், விதை நெல்லு கொடுக்கும் போதே அதுக்கான காசு வாங்கிக்க வேண்டியதானே?” என்றாள் புரியாது. 
அதற்குள்ளும் இன்னொரு அறைக் கதவைத் திறந்து உள்ளே செல்ல அடர் இருள், மின் விளக்கை ஒளிர விட, அவ்விடத்தில் மிதமான வெளிச்சம் பரவியது. சுற்றிலும் பார்வையைச் சுழற்றிய சந்திரா அனைத்தையும்  புதிதாகப் பார்த்தாள். சுற்றிலும் பெரியது முதல் சிறிய அளவிலான மண் கலன்கள்,தொம்பைகள், குதிர்கள், குளிரூட்டப்பட்ட கண்ணாடி கலன்கள் நிறைந்திருந்தது. 
“வது, காசு எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம், எப்போ வேணாலும் சம்பாதிக்கலாம். ஆனால் இதெல்லாம் இழந்துட்டா திரும்பிக் கிடைக்காதுல. இது எல்லாமே பாரம்பரிய நெல் விதைகள்!” என்றபடி அவன் நடக்க அவளும் பின் சென்றாள். 
“மகசூல் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை பாரம்பரிய நெல்லை பயிரிடணும்னு விரும்பி விதை நெல்லு கேட்டு வரவுங்களுக்கு மட்டும் தான் கொடுப்பேன், காசு வாங்கிக்க மாட்டேன், அவங்க அதை அறுவடை முடிச்சி மூனு மடங்காக எனக்குத் திருப்பித் தரணும்னு முதல்லையே சொல்லிடுவேன். அப்படி தான் இதெல்லாம் சேர்த்து வைச்சி, இப்போ பாதுகாக்குறேன்” என்க, விழி விரிய கேட்டு கொண்டிருந்தாள். 
அதற்குள் ஒரு குதிருக்குள் இருந்து ஒரு கை நெல் விதைகளை அள்ளி, ஒரு மணி சிந்தாது அவள் கையில் கொட்டியவன், “இது கருங்குறுவை! கோவில் கலசத்துல வைக்கிற நெல்லு, யானைக்கால் நோயைக் குணப்படுத்தும், யாரவது விஷம் குடிச்சிட்டா விஷம் முறிக்க இதைப் பயன்படுத்தி இருக்காங்க” எனக் காட்டினான். 
அவளும் அதிசயமாய் பார்த்திருக்க, “இது பால்குடவாழை, பிரசவம் முடிச்ச பொண்ணுங்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்த கொடுப்பாங்களாம், குடவாழை சக்கரை நெய், குடல் நோய்களைச் சரிப்படுத்தும்” என்றான். 
மேலும் வியந்தவள், “இதுக்கெல்லாம் அரிசி இருக்கா..?!” என்க, “ம்ம், இது மட்டுமில்லைட்டி இதய நோய்க்கு சிவப்புக் கவுணி, புற்று நோய்க்குக் காட்டுயானம், தோல் நோய்க்குச் சீரகச் சம்பா, உடல் உஷ்ணம் குறைய மல்லிகைப்பூ சம்பா, முகம் பளபளக்கச் சீதா போகம், புது மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை சம்பா, நோஞ்சானா இருக்குற பிள்ளைக பலசாலி ஆக இலுப்பைப்பூ சம்பா, சிறுநீரகப் பிரச்சனைக்குக் கருடன் சம்பா இன்னும் இருக்கு” படபடவென ஆர்வமோடு உரைத்தான் கதிர். 
“இவ்வளவும் நாட்டு ரகமா?” என்றவள் மேலும் வியப்போடு கேட்க, “இன்னும் இருக்கே துளசிவாசம், அன்னம் அழகி, குண்டுகார், வாடன் சம்பா, ஆத்தூர் கிச்சடி, நீலம் சம்பா, கறுப்பு கவுணி, அறுவதாம் குறுவை, சிங்கினிக்கார், பொம்மி, ஒட்டடம், வாகை, தங்கசம்பா, சின்னார், ராஜமன்னார், பூங்கார், கந்தசாலா, கல்லுண்டை, மிளகு சம்பா, கைவரசம்பா, குழிவெடிச்சான், ரத்தசாலி..” என்றவன் அடுக்கிக் கொண்டே போக, வாய் திறந்து கேட்டவள் பின் மெல்ல அவன் காதோரம், “இதெல்லாம் மனப்பாடம் செய்தியா?” என்றாள் சின்ன சிரிப்புடன். 
முன் தலையில் குட்டியவன், “கேலியாட்டி உனக்கு?” என்ற கண்டிப்போடு, “இந்த காலத்துல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருந்து, அந்த காலத்துல உணவே மருந்து!” என்றான்.
“இப்போவும் அதே அரிசிச் சோறு தானே சாப்பிடுறோம்?” 
“இப்போ சாப்பிடுறது ஐ.ஆர் ரகங்களும் பொன்னியும் கலப்பிங்கனங்களும் சில சம்பா வகைகளும் தான். கிட்டத்தட்ட ஆறாயிரம் வகைகள் பயிறிடுறாங்க, இதுல பாரம்பரிய நாட்டு ரகங்கள் எவ்வளவு இருக்கும்? 
இதெல்லாம் சாதாரணம், உலகத்துல கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நெல் ரகங்கள் இருந்திருக்கு, இந்தியாவுல மட்டுமே ஒரு லட்சத்து பத்தாயிரம் வரைக்கும் முன்ன இருந்திருக்கு” என்றான்.
“அதெல்லாம் இப்போ எங்க?” என்றாள் வேகவேகமாக. 
“பிலிப்பைன்ஸ் நாட்டுல தனியார் நிறுவனம்  குளிர்நிலையில பதப்படுத்தி வைச்சி இருக்காங்க! அதிக மகசூல், குறுகிய காலத்துல பயிர் வேணும்னு இப்போ யாரும் இங்க நாட்டு ரகங்களை விரும்பி விதைக்கிறது இல்லை” என்றபடியே ஒரு கண்ணாடி பெட்டகத்தின் அருகே வந்தான். 
“இதுல இருக்கிறது கொட்டாரம்  குறுவை! இந்த ரகம் எங்கையுமே இல்லை அழிச்சிட்டதாவே சொல்லுறாங்க” என்றவன் காட்ட, அவன் கைகளைப் பற்றிக் கொண்டு உற்றுப் பார்த்தாள். 
“இதையும் விட மொட்டை குறுவைன்னு ஒரு ரகம் மொத்தமாவே இல்லாம போச்சு” என்ற கதிர் வேதனையுற, அவன் முகம் பார்த்தவள், “இதெல்லாம் உனக்கு எப்படி கிடைச்சது?” என்றாள். 
அவள் கரம் பற்றியபடித் திரும்பியவன், “இது தான் நம்ம பாரம்பரியம்! தங்கமும் வைரமும் மட்டுமில்லை சேர்த்து வைக்கிற செல்வங்கள், விதைகளும் தான்! கடந்த தலைமுறை வரைக்கும் நெல் விதைகள், தானிய விதைகள், காய்கறி விதைகள்னு விவசாய வீடுகள்ல ஒவ்வொரு வருஷமும் அடுத்த வருஷ தேவைக்குச் சேர்த்து வைப்பாங்க. இப்பவும் பெரும்பாலுன வீடுகள்ல இந்த பழக்கம் இருக்கும். ஏன் நீ கூட பார்த்திருப்பியே உங்க ஆச்சி வெண்கல நாழிலையும், மரக்காலையும் சேர்த்து வைச்சு பரண்லையும், நிலவறையிலையும் அடுக்கி வைச்சிருப்பாங்களே?” என்றவன் கேட்க, அப்போதே நினைவு வந்தவளாக ஆமென தலையசைத்தாள். 
அவளையும் அழைத்துக் கொண்டு கதவை மூடிவிட்டு வெளியே வந்திருந்தவன், “அது மாதிரி எங்க வீட்டுல, எங்க அப்பா விதை நெல்லு மட்டுமே ஐம்பது ரகங்கள்கிட்ட சேர்த்து வைச்சிருந்தாங்க. மத்ததெல்லாம் நான் சேர்த்தது. தொழில் செய்ய ஆரம்பிச்ச புதுசுல நானே விவசாயிகள்கிட்ட நேரடியா நெல் கொள்முதலுக்குப் போவேன், அப்போ ஒரு பெரியவர் என் காலத்துக்கு அப்புறம் என் பிள்ளைகள் பார்க்கப் போறதில்லை. நீ பத்திரமா பாதுகாத்து வைச்சிக்கோப்பான்னு என் கையில கொடுத்தார். அப்படி ஆரம்பிச்சது தான் இந்த பழக்கம்” என்றான். 
வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை எனினும் பாராட்டுதலாய் அவள் ஒரு பார்வை பார்க்க, அதன் அர்த்தம் அவனும் புரிந்து கொண்டான். 
இருவரும் இளங்கதிரின் அறைக்குள் வர, கருப்பட்டி உணவுண்டு சென்றிருந்தான். கதிருக்கான உணவைச் சந்திரா பரிமாற, கைகழுவி வந்தமர்ந்தான். 
“இந்த அரிசி என்ன ரகம்ங்க?” என ஆவலோடு இலையில் வைத்தபடி அவள் கேட்க, “நீயா சமைச்ச?” என ஆசையோடு அவன் கேட்டான். 
அவன் கேள்வியில் எட்டி நின்றிருந்தவள் முறைப்பாய் பார்க்க, அந்த தோரணையில், “என்ன? அன்னைக்கி தட்டிவிட்டதுக்குக் காலம் முழுக்க உன் கையால சாப்பிடுற பாக்கியம் எனக்கு இல்லை அதானே?” என்றவன் சிரிப்போடு கேட்டான். 
“சரிதான், என்னை கட்டிக்கிட்டதாலையும் என் சமையலை சாப்பிடாதாலையும் உங்களுக்கு ஆயுசு கூட!” என வரம் தருபவள் போல் கையுயர்த்திச்  சிரித்தாள். வெகு நாட்களுக்குப் பின் தெற்றுப்பல் தெரிய அவள் சிரிக்க, விருப்பத்தோடு பார்த்திருந்தான் அவன்.

Advertisement